Jul 28, 2013

மொட்டை

26 கருத்துக்குத்து

  எல்லோர் வாழ்விலும் இசை இருக்கிறது. சட்டை பட்டன் போடுவதில் இருந்து படிக்கட்டு ஏறுவது, பல்லு விளக்குவது என பெரும்பாலும் எல்லா வேலைகளையும் ஒரே rhythmல் தான் நாம் செய்கிறோம். இந்த பாட்டு பிடிக்காது, அந்த பாடகர் பிடிக்காது என்று சொன்னாலும், ஏதோ ஒரு வகை இசை பிடிக்கத்தான் செய்கிறது. இசையில்லாத வாழ்க்கையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மேற்கத்திய நாடுகளில் 5 வயதிற்குள்ளாகவே எல்லா குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு இசைக்கருவியை பயிற்றுவிக்க தொடங்கிவிடுகிறார்கள். சீன, ஜப்பான் கலாச்சாரத்திலும் இது உண்டு. கொஞ்சம் மெனக்கெட்டு தேடினால் நம் முன்னோர்களும் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கர்ம சிரத்தையாக பின்பற்றிய தகவல் கிடைக்கக்கூடும்.ஆனால் நிச்சயம் இப்போது நிலைமை அப்படி இல்லை.  விஷயத்திற்கு வந்து விடுகிறேன். http://365rajaquiz.wordpress.com/  இந்த தளம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தினம் ஒரு பாடலின் இசைத்துண்டை அதுப்பற்றிய சில வார்த்தைகளோடு பகிர்கிறார்கள். சின்ன சின்ன க்ளுக்களும் உண்டு. அது எந்த பாடலென்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும். விடையை அடுத்த நாள் வெளியிடுவார்கள். பாடலை கண்டுபிடிப்பதோடு முடிந்துவிடுவதில்லை சுவாரஸ்யம். மேலதிக விஷயங்களை பின்னூட்டங்களில் பேசுகிறார்கள். இசை நுணுக்கங்கள், படங்களை பற்றிய தகவல்கள் என படிக்க படிக்க போய்க் கொண்டேயிருக்கும். முக்கியமான விஷயம் எல்லாமே இளையராஜா பாடல்கள். இப்போது ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். யோசித்து பாருங்கள். வேறு எந்த இசையமைப்பாளரின் 365 பாடல்களை தேடி எடுத்து இப்படி செய்ய முடியும்? MSV?

  ரெக்ஸ், சொக்கன், KRS என சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இந்த புதிர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்தது. ஒரு வருடத்தின் முடிவில் Active participants எண்ணிக்கை மட்டும் 100ஐ தாண்டியிருக்கும் போலிருக்கிறது. அதில் 100 முறைக்கு மேல் சரியான பதில் கொடுத்த பல சச்சின்களும் அடக்கம். நான் இரண்டு முறை முயற்சி செய்திருக்கிறேன். கிட்டத்தட் முழுநாளும் அந்தப் பாடலை கண்டறியும் முயற்சியிலே கழிந்தது. அதோடு மூட்டை கட்டிவிட்டேன்.
ஆனால் இந்த மாஃபியா விடுவதில்லை. ஆம், இவர்களை ம்யூசிக் மாஃபியா என்றுதான் குறிப்பிடுகிறார்கள் இணையத்தில். இந்த குழுவில், 50 வினாடிகள் ஓடும் க்ளுவை 10 வினாடிகள் மட்டுமே கேட்டுவிட்டு உடனே பதில் சொல்லும் வித்தைக்காரர்களும் இருக்கிறார்கள். ஒரு வேளை விடை தெரியாமல் போனால் மற்ற எல்லா பஞ்சாயத்துகளையும் ஒரமாக வைத்துவிட்டு தேடுதல் வேட்டையை மட்டுமே நடத்தும் கடமைவீரர்களும் இருக்கிறார்கள். இவர்களின் ஒரே நோக்கம், இளையராஜவின் எந்தவொரு இசைப்படைப்பையும் கேட்காமல் விட்டுவிடக்கூடாது. அவ்வளவே..

   ஒரு வருடம் வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில்  ஒரு get together ஏற்பாடு செய்திருந்தார்கள். பெங்களூர் கோவையில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்தார்கள். Google hangoutல் அமெரிக்க வாழ் ராஜா பக்தர்களும் அவர்கள் நேரத்திற்கு விடிய விடிய ஆன்லைன் வழியே இணைந்திருந்தார்கள். அப்போது சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆச்சரியத்தில் திறந்த வாய் ஷ்ரேயாவில் வாயை விட பெரிதாக இருந்தது.

  பெங்களூர்வாசி அவர். தமிழ் படிக்க தெரியாது. இப்புதிரில் சில க்ளுக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை வைத்து கண்டறிய முயல்வாராம். முடியாதபட்சத்தில் தன் மனைவிக்கோ அல்லது சொக்கனுக்கோ அலைபேசி பதிவை அப்படியே படிக்க சொல்வாராம். அதை வைத்து கண்டறிவாராம். இது போல பல கதைகள். கிட்டத்தட்ட ஒரு குடும்பம் போல ஆகிவிட்டார்கள் இந்த பங்கேற்பாளர்கள்.

  நேற்றைய நிகழ்வு அமாஸ் என்பவரது இல்லத்தில் நடந்தது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவர்கள். ராஜாவின் பாடல்கள் பாடியும், வயலினில் வாசித்தும் கலந்துரையாடியும் அட்டகாசமாய் நடந்தது. திருவாசகமும் இளையராஜாவும் என்ற தலைப்பில் சொக்கனின் பேச்சும் கூட சுவாரயஸ்மாய் இருந்தது. (http://nchokkan.wordpress.com/2013/07/28/tvskmrja/). ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருந்தேன். இந்த ஒப்புமை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் எனக்கு, நன்கு தெரிந்த நண்பர்கள் ஒன்றாய் அமர்ந்து மது அருந்துவதை விட  அதிகமான ஒரு ஆக்ரோஷமான போதையை அனுபவத்துக் கொண்டிருந்தது போல் இருந்தது. எல்லோரையும் இணைத்து கட்டியிருந்தது இசை, ராஜாவின் இசை.

  365 நாட்களும் கேட்கப்பட்ட பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை ஒருவர் எல்லோருக்கும் வழங்கினார். இன்னொருவர் ராஜாவின் அபூர்வமான பாடல்கள் அடங்கிய தகட்டை வழங்கினார். தமிழே தெரியாத ஒருவர் தனது வயலினோடு இதற்காக பெங்களுரில் இருந்து வந்திருந்தார். எல்லோரும் கூடி இசைக் கேட்டார்கள். பாடினார்கள். மகிழ்ந்தார்கள்.
ஒருவர் தனது ஆயுள் முழுவதும் கேட்டு ரசிக்குமளவிற்கு இசைத்திருக்கிறார் ராஜா. நீங்கள் ஆராய்ச்சி செய்வீரோ அனுபவித்து கேட்பீரோ. துன்பத்தை குறைப்பீரோ இன்பத்தை சேர்ப்பீரோ. உங்கள் எல்லா நோக்கங்களுக்கும், எல்லா உணர்வுகளுக்கும், எல்லா வயதுக்கும் ஏற்ற இசையை கொடுத்திருக்கிறார் இந்த மொட்டை. நினைக்கும் போதே புல்லரிக்கிறது.

  ரகுமான் – ராஜா இசை பஞ்சாயத்து இணையத்தில் பிரபலம். எதிர்ந்து வாதாட ரகுமானுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் இப்படியொரு குழு அமைத்து, இசையை கொண்டாட, இளையராஜாவை கொண்டாடத்தான்  ஆட்கள் இருக்கிறார்கள். 


Jul 11, 2013

காதலும், நிராகரிப்பும் அதன் பின்னான வாழ்க்கையும்

11 கருத்துக்குத்து

  இத்தனை 1000 ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்கள் காதல் என்பது என்ன என்பதை மட்டும் கண்டறியவே இல்லை. எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது.. எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது. தெரியாது.

விபத்தா, விதியா? தெரியாது. 

Perfect couple எனப்படுபவர்கள் நொறுங்கி வீழ்கிறார்கள். சரிப்படாது என நினைப்பவர்கள் வாழ்ந்து தீர்க்கிறார்கள். எப்படி? தெரியாது.

ஒன்று மட்டும் தெளிவு. காதல் அப்படியேதான் இருக்கிறது. அங்கேயேதான்.
உங்களுக்கு காதல் மேல் நம்பிக்கை இருந்தால் மட்டுமே மேற்கொண்டு தொடருங்கள்.

   Lootera. நேற்று இரவு பார்த்த ஒரு இந்திப்படம். The last leaf என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரன்வீர் சிங்கும், சோனாக்‌ஷி சின்ஹாவும் நடித்திருக்கிறார்கள்.   கதை இதுதான்.(படம் பார்க்க நினைப்பவர்கள் Skip செய்துவிடலாம்). சோனாக்‌ஷி ஒரு ஜமீந்தாரரின் மகள். அந்த ஊருக்கு வரும் ரன்வீர் ஒரு தொல்பொருளியல் நிபுணன். முதல் சந்திப்பிலே சோனாக்‌ஷிக்கு ரன்வீர் மீது காதல் வருகிறது. சோனாக்‌ஷி வீட்டில் தங்கி தன் நண்பனுடன் வேலைகளை பார்த்து வரும் ரன்வீரிடம் ஒரு கட்டத்தில் தன் காதலை சொல்கிறாள். ரன்வீர் ஏற்றுக் கொள்ளவில்லை. வேலைகளை முடித்து ரன்வீர் ஊருக்கு கிளம்பும் நாள் நெருங்குகிறது. இதற்கிடையில் நில உச்ச வரம்பு சட்டம் அமலுக்கு வருகிறது. அரசாங்க ஆட்கள் வந்து ஜமீந்தாரரின் முன்னோருக்கு வெள்ளையர்கள் கொடுத்த அரும்பொருட்களை கையகப்படுத்தி செல்கிறார்கள். ரன்வீர் ஊருக்கு கிளம்பும் முந்தைய நாள் இரவு, சோனாக்‌ஷி ரன்வீரின் அறைக்கு செல்கிறாள். அங்கே இருவரும் இணைகிறார்கள். மறுநாள், ரன்வீர் ஜமீந்தாரரிடம் தன் காதலை சொல்லி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்கிறான். தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது. விடிந்தால் திருமணம். முந்தைய இரவில் ரன்வீர், நண்பணுடன் தப்பித்து செல்கிறான். ஏனெனில் ரன்வீர் ஒரு திருடன். அரசாங்க ஆட்கள் என ஜமீந்தாரரின் சொத்துக்களை எடுத்து சென்றதும் ரன்பீர் ஆட்கள்தான். தொல்பொருள் ஆராய்ச்சி என சொல்லி, நிலச்சுரங்கம் அமைத்து ஒரு தொன்மையான சிலையையும் திருடிவிடுகிறான் ரன்வீர். எல்லாமே ப்ளான் செய்யப்பட்ட ஒன்று. அதிர்ச்சியில் ஜமீன்தார் இறக்கிறார். மூச்சு பிரச்ச்சினை வியாதியால் அவதிப்படும் சோனாக்‌ஷி, வேறொரு இடத்தில் தனிமையில் வாழ்க்கையை கழிக்கிறார். சோனாக்‌ஷி வாழும் ஊருக்கு வேறொரு சிலை திருட ரன்வீரும் நண்பரும் வருகிறார்கள். போலீஸ் துரத்தலில் நண்பனையே ரன்வீர் சுட்டுவிடுவதெல்லாம் இரண்டாம் பாகத்தில் நடக்கிறது. அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனக்கு முதல் பாதிதான் அழகு.

   இதன் இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானே இந்தக் கதைக்கு என ஒரு பிரத்யேக திரைமொழியை எடுத்தாண்டிருக்கிறார். A poetic narration  மிக மெதுவாக நகரும் கதையின் அழகே அதன் வேகம் என்றுதான் சொல்வேன்.அந்த வேகத்திற்கேற்ப ஒரு அதி உன்னத பின்னணி இசை. சமீபத்தில் நான் பார்த்ததில் மிகச்சிறந்த பின்னணி இசை இந்தப்படத்தில்தான். 1950களில் நடக்கும் கதையில் கலை இயக்குனரும் வியக்க வைக்கிறார்.ரன்வீர் கபூரின் நடிப்பு ஏமாற்றம்.. இதை தமிழில் எடுத்து தனுஷ் மட்டும் நடித்தால் சோனாக்‌ஷியை மிஞ்சிவிடுவார். Lootera வின் ஜீவனே சோனாக்‌ஷிதான்.

  சோனாக்‌ஷியின் காதலில் நாமும் வீழ்ந்து போகிறோம். இந்தப்படம் சோனாக்‌ஷி ஏமாற்றப்படும் இடத்தில் மிகச்சிறந்த படமாகிறது. சோனாக்‌ஷியின் அற்புதமான நடிப்பு நம் இதயத்தை வெடித்து சிதற வைக்கிறது. “அதிகாலை பனி அடிவயிற்றை நனைத்ததை யாரிடம் சொல்லும் நத்தை” என்பது போல தனிமைப்படுத்த படுகிறாள் சோனாக்‌ஷி. அன்புத்தந்தையும் மரணிக்க, நம்பியவனும் நிராகரிக்க என்னதான் செய்வாள் அவள்?

   ஆனால் ரன்வீரின் நிராகரிப்பு அவளை மாற்றி விடவில்லை. அவன் மீதான அன்பு அப்படியேதான் இருக்கிறது. கொஞ்சம் கூடியிருக்கிறது என்றேனும் சொல்லலாம். உலகத்தின் மொத்த துயரமும் அவள் மீது கொட்டப்பட்டது போன்ற உணர்ந்த தருணம் அது. இருந்தும் அவன் ஞாபகங்களை தூக்கிக் கொண்டு  அலைகிறாள் சோனாக்‌ஷி. ஒரு நத்தை பாலைவனத்தை கடப்பதை போல.

   ஒரு நல்ல திரைப்படம் படத்தை பார்க்கையில் நம்மை எப்படி பாதிக்கிறது என்பதை விட, அரங்கை விட்டு வெளியேறிய பின் என்னவெல்லாம் செய்கிறது என்பதிலே இருக்கிறதென்பேன். நேற்று இரவு படம் பார்த்தபின் வெளியே வந்தபோது மழைத்தூறிக்கொண்டிருந்தது. காரில் அப்படியே கடற்கரை சென்றுவிட்டேன். சிறிது நேரம் மழையின் நின்றபடி கடலை பார்த்துக் கொண்டிருந்தேன். சோனாக்‌ஷிக்கு நேர்ந்த நிராகரிப்பு மனதை கடல் அலைகள் மணலை அரிப்பது போல் அரித்துக் கொண்டிருந்தது. என்னை நனைத்த மழையில் கண்ணீரும் காணாமல் போனது. சில நிராகரிப்புகள் வரம். வலியை கூட ரசிக்க வைக்கும் வரம். சோனாக்‌ஷிக்க்கு நேர்ந்த நிராகரிப்பை போல.

   மீண்டும் காரிலேறி வீடு சேர்ந்தபோது மணி 2.30 இருக்கும். அந்த நிராகரிப்பு என் மனதில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டுதான் இருந்தது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இறுதியில் ரன்வீர் அவளிடம் வரும்போது தன் காதல் தோற்கவில்லை என்ற ஆனந்தத்தில் சோனாக்‌ஷி சிரிப்பதுடன் படம் முடிகிறது. இந்த முடிவை தவிர மற்ற அனைத்தும் நம் வாழ்வில் நடந்துக் கொண்டுதானிருக்கிறது. சில சமயம் ரன்வீருக்கு.


Jul 8, 2013

இளவரசன்

18 கருத்துக்குத்து
   தர்மபுரி இளவரசனின் மரணம் குறித்த செய்தி தெரிந்தது முதலே ஏதோ ஒரு இனம்புரியாத கவலை ஆட்கொண்டுவிட்டது. அது கொலையா, தற்கொலையா என்பது குறித்தெல்லாம் யோசிக்க தோன்றவேயில்லை. அவனே தன்னை கொன்றிருந்தால் கூட அது கொலைக்கு ஒப்பானதுதான்.

 19 வயதில் இளவரசனின் பக்குவமும், உறுதியான நிலைப்பாடும் என்னை கொஞ்சம் அதிகமாவே ஈர்த்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் கையில் ஏதுமில்லை(கட்சிகளின் தலையீடு) என்றானாலும் கூட, திவ்யா கடைசியில் எடுத்த வேண்டாம் என்ற முடிவை இளவரசன் எப்போதோ எடுத்திருக்க வேண்டியது. ஏனெனில் பாதிப்புகள் அவன் பக்கம் எப்போதும் அதிகமாகவே இருந்தது. அதை அவன் உணர்ந்தவனாகவே எனக்கு தெரிந்தான். இதையெல்லாம் மீறிய அவன் உறுதி அவன் மீதான மரியாதையை உயர்த்தியது. அதனால்தான் அவன் மரணம் எனக்கு மிகப்பெரிய இழப்பாக மனதளவில் இருந்தது. உணர்ச்சிவசப்பட்டு ஏதும் எழுதிவிட வேண்டாமென்றே சில நாட்கள் எழுதவில்லை.

   இங்கே திவ்யாவையும் இகழ காரணமில்லை. இன்னமும் ஒரு பெண் தன் காதலை சொல்லி , அனுமதி மறுக்கப்படும்போது தடை மீறி திருமணம் செய்வது சாதாரண விஷயமாக எனக்கு தெரியவில்லை. அதீத மனதிடமும், தைரியமும், அதையெல்லாம் விட உண்மையான காதலும் தேவை. காதலிக்கும்போது இது தெரியாதா என்ற கேள்வியில் சுத்தமாக நியாயமில்லை. இந்த சமூகத்தின் கோரமுகமும், பெற்றவர்களின் நிஜ முகமும் அப்போது அவர்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. கெளரவக்கொலைகளும், பெற்றோர்களின் தற்கொலைகளும் இன்னமும் நடந்துக் கொண்டுதானிருக்கின்றன என்ற செய்திகளே போதும். சென்னையை தாண்டினால் தமிழகம் வேறு முகம் கொண்டிருக்கிறது. சாதியின் பிடியில் இருந்து மீள நமக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமென கணிக்க கூட முடியாத அளவிற்கு யதார்த்தம் இருக்கிறது.

  தன் காதலுக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு , எதிர்த்து நின்று போராடும் /போராடிய எல்லா பெண்களை பாராட்டும் அதே வேளையில்,திவ்யாவை போல் ஒரு கட்டத்தில் பின்வாங்கிய பெண்களை சாட தேவையில்லை. அந்த லட்சணத்தில் நம் சமூகம் பெண்களை நடத்தவில்லை.

  இந்த இடத்தில் இன்னுமொரு முக்கியமான கேள்வி எழுகிறது. காதலால் சாதியை ஒழிக்க முடியுமா?? இந்த வியாக்கியானம் எல்லாம் இருக்கட்டும். இரண்டு பேர் விருப்பப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ நினைக்கும்போது, அதை மறுக்கும் ஒரு சமூகம் எவ்வளவு மோசமான ஒன்று என யோசித்து பார்க்க வேண்டும். இதை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக பார்ப்பது சரியான பார்வையாகாது. பெற்றோரின் அந்த கவலைக்கு முழுக்காரணமும் சமூகம் தான்.
தமிழக அரசியல் மோசமான பின்பு அடிக்கடி இது போன்ற கட்சி சார்ந்த கலவரங்கள் பல காரணங்களுக்காக நடந்து கொண்டுதானிருக்கின்றன. மதுரை தினகரன் அலுவலக எரிப்பு, தர்மபுரி பேருந்து எரிப்பு என பல சம்பவங்களை சொல்லலாம். பெரும்பான்மையானவற்றில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டோ, அல்லது ஏதேனும் ஒரு வழியில் அதற்கான விலையை கொடுக்கவோ நேர்ந்திருக்கிறது. ஆனால் தர்மபுரியில் மூன்று கிராமங்கள் எரிக்கப்பட்ட பின்பும் அவர்களுக்கு எதுவும் நடந்துவிடவில்லை. இன்னும் வீரியத்துடன் வன்னியர் என்ற சேற்றை பூசிக்கொள்ளவே செய்தார்கள். அதன் உச்சக்கட்ட கொடுமைதான் இளவரசன் மரணம்.

   இரண்டு ஆதிக்க சாதிகளே கூட பெண் எடுத்து பெண் கொடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அங்கே காதல் பிரச்சினை எழும்போதெல்லாம் வேறு வழியில் சுமூகமாக தீர்த்துக் கொள்கிறார்கள். இங்க இளவரசன் மரணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஒரே காரணம் அவன் தலித் என்பதுதான். இதில் வன்னியர்கள் தொடர்பிருப்பதாலே அவர்களை சாட வேண்டியிருக்கிறது. மற்றபடி தமிழகத்திலிருக்கும் அத்தனை ஆதிக்க சாதிகளுமே இதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். ராமதாஸ் என்ற வினையூக்கி இல்லாதது ஒன்று மட்டுமே ஆறுதல்.


   இளவரசன் மரணம் இன்னொரு துரதிர்ஷ்டமான சம்பவம் என கடந்து செல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் இந்த சாதியை எதிர்த்து காய் நகர்த்த வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்தி சென்றிருக்கிறது. ”நான் சாதியை எதிர்ப்பேன்” என்ற கொள்கையில் சமரசம் இல்லாமல் வாழ்வதே ஒரு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கக்கூடுமென கருதுகிறேன். 

Jul 5, 2013

சிங்கம் சிங்கம்(அதாங்க சிங்கம் 2)

11 கருத்துக்குத்து

    எங்க பக்கத்து வீட்டுல மகேஷ்னு ஒரு பையன் இருந்தான். எப்ப பார்த்தாலும் சிகரெட் பிடிச்சிட்டே இருப்பான். அதனால அவனுக்கு 23 வயசுலயே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. சோகம்,என்னன்னா மகேஷ எங்களால காப்பாத்த முடியல.

   ஹலோ. டென்ஷன் ஆவாதீங்க.படத்துக்கு முன்னாடி இத போட்டா கம்முன்னு பார்க்குறீங்க.பதிவுல போட்டா மட்டும் விண்டோவ க்ளோஸ் பண்ண போறீங்க.எனக்கும் சமூக அக்கறை இருக்கு. ராஸ்கல்ஸ்.

இன்னைக்கு நாம பார்த்த படம் சிங்கம்2. படத்துல ஓப்பனிங்ல அஞ்சலி வச்சு ஒரு குத்து பாட்டு போட்டுதான் கதைக்கு போறாங்க. நாம அப்படியெல்லாம் பண்ணாம நேரா கதைக்கு போவோம்.துரைசிங்கம் முதல் பார்ட் முடிவுல சொன்ன மாதிரி ஒரு சீக்ரெட் மிஷனுக்காக வேலை செய்றாரு. தூத்துக்குடி ஹார்பர்ல நடக்கிற ஆயுதக்கடத்தலை கவனிக்க வந்தவருக்கு அது ஆயுத கடத்தலல்ல. போதை மருந்து கடத்தலென்பது தெரிய வருகிறது. அதற்கு காரணமான இரண்டு லோக்கல் வெள்ளை வில்லன்களையும், ஒரு கருப்பு வெளிநாட்டு வில்லனையும் பிடிச்சு தூத்துக்குடி ஜெயிலில் அடைப்பதுதான் கதை. இந்த சீக்ரெட் மிஷனை அப்பாவுக்கு கூட தெரியாமல் செய்கிறார்.ஆனா அப்பாவோ போலிஸ் வேலையை விட்டுட்டியே படவான்னு அவர்கிட்ட பேசாம இருக்காரு. இதனால அனுஷ்காவுடனான திருமணமும் நின்னு போயிடுது. ஆனா அதை பத்தி கவலைப்படாத போலீஸ் சிங்கம் ஒரு ஸ்கூல்ல NCC masterஆ இருக்காரு.அங்க ஹன்சிகா என்ற மாணவி,ஆம் மாணவி இவரை லவ்வுகிறார். இதான் கதை. கதையை எல்லாம் சொல்லிட்டு ஜெயிக்கிறதுதானே ஹரி பாலிஸி..இதிலும் அப்படியே டெம்ப்ளேட்.

சிங்கமாக சூர்யா கலக்கியிருக்கிறார். குற்றவாளிகளை தேடிப் பிடிக்கும் போலீஸைத்தானே நாம பார்த்திருக்கிறோம்! இதுல சூர்யா ஓடியே பிடிக்கிறார். தூத்துக்குடியோ, தென்னாப்பிரிக்காவோ.ஓடுறாரு ஒடுறாரு. பால் போட வர்ற மலிங்காவ விட அதிக தூரம் ஒடுறாரு.ஒரு வேளை சூர்யா கால்ஷீட் இல்லாம ஹரி இத விஷால வச்சு எடுத்திருந்தா படம் 10 நிமிஷம் முன்னாடியே கூட முடிஞ்சிருக்குமோன்னு தோணுது. வீட்டுக்கு பைக்ல வர்றப்ப கூட திரும்பி திரும்பி பார்த்துட்டே வந்தேன்.பின்னாடி சூர்யா ஓடி வர்றாரான்னு. நீ என்ன குற்றவாளியான்னு கேட்காதீங்க.ஒரு கதை இருக்கு எனக்கும். சூர்யா ஒரு சீன்ல ஹை டெசிபலில் இண்டேர்னேஷனல் வில்லனிடம் பேசுறாரு. ஆப்பரிக்க மொழியை கூட எவ்ளோ அழகா பேசுறாருன்னு சொன்னதுக்கு முன் சீட்டுபொண்ணு திரும்பி முறைச்சிட்டு Dats englishன்னு சொல்லுச்சு. சூர்யா ஃபேன் போல. நானும் என் பங்குக்கு “சாரி.யூ ப்யூட்டிஃபுல் கேர்ள்”ன்னு சொன்னேன். அதுக்குத்தான் சூர்யா துரத்துறாரோன்னு ஒரு டவுட்டு எனக்கு. ஆனா இந்த  படத்துல தானும் ஒரு Mass Maharajaதான்னு நிரூபிக்கிறாரு சூர்யா. எனக்கு இதுல ரொம்ப புடிச்சு போச்சு நம்ம ஜோ புருஷன.

வசனம் தான்.. தேசிய கீதம் பாடுறப்ப உள்ள வந்து பிரச்சினை பண்ற வில்லனை போட்டு 5 நிமிஷம் துவம்சம் பண்றாரு துரைசிங்கம். அப்பலாம் சாதாரண ரியாக்‌ஷன கொடுக்கிற வில்லன், அடிச்சு முடிச்சு சூர்யா பேச ஆரம்பிச்ச உடனே ஒரு ரியாக்ஷன் தருவாரு பாருங்க.நீ அடிச்சப்பலாம் வலிக்கல சிங்கம். கடைசியா 5நிமிஷம் தேசிய கொடிய பத்தி பேசினியே.அதான் வலிக்குது” ன்ற மாதிரியே இருக்குமது. சில சமயம் இதெல்லாம் தானா அமையும் போல. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலே பக்கத்துல இருந்த ஒரு பீட்டரு “Strange. This lion barks”ன்னு யாருக்கோ sms அனுப்பிட்டு இருந்தான். டைட்டில் கார்ட சரியா பார்க்கல. அநேகமா கதை திரைக்கதை கர்புர் டைரக்‌ஷன்னுதான் போட்டிருப்பாரு ஹரி. அந்தளவுக்கு உறுமலோ உறுமல்.

ஆனா ஒரு விஷயம் புரியல. பெண் சிங்கம் தான் வேட்டையாடும். ஆண்சிங்கம் டிஸ்பீட் தான் பண்ணும்னு நம்ம உலகநாயகன் சொன்னது உண்மையில்லையா? இதுல சூர்யாதான் வேட்டையோ வேட்டை ஆடுறாரு. ஹன்சிகா ஸ்கூல் பொண்ணாம். அவங்களுக்கு வருவது இன்ஃபேச்சுவேஷனாம். அப்ப அனுஷ்காவுக்கு நடப்பது பால்ய விவாகமான்னு நக்கலா கேட்கலாம். ஆனா யோசிச்சு பாருங்க. நிஜமாவே 10வது படிக்கிற லக்‌ஷ்மி மேனன விட ஹன்சிகா இளமையாதானே இருக்காங்க. அப்படிலாம் இல்லைன்னு சொன்னா நமக்கு ”காதல்” சந்தியா மாதிரி டொக்கு ஹீரோயின்தான் கிடைக்கும். அதனால ஹன்சிகாவுக்கு ஓக்கே சொல்லிட்டு நகரலாம்.அனுஷ்கா..ம்ம்டிவைன்.எத்தனை வருடம் ஆனாலும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இதற்காகவே சிங்கம் 30 வந்தா கூட எனக்கு ஓக்கே.

ஹரி படத்தின் பலமென திரைக்கதை, இயக்கத்தைத்தானே சொல்ல முடியும். இதிலும் அப்படியே. ஒரே ஒரு ஃபோன வச்சு என்னலாம் பண்ண முடியும்னு டாக்டரேட் பண்ணியிருக்காரு மனுஷன். ஒரு சீன்ல வில்லனோட ஃபோன் அவுட் ஆஃப் ரேஞ்சுக்கு போயிடும்.(அவன் கடலுக்கு போனதால்). அவன் நம்பருக்கு ஒரு டம்மி sms அனுப்ப சொல்வாரு. அவன் ரீச்சபிள் ஏரியாவுக்கு வந்தவுடன் டெலிவரி ரிபோர்ட் வருமில்லையா என்பார். ஆச்சரியமாக இருக்கிறது. சூர்யா மொபைல் என்ன மாடல் என பார்க்க முடியாத அளவுக்கு ஃப்ரேம் வேகமாக நகருது. அவர் ஃபோன் மட்டும் low batteryஏ காட்டாம ட்யூரோசெல்ல விட அதிக நேரம் உழைக்குது.  ஹரி வீட்டுக்கு ஒரு தடவை போக வேண்டும். டாடா சுமோ வகையறா வண்டிக்களின் படங்களையும், மொபைல் ஃபோன் படங்களையும் ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்கலாம்.

ஒரு மசாலா படத்தில் நச்சென மூன்று சீன்கள் வேண்டும். ஆடியன்ஸ் எழுந்து விசிலடிக்க நினைக்க வைக்கணும். இதிலும் இருக்கு. சூர்யா சார்ஜ் எடுத்துக் கொள்ளும் சீன், Police with family.without weaponஎன சொல்லிவிட்டு வில்லன்களை வீட்டு வாசலில் துவம்சம் செய்யும் காட்சி. அப்புறம் இடைவேளை.

முதல் பாகத்தோட ஒப்பிட்டா சூர்யாவின் நடிப்பு எனக்கு இதில் பிடித்திருக்கிறது. + என்றால் ரெண்டு பாயிண்ட் கூட்டி வைக்கப்பட்ட சத்தத்தை சொல்லலாம். 18+ படங்களை போல இதை 5+ படம். ஒரு கைக்குழந்தை சத்தம் தாங்காமல் அழுது கொண்டேயிருந்தது. அதன் பெற்றோரும் படம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். வாழ்க. முன்னலாம் அடிக்கடி தியேட்டர்ல வாய்ஸ் மட்டும் வராம போயிடும்.உடனே ஆடியன்ஸ் எல்லாம் கத்துவார்கள்.சிங்கத்தில் அப்படி ஆனா”அப்பாடா” என்பார்கள். மைனஸ் என்றால் பிரகாஷ்ராஜ் இல்லாததை சொல்லலாம். மூன்று வில்லன்கள் இருந்தாலும் கதையிலும் அவர்கள் வீக்.நடிப்பிலும் வீக்.

காமெடிக்கு விவேக்கும் சந்தானமும்.விவேக் சுமார். சந்தானமும் சுமாரானது தான் ஏனென தெரியவில்லை. “யார்ரா இவன்.கடை கடையா போய் நெய் பிஸ்கட் விக்கிறவன் மாதிரி” என்ற வசனத்தில் இருக்கும் உண்மை தான் என்னை அவரின் தீவிர விசிறியாக்கியது. தானத்தில் பெரியது ஈடன் கார்டன் மைதானம் அல்ல. சந்தானம் என நம்பும் அளவுக்கு அவரை பிடிக்கும். ஆனா இப்போது எல்லாம் ரைமிங்காக சொன்னால் போதுமென ஆனது பிடிக்கவில்லை. ஆனாலும் சிரிக்கிறேன். “காடையை வளர்த்து கல்லால உட்கார வச்சது” மாதிரி 100 வசனம் எல்லோராலும் எழுத முடியும். ஆயில்பெயிண்ட்ல வரைஞ்ச ஆந்தை, கோட்சூட் போட்ட கோட்டான், தட்டு கழுவறவன் தத்துவம் பேசக்கூடாது”. இதற்கா சந்தானம் வேண்டும்? யோசிங்க பாஸ். இந்த படத்துல விழுந்து விழுந்து சிரிக்க முடியாததால் சந்தானம் மத்தவங்க கால்ல விழுந்து விழுந்து காமெடி செய்கிறார். நாம் சிரித்தால் மட்டும் போதும்.

இசையெல்லாம் தூக்கி தூரமா வைங்க. படத்தின் இன்னொரு மைனஸ் நீளம். இப்பலாம் முன்ன மாதிரி யாரும் 3 மணி நேரம் கேட்பதில்லை. பொழுதுபோக்க பல வழிகள் வந்தாச்சு. சிக்னல்ல நிக்குற நேரத்துல ட்வீட் போடுற காலமிது. 2 மணி நேரம் மட்டுமே ஓடிய பிஸா, பில்லா1, போன்ற படங்களில் யாருமே அதை குறையாக பார்க்கல..ஆக, 2.15 மணி நேரம் குவாலிட்ட்டியா கொடுத்தா போதும்.2.45 மணி நேரமென்பது சுமை. இந்த வருடமே பல படங்கள் ரிலீஸ் ஆனவுடன் ட்ரிம் செய்யப்பட்டது. ஆனால் மவுத் டாக் வெளியானதை அது மாற்றாது. கொஞ்சம் வெட்டுங்க பாஸ்.

ஹரி வென்றிருக்கிறார் என்றுதான் சொல்வேன். இவர் பேரை Hurry என எழுதலாம். அத்தனை வேகம். இவர் போலீஸ் ஆகனும்ன்னு ஆசைப்பட்டாராம். அப்படி ஆக முடியாததால அவர் செய்ய நினைத்ததை படமா எடுக்கிறாராம். நீங்க நாசா விஞ்ஞானி ஆகனும்ன்னு ஆசைப்பட்டிருக்கலாம் ஹரி சார். கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கும் எங்களுக்கு.

சிங்கம் – காதுல கொஞ்சம் பஞ்ச வச்சிட்டு போனா நிறைய எஞ்சாய் செய்யலாம்.

டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எல்லாமே உண்மை. ஆனால் யார் மனதையும் புண்படுத்த அல்ல. அப்படி ஆகியிருந்தால் இனிமேல ஆகாம பார்த்துக்கோங்க J


 

all rights reserved to www.karkibava.com