May 1, 2014

குவாட்டர்


  பிரபா ஒயின்ஸ். மதுக்கடைகளை அரசே  எடுத்து நடத்த ஆரம்பித்த பின்னும் பழைய பெயரிலே குறிப்படப்படும் ஒரே இடம் அதுதான். . கேகேநகர் கடைசி வளைவில் இடது ஓரத்தில் விஸ்தாரமான திறந்தவெளி பார் கொண்ட டாஸ்மாக். கூலிங் பீர் எப்போதும் கிடைக்கும் என்பது போன்ற கோவில்களுக்கே உரிய வதந்திகளும் இந்த ஒயின்ஸுக்கு உண்டு. கூட்டத்தை சமாளித்து கவுண்ட்டரில் கைகளை நீட்டினேன்.

”140ல ஒரு பிராந்தி”


  பிராண்டை எல்லாம்  விலைகளாக்கியது டாஸ்மாக்கின் வசூல் அல்லாத இன்னொரு சாதனை. வாங்கிக்கொண்டு உள்ளே சென்று ஓரளவுக்கு சுத்தமான டேபிளை தேடி அமர்ந்தேன்.. ஊரையே சுத்தமாக்குற இடம். குப்பையாகதான் இருக்கும். சிக்கனும், முட்டையும் ஆர்டர் செய்த சில நிமிடங்களிலே வந்து விட்டன.  ரெண்டு பெக் உள்ளே போனதும் பேச்சு துணைக்கு ராஜனை அழைத்து வந்திருக்கலாம் என தோன்றியது. குடிகாரன்கள் ஸ்தலமாயிற்றே. வரம் நிறைவேறியது.


“சார்.. இப்டி உட்காத்துக்கவா”


அவனுக்கு வயது 22 இருக்கலாம். அனிருத் வெயிலில் அலைந்து கருத்தது போலிருந்தான். கையில் ஒரு குவார்ட்டரும் வாட்டர் பாக்கெட்டும் மட்டுமே இருந்தன. உட்காரு என்பது போல சைகை காட்டிய பின் தான் அமர்ந்தான்.


க்ளாஸ் இல்லையா?


சில்லற இல்ல சார்.


எப்படி அடிப்ப?


உங்க க்ளாஸ் கொஞ்சம் கொடுங்களேன்


இரு. வேற சொல்றேன்.


வேணாம் சார். நான் குடிக்க மாட்டேன். 2 நிமிஷம் கொடுங்க.


க்ளாஸில் பாதி சரக்கை ஊற்றினான். பாட்டிலில் பாதி சரக்கு இருக்க, அதில் வாட்டர் பாக்கெட்டை பிய்த்து பீச்சினான். Gulp. பாட்டில் காலியானது. இப்போது க்ளாஸில் இருந்த சரக்கை மீண்டும் பாட்டிலில் ஊற்றிவிட்டு, க்ளாஸை என் பக்கம் தள்ளினான்.


ப்ளாஸ்டிக் சார். நமக்கும் கெட்டது. பூமிக்கும் கெட்டது.


அடுத்த பாதியையும் அடித்து முடித்தான். சிக்கனை அவன் பக்கம் தள்ளினேன்.


வேணாம் சார்


சிக்கன் கூடவா கெட்டது?


ஹாஹா.  காமடியா பேசுறீங்க சார்.


இப்படி அடிச்சா உடம்புக்கு என்ன ஆவுறது?


அதெல்லாம் இருக்கிறவங்க கவலை சார்..எனக்கு..எனக்கு ..இங்கதான் சார்.. பெயினு


நெஞ்சை தொட்டு கண்ணில் கக்கினான்.


அங்க என்ன?


ஃபீலிங் சார். லவ் பண்ணியிருக்கியா நீ?


மரியாதை குறைந்து நெருக்கமானான். காதலன் ஆயிற்றே.. அவன் என் பதிலுக்கு காத்திருக்கவில்லை.


பன்னெண்டாம் க்லாஸ் பரீட்சை எழுதிட்டு லீவுக்கு ஊருக்கு போனப்பதான் பாத்தன் சார். மஞ்சரி பேரு. சும்மா அப்படியிருப்பா சார். எங்க அம்மா மட்டும் அத்த பாத்திருந்ததுன்னு வை. அப்பவே வாடி என் மருமவளேன்னு வூட்டுக்கு கூட்டியாந்திருக்கும். லீவு முடியறதுக்குள்ள விழுண்ட்டா சார் எனக்கு. மணுமுத்தாறு டேமு, பாபநாசம் அருவின்னு சும்மா சம்மர்லயும், பவர்கட்டிலும் கூட ஜிலுஜிலு  இருஞ்ச்சு சார்.


இப்ப என்ன ஆச்சு?


எல்லாம் ஆச்சு சார். முடிஞ்ச்சி..


நான் அவனே பேசட்டும் என அமைதி காத்தேன்.


லவ் பண்னா சார்.. 30 நிமிஷத்துல போய் பாக்குற தூரத்துல பண்ணனும்.. 600 கிமீ தள்ளி போய் லவ் பண்ணா?  நாம என்ன சூர்யாவா? அவ என்ன பாக்கணும்னு சொல்லி நான் போலன்னா கூட பரால்ல சார். அவ அப்பன் பாக்கணும்னு சொன்னானாம். அப்ப கூட உடனே என்னால போக முடில. எங்கயோ கூட்டினு போய் அடைச்சு வச்சுட்டானுங்க சார். நான் போயி பாத்தா பெருசா பூட்டுதான் இருக்கு. மருவாதி போனாலும் பரால்லன்னு எங்க அத்தாயாண்ட போயி விசாரிச்சேன் சார். அடுத்து என் பொண்ண கெடுக்க வண்ட்டியான்னு தொரட்டி விட்டுச்சு.. அது பொண்ணுக்கும் என் மேல கண்ணு சார். நாந்தான் உங்கம்மா ஒத்துக்காதுன்னு அட்வைஸ் பண்ணேன். நான் நினைச்சிருந்தா.. விடுங்க சார். லவ் பன்றவங்க அப்படிலாம் பண்ன மாட்டாங்கல்ல..


மஞ்சரிக்கு என்ன ஆச்சு?


தெர்ல சார். தெரிஞ்சா நான் ஏன் இங்க வந்து பொட்டச்சியாட்டம் கண்ண கசக்கிட்டு இருக்க போறேன். 3 வருஷமாச்சு சார்..ஒரு டீட்டெயிலும் தெரில..


அது எப்படிப்பா? இப்பலாம் மொபைலு...


சும்மா கம்ப்யூட்டர் எஞ்சினியாரட்டாம் சொல்லாத சார். இப்பவும் எங்க்ளுக்கு பேப்பர் படிச்சாதான் நாட்டுல நேத்து நடந்ததே தெரியும்.


அவன் மூக்கை உறிஞ்சியபடியே சொன்னான். கடைசி வரை அந்த சிக்கனை அவன் தொடவே இல்லை.


வர்றன் சார்.


முகத்த தொடை


விடு சார்.என் கஷ்டத்த உங்கிட்ட கொட்டிட்டேன். நீயும் அக்கறையா பேசுற. அந்த பொண்ணு எங்க என்ன பண்ணுதோ சார். அதுங்கதான் குடிக்க முடியுமா இல்ல முன்னபின்ன தெரியாதவண்ட்ட கஷ்டத்த சொல்ல முடியுமா? அதான் சார்..


மீண்டும் நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்


வர்றன் சார். வூட்டுக்கு பாத்து போ.


போனது அவனா நானா என தெரியாமல் சேரிலே சாய்ந்தேன்.






6 கருத்துக்குத்து:

ILA Raja on May 1, 2014 at 11:52 PM said...

ஹ்ம்ம்ம்

குழந்தபையன் on May 1, 2014 at 11:54 PM said...

:-( எல்லாம் சரி ஆகிடும்

இரசிகை on May 2, 2014 at 12:06 AM said...

hmm..

ramachandran.blogspot.com on May 2, 2014 at 12:32 AM said...

சூப்பர்.ப்ராண்ட் விலைய எல்லாம் ரூபாயா மாத்திட்டான்,கறுத்த அனிருத் போலிருந்தான்,போனது அவனா நானா தெரியவில்லை-இப்படி எல்லாமே செம பாஸ்-ரஜினிராமச்சந்திரன்

kannabiran, RAVI SHANKAR (KRS) on May 2, 2014 at 7:21 AM said...

//கடைசி வரை அந்த சிக்கனை அவன் தொடவே இல்லை//

அவன் மட்டுமா?

//அந்த பொண்ணு எங்க என்ன பண்ணுதோ சார். அதுங்க தான் குடிக்க முடியுமா இல்ல முன்னபின்ன தெரியாதவண்ட்ட கஷ்டத்த சொல்ல முடியுமா?//

Karki Touch!

பிரதீபா on January 23, 2015 at 7:48 PM said...

//போனது அவனா நானா என தெரியாமல் சேரிலே சாய்ந்தேன்//- orrey line la pattaiya kelappi irukkeengale !

 

all rights reserved to www.karkibava.com