Mar 20, 2013

தமிழக அரசியல்வாதிகளின் ஜாதக பலன்கள்

5 கருத்துக்குத்து

  கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கும் எல்லா வருங்கால முதல்வர்களும் வாக்காளர்களை நம்புவதை விட ஜோசியர்களையே அதிகம் நம்பும் காலமிது. போதாதென்று வாண்ட்டடாக வண்டியிலேற காத்திருக்கும் எல்லா  தளபதிகளும் ராசி எண்படிதான் டோக்கனே வாங்கி வைத்திருக்கிறார்களாம். “நான் நம்பர நம்புரவன் இல்லை. நண்பர நம்புறவன்”ன்னு ரைம்ஸ் பாடிய டீ.ஆரே விஜய டீ.ஆர் ஆகி மாமாங்கம் ஆயாச்சு. போதாக்குறைக்கு புள்ளைய வேற STR ஆக்கிட்டாரு. செல்ஃபோனுக்கு தேவை டவரு. பவருக்கு தேவை கவரு என கவரின் பவரை பவர் மட்டுமே புரிஞ்சு கவர் பண்ணிட்டு இருக்காரு. இந்த சூழ்நிலையில் யார் யார், எந்த சாமியை கும்பிடணும். என்ன பரிகாரம் பண்ணனும்ன்னு ஒரு போஸ்ட் அடிச்சு விட்டா ஹிட்ஸ் வருதோ இல்லையோ. இகுக, மகககன்னு ஏதாச்சும் ஒரு கட்சில இருந்து  அப்பாய்னெட்மேட் கேட்டு ரிங் வரும்னு நம்பி ஆரம்பிக்கிறேன். உ லாபம். (ஆமாங்க. “ஊ”ன்னாதான் நஷ்டம்)

ஸ்டாலின்:
மொத்த தமிழகமும் இவர் மேல அதீத நம்பிக்கை வச்சிருக்கு. இவரே வேணாம்னாலும் அடுத்த தலைவர் இவர்தான்னு ஒரு டாக் இருக்கு. ஆனா பிரச்சினை என்னன்னா, திருடன் வீட்டுக்குள்ள வந்தா கூட பக்கத்து வீட்டுக்காரனா வந்து நம்மள காப்பாத்துவான்னு இவர் வெயிட் பண்றதுதான். இவர் உடனடியா கும்பிட வேண்டிய சாமி பழநி மலை முருகன். திமுக கரை போட்ட கோவணம் கிடைக்கலன்ற நொண்டி சாக்கெல்லாம் சொல்லாம உடனே கிளம்பலாம்.இவரா கோச்சிக்கிட்டு போகாதவரை இவர பெத்த சிவன் இவருக்கு முடி சூட்ட போறதில்லை. ஒரே நல்ல விஷயம் என்னன்னா, இவங்க அண்ணன் விநாயகர் அளவுக்கு நல்ல நிலைமல இல்லை. அவரு பெத்தவங்கள சுத்த ஆரம்பிச்ச நேரம், சிவனா குண்டு கல்யாணமும், பார்வதியா ஆர்த்தியும் வேஷம் கட்டியிருக்காங்க. அவருக்கு இருக்கிற ஆர்வத்துக்கும் வேகத்துக்கும் இவங்கள ஒரு தடவ சுத்தவே பல வருஷம் ஆகுன்றதால கொஞ்சம் மூச்சு விட்டுக்கலாம் ஸ்டாலின். ஆனா உடனே  பழநி மலை ஏறலைன்னா 2016 தேர்தலில் கேப்டனுக்கு டஃப் ஃபைட் கொடுக்க வேண்டிய மூன்றாவது இடத்துக்கு இவர் போனாலும் நோ ஃபிங்கர் ஆன் த நோஸ்.

ஜெயலலிதா:
இவருக்கு முன்னால நிக்குற எல்லா எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சர் ஆகனும்றது எந்த ஜோசியன் சொன்ன பரிகாரம்னு தெரில. இப்படியே போனா கடைசில எதிர்க்கட்சில சில எம்.எல்.ஏக்களை கடன் வாங்கித்தான் அமைச்சரவையே அமைக்கணும். இப்ப இவர் கும்பிட வேண்டிய சாமி “சீரியலம்மன்”. ஆப்பம் சுட்டா ஒரு எபிசோடும், அதையே திருப்பு போட்டு தோசையா சுட்டா ரெண்டு எபிசோடும் ஆக்குற வித்தையை இவங்க கத்துக்கணும். இப்பலாம் படம் ஆரம்பிச்ச முக்கால் மணி நேரம் கழிச்சுதான் கதையே ஆரம்பிக்குது.அப்படியிருக்க எல்லாமும் இப்பவே நடக்கணும்ன்னு பாபா பட வில்லனாட்டம் எதிர்பார்க்கிறது தப்பு. பொறுமைய வளர்த்துக்கணும்.தினம் 2 வேளை சீரியலம்மன தரிசிச்சா நல்லது நடக்கும். அதுக்குன்னு கொடநாட்டுல ஒரு பிரான்ச் கட்ட சொல்றது தெய்வகுத்தமா மாறலாம்.

வைகோ:
புள்ளையாரே பெருச்சாளில போறாரு,பூசாரிக்கு புல்லட் கேட்குதான்றது பழைய பழமொழியா இருக்கலாம். ஆனால் இப்ப அது ஒர்க் அவுட் ஆகாது. இவரே நடந்து போயிட்டு இருக்க, இவர் ஜெராக்ஸான நாஞ்சிலார் இன்னோவா காருல “இது ரேடியோ மிர்ச்சி. செம ஹாட் மச்சி” கேட்டுட்டு அந்த ஏசிய தட்டுறான்னு போயிட்டு இருக்காரு. இனிமேலாச்சும் கருப்பு துண்ட இவர் மாத்தலைன்னா மிச்சம் இருக்கிற சொச்ச பேரும் ஸ்கார்பியோல வந்து wanna liftன்னு கடுப்பேத்துவான். தாத்தா மஞ்சளுக்கு மாறியாச்சு. பச்சை அம்மாக்கு அலாட் ஆயிடுச்சு. சிவப்புக்கு இண்டெர்ன்நேஷனல் லெவல்ல காம்ரேடுகள் காம்பிடேஷன். ஆக இவர் தாய்தேசத்தின் ட்ரடிஷனலான ஃப்ளூரசண்ட் பக்கம் சாயுறது நல்லது. ஆரஞ்சு இவர் உயரத்துக்கு நல்லா சூட் ஆகும். எப்படியும் இவருக்கு எம்.எல்.ஏ சீட்டே ஆறோ,அஞ்சோதான் கிடைக்கும்றதால நல்லா மேட்ச் ஆகும். ஆரஞ்ச போட்டுக்கிட்ட வழக்கம் போல நடைபயணம் போனா கூட, அது ரோட்டுல வர்ற வண்டிக்கு reflector மாதிரி வேலை செய்யும்.

கேப்டன்:
ஏறி வந்த ஏணிய உதைச்சவனும்,புடுங்க வேண்டிய ஆணிய புடுங்காதவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது. காதல எதிர்க்க ஆயிரம் சங்கமிருக்கு. காதலுக்கு கூட ஒரு சங்கம் இருக்கு. ஆனா நாட்டுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிற குடிகாரர்களுக்குன்னு ஒரு சங்கம் கிடையாது. கிட்டத்தட்ட அதுல பாதி பேரு மனசார  ஏத்துக்கிட்டது கேப்டனதான். இந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாம மதுவிலக்குக்கு இவரும் ஆதரவா இறங்குறது அருள்மிகு ஜான் எக்‌ஷாவையும், எல்லாம் வல்ல நெப்போலியனையும், லார்ட் ஜானி வாக்கரையும் கோவப்படுத்தியிருக்கு. இத கேள்விபட்ட குடிசனம் “எனது கை என்னை அடிப்பதுவோ,எனது விரல் கண்ணை கெடுப்பதுவோன்னு சரத்பாபுக்கிட்ட அடிவாங்கின முத்து ரஜினி கணக்கா கலங்கி போய் நிக்குறாங்க.ஊர காக்குற அய்யணார சைவமா மாறலாமா? மந்திரம்சொல்ற அந்தணரு அசைவம் ஆகலாமா?? உடனடியா ராஜ்கிரண கூட்டிட்டு, 4 பாட்டில் சாராயத்த வாங்கிட்டு போய் பாடிகார்ட் முனிஈஸ்வரன இவர கும்பிடலைன்னா தவிச்ச வாய்க்கு கட்டிங் கிடைக்காம கடைசி காலத்துல இவர் தள்ளாடுவாரு. அப்புறம் அவர் இஷ்டம்.  என்னைக்கு குடிகாரன் நல்லத கேட்டிருக்கான்!!!

ராமதாஸ்:
நம்ப முடியாத உண்மை பொய். நம்ப முடியாத பொய் டொய்யுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இவரு சொல்ரது டொய் கூட இல்லை. ஒய், கொய், சொய்னு போயிட்டே இருக்கு. என் குடும்பத்துக்காரங்க கட்சிப்பக்கம் வரவே மாட்டாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சு இன்னைக்கு தம்ழிநாட்டுல 2.5 கோடி வன்னியர்கள் இருக்காங்குற வரைக்கும் இவர் சொன்ன எல்லாமே பொய்யுன்றது ஊருக்கே தெரியும். வெள்ளிக்கு அப்புறம் சனிதான் வரும். பாமக இனி தனியாதான் வரும்னு சொல்லி சொல்லி புளிச்ச போன வாய எந்த உப்பு இருக்கிற டூத் பேஸ்ட்டாலகூட சரி பண்ண முடியாது. பண்ருட்டி ஏலத்துல எடுத்த பலாப்பழமும், சேலத்துல விளைஞ்ச மாம்பழமும் டேஸ்ட் குறையாதும்பாங்க. அதுக்கே பங்கம் வரவைச்ச இவரு இப்ப உடனடியா போக வேண்டியது “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு. இதெல்லாமா ஒரு பரிகாரம்னு கேட்கிறத விட்டுட்டு அங்க போய் மனச விட்டு அழுது, உண்மைய சொல்லிட்டு வந்தா ஓரளவுக்காச்சும்  நல்லது நடக்க வாய்ப்பிருக்கு. இல்லைன்னா அணில் கடிச்ச கொய்யாவாட்டம் டேஸ்ட்டா இருக்கிற அய்யாவோட பையாவே போடங்கொய்யான்னு போனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. அஷ்டே

இதன் வீடியோ வடிவம்: 

Mar 10, 2013

ஆன்ம வெளி

6 கருத்துக்குத்து


ஒவ்வொருவரிடமும் இருக்கிறது - ஒரு சுவாரஸ்யமான கதை, நல்ல கவிதை, பொய்த்துப் போன உண்மையான நம்பிக்கை

நான் வலிந்துதிர்க்கும் சிறுபுன்னகை கூட போலியானது என்று புரியாதவர்களை பற்றி நான் ஏன் கவலைக் கொண்டிருக்கிறேன்??

உன் ஞாபக கற்களை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன் காலக்குடுவையை

என் காதல் தான் மெய். நீ என் விருப்பம்

தலை திருகப்பட்ட பறவையின் கடைசி துள்ளல் அடங்க காத்திருப்பது போல் உணர்கிறேன்..

வெறிச்சோடியிருக்கும் மதிய நேர கிராமத்து தெருவைப் போல கிடக்கிறது என் வாழ்வு

நீ அறியாத நான். நான் அறிந்த நீ.. இந்த இடைவெளி தவிர என்ன இருந்து விட போகிறது!

தவளைகள் கத்தாத மழையிரவின் நிசப்தத்தை ஒத்திருக்கிறது நீயில்லாத இத்தருணம்.

முதல் தூறல் எழுப்பும் மண்வாசனையை அவளின் ஒவ்வொரு துளி நினைவும் எழுப்புவதில் இருக்கிறது எங்கள் காதல்

மெல்லிய விசும்பலோடு தொடங்கி பின் பெருங்குரலெடுத்து அழுவதில் மூன்றாவது மழலையின் அழுகை..இரண்டாவது மழை.. முதலாவது உன் நினைவுகள்

நீரின் பற்றுதலை விட்ட மீனொன்றின் மரண அவஸ்தையோடு உறங்க செல்கிறேன். இந்த இரவும் நாசமாய் போகட்டும்
 

all rights reserved to www.karkibava.com