Jul 11, 2013

காதலும், நிராகரிப்பும் அதன் பின்னான வாழ்க்கையும்  இத்தனை 1000 ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்கள் காதல் என்பது என்ன என்பதை மட்டும் கண்டறியவே இல்லை. எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது.. எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது. தெரியாது.

விபத்தா, விதியா? தெரியாது. 

Perfect couple எனப்படுபவர்கள் நொறுங்கி வீழ்கிறார்கள். சரிப்படாது என நினைப்பவர்கள் வாழ்ந்து தீர்க்கிறார்கள். எப்படி? தெரியாது.

ஒன்று மட்டும் தெளிவு. காதல் அப்படியேதான் இருக்கிறது. அங்கேயேதான்.
உங்களுக்கு காதல் மேல் நம்பிக்கை இருந்தால் மட்டுமே மேற்கொண்டு தொடருங்கள்.

   Lootera. நேற்று இரவு பார்த்த ஒரு இந்திப்படம். The last leaf என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரன்வீர் சிங்கும், சோனாக்‌ஷி சின்ஹாவும் நடித்திருக்கிறார்கள்.   கதை இதுதான்.(படம் பார்க்க நினைப்பவர்கள் Skip செய்துவிடலாம்). சோனாக்‌ஷி ஒரு ஜமீந்தாரரின் மகள். அந்த ஊருக்கு வரும் ரன்வீர் ஒரு தொல்பொருளியல் நிபுணன். முதல் சந்திப்பிலே சோனாக்‌ஷிக்கு ரன்வீர் மீது காதல் வருகிறது. சோனாக்‌ஷி வீட்டில் தங்கி தன் நண்பனுடன் வேலைகளை பார்த்து வரும் ரன்வீரிடம் ஒரு கட்டத்தில் தன் காதலை சொல்கிறாள். ரன்வீர் ஏற்றுக் கொள்ளவில்லை. வேலைகளை முடித்து ரன்வீர் ஊருக்கு கிளம்பும் நாள் நெருங்குகிறது. இதற்கிடையில் நில உச்ச வரம்பு சட்டம் அமலுக்கு வருகிறது. அரசாங்க ஆட்கள் வந்து ஜமீந்தாரரின் முன்னோருக்கு வெள்ளையர்கள் கொடுத்த அரும்பொருட்களை கையகப்படுத்தி செல்கிறார்கள். ரன்வீர் ஊருக்கு கிளம்பும் முந்தைய நாள் இரவு, சோனாக்‌ஷி ரன்வீரின் அறைக்கு செல்கிறாள். அங்கே இருவரும் இணைகிறார்கள். மறுநாள், ரன்வீர் ஜமீந்தாரரிடம் தன் காதலை சொல்லி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்கிறான். தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது. விடிந்தால் திருமணம். முந்தைய இரவில் ரன்வீர், நண்பணுடன் தப்பித்து செல்கிறான். ஏனெனில் ரன்வீர் ஒரு திருடன். அரசாங்க ஆட்கள் என ஜமீந்தாரரின் சொத்துக்களை எடுத்து சென்றதும் ரன்பீர் ஆட்கள்தான். தொல்பொருள் ஆராய்ச்சி என சொல்லி, நிலச்சுரங்கம் அமைத்து ஒரு தொன்மையான சிலையையும் திருடிவிடுகிறான் ரன்வீர். எல்லாமே ப்ளான் செய்யப்பட்ட ஒன்று. அதிர்ச்சியில் ஜமீன்தார் இறக்கிறார். மூச்சு பிரச்ச்சினை வியாதியால் அவதிப்படும் சோனாக்‌ஷி, வேறொரு இடத்தில் தனிமையில் வாழ்க்கையை கழிக்கிறார். சோனாக்‌ஷி வாழும் ஊருக்கு வேறொரு சிலை திருட ரன்வீரும் நண்பரும் வருகிறார்கள். போலீஸ் துரத்தலில் நண்பனையே ரன்வீர் சுட்டுவிடுவதெல்லாம் இரண்டாம் பாகத்தில் நடக்கிறது. அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனக்கு முதல் பாதிதான் அழகு.

   இதன் இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானே இந்தக் கதைக்கு என ஒரு பிரத்யேக திரைமொழியை எடுத்தாண்டிருக்கிறார். A poetic narration  மிக மெதுவாக நகரும் கதையின் அழகே அதன் வேகம் என்றுதான் சொல்வேன்.அந்த வேகத்திற்கேற்ப ஒரு அதி உன்னத பின்னணி இசை. சமீபத்தில் நான் பார்த்ததில் மிகச்சிறந்த பின்னணி இசை இந்தப்படத்தில்தான். 1950களில் நடக்கும் கதையில் கலை இயக்குனரும் வியக்க வைக்கிறார்.ரன்வீர் கபூரின் நடிப்பு ஏமாற்றம்.. இதை தமிழில் எடுத்து தனுஷ் மட்டும் நடித்தால் சோனாக்‌ஷியை மிஞ்சிவிடுவார். Lootera வின் ஜீவனே சோனாக்‌ஷிதான்.

  சோனாக்‌ஷியின் காதலில் நாமும் வீழ்ந்து போகிறோம். இந்தப்படம் சோனாக்‌ஷி ஏமாற்றப்படும் இடத்தில் மிகச்சிறந்த படமாகிறது. சோனாக்‌ஷியின் அற்புதமான நடிப்பு நம் இதயத்தை வெடித்து சிதற வைக்கிறது. “அதிகாலை பனி அடிவயிற்றை நனைத்ததை யாரிடம் சொல்லும் நத்தை” என்பது போல தனிமைப்படுத்த படுகிறாள் சோனாக்‌ஷி. அன்புத்தந்தையும் மரணிக்க, நம்பியவனும் நிராகரிக்க என்னதான் செய்வாள் அவள்?

   ஆனால் ரன்வீரின் நிராகரிப்பு அவளை மாற்றி விடவில்லை. அவன் மீதான அன்பு அப்படியேதான் இருக்கிறது. கொஞ்சம் கூடியிருக்கிறது என்றேனும் சொல்லலாம். உலகத்தின் மொத்த துயரமும் அவள் மீது கொட்டப்பட்டது போன்ற உணர்ந்த தருணம் அது. இருந்தும் அவன் ஞாபகங்களை தூக்கிக் கொண்டு  அலைகிறாள் சோனாக்‌ஷி. ஒரு நத்தை பாலைவனத்தை கடப்பதை போல.

   ஒரு நல்ல திரைப்படம் படத்தை பார்க்கையில் நம்மை எப்படி பாதிக்கிறது என்பதை விட, அரங்கை விட்டு வெளியேறிய பின் என்னவெல்லாம் செய்கிறது என்பதிலே இருக்கிறதென்பேன். நேற்று இரவு படம் பார்த்தபின் வெளியே வந்தபோது மழைத்தூறிக்கொண்டிருந்தது. காரில் அப்படியே கடற்கரை சென்றுவிட்டேன். சிறிது நேரம் மழையின் நின்றபடி கடலை பார்த்துக் கொண்டிருந்தேன். சோனாக்‌ஷிக்கு நேர்ந்த நிராகரிப்பு மனதை கடல் அலைகள் மணலை அரிப்பது போல் அரித்துக் கொண்டிருந்தது. என்னை நனைத்த மழையில் கண்ணீரும் காணாமல் போனது. சில நிராகரிப்புகள் வரம். வலியை கூட ரசிக்க வைக்கும் வரம். சோனாக்‌ஷிக்க்கு நேர்ந்த நிராகரிப்பை போல.

   மீண்டும் காரிலேறி வீடு சேர்ந்தபோது மணி 2.30 இருக்கும். அந்த நிராகரிப்பு என் மனதில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டுதான் இருந்தது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இறுதியில் ரன்வீர் அவளிடம் வரும்போது தன் காதல் தோற்கவில்லை என்ற ஆனந்தத்தில் சோனாக்‌ஷி சிரிப்பதுடன் படம் முடிகிறது. இந்த முடிவை தவிர மற்ற அனைத்தும் நம் வாழ்வில் நடந்துக் கொண்டுதானிருக்கிறது. சில சமயம் ரன்வீருக்கு.


11 கருத்துக்குத்து:

Mayalogam on July 11, 2013 at 2:50 AM said...

You stand tall in the last line! I was excitedly reading thru the post expecting for your touch knowing that you will strike the heart strong with a one-liner somewhere. You did not disappoint. The whole post was heartwarming !

Nataraj (ரசனைக்காரன்) on July 11, 2013 at 3:39 AM said...

அதிகாலை பனி அடிவயிற்றை நனைத்ததை யாரிடம் சொல்லும் நத்தை - கிளாஸ்..

M.G.ரவிக்குமார்™..., on July 11, 2013 at 11:34 AM said...

அதிகாலை பனி அடிவயிற்றை நனைத்ததை யாரிடம் சொல்லும் நத்தை - ரமேஷ் வைத்யாவின் நச் வரிகள்!

அமுதா கிருஷ்ணா on July 11, 2013 at 11:39 AM said...

விமர்சனம் படத்தை உடனே பார்க்க சொல்கிறது.பார்க்கணுமே.

இந்திரன் on July 11, 2013 at 11:40 AM said...

///இந்த முடிவை தவிர மற்ற அனைத்தும் நம் வாழ்வில் நடந்துக் கொண்டுதானிருக்கிறது. சில சமயம் ரன்வீருக்கு/// படத்தோட முடிவை விட இந்த முடிவு அழகா எதார்த்தமா இருக்கு :)))

குழந்தபையன் on July 11, 2013 at 11:59 AM said...

இந்த படம் பார்த்துட்டேன்.. அத விட அழகா/ஆழமா தெரியுது சில வரிகள் இங்க..உண்மைக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு

Ragupathi Raja Chinnathambi on July 11, 2013 at 12:12 PM said...

whatever happens Life must go on -என்பதே வாழும் வழி என்று சொல்வார்கள். ஆனால் வாழ்வின் உன்னதம் என்பது என்ன நிகழ்ந்தபோதும் "சுயத்தை இழக்கமால்" Life goes on ஆகும் பொது தான். இல்லையா கார்க்கி ?

karki bava on July 11, 2013 at 1:24 PM said...

Thanka mayalogam

நன்றி ரசனை,ரவிக்குமார், அமுதா,இந்திரன், குழந்தைபையன்

ரகு, உண்மை

amas on July 11, 2013 at 2:15 PM said...

உங்கள் பதிவைப் படித்ததே மனத்தை கனக்க வைக்கிறது. படத்தைப் பார்க்க வேண்டும். நிராகரிப்புக்குப் பின்னும் காதலிக்கும் மனம் அபூர்வம்.

amas32

இரசிகை on July 15, 2013 at 1:29 PM said...

hmm...

இசைப்பிரியன் on July 15, 2013 at 2:33 PM said...

சில சமயம் ரன்வீருக்கு --- நீங்க ரன்வீரா இருக்க ஆசைப்படறது 'பொது விதியில்' தப்பாயிடுமே தம்பி :)

 

all rights reserved to www.karkibava.com