May 23, 2013

ரூம் மேட்

29 கருத்துக்குத்து

   Cricket is sexier than girls. கார்த்திக் சொன்னது 100% சரி. இது ஒரு செம கேமுங்க. சின்ன வயசுல இருந்தே.. இப்பவும் எனக்கு சின்ன வயசுதான் இல்ல? அப்போ, குழந்தையா இருக்கும் போதிருந்தே நான் கிரிக்கெட் காதலன். அந்த வயசிலே காதாலான்னு என்னை கேட்க மாட்டிங்கன்னு நம்பறேன். என் வயசு பசங்களுக்கு குருன்னா நம்ம சச்சின் தான். அவருடைய டெஸ்ட் மேட்ச் பார்ப்பிங்களா? கிளாசிக். குவார்ட்டேலி, ஹாஃப் இயெர்லின்னு எந்த டெஸ்ட் வந்தாலும்,சச்சின் ஆடுற டெஸ்ட்ட மிஸ் பண்ணவே மாட்டேன். அதுக்காகவே மிஸ் என்னை அடிப்பாங்க.ஆனா நான் சச்சின் அடிக்கிற எந்த ஷாட்டையும் மிஸ் பண்ண மாட்டேன்.

  டிவில டெஸ்ட் மேட்ச் ரீடெலிகாஸ்ட் ஆனாலும் ஒரு பால் விடாம பார்ப்பது நான் மட்டும்தான்னு அம்மா சொல்வாங்க. அப்போலாம் அம்மா என்னை கடைக்கு அனுப்பி பால் வாங்கிட்டு வர சொல்வாங்க. நான் போய் நல்லதா ஒரு டென்னிஸ் பால் வாங்கிட்டு வந்து அம்மா கிட்ட அடி வாங்குவேன். அந்த கோவத்தோடு மேட்ச் விளையாட போனா, உன்னாலதானே அடி வாங்கினேன்னு அந்த பால செமையா அடிப்பேன். அதுக்காகவே அம்மா கிட்ட குச்சியால அடிக்க சொல்வேன். அப்போதானே நானும் பேட்டால அடிக்க முடியும்?.

காலேஜ்ல சேர்ந்தப்ப கிரிக்கெட்டுல பெரிய ஆளா வரணும்னு வெறி வந்துச்சு. எங்க காலேஜ் கிரவுண்டுலதான் ராபின் சிங் பிராக்டீஸ் பண்ணுவாருன்னு சொன்னாங்க. அவர்கிட்ட போய் சேரலாம்னு விசாரிச்சேன். சேரலாம். ஆனா மாசம் 1500 ருபாய், பேட், கிட் என 5000 ரூபாய் கேட்டாங்க. சேர முடியல. ஒரு வாரம் சோகமா இருந்தேன். ரூம் மேட் ஒரு மாதிரியா பார்த்தான். கபில்தேவை கூட இப்படித்தான் பார்த்தாங்களாம். அவன்கிட்ட சச்சின் பத்தி சொன்னேன். எனக்கு கொச்சின்தான் தெரியும்னு சொன்னான். நான் உனக்கு சொல்லித் தறேண்டானு சொன்னேன். வேற வழியில்லாம சரின்னு சொன்னான். என் ரூம் மேட் ரொம்ப நல்லவன். நான் ரொம்ப திறமைசாலின்னு அவனுக்கு தெரியும். சரி விடுங்க. அப்படின்னு அவன் நம்பறான்.

தினமும் மாலையில் காலேஜ் முடிந்து வந்து அவனுக்கு பிராக்டீஸ் தருவேன். பேப்பருல பிள்ளையார் சுழி போடற மாதிரி பேட்டுல MRFன்னு எழுத சொன்னேன். அப்பதான் சச்சின் மாதிரி லெக் சைடுல ஃப்ளிக் பண்ண முடியும்ன்னு சொன்னத அவன் நம்பல. அதை எழுதிட்டு நானே பந்தை மேல போட்டு ஃப்ளிக் பண்ணி காமிச்சேன். அப்பவும் அவன் நம்பல.அவன் அடிச்சு பார்த்தப்ப எட்ஜ் ஆகி மேல இருந்த ட்யூப் லைட் மேல பட்டுடுச்சு. அப்பதான் எனக்கு ஸ்பார்க் ஆச்சு. அவன் பந்தை மேல போடும்போது சுழட்டி விட்டான். அப்பவே அவன் பேட்ஸ்மென் இல்ல, ஸ்பின்னர்ன்னு தெரிஞ்சிடுச்சு எனக்கு.
உடனே அவனுக்கு பிரசன்னாவை பத்தி சொல்ல ஆரம்பிச்சேன். அவரோட ஃபோட்டோ இருக்கிற நியுஸ் பேப்பர் கொண்டு வந்து அவர மாதிரி பால் போட சொன்னேன். ஏதோ செஞ்சான். ஆனா அவன் கையில் ஏதோ சக்தி இருந்துச்சு. அவன் போடற ரெண்டுல ஒரு பால் என் ஸ்டம்ப்ப தூக்கிடும். அந்த 10க்கு 10 ரூமுல பெருசா ஷாட் அடிக்க முடியாது. சுவத்துல நேரா பட்டாலே அவுட். கவனமா தரையிலே அடிப்பேன்.  ரெண்டு பேரும் வேகமா வளர்ந்தோம். நான் ஒரு பேட்ஸ்மேனாகவும், அவன் ஒரு பவுலராகவும் அந்த ரூமுக்குள்ளே வளர்ந்தோம். ஒரு நாள் அந்த ரூமைத் தாண்டி நாங்க வெளிய வருவோம். வந்து கலக்குவோம்னு மட்டும் எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.

  அந்த வருஷம் முடியும் போது டீம் செலக்‌ஷன் பண்ணாங்க. என் ரூம்மேட் அவன் அக்கா கல்யாணம் இருந்ததால் வர முடியல. நீயாவது போய் செல்க்ட் ஆவுடா மச்சான்னு சொல்லியிருந்தான். அவன் கனவெல்லாம் நான் இந்தியா டீமுக்காக சிக்ஸ் அடிக்கணும்ன்றதுதான். நல்ல ஃப்ரெண்ட். அதை விட நல்ல பவுலர். என்னை இதுவரைக்கும் 798 தடவை போல்ட் ஆக்கியிருக்கானே. செலக்‌ஷன்ல வந்தவங்க எல்லாம் சிக்ஸா அடிச்சாங்க. என் டர்ன் வந்துச்சு, ரூமுல ஆடியே பழக்கப்பட்ட எனக்கு ஷாட் எல்லாம் ஸ்லோவாதான் வந்துச்சு. பிட்ச்ச தாண்டி பந்து நேரா வெளிய கூட போகல. அதை விட முக்கியமா பந்து போட்டவன் ரூம்மேட் மாதிரி ஸ்பின்னர் இல்லை. வேகமா போட்டான். ஸ்பின்னராவது ஸ்டம்ப்பாதான் தூக்குவான். ஆனா இவன்.. இவன்.. கண்ணு மூடி தொறக்குறதுக்குள்ள அது நடந்துடுச்சு. ஆனா என்னால்தான் நடக்க முடியல.

ரூமுக்கு தூக்கிட்டு வந்து விட்டாங்க. ரெண்டு நாள் பெட் ரெஸ்ட். அடுத்த நாள் ரூம்மேட் வர்றதுக்குள்ள MRF பேர் போட்ட குச்சி, பந்து, சுவத்துல இருந்து மூணு ஸ்டம்பு, ரெண்டு பெயில்ஸ், பவுண்டரி லைன் எல்லாத்தையும் அழிச்சிட்டேன். அவன் வந்தவுடனே செலக்‌ஷன் என்ன ஆச்சுடான்னு கேட்டான். நான் எதுவும் பேசல. அவன் உடனே “விடு மச்சான். மறுபடியும் பிராக்டீஸ் பண்ணுவோம். செகண்ட் இயர் நீதாண்டா கேப்டன்”ன்னு சொன்னான். சொன்ன பிறகுதான் கவனிச்சான். கிரிக்கெட் சம்பந்தமா எதுவுமே ரூமில இல்ல. என்னடான்னு கேட்டான். நான் சொன்னேன்.

“செஸ் தெரியுமா மச்சி? இண்ட்டெலிஜெண்ட்கேம்டா. ஆனந்த்தான் இப்போ உலக சாம்பியன். நம்ம ஊருதான். எனக்கு செஸ்ன்னா உயிரு. சிசிலியன் டிஃபென்ஸ் தான் என் ஃபேவரிட். நான் உனக்கு சொல்லி தர்றேன்”. ரூம் மேட் சாக்பீஸைத் தேடி தரையில் 8க்கு 8 கட்டம் போட்டுக் கொண்டிருந்தான்
 

all rights reserved to www.karkibava.com