Jul 8, 2013

இளவரசன்


   தர்மபுரி இளவரசனின் மரணம் குறித்த செய்தி தெரிந்தது முதலே ஏதோ ஒரு இனம்புரியாத கவலை ஆட்கொண்டுவிட்டது. அது கொலையா, தற்கொலையா என்பது குறித்தெல்லாம் யோசிக்க தோன்றவேயில்லை. அவனே தன்னை கொன்றிருந்தால் கூட அது கொலைக்கு ஒப்பானதுதான்.

 19 வயதில் இளவரசனின் பக்குவமும், உறுதியான நிலைப்பாடும் என்னை கொஞ்சம் அதிகமாவே ஈர்த்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் கையில் ஏதுமில்லை(கட்சிகளின் தலையீடு) என்றானாலும் கூட, திவ்யா கடைசியில் எடுத்த வேண்டாம் என்ற முடிவை இளவரசன் எப்போதோ எடுத்திருக்க வேண்டியது. ஏனெனில் பாதிப்புகள் அவன் பக்கம் எப்போதும் அதிகமாகவே இருந்தது. அதை அவன் உணர்ந்தவனாகவே எனக்கு தெரிந்தான். இதையெல்லாம் மீறிய அவன் உறுதி அவன் மீதான மரியாதையை உயர்த்தியது. அதனால்தான் அவன் மரணம் எனக்கு மிகப்பெரிய இழப்பாக மனதளவில் இருந்தது. உணர்ச்சிவசப்பட்டு ஏதும் எழுதிவிட வேண்டாமென்றே சில நாட்கள் எழுதவில்லை.

   இங்கே திவ்யாவையும் இகழ காரணமில்லை. இன்னமும் ஒரு பெண் தன் காதலை சொல்லி , அனுமதி மறுக்கப்படும்போது தடை மீறி திருமணம் செய்வது சாதாரண விஷயமாக எனக்கு தெரியவில்லை. அதீத மனதிடமும், தைரியமும், அதையெல்லாம் விட உண்மையான காதலும் தேவை. காதலிக்கும்போது இது தெரியாதா என்ற கேள்வியில் சுத்தமாக நியாயமில்லை. இந்த சமூகத்தின் கோரமுகமும், பெற்றவர்களின் நிஜ முகமும் அப்போது அவர்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. கெளரவக்கொலைகளும், பெற்றோர்களின் தற்கொலைகளும் இன்னமும் நடந்துக் கொண்டுதானிருக்கின்றன என்ற செய்திகளே போதும். சென்னையை தாண்டினால் தமிழகம் வேறு முகம் கொண்டிருக்கிறது. சாதியின் பிடியில் இருந்து மீள நமக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமென கணிக்க கூட முடியாத அளவிற்கு யதார்த்தம் இருக்கிறது.

  தன் காதலுக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு , எதிர்த்து நின்று போராடும் /போராடிய எல்லா பெண்களை பாராட்டும் அதே வேளையில்,திவ்யாவை போல் ஒரு கட்டத்தில் பின்வாங்கிய பெண்களை சாட தேவையில்லை. அந்த லட்சணத்தில் நம் சமூகம் பெண்களை நடத்தவில்லை.

  இந்த இடத்தில் இன்னுமொரு முக்கியமான கேள்வி எழுகிறது. காதலால் சாதியை ஒழிக்க முடியுமா?? இந்த வியாக்கியானம் எல்லாம் இருக்கட்டும். இரண்டு பேர் விருப்பப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ நினைக்கும்போது, அதை மறுக்கும் ஒரு சமூகம் எவ்வளவு மோசமான ஒன்று என யோசித்து பார்க்க வேண்டும். இதை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக பார்ப்பது சரியான பார்வையாகாது. பெற்றோரின் அந்த கவலைக்கு முழுக்காரணமும் சமூகம் தான்.
தமிழக அரசியல் மோசமான பின்பு அடிக்கடி இது போன்ற கட்சி சார்ந்த கலவரங்கள் பல காரணங்களுக்காக நடந்து கொண்டுதானிருக்கின்றன. மதுரை தினகரன் அலுவலக எரிப்பு, தர்மபுரி பேருந்து எரிப்பு என பல சம்பவங்களை சொல்லலாம். பெரும்பான்மையானவற்றில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டோ, அல்லது ஏதேனும் ஒரு வழியில் அதற்கான விலையை கொடுக்கவோ நேர்ந்திருக்கிறது. ஆனால் தர்மபுரியில் மூன்று கிராமங்கள் எரிக்கப்பட்ட பின்பும் அவர்களுக்கு எதுவும் நடந்துவிடவில்லை. இன்னும் வீரியத்துடன் வன்னியர் என்ற சேற்றை பூசிக்கொள்ளவே செய்தார்கள். அதன் உச்சக்கட்ட கொடுமைதான் இளவரசன் மரணம்.

   இரண்டு ஆதிக்க சாதிகளே கூட பெண் எடுத்து பெண் கொடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அங்கே காதல் பிரச்சினை எழும்போதெல்லாம் வேறு வழியில் சுமூகமாக தீர்த்துக் கொள்கிறார்கள். இங்க இளவரசன் மரணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஒரே காரணம் அவன் தலித் என்பதுதான். இதில் வன்னியர்கள் தொடர்பிருப்பதாலே அவர்களை சாட வேண்டியிருக்கிறது. மற்றபடி தமிழகத்திலிருக்கும் அத்தனை ஆதிக்க சாதிகளுமே இதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். ராமதாஸ் என்ற வினையூக்கி இல்லாதது ஒன்று மட்டுமே ஆறுதல்.


   இளவரசன் மரணம் இன்னொரு துரதிர்ஷ்டமான சம்பவம் என கடந்து செல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் இந்த சாதியை எதிர்த்து காய் நகர்த்த வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்தி சென்றிருக்கிறது. ”நான் சாதியை எதிர்ப்பேன்” என்ற கொள்கையில் சமரசம் இல்லாமல் வாழ்வதே ஒரு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கக்கூடுமென கருதுகிறேன். 

18 கருத்துக்குத்து:

SENTHIL PRABU on July 9, 2013 at 12:11 AM said...

பக்குவமடைந்த வார்த்தைகள் .. ”நான் சாதியை எதிர்ப்பேன்” என்ற கொள்கையில் சமரசம் இல்லாமல் வாழ்வதே ஒரு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கக்கூடுமென கருதுகிறேன். 

Nataraj (ரசனைக்காரன்) on July 9, 2013 at 1:44 AM said...

கார்க்கி..நீ வார்த்தை ஜாலக்காரன் (சாரி ஒருமை தான் இங்கு சரிப்படும், இளவரசனுக்கு ‘ன்’ போட்டது போல்). உன் பல பதிவுகள் சுவாரசியத்துகாக படிச்சதுண்டு/ரசிச்சதுண்டு. ஆனா இது போன்ற நேரான,நேர்மையான பதிவு நீ எழுதி நான் படிச்சதில்ல. தெள்ளத்தெளிவான மனநிலையில், நிதர்சனத்தையொட்டி, பெரிய ’நாம ஏதாச்சும் பண்ணனும் பாஸ்”கள் இல்லாது எழுதப்பட்ட உண்மையான பதிவு. மத்தபடி, இப்பிரச்சனைக்கு சொல்யுஷன் சொல்லுமளவுக்கு, உனக்கு,எனக்கு யாருமே திராணியோ,வக்கோ இல்லை இங்கு :(

David Jebaraj on July 9, 2013 at 3:22 AM said...

வாசித்து முடிக்கையில் தோன்றியது... திவ்யாக்களும் பாவம். இன்னமும் அவர்களை விட்டுக்கொடுக்க முடியாத இளவரசன்களும் பாவம்...

David Jebaraj on July 9, 2013 at 3:23 AM said...

வாசித்து முடிக்கையில் தோன்றியது... திவ்யாக்களும் பாவம். இன்னமும் அவர்களை விட்டுக்கொடுக்க முடியாத இளவரசன்களும் பாவம்...

கவிப்ரியன் on July 9, 2013 at 5:04 AM said...

நேர்மையான பதிவு!

த.ம.1

sneha priya on July 9, 2013 at 5:19 AM said...

social justice is a far fetched dream kargi..... vanniya verses sc, sc verses vanniyas ...this ugly social crimes will never end. Dharmapuri district poses the ugliest picture of these clashes. In ninties it was veppilaipatti burn down. These incidents become history unreadable and indigestable.Humanity.....milk of human kindness....compassion.... friendship.... forgotten words in human life. your views portray the outlook of a writer. your idedntified yourself with both the afflicted. Good keep going

முரளிகண்ணன் on July 9, 2013 at 6:41 AM said...

ஒத்துப் போகிறேன் சகா.

sursh on July 9, 2013 at 7:31 AM said...

இதுல திவ்யாவை சாடக்கூடாது என்று மட்டும் சொல்லாதீர்கள். காரணம் இதில் தன் நிலையை உணர்ந்த ிளவரசனை ஜாதி ஒன்றும் நம் காதலுக்கு தடையாக வரவிடமாட்டேன் என்று கட்டாயம் வாக்கு கொடுத்த பின்பு தான் இளவரசன் காதலிக்கதெ தைரியம் பெற்றே இருப்பான்.
அவனுக்கு இழப்புகள் அதிகம் ஆனது தன்னால் தான் என்ற உண்மையை வெகு சுலபமாக ஜீரணிக்கக் கூடிய சக்தியைப் பெற்றதால் தான் சாட வேண்டியுள்ளது.
என்னை இவர்கள் வலுக்கட்டாயமாக மிரட்டித் தான் என் அம்மாவோடு இருக்கிறேன். என் சூழ்நிலை என்னை இந்த முடிவு எடுக்க வைத்துள்ளது. என்று தெளிவாகச் சொல்லியிருந்தால் அந்தப்பையன் மனநிலை சாந்தப்பட்டிருக்கும்.
அப்படிச் செய்ய முடியாத அளவுக்கு பயமுறுத்தி இருந்தால் இப்பக்கூட என்னை மிரட்டியது இந்த ஜாதித் தலைவர்கள் தான் என்று பேட்டி கொடுத்துவிட்டு எதாவது செய்யட்டும். தன்னால் முடிந்த அளவுக்கு ஜாதித் திரையை கிழித்தவளாக வாழ்த்தும்

நிகழ்காலத்தில் சிவா on July 9, 2013 at 7:49 AM said...

இளவரசன் எழுதிய கடிதம் பாருங்க கார்க்கி...:) வினவுல

M.G.ரவிக்குமார்™..., on July 9, 2013 at 10:07 AM said...

இளவரசன் திவ்யா பிரச்சினை தற்போது காதலிப்பவர்களை நாம் என்ன சாதி என ஒரு நிமிடமாவது யோசிக்க வைத்திருக்கும்!அச்சப்பட வைத்திருக்கும்!சில பல காதல்கள் முன்னெச்சரிக்கையுடன் முறியவும் கூடும்!வேறெந்த விஷயத்தை விட திருமண விஷயத்தில் எல்லாப் பெற்றோர்களும் சாதியை மிக உறுதியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!காரணம் சுற்றியிருக்கும் சாதி சனம்!இது மாற பல காலம் ஆகும்!

Bricksnsand on July 9, 2013 at 10:25 AM said...

நேர்மையான பதிவு...தொடர்ந்து எழுதவும்

karki bava on July 9, 2013 at 10:56 AM said...

இளவரசனின் கடைசி கடிதத்தில் இருந்து (நன்றி -வினவு.காம்)

________________

என் அன்பு காதலி திவ்யாவுக்கு, நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாது. ஆனால் நீ என்னை விட்டு பிரிந்த நாட்களில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம் எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஜூலை 1-ம் தேதி வரை நான் நீ வருவாய், என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஒருவேளை நீ அன்று என்னுடன் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன். நீ ஏற்கனவே உன் அப்பா இறந்ததற்கு காரணம் நீதான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய். என் அப்பா உண்மையிலேயே என் மேல் பாசம் வைத்தவராய் இருந்தால் என்மேல் கொலைப் பழியை போட்டு விட்டு என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார் என்று சொல்வாய்.


திவ்யா – இளவரசன்
அதே போல நீ என்னிடம் கேட்பாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், உண்மையாகவே என்னால் உன்னை விட்டு வாழ முடியவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு நம்ம இரண்டு பேரும் இருந்தோம். எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். திவ்யா, எனக்கு உன்னன ரொம்ப புடிக்கும்.

நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன், ஏன் என் கூட வாழ வர மாட்டேங்கறனு கண்டிப்பா எனக்குத் தெரியல.

நம்ம இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டத்திற்கு மேல ஒன்னு சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும்.

எனக்கு ரொம்ப ஆசை திவ்யா நம்ம இரண்டு பேரும் நல்லா வாழனும், நம்மள கேவலமா பார்த்தவங்க முன்னாடி பொறாமைப் படும் அளவுக்கு உன்ன அழகா, கண் கலங்காம வெச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை.

உனக்கு ஒன்னு தெரியுதா நீ என்னோட எல்லா விஷயத்திலும் சேர்ந்திருந்து ஆனா இப்போ எதிலும் நீ என்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா.

Please திவ்யா என்ன வெறுக்காத, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ என்னிடம் கேட்கலாம், உண்மையாகவே நீ என்மேல் பாசம் வைத்தவனாக இருந்தால் ஏன் என்ன விட்டு போகனும்னு.

கண்டிப்பா சொல்றேன், நான் உன்னை விட்டு போகனும்னு நினைக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழணும்னு ரொம்ப ஆசை, ஆனால் என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா என்னை மன்னிச்சுடு, நான் இந்த உலகத்த விட்டு போறேன்.

இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.

I LOVE YOU SO MUCH BABY
I LOVE YOU SO MUCH

எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் திவ்யா

__________________

என் பாசத்திற்கு உரிய அப்பாவிற்கு,

என்னை மன்னிச்சிடுங்க. அப்பா அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பார்த்துகோங்க. தயவு செஞ்சி அம்மாவ கஷ்டப்படுத்தாதிங்கபா.
__________________

என் நேசமிகு அம்மாவிற்கு, அம்மா என்னை மன்னிச்சிடு. எனக்கு உன்னை நல்ல வெச்சி பாக்கனும்னு ஆசை.

நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்ன வளர்த்து, படிக்க வைக்க, ஆனால் என்னால உங்களுக்கு எதுவுமே செய்ய முடியல. என்ன மன்னிச்சிருங்க.

அடுத்து ஜென்மத்துல நீயும், அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கணும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மம் தீர்க்கணும்.
__________________
என்னோட Best friend என் அண்ணன் பாலாஜிக்கு, என்னை மன்னிச்சிறு பாலா. நீ எனக்கு எப்பவோ சொன்ன தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனா என்னால முடியல பாலா. I am really sorry Bala.
__________________
என்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது என் சுயமான முடிவாகும்.

என்னுடைய கடைசி ஆசை, நான் இறந்த பின்பு என்னை பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி திவ்யா வந்தால் யாரும் அவளை திட்ட வேண்டாம். Please அவளை யாரும் கோவமாக பேச வேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு, எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். என்னால அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல. அவளாவது வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கட்டும்.

I Love you so much da Baby Dhivya.

யுவகிருஷ்ணா on July 9, 2013 at 11:06 AM said...

சாதியை எதிர்க்கக்கூட தேவையில்லை. எதிர்ப்பதைகூட தீவிரவாதம் என்கிறார்கள். அகிம்சை முறையில் மறுத்தால்கூட போதும்.

அப்புறம் ‘ஆதிக்கசாதி’ பட்டியலில் வன்னியர்களை சேர்த்து இணையத்தில் நிறையபேர் பேசுவதை காணமுடிகிறது. வன்னியர்கள் தலித்துகளுக்கு கொஞ்சம் மேம்பட்டவர்கள் அவ்வளவுதான். இவர்களை ஆதிக்கசாதி என்கிற வகைமைக்குள் சேர்க்கமுடியாது.

பிரபல பதிவர் on July 9, 2013 at 11:12 AM said...

என்ன சொல்றது... இது எங்க போய் முடியும்னு தெரில....

காதல் திருமணங்கள்தான் அதிகமாக விவாகரத்திற்கு வரும் காலத்தில் காதலை குறை சொல்வதா... கல்யாணத்தை குறை சொல்வதா என்றும் புரியவில்லை

karki bava on July 9, 2013 at 11:42 AM said...

@யுவகிருஷ்ணா,

நான் திண்டிவனத்துக்காரன்.அந்த பெல்ட்டில் மெஜாரிட்டி இவர்கள்தான். எல்லா கிராமங்களிலும் தலித் vs வன்னியர்கள் தான். வேறு யாரும் தலையெடுத்து பார்த்ததில்லை. அந்த ஏரியாவில் ஆதிக்கம் இவர்களுடையது என்ற அளவில் சொன்னேன்.

யுவகிருஷ்ணா on July 9, 2013 at 11:47 AM said...

கார்க்கி, நான் காஞ்சிபுரத்துக்காரன். ஊருக்கு ஓரிரு நாய்க்கர்கள் முதலாளிகளாக இருக்கலாம் (போலவே ஓரிரு தலித்துகள் ரியல் எஸ்டேட் அதிபர்களாக இருக்கலாம்). அவர்களிடம் தலித்துகளுக்கு சமமாக வன்னியர்களும் கூலிவேலைதான் செய்கிறார்கள்

தலித் vs வன்னியர் மோதல் ஓக்கே. ஆனால் ‘ஆதிக்கசாதி’ என்று சொல்லுமளவுக்கு வன்னியர்களின் அந்தஸ்து இல்லை. இப்போதைய வன்னியர் வெறுப்பு சூழலில் இந்த வார்த்தையை நாம் கட்டமைத்துவிட்டால் எதிர்காலத்தில் சமூகநீதி பேசும்போது பிரச்சினை வரும்.

monica on July 9, 2013 at 6:03 PM said...

ஆதிக்க சாதி என்று வன்னியரை கூறுவது தவறு தான். இந்த கொடூர சம்பவத்தின் நாயகர்கள் பா.ம.க. கட்சியினர் மட்டுமே. ஒட்டு மொத்த வன்னிய மக்கள் கிடையாது. தமிழ் சமுதாயத்தில் சாதிப் பிரிவு மற்றும் சாதிக்கொடுமை காலம் காலமாக ஊறிக்கிடக்கிறது என்பது எவராலும் மறுக்க இயலாது.ஆனால் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு கோர முகம் எப்படி வெளிப்பட்டது? இதில் ஒரு பெரிய சதியே அடங்கியுள்ளது. அந்த அடிப்படையை உண்மையை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை .தமிழகத்தின் உயிர்நாடிக் கொள்கையான இடஒதுக்கீட்டை குழி தோண்டி புதைப்பதற்கு இந்துத்துவ பார்ப்பன கும்பல் அரங்கேற்றியிருக்கும் மிகப்பெரிய சதித்திட்டம். ஆசிரியர் தகுதித் தேர்வில் ஜெ.அரசு இடஒதுக்கீட்டை எவ்வாறு குத்திக்குதறிக் கொண்டிருக்கிறது என்பது இணையப் புலிகளுக்குத் தெரியுமா? தமிழ்குடிதாங்கி அவர்கள் இதனை எதிர்த்து அனைத்து சூத்திரசாதியினரையும் தலித் மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய சமூக நீதிப்போராட்டத்தை நடத்தாமல் இப்படிக் கீழ்த்தரமான அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்.

monica on July 9, 2013 at 6:03 PM said...

ஆதிக்க சாதி என்று வன்னியரை கூறுவது தவறு தான். இந்த கொடூர சம்பவத்தின் நாயகர்கள் பா.ம.க. கட்சியினர் மட்டுமே. ஒட்டு மொத்த வன்னிய மக்கள் கிடையாது. தமிழ் சமுதாயத்தில் சாதிப் பிரிவு மற்றும் சாதிக்கொடுமை காலம் காலமாக ஊறிக்கிடக்கிறது என்பது எவராலும் மறுக்க இயலாது.ஆனால் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு கோர முகம் எப்படி வெளிப்பட்டது? இதில் ஒரு பெரிய சதியே அடங்கியுள்ளது. அந்த அடிப்படையை உண்மையை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை .தமிழகத்தின் உயிர்நாடிக் கொள்கையான இடஒதுக்கீட்டை குழி தோண்டி புதைப்பதற்கு இந்துத்துவ பார்ப்பன கும்பல் அரங்கேற்றியிருக்கும் மிகப்பெரிய சதித்திட்டம். ஆசிரியர் தகுதித் தேர்வில் ஜெ.அரசு இடஒதுக்கீட்டை எவ்வாறு குத்திக்குதறிக் கொண்டிருக்கிறது என்பது இணையப் புலிகளுக்குத் தெரியுமா? தமிழ்குடிதாங்கி அவர்கள் இதனை எதிர்த்து அனைத்து சூத்திரசாதியினரையும் தலித் மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய சமூக நீதிப்போராட்டத்தை நடத்தாமல் இப்படிக் கீழ்த்தரமான அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

all rights reserved to www.karkibava.com