Apr 1, 2013

வெற்றிடம்

37 கருத்துக்குத்து

90களின் ஆரம்பம் என நினைக்கிறேன். சுஜாதா ஜாவா பற்றி எழுதுகிறார். “எல்லோரும் கைகளில் இருக்கும் பொருட்களை அப்படியே  போட்டுவிட்டு போய் ஜாவா படியுங்கள். பிழைத்துக் கொள்ளலாம்” என்கிறார். அப்போதிலிருந்து இன்று வரை ஜாவா படித்தவர்கள் பிழைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுவும் அவர் சொன்னபடி போட்டதை போட்டபடி விட்டுவிட்டு போய் படித்தவர்கள் ஜாம் ஜாம் என வாழ்கிறார்கள். சுஜாதா போல சமகாலத்தை ஆழ்ந்து கவனித்தவர்கள், எழுதியவர்கள் தமிழ் மக்களில் யாருமில்லை என்பது என் துணிபு. நிற்க.இது சுஜாதா பற்றிய yet another கட்டுரை இல்லை.

2011ல் அண்ணா பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு விவாத போட்டிக்கு அழைத்திருந்தார்கள். அப்போது நான் கொடுத்த தலைப்பு “இக்கால மாணவர்கள் ஆங்கிலத்தையே அதிகம் விரும்பி படிக்க காரணம் தமிழில் அவர்களுக்கு ஏற்ற எழுத்தாளர்கள் இல்லாததா, அல்லது மொழியை வளர்த்துக் கொள்ள மட்டுமே அவர்கள் படிப்பதாலா”.

  யாரும் உடனே பேச தயாரில்லை. ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். 20 நிமிட தயாரிப்புக்கு பின் பேசிய எல்லோருமே வள்ளுவனையும், கம்பனையும், (சிலர் பாலகுமாரனையெல்லாம் சொன்னார்கள்), சுஜாதவையும் குறிப்பிட்டு இவர்கள் சொல்லாததையா ஆங்கில எழுத்தாளர்கள் சொல்கிறார்கள் எனக் கேட்டார்கள். முடிவில், இக்காலத்தில் உங்களை கவர்ந்த எழுத்தாளர் யார் என தனித்தனியே கேட்டபோது உயிரோடு இருக்கும் எந்த எழுத்தாளரின் பெயரும் வரவில்லை. ஆங்கிலத்தில் பெரும்பாலும் சேத்தன் பகத், அரவிந்த் அடிகா, அருந்ததி ராய் என்றார்கள்.என் பிரச்சினை இதுதான். 80,90களின் இளைஞர்களுக்கு கல்வி, தொழில்நுட்பம், சினிமா, எழுத்து என பலத்துறைகளில் நல்லதோர் வழிகாட்டியாக சுஜாதா இருந்தார். அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து அலசவும் ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகள் இருந்திருக்கிறார்கள். அதற்கும் முன்னால் திராவிட கட்சிகளில் பலர் இருந்திருக்கிறார்கள். பதின்ம வயதில் இலக்கிய தாகத்தோடு இருந்த ஜ்யோவ்ராம் சுந்தர் போன்றோரிடம் பேசினால் 90களில் இலக்கிய உலகம் எத்தனை அடர்த்தியாக இருந்தது என புரிந்துக் கொள்ள முடியும். அதற்கும் கூட இப்போது வழியில்லை என்பதுதான் நிதர்சனம். இந்தக்கால இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்க்கை புரிந்து, தேவை புரிந்து பதிவு செய்ய யாரும் இல்லை. இலக்கியம், அரசியல், சமூக பிரச்சினைகள், கல்வி, பொழுதுபோக்கு என எல்லா துறைகளிலுமே தமிழ்ச்சமூகம் படைப்பாளிகள்/ஆளுமைகள் விஷயத்தில் பின் தங்கியுள்ளதாகத்தான் நான் நினைக்கிறேன்.

எழுத்தாளர் மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு முறை சொன்னார் “இந்த கால பசங்களுக்கு ஒன்றரை ஸ்க்ரோல் தான் கணக்கு. அதுக்கு மேல எழுதினா ரைட் டாப்ல போய் X க்ளிக்கிட்டு போய்ட்டே இருப்பான்”. இதை மிக முக்கியமான observation ஆக நான் பார்க்கிறேன். சென்ற வாரம் கூட ட்விட்டரில் ஒருவர்(@ikrishs) சொன்னார் “next பட்டன் பயன்படுத்தாம,பிடிச்ச பாட்டோட பிடிச்ச பார்ட்டை திருப்பிகேக்காம, கடனே ன்னு headset ஐ மாட்டிட்டு பாட்டு கேக்கறாங்க”. யோசித்து பார்த்தால் பெரும்பாலானோர் இப்படித்தான் இருக்கிறார்கள். இது போன்ற சமகால இளைஞர்களின் பழக்கங்களை கவனித்து எழுத ஓர் எழுத்தாளர் இல்லை. ராயர் கஃபே, மூன்று விரல் படித்துவிட்டு இரா.முருகனை அப்படி நினைத்ததுண்டு. பின்னர் காணாமல் போய்விட்டார். சாருவையெல்லாம் கணக்கிலே எடுத்துக் கொள்ள முடியாது. ஜெயமோகனின் அரசியல்  சார்புடையது. விஷமத்தனமானது. அவரது புனைவுகளை வேண்டுமானால் இக்காலத்தின் இலக்கிய உச்சமாக கொள்ளலாம்.  

 இதுக்குறித்து சிலருடன் பேசியபோது இளைமயாக இருப்பதாலோ என்னவோ ராஜூ முருகனை பலர் முன் மொழிந்தனர். எனக்கு வட்டியும் முதலும் பிடித்த தொடர்தான். ஆனால் அவரும் “அந்தக்காலத்துல” என பழங்கதை தான் பேசிக்கொண்டிருக்கிறார். முதல் பால் சிக்ஸ் அடித்துவிட்டதால் உத்தப்பா போல அதே ஷாட்டை ஆடத்தான் விரும்புகிறார். அல்லது விகடன் விரும்புகிறது. அதை அவர் உடைக்க தயாரில்லை என்னும்போதே அவர் வீழ்ந்துவிடுகிறார். இளைஞர்களில் எனக்கு த.செ.ஞானவேலை மிகவும் பிடிக்கும். பிரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை என்ற அற்புதமான புத்தகத்தின் மொழி வடிவம் இவருடையதுதான். பயணம் படத்தின் வசனகர்த்தா இவர். கூர்ந்து அவதானிப்பதில் இவர் பலே என யோசித்ததுண்டு. ஆனால் சினிமாவின் பால் கொண்ட காதலால் அதற்கான முஸ்தீபுகளில் தொலைந்து போயிருக்கிறார். ஞாநி என்றால் சூட்கேஸ் விஷயம் தான் பலரின் கருத்தாக இருக்கிறது.  தொலைக்காட்சிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காலம் என்பதால் அதை கொஞ்சம் பார்த்தேன். மனுஷ்யபுத்திரன் இதில் மிக முக்கியமான சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறார். உருப்படியான விவாதம் நடக்கும் ஒரே இடமான புதிய தலைமுறை நிகழ்ச்சிகளில் அவரின் கருத்துகளும், வேகமும் ஓர் பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க இயலாது. மாற்றுக்கருத்து எல்லா விஷயங்களில் இருந்தே  தீரும். நான் சொல்வது, ஓர் பிரச்சினையை பற்றிய சிந்தனையை தூண்டுவதை, அதுகுறித்து ஆழமான பார்வயை அவர் பதிவு செய்கிறார். ஃபேஸ்புக்கிலும் அவ்வபோது எழுதுகிறார். இருந்தாலும் அவை புத்தகமாகவோ அல்லது ஏதேனும் ஓர் வலைத்தளத்திலோ பதிவு செய்யப்பட வேண்டும். மே 17 இயக்கத்தினை சேர்ந்த திருமுருகன் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு பேச்சாளர். மிகச்சரியான சமயத்தில் சரியான தரவுகளை தருவதிலும், நிதானமாக அதே சமயம் தீர்க்கமாக பேசுவதிலும் வல்லவராக தெரிகிறார்.  சினிமாவில்/பாடலாசிரியர்களில் இளைஞர்களின் representative என யாருமில்லாமல்தான் இருந்தது. நா.முத்துக்குமார் ஓரளவிற்கு அதை ஈடு செய்து கொண்டிருந்தபோது தடாலடி வருகை தந்த மதன் கார்க்கி மிக முக்கியமான பாடலாசிரியராக உருவாகி இருக்கிறார். Mail, website இத்யாதிகளின் நிஜமான அர்த்தம் புரியாமல் ஆங்காங்கே name drop போலத்தான் வாலியும், வைரமுத்துமுவே கூட எழுதி வந்தார்கள். அதை மிகச்சரியாக செய்தது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் social media, ஆராய்ச்சி மையம் என தொடர்வதால் மதன் கார்க்கிக்குத்தான் இப்போதைய இளைஞர்களின் முழு ஆதரவும் இருக்கிறது.  இவரும் புது வருகை என்பதால் காத்திருக்க வேண்டும்.

  இவர்களைத் தவிர வேறெந்த துறையிலும் இளைஞர்களின் ஆதரவு பெற்ற ஆட்கள் என யாருமில்லை. ருஷ்ய புரட்சியின் போது தாய் என்ற ஓர் நாவல் ஏற்படுத்திய மாற்றம் மிகப்பெரியது. கறுப்பின விடுதலை போராட்டத்தில் பாப் மார்லியின் பங்கு அசாத்தியமானது. ஏன், இந்தி திணிப்பு எதிர்ப்பில் கூட இதே கலைஞரின் எழுத்துகள் முக்கியமான பங்கை வகித்தது. அப்படி ஓர் எழுத்து ஆளுமையோ, அல்லது அரசியல் விமர்சகரோ, இசைக்கலைஞனோ இருந்திருந்தால் இப்போது எழுந்திருக்கும் மாணவர்  எழுச்சி பேரெழுச்சி ஆயிருக்கக்கூடும். அவ்வபோது முழு நேரம் அரசியலில் இறங்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற சில்வண்டுகள் கூட சிலிர்த்துக் கொண்டு இறங்கியிருக்கக்கூடும். நம் தலையெழுத்து. சீமான் கைமுறுக்குவதைத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

  ஆளுமைகள் இந்த காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்றோர் கருத்தும் இருக்கிறது. சேத்தன் பகத்தை கூட அப்படித்தான் செய்கிறார்கள் என்போரும் உண்டு. அப்படியாயினும் என் சமூகத்திற்கு ஓர் ஆளுமை தேவை. சமகலாத்தை ஆழ்ந்து அவதானித்து பேச, எழுத , வழிக்காட்ட ஓர் ஆளுமை தேவை. அவர் இப்போது எங்கேனும் பழுதான இயந்திரத்தை சரிப்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டே எழுதப்பட்ட தவறான code ஐ டெஸ்ட் செய்துக் கொண்டிருக்கலாம். ஏதேனும் ஓர் இயக்குனரிடம் உதவியாளராக அலைந்துக் கொண்டிருக்கலாம். ஆனால் என் தலைமுறையை இழுத்துக் கட்டப்போகும் அவரின் வருகைக்காக ஆவலோட காத்திருக்கிறேன். 

all rights reserved to www.karkibava.com