Nov 1, 2013

கோடம்பாக்கம் - டொக் டொக்

24 கருத்துக்குத்து


 15 நாட்கள் outdoor shoot முடிந்து சென்னை திரும்பியாகிவிட்டது. 15 நாட்களும் வெயிலிலே படப்பிடிப்பு. பாண்டி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் சாலையென எல்லாமே மொட்டை வெயில். காலை சில மணி நேரங்கள் மழை பெய்துவிட்டு, பின் கொளுத்தியெடுத்தபோது இந்த சூரியனை இன்னொரு எம்ஜிஆர் என்று கூட சொல்லலாம் போலிருந்தது. இதற்கு முன்னால மட்டும் நீ என்ன அஜித் கலர்லயா இருந்த என யாரும் பின்னூட்டமிடமாலிருக்க என் சோகக்கதையை தவிர்த்து விடுகிறேன்.

   என்னால் இத்தனை மணி நேரம் வேலை செய்ய முடியுமென்று எனக்கே தெரியாது. காலை 4.45க்கு காஃபி தருகிறேன் பேர்வழியென புரொடக்‌ஷன் பாய் காலிங் பெல்லை வேறேதோ என நினைத்து அமுக்கி தள்ளுவான். எழுந்திருப்பதை தவிர வேற வழியில்லை. அப்போது ஆரம்பித்தால் அந்த அறைக்குள் மீண்டும் நுழைய இரவு 10 மணி ஆகிவிடும். ஆனால் உள்ளம் குதுகலித்துக் கொண்டிருக்கும்.  எந்த ஒரு கலைக்கும் 90% உழைப்புதான் தேவைப்படுகிறது. மீதி இருக்கும் அந்த 10% தான் கலையென்னும் அற்புதம் மாயாஜாலத்தை காட்டுகிறது. அந்த கலைஞனுக்கும் சரி, அதை ரசிக்க போகிறவனுக்கும் சரி. அந்த10% தான் மகிழ்ச்சியை தரவல்லது. ஒரு படைப்பு உருவாகும்போது, உருவாக்கிய பின்பு, ரசிகர்கள் பார்வைக்கு வந்த பின்பு என எல்லா கட்டங்களிலும் ஒருவனை உற்சாகபடுத்துவது அந்த 10% தான். எங்கள் படத்தில் இந்த 15 நாட்கள் தான் மிக முக்கியமானது. கதையின் மையப்பகுதி என்றும் சொல்லலாம். அதனால் கூட இருந்திருக்கலாம்.


  கோவிலில் vip தரிசனம் போல நான் சினிமாவுக்குள் மிக எளிதாக நுழைந்துவிட்டேன். பாரா மற்றும் கேபிள் சங்கர் என்ற இரண்டு பேர் வரிசையில் காத்திருக்கும் அத்தியாயத்தையே தள்ளி வைத்துவிட்டார்கள். பாரா பிரச்சினையில்லை. அவர் ஆசை மகளின் ஆஸ்தான நாயகன் விஜய் படங்களுக்கு முதல் நாள் டிக்கெட் வாங்கி தந்து பரிகாரம் செய்துவிடலாம். கேபிள் பார்க்கும் படங்களுக்கு டிக்கெட் வாங்கி தந்தால் நான் விஜய் மல்லையா கூட சேர்ந்து திவாலாக வேண்டியதுதான். வேறுவழி யோசிக்க வேண்டும்.

   பாக்கெட்டில் பத்து ரூபாயும்,பன்னிரெண்டு கதைகளும் வைத்துக் கொண்டிருக்கும் உதவி இயக்குனர்களுடன் கடற்கரையில் ஒரு மாலை கழிகிறது. மறுநாள் எங்கள் ஹீரோ மற்றும் வின்செண்ட் அசோகன் அவர்களுடன் ஃப்ரென்ச் க்ளபில் Meet my parents பற்றி சிலாகிக்க முடிகிறது. இசை கோர்க்கும் பணியை உள்ளிருந்து பார்க்கவும், பதிவு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. எடுத்த காட்சிகளை அன்றே எடிட்டர் உடன் அமர்ந்து கோர்க்க முடிகிறது. சமையலறை, சாமியறை என வித்தியாசமின்றி நக்கி செல்லும் பங்களா நாய் போலதான் சினிமா உலகில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். சினிமா என்ற எஜமானனுக்கு மட்டும் விசுவாசமாய் இருக்க வேண்டும்.

  முதல் படம் முடிவதற்குள் அடுத்தடுத்த வேலைகள் வந்தவண்ணம் உள்ளன. Duckworth lewis முறை எல்லாம் சினிமாவில் கிடையாதென்பதால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் பகிர்ந்து கொள்கிறேன். கொஞ்சம் பெரிய இடம் தான். J


  நான் தேங்கி நின்ற இடத்தில் இருந்து கைப்பிடித்து என்னை நகர செய்த நண்பர்கள் எல்லோருமே இணையம் மூலம் பழக்கமானவர்கள்தான். பாரா, கேபிள் வாய்ப்பு தந்தவர்கள் என்றால் தூக்கி நிறுத்தியவர்கள் என ராஜன், பரிசல், டேவிட், கெளதம், மதன் கார்க்கி என ஒரு நீண்ட பட்டியலையே போட வேண்டியிருக்கும். நான் இன்னும் இரண்டம் அடியையே வைக்கவில்லையென தெரியும். இருந்தும், இவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இனிமேல் ஓடுவது என் பாடு.

  தொட்டால் தொடரும் மூலம் சினிமா உலகத்தை தொட்டிருக்கிறேன். தொடரும்.

  நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும், தீபாவளி வாழ்த்துகளும்.


 

all rights reserved to www.karkibava.com