Jan 5, 2014

சன்னதம்

5 கருத்துக்குத்து
  மார்கழி குளிரில் மொட்டை மாடியில் நின்று மேலெழுந்து வரும் சூரியனின் வெளிச்சத்தில் தெருவெங்கும் போடப்பட்டிருக்கும் வண்ணக்கோலங்களை பார்ப்பதென்பது அலாதியான அனுபவம். அது போன்றதொரு தருணத்தை வெகு சில திரைப்படங்களே எனக்கு தந்திருக்கின்றன. இன்று என்றென்றும் புன்னகை பார்க்கும் போது அது வாய்த்தது.

  இப்படம் சொல்ல வரும் கதையை அதிரடியாக சொல்லவில்லை. மாறாக, ரோஜாவின் இதழில் இருக்கும் பனித்துளி ஒரு சின்ன அசைவிலே உதிர்ந்திடாமல் மெதுவாக விழுவது போல அழகியலோடு சொல்லப்படுகிறது. சந்தானம், ஜெய் போல இரண்டு நண்பர்களும் ஜீவா (இனி கெளதம்)வின் வாழ்க்கை போலவும் நமக்கு அமையவில்லையே என்ற ஏக்கத்தை முதலில் ஏற்படுத்துகிறது படம். எப்போதும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது படம் முடிந்து வெளிவரும்போது சிலர் பேசிக்கொண்டபோதுதான் உணர்ந்தேன். எனக்கு அவர்களின் சந்தோஷம்.. அக்கறை.. பகிர்தல்.. ஆதரவு.. நட்பு.. இன்னும் பல தான் தெரிந்தன. நாம் வலிந்துதிர்க்கும் சிறுபுன்னகை கூட போலியானது என்று புரியாதவர்களுடனே பெரும்பான்மையான வாழ்க்கையை செலவிட்டவர்களுக்கு புரியும் அவ்வலி. நம் வாழ்வின் சிறப்பான தருணங்களின் நினைவுகளை கொண்டே காலக்குடுவையை நிரப்பிக்கொண்டிருக்கும் போது அதை தினம் தினம் வாழ்ந்து கொண்டிருக்கும் மூவர் மீது பொறாமை வரத்தானே செய்யும்?. அவர்கள் கண்களின் வழியே ஒரு உற்சாகமான வாழ்க்கையை பார்த்துக்கொண்டிருக்கும் போதே இவர்களுக்கு என்னவோ ஆக போகிறது என்ற எண்ணம் மனதில் அடியாழத்தில் தவித்துக் கொண்டேயிருக்க செய்ததில் இருக்கிறது இத்திரைக்கதையின் வெற்றி.

  இந்தப்படம் முடிந்ததும் தந்த மனநிலையை எப்படியாவது பதிவு செய்து வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். இறுதிக்காட்சியில் ஜீவா திரும்பி கண்களை கசக்கிக் கொண்ட நொடியில் துடித்துப்போன இதயம் பல மணி நேரங்களுக்கு அடங்கவே இல்லை. அரங்கை விட்டு வெளி வந்தபோது மாலை 6 மணி இருக்கும். மிகப்பிடித்த யாருடனாவது நேரத்தை செலவிட ஏங்கியது உள்ளம். அழைத்த ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதன்பின் அ யாரை அழைப்பது என்ற யோசனையின் முடிவில் ஒன்று புரிந்தது. புல்லாங்குழல் இசைக்குத்தான் காசு தருகிறார்கள் என நம்பும் குருடனை போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. தலை திருகப்பட்ட பறவையின் கடைசி துள்ளல் அடங்க காத்திருப்பது போல் உணர்ந்தேன். ஒரு feel good movie பார்த்த உணர்வு, வெளிவரும்போது எதிர்மறையாக மாறியிருந்தது. இப்போதைய வாழ்வு அதற்கு முற்றிலும் எதிராய் இருந்ததை நான் உணர்ந்து கொண்டதால் இருக்கலாம்.

  உண்மையில் நான் கெளதமுக்கு நேரெதிர். அடுத்தவரின் EGOவை satisfy செய்வதில் தான் உன் வெற்றி இருக்கிறது. ஆனால் அதுவே உன் பிரச்சினைகளுக்கு காரணம் என நந்து சொன்னது நினைவில் வந்து போனது.
வாழ்வு மீதான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவது, அல்லது ஒரு நம்பிக்கையை உடைப்பது. இவற்றில் ஒன்றை செய்தாலும் அதுதான் இலக்கியம் என நினைப்பவன் நான். இந்தப்படம் நான் கெளதமாக மாறவே முடியாது என்ற நம்பிக்கையை உடைத்திருக்கிறது. நான் கெளதமாக பாதி மாறிவிட்டேன் என்ற மோசமான உண்மையையும் எடுத்திரைத்திருக்கிறது. என்றென்றும் புன்னகை – ஓர் இலக்கியம்.

  ஆறுதலாய் அந்த ஒருவர் வந்திருந்தால் அழுது தீர்த்துவிட்டு நகர்ந்திருப்பேன். வெளிவராத கண்ணீர் இன்னும் எத்தனை நாளைக்கு என்னை அழுத்தப்போகிறதோ என்ற கவலையில் நாளை மீண்டும் என்றென்றும் புன்னகைக்கு செல்லவிருக்கிறேன். தனியாக.


 

all rights reserved to www.karkibava.com