Jun 30, 2013

தாயம்

61 கருத்துக்குத்து

ஒரு ஹீரோயிச பில்டப்புடனே தொடங்குவோம். என்னாயிட போகுது? J

  பள்ளி நாட்களில் நன்றாக படிக்கும் பையனாகத்தான் இருந்தேன். ஒரு நன்னாளில் என் ஆறாம் வகுப்பு அறிவியல் ஆசான் புத்தகத்தில் இருந்து கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் சரியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர் கபாலத்தில் மின்னி மறைந்தது அந்தக் கேள்வி.

“எதிர்காலத்தில் நீ என்னவாக போற?”

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் எதை சொல்லிக் கொடுக்கிறார்களோ இல்லையோ.. இதை கேட்க வேண்டுமென சொல்லியிருப்பார்கள் போலும். பாதிப் பேருக்கு பவர்ஸ்டாராகும் ஆசை இருந்தது. டாக்டர் என்றார்கள். மீதியில் பாதி பேர் எஞ்சினியர் ஆகிக் கொண்டிருந்தார்கள். கணக்கில் எப்போதும் ஃபெயிலானவன் கூட ஆடிட்டர் என்றான். நான் எழுந்த போது ஒரு அமைதி நிலவியது. ஏனென்றால் அதற்கு முந்தைய வருடம் இதே கேள்விக்கு “பெரியவன் ஆவேன்” என சொல்லி அடி வாங்கியிருந்தேன். இந்த முறை “அப்படிலாம் எதுவும் ஆசையில்லை சார். அப்படியே போய்ட்டு இருக்க வேண்டியதுதான்” என்றேன்.

  கிட்டத்தட்ட அது மாதிரிதான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. 2005 வரை சிங்கப்பூர் வாழ்க்கை. ஓரளவிற்கு வீட்டின் பொருளாதார தேவை பூர்த்தியானவுடன் இந்தியா வந்துவிட்டேன். இடையில் ஆஸ்திரேலியாவுக்கு migrate ஆக வாய்ப்பு வந்தும் போகவில்லை. இரண்டு வருடங்கள் TATA steelல் வேலை. அப்போது IT மீது ஆர்வம் வந்து ERP முடித்து, oracle corporationல் இரண்டு வருடங்கள். பின் Recruitment consultant. ஆனால் எந்த லைனுக்கு சென்றாலும் Mechanical Engineering consultant என்பதை விட்டுக்கொடுக்கவில்லை. இப்போது அந்த வேலைக்கும் கல்தா கொடுத்தாகிவிட்டது. வாழ்க்கை எங்கெங்கோ கைப்பிடித்து இழுத்து சென்று கடைசியில் கலைத்துறையில் விட்டுருக்கிறது.

  ஆம். ஒரே நேரத்தில் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கால் பதிக்கிறேன். எழுத்தாளர் பா.ராகவன் கதை திரைக்கதை எழுத, நீராவி பாண்டியன் இயக்கும் “தேவதை” நெடுந்தொடருக்கு நான் வசனம் எழுதுகிறேன். சன் தொலைக்காட்சியில் திங்கிள் – வெள்ளி வரை பகல் 12 மணிக்கு தேவதை நாளை முதல் வரவிருக்கிறாள். முதலில் பாரா என்னிடம் கேட்டபோது ஙே எனதான் நானும் முழித்தேன்.  அவர்தான் “எனக்கு நம்பிக்கை இருக்கு. உனக்கு ஆர்வம் இருந்தா முயற்சி செஞ்சு பாறேன்” என நம்பிக்கை விதைத்தார். அதோடு நில்லாமல் முதல் ஷெட்யுலில் நான் செய்த சொதப்பல்களை நேரம் செலவிட்டு செப்பனிட்டும் தந்தார். சீரியலின் சூட்சமங்களை சொல்லிக் கொடுத்தார். ஆக, முதன் முறையாக என் பெயர் திரையில் வரவிருக்கிறது.

   அடுத்து சினிமா. இதுவும் நான் எதிர்பாராத நேரத்தில் அமைந்தது. நம்ம கேபிள் சங்கர் படம் இயக்குகிறார். ”காமெடி போர்ஷன்” எழதுறியாடா எனக் கேட்டவருக்கு என் மீது பல வருடங்களாகவே நம்பிக்கை உண்டு. சரியென போய் நின்றேன். இப்போது முழு நேரமாக பணிபுரிகிறேன். பாரா போல கேபிளும் எனக்கு கிடைத்த ஜாக்பாட். கிட்டத்தட்ட எல்லா வேலைகளிலும் என்னால் ஈடுபட முடிகிறது. ஸ்க்ரிப்ட்,டிஸ்கஷன், ஸ்டோரி போர்ட், நடிகர்களுக்கு கதை சொல்லுதல், லோகேஷன் பார்த்தல், இசை என எல்லாவற்றிலும் என்னை அனுமதிக்கிறார். எது வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதை நிராகரிக்கும் காரணங்களை சொல்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மேலதிக விஷயங்கள் விரைவில்.

    சினிமாவா, சின்னத்திரையா என எந்த முடிவும் எடுக்கவில்லை. இரண்டிலும், ஒரு script writer ஆகத்தான் என்னை நினைத்துக் கொண்டு பணிபுரிகிறேன். வீட்டு டிவிக்கள் 42 இன்ச், 46 இன்ச் என பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. எதிர்பக்கம், திரையரங்க திரைகளின் அளவு சிறிதாகிக் கொண்டேயிருக்கிறது. அப்புறம் என்ன?  வழக்கம் போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இருக்கிறேன். இந்த இரண்டு புராஜெக்ட் முடிந்தபின்னால் திரும்பவும் வேலைக்கே போனாலும் சந்தோஷம் தான்.

   இந்த இரண்டு வாய்ப்புகளும் கிடைக்க ஒரே காரணம் இணையம்தான். பாரா, கேபிள் இருவரும் இணையம் மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம். எனக்கு ஏதோ தெரியுமென அவர்களை நம்ப வைத்ததும் இந்த இணையம் தான். ஆக, தொலைக்காட்சி & சினிமா குல வழக்கப்படி என்னை படித்து, உற்சாகமூட்டிய bloggers, twitters என உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். வேறு என்ன செய்ய? J

   தேவதை பகல் நேரத்தில் வருவதால் எப்படி பார்க்க என அலுத்துக் கொள்ள வேண்டாம். இணையத்தில் ஒரே நாளில் வந்துவிடுகிறது. அந்த இணைப்பை ஓரிரு நாளில் பகிர்கிறேன். அதை விட முக்கியமானது, target audience ஆன உங்கள் வீட்டு அம்மணிக்களையும், அம்மாக்களையும் பார்த்து கருத்துக் கேளுங்கள். மற்ற தொடர்களை விட சற்று காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கதாசிரியர்.

   நாளை என் பெயரை திரையில் காண ஆவலுடன் உள்ளேன். சொல்ல மறந்துட்டேனே.. ஏற்கனவே ஒரு கார்க்கி இருப்பதால், என் அப்பாவின் பெயரையும் இணைத்து “கார்க்கி பவனந்தி” ஆகியிருக்கிறேன். 

First Episode:
Jun 27, 2013

கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்சில்லா

7 கருத்துக்குத்து
”Machi.. busya? ungkitta konjam pesanumda”

ஜிடாக்கில் அவனிடம் இருந்து இப்படி ஒரு மெசெஜ் வந்தவுடன் புரிந்துவிட்டது ஏதோ முக்கியமான பிரச்சினை என்று. நைட்டு எட்டு மணிக்கு கால் பண்றேண்டா என்றேன். அவன் சொன்னது போல் பிரச்சினையை உங்களுக்கு சொன்னால் விசு படமோ, குட்டிப்புலியோ பார்த்தவர் போல் ஆகிவிடுவீர்கள் என்பதால் சுருக்கமாக சொல்கிறேன். ( புரியிற மாதிரி நீ சொல்லிட்டாலும்..)

இவன் பேரு மதி. ஓக்கே? ஓக்கே.

அவ பேரு ஆண்ட்ரியா. ஓக்கே? ஓக்கே.

  ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. வீட்ல பெரிசா ஒன்னும் எதிர்ப்பு இல்ல. ஆனா ஆண்ட்ரியாவுக்கு சர்ச்சில் திருமணம் நடக்கனும்ன்னு ஆசைங்க. நம்மாளுக்கு டாஸ்மாக்கே கோயில், வோட்காவே தெய்வம். இப்ப பையனோட அம்மா என்ன சொல்றாங்கன்னா, சர்ச்ல கல்யாணம் பண்ணா மதம் மாத்திடுவாங்க. நான் விசாரிச்சிட்டேன். மதம் மாறாம கல்யாணம் பண்ண மாட்டாங்கன்னு சொல்றாங்க. ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல கூட வச்சிக்கோங்க. கோயில பண்ணியாகனுன்னு நான் சொல்லல. ஆனா இவன் மதம் மாறக்கூடாதுன்னு சொல்றாங்க.கரெக்டுதானே?

  என்ன கரெக்டு?   சின்ன வயசில இருந்து கல்யாணம்ன்னா சர்ச்ல மட்டுமே பார்த்து வளர்ந்துட்டேன். அங்க நடந்தாத்தான் எனக்கு கல்யாணம் ஆன ஃபீல் இருக்கும்ன்னு ஃபீலிங்கா சொல்லுது பொண்ணு அதாங்க.. ஆண்ட்ரியா .அப்ப ஒரு கிறிஸ்டியன் பையனா பார்த்து லவ் பண்ண வேண்டியதுதானேன்னு சொல்றது அவளோட வருங்கால நாத்தனார், அதான் நம்ம ஹீரோவோட தங்கச்சி. ரைட்டுதானே?

  என்ன ரைட்டு? இதெல்லாம் பார்த்தா லவ் வரும்?அவ கோயில், சர்ச் ரெண்டுலயும் பண்ணலாம்ன்னுதானே சொல்றா? அப்புறம் என்னன்னு எகிறுவது நம்ம ஹீரோ. இந்த கதைல  வில்லனே இல்லை என்பதால் அம்மாவிடம் எகிறுகிறார். அது மட்டுமில்லாமல் மதம் மாறத் தேவையில்லையாம்ன்னு சொல்றாரு ஹீரோ. சரிதானே?

   என்ன சரி? உங்களுக்கு தெரியாதுடா. சர்ச்ல அப்படி பண்ன மாட்டாங்க. பேரையே மாத்திடுவாங்களாம். உனக்காக ஒத்துக்கறேண்டா. ஆனா ரெண்டு கண்டிஷன். சர்ச்ல உன் பேர மதின்னு தான் சொல்லனும். வேற பேரு சொன்னா புது கோட்டுன்னு கூட பார்க்காம அப்படியே உன்னை தரதரன்னு இழுத்துட்டு வந்துடுவேன். ரெண்டாவது , சர்ச்ல முதல்ல நடக்கட்டும். அதுக்கப்புறம் நாம கோயில்ல பண்ணிக்கலாம். இதுக்கு ஒத்துக்கறீயான்னு கேட்கறாங்க அவங்க அம்மா. வாஸ்தவம்தானே?

  என்ன வாஸ்தவம்? சர்ச்லதான் கடைசியா நடக்கனும்ன்னு அவங்க சொல்றாங்க. கோயில்ல அப்படி எந்த ரூல்ஸூம் இல்ல. அதனால் முதல்ல கோயில்ல பண்ணிடலாம். பேரு நான் மாத்தாம பார்த்துக்குறேன். என்ன சொல்றீங்கன்னு பதில் கேட்கிறார் மதி, பேரில் மட்டுமே வச்சிருக்கிறார்.
இப்படியே போது பிரச்சினை. பொண்ணு கல்யாணத்துக்கு பிறகும் சர்ச்சுக்கு போவதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நம்மாளு, கொஞ்ச நாள் அவள தாஜா பண்ன சர்ச்சுக்கு போவாரு. அப்புறம் அதுவும் ஸ்டாப் ஆகிடும். அவனையெல்லாம் மாத்த முடியாது. இப்ப பிரச்சினையே, 
மதம் மாறாம அவனால சர்ச்ல கல்யாணம் பண்ண முடியுமா? அந்த பொண்ணு ரோமன் கத்தோலிக். இவன் இந்து ,இல்ல இல்ல இவங்க அப்பா அம்மா இந்து. அதுக்கு பிஷப்பிடம் அனுமதி வாங்கினா பண்ணலாம்ன்னு இணையத்தில் தேடிய போது கிடைச்சது. என்ன விதி? 

இப்ப என் கவலையெல்லாம் அவன் கல்யாணம் என்னாகும்ன்றது பத்திலாம் இல்லைங்க.. கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி “அதை ஏண்டா என்ன பார்த்து கேட்ட”.. கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்சில்லா மாதிரி எனக்குன்னு வர்றானுங்க.. ச்சை

Jun 22, 2013

Best actor ever

18 கருத்துக்குத்து
சினிமாவை நான் காதலோடு ஒப்பிடுவேன். அது இரண்டு மனங்களுக்கு இடையே பேசப்படும் மொழி. திரைக்கும் பார்வையாளனுக்கும். இதில் படம் constant. பார்வையாளன் variable. பார்க்கும் இடம், சூழ்நிலை, மனநிலை என பல காரணிகளால் அனுபவம் மாறும். ஒரு படம் ஒருவருக்கு பிடிக்காமல் போவதும் இன்னொருவருக்கு all time fav ஆவதும் இதனால் கூட இருக்கலாம். ஒரே படம் முதலில் பிடிக்காமலும், பின்பு பித்து பிடித்தது போல் பிடிப்பதும் கூட இப்படித்தான். எதுவாயினும், அந்த மேஜிக் நடக்க வேண்டும். அதற்கான சூத்திரத்தை தாதா சாகேப் பால்கேவிலிருந்து இன்றைய இயக்குனர்கள் வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. காதலைப் போல, அதுவும் ஒரு மேஜிக்.

  தமிழ்நாட்டில் ஒவ்வொருவனுக்குள்ளும் ஓர் இயக்குனர் இருப்பான். ஒவ்வொருவரிடம் ஒரு கதை இருக்கும். ஆனால் நடிக்க சொன்னால் மட்டும் முடியாது. நடிப்பு என்பது என்னளவில் தனித்துவமானது. ஒரு படத்தை பார்த்து காப்பியடித்து இன்னொரு படமெடுக்கலாம். ஆனால் ஒருவரின் நடிப்பை பார்த்து அப்படியே காப்பியடிக்க கூட திறமை வேண்டும்

  தமிழ் சினிமா கதாநாயர்களில் எனக்கு பிடித்த “நடிகர்” என்றால் அது ரஜினிதான். ஏனோ எனக்கு கமல் வகையறாக்கள் செய்யும் Method actingல் நம்பிக்கையில்லை. தளபதி படத்தில் ஓர் காட்சி. ரஜினியின் ஆட்கள் ஒருவனை ரோட்டில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் வந்துவிடுகிறது. வேடிக்கை பார்க்கும் ரஜினி “போதும்” என்பது போல் கைக்காட்டுகிறார். 200 கிலோ தடியன்கள் உடனே அடிப்பதை நிறுத்துகிறார்கள். அந்த ஒல்லி உருவம் ஒரு தொள தொள சட்டையை போட்டுக் கொண்டு ஆட்டுவிக்கிறது. அந்த காட்சியில் ரஜினியின் உடல்மொழி அதை நம்ப வைக்கும். ரஜினி ஒரு பெரிய டான் என சிரத்தையின்றி நம்ப வைப்பார். 

   அப்படிப்பட்ட ரஜினிக்கு பிறகு ஒருவரை நடிப்பிற்காக பிடிக்கிறது. ஆபத்தான விஷயம் என்னவென்றால் ரஜினியை பிடித்ததை விட 100 மடங்கு அதிகமாய் பிடித்து தொலைகிறது. டிவியிலோ, அல்லது யாரோ ஒருவரின் மொபைலிலோ இவர் நடித்த காட்சி வருகிறதென்றால் அனுஷ்காவை பார்ப்பதை விட 4 மிமி அதிகமாய் வாய் பிளந்து பார்க்கிறேன். தளபதியில் ரஜினுக்கு இருந்ததை விட சில எலும்புகளும், சில மீட்டர் தோலும் இவருக்கு குறைவுதான். மாப்பிள்ளையின் மாப்பிள்ளை தனுஷைத்தான் அப்படி வெறித்தனமாக பார்த்து தொலைக்கிறேன்.   நேற்று ராஞ்சனா பார்க்க நேர்ந்தது. அசாத்தியமான நடிப்பை அசால்ட்டாக செய்திருக்கிறார் தனுஷ். வாரணாசி தெருக்களில் இவர் எப்போது வாழ்ந்திருப்பார் என்றுதான் நினைக்க வைக்கிறது. ஆடுகளம் படத்தில் மதுரையில் சுற்றிய அதே உருவம், மொழியிலிருந்து எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடிக்கிறது. நடிப்பு என்பது முகபாவங்கள் அல்ல. அது ஒரு thought process. மூளைக்குள் சென்று யோசிப்பதுதான் மேட்டர். தனுஷ் இந்த வகையறா. ஒரு சின்ன ஷாட் என்றாலும் அது தவறின்றி இருக்கிறது. கதை என்ன? எங்கு நடக்கிறது? இந்த பாத்திரத்தின் மேனரிசங்கள் என்ன? இவையெல்லாம் ஒரு கணிணியில் இன்புட் செய்வது போல, தனுஷிடம் சொல்லிவிட்டால் போதும், படத்தின் எங்கேயும் பிசிறாமல் பார்த்துக் கொள்கிறார். இதற்கு அசாத்திய உழைப்பும், அதீத திறமையும் தேவை. குன்னக்குடி வைத்தியநாதன் காம்போதி ராகத்தையே டீக்குடிப்பது போல் வாசிப்பாரே.. அதைத்தான் நடிப்பில் செய்கிறார் தனுஷ்.

   இவர் சிரித்தால் பிடிக்கிறது. அழுதால் அழ தோன்றுகிறது. ஏனெனில் அந்த பாத்திரம் எதற்காக அதை செய்கிறதோ, அதை உணர்ந்து செய்வதால். ராஞ்சனா படம் பெரிய அதிசயமெல்லாம் இல்லை. 3 படத்தின் இந்தி வெர்ஷன் எனலாம்., முதல் பாதி குதுகலமான காதல். இரண்டாம் பாதி கொஞ்சம் ஹெவி மெட்டிரியல்.(ஆனால் கதை முற்றிலும் வேறு). தனுஷின் தோற்றமும் 3 போலவேதான். இரண்டாம் பாதியில் திரைக்கதை தொப்பென விழுந்து படம் படுத்து விடுகிறது. ஆனால் நான் படம் முழுவதும் தனுஷை மட்டுமே பார்த்ததால் அத்தனை சோர்வாக தெரியவில்லை.

  கோடம்பாக்கத்தில் காலடி வைத்தபோது நலம் விரும்பி ஒருவர் என்னிடம் சொன்னது “உனக்கென ஒரு goal வைத்துக் கொள்”. அப்போது முடிவு செய்த ஒரே விஷயம். தனுஷை இயக்கிவிட வேண்டும். அது முடிந்ததும், இன்னொரு படம் சேர்ந்து பண்ணலாம் என அவர் சொல்ல வேண்டும். இது நடக்காமல் போகத்தான் வாய்ப்பு அதிகம். ஆனால் என் goal ல் கூட தனுஷ் இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்பதால் இதை வைத்துக் கொண்டேன். 

  ஒரு நாள் ட்விட்டரில் தனுஷை தமிழ் சினிமாவில் best actor என சொல்லியிருந்தேன்.ராஞ்சனா எனக்கே அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. Why dis kolaiveri பாடலுக்கு அந்த உலகப்புகழ் அதீதமாக தோன்றலாம். But dhanush truly deserves that. I am proud of him And love him. You rock man.

தனுஷுக்காக நான் நூறு முறைக்கு மேல் பார்த்த ஒரு காட்சிJun 17, 2013

இணைய மொண்ணையர்களும், எழுத்துலக ஜமீன்தார்களும்

34 கருத்துக்குத்து

  நேற்று நடந்த நீயா நானாவில் பங்கேற்றதை குறித்தும்,அதை தொடர்ந்த சில இணைய விவாதங்கள் குறித்தும் சில விஷயங்களை பேசலாம் என நினைக்கிறேன்.

  நேற்றைய நீயா நானாவின் சிறப்பு விருந்தினர் என யாருமில்லை. இதுவா அதுவா என இரண்டு பக்க விவாதமும் இல்லை. தெளிவான தலைப்பும் இல்லை. கோபி கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக யோசித்து யார் தொடர்புடைய பதிலை, சுவாரஸ்யமாக, முக்கியமாக முதலாவாதாக மைக் கிடைத்து சொல்கிறார்களோ அவர்களுக்கே வாய்ப்பு. அந்த கதையை விட்டுவிடுவோம். இந்தப் பதிவின் நோக்கம் நீயா நானா குறித்தல்ல. அதன் பின் நடந்த உரையாடல் பற்றியது.

  கெளதம சித்தார்தன் என்பவர் வந்திருந்தார். ஆரம்பம் முதலே அமைதியாகவே இருந்தவருக்கு இறுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பேச கோபி இடமளித்தார். ஆச்சரியமாக இருந்தது. பின்னர்தான் தெரியும், அவர் அதற்கு முன் தன் ஒரு சிறுப்பத்திரிக்கையில் நீயா நானாவை கிழித்து தோரணம் தொங்க விட்டுருந்தாராம். நேற்று மனுஷ்யபுத்திரன் அவர்கள் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். கெளதம சித்தார்தன் என்ற அறிஞர் பேசும்போது எல்லோரும் அசிரத்தையாக இருந்ததாகவும், 2 நிமிடமே பேசிவிட்டு “நான் நிறைய பேசிட்டேனோ” என கெளதம் சொன்னது வருத்தமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். நேரலைக்கு மட்டுமே மனுஷ் செல்வதால் இப்படி நினைத்துவிட்டார் போலும். அன்று அவர் பேச ஆரம்பித்த முதல் 10 நிமிடங்கள் அவர் என்ன பேசினார் என்பது கோபிக்கே விளங்கவில்லை. அவர் பேசியதை அவரே கேட்டு கெளதமுக்கே கிட்டத்தட்ட தூக்கம் வந்துவிட்டது. பின்னர்தான் சமாளித்து ஏதோ பேசினார். கெளதம சித்தார்தன் பெரிய எழுத்தாளராக இருக்கலாம். நிறைய செய்திருக்கலாம். நீயா நானா அரங்கிற்கு வரும் முன்பு வரைக்கும் அவர் செய்த எல்லாம் எங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவரும் நிகழ்ச்சிக்கு வந்தார். 10 நிமிடம் தொடர்ந்து அசுவாரஸ்யமாக பேசினார். அதுவும் இரவு 1 மணிக்கு. அப்போது பார்வையாளர்கள் அசிரத்தையாக இருப்பது யதார்த்தமான ஒன்றுதான். இதிலென்ன தவறென தெரியவில்லை. நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவருக்கு மட்டும் அரை மணி நேரம் மைக் கிடைப்பது சாதாரண வாய்ப்பில்லை. கோபிக்கே கூட சில சமயம் அது வாய்ப்பதில்லை. அந்த சூழ்நிலையில் மொக்கையாக பேசிய கெளதம சித்தார்தனை ஏன் கொண்டாடவில்லை என கேட்பது, ஆழ்வாருக்கு ஏண்டா அஜித்துக்கு ஆஸ்கர் கொடுக்கல என்பது போன்றதுதான். அஜித் நல்ல நடிகராக இருக்கலாம். ஆழ்வார் மொக்கை என்பதே பாயிண்ட்.

  இதில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. ஜெமோ, சாரு இப்போதும் மனுஷும் சேர்ந்து தொடர்ந்து தமிழ் இணையவாசிகள் என்றாலே இணைய மொண்ணையர்கள் என்று ஸ்தாபிக்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள். நேற்று கெளதம சித்தார்தனும் இதையேதான் சொன்னார் என்றாலும் அவரின் நோக்கம் வேறு. அவரை விட்டுவிட்டு மும்மூர்த்திகளுக்கு செல்வோம். இணையத்தின் மிக முக்கியமான பாசிடிவ் என்னவென்றால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இருக்கும் தூரம் குறைவு. எழுத்தாளன் செய்யும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக் காட்டுவதுடன் ஸ்க்ரீன்ஷாட் வேறு எடுத்து வைத்துவிடுகிறான் இந்த இணைய மொண்ணை. விசிலடிச்சான் குஞ்சுகள் என சினிமா ரசிகனை கிண்டலடித்தாலும் இவரக்ளும் கிட்டத்தட்ட அந்த இடத்தில் வைத்து வாசகன் தங்களை வழிபட வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். சாருவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும், ஜெமொவின் எழுத்தல்லாத மற்ற நடவடிக்கைகளை கவனித்தாலும் இது புரியும்.

  ஒரு முறை சாரு  வாரமலர் லெவல் கவிதையை இதுதான் இலக்கியம் என சிலாகித்தார். அடுத்த சில நாட்களிலே அந்த கவிதாயினியுடனான சாரு செய்த chat வெளியானது. சாரு சிலாகித்ததற்கான காரணம் தெரிந்தவுடன் அந்த பதிவை தளத்திலிருந்து எடுத்துவிட்டார். ஆனால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிட்டார்கள் இணைய மொண்ணைகள். இன்னொருமுறை விக்கிபீடியாவை நம்பி, அதிலிருந்த கதையை படித்து விமர்சனமே எழுதுவிட்டார் சாரு. ப்ளீச்சிங் பவுடர் என்ற பதிவர் அதையும் குறிப்பிட்டு பதிவு எழுதியவுடன் கேப்டன் போல கண் சிவந்தார் சாரு.
ஜெமோவும் விதிவிலக்கல்ல. ராம்ஜீ யாஹூ என்பவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கமெண்ட் பாக்ஸையே மூடிவிட்டார்.

   இந்த இணைய மொண்ணைகளின் வெற்றி என்ன தெரியுமா? ஜெமோவின் விஷம் கக்கும் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டு புனைவுகளை மட்டும் கொண்டாடுகிறார்கள். சாருவின் வாசகர் கடிதத்தை கூட புனைவு என்ற பிரிவில் சேர்த்து படித்து மகிழ்கிறான். ஒரு அன்னப்பறவை போல இவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை கேலி பேசுகிறார்கள்.. இவர்களின் பிம்பம் சரிய காரணமாயிருக்கிறார்கள். என்ன செய்வார்கள்? பேசி,விவாதித்து காப்பாற்றிக் கொள்வது சாத்தியமில்லாத போது அவ்வாறு சொல்பவனையே மொண்ணை என்று சொல்லிவிட்டால்?? இதைத்தான் செய்கிறார்கள். திமுகவுக்கு சமீபகாலமாக காவடி தூக்கும் மனுஷுக்கும் இந்த வழி எளிதானதாக தெரிந்தது. ராசா, வண்டியை அந்த பக்கமே விட்டுவிட்டார்.

   ஆக, இணையத்தில் மொண்ணைகளே இல்லையா என்பீர்களேயானால், இருக்கிறார்கள். முன்பெல்லாம் அரசியல் நிகழ்வு குறித்தோ, அல்லது ஒரு சமூக அவலம் குறித்தோ எத்தனை பேர் விவாத்திருப்பார்கள்? இணையம் வந்த பின் இந்த விழுக்காடு எங்கேயோ போய்விட்டது. செக்கோஸ்லோவேக்கியா என்ற நாட்டின் பெயரை எந்த குழந்தையும் முதல் தடவையே சரியாக சொல்லிவிடாது.(அந்த நாடு இரண்டாக பிரிந்தபோது அதிக சந்தோஷமடைந்தவன் நானாகத்தான் இருப்பேன்) ஆர்வம் காரணமாக இது போன்ற விஷயத்தில் கருத்து சொல்கிறவர்கள் மொண்ணையாக தெரியலாம். ஆனால் அவர்கள்தான் பிற்காலத்தில் பக்குவப்படுகிறார்கள். இதற்கு பல பேரை உதாரணமாக சொல்ல முடியும். விஷயம் என்ன்வென்றால், சரியோ தவறோ இது போன்ற நிகழ்வுகள் குறித்து பல பேர் பேசுவது மிக மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். இதுதான் எழுத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை. என் வேலையை நீ செய்தால் எப்படி? பிறகு நான் எதற்கு என்ற ஈகோ.
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது ட்விட்டரில் ஒரு hashtag - வோடு ஒரு பெரிய கூட்டம் கிளம்பியது. கிட்டத்தட்ட எல்லாமே பகடி வகை ட்வீட்ஸ்தான். ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம் அசாத்தியமானது. ஈழ விஷயத்தை முன்வைத்து காங்கிரசை ஒதுக்கியவர்கள் அன்று ஏராளம். அதில் பாதி பேருக்கு மேல் இன்று காங்கிரசை புறக்கணிக்க வேண்டிய காரணம் புரிந்து புறந்தள்ளுகிறார்கள். இந்த தொடர்பை புரிந்துக் கொள்ள வேண்டும். அன்று மொண்ணையாக காங்கிரசை சாடியவர்கள் பிற்காலத்தில் தொடர்ந்த வாசிப்பாலும், கவனிப்பாலும் புரிந்துக் கொள்கிறார்கள். முன்னோக்கி செல்கிறார்கள். ஆனால் ஜெமொவுக்கும், சாருவுக்கும் சாதாரணமானவர்கள் செய்யும் இந்த பங்களிப்பு பிடிக்கவில்லை. அவர்களுக்கான முக்கியத்துவம் குறைவதாக கவலைக் கொள்கிறார்கள்.

  இதில் சாரு ஒரு படி அதிகம். அவருக்கு உரிய அந்தஸ்தை தமிழ்ச்சூழல் வழங்கவில்லையாம். அவர் புத்தகங்கள் போதிய அளவு விற்கவில்லையாம். அதனால உலக சந்தைக்கு செல்கிறார்களாம். முதலில் ஜெமோ, எஸ்ரா அளவிற்கு இவர் புத்தகங்கள் விற்கிறதா? இல்லை. சோம.வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம், மதனின் வந்தார்கள் வென்றார்களோடு சாருவை ஒப்பிடவில்லை. சக இலக்கிய எழுத்தாளர்களின் விற்பனையயே சாரு தொடவில்லை. அடுத்த சுஜாதா என சொல்லிக்கொள்பவர், அவரின் ராயல்டியில் 10% கூட வாங்கியிருக்க மாட்டார் என்பதுதான் நிதர்சனம். ஜெமொவை பார்த்து நீங்க ஏழாவது பாஸ்ஸூன்னே. நான் sslc ஃபெயில்ண்ணே என சொல்லும்பொருட்டு ஆங்கில சந்தைக்கு செல்லும் சாரு, இன்னும் ஏழாவதே பாஸாகவில்லை என்பதை என்றுதான் உணர்வாரோ.


(தொடரும்)

Jun 14, 2013

தில்லு முல்லு & தீயா வேலை செய்யணும் கொமாரு - விமர்சனம்

4 கருத்துக்குத்து
தில்லுமுல்லு:  க்ளாசிக், KB, சூப்பர்ஸ்டார், தேங்காடா என்றுபெண்ணை பெற்ற தந்தை போல  வறட்டு கெளரவம் பேசாமல் ஒரு சிரிப்பு விழாவுக்கு செல்லும் மனதோடு மட்டும் தியேட்டருக்கு போனால் ஒரு பட்டாசான படம் பார்த்த திருப்தி நிச்சயம். சிவா பாலுக்கு பால் சிக்சர், ஃபோர் என விளாசுகிறார். பிராக்‌ஷ்ராஜ் இதை தனக்கான CAT exam என நினைத்து தயாராகியிருப்பார் போல.படத்தில் பங்குபெற்ற அனைவருமே கலக்குவதை பார்க்கும்போது இந்த டீமுக்கும்  தோனிதான் கேப்டனோ என தோன்றுகிறது. என்னதான் ஸ்க்ரிப்ட் சூப்பர் என்றாலும், நான் தான்யா நிஜமான காமெடி சூப்பர்ஸ்டார் என க்ளைமேக்சில் வந்து தன் மார்க்கெட்டை காப்பாற்றிக்கொண்டு விடுகிறார் சந்தானம். மனுஷன் கொட்டாவி விட வாய் திறந்தால் கூட நமக்கு சிரிப்பு வருகிறது. பத்ரிநாத்தை போல இஷா தல்வார் ஒரு திருஷ்டி அட்டு. சாரி, பொட்டு. இயக்குனர் பத்ரிக்கு முதல் பெரிய வெற்றி. வாழ்த்துகள் சார்.

தீயா வேலை செய்யணும் கொமாரு:  குருவும் சிஷ்யரும் சென்ற ஆண்டு இணைந்து கலகலப்பு என்ற வெற்றியை கொடுத்தார்கள். இந்த ஆண்டு ஒரே நாளில் (யார் போட்ட ப்ளானோ) இருவரின் படங்களும் வெளியாகியிருக்கின்றன. உப்பில்லாத பொங்கலில் கூட முந்திரி நல்லாதானே இருக்கும் என்பது போல் சந்தானம் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறார். பின், உப்பில்லாத பொங்கலை சாப்பிட்டு நாக்கு செத்தவுடன் முந்திரியின் ருசியும் தெரியாமல் போய்விடுகிறது. இசை படு த்ராபை.RJ பாலாஜி தனக்கு தெரிந்த ஒரே ஜோக்கான் i am a shy boy from decent familyஐ சினிமாவுக்கும் கொண்டு போயிருக்கிறார்.  இந்த கணேஷ வெங்கட்ராம் எல்லாம் அழகாய் இருப்பதாக நிஜமாகவே பெண்கள் நினைக்கறீர்களா??அப்படியெ நாலு தட்டு தட்டி முறுக்கு சுற்றி அவரை பரோட்டா போடத்தான் தோன்றுகிறது. முதல் பாதி சுமார். இரண்டாம் பாதி குமார்.
அடுத்த படத்துக்கு தீயா வேலை செய்யணும் சுந்தரு.

verdict: தில்லு முல்லு ஜெயிக்க மார்க்கெடிங் டீம் தீயா வேலை செஞ்சா போதும். தீயா வேலை செய்யணும் குமாரு ஜெயிக்க ஏதாச்சும் தில்லு முல்லு பண்ணாத்தான் முடியும்
 

all rights reserved to www.karkibava.com