Jun 17, 2013

பாண்டிச்சேரி


பாண்டிச்சேரியை பிடித்து தொலைப்பதில் இருக்கும் சிக்கலை சொல்லி மாளாது. “சரக்கா” என எளிதில் அதை கடந்துவிடுவார்கள். அது ஒரு சிறப்பான சிறப்பம்சம்தான் என்ற போதும் அதைத் தாண்டி எத்தனையோ விஷயம் இருக்கிறது பாண்டிச்சேரியிடம். சென்ற வாரயிறுதி பாண்டிச்சேரியில் பல வருடங்களுக்கு பிறகு  அதியற்புதமாக கழிந்தது.   சச்சின் டெண்டுல்கரை Straight drive அடிக்க சொல்லி,பந்து போன பாதையில் ஒரு கோடு போட்டு ரோடாக்கியது போலிருக்கும் ஃப்ரென்ச் சாலைகள். எவ்வளவு மழை பெய்தாலும் சரிவாக இருக்கும் சாலைகளில் மழை நீர் தேங்குவதில்லை. மழை வந்து கழுவி சென்ற சாலையில் நனைந்து கிடக்கும் பூக்கள் கொள்ளை அழகு. சென்னையில் மழை காதலியின் அண்ணனை போல எரிச்சல் தரவல்லது. பாண்டியில் அது காதலியை போன்றது. ரம்மியமானது. என் அதிர்ஷடம். நான் சென்றபோதும் மழை பெய்தது. மழை நின்ற சமயம் சிறிய மரமொன்றின் கீழ் நின்று கொண்டு, இலைகள் சேகரித்த துளிகளை உலுக்கி விழச்செய்தால் சென்னையில் நமக்கு பரிசாய் கஸ்மாலம் என்ற பட்டம் கிடைக்கும். பாண்டிச்சேரியில் ஒரு சிநேக புன்னகை கிடைக்கக்கூடும்.

   ஒவ்வொரு கோவிலுக்கும் அதன் வயது, அளவு என பல காரணிகளை வைத்து ஒரு வைப்ரேஷன் இருக்கும். போலவே ஊர்களுக்கும். பாண்டிச்சேரி இன்னமும் தனது ஃப்ரென்ச் தொடர்பை தொலைக்காமல் இருக்கிறது. அதனாலே அந்த மண் ஒரு பிரத்யேக அதிர்வை கொண்டிருக்கிறது. பயணமாக மட்டுமே சென்று வருவது முழுமையான அனுபவத்தை தந்துவிடாது. ஒரு வருடமாவது அங்கே வாழ்ந்திருக்க வேண்டும். TCS & infosys அங்கே வராமல் இருக்கும் வரை ஆபத்தில்லை.

 என் பால்யம் திண்டிவனத்தில் கழிந்தது. எந்த ஓர் நல்ல நாளுக்கும் துணியெடுப்பது கூட பாண்டிச்சேரியில்தான். பஸ் ஸ்டேண்டில் இறங்கினால் டெம்போக்கள் வரிசை கட்டியிருக்கும். நம்மை நாமே நாலாய் மடித்துக் கொண்டு டெம்போவுக்குள் செட்டில் ஆகி 2 ரூபாய் கொடுத்தால் 10 நிமிடங்களில் ராஜா தியேட்டர். இறங்கி ஒரு நெட்டி முறித்துவிட்டு வலது பக்கம் திரும்பினால் பாண்டிச்சேரியின் தி.நகர் ஆன நேரு வீதி. ஒவ்வொரு கடையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தால் 2 கிமீக்கு திருவிழாதான். ஞாயிற்றுக்கிழமையானால் எக்ஸ்ட்ரா குதுகலம். சண்டே மார்க்கெட். கல்லாப் பெட்டியை தவிர மத்த எல்லாமே 10ரூபாயோ, 20 ரூபாயோதான்.அம்மாவுடன் அண்ணனும் அக்காவும் செல்ல நான் அப்பாவுடன் idea மொபைல் தான். அதாங்க walk&talk. பாதி வழியில் லல்லுவில் ஒரு குல்ஃபி. லல்லு, ஆசிரமத்தால் நடத்தப்படும் கடை. மெனு மாறியிருக்கிறது. இப்போது 3 சுவைகளில் குல்ஃபி தருகிறார்கள். ஆனால் அந்தக்கடையின் வாட்டர் பாட்டில்களும் அன்பும் மட்டும் மாறவே இல்லை.

  லல்லுவை தாண்டி சென்றால் இந்தியன் காஃபி ஹவுஸ். சைவ உணவகமான போதும் இங்கே பிரெட் ஆம்லெட் மட்டும் கிடைக்கும். ஃப்ரென்ச் பூர்வீகம் காரணமாயிருக்கலாம். வீட்டில் சைவமென்றாலும் சிறுவயதில் வந்த இருதய வால்வு பிரச்சினை காரணமாக எனக்கு மட்டும் முட்டை உண்டு. அப்பா அதை அழகாக forkல் வெட்டி சாப்பிட கத்து தருவார்.  வைக்கப்படும் டிப்ஸ்களை ஒரு உண்டியலில் போட்டு பின் அதை பகிர்ந்துக் கொள்வார்கள் சர்வர்கள். இதை கவனித்து அப்பாவிடம் சொல்லி வெரி குட் வாங்கியது ஒரு மாதம் வரை மனதை சந்தோஷமாக வைத்திருந்த காலமெல்லாம் உண்டு.

   அதைத் தாண்டி சென்றால் பீச் வந்துவிடும். பாண்டிச்சேரியின் பீச் ஒர் அற்புதம். உண்மையில் அங்கே பீச் கிடையாது. மணலை பார்க்கவே முடியாது. சாலையை விட பல அடிகள் தாழ்வாகத்தான் கடல் இருக்கும். கடல் முடியும் முன்னரே சாலைகள் ஆரம்பித்துவிடும். எனவே கற்களை கொண்டு நிரப்பியிருப்பார்கள். அலைகள் வேகமாய் மோதி எழுவதை பார்ப்பது சுகானுபவம். இம்முறை சென்றபோது மழைத் தூறிக் கொண்டிருந்தது. ஒரு கல்லின் முனையில் குடை பிடித்தப்படி ஓர் இளம் ஜோடி கடலை ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு அழகான காட்சியது. புகைப்படம் எடுக்க அனுமதி கேட்க சென்றால் கூட தொல்லையாய் இருக்குமென எடுக்கவில்லை. எத்துனை முறை பார்த்தாலும் சலிக்காதது உலகில் இரண்டுதான். ஒன்று கடல். இன்னொன்று நீயென அதே இடத்தில் என் தோழி சொன்னது நினைவுக்கு வருகிறது. கடல் மட்டும் இதில் constant. நான் என்பது variable. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நபர்.

   Sea view இருக்கும்படி ஒரு உணவகம் இருந்தது. இப்போது அதைக் காணவில்லை. ஆனால் சாலைக்கு அந்தப்பக்கம் ஏதோ ஒரு பெரிய உணவகம் வந்திருக்கிறது. கண்ணாடியின் வழியே கடலைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம்.  அடுத்த முறை சென்றுவிட வேண்டும். கடற்கரையின் இன்னொரு அதிசயம் பானிபூரி வண்டிகள். இதிலென்ன அதிசயம் என்பவர்கள் ஒரு முறை சாப்பிட்டுவிட்டு சொல்லலாம். நெல்லை அல்வாவை நெல்லையிலே சாப்பிட வேண்டுமென்றில்லை. ஆனால் இதை பாண்டியிலே சாப்பிட வேண்டும்.

  பாண்டிச்சேரியில் பெயர்கள் சுவாரஸ்யமானவை.Goubert என்பதை குபேர் என்பார்கள். சந்திரன் என்பதை chedureuen என்பார்கள். நியுமராலாஜியெல்லாம் இல்லை. ஃப்ரென்ச் பழக்க வழக்கம். கண்பத்ர என ஒரு உணவகத்துக்கு அடிக்கடி அழைத்து செல்வார் அப்பா. அது கணபதிராம் என 10 வருடங்கள் கழித்துதான் எனக்கு தெரிந்தது.
கடற்கரையை முடித்துவிட்டு, மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்வது சம்பிரதாயம் என நீண்ட நாட்கள் நினைத்திருந்தேன். அம்மா அப்படித்தான் செய்வார்கள். அந்த கோவில் மட்டும் எனக்கு பிடிக்காது. என் பால்யத்தின் பல முக்கிய கனங்கள் அந்த கோவிலின் க்யூவில் தான் வீணாய் போனது.அப்பாவுக்கும் கடவுள் ஆகாது. இம்முறை போன போது கூட ஒரே ஜம்ப்பாக ஆசிரமம் பக்கம் போய்விட்டேன். ஆம். கோவிலுக்கு அருகிலே அரவிந்தர் ஆசிரமம்.


  இதையெல்லாம் முடித்துவிட்டு திரும்பும்போது மட்டும் ஆட்டோ எடுத்துவிடுவார் அப்பா. நேராக பஸ் ஸ்டேண்டுக்கு அருகில் இருக்கும் ஹோட்டல் மாஸ். திண்டிவனத்தில் அப்போது AC உணவகங்கள் கிடையாது.(இப்போது இருக்குமென யூகிக்கிறேன்). ஆக அங்கே இரவு உணவு முடித்து திண்டிவனம் பேருந்து ஏறினால் தூக்க்கம். திண்டிவனம் வந்தவுடன் அப்பா எழுப்புவார். இம்முறை எல்லா இடத்திற்கும் அப்பா இல்லாமல் சென்று வந்தேன். யதேச்சையாக ட்விட்டரை நோண்டிய போதுதான் தெரிந்தது நேற்று அப்பாக்கள் தினமாம். L

22 கருத்துக்குத்து:

மணி ஜி. on June 17, 2013 at 8:04 PM said...

கிளாஸ்டா கார்க்கி!!

மணி ஜி. on June 17, 2013 at 8:05 PM said...

கிளாஸ்டா கார்க்கி!!

Rajan Leaks on June 17, 2013 at 8:13 PM said...

;-))))))))))))))))))))) அவினாசி எனும் ஆல்ப்ஸ் மலைச்சாரல் பற்றி நண்பர்கள் தினத்தில் எழுதுவாயா அவ்வ்வ்வ்!

Rajan Leaks on June 17, 2013 at 8:14 PM said...

;-))))))))))))))))))))) அவினாசி எனும் ஆல்ப்ஸ் மலைச்சாரல் பற்றி நண்பர்கள் தினத்தில் எழுதுவாயா அவ்வ்வ்வ்!

karki bava on June 17, 2013 at 8:19 PM said...

thanks maniji

@rajan, அந்த “ரெண்டு” வழக்கும் முடிஞ்சவுடன் எழுதணும்ன்னு ஒரு பெரிய பதிவு மனசுல ட்ராஃப்ட்டா இருக்கு மச்சி :)

நடராஜன் on June 17, 2013 at 8:19 PM said...

:) sema "cute"

இல்யாஸ்.மு on June 17, 2013 at 8:51 PM said...

பாண்டியை அதிகம் பார்தவர்களுக்கு இந்த பதிவு இன்னும் நெருக்கமாக இருக்கும். புதிதாய் முளைத்திருக்கும் போத்தீஸ், ராஜா தியேட்டர் சாலையை இன்னும் பரபரப்பாக்கியிருக்கிறது. 2 ரூபாய் டெம்போ 5 ரூபாவாகியிருக்கிறது. சில தியேட்டர்கள் ஹோட்டல்களாகியிருக்கிறது. நேரு வீதி மட்டும் அதிக மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

நேரு வீதியில் நடந்துக்கொண்டே போனால் கடல் வந்து விடும். பால்யத்தில் கரையையும் மணலையும் பார்த்திருக்கிறேன் . இப்பொழுது கொஞ்சம் அலை வேகமாக அடித்தாலும் ரோட்டில் தெளிக்கிறது..

கடைசியாய் சென்ற வகேஷனில் போய் வந்தேன். எப்போது போனாலும் ஏற்படும் அதே சில்லிடும் அனுபவம்தான் இந்தமுறையும்..

rajaguru12 on June 18, 2013 at 12:55 AM said...

இதற்காகவே பாண்டிச்சேரி போகணும் பாஸ் :-)))

rajaguru12 on June 18, 2013 at 12:56 AM said...

இதற்காகவே பாண்டிச்சேரி போகணும் பாஸ் :-)))

மதன்ராஜ் மெய்ஞானம் on June 18, 2013 at 1:26 AM said...

Super'nga Karki.. :)

முரளிகண்ணன் on June 18, 2013 at 8:46 AM said...

அசத்தல் கார்க்கி

முரளிகண்ணன் on June 18, 2013 at 8:46 AM said...

கங்குலி ரசிகரா இருந்தும், அந்த சச்சின் ஸ்ட்ரெயிட் ட்ரைவ். :-))))

வரதராஜலு .பூ on June 18, 2013 at 9:11 AM said...

நானும் சனிக்கிழமை மழையில் மாட்டிக்கொண்டேன்.

ரொம்பவே என்ஜாய் பண்ணியிருக்கிங்க கார்கி. நைஸ் ரைட்அப்

நீங்க வருவிங்கன்னு தெரிஞ்சிருந்தா மீட் பண்ணியிருப்பேன். நெக்ஸ்ட் டைம் வரும்போது சொல்லுங்க மீட் பண்ணலாம்

Nathan on June 18, 2013 at 10:33 AM said...
This comment has been removed by the author.
Nathan on June 18, 2013 at 10:35 AM said...

அருமையான அழகான பதிவு புதுவையை பற்றி. பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டுவிட்டது.

வழக்கமாக நான் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை. கார்கி எழுதியதாலேயே இது ஒரு வரலாற்று பதிவாகிவிடும். ஆகையால் அதில் விடுபட்ட சின்ன சின்ன விஷயங்களை மட்டும் ஏதோ விக்கிபீடியாவில் திருத்துவதை போல செய்திவிடுகிறேன்.

புதுவைக்கு வெளியில் இருந்து வருபவர்கள் என்னதான் சிலாகித்து எழுதினாலும் எனக்கு கடந்து 30 வருடங்களாக ஏதும் ஸ்பெஷலாக தெரிந்ததில்லை. ஒயிட் டவுன் என்னும் பிரஞ்சு காலத்து வீடுகள் நிறைந்த பகுதியை விட்டு வெளியே வந்துவிட்டால் புதுவையும் மற்ற இந்திய நகரத்தை போலத்தான் இருக்கும். எல்லோரும் சிலாகித்து போவது ஒரு கல்சுரல் டவுனை பற்றி. சென்னைவாசியாகிவிட்ட இந்த 5 வருடத்தில் இப்போதெல்லாம் ஊருக்கு போகும்போதெல்லாம் புதுவை எனக்கும் அழகாய் தெரிவதால் மற்றவர்களின் கூற்று புரிய ஆரம்பித்திருக்கிறது.

கடற்கரை சாலையில் இருந்த ரெஸ்டாரண்ட் லே கபே இன்னமும் அங்கேயேதான் இருக்கிறது.. இங்கு முன்னரெல்லாம் உணவருந்திக்கொண்டிருக்கையில் அலைகள் முகத்தில் அடிக்கும். பாதுகாப்பு கருதி அடுக்கப்பட்ட பாறைகளால் அந்த சுகம் மட்டும் இப்போது இல்லை. இது மட்டுமின்றி கடற்கரை சாலையின் தெற்கு முடிவில் சீ வியூ ரெஸ்டாரண்டும் இருக்கிறது. இவை இரண்டும் புதுவை அரசாங்கத்தால் நடத்தப்படுபவை.

பெயர்கள் பிரன்ஞ் ஸ்பெல்லிங்கில் எழுதி பின் அதை அப்படியே தமிழாக்கம் செய்வதால் வித்யாசமாக இருக்கும். உதாரணம்.. Kumar - Coumare - கௌமாரே.

தனது அடையாளங்களில் பலவற்றை தொலைத்துவிட்டு வேகமாக குட்டி சென்னையாக மாறிவரும் புதுவையை பார்க்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது.
இன்னமும் நிறைய அழகுகள் மீதம் இருக்கு புதுவையில்.

karki bava on June 18, 2013 at 10:59 AM said...

@இல்யாஸ்,
உண்மை.

@ராஜகுரு,
போங்க போங்க

நன்றி மதன்ராஜ்

@முரளி,
சச்சின் கங்குலியை விட நிச்சயம் பெட்டர் பேட்ஸ்மன். எனக்கு கங்குலி பிடிக்க காரணம் வேற.

@வரதராஜலு,
ரொம்ப short trip. next time, நிச்சயம் சொல்றேன்

@நாதன்,
எனக்கு தெரிஞ்சு பஸ் ஸ்டேண்ட் மட்டும்தான் மற்ற நகரங்களை போல இருக்கிறது. மற்றபடி எல்லாமே வேற என்றுதான் தோணுது. எப்படின்னு சொல்ல தெரில..

KSGOA on June 18, 2013 at 3:48 PM said...

Romba rasichu ezhuthi irukkenga....Adikkadi ezhuthunga.....

தேசாந்திரி on June 18, 2013 at 5:55 PM said...

கார்க்கி,

நான் பாண்டியில் வேலைக்காக பாண்டியில் ஒரு வருடம் குடியிருந்தேன். ஆனால், மணக்குள் வினாயகர் கோவிலுக்கும், ஆசிரமத்திற்கும் ஒரு தடவை கூட அப்போது போகவில்லை!

அந்த சின்ன ஊர், தன்னை ஒரு தனி நாடென நம்புகிறது. அது தான் அங்கிருக்கும் பல சிறப்புகளுக்கும் காரணமென நினைக்கிறேன்.

முக்கியமாக அங்கிக்ருக்கும் மக்கள்: பெரியவர், சின்னவர் வித்தியாசமின்றி சினேகமாக ‘மிசே’(french:mercie)என அழைப்பார்கள். சி.எம். மற்றும் மந்திரிகளை பற்றி பேர் சொல்லி கேஷுவலாக பேசுவார்கள்(அவர்கள் literalஆக பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்க கூடும்).

முக்கியமாக, French town ஏரியாவில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் ஷாப்பிங் போவதற்கு கூட ‘பாண்டிக்கு போறோம்’ என வெளியூருக்கு போவதை போல சொல்வார்கள்!

இரசிகை on June 18, 2013 at 6:24 PM said...

nallaayirukku...
karkki
:)

David Jebaraj on June 20, 2013 at 10:04 AM said...

அவினாசி முடிந்து ஆலங்குளம், அம்பை பக்கம் வருவீங்களா? அவ்வ்

Sudharsan Haribaskar on June 22, 2013 at 6:24 PM said...

செம்ம..ண்ணா.. என் சொந்த ஊர் திருவாரூர். ஆனா அம்மா கடலூர்ங்குறதால அம்மா வழி சொந்தங்கள் எல்லாருமே பாண்டி கடலூர் தான். என் மாமா வீடு பாண்டிச்சேரில இருக்கு. நினைவு தெரிஞ்சு ஒரு 15 வருஷமா அடிக்கடி போயிட்டு வந்துட்டு தான் இருக்கேன். ஒரு இடம் விட்டதில்ல.. உசுட்டேரி..ஆரோவில்...பாண்டிச்சேரி போர்ட்... தாகூர் காலேஜ் பக்கத்துல ஒரு பெரிய கிரவுண்ட் இருக்கும்...மேடுன்னு சொல்வாங்க..அங்க உக்காந்து நானும் என் மச்சானும் எவ்வளவோ பேசியிருக்கோம்... இந்த மாதிரி ரசிச்சு ரசிச்சு சுத்துன இடங்கள் ரொம்ப அதிகம்... Le Cafe-ம் மறக்க முடியாத இடம். நாங்க திருவாரூரிலிருந்து சென்னைக்கு குடும்பத்துடன் வந்தப்புறம் அடிக்கடி வார இறுதியில் மாமா வீட்டுக்கு போயிடுவேன். நீங்க சொன்ன மாதிரி வீக்கெண்ட்ல பாண்டி போறேன்னு சொன்னா இங்க அதுக்கு அர்த்தமே வேற மாதிரி ஆக்கிட்டாங்க ‘குடி’மக்கள்...!!நம்ம ரசனைய மத்தவங்க ரசிக்கும்படி எழுதுறது பெரிய கலை.என்னைப் பொறுத்தவரைல நீங்க அதுல டாக்டரேட். :):)

நிரஞ்சன் தம்பி on June 24, 2013 at 12:44 PM said...

புதுவையில் பால்யக் காலங்களில் ஓராண்டு வாழ்ந்தமையால் அதன் தனி ருசி அறிவேன். கடற்கரை, பிரஞ்சு சாலைகள், பாரதி பூங்கா என அருமை, ஆனால் பல விடயங்கள் அங்கும் மாறி வருகின்றன. மக்கள் தொகைப் பெருக்கமும், வாகன பெருக்கமும், :( ஆரோவில் பக்கம் போனால் அதன் அழகே தனி ( எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்ற போதும் ). அடுத்த முறை போகவேண்டும் நிச்சயமாக.

 

all rights reserved to www.karkibava.com