Apr 1, 2013

வெற்றிடம்90களின் ஆரம்பம் என நினைக்கிறேன். சுஜாதா ஜாவா பற்றி எழுதுகிறார். “எல்லோரும் கைகளில் இருக்கும் பொருட்களை அப்படியே  போட்டுவிட்டு போய் ஜாவா படியுங்கள். பிழைத்துக் கொள்ளலாம்” என்கிறார். அப்போதிலிருந்து இன்று வரை ஜாவா படித்தவர்கள் பிழைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுவும் அவர் சொன்னபடி போட்டதை போட்டபடி விட்டுவிட்டு போய் படித்தவர்கள் ஜாம் ஜாம் என வாழ்கிறார்கள். சுஜாதா போல சமகாலத்தை ஆழ்ந்து கவனித்தவர்கள், எழுதியவர்கள் தமிழ் மக்களில் யாருமில்லை என்பது என் துணிபு. நிற்க.இது சுஜாதா பற்றிய yet another கட்டுரை இல்லை.

2011ல் அண்ணா பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு விவாத போட்டிக்கு அழைத்திருந்தார்கள். அப்போது நான் கொடுத்த தலைப்பு “இக்கால மாணவர்கள் ஆங்கிலத்தையே அதிகம் விரும்பி படிக்க காரணம் தமிழில் அவர்களுக்கு ஏற்ற எழுத்தாளர்கள் இல்லாததா, அல்லது மொழியை வளர்த்துக் கொள்ள மட்டுமே அவர்கள் படிப்பதாலா”.

  யாரும் உடனே பேச தயாரில்லை. ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். 20 நிமிட தயாரிப்புக்கு பின் பேசிய எல்லோருமே வள்ளுவனையும், கம்பனையும், (சிலர் பாலகுமாரனையெல்லாம் சொன்னார்கள்), சுஜாதவையும் குறிப்பிட்டு இவர்கள் சொல்லாததையா ஆங்கில எழுத்தாளர்கள் சொல்கிறார்கள் எனக் கேட்டார்கள். முடிவில், இக்காலத்தில் உங்களை கவர்ந்த எழுத்தாளர் யார் என தனித்தனியே கேட்டபோது உயிரோடு இருக்கும் எந்த எழுத்தாளரின் பெயரும் வரவில்லை. ஆங்கிலத்தில் பெரும்பாலும் சேத்தன் பகத், அரவிந்த் அடிகா, அருந்ததி ராய் என்றார்கள்.என் பிரச்சினை இதுதான். 80,90களின் இளைஞர்களுக்கு கல்வி, தொழில்நுட்பம், சினிமா, எழுத்து என பலத்துறைகளில் நல்லதோர் வழிகாட்டியாக சுஜாதா இருந்தார். அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து அலசவும் ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகள் இருந்திருக்கிறார்கள். அதற்கும் முன்னால் திராவிட கட்சிகளில் பலர் இருந்திருக்கிறார்கள். பதின்ம வயதில் இலக்கிய தாகத்தோடு இருந்த ஜ்யோவ்ராம் சுந்தர் போன்றோரிடம் பேசினால் 90களில் இலக்கிய உலகம் எத்தனை அடர்த்தியாக இருந்தது என புரிந்துக் கொள்ள முடியும். அதற்கும் கூட இப்போது வழியில்லை என்பதுதான் நிதர்சனம். இந்தக்கால இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்க்கை புரிந்து, தேவை புரிந்து பதிவு செய்ய யாரும் இல்லை. இலக்கியம், அரசியல், சமூக பிரச்சினைகள், கல்வி, பொழுதுபோக்கு என எல்லா துறைகளிலுமே தமிழ்ச்சமூகம் படைப்பாளிகள்/ஆளுமைகள் விஷயத்தில் பின் தங்கியுள்ளதாகத்தான் நான் நினைக்கிறேன்.

எழுத்தாளர் மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு முறை சொன்னார் “இந்த கால பசங்களுக்கு ஒன்றரை ஸ்க்ரோல் தான் கணக்கு. அதுக்கு மேல எழுதினா ரைட் டாப்ல போய் X க்ளிக்கிட்டு போய்ட்டே இருப்பான்”. இதை மிக முக்கியமான observation ஆக நான் பார்க்கிறேன். சென்ற வாரம் கூட ட்விட்டரில் ஒருவர்(@ikrishs) சொன்னார் “next பட்டன் பயன்படுத்தாம,பிடிச்ச பாட்டோட பிடிச்ச பார்ட்டை திருப்பிகேக்காம, கடனே ன்னு headset ஐ மாட்டிட்டு பாட்டு கேக்கறாங்க”. யோசித்து பார்த்தால் பெரும்பாலானோர் இப்படித்தான் இருக்கிறார்கள். இது போன்ற சமகால இளைஞர்களின் பழக்கங்களை கவனித்து எழுத ஓர் எழுத்தாளர் இல்லை. ராயர் கஃபே, மூன்று விரல் படித்துவிட்டு இரா.முருகனை அப்படி நினைத்ததுண்டு. பின்னர் காணாமல் போய்விட்டார். சாருவையெல்லாம் கணக்கிலே எடுத்துக் கொள்ள முடியாது. ஜெயமோகனின் அரசியல்  சார்புடையது. விஷமத்தனமானது. அவரது புனைவுகளை வேண்டுமானால் இக்காலத்தின் இலக்கிய உச்சமாக கொள்ளலாம்.  

 இதுக்குறித்து சிலருடன் பேசியபோது இளைமயாக இருப்பதாலோ என்னவோ ராஜூ முருகனை பலர் முன் மொழிந்தனர். எனக்கு வட்டியும் முதலும் பிடித்த தொடர்தான். ஆனால் அவரும் “அந்தக்காலத்துல” என பழங்கதை தான் பேசிக்கொண்டிருக்கிறார். முதல் பால் சிக்ஸ் அடித்துவிட்டதால் உத்தப்பா போல அதே ஷாட்டை ஆடத்தான் விரும்புகிறார். அல்லது விகடன் விரும்புகிறது. அதை அவர் உடைக்க தயாரில்லை என்னும்போதே அவர் வீழ்ந்துவிடுகிறார். இளைஞர்களில் எனக்கு த.செ.ஞானவேலை மிகவும் பிடிக்கும். பிரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை என்ற அற்புதமான புத்தகத்தின் மொழி வடிவம் இவருடையதுதான். பயணம் படத்தின் வசனகர்த்தா இவர். கூர்ந்து அவதானிப்பதில் இவர் பலே என யோசித்ததுண்டு. ஆனால் சினிமாவின் பால் கொண்ட காதலால் அதற்கான முஸ்தீபுகளில் தொலைந்து போயிருக்கிறார். ஞாநி என்றால் சூட்கேஸ் விஷயம் தான் பலரின் கருத்தாக இருக்கிறது.  தொலைக்காட்சிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காலம் என்பதால் அதை கொஞ்சம் பார்த்தேன். மனுஷ்யபுத்திரன் இதில் மிக முக்கியமான சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறார். உருப்படியான விவாதம் நடக்கும் ஒரே இடமான புதிய தலைமுறை நிகழ்ச்சிகளில் அவரின் கருத்துகளும், வேகமும் ஓர் பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க இயலாது. மாற்றுக்கருத்து எல்லா விஷயங்களில் இருந்தே  தீரும். நான் சொல்வது, ஓர் பிரச்சினையை பற்றிய சிந்தனையை தூண்டுவதை, அதுகுறித்து ஆழமான பார்வயை அவர் பதிவு செய்கிறார். ஃபேஸ்புக்கிலும் அவ்வபோது எழுதுகிறார். இருந்தாலும் அவை புத்தகமாகவோ அல்லது ஏதேனும் ஓர் வலைத்தளத்திலோ பதிவு செய்யப்பட வேண்டும். மே 17 இயக்கத்தினை சேர்ந்த திருமுருகன் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு பேச்சாளர். மிகச்சரியான சமயத்தில் சரியான தரவுகளை தருவதிலும், நிதானமாக அதே சமயம் தீர்க்கமாக பேசுவதிலும் வல்லவராக தெரிகிறார்.  சினிமாவில்/பாடலாசிரியர்களில் இளைஞர்களின் representative என யாருமில்லாமல்தான் இருந்தது. நா.முத்துக்குமார் ஓரளவிற்கு அதை ஈடு செய்து கொண்டிருந்தபோது தடாலடி வருகை தந்த மதன் கார்க்கி மிக முக்கியமான பாடலாசிரியராக உருவாகி இருக்கிறார். Mail, website இத்யாதிகளின் நிஜமான அர்த்தம் புரியாமல் ஆங்காங்கே name drop போலத்தான் வாலியும், வைரமுத்துமுவே கூட எழுதி வந்தார்கள். அதை மிகச்சரியாக செய்தது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் social media, ஆராய்ச்சி மையம் என தொடர்வதால் மதன் கார்க்கிக்குத்தான் இப்போதைய இளைஞர்களின் முழு ஆதரவும் இருக்கிறது.  இவரும் புது வருகை என்பதால் காத்திருக்க வேண்டும்.

  இவர்களைத் தவிர வேறெந்த துறையிலும் இளைஞர்களின் ஆதரவு பெற்ற ஆட்கள் என யாருமில்லை. ருஷ்ய புரட்சியின் போது தாய் என்ற ஓர் நாவல் ஏற்படுத்திய மாற்றம் மிகப்பெரியது. கறுப்பின விடுதலை போராட்டத்தில் பாப் மார்லியின் பங்கு அசாத்தியமானது. ஏன், இந்தி திணிப்பு எதிர்ப்பில் கூட இதே கலைஞரின் எழுத்துகள் முக்கியமான பங்கை வகித்தது. அப்படி ஓர் எழுத்து ஆளுமையோ, அல்லது அரசியல் விமர்சகரோ, இசைக்கலைஞனோ இருந்திருந்தால் இப்போது எழுந்திருக்கும் மாணவர்  எழுச்சி பேரெழுச்சி ஆயிருக்கக்கூடும். அவ்வபோது முழு நேரம் அரசியலில் இறங்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற சில்வண்டுகள் கூட சிலிர்த்துக் கொண்டு இறங்கியிருக்கக்கூடும். நம் தலையெழுத்து. சீமான் கைமுறுக்குவதைத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

  ஆளுமைகள் இந்த காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்றோர் கருத்தும் இருக்கிறது. சேத்தன் பகத்தை கூட அப்படித்தான் செய்கிறார்கள் என்போரும் உண்டு. அப்படியாயினும் என் சமூகத்திற்கு ஓர் ஆளுமை தேவை. சமகலாத்தை ஆழ்ந்து அவதானித்து பேச, எழுத , வழிக்காட்ட ஓர் ஆளுமை தேவை. அவர் இப்போது எங்கேனும் பழுதான இயந்திரத்தை சரிப்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டே எழுதப்பட்ட தவறான code ஐ டெஸ்ட் செய்துக் கொண்டிருக்கலாம். ஏதேனும் ஓர் இயக்குனரிடம் உதவியாளராக அலைந்துக் கொண்டிருக்கலாம். ஆனால் என் தலைமுறையை இழுத்துக் கட்டப்போகும் அவரின் வருகைக்காக ஆவலோட காத்திருக்கிறேன்.37 கருத்துக்குத்து:

குழந்தபையன் on April 1, 2013 at 12:27 AM said...

ராஜூ முருகன் படிச்சாச்சு.. ஞானவேலை கவனிக்கிறேன்...

Karuppiah Thangaraj on April 1, 2013 at 12:37 AM said...

சம கால இலக்கியம் பத்தி விவாதம் நடந்தப்ப இதே சிந்தனை தோன்றியதுண்டு. சுஜாதாவிற்குப் பின்னான வழிகாட்டி வெற்றிடம் யாராலும் பிடிக்கப்படாமல் அப்படியே உள்ளது என்பது வருந்தத்தக்க செய்தி. அன்னா ஹசாரே முதல்முதலா உண்ணாவிரதம் இருந்தப்ப இளைஞர்கள் ஆதரவு தாறுமாறா கிடைச்சதே இதப்பத்தி கேட்க ஒருத்தர் வரமாட்டாரான்னு ஏங்கிக்கிட்டு இருந்தவங்களுக்கு அவர் ஒரு விடிவெள்ளியா தெரிஞ்சதுதான். அதுக்கப்புறம் லோக்பால் மசோதா நீர்த்துப்போன தனிக்கதை வருத்தமான விசயம். சுஜாதாவின் தீர்க்கதரிசனம் மாதிரி அன்றைய விவாதத்துல பேசப்பட்டது - தனியார் மயமான கல்வித்துறையால புரட்சி வந்தே ஆகணும். மிடில் கிளாஸ் மக்கள் தரமான கல்வி கிடைக்க வருங்காலத்துல கஷ்டப்படுவாங்க என்பதுதான். அச்சச்சோ... கமெண்ட் ரொம்ப நீளமாகிடுச்சு. நிறுத்திக்கறேன். அருமையான பதிவு மட்டுமல்ல ரொம்ப அவசியமான பதிவும் கூட. நன்றி பாவா. :-)

karki bava on April 1, 2013 at 12:43 AM said...

கருப்பையா,

பெருசானா பரவாயில்லை. அதுதான் பிளாகின் ப்ளஸ் பாயிண்ட்.

புரட்சின்னு ஒண்ணு வந்தா அதுக்கு நிச்சயம் மிடில் கிளாஸின் ஆதரவு தேவை. அப்படின்னா அவஙக்ளுக்கும் இந்த சிஸ்டம் வலிய தரணும், அது கல்வியா இருக்கலாம். அல்லது வேறொரு காரணமா இருக்கலாம்.

ஃப்ரென்ச் புரட்சி, ருஷ்ய புரட்சி வந்தப்ப ரெண்டே விதமான மக்கள்தான். மன்னர்,பிரபுக்கள் & கோ Vs மற்ற்வர்கள். ருஷ்யாவில் தொழிலாளர்கள் Vs முதலாளிகள். இப்போது இடைப்பட்ட சமூகம் வந்து விட்டதால் கதையே வேற

Silampuselvan S on April 1, 2013 at 1:04 AM said...

ஞாநி என்றால் சூட்கேஸ் விஷயம் தான் பலரின் கருத்தாக இருக்கிறது.
அது பற்றி விளக்க முடியுமா?

Silampuselvan S on April 1, 2013 at 1:04 AM said...

ஞாநி என்றால் சூட்கேஸ் விஷயம் தான் பலரின் கருத்தாக இருக்கிறது.
அது பற்றி விளக்க முடியுமா?

dinesh.88560 on April 1, 2013 at 1:46 AM said...

திருமுருகன் காந்தி என் சாய்ஸ்...ஆனால் நம் சமூகத்தில் ஒரு இணைப்பு கண்ணி அறுபட்டு விட்டதாக எனக்கு தோன்றுகிறது...இங்கு சமூக ஆர்வலர்கள் இயங்குகிறார்கள்..ஆனால் சம்பந்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே அவர்களைத் தெரிகிறது...ஊடகங்களும் புதியதலைமுறையைத் தவிர வேறு யாரும் உண்மையை உரக்க சொல்வதில்லை...ஒரு ஐந்து முதல் பத்து வரை சமூகம் மட்டுமே இதை பற்றி யோசிக்கின்றனர்...மற்றவர்?????

சு.ப.உதயகுமார், முத்துக்கிருஷ்ணன் போன்றோரும் குறிப்பிடதகுந்தவர்கள்...

சுபவீ திமுகவால் அழிந்துவிட்டார்...

தியாகு ஈழ விடயத்தில் அருமை...மற்ற விஷயத்தில் தெரியவில்லை....

டாக்டர்கள் போல இதுவும் ஸ்பெஷலிட்டி சார்ந்து அமைந்துவிட்டது

அனுஜன்யா மும்பை on April 1, 2013 at 1:56 AM said...

90 களுக்கும் இப்போதும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதும் ஒரு காரணம் கார்க்கி.

அப்போது இன்டர்நெட் இல்லை. சுஜாதா தான் ஆலையில்லா ஊரின் இன்டர்நெட்.
அப்போது சோசியல் மீடியா இல்லை. தொலைக்காட்சிப் பெட்டி இந்த அளவு ஆக்கிரமிக்கவில்லை. அச்சு ஊடகம் ஆட்சி செலுத்தியது. சுஜாதாவின் மேல் குவி மையம் (சரிதானே?) சுலபமாக கவிந்தது.

மற்றொரு விஷயம் - அரசியல் சரிநிலை. அப்போது இந்த அளவு யாரும் அரசியல் சரிநிலை பற்றி கவலைப்படவில்லை. இப்போது இணையம், சோசியல் மீடியா உபத்திரவங்களால் தங்கள் கருத்து சொல்லவே நிறைய பேர் பயப்படுகிறார்கள். தமிழுலகம் துண்டு துண்டாக பிளவுபட்டு நிற்கிறது. ஒரு பக்கம் சாதி; மறு பக்கம் வர்க்கம்; இன்னொரு பக்கம் இனம்; வேறொரு பக்கம் ஈழம்; மற்றொரு பக்கம் தேசியம்; மேலும் பெண்ணியம்; இவற்றையெல்லாம் பேலன்ஸ் (இந்த வார்த்தைப் பிரயோகத்திற்கே கறுப்புக் கோடி காண்பிப்பார்கள்) செய்பவருக்கு ஹாஸ்ய உணர்வு எப்படி இருக்கும். இளைஞனின் மனோபாவம் எப்படி வரும்?

மேலும் இன்றைய இளைஞர்கள் தமிழ் படித்தது மிகவும் குறைவு என்று நினைக்கிறேன். பத்திரிகைகள் முன்பு தமிழ் வாசிப்பில் பெரும் பங்கு வகித்தன. விளையாட்டுப் போட்டிகளும் (குறிப்பாக கிரிக்கெட், டென்னிஸ், EPL - பை த வே, உனக்கு Man U பிடிக்குமா?), உலக சினிமாக்களும், சமூக வலைத்தளங்களும் தமிழை ஒரு மூலையில் தள்ளி வைத்து விட்டதென்றும் தோன்றுகிறது. இட் ஈஸ் நாட் கூல் என்று நவீன யுவன்களும் யுவதிகளும் நம்புகிறார்கள்.

எழுத்தில் ஒரு துள்ளல் இருக்க வேண்டும். சமூகப் பொறுப்பு துருத்திக் கொண்டில்லாமல்
ஊடாட வேண்டும். அந்த ஆளுமை காட்சி ஊடகத்திலும் கலக்க வேண்டும். நிறைய நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். தொழில் நுட்பம் அறிந்திருக்க வேண்டும். அடிப்படை நேர்மை இருக்க வேண்டும். இளைஞர்கள் மேல் உண்மையான அக்கறை இருக்க வேண்டும். ஒரு ஃபேவரிட் அங்கிள் அல்லது அண்ணனிடம் பேசும் உணர்வு இளைஞர்களுக்கு வர வேண்டும். இதை எழுதும் போதே பெண்ணியவாதிகள் ஏன் ஆன்ட்டி அல்லது அக்கா என்று சொல்லவில்லை என்று கேட்பார்களோ என்ற பயமும் வருகிறது.

அதே சமயம் தமிழ் இணையம் மற்றும் இலக்கிய உலகம் crab mentality யைக் கைவிட வேண்டும். எதையும் கொண்டாடக் கூடாது; பெரும்பான்மைக்கு உச்சம் என்று தோன்றுவதை துச்சம் என்று துப்ப வேண்டும் என்பது ஒரு பொது விதி இங்கு.

நிறைய விஷயம் இருக்கிறது. தமிழ் உலகம் மட்டுமில்லை. மற்ற மொழிகளையும் ஆங்கிலம் அவ்வளவு ஆக்கிரமிக்கிறது.

சிந்தனையைத தூண்டும், கோரும் கட்டுரை. உன் மேலே கூட எனக்கு நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. இப்பவும் ஒரு மாதிரி இருக்கு.

karthi on April 1, 2013 at 2:28 AM said...

தலைவா!! டைம் டு லீட் ?

karthi on April 1, 2013 at 2:38 AM said...

அருமையான கட்டுரை !!

Pulavar Tharumi on April 1, 2013 at 3:26 AM said...

அருமையான பதிவு! நம் கல்வி முறை மக்களை சொந்தக்காலில் நிற்க சொல்லித்தருவதில்லை. இந்தக் கல்வி முறையை வைத்துக்கொண்டு தலைவர்களை எதிர்பார்ப்பது கஷ்டம். பொதுவாக இக்கட்டான சூழ்நிலைகளில் தான் சிறந்த தலைவர்கள் உருவாகுவார்கள். இப்போது நம் நாடு கிட்டத்தட்ட அந்த சூழ்நிலையில் தான் இருக்கிறது.

David Jebaraj on April 1, 2013 at 6:06 AM said...

தலைவர்கள் வாய்ப்பதரிது. தமிழனை உரிமையோடு திட்ட, தமிழனும் கோபப்படாமல் இருந்த தலைவர் பெரியார். அவருக்கடுத்து எம்.ஆர்.ராதா என்றொரு பேச்சுண்டு. அச்சு ஊடகங்கள், சினிமா, தொலைக்காட்சி கடந்து நமக்கு வாய்த்திருக்கும் பொன்னான ஊடகம் ' சோஷியல் நெட்வொர்க்'. கட்டுபாடற்ற சுதந்திரம், இதுவரை உள்ள எந்த ஊடகமும் தரவியலாத வீச்சு, எவ்வித பேதமுமின்றி ஒலிக்கும் குரல் என பல சாதகங்களிருந்தும் அவற்றை வைத்து சாதிக்க, அனைத்துமறிந்த தன்னலமற்ற வழிநடத்துனரில்லாதது வருத்தமே!!

David Jebaraj on April 1, 2013 at 6:07 AM said...

தலைவர்கள் வாய்ப்பதரிது. தமிழனை உரிமையோடு திட்ட, தமிழனும் கோபப்படாமல் இருந்த தலைவர் பெரியார். அவருக்கடுத்து எம்.ஆர்.ராதா என்றொரு பேச்சுண்டு. அச்சு ஊடகங்கள், சினிமா, தொலைக்காட்சி கடந்து நமக்கு வாய்த்திருக்கும் பொன்னான ஊடகம் ' சோஷியல் நெட்வொர்க்'. கட்டுபாடற்ற சுதந்திரம், இதுவரை உள்ள எந்த ஊடகமும் தரவியலாத வீச்சு, எவ்வித பேதமுமின்றி ஒலிக்கும் குரல் என பல சாதகங்களிருந்தும் அவற்றை வைத்து சாதிக்க, அனைத்துமறிந்த தன்னலமற்ற வழிநடத்துனரில்லாதது வருத்தமே!!

காசி - Kasi Arumugam on April 1, 2013 at 7:07 AM said...

தெளிவான பார்வை.

karki bava on April 1, 2013 at 10:10 AM said...

@அனுஜன்யா,

சுஜாதா இப்போது இருந்திருந்தாலும் தனித்தன்மையோடு இருந்திருப்பார். டெக்னாலஜியை எப்படி சுவார்ஸ்யமாய் ப்யன்படுத்துவது என பாடம் எடுத்திருப்பார். ஒரு முறை எழுதியது நினைவிருக்கிறதா? நாம் இன்னமும் அச்சு ஊடகத்தில் எழுதிய கதை/கட்டுரைகளை இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறோம். இணைய வசதிகளை கிஞ்சித்தும் பயன்படுத்துவதில்லை நாம்.

நான் ஆர்சனல் ரசிகன். ஹான்ரி என்றால் கொள்ளைப் பிரியம்

நீங்கள் சொன்னது போல் நாம் துண்டு துண்டாகத்தான் கிடக்கிறோம். ஒரே தலைமை/ஆளுமை என்பது சாத்தியமில்லை என்பதால் தான் முக்கியமான துறைகளை குறிப்பிட்டு அதில் நம்பிக்கைகளை சொல்லியிருக்கிறேன். மிக முக்கியமான எழுத்து/அரசியலில் இருக்கும் வெற்றிடம்தான் ஏமாற்றத்தையும் கோவத்தையும் ஒரு சேர தருகின்றன.

karki bava on April 1, 2013 at 10:13 AM said...

@தினேஷ்,

மிகச்சரி.

@புலவர் தருமி,
தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பார்கள். இருப்பாரு சார்.. :))

@டேவிட்,
புரட்சி எல்லாம் வந்துவிடாது. ஆனால் அது போன்றதொரு நிகழ்வு இணைய ஊடகம் வழியாகத்தான் சாத்தியம் என நானும் நினைக்கிறேன்.

@சிலம்புசெல்வன்,
அவர் அதிமுக அரசிடம் பெட்டி வாங்கிக்கொண்டு கலைஞரை திட்டிக் கொண்டே இருந்தார் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. உண்மையா என தெரியவில்லை. ஆனால் அவர் மேல் யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதாகத்தான் தெரிகிறது

premkhumar on April 1, 2013 at 10:35 AM said...

ஜி. ஆர். சுரேந்திரநாத் எப்படி?

யுவகிருஷ்ணா on April 1, 2013 at 11:14 AM said...

அறிவுபூர்வமான மொழியில் ஒரு மொக்கை கட்டுரை. சாரி கார்க்கி :-)

பிரபல பதிவர் on April 1, 2013 at 11:43 AM said...

ஒண்ணு... இந்த பதிவு தலைவா படத்துக்கான மொக்க முன்னோட்டமா இருக்கணும்....

இல்லாட்டி இதுவரை குஜிலிகும்பான் கவிதைகள படிக்காம இருந்திருக்கணும்.....படிச்சிருந்தா இந்த சந்தேகமே வந்திருக்காது.....

Sathish.. on April 1, 2013 at 5:46 PM said...

@யுவகிருஷ்ணா:

அண்ணே மன்னிக்கவும்..நீங்க தான் சரியான மொக்க போல..இங்கயும் உங்களுக்கு அரசியல் வேணும் இல்ல...!!??;-)))

வெண்பூ on April 1, 2013 at 6:51 PM said...

//
யுவகிருஷ்ணா said...

அறிவுபூர்வமான மொழியில் ஒரு மொக்கை கட்டுரை. சாரி கார்க்கி :-)
//

க‌ரெக்ட் யுவா, யார் யாரோ திருமுருக‌ன், ராஜூ முருக‌ன், ம‌த‌ன் கார்க்கி ப‌ற்றி எல்லாம் எழுதியிருக்கிற‌ கார்க்கி, உங்க‌ பேரை எழுத‌லைன்னு ப‌திவு ப‌டிக்கும்போதே என‌க்கும் தோணின‌து ..

Raju N on April 1, 2013 at 10:26 PM said...

நிச்சயமாக அச்சு இதழில் வந்திருக்க வேண்டிய கட்டுரை!

Vijayashankar on April 2, 2013 at 10:31 AM said...

wow!

யுவகிருஷ்ணா on April 2, 2013 at 11:13 AM said...

//க‌ரெக்ட் யுவா, யார் யாரோ திருமுருக‌ன், ராஜூ முருக‌ன், ம‌த‌ன் கார்க்கி ப‌ற்றி எல்லாம் எழுதியிருக்கிற‌ கார்க்கி, உங்க‌ பேரை எழுத‌லைன்னு ப‌திவு ப‌டிக்கும்போதே என‌க்கும் தோணின‌து ..//

வெண்பூ சார், சும்மாங்காட்டியும் போலியா சூப்பர், கலக்கிட்டீங்கன்னு பின்னூட்டம் போட்டு ஏத்திவிட்டுட்டு, அப்புறம் சான்ஸு கிடைக்கிறப்போ எறக்கி குப்புறப்போட்டு அடிக்கிற வாடிக்கை நமக்கு இல்லைங்க :-)

கமெண்டு போட்டா அது genuine கமெண்டுதான் :-)

இந்தப் பதிவு ஒரு ‘நல்ல’ டெம்ப்ளேட் பதிவு. மத்தப்படி வெயிட்டான, புதுசான மேட்டர் எதுவுமில்லே அவ்ளோதான்...

’நல்ல’ என்று வருவதால் வேணுமின்னா உங்க பெயர் இடம்பெறலாம். நானெல்லாம் கெட்டப்பய காளி சார்...

வெண்பூ on April 2, 2013 at 7:28 PM said...

இப்ப‌டி த‌ங்க‌ளோட‌ த‌வ‌றுக‌ளை சுட்டிக்காட்டி ச‌ரியான‌ வ‌ழியை தேர்ந்தெடுக்க‌ வெக்குற‌ ஒரு Genuine Personality இல்லைன்ற‌துதான் இந்த‌ ப‌திவோட‌ அடிநாத‌மே. அது த‌வ‌று, அப்ப‌டி ஒரு வெற்றிட‌ம் ஏற்ப‌டாதுன்னு தெளிவா சொல்லிட்டீங்க‌ யுவ‌கிருஷ்ணா.. பாராட்டுக‌ள்

குரங்குபெடல் on April 4, 2013 at 9:01 AM said...


"யுவகிருஷ்ணா said...

நானெல்லாம் கெட்டப்பய காளி சார்... "


அட . . .எல்லாருக்கும் தெரிஞ்சது . . .உங்களுக்கும் தெரியுது . . .

லிஸ்ட்ல கவிதாயினி கனிமொழி பேர் விடுபட்டதால்யுவ கிருட்டினனுக்கு புடிக்கலை போல

Bricksnsand on April 5, 2013 at 2:14 PM said...

நல்ல எழுதிருக்கீங்க, வாழ்த்துக்கள்

amas on April 5, 2013 at 2:50 PM said...

Very impressed by this particular post!சுஜாதாவின் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை என்பது தான் நிதர்சனம். என் மகன் பள்ளியில் தமிழ் தான் இரண்டாம் பாடமாக எடுத்திருந்தான்.விகடன் குமுதம் படிக்கும் ஆர்வம கிடையாது. ஹிந்துவில் விளையாட்டுப் பக்கமும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் மட்டுமே படிப்பவன். அவனை ஈர்த்தவர் சுஜாதா. இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மட்டும் இல்லை அவர்கள் லெவலலில் நின்று அறிவுரை சொல்லாதது மாதிரி சொல்லி புரியவைத்தார். அவர் திரைப் படங்களின் எழுதிய வசனமும் கற்றதும் பெற்றதும் போன்ற தொடர்களில் சொல்லியதும் அனைத்தும் இளைஞர்கள் மொழியில் இருந்தது தான் அவரது வெற்றி.

amas32

"ராஜா" on April 6, 2013 at 3:42 PM said...

//இவர்களைத் தவிர வேறெந்த துறையிலும் இளைஞர்களின் ஆதரவு பெற்ற ஆட்கள் என யாருமில்லை

டாக்குட்டர் கூடவா?

// ஆனால் என் தலைமுறையை இழுத்துக் கட்டப்போகும் அவரின் வருகைக்காக ஆவலோட காத்திருக்கிறேன்.

போன தலைமுறையை இழுத்து கட்டுனது யாரு? இழுத்து கட்டுற அளவுக்கா தமிழன் தள்ளாடிக்கிட்டு இருக்கான்...


kuthu on April 7, 2013 at 4:09 PM said...

நாக சொக்கன்னு ஒருத்தர் எழுதுறார். அருமை. அடுத்த சுஜாதா அவர்தான்

chinnapiyan on April 7, 2013 at 5:09 PM said...

ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் நல்லது நடக்க வேண்டுமென்று எழுதிவிட்டீர்கள்.நம் ஒற்றுமையின்மைக்கும் கலாச்சார சீரழிவுக்கும் முக்கிய காரணமே சர்வதேச கார்போரேட்களும், அடிமையான சுயநல அரசியல்வாதிகளும் அரசாங்கமுமேதான்.ஜாதி மதம் கட்சிகள் என்று பிரித்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் அரசியல்வாதிகளும் பெரும்பணக்காரர்களுமே. புதியதாக ஒன்று கொண்டுவந்து மக்களை பிரித்துக்கொண்டிருப்பது கார்பொரேட் கம்பெனிகள்தான். அதுதான் Status Symbal. அதிக விலையில் பொருட்களை வாங்கவைத்து மக்களிடையே ஒரு போலி கவுரவத்தை உண்டு பண்ணி சமுதாய ஏற்ற தாழ்வுகளை சைலண்டாக பரப்பிவருகிறார்கள். பிளாட்பாரத்தில் ஒரு தொழிலாளி விற்கும் நூறு ரூபாய் செருப்பு, லட்சன்க்கனக்கில் விளம்பரம் செய்து அதை ஆயிரயம் ரூபாய்க்கு பிராண்டட் செருப்பு என்று வாங்க வைத்து, முடியாதவர்களை ஏங்க வைத்து விடுகின்றனர்.நூறு ரூபாய்க்கு எல்லா வகையான பனியன்களை திருப்பூரில் வாங்கிவிடமுடியும் ஆனால அதே பனியன்களை ஐநூறு ரூபாய்க்கு Levis என்று போட்டு விற்றுவிடுகிராகள்.உணவு பொருட்கள் குளிர்பானங்கள் திரும்ப திரும்ப வாங்கவேண்டுமென்று பல விதமான போதை ரசாயனங்களை சேர்க்கிறார்கள். அடுத்து use and throw வகை பொருட்கள். new Model, Updated, UpGraded verson என்று புதுசுபுதுசா சந்தையில் அறிமுகமாக்கி ஓயாமல் விளம்பரப்படுத்தி மக்களை வாங்க வைத்துவிடுகிறார்கள்.அதாவது பெரும்பான்மையான மக்களை ஏங்க வைத்துவிட்டு அதிலேயே சுழல விட்டுவிடுகிறார்கள்.லஞ்சபணத்தை வாங்கிக்கொண்ட அரசியல்வாதிகள், எல்லாருக்கும் எல்லா பொருட்களும் கிடைக்கிறது. இது தாராள பொருளாதார மயமாக்களின் வெற்றி என்று பசப்பி வருகிறார்கள். முதலில் இந்த மறைமுகமான தாக்கத்தை விட்டு வெளிவரவேண்டும். அதற்க்கு உடனடி சாத்தியமில்லை. எப்பேர்ப்பட்ட தியாகியும் முன்வந்து போராடினாலும் அதை சீர்குலைத்து நமத்து போகத்தான் இருக்கு இன்றைய சூழ்நிலை.பிரஞ்சு புரட்சி மாதிரி வந்தால்தான் மாற்றம் வரும். அது எப்போ வரும் என்றால் 60 விழுக்காடு மக்கள் இருவேளை சாப்பாடு இல்லாமல் தவிப்பார்களே அப்போது நிச்சயம் வரும். அதுவரை எழுச்சிமிக்க எழுத்தாளர்களோ இலக்கியமோ சாத்தியமில்லை.நன்றி

Shanmuganathan on April 8, 2013 at 12:21 AM said...

சகா,
எனக்கு பதிவு சுத்தமா புரியலை. சுஜாதாவிற்கும் சமுதாயத்திற்கும் என்ன சம்மந்தம். ஜாவா படித்தவர்கள்தான் சமுதாயம் என்கிரீற்களா? நானும் சுஜாதாவை ஓரளவேனும் படித்திருக்கிறேன். ஒரு கடுமையான சமுதாயம் சார்ந்த கட்டுரை எழுதியதாக நினைவே இல்லை. பிறகு எந்த துறையில் உங்களுக்கு தலைவர் வேண்டும் ? எல்லா துறையிலும் ஒருவரே என்றால், சுஜாதாவின் ஒரு கதையில் வருமே எல்லா துறையும் பற்றிவிலாவாரியாக ஒரு மணப்பெண்ணிடம் பேசி ஒரு மாப்பிள்ளை வின்வெளியில் பறந்து சென்று விடுவான். தவறாக எழுதியிருந்தால் மண்ணிக்கவும்! புரியாமல் தான் இப்படி...

Anonymous said...

first.. sorry for writing in English.

Your post is good n useful. You said correctly about charu, jeymohan etc, especially Jeymohan-he is anti-Tamil and he should be ignored.

S.Ravi
Kuwait

A Simple Man on April 10, 2013 at 10:15 PM said...

is this April 1st post ?

Uma on April 11, 2013 at 11:48 AM said...

அருமையான ஆதங்கத்தோடு கூடிய அலச்ல்!வாழ்த்துக்கள் கார்க்கி!
”என் தலைமுறையை இழுத்துக் கட்டப்போகும் அவரின் வருகைக்காக ஆவலோட காத்திருக்கிறேன்”.--நிஜமாகவே இந்ததலைமுறையினரை நினைத்து நினைத்து பெருமைப்பட்டேன்.வீணே வீழ்ந்துவிடாமல் பெரு சக்தியாக உருவெடுக்கும் திறன் உள்ளது.சக்தியை குவியச்செய்யும் ஆற்றல்பெற வாழ்த்துக்கள்!

கவியாழி கண்ணதாசன் on April 13, 2013 at 8:50 AM said...

அருமையான பதிவு!

kailash on April 22, 2013 at 1:22 PM said...

Why to blame writers and lyricists ? Most of us doesnt know who is our councillor/mla/mp but we will talk about global warming , english premier league etc for 1 hour ? To know whats happening in our place let us read newspapers and listen to news first and slowly it will motivate us to books and automatically we will get writers who knows the mind of people

மாற்றுப்பார்வை on May 14, 2013 at 9:07 PM said...

ரசித்தேன்...

 

all rights reserved to www.karkibava.com