Jun 16, 2014

பாஸூ பாஸூ

4 கருத்துக்குத்து

 தொட்டால் தொடரும் வேலைகள் முடிஞ்சாச்சு.. வரும் புதன்கிழமை  நானும் கேபிள் சங்கரும் எழுதிய பாடல் சிங்கிளாக யூட்யூப்ல வருது. அதுக்கு முன்னாடி, அந்த பாட்ட பத்தின எழுத்தாளர்கள், இயக்குனர்கள், சினிமா பிரபலங்கள் சொன்ன கமெண்ட்ஸ டீசரா தொகுத்து வெளியிட்டிருக்கோம். விரைவில் படம் வெளிவரும். அதுவரைக்கும் சவுண்ட் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும் :)))

https://www.youtube.com/watch?v=2SfQ7IhOk2Q

May 1, 2014

குவாட்டர்

6 கருத்துக்குத்து
  பிரபா ஒயின்ஸ். மதுக்கடைகளை அரசே  எடுத்து நடத்த ஆரம்பித்த பின்னும் பழைய பெயரிலே குறிப்படப்படும் ஒரே இடம் அதுதான். . கேகேநகர் கடைசி வளைவில் இடது ஓரத்தில் விஸ்தாரமான திறந்தவெளி பார் கொண்ட டாஸ்மாக். கூலிங் பீர் எப்போதும் கிடைக்கும் என்பது போன்ற கோவில்களுக்கே உரிய வதந்திகளும் இந்த ஒயின்ஸுக்கு உண்டு. கூட்டத்தை சமாளித்து கவுண்ட்டரில் கைகளை நீட்டினேன்.

”140ல ஒரு பிராந்தி”


  பிராண்டை எல்லாம்  விலைகளாக்கியது டாஸ்மாக்கின் வசூல் அல்லாத இன்னொரு சாதனை. வாங்கிக்கொண்டு உள்ளே சென்று ஓரளவுக்கு சுத்தமான டேபிளை தேடி அமர்ந்தேன்.. ஊரையே சுத்தமாக்குற இடம். குப்பையாகதான் இருக்கும். சிக்கனும், முட்டையும் ஆர்டர் செய்த சில நிமிடங்களிலே வந்து விட்டன.  ரெண்டு பெக் உள்ளே போனதும் பேச்சு துணைக்கு ராஜனை அழைத்து வந்திருக்கலாம் என தோன்றியது. குடிகாரன்கள் ஸ்தலமாயிற்றே. வரம் நிறைவேறியது.


“சார்.. இப்டி உட்காத்துக்கவா”


அவனுக்கு வயது 22 இருக்கலாம். அனிருத் வெயிலில் அலைந்து கருத்தது போலிருந்தான். கையில் ஒரு குவார்ட்டரும் வாட்டர் பாக்கெட்டும் மட்டுமே இருந்தன. உட்காரு என்பது போல சைகை காட்டிய பின் தான் அமர்ந்தான்.


க்ளாஸ் இல்லையா?


சில்லற இல்ல சார்.


எப்படி அடிப்ப?


உங்க க்ளாஸ் கொஞ்சம் கொடுங்களேன்


இரு. வேற சொல்றேன்.


வேணாம் சார். நான் குடிக்க மாட்டேன். 2 நிமிஷம் கொடுங்க.


க்ளாஸில் பாதி சரக்கை ஊற்றினான். பாட்டிலில் பாதி சரக்கு இருக்க, அதில் வாட்டர் பாக்கெட்டை பிய்த்து பீச்சினான். Gulp. பாட்டில் காலியானது. இப்போது க்ளாஸில் இருந்த சரக்கை மீண்டும் பாட்டிலில் ஊற்றிவிட்டு, க்ளாஸை என் பக்கம் தள்ளினான்.


ப்ளாஸ்டிக் சார். நமக்கும் கெட்டது. பூமிக்கும் கெட்டது.


அடுத்த பாதியையும் அடித்து முடித்தான். சிக்கனை அவன் பக்கம் தள்ளினேன்.


வேணாம் சார்


சிக்கன் கூடவா கெட்டது?


ஹாஹா.  காமடியா பேசுறீங்க சார்.


இப்படி அடிச்சா உடம்புக்கு என்ன ஆவுறது?


அதெல்லாம் இருக்கிறவங்க கவலை சார்..எனக்கு..எனக்கு ..இங்கதான் சார்.. பெயினு


நெஞ்சை தொட்டு கண்ணில் கக்கினான்.


அங்க என்ன?


ஃபீலிங் சார். லவ் பண்ணியிருக்கியா நீ?


மரியாதை குறைந்து நெருக்கமானான். காதலன் ஆயிற்றே.. அவன் என் பதிலுக்கு காத்திருக்கவில்லை.


பன்னெண்டாம் க்லாஸ் பரீட்சை எழுதிட்டு லீவுக்கு ஊருக்கு போனப்பதான் பாத்தன் சார். மஞ்சரி பேரு. சும்மா அப்படியிருப்பா சார். எங்க அம்மா மட்டும் அத்த பாத்திருந்ததுன்னு வை. அப்பவே வாடி என் மருமவளேன்னு வூட்டுக்கு கூட்டியாந்திருக்கும். லீவு முடியறதுக்குள்ள விழுண்ட்டா சார் எனக்கு. மணுமுத்தாறு டேமு, பாபநாசம் அருவின்னு சும்மா சம்மர்லயும், பவர்கட்டிலும் கூட ஜிலுஜிலு  இருஞ்ச்சு சார்.


இப்ப என்ன ஆச்சு?


எல்லாம் ஆச்சு சார். முடிஞ்ச்சி..


நான் அவனே பேசட்டும் என அமைதி காத்தேன்.


லவ் பண்னா சார்.. 30 நிமிஷத்துல போய் பாக்குற தூரத்துல பண்ணனும்.. 600 கிமீ தள்ளி போய் லவ் பண்ணா?  நாம என்ன சூர்யாவா? அவ என்ன பாக்கணும்னு சொல்லி நான் போலன்னா கூட பரால்ல சார். அவ அப்பன் பாக்கணும்னு சொன்னானாம். அப்ப கூட உடனே என்னால போக முடில. எங்கயோ கூட்டினு போய் அடைச்சு வச்சுட்டானுங்க சார். நான் போயி பாத்தா பெருசா பூட்டுதான் இருக்கு. மருவாதி போனாலும் பரால்லன்னு எங்க அத்தாயாண்ட போயி விசாரிச்சேன் சார். அடுத்து என் பொண்ண கெடுக்க வண்ட்டியான்னு தொரட்டி விட்டுச்சு.. அது பொண்ணுக்கும் என் மேல கண்ணு சார். நாந்தான் உங்கம்மா ஒத்துக்காதுன்னு அட்வைஸ் பண்ணேன். நான் நினைச்சிருந்தா.. விடுங்க சார். லவ் பன்றவங்க அப்படிலாம் பண்ன மாட்டாங்கல்ல..


மஞ்சரிக்கு என்ன ஆச்சு?


தெர்ல சார். தெரிஞ்சா நான் ஏன் இங்க வந்து பொட்டச்சியாட்டம் கண்ண கசக்கிட்டு இருக்க போறேன். 3 வருஷமாச்சு சார்..ஒரு டீட்டெயிலும் தெரில..


அது எப்படிப்பா? இப்பலாம் மொபைலு...


சும்மா கம்ப்யூட்டர் எஞ்சினியாரட்டாம் சொல்லாத சார். இப்பவும் எங்க்ளுக்கு பேப்பர் படிச்சாதான் நாட்டுல நேத்து நடந்ததே தெரியும்.


அவன் மூக்கை உறிஞ்சியபடியே சொன்னான். கடைசி வரை அந்த சிக்கனை அவன் தொடவே இல்லை.


வர்றன் சார்.


முகத்த தொடை


விடு சார்.என் கஷ்டத்த உங்கிட்ட கொட்டிட்டேன். நீயும் அக்கறையா பேசுற. அந்த பொண்ணு எங்க என்ன பண்ணுதோ சார். அதுங்கதான் குடிக்க முடியுமா இல்ல முன்னபின்ன தெரியாதவண்ட்ட கஷ்டத்த சொல்ல முடியுமா? அதான் சார்..


மீண்டும் நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்


வர்றன் சார். வூட்டுக்கு பாத்து போ.


போனது அவனா நானா என தெரியாமல் சேரிலே சாய்ந்தேன்.


Jan 5, 2014

சன்னதம்

5 கருத்துக்குத்து
  மார்கழி குளிரில் மொட்டை மாடியில் நின்று மேலெழுந்து வரும் சூரியனின் வெளிச்சத்தில் தெருவெங்கும் போடப்பட்டிருக்கும் வண்ணக்கோலங்களை பார்ப்பதென்பது அலாதியான அனுபவம். அது போன்றதொரு தருணத்தை வெகு சில திரைப்படங்களே எனக்கு தந்திருக்கின்றன. இன்று என்றென்றும் புன்னகை பார்க்கும் போது அது வாய்த்தது.

  இப்படம் சொல்ல வரும் கதையை அதிரடியாக சொல்லவில்லை. மாறாக, ரோஜாவின் இதழில் இருக்கும் பனித்துளி ஒரு சின்ன அசைவிலே உதிர்ந்திடாமல் மெதுவாக விழுவது போல அழகியலோடு சொல்லப்படுகிறது. சந்தானம், ஜெய் போல இரண்டு நண்பர்களும் ஜீவா (இனி கெளதம்)வின் வாழ்க்கை போலவும் நமக்கு அமையவில்லையே என்ற ஏக்கத்தை முதலில் ஏற்படுத்துகிறது படம். எப்போதும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது படம் முடிந்து வெளிவரும்போது சிலர் பேசிக்கொண்டபோதுதான் உணர்ந்தேன். எனக்கு அவர்களின் சந்தோஷம்.. அக்கறை.. பகிர்தல்.. ஆதரவு.. நட்பு.. இன்னும் பல தான் தெரிந்தன. நாம் வலிந்துதிர்க்கும் சிறுபுன்னகை கூட போலியானது என்று புரியாதவர்களுடனே பெரும்பான்மையான வாழ்க்கையை செலவிட்டவர்களுக்கு புரியும் அவ்வலி. நம் வாழ்வின் சிறப்பான தருணங்களின் நினைவுகளை கொண்டே காலக்குடுவையை நிரப்பிக்கொண்டிருக்கும் போது அதை தினம் தினம் வாழ்ந்து கொண்டிருக்கும் மூவர் மீது பொறாமை வரத்தானே செய்யும்?. அவர்கள் கண்களின் வழியே ஒரு உற்சாகமான வாழ்க்கையை பார்த்துக்கொண்டிருக்கும் போதே இவர்களுக்கு என்னவோ ஆக போகிறது என்ற எண்ணம் மனதில் அடியாழத்தில் தவித்துக் கொண்டேயிருக்க செய்ததில் இருக்கிறது இத்திரைக்கதையின் வெற்றி.

  இந்தப்படம் முடிந்ததும் தந்த மனநிலையை எப்படியாவது பதிவு செய்து வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். இறுதிக்காட்சியில் ஜீவா திரும்பி கண்களை கசக்கிக் கொண்ட நொடியில் துடித்துப்போன இதயம் பல மணி நேரங்களுக்கு அடங்கவே இல்லை. அரங்கை விட்டு வெளி வந்தபோது மாலை 6 மணி இருக்கும். மிகப்பிடித்த யாருடனாவது நேரத்தை செலவிட ஏங்கியது உள்ளம். அழைத்த ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதன்பின் அ யாரை அழைப்பது என்ற யோசனையின் முடிவில் ஒன்று புரிந்தது. புல்லாங்குழல் இசைக்குத்தான் காசு தருகிறார்கள் என நம்பும் குருடனை போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. தலை திருகப்பட்ட பறவையின் கடைசி துள்ளல் அடங்க காத்திருப்பது போல் உணர்ந்தேன். ஒரு feel good movie பார்த்த உணர்வு, வெளிவரும்போது எதிர்மறையாக மாறியிருந்தது. இப்போதைய வாழ்வு அதற்கு முற்றிலும் எதிராய் இருந்ததை நான் உணர்ந்து கொண்டதால் இருக்கலாம்.

  உண்மையில் நான் கெளதமுக்கு நேரெதிர். அடுத்தவரின் EGOவை satisfy செய்வதில் தான் உன் வெற்றி இருக்கிறது. ஆனால் அதுவே உன் பிரச்சினைகளுக்கு காரணம் என நந்து சொன்னது நினைவில் வந்து போனது.
வாழ்வு மீதான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவது, அல்லது ஒரு நம்பிக்கையை உடைப்பது. இவற்றில் ஒன்றை செய்தாலும் அதுதான் இலக்கியம் என நினைப்பவன் நான். இந்தப்படம் நான் கெளதமாக மாறவே முடியாது என்ற நம்பிக்கையை உடைத்திருக்கிறது. நான் கெளதமாக பாதி மாறிவிட்டேன் என்ற மோசமான உண்மையையும் எடுத்திரைத்திருக்கிறது. என்றென்றும் புன்னகை – ஓர் இலக்கியம்.

  ஆறுதலாய் அந்த ஒருவர் வந்திருந்தால் அழுது தீர்த்துவிட்டு நகர்ந்திருப்பேன். வெளிவராத கண்ணீர் இன்னும் எத்தனை நாளைக்கு என்னை அழுத்தப்போகிறதோ என்ற கவலையில் நாளை மீண்டும் என்றென்றும் புன்னகைக்கு செல்லவிருக்கிறேன். தனியாக.


 

all rights reserved to www.karkibava.com