Nov 1, 2013

கோடம்பாக்கம் - டொக் டொக்

24 கருத்துக்குத்து


 15 நாட்கள் outdoor shoot முடிந்து சென்னை திரும்பியாகிவிட்டது. 15 நாட்களும் வெயிலிலே படப்பிடிப்பு. பாண்டி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் சாலையென எல்லாமே மொட்டை வெயில். காலை சில மணி நேரங்கள் மழை பெய்துவிட்டு, பின் கொளுத்தியெடுத்தபோது இந்த சூரியனை இன்னொரு எம்ஜிஆர் என்று கூட சொல்லலாம் போலிருந்தது. இதற்கு முன்னால மட்டும் நீ என்ன அஜித் கலர்லயா இருந்த என யாரும் பின்னூட்டமிடமாலிருக்க என் சோகக்கதையை தவிர்த்து விடுகிறேன்.

   என்னால் இத்தனை மணி நேரம் வேலை செய்ய முடியுமென்று எனக்கே தெரியாது. காலை 4.45க்கு காஃபி தருகிறேன் பேர்வழியென புரொடக்‌ஷன் பாய் காலிங் பெல்லை வேறேதோ என நினைத்து அமுக்கி தள்ளுவான். எழுந்திருப்பதை தவிர வேற வழியில்லை. அப்போது ஆரம்பித்தால் அந்த அறைக்குள் மீண்டும் நுழைய இரவு 10 மணி ஆகிவிடும். ஆனால் உள்ளம் குதுகலித்துக் கொண்டிருக்கும்.  எந்த ஒரு கலைக்கும் 90% உழைப்புதான் தேவைப்படுகிறது. மீதி இருக்கும் அந்த 10% தான் கலையென்னும் அற்புதம் மாயாஜாலத்தை காட்டுகிறது. அந்த கலைஞனுக்கும் சரி, அதை ரசிக்க போகிறவனுக்கும் சரி. அந்த10% தான் மகிழ்ச்சியை தரவல்லது. ஒரு படைப்பு உருவாகும்போது, உருவாக்கிய பின்பு, ரசிகர்கள் பார்வைக்கு வந்த பின்பு என எல்லா கட்டங்களிலும் ஒருவனை உற்சாகபடுத்துவது அந்த 10% தான். எங்கள் படத்தில் இந்த 15 நாட்கள் தான் மிக முக்கியமானது. கதையின் மையப்பகுதி என்றும் சொல்லலாம். அதனால் கூட இருந்திருக்கலாம்.


  கோவிலில் vip தரிசனம் போல நான் சினிமாவுக்குள் மிக எளிதாக நுழைந்துவிட்டேன். பாரா மற்றும் கேபிள் சங்கர் என்ற இரண்டு பேர் வரிசையில் காத்திருக்கும் அத்தியாயத்தையே தள்ளி வைத்துவிட்டார்கள். பாரா பிரச்சினையில்லை. அவர் ஆசை மகளின் ஆஸ்தான நாயகன் விஜய் படங்களுக்கு முதல் நாள் டிக்கெட் வாங்கி தந்து பரிகாரம் செய்துவிடலாம். கேபிள் பார்க்கும் படங்களுக்கு டிக்கெட் வாங்கி தந்தால் நான் விஜய் மல்லையா கூட சேர்ந்து திவாலாக வேண்டியதுதான். வேறுவழி யோசிக்க வேண்டும்.

   பாக்கெட்டில் பத்து ரூபாயும்,பன்னிரெண்டு கதைகளும் வைத்துக் கொண்டிருக்கும் உதவி இயக்குனர்களுடன் கடற்கரையில் ஒரு மாலை கழிகிறது. மறுநாள் எங்கள் ஹீரோ மற்றும் வின்செண்ட் அசோகன் அவர்களுடன் ஃப்ரென்ச் க்ளபில் Meet my parents பற்றி சிலாகிக்க முடிகிறது. இசை கோர்க்கும் பணியை உள்ளிருந்து பார்க்கவும், பதிவு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. எடுத்த காட்சிகளை அன்றே எடிட்டர் உடன் அமர்ந்து கோர்க்க முடிகிறது. சமையலறை, சாமியறை என வித்தியாசமின்றி நக்கி செல்லும் பங்களா நாய் போலதான் சினிமா உலகில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். சினிமா என்ற எஜமானனுக்கு மட்டும் விசுவாசமாய் இருக்க வேண்டும்.

  முதல் படம் முடிவதற்குள் அடுத்தடுத்த வேலைகள் வந்தவண்ணம் உள்ளன. Duckworth lewis முறை எல்லாம் சினிமாவில் கிடையாதென்பதால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் பகிர்ந்து கொள்கிறேன். கொஞ்சம் பெரிய இடம் தான். J


  நான் தேங்கி நின்ற இடத்தில் இருந்து கைப்பிடித்து என்னை நகர செய்த நண்பர்கள் எல்லோருமே இணையம் மூலம் பழக்கமானவர்கள்தான். பாரா, கேபிள் வாய்ப்பு தந்தவர்கள் என்றால் தூக்கி நிறுத்தியவர்கள் என ராஜன், பரிசல், டேவிட், கெளதம், மதன் கார்க்கி என ஒரு நீண்ட பட்டியலையே போட வேண்டியிருக்கும். நான் இன்னும் இரண்டம் அடியையே வைக்கவில்லையென தெரியும். இருந்தும், இவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இனிமேல் ஓடுவது என் பாடு.

  தொட்டால் தொடரும் மூலம் சினிமா உலகத்தை தொட்டிருக்கிறேன். தொடரும்.

  நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும், தீபாவளி வாழ்த்துகளும்.


Aug 6, 2013

The ship of theseus:

1 கருத்துக்குத்து

The ship of theseus:
The Theseus’s paradox, as first noted by the philosopher Plato, which argues that if the parts of an object (say a ship) are replaced one by one, would it still retain its original identity? And if the old parts of the same object are gathered to make a similar piece, then, which one deserves the right to be called the original object?

Disclaimer: கதை முழுவதுமாய் சொல்லப்பட்டிருக்கிறது

  இன்று World’s organ donation day என்பதையறியாமல் தான் இந்த படத்தை பார்க்க சென்றேன். இந்தப்படத்தை இந்திய சினிமா பிதாமகன்கள் தலை மேல் தூக்கி வைத்து ஆடுவதை கவனித்த நான், படம் பற்றிய எந்த தகவல்களையும் படிக்காமல் சென்றதால் இது உறுப்புதானத்தை பற்றி பேசும் படமென்று அறியேன்.

  மூன்று கதைகள். மூன்றின் protaganist ம் முறையே கண், liver மற்றும் kidneyயை தானமாக பெற்றவர்கள். முடிவில் மூவரும் ஒருவரிடம் இருந்தே உறுப்புகளை பெற்றவர்கள் என்ற மெல்லிய கயிறு மூலம் பிணைக்க பார்த்திருக்கிறார்கள். இந்த யுத்தி நமக்கு புதிதல்ல. சில நல்ல படங்கள் முதல் பல மொக்கை படங்கள் நாம் பார்த்திருப்போம். சமீபத்தில் என்றால் மூன்று பேர் மூன்று காதல்.

  முதல் பகுதியின் நாயகி அலியா. பார்வையை இழந்த பின் அலியாவுக்கு புகைப்படக்கலையில் ஆர்வம் வருகிறது. எந்த காட்சிகளையும் பார்க்காமலே சுட்டு தள்ளுகிறார். இரவில் அவள் காதலனின் உதவியுடன் எடுத்ததை ஆராய்ந்து நல்ல படங்களை தொகுக்கிறார். மிக அழகான பகுதி இது. அலியாவின் அசுரத்தனமான அழகும், அட்டகாசமான நடிப்பும் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது. கண் தெரியாமலே எப்படி படம் பிடிக்கிறார் என்பதையும் தெளிவாக சொல்கிறார் இயக்குனர். இப்படிப்பட்டவருக்கு தானமாக கண் கிடைக்கிறது. ஆனால் பார்வை வந்த பின் எடுக்கும் படங்கள் அலியாவுக்கு பிடிக்கவில்லை. பார்வை அவளுக்கு சுமையாக இருப்பதை உணர்வதுடன் அப்பகுதி முடிகிறது.

  இரண்டாம் பகுதி ஒரு துறவியை பற்றியது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எப்படி மிருகங்களை வதைக்கிறார்கள் என்ற செய்தியோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். இது முக்கிய கதையல்ல. ஏனெனில் அந்த வழக்கு என்னவாகிறது என கடைசி வரை சொல்லவேயில்லை. அத்துறவியின் சிந்தனைகள், வாழ்க்கைமுறை, நெறிகள் போன்றவற்றை அவருடன் பழகும் ஆட்கள் மூலம் எடுத்து வைக்கப்படுகிறது. ஒரு கேள்வி பதில் session என வைத்துக் கொள்ள்லாம். இவருக்கு liverல் பிரச்சினை. எதற்குமே யாரையும் எதிர்பார்க்காத துறவி, முறையான மருத்துவத்தையும் தவிர்க்கிறார். கடைசியில் படுத்த படுக்கையாக இருப்பதுடன் இப்பகுதி முடிகிறது.

  மூன்றாவது பகுதி, பங்கு வர்த்தகர் பற்றியது. பணமே பிரதானம் என்பதுதான் இந்த stockbrokerன் நம்பிக்கையும். இவருக்கு kidney பிரச்சினை.இவருக்கு முதல் காட்சியிலே kidney பொருத்தப்பட்டு விடுகிறது. பின் மீண்டும் பாட்டிக்காக மருத்துவமனைக்கு வரும் இவர், அங்கு ஒரு தொழிலாளியின் kidney வேறொரு மருத்துவமனையில் திருடப்பட்ட தகவலை அறிகிறார். ஒரு வேளை அந்த kidney இவருக்கு பொருத்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் ஆராய்கிறார். இவருக்கு கிடைத்தது முறையான ஒன்று. ஆனால் அந்த தொழிலாளியின் சிறுநீரகம் யாருக்கு போனது எனத் தொடர்கிறார். இறுதியில் ஸ்வீடன் நாட்டுக்கே சென்று ஒருவரிடம் தொழிலாளிக்கு அந்த kidneyயை திரும்ப கொடுக்க சொல்கிறார். அதற்குள் அந்த வெளிநாட்டுநபர் 6.50 லட்சம் கொடுத்துவிட, தொழிலாளி இந்த பணம் போதும் விட்டுடுங்கய்யா என கெஞ்சுகிறார். பணமே பிரதானம் என்ற நாயகன் , பணத்தை விட்டு தொழிலாளிக்கு சிறுநீரகம் மீண்டும் கிடைக்கவே நினைக்கிறார். அந்த அழகான முடிவோடு அப்பகுதி முடிவடைகிறது.

  கடைசி காட்சியில் மூவரும் இன்னும் மூன்று பேரும் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்குமே ஒருவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்பதோடு படம் முடிகிறது.

  நிச்சயம் இது ஒரு thought provoking படம் தான். படம் பார்த்த பின்னும் பல வித சிந்தனைகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது. பார்வை தெரிந்தவுடன் தனது கலை மீது ஆர்வம் குறையும் நாயகி, மரத்தை உலுக்கி விழும் பழத்தை கூட உண்ணாமல் தானாய் விழுந்த பழத்தை மட்டும் உண்ணும் துறவி இன்னொருவரின் liverஐ ஏற்றுக்கொள்வது, பணம் மட்டுமே பிரதானம் என்று வாழும் பங்குசந்தை வர்த்தகன் காசை விட சிறுநீரகம் திரும்ப கிடைப்பதுதான் நியாயமென்று நினைப்பது என படம் முழுக்க விரவிக் கொடக்கும் irony இயல்பாய் பொருந்து போகிறது.

  முதல் பகுதியில், எந்த புகைப்படத்தை அழிக்க வேண்டுமென நாயகி தனது காதலுடன் சண்டை போட்டு சொல்லுமிடத்தில் தனக்கு கண் தெரியும். அதனால் நான் சொல்வதே சரியென்ற காதலனின் ஈகோவை சமாளிக்க முடியாமல் சண்டை போட்டு அழும் இடம் அவ்வளவு இயல்பாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  துறவியின் ideologyயும், அவரின் உரையாடலும் கூட குறிப்பிடத்தக்கவை. கேள்வி கேட்பவன் அவனையுமறியாமல் துறவியை சீண்டுவது போல் கேட்குமிடத்தில் எல்லாம் தேஜ்ஸ் மிளிரும் ஒரு புன்னகையை முதல் பதிலாய் கொடுத்துவிட்டு பிறகு விரிவாய் பதிலளிக்கும் காட்சிகள் அட்டகாசம். கிட்டத்தட்ட 17 கிலோ மெலிந்தாராம் இந்த படத்திற்காக. அவர் நோய்வாய்ப்பட்டு விழும் காட்சிகளில் வயிற்றெலும்புகள் தெரியுமளவிற்கு மெலிந்திருக்கிறார். துறவியின் அறிமுக காட்சியே ஒரு கவிதை. அதிகாலையில் எழுந்து தயாராகி நடக்க ஆரம்பிக்கிறார். நமக்கு போர் அடிக்குமளவிற்கு, அஜித்தே வெட்கப்படுமளவிற்கு நடக்கிறார். நடந்தே நீதிமன்றம் வந்து சேர்கிறார். ஒரு மரவட்டை க்ளோசப்பில் தெரிகிறது.பல கால்களிடமிருந்து தப்பிக்கும் அதை 100ரூ ஸ்டாம்ப் பேப்பர் ஒன்று தன்னகத்தே சேர்த்துக் கொள்கிறது. பின் அதை ஒரு பூந்தொட்டியில் அதே ஸ்டாம்ப் பேப்பர் விடுகிறது. அந்த ஸ்டாம்ப் பேப்பர் துறவியின் கையிலிருக்கிறது.

  மூன்றாம் பகுதியில் நாயகனை விட அவரின் பாட்டி பெரிதும் ஈர்க்கிறார். தனக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நியாயமாக கிடைத்ததுதான் என்று தெரியும்வரை இருக்கும் நாயகனின் பதற்றம் அழகாக காட்டப்பட்டிருக்கிறது.

  இத்தனை அழகியல் அம்சங்கள் இருந்தாலும் எனக்கு சில விஷயங்கள் உறுத்தலாய் இருந்தன. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கின்றன. நாடகத்திற்கும் சினிமாவுக்குமான முக்கிய வித்தியாசமாக நான் நினைக்கும் அம்சம் இது. ஒரே ஷாட்டில் எடுக்கப்ப வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.இது பார்க்கும்போது ஒரு வித எரிச்சலை தருகிறது. அடுத்து படத்தின் வேகம். துறவி பகுதிக்கு இந்த திரைமொழி இயல்பாய் இருந்தது. ஆனால் மற்ற இரண்டிற்கும் மந்தமாய் தெரிந்தது. பொல்லாதவனின் திரைமொழி ஆடுகளத்தில் இருக்காது. கதைதான் அதை தீர்மாணிக்கும். ஆனால் இப்படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள். வெவ்வேறு களம். ஆனால் ஒரே படம் போன்ற மேக்கிங். அதுவும் மிக மெதுவாக நகர்கிறது. அடுத்து, உடல் உறுப்புகள் தானம் பற்றி பேசும்போது முதல் கதையில் நாயகிக்கு பார்வை சுமை என்பதாக முடித்ததையும் ரசிக்க முடியவில்லை.

  இதையெல்லாவற்றையும் விட, எனக்கு இந்த வடிவத்திலே பிரச்சினை இருக்கிறது. இரண்டு மணி நேரம் கிட்டத்தட்ட ஒரு தவம் போலபடம் பார்க்கும் பார்வையாளனை ஒரே கதையை சொல்லாமல் இப்படி 3,4 கதைகளை சேர்த்து சொல்லும் வடிவம் பிடிக்கவில்லை. மூன்றையும் இணைக்கும் விஷயமும் வலுவாக இல்லாத போது கசந்து போகிறது. New age cinema என சொல்லலாம். ஆனால் சினிமாவின் அடிப்படையையே தகர்ப்பது போல் தோன்றுகிறது. மலையாளத்திலும் 5சுந்தரிகள் என ஒரு படம் வந்தது. 5 தனிக்கதைகள். தமிழில் முன்பு “ஒரு வீடு இரு வாசல்” வந்தது. இப்போது கூட கெளதம சித்தார்தன் என்பவர் 10 கதைகளை எடுத்து ஒரே படமாக எடுக்க போவதாக படித்தேன். இது சினிமா அனுபவத்தை சிதறடிப்பதாக நான் நினைக்கிறேன்.

  மீண்டும் படத்திற்கு வருவோம். Source lightஐ வைத்தே பல மாயங்கள் செய்திருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குனர். பின்னணி இசைக்கு பெரிய வேலையில்லை. அமைதியாய் இருந்து அழகாய் ஒலிக்கிறது. நடிகர்கள் அனைவருமே கச்சிதம்.

  ஒரு நாவலை படிக்கும்போது நல்ல திருப்பத்தில் ஒரு மேஜிக் நிகழுமே.. அது போன்ற தருணங்கள் சிலவுண்டு இப்படத்தில். ஆனால் முழுமையாக impress செய்யவில்லை என்றே தோன்றுகிறது. கூர்ந்து கவனித்து, பிடித்த விஷயத்தை மட்டும் மீண்டும் யோசித்து ரசிக்கும் மனநிலையுடையவர்கள் தவறாமல் பார்க்கலாம். படம் பார்க்கும் போது விட அதற்கு பிறகு இது செய்யும் விஷயம் ஆழமானது. அர்த்தமுடையது.

For tamil news read vikatan.com


Jul 28, 2013

மொட்டை

26 கருத்துக்குத்து

  எல்லோர் வாழ்விலும் இசை இருக்கிறது. சட்டை பட்டன் போடுவதில் இருந்து படிக்கட்டு ஏறுவது, பல்லு விளக்குவது என பெரும்பாலும் எல்லா வேலைகளையும் ஒரே rhythmல் தான் நாம் செய்கிறோம். இந்த பாட்டு பிடிக்காது, அந்த பாடகர் பிடிக்காது என்று சொன்னாலும், ஏதோ ஒரு வகை இசை பிடிக்கத்தான் செய்கிறது. இசையில்லாத வாழ்க்கையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மேற்கத்திய நாடுகளில் 5 வயதிற்குள்ளாகவே எல்லா குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு இசைக்கருவியை பயிற்றுவிக்க தொடங்கிவிடுகிறார்கள். சீன, ஜப்பான் கலாச்சாரத்திலும் இது உண்டு. கொஞ்சம் மெனக்கெட்டு தேடினால் நம் முன்னோர்களும் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கர்ம சிரத்தையாக பின்பற்றிய தகவல் கிடைக்கக்கூடும்.ஆனால் நிச்சயம் இப்போது நிலைமை அப்படி இல்லை.  விஷயத்திற்கு வந்து விடுகிறேன். http://365rajaquiz.wordpress.com/  இந்த தளம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தினம் ஒரு பாடலின் இசைத்துண்டை அதுப்பற்றிய சில வார்த்தைகளோடு பகிர்கிறார்கள். சின்ன சின்ன க்ளுக்களும் உண்டு. அது எந்த பாடலென்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும். விடையை அடுத்த நாள் வெளியிடுவார்கள். பாடலை கண்டுபிடிப்பதோடு முடிந்துவிடுவதில்லை சுவாரஸ்யம். மேலதிக விஷயங்களை பின்னூட்டங்களில் பேசுகிறார்கள். இசை நுணுக்கங்கள், படங்களை பற்றிய தகவல்கள் என படிக்க படிக்க போய்க் கொண்டேயிருக்கும். முக்கியமான விஷயம் எல்லாமே இளையராஜா பாடல்கள். இப்போது ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். யோசித்து பாருங்கள். வேறு எந்த இசையமைப்பாளரின் 365 பாடல்களை தேடி எடுத்து இப்படி செய்ய முடியும்? MSV?

  ரெக்ஸ், சொக்கன், KRS என சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இந்த புதிர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்தது. ஒரு வருடத்தின் முடிவில் Active participants எண்ணிக்கை மட்டும் 100ஐ தாண்டியிருக்கும் போலிருக்கிறது. அதில் 100 முறைக்கு மேல் சரியான பதில் கொடுத்த பல சச்சின்களும் அடக்கம். நான் இரண்டு முறை முயற்சி செய்திருக்கிறேன். கிட்டத்தட் முழுநாளும் அந்தப் பாடலை கண்டறியும் முயற்சியிலே கழிந்தது. அதோடு மூட்டை கட்டிவிட்டேன்.
ஆனால் இந்த மாஃபியா விடுவதில்லை. ஆம், இவர்களை ம்யூசிக் மாஃபியா என்றுதான் குறிப்பிடுகிறார்கள் இணையத்தில். இந்த குழுவில், 50 வினாடிகள் ஓடும் க்ளுவை 10 வினாடிகள் மட்டுமே கேட்டுவிட்டு உடனே பதில் சொல்லும் வித்தைக்காரர்களும் இருக்கிறார்கள். ஒரு வேளை விடை தெரியாமல் போனால் மற்ற எல்லா பஞ்சாயத்துகளையும் ஒரமாக வைத்துவிட்டு தேடுதல் வேட்டையை மட்டுமே நடத்தும் கடமைவீரர்களும் இருக்கிறார்கள். இவர்களின் ஒரே நோக்கம், இளையராஜவின் எந்தவொரு இசைப்படைப்பையும் கேட்காமல் விட்டுவிடக்கூடாது. அவ்வளவே..

   ஒரு வருடம் வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில்  ஒரு get together ஏற்பாடு செய்திருந்தார்கள். பெங்களூர் கோவையில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்தார்கள். Google hangoutல் அமெரிக்க வாழ் ராஜா பக்தர்களும் அவர்கள் நேரத்திற்கு விடிய விடிய ஆன்லைன் வழியே இணைந்திருந்தார்கள். அப்போது சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆச்சரியத்தில் திறந்த வாய் ஷ்ரேயாவில் வாயை விட பெரிதாக இருந்தது.

  பெங்களூர்வாசி அவர். தமிழ் படிக்க தெரியாது. இப்புதிரில் சில க்ளுக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை வைத்து கண்டறிய முயல்வாராம். முடியாதபட்சத்தில் தன் மனைவிக்கோ அல்லது சொக்கனுக்கோ அலைபேசி பதிவை அப்படியே படிக்க சொல்வாராம். அதை வைத்து கண்டறிவாராம். இது போல பல கதைகள். கிட்டத்தட்ட ஒரு குடும்பம் போல ஆகிவிட்டார்கள் இந்த பங்கேற்பாளர்கள்.

  நேற்றைய நிகழ்வு அமாஸ் என்பவரது இல்லத்தில் நடந்தது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவர்கள். ராஜாவின் பாடல்கள் பாடியும், வயலினில் வாசித்தும் கலந்துரையாடியும் அட்டகாசமாய் நடந்தது. திருவாசகமும் இளையராஜாவும் என்ற தலைப்பில் சொக்கனின் பேச்சும் கூட சுவாரயஸ்மாய் இருந்தது. (http://nchokkan.wordpress.com/2013/07/28/tvskmrja/). ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருந்தேன். இந்த ஒப்புமை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் எனக்கு, நன்கு தெரிந்த நண்பர்கள் ஒன்றாய் அமர்ந்து மது அருந்துவதை விட  அதிகமான ஒரு ஆக்ரோஷமான போதையை அனுபவத்துக் கொண்டிருந்தது போல் இருந்தது. எல்லோரையும் இணைத்து கட்டியிருந்தது இசை, ராஜாவின் இசை.

  365 நாட்களும் கேட்கப்பட்ட பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை ஒருவர் எல்லோருக்கும் வழங்கினார். இன்னொருவர் ராஜாவின் அபூர்வமான பாடல்கள் அடங்கிய தகட்டை வழங்கினார். தமிழே தெரியாத ஒருவர் தனது வயலினோடு இதற்காக பெங்களுரில் இருந்து வந்திருந்தார். எல்லோரும் கூடி இசைக் கேட்டார்கள். பாடினார்கள். மகிழ்ந்தார்கள்.
ஒருவர் தனது ஆயுள் முழுவதும் கேட்டு ரசிக்குமளவிற்கு இசைத்திருக்கிறார் ராஜா. நீங்கள் ஆராய்ச்சி செய்வீரோ அனுபவித்து கேட்பீரோ. துன்பத்தை குறைப்பீரோ இன்பத்தை சேர்ப்பீரோ. உங்கள் எல்லா நோக்கங்களுக்கும், எல்லா உணர்வுகளுக்கும், எல்லா வயதுக்கும் ஏற்ற இசையை கொடுத்திருக்கிறார் இந்த மொட்டை. நினைக்கும் போதே புல்லரிக்கிறது.

  ரகுமான் – ராஜா இசை பஞ்சாயத்து இணையத்தில் பிரபலம். எதிர்ந்து வாதாட ரகுமானுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் இப்படியொரு குழு அமைத்து, இசையை கொண்டாட, இளையராஜாவை கொண்டாடத்தான்  ஆட்கள் இருக்கிறார்கள். 


Jul 11, 2013

காதலும், நிராகரிப்பும் அதன் பின்னான வாழ்க்கையும்

11 கருத்துக்குத்து

  இத்தனை 1000 ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்கள் காதல் என்பது என்ன என்பதை மட்டும் கண்டறியவே இல்லை. எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது.. எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது. தெரியாது.

விபத்தா, விதியா? தெரியாது. 

Perfect couple எனப்படுபவர்கள் நொறுங்கி வீழ்கிறார்கள். சரிப்படாது என நினைப்பவர்கள் வாழ்ந்து தீர்க்கிறார்கள். எப்படி? தெரியாது.

ஒன்று மட்டும் தெளிவு. காதல் அப்படியேதான் இருக்கிறது. அங்கேயேதான்.
உங்களுக்கு காதல் மேல் நம்பிக்கை இருந்தால் மட்டுமே மேற்கொண்டு தொடருங்கள்.

   Lootera. நேற்று இரவு பார்த்த ஒரு இந்திப்படம். The last leaf என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரன்வீர் சிங்கும், சோனாக்‌ஷி சின்ஹாவும் நடித்திருக்கிறார்கள்.   கதை இதுதான்.(படம் பார்க்க நினைப்பவர்கள் Skip செய்துவிடலாம்). சோனாக்‌ஷி ஒரு ஜமீந்தாரரின் மகள். அந்த ஊருக்கு வரும் ரன்வீர் ஒரு தொல்பொருளியல் நிபுணன். முதல் சந்திப்பிலே சோனாக்‌ஷிக்கு ரன்வீர் மீது காதல் வருகிறது. சோனாக்‌ஷி வீட்டில் தங்கி தன் நண்பனுடன் வேலைகளை பார்த்து வரும் ரன்வீரிடம் ஒரு கட்டத்தில் தன் காதலை சொல்கிறாள். ரன்வீர் ஏற்றுக் கொள்ளவில்லை. வேலைகளை முடித்து ரன்வீர் ஊருக்கு கிளம்பும் நாள் நெருங்குகிறது. இதற்கிடையில் நில உச்ச வரம்பு சட்டம் அமலுக்கு வருகிறது. அரசாங்க ஆட்கள் வந்து ஜமீந்தாரரின் முன்னோருக்கு வெள்ளையர்கள் கொடுத்த அரும்பொருட்களை கையகப்படுத்தி செல்கிறார்கள். ரன்வீர் ஊருக்கு கிளம்பும் முந்தைய நாள் இரவு, சோனாக்‌ஷி ரன்வீரின் அறைக்கு செல்கிறாள். அங்கே இருவரும் இணைகிறார்கள். மறுநாள், ரன்வீர் ஜமீந்தாரரிடம் தன் காதலை சொல்லி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்கிறான். தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது. விடிந்தால் திருமணம். முந்தைய இரவில் ரன்வீர், நண்பணுடன் தப்பித்து செல்கிறான். ஏனெனில் ரன்வீர் ஒரு திருடன். அரசாங்க ஆட்கள் என ஜமீந்தாரரின் சொத்துக்களை எடுத்து சென்றதும் ரன்பீர் ஆட்கள்தான். தொல்பொருள் ஆராய்ச்சி என சொல்லி, நிலச்சுரங்கம் அமைத்து ஒரு தொன்மையான சிலையையும் திருடிவிடுகிறான் ரன்வீர். எல்லாமே ப்ளான் செய்யப்பட்ட ஒன்று. அதிர்ச்சியில் ஜமீன்தார் இறக்கிறார். மூச்சு பிரச்ச்சினை வியாதியால் அவதிப்படும் சோனாக்‌ஷி, வேறொரு இடத்தில் தனிமையில் வாழ்க்கையை கழிக்கிறார். சோனாக்‌ஷி வாழும் ஊருக்கு வேறொரு சிலை திருட ரன்வீரும் நண்பரும் வருகிறார்கள். போலீஸ் துரத்தலில் நண்பனையே ரன்வீர் சுட்டுவிடுவதெல்லாம் இரண்டாம் பாகத்தில் நடக்கிறது. அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனக்கு முதல் பாதிதான் அழகு.

   இதன் இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானே இந்தக் கதைக்கு என ஒரு பிரத்யேக திரைமொழியை எடுத்தாண்டிருக்கிறார். A poetic narration  மிக மெதுவாக நகரும் கதையின் அழகே அதன் வேகம் என்றுதான் சொல்வேன்.அந்த வேகத்திற்கேற்ப ஒரு அதி உன்னத பின்னணி இசை. சமீபத்தில் நான் பார்த்ததில் மிகச்சிறந்த பின்னணி இசை இந்தப்படத்தில்தான். 1950களில் நடக்கும் கதையில் கலை இயக்குனரும் வியக்க வைக்கிறார்.ரன்வீர் கபூரின் நடிப்பு ஏமாற்றம்.. இதை தமிழில் எடுத்து தனுஷ் மட்டும் நடித்தால் சோனாக்‌ஷியை மிஞ்சிவிடுவார். Lootera வின் ஜீவனே சோனாக்‌ஷிதான்.

  சோனாக்‌ஷியின் காதலில் நாமும் வீழ்ந்து போகிறோம். இந்தப்படம் சோனாக்‌ஷி ஏமாற்றப்படும் இடத்தில் மிகச்சிறந்த படமாகிறது. சோனாக்‌ஷியின் அற்புதமான நடிப்பு நம் இதயத்தை வெடித்து சிதற வைக்கிறது. “அதிகாலை பனி அடிவயிற்றை நனைத்ததை யாரிடம் சொல்லும் நத்தை” என்பது போல தனிமைப்படுத்த படுகிறாள் சோனாக்‌ஷி. அன்புத்தந்தையும் மரணிக்க, நம்பியவனும் நிராகரிக்க என்னதான் செய்வாள் அவள்?

   ஆனால் ரன்வீரின் நிராகரிப்பு அவளை மாற்றி விடவில்லை. அவன் மீதான அன்பு அப்படியேதான் இருக்கிறது. கொஞ்சம் கூடியிருக்கிறது என்றேனும் சொல்லலாம். உலகத்தின் மொத்த துயரமும் அவள் மீது கொட்டப்பட்டது போன்ற உணர்ந்த தருணம் அது. இருந்தும் அவன் ஞாபகங்களை தூக்கிக் கொண்டு  அலைகிறாள் சோனாக்‌ஷி. ஒரு நத்தை பாலைவனத்தை கடப்பதை போல.

   ஒரு நல்ல திரைப்படம் படத்தை பார்க்கையில் நம்மை எப்படி பாதிக்கிறது என்பதை விட, அரங்கை விட்டு வெளியேறிய பின் என்னவெல்லாம் செய்கிறது என்பதிலே இருக்கிறதென்பேன். நேற்று இரவு படம் பார்த்தபின் வெளியே வந்தபோது மழைத்தூறிக்கொண்டிருந்தது. காரில் அப்படியே கடற்கரை சென்றுவிட்டேன். சிறிது நேரம் மழையின் நின்றபடி கடலை பார்த்துக் கொண்டிருந்தேன். சோனாக்‌ஷிக்கு நேர்ந்த நிராகரிப்பு மனதை கடல் அலைகள் மணலை அரிப்பது போல் அரித்துக் கொண்டிருந்தது. என்னை நனைத்த மழையில் கண்ணீரும் காணாமல் போனது. சில நிராகரிப்புகள் வரம். வலியை கூட ரசிக்க வைக்கும் வரம். சோனாக்‌ஷிக்க்கு நேர்ந்த நிராகரிப்பை போல.

   மீண்டும் காரிலேறி வீடு சேர்ந்தபோது மணி 2.30 இருக்கும். அந்த நிராகரிப்பு என் மனதில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டுதான் இருந்தது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இறுதியில் ரன்வீர் அவளிடம் வரும்போது தன் காதல் தோற்கவில்லை என்ற ஆனந்தத்தில் சோனாக்‌ஷி சிரிப்பதுடன் படம் முடிகிறது. இந்த முடிவை தவிர மற்ற அனைத்தும் நம் வாழ்வில் நடந்துக் கொண்டுதானிருக்கிறது. சில சமயம் ரன்வீருக்கு.


Jul 8, 2013

இளவரசன்

18 கருத்துக்குத்து
   தர்மபுரி இளவரசனின் மரணம் குறித்த செய்தி தெரிந்தது முதலே ஏதோ ஒரு இனம்புரியாத கவலை ஆட்கொண்டுவிட்டது. அது கொலையா, தற்கொலையா என்பது குறித்தெல்லாம் யோசிக்க தோன்றவேயில்லை. அவனே தன்னை கொன்றிருந்தால் கூட அது கொலைக்கு ஒப்பானதுதான்.

 19 வயதில் இளவரசனின் பக்குவமும், உறுதியான நிலைப்பாடும் என்னை கொஞ்சம் அதிகமாவே ஈர்த்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் கையில் ஏதுமில்லை(கட்சிகளின் தலையீடு) என்றானாலும் கூட, திவ்யா கடைசியில் எடுத்த வேண்டாம் என்ற முடிவை இளவரசன் எப்போதோ எடுத்திருக்க வேண்டியது. ஏனெனில் பாதிப்புகள் அவன் பக்கம் எப்போதும் அதிகமாகவே இருந்தது. அதை அவன் உணர்ந்தவனாகவே எனக்கு தெரிந்தான். இதையெல்லாம் மீறிய அவன் உறுதி அவன் மீதான மரியாதையை உயர்த்தியது. அதனால்தான் அவன் மரணம் எனக்கு மிகப்பெரிய இழப்பாக மனதளவில் இருந்தது. உணர்ச்சிவசப்பட்டு ஏதும் எழுதிவிட வேண்டாமென்றே சில நாட்கள் எழுதவில்லை.

   இங்கே திவ்யாவையும் இகழ காரணமில்லை. இன்னமும் ஒரு பெண் தன் காதலை சொல்லி , அனுமதி மறுக்கப்படும்போது தடை மீறி திருமணம் செய்வது சாதாரண விஷயமாக எனக்கு தெரியவில்லை. அதீத மனதிடமும், தைரியமும், அதையெல்லாம் விட உண்மையான காதலும் தேவை. காதலிக்கும்போது இது தெரியாதா என்ற கேள்வியில் சுத்தமாக நியாயமில்லை. இந்த சமூகத்தின் கோரமுகமும், பெற்றவர்களின் நிஜ முகமும் அப்போது அவர்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. கெளரவக்கொலைகளும், பெற்றோர்களின் தற்கொலைகளும் இன்னமும் நடந்துக் கொண்டுதானிருக்கின்றன என்ற செய்திகளே போதும். சென்னையை தாண்டினால் தமிழகம் வேறு முகம் கொண்டிருக்கிறது. சாதியின் பிடியில் இருந்து மீள நமக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமென கணிக்க கூட முடியாத அளவிற்கு யதார்த்தம் இருக்கிறது.

  தன் காதலுக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு , எதிர்த்து நின்று போராடும் /போராடிய எல்லா பெண்களை பாராட்டும் அதே வேளையில்,திவ்யாவை போல் ஒரு கட்டத்தில் பின்வாங்கிய பெண்களை சாட தேவையில்லை. அந்த லட்சணத்தில் நம் சமூகம் பெண்களை நடத்தவில்லை.

  இந்த இடத்தில் இன்னுமொரு முக்கியமான கேள்வி எழுகிறது. காதலால் சாதியை ஒழிக்க முடியுமா?? இந்த வியாக்கியானம் எல்லாம் இருக்கட்டும். இரண்டு பேர் விருப்பப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ நினைக்கும்போது, அதை மறுக்கும் ஒரு சமூகம் எவ்வளவு மோசமான ஒன்று என யோசித்து பார்க்க வேண்டும். இதை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக பார்ப்பது சரியான பார்வையாகாது. பெற்றோரின் அந்த கவலைக்கு முழுக்காரணமும் சமூகம் தான்.
தமிழக அரசியல் மோசமான பின்பு அடிக்கடி இது போன்ற கட்சி சார்ந்த கலவரங்கள் பல காரணங்களுக்காக நடந்து கொண்டுதானிருக்கின்றன. மதுரை தினகரன் அலுவலக எரிப்பு, தர்மபுரி பேருந்து எரிப்பு என பல சம்பவங்களை சொல்லலாம். பெரும்பான்மையானவற்றில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டோ, அல்லது ஏதேனும் ஒரு வழியில் அதற்கான விலையை கொடுக்கவோ நேர்ந்திருக்கிறது. ஆனால் தர்மபுரியில் மூன்று கிராமங்கள் எரிக்கப்பட்ட பின்பும் அவர்களுக்கு எதுவும் நடந்துவிடவில்லை. இன்னும் வீரியத்துடன் வன்னியர் என்ற சேற்றை பூசிக்கொள்ளவே செய்தார்கள். அதன் உச்சக்கட்ட கொடுமைதான் இளவரசன் மரணம்.

   இரண்டு ஆதிக்க சாதிகளே கூட பெண் எடுத்து பெண் கொடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அங்கே காதல் பிரச்சினை எழும்போதெல்லாம் வேறு வழியில் சுமூகமாக தீர்த்துக் கொள்கிறார்கள். இங்க இளவரசன் மரணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஒரே காரணம் அவன் தலித் என்பதுதான். இதில் வன்னியர்கள் தொடர்பிருப்பதாலே அவர்களை சாட வேண்டியிருக்கிறது. மற்றபடி தமிழகத்திலிருக்கும் அத்தனை ஆதிக்க சாதிகளுமே இதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். ராமதாஸ் என்ற வினையூக்கி இல்லாதது ஒன்று மட்டுமே ஆறுதல்.


   இளவரசன் மரணம் இன்னொரு துரதிர்ஷ்டமான சம்பவம் என கடந்து செல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் இந்த சாதியை எதிர்த்து காய் நகர்த்த வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்தி சென்றிருக்கிறது. ”நான் சாதியை எதிர்ப்பேன்” என்ற கொள்கையில் சமரசம் இல்லாமல் வாழ்வதே ஒரு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கக்கூடுமென கருதுகிறேன். 

Jul 5, 2013

சிங்கம் சிங்கம்(அதாங்க சிங்கம் 2)

11 கருத்துக்குத்து

    எங்க பக்கத்து வீட்டுல மகேஷ்னு ஒரு பையன் இருந்தான். எப்ப பார்த்தாலும் சிகரெட் பிடிச்சிட்டே இருப்பான். அதனால அவனுக்கு 23 வயசுலயே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. சோகம்,என்னன்னா மகேஷ எங்களால காப்பாத்த முடியல.

   ஹலோ. டென்ஷன் ஆவாதீங்க.படத்துக்கு முன்னாடி இத போட்டா கம்முன்னு பார்க்குறீங்க.பதிவுல போட்டா மட்டும் விண்டோவ க்ளோஸ் பண்ண போறீங்க.எனக்கும் சமூக அக்கறை இருக்கு. ராஸ்கல்ஸ்.

இன்னைக்கு நாம பார்த்த படம் சிங்கம்2. படத்துல ஓப்பனிங்ல அஞ்சலி வச்சு ஒரு குத்து பாட்டு போட்டுதான் கதைக்கு போறாங்க. நாம அப்படியெல்லாம் பண்ணாம நேரா கதைக்கு போவோம்.துரைசிங்கம் முதல் பார்ட் முடிவுல சொன்ன மாதிரி ஒரு சீக்ரெட் மிஷனுக்காக வேலை செய்றாரு. தூத்துக்குடி ஹார்பர்ல நடக்கிற ஆயுதக்கடத்தலை கவனிக்க வந்தவருக்கு அது ஆயுத கடத்தலல்ல. போதை மருந்து கடத்தலென்பது தெரிய வருகிறது. அதற்கு காரணமான இரண்டு லோக்கல் வெள்ளை வில்லன்களையும், ஒரு கருப்பு வெளிநாட்டு வில்லனையும் பிடிச்சு தூத்துக்குடி ஜெயிலில் அடைப்பதுதான் கதை. இந்த சீக்ரெட் மிஷனை அப்பாவுக்கு கூட தெரியாமல் செய்கிறார்.ஆனா அப்பாவோ போலிஸ் வேலையை விட்டுட்டியே படவான்னு அவர்கிட்ட பேசாம இருக்காரு. இதனால அனுஷ்காவுடனான திருமணமும் நின்னு போயிடுது. ஆனா அதை பத்தி கவலைப்படாத போலீஸ் சிங்கம் ஒரு ஸ்கூல்ல NCC masterஆ இருக்காரு.அங்க ஹன்சிகா என்ற மாணவி,ஆம் மாணவி இவரை லவ்வுகிறார். இதான் கதை. கதையை எல்லாம் சொல்லிட்டு ஜெயிக்கிறதுதானே ஹரி பாலிஸி..இதிலும் அப்படியே டெம்ப்ளேட்.

சிங்கமாக சூர்யா கலக்கியிருக்கிறார். குற்றவாளிகளை தேடிப் பிடிக்கும் போலீஸைத்தானே நாம பார்த்திருக்கிறோம்! இதுல சூர்யா ஓடியே பிடிக்கிறார். தூத்துக்குடியோ, தென்னாப்பிரிக்காவோ.ஓடுறாரு ஒடுறாரு. பால் போட வர்ற மலிங்காவ விட அதிக தூரம் ஒடுறாரு.ஒரு வேளை சூர்யா கால்ஷீட் இல்லாம ஹரி இத விஷால வச்சு எடுத்திருந்தா படம் 10 நிமிஷம் முன்னாடியே கூட முடிஞ்சிருக்குமோன்னு தோணுது. வீட்டுக்கு பைக்ல வர்றப்ப கூட திரும்பி திரும்பி பார்த்துட்டே வந்தேன்.பின்னாடி சூர்யா ஓடி வர்றாரான்னு. நீ என்ன குற்றவாளியான்னு கேட்காதீங்க.ஒரு கதை இருக்கு எனக்கும். சூர்யா ஒரு சீன்ல ஹை டெசிபலில் இண்டேர்னேஷனல் வில்லனிடம் பேசுறாரு. ஆப்பரிக்க மொழியை கூட எவ்ளோ அழகா பேசுறாருன்னு சொன்னதுக்கு முன் சீட்டுபொண்ணு திரும்பி முறைச்சிட்டு Dats englishன்னு சொல்லுச்சு. சூர்யா ஃபேன் போல. நானும் என் பங்குக்கு “சாரி.யூ ப்யூட்டிஃபுல் கேர்ள்”ன்னு சொன்னேன். அதுக்குத்தான் சூர்யா துரத்துறாரோன்னு ஒரு டவுட்டு எனக்கு. ஆனா இந்த  படத்துல தானும் ஒரு Mass Maharajaதான்னு நிரூபிக்கிறாரு சூர்யா. எனக்கு இதுல ரொம்ப புடிச்சு போச்சு நம்ம ஜோ புருஷன.

வசனம் தான்.. தேசிய கீதம் பாடுறப்ப உள்ள வந்து பிரச்சினை பண்ற வில்லனை போட்டு 5 நிமிஷம் துவம்சம் பண்றாரு துரைசிங்கம். அப்பலாம் சாதாரண ரியாக்‌ஷன கொடுக்கிற வில்லன், அடிச்சு முடிச்சு சூர்யா பேச ஆரம்பிச்ச உடனே ஒரு ரியாக்ஷன் தருவாரு பாருங்க.நீ அடிச்சப்பலாம் வலிக்கல சிங்கம். கடைசியா 5நிமிஷம் தேசிய கொடிய பத்தி பேசினியே.அதான் வலிக்குது” ன்ற மாதிரியே இருக்குமது. சில சமயம் இதெல்லாம் தானா அமையும் போல. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலே பக்கத்துல இருந்த ஒரு பீட்டரு “Strange. This lion barks”ன்னு யாருக்கோ sms அனுப்பிட்டு இருந்தான். டைட்டில் கார்ட சரியா பார்க்கல. அநேகமா கதை திரைக்கதை கர்புர் டைரக்‌ஷன்னுதான் போட்டிருப்பாரு ஹரி. அந்தளவுக்கு உறுமலோ உறுமல்.

ஆனா ஒரு விஷயம் புரியல. பெண் சிங்கம் தான் வேட்டையாடும். ஆண்சிங்கம் டிஸ்பீட் தான் பண்ணும்னு நம்ம உலகநாயகன் சொன்னது உண்மையில்லையா? இதுல சூர்யாதான் வேட்டையோ வேட்டை ஆடுறாரு. ஹன்சிகா ஸ்கூல் பொண்ணாம். அவங்களுக்கு வருவது இன்ஃபேச்சுவேஷனாம். அப்ப அனுஷ்காவுக்கு நடப்பது பால்ய விவாகமான்னு நக்கலா கேட்கலாம். ஆனா யோசிச்சு பாருங்க. நிஜமாவே 10வது படிக்கிற லக்‌ஷ்மி மேனன விட ஹன்சிகா இளமையாதானே இருக்காங்க. அப்படிலாம் இல்லைன்னு சொன்னா நமக்கு ”காதல்” சந்தியா மாதிரி டொக்கு ஹீரோயின்தான் கிடைக்கும். அதனால ஹன்சிகாவுக்கு ஓக்கே சொல்லிட்டு நகரலாம்.அனுஷ்கா..ம்ம்டிவைன்.எத்தனை வருடம் ஆனாலும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இதற்காகவே சிங்கம் 30 வந்தா கூட எனக்கு ஓக்கே.

ஹரி படத்தின் பலமென திரைக்கதை, இயக்கத்தைத்தானே சொல்ல முடியும். இதிலும் அப்படியே. ஒரே ஒரு ஃபோன வச்சு என்னலாம் பண்ண முடியும்னு டாக்டரேட் பண்ணியிருக்காரு மனுஷன். ஒரு சீன்ல வில்லனோட ஃபோன் அவுட் ஆஃப் ரேஞ்சுக்கு போயிடும்.(அவன் கடலுக்கு போனதால்). அவன் நம்பருக்கு ஒரு டம்மி sms அனுப்ப சொல்வாரு. அவன் ரீச்சபிள் ஏரியாவுக்கு வந்தவுடன் டெலிவரி ரிபோர்ட் வருமில்லையா என்பார். ஆச்சரியமாக இருக்கிறது. சூர்யா மொபைல் என்ன மாடல் என பார்க்க முடியாத அளவுக்கு ஃப்ரேம் வேகமாக நகருது. அவர் ஃபோன் மட்டும் low batteryஏ காட்டாம ட்யூரோசெல்ல விட அதிக நேரம் உழைக்குது.  ஹரி வீட்டுக்கு ஒரு தடவை போக வேண்டும். டாடா சுமோ வகையறா வண்டிக்களின் படங்களையும், மொபைல் ஃபோன் படங்களையும் ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்கலாம்.

ஒரு மசாலா படத்தில் நச்சென மூன்று சீன்கள் வேண்டும். ஆடியன்ஸ் எழுந்து விசிலடிக்க நினைக்க வைக்கணும். இதிலும் இருக்கு. சூர்யா சார்ஜ் எடுத்துக் கொள்ளும் சீன், Police with family.without weaponஎன சொல்லிவிட்டு வில்லன்களை வீட்டு வாசலில் துவம்சம் செய்யும் காட்சி. அப்புறம் இடைவேளை.

முதல் பாகத்தோட ஒப்பிட்டா சூர்யாவின் நடிப்பு எனக்கு இதில் பிடித்திருக்கிறது. + என்றால் ரெண்டு பாயிண்ட் கூட்டி வைக்கப்பட்ட சத்தத்தை சொல்லலாம். 18+ படங்களை போல இதை 5+ படம். ஒரு கைக்குழந்தை சத்தம் தாங்காமல் அழுது கொண்டேயிருந்தது. அதன் பெற்றோரும் படம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். வாழ்க. முன்னலாம் அடிக்கடி தியேட்டர்ல வாய்ஸ் மட்டும் வராம போயிடும்.உடனே ஆடியன்ஸ் எல்லாம் கத்துவார்கள்.சிங்கத்தில் அப்படி ஆனா”அப்பாடா” என்பார்கள். மைனஸ் என்றால் பிரகாஷ்ராஜ் இல்லாததை சொல்லலாம். மூன்று வில்லன்கள் இருந்தாலும் கதையிலும் அவர்கள் வீக்.நடிப்பிலும் வீக்.

காமெடிக்கு விவேக்கும் சந்தானமும்.விவேக் சுமார். சந்தானமும் சுமாரானது தான் ஏனென தெரியவில்லை. “யார்ரா இவன்.கடை கடையா போய் நெய் பிஸ்கட் விக்கிறவன் மாதிரி” என்ற வசனத்தில் இருக்கும் உண்மை தான் என்னை அவரின் தீவிர விசிறியாக்கியது. தானத்தில் பெரியது ஈடன் கார்டன் மைதானம் அல்ல. சந்தானம் என நம்பும் அளவுக்கு அவரை பிடிக்கும். ஆனா இப்போது எல்லாம் ரைமிங்காக சொன்னால் போதுமென ஆனது பிடிக்கவில்லை. ஆனாலும் சிரிக்கிறேன். “காடையை வளர்த்து கல்லால உட்கார வச்சது” மாதிரி 100 வசனம் எல்லோராலும் எழுத முடியும். ஆயில்பெயிண்ட்ல வரைஞ்ச ஆந்தை, கோட்சூட் போட்ட கோட்டான், தட்டு கழுவறவன் தத்துவம் பேசக்கூடாது”. இதற்கா சந்தானம் வேண்டும்? யோசிங்க பாஸ். இந்த படத்துல விழுந்து விழுந்து சிரிக்க முடியாததால் சந்தானம் மத்தவங்க கால்ல விழுந்து விழுந்து காமெடி செய்கிறார். நாம் சிரித்தால் மட்டும் போதும்.

இசையெல்லாம் தூக்கி தூரமா வைங்க. படத்தின் இன்னொரு மைனஸ் நீளம். இப்பலாம் முன்ன மாதிரி யாரும் 3 மணி நேரம் கேட்பதில்லை. பொழுதுபோக்க பல வழிகள் வந்தாச்சு. சிக்னல்ல நிக்குற நேரத்துல ட்வீட் போடுற காலமிது. 2 மணி நேரம் மட்டுமே ஓடிய பிஸா, பில்லா1, போன்ற படங்களில் யாருமே அதை குறையாக பார்க்கல..ஆக, 2.15 மணி நேரம் குவாலிட்ட்டியா கொடுத்தா போதும்.2.45 மணி நேரமென்பது சுமை. இந்த வருடமே பல படங்கள் ரிலீஸ் ஆனவுடன் ட்ரிம் செய்யப்பட்டது. ஆனால் மவுத் டாக் வெளியானதை அது மாற்றாது. கொஞ்சம் வெட்டுங்க பாஸ்.

ஹரி வென்றிருக்கிறார் என்றுதான் சொல்வேன். இவர் பேரை Hurry என எழுதலாம். அத்தனை வேகம். இவர் போலீஸ் ஆகனும்ன்னு ஆசைப்பட்டாராம். அப்படி ஆக முடியாததால அவர் செய்ய நினைத்ததை படமா எடுக்கிறாராம். நீங்க நாசா விஞ்ஞானி ஆகனும்ன்னு ஆசைப்பட்டிருக்கலாம் ஹரி சார். கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கும் எங்களுக்கு.

சிங்கம் – காதுல கொஞ்சம் பஞ்ச வச்சிட்டு போனா நிறைய எஞ்சாய் செய்யலாம்.

டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எல்லாமே உண்மை. ஆனால் யார் மனதையும் புண்படுத்த அல்ல. அப்படி ஆகியிருந்தால் இனிமேல ஆகாம பார்த்துக்கோங்க J


Jun 30, 2013

தாயம்

61 கருத்துக்குத்து

ஒரு ஹீரோயிச பில்டப்புடனே தொடங்குவோம். என்னாயிட போகுது? J

  பள்ளி நாட்களில் நன்றாக படிக்கும் பையனாகத்தான் இருந்தேன். ஒரு நன்னாளில் என் ஆறாம் வகுப்பு அறிவியல் ஆசான் புத்தகத்தில் இருந்து கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் சரியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர் கபாலத்தில் மின்னி மறைந்தது அந்தக் கேள்வி.

“எதிர்காலத்தில் நீ என்னவாக போற?”

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் எதை சொல்லிக் கொடுக்கிறார்களோ இல்லையோ.. இதை கேட்க வேண்டுமென சொல்லியிருப்பார்கள் போலும். பாதிப் பேருக்கு பவர்ஸ்டாராகும் ஆசை இருந்தது. டாக்டர் என்றார்கள். மீதியில் பாதி பேர் எஞ்சினியர் ஆகிக் கொண்டிருந்தார்கள். கணக்கில் எப்போதும் ஃபெயிலானவன் கூட ஆடிட்டர் என்றான். நான் எழுந்த போது ஒரு அமைதி நிலவியது. ஏனென்றால் அதற்கு முந்தைய வருடம் இதே கேள்விக்கு “பெரியவன் ஆவேன்” என சொல்லி அடி வாங்கியிருந்தேன். இந்த முறை “அப்படிலாம் எதுவும் ஆசையில்லை சார். அப்படியே போய்ட்டு இருக்க வேண்டியதுதான்” என்றேன்.

  கிட்டத்தட்ட அது மாதிரிதான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. 2005 வரை சிங்கப்பூர் வாழ்க்கை. ஓரளவிற்கு வீட்டின் பொருளாதார தேவை பூர்த்தியானவுடன் இந்தியா வந்துவிட்டேன். இடையில் ஆஸ்திரேலியாவுக்கு migrate ஆக வாய்ப்பு வந்தும் போகவில்லை. இரண்டு வருடங்கள் TATA steelல் வேலை. அப்போது IT மீது ஆர்வம் வந்து ERP முடித்து, oracle corporationல் இரண்டு வருடங்கள். பின் Recruitment consultant. ஆனால் எந்த லைனுக்கு சென்றாலும் Mechanical Engineering consultant என்பதை விட்டுக்கொடுக்கவில்லை. இப்போது அந்த வேலைக்கும் கல்தா கொடுத்தாகிவிட்டது. வாழ்க்கை எங்கெங்கோ கைப்பிடித்து இழுத்து சென்று கடைசியில் கலைத்துறையில் விட்டுருக்கிறது.

  ஆம். ஒரே நேரத்தில் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கால் பதிக்கிறேன். எழுத்தாளர் பா.ராகவன் கதை திரைக்கதை எழுத, நீராவி பாண்டியன் இயக்கும் “தேவதை” நெடுந்தொடருக்கு நான் வசனம் எழுதுகிறேன். சன் தொலைக்காட்சியில் திங்கிள் – வெள்ளி வரை பகல் 12 மணிக்கு தேவதை நாளை முதல் வரவிருக்கிறாள். முதலில் பாரா என்னிடம் கேட்டபோது ஙே எனதான் நானும் முழித்தேன்.  அவர்தான் “எனக்கு நம்பிக்கை இருக்கு. உனக்கு ஆர்வம் இருந்தா முயற்சி செஞ்சு பாறேன்” என நம்பிக்கை விதைத்தார். அதோடு நில்லாமல் முதல் ஷெட்யுலில் நான் செய்த சொதப்பல்களை நேரம் செலவிட்டு செப்பனிட்டும் தந்தார். சீரியலின் சூட்சமங்களை சொல்லிக் கொடுத்தார். ஆக, முதன் முறையாக என் பெயர் திரையில் வரவிருக்கிறது.

   அடுத்து சினிமா. இதுவும் நான் எதிர்பாராத நேரத்தில் அமைந்தது. நம்ம கேபிள் சங்கர் படம் இயக்குகிறார். ”காமெடி போர்ஷன்” எழதுறியாடா எனக் கேட்டவருக்கு என் மீது பல வருடங்களாகவே நம்பிக்கை உண்டு. சரியென போய் நின்றேன். இப்போது முழு நேரமாக பணிபுரிகிறேன். பாரா போல கேபிளும் எனக்கு கிடைத்த ஜாக்பாட். கிட்டத்தட்ட எல்லா வேலைகளிலும் என்னால் ஈடுபட முடிகிறது. ஸ்க்ரிப்ட்,டிஸ்கஷன், ஸ்டோரி போர்ட், நடிகர்களுக்கு கதை சொல்லுதல், லோகேஷன் பார்த்தல், இசை என எல்லாவற்றிலும் என்னை அனுமதிக்கிறார். எது வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதை நிராகரிக்கும் காரணங்களை சொல்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மேலதிக விஷயங்கள் விரைவில்.

    சினிமாவா, சின்னத்திரையா என எந்த முடிவும் எடுக்கவில்லை. இரண்டிலும், ஒரு script writer ஆகத்தான் என்னை நினைத்துக் கொண்டு பணிபுரிகிறேன். வீட்டு டிவிக்கள் 42 இன்ச், 46 இன்ச் என பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. எதிர்பக்கம், திரையரங்க திரைகளின் அளவு சிறிதாகிக் கொண்டேயிருக்கிறது. அப்புறம் என்ன?  வழக்கம் போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இருக்கிறேன். இந்த இரண்டு புராஜெக்ட் முடிந்தபின்னால் திரும்பவும் வேலைக்கே போனாலும் சந்தோஷம் தான்.

   இந்த இரண்டு வாய்ப்புகளும் கிடைக்க ஒரே காரணம் இணையம்தான். பாரா, கேபிள் இருவரும் இணையம் மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம். எனக்கு ஏதோ தெரியுமென அவர்களை நம்ப வைத்ததும் இந்த இணையம் தான். ஆக, தொலைக்காட்சி & சினிமா குல வழக்கப்படி என்னை படித்து, உற்சாகமூட்டிய bloggers, twitters என உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். வேறு என்ன செய்ய? J

   தேவதை பகல் நேரத்தில் வருவதால் எப்படி பார்க்க என அலுத்துக் கொள்ள வேண்டாம். இணையத்தில் ஒரே நாளில் வந்துவிடுகிறது. அந்த இணைப்பை ஓரிரு நாளில் பகிர்கிறேன். அதை விட முக்கியமானது, target audience ஆன உங்கள் வீட்டு அம்மணிக்களையும், அம்மாக்களையும் பார்த்து கருத்துக் கேளுங்கள். மற்ற தொடர்களை விட சற்று காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கதாசிரியர்.

   நாளை என் பெயரை திரையில் காண ஆவலுடன் உள்ளேன். சொல்ல மறந்துட்டேனே.. ஏற்கனவே ஒரு கார்க்கி இருப்பதால், என் அப்பாவின் பெயரையும் இணைத்து “கார்க்கி பவனந்தி” ஆகியிருக்கிறேன். 

First Episode:
Jun 27, 2013

கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்சில்லா

7 கருத்துக்குத்து
”Machi.. busya? ungkitta konjam pesanumda”

ஜிடாக்கில் அவனிடம் இருந்து இப்படி ஒரு மெசெஜ் வந்தவுடன் புரிந்துவிட்டது ஏதோ முக்கியமான பிரச்சினை என்று. நைட்டு எட்டு மணிக்கு கால் பண்றேண்டா என்றேன். அவன் சொன்னது போல் பிரச்சினையை உங்களுக்கு சொன்னால் விசு படமோ, குட்டிப்புலியோ பார்த்தவர் போல் ஆகிவிடுவீர்கள் என்பதால் சுருக்கமாக சொல்கிறேன். ( புரியிற மாதிரி நீ சொல்லிட்டாலும்..)

இவன் பேரு மதி. ஓக்கே? ஓக்கே.

அவ பேரு ஆண்ட்ரியா. ஓக்கே? ஓக்கே.

  ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. வீட்ல பெரிசா ஒன்னும் எதிர்ப்பு இல்ல. ஆனா ஆண்ட்ரியாவுக்கு சர்ச்சில் திருமணம் நடக்கனும்ன்னு ஆசைங்க. நம்மாளுக்கு டாஸ்மாக்கே கோயில், வோட்காவே தெய்வம். இப்ப பையனோட அம்மா என்ன சொல்றாங்கன்னா, சர்ச்ல கல்யாணம் பண்ணா மதம் மாத்திடுவாங்க. நான் விசாரிச்சிட்டேன். மதம் மாறாம கல்யாணம் பண்ண மாட்டாங்கன்னு சொல்றாங்க. ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல கூட வச்சிக்கோங்க. கோயில பண்ணியாகனுன்னு நான் சொல்லல. ஆனா இவன் மதம் மாறக்கூடாதுன்னு சொல்றாங்க.கரெக்டுதானே?

  என்ன கரெக்டு?   சின்ன வயசில இருந்து கல்யாணம்ன்னா சர்ச்ல மட்டுமே பார்த்து வளர்ந்துட்டேன். அங்க நடந்தாத்தான் எனக்கு கல்யாணம் ஆன ஃபீல் இருக்கும்ன்னு ஃபீலிங்கா சொல்லுது பொண்ணு அதாங்க.. ஆண்ட்ரியா .அப்ப ஒரு கிறிஸ்டியன் பையனா பார்த்து லவ் பண்ண வேண்டியதுதானேன்னு சொல்றது அவளோட வருங்கால நாத்தனார், அதான் நம்ம ஹீரோவோட தங்கச்சி. ரைட்டுதானே?

  என்ன ரைட்டு? இதெல்லாம் பார்த்தா லவ் வரும்?அவ கோயில், சர்ச் ரெண்டுலயும் பண்ணலாம்ன்னுதானே சொல்றா? அப்புறம் என்னன்னு எகிறுவது நம்ம ஹீரோ. இந்த கதைல  வில்லனே இல்லை என்பதால் அம்மாவிடம் எகிறுகிறார். அது மட்டுமில்லாமல் மதம் மாறத் தேவையில்லையாம்ன்னு சொல்றாரு ஹீரோ. சரிதானே?

   என்ன சரி? உங்களுக்கு தெரியாதுடா. சர்ச்ல அப்படி பண்ன மாட்டாங்க. பேரையே மாத்திடுவாங்களாம். உனக்காக ஒத்துக்கறேண்டா. ஆனா ரெண்டு கண்டிஷன். சர்ச்ல உன் பேர மதின்னு தான் சொல்லனும். வேற பேரு சொன்னா புது கோட்டுன்னு கூட பார்க்காம அப்படியே உன்னை தரதரன்னு இழுத்துட்டு வந்துடுவேன். ரெண்டாவது , சர்ச்ல முதல்ல நடக்கட்டும். அதுக்கப்புறம் நாம கோயில்ல பண்ணிக்கலாம். இதுக்கு ஒத்துக்கறீயான்னு கேட்கறாங்க அவங்க அம்மா. வாஸ்தவம்தானே?

  என்ன வாஸ்தவம்? சர்ச்லதான் கடைசியா நடக்கனும்ன்னு அவங்க சொல்றாங்க. கோயில்ல அப்படி எந்த ரூல்ஸூம் இல்ல. அதனால் முதல்ல கோயில்ல பண்ணிடலாம். பேரு நான் மாத்தாம பார்த்துக்குறேன். என்ன சொல்றீங்கன்னு பதில் கேட்கிறார் மதி, பேரில் மட்டுமே வச்சிருக்கிறார்.
இப்படியே போது பிரச்சினை. பொண்ணு கல்யாணத்துக்கு பிறகும் சர்ச்சுக்கு போவதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நம்மாளு, கொஞ்ச நாள் அவள தாஜா பண்ன சர்ச்சுக்கு போவாரு. அப்புறம் அதுவும் ஸ்டாப் ஆகிடும். அவனையெல்லாம் மாத்த முடியாது. இப்ப பிரச்சினையே, 
மதம் மாறாம அவனால சர்ச்ல கல்யாணம் பண்ண முடியுமா? அந்த பொண்ணு ரோமன் கத்தோலிக். இவன் இந்து ,இல்ல இல்ல இவங்க அப்பா அம்மா இந்து. அதுக்கு பிஷப்பிடம் அனுமதி வாங்கினா பண்ணலாம்ன்னு இணையத்தில் தேடிய போது கிடைச்சது. என்ன விதி? 

இப்ப என் கவலையெல்லாம் அவன் கல்யாணம் என்னாகும்ன்றது பத்திலாம் இல்லைங்க.. கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி “அதை ஏண்டா என்ன பார்த்து கேட்ட”.. கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்சில்லா மாதிரி எனக்குன்னு வர்றானுங்க.. ச்சை

Jun 22, 2013

Best actor ever

18 கருத்துக்குத்து
சினிமாவை நான் காதலோடு ஒப்பிடுவேன். அது இரண்டு மனங்களுக்கு இடையே பேசப்படும் மொழி. திரைக்கும் பார்வையாளனுக்கும். இதில் படம் constant. பார்வையாளன் variable. பார்க்கும் இடம், சூழ்நிலை, மனநிலை என பல காரணிகளால் அனுபவம் மாறும். ஒரு படம் ஒருவருக்கு பிடிக்காமல் போவதும் இன்னொருவருக்கு all time fav ஆவதும் இதனால் கூட இருக்கலாம். ஒரே படம் முதலில் பிடிக்காமலும், பின்பு பித்து பிடித்தது போல் பிடிப்பதும் கூட இப்படித்தான். எதுவாயினும், அந்த மேஜிக் நடக்க வேண்டும். அதற்கான சூத்திரத்தை தாதா சாகேப் பால்கேவிலிருந்து இன்றைய இயக்குனர்கள் வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. காதலைப் போல, அதுவும் ஒரு மேஜிக்.

  தமிழ்நாட்டில் ஒவ்வொருவனுக்குள்ளும் ஓர் இயக்குனர் இருப்பான். ஒவ்வொருவரிடம் ஒரு கதை இருக்கும். ஆனால் நடிக்க சொன்னால் மட்டும் முடியாது. நடிப்பு என்பது என்னளவில் தனித்துவமானது. ஒரு படத்தை பார்த்து காப்பியடித்து இன்னொரு படமெடுக்கலாம். ஆனால் ஒருவரின் நடிப்பை பார்த்து அப்படியே காப்பியடிக்க கூட திறமை வேண்டும்

  தமிழ் சினிமா கதாநாயர்களில் எனக்கு பிடித்த “நடிகர்” என்றால் அது ரஜினிதான். ஏனோ எனக்கு கமல் வகையறாக்கள் செய்யும் Method actingல் நம்பிக்கையில்லை. தளபதி படத்தில் ஓர் காட்சி. ரஜினியின் ஆட்கள் ஒருவனை ரோட்டில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் வந்துவிடுகிறது. வேடிக்கை பார்க்கும் ரஜினி “போதும்” என்பது போல் கைக்காட்டுகிறார். 200 கிலோ தடியன்கள் உடனே அடிப்பதை நிறுத்துகிறார்கள். அந்த ஒல்லி உருவம் ஒரு தொள தொள சட்டையை போட்டுக் கொண்டு ஆட்டுவிக்கிறது. அந்த காட்சியில் ரஜினியின் உடல்மொழி அதை நம்ப வைக்கும். ரஜினி ஒரு பெரிய டான் என சிரத்தையின்றி நம்ப வைப்பார். 

   அப்படிப்பட்ட ரஜினிக்கு பிறகு ஒருவரை நடிப்பிற்காக பிடிக்கிறது. ஆபத்தான விஷயம் என்னவென்றால் ரஜினியை பிடித்ததை விட 100 மடங்கு அதிகமாய் பிடித்து தொலைகிறது. டிவியிலோ, அல்லது யாரோ ஒருவரின் மொபைலிலோ இவர் நடித்த காட்சி வருகிறதென்றால் அனுஷ்காவை பார்ப்பதை விட 4 மிமி அதிகமாய் வாய் பிளந்து பார்க்கிறேன். தளபதியில் ரஜினுக்கு இருந்ததை விட சில எலும்புகளும், சில மீட்டர் தோலும் இவருக்கு குறைவுதான். மாப்பிள்ளையின் மாப்பிள்ளை தனுஷைத்தான் அப்படி வெறித்தனமாக பார்த்து தொலைக்கிறேன்.   நேற்று ராஞ்சனா பார்க்க நேர்ந்தது. அசாத்தியமான நடிப்பை அசால்ட்டாக செய்திருக்கிறார் தனுஷ். வாரணாசி தெருக்களில் இவர் எப்போது வாழ்ந்திருப்பார் என்றுதான் நினைக்க வைக்கிறது. ஆடுகளம் படத்தில் மதுரையில் சுற்றிய அதே உருவம், மொழியிலிருந்து எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடிக்கிறது. நடிப்பு என்பது முகபாவங்கள் அல்ல. அது ஒரு thought process. மூளைக்குள் சென்று யோசிப்பதுதான் மேட்டர். தனுஷ் இந்த வகையறா. ஒரு சின்ன ஷாட் என்றாலும் அது தவறின்றி இருக்கிறது. கதை என்ன? எங்கு நடக்கிறது? இந்த பாத்திரத்தின் மேனரிசங்கள் என்ன? இவையெல்லாம் ஒரு கணிணியில் இன்புட் செய்வது போல, தனுஷிடம் சொல்லிவிட்டால் போதும், படத்தின் எங்கேயும் பிசிறாமல் பார்த்துக் கொள்கிறார். இதற்கு அசாத்திய உழைப்பும், அதீத திறமையும் தேவை. குன்னக்குடி வைத்தியநாதன் காம்போதி ராகத்தையே டீக்குடிப்பது போல் வாசிப்பாரே.. அதைத்தான் நடிப்பில் செய்கிறார் தனுஷ்.

   இவர் சிரித்தால் பிடிக்கிறது. அழுதால் அழ தோன்றுகிறது. ஏனெனில் அந்த பாத்திரம் எதற்காக அதை செய்கிறதோ, அதை உணர்ந்து செய்வதால். ராஞ்சனா படம் பெரிய அதிசயமெல்லாம் இல்லை. 3 படத்தின் இந்தி வெர்ஷன் எனலாம்., முதல் பாதி குதுகலமான காதல். இரண்டாம் பாதி கொஞ்சம் ஹெவி மெட்டிரியல்.(ஆனால் கதை முற்றிலும் வேறு). தனுஷின் தோற்றமும் 3 போலவேதான். இரண்டாம் பாதியில் திரைக்கதை தொப்பென விழுந்து படம் படுத்து விடுகிறது. ஆனால் நான் படம் முழுவதும் தனுஷை மட்டுமே பார்த்ததால் அத்தனை சோர்வாக தெரியவில்லை.

  கோடம்பாக்கத்தில் காலடி வைத்தபோது நலம் விரும்பி ஒருவர் என்னிடம் சொன்னது “உனக்கென ஒரு goal வைத்துக் கொள்”. அப்போது முடிவு செய்த ஒரே விஷயம். தனுஷை இயக்கிவிட வேண்டும். அது முடிந்ததும், இன்னொரு படம் சேர்ந்து பண்ணலாம் என அவர் சொல்ல வேண்டும். இது நடக்காமல் போகத்தான் வாய்ப்பு அதிகம். ஆனால் என் goal ல் கூட தனுஷ் இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்பதால் இதை வைத்துக் கொண்டேன். 

  ஒரு நாள் ட்விட்டரில் தனுஷை தமிழ் சினிமாவில் best actor என சொல்லியிருந்தேன்.ராஞ்சனா எனக்கே அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. Why dis kolaiveri பாடலுக்கு அந்த உலகப்புகழ் அதீதமாக தோன்றலாம். But dhanush truly deserves that. I am proud of him And love him. You rock man.

தனுஷுக்காக நான் நூறு முறைக்கு மேல் பார்த்த ஒரு காட்சிJun 17, 2013

பாண்டிச்சேரி

22 கருத்துக்குத்து
பாண்டிச்சேரியை பிடித்து தொலைப்பதில் இருக்கும் சிக்கலை சொல்லி மாளாது. “சரக்கா” என எளிதில் அதை கடந்துவிடுவார்கள். அது ஒரு சிறப்பான சிறப்பம்சம்தான் என்ற போதும் அதைத் தாண்டி எத்தனையோ விஷயம் இருக்கிறது பாண்டிச்சேரியிடம். சென்ற வாரயிறுதி பாண்டிச்சேரியில் பல வருடங்களுக்கு பிறகு  அதியற்புதமாக கழிந்தது.   சச்சின் டெண்டுல்கரை Straight drive அடிக்க சொல்லி,பந்து போன பாதையில் ஒரு கோடு போட்டு ரோடாக்கியது போலிருக்கும் ஃப்ரென்ச் சாலைகள். எவ்வளவு மழை பெய்தாலும் சரிவாக இருக்கும் சாலைகளில் மழை நீர் தேங்குவதில்லை. மழை வந்து கழுவி சென்ற சாலையில் நனைந்து கிடக்கும் பூக்கள் கொள்ளை அழகு. சென்னையில் மழை காதலியின் அண்ணனை போல எரிச்சல் தரவல்லது. பாண்டியில் அது காதலியை போன்றது. ரம்மியமானது. என் அதிர்ஷடம். நான் சென்றபோதும் மழை பெய்தது. மழை நின்ற சமயம் சிறிய மரமொன்றின் கீழ் நின்று கொண்டு, இலைகள் சேகரித்த துளிகளை உலுக்கி விழச்செய்தால் சென்னையில் நமக்கு பரிசாய் கஸ்மாலம் என்ற பட்டம் கிடைக்கும். பாண்டிச்சேரியில் ஒரு சிநேக புன்னகை கிடைக்கக்கூடும்.

   ஒவ்வொரு கோவிலுக்கும் அதன் வயது, அளவு என பல காரணிகளை வைத்து ஒரு வைப்ரேஷன் இருக்கும். போலவே ஊர்களுக்கும். பாண்டிச்சேரி இன்னமும் தனது ஃப்ரென்ச் தொடர்பை தொலைக்காமல் இருக்கிறது. அதனாலே அந்த மண் ஒரு பிரத்யேக அதிர்வை கொண்டிருக்கிறது. பயணமாக மட்டுமே சென்று வருவது முழுமையான அனுபவத்தை தந்துவிடாது. ஒரு வருடமாவது அங்கே வாழ்ந்திருக்க வேண்டும். TCS & infosys அங்கே வராமல் இருக்கும் வரை ஆபத்தில்லை.

 என் பால்யம் திண்டிவனத்தில் கழிந்தது. எந்த ஓர் நல்ல நாளுக்கும் துணியெடுப்பது கூட பாண்டிச்சேரியில்தான். பஸ் ஸ்டேண்டில் இறங்கினால் டெம்போக்கள் வரிசை கட்டியிருக்கும். நம்மை நாமே நாலாய் மடித்துக் கொண்டு டெம்போவுக்குள் செட்டில் ஆகி 2 ரூபாய் கொடுத்தால் 10 நிமிடங்களில் ராஜா தியேட்டர். இறங்கி ஒரு நெட்டி முறித்துவிட்டு வலது பக்கம் திரும்பினால் பாண்டிச்சேரியின் தி.நகர் ஆன நேரு வீதி. ஒவ்வொரு கடையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தால் 2 கிமீக்கு திருவிழாதான். ஞாயிற்றுக்கிழமையானால் எக்ஸ்ட்ரா குதுகலம். சண்டே மார்க்கெட். கல்லாப் பெட்டியை தவிர மத்த எல்லாமே 10ரூபாயோ, 20 ரூபாயோதான்.அம்மாவுடன் அண்ணனும் அக்காவும் செல்ல நான் அப்பாவுடன் idea மொபைல் தான். அதாங்க walk&talk. பாதி வழியில் லல்லுவில் ஒரு குல்ஃபி. லல்லு, ஆசிரமத்தால் நடத்தப்படும் கடை. மெனு மாறியிருக்கிறது. இப்போது 3 சுவைகளில் குல்ஃபி தருகிறார்கள். ஆனால் அந்தக்கடையின் வாட்டர் பாட்டில்களும் அன்பும் மட்டும் மாறவே இல்லை.

  லல்லுவை தாண்டி சென்றால் இந்தியன் காஃபி ஹவுஸ். சைவ உணவகமான போதும் இங்கே பிரெட் ஆம்லெட் மட்டும் கிடைக்கும். ஃப்ரென்ச் பூர்வீகம் காரணமாயிருக்கலாம். வீட்டில் சைவமென்றாலும் சிறுவயதில் வந்த இருதய வால்வு பிரச்சினை காரணமாக எனக்கு மட்டும் முட்டை உண்டு. அப்பா அதை அழகாக forkல் வெட்டி சாப்பிட கத்து தருவார்.  வைக்கப்படும் டிப்ஸ்களை ஒரு உண்டியலில் போட்டு பின் அதை பகிர்ந்துக் கொள்வார்கள் சர்வர்கள். இதை கவனித்து அப்பாவிடம் சொல்லி வெரி குட் வாங்கியது ஒரு மாதம் வரை மனதை சந்தோஷமாக வைத்திருந்த காலமெல்லாம் உண்டு.

   அதைத் தாண்டி சென்றால் பீச் வந்துவிடும். பாண்டிச்சேரியின் பீச் ஒர் அற்புதம். உண்மையில் அங்கே பீச் கிடையாது. மணலை பார்க்கவே முடியாது. சாலையை விட பல அடிகள் தாழ்வாகத்தான் கடல் இருக்கும். கடல் முடியும் முன்னரே சாலைகள் ஆரம்பித்துவிடும். எனவே கற்களை கொண்டு நிரப்பியிருப்பார்கள். அலைகள் வேகமாய் மோதி எழுவதை பார்ப்பது சுகானுபவம். இம்முறை சென்றபோது மழைத் தூறிக் கொண்டிருந்தது. ஒரு கல்லின் முனையில் குடை பிடித்தப்படி ஓர் இளம் ஜோடி கடலை ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு அழகான காட்சியது. புகைப்படம் எடுக்க அனுமதி கேட்க சென்றால் கூட தொல்லையாய் இருக்குமென எடுக்கவில்லை. எத்துனை முறை பார்த்தாலும் சலிக்காதது உலகில் இரண்டுதான். ஒன்று கடல். இன்னொன்று நீயென அதே இடத்தில் என் தோழி சொன்னது நினைவுக்கு வருகிறது. கடல் மட்டும் இதில் constant. நான் என்பது variable. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நபர்.

   Sea view இருக்கும்படி ஒரு உணவகம் இருந்தது. இப்போது அதைக் காணவில்லை. ஆனால் சாலைக்கு அந்தப்பக்கம் ஏதோ ஒரு பெரிய உணவகம் வந்திருக்கிறது. கண்ணாடியின் வழியே கடலைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம்.  அடுத்த முறை சென்றுவிட வேண்டும். கடற்கரையின் இன்னொரு அதிசயம் பானிபூரி வண்டிகள். இதிலென்ன அதிசயம் என்பவர்கள் ஒரு முறை சாப்பிட்டுவிட்டு சொல்லலாம். நெல்லை அல்வாவை நெல்லையிலே சாப்பிட வேண்டுமென்றில்லை. ஆனால் இதை பாண்டியிலே சாப்பிட வேண்டும்.

  பாண்டிச்சேரியில் பெயர்கள் சுவாரஸ்யமானவை.Goubert என்பதை குபேர் என்பார்கள். சந்திரன் என்பதை chedureuen என்பார்கள். நியுமராலாஜியெல்லாம் இல்லை. ஃப்ரென்ச் பழக்க வழக்கம். கண்பத்ர என ஒரு உணவகத்துக்கு அடிக்கடி அழைத்து செல்வார் அப்பா. அது கணபதிராம் என 10 வருடங்கள் கழித்துதான் எனக்கு தெரிந்தது.
கடற்கரையை முடித்துவிட்டு, மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்வது சம்பிரதாயம் என நீண்ட நாட்கள் நினைத்திருந்தேன். அம்மா அப்படித்தான் செய்வார்கள். அந்த கோவில் மட்டும் எனக்கு பிடிக்காது. என் பால்யத்தின் பல முக்கிய கனங்கள் அந்த கோவிலின் க்யூவில் தான் வீணாய் போனது.அப்பாவுக்கும் கடவுள் ஆகாது. இம்முறை போன போது கூட ஒரே ஜம்ப்பாக ஆசிரமம் பக்கம் போய்விட்டேன். ஆம். கோவிலுக்கு அருகிலே அரவிந்தர் ஆசிரமம்.


  இதையெல்லாம் முடித்துவிட்டு திரும்பும்போது மட்டும் ஆட்டோ எடுத்துவிடுவார் அப்பா. நேராக பஸ் ஸ்டேண்டுக்கு அருகில் இருக்கும் ஹோட்டல் மாஸ். திண்டிவனத்தில் அப்போது AC உணவகங்கள் கிடையாது.(இப்போது இருக்குமென யூகிக்கிறேன்). ஆக அங்கே இரவு உணவு முடித்து திண்டிவனம் பேருந்து ஏறினால் தூக்க்கம். திண்டிவனம் வந்தவுடன் அப்பா எழுப்புவார். இம்முறை எல்லா இடத்திற்கும் அப்பா இல்லாமல் சென்று வந்தேன். யதேச்சையாக ட்விட்டரை நோண்டிய போதுதான் தெரிந்தது நேற்று அப்பாக்கள் தினமாம். L

இணைய மொண்ணையர்களும், எழுத்துலக ஜமீன்தார்களும்

34 கருத்துக்குத்து

  நேற்று நடந்த நீயா நானாவில் பங்கேற்றதை குறித்தும்,அதை தொடர்ந்த சில இணைய விவாதங்கள் குறித்தும் சில விஷயங்களை பேசலாம் என நினைக்கிறேன்.

  நேற்றைய நீயா நானாவின் சிறப்பு விருந்தினர் என யாருமில்லை. இதுவா அதுவா என இரண்டு பக்க விவாதமும் இல்லை. தெளிவான தலைப்பும் இல்லை. கோபி கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக யோசித்து யார் தொடர்புடைய பதிலை, சுவாரஸ்யமாக, முக்கியமாக முதலாவாதாக மைக் கிடைத்து சொல்கிறார்களோ அவர்களுக்கே வாய்ப்பு. அந்த கதையை விட்டுவிடுவோம். இந்தப் பதிவின் நோக்கம் நீயா நானா குறித்தல்ல. அதன் பின் நடந்த உரையாடல் பற்றியது.

  கெளதம சித்தார்தன் என்பவர் வந்திருந்தார். ஆரம்பம் முதலே அமைதியாகவே இருந்தவருக்கு இறுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பேச கோபி இடமளித்தார். ஆச்சரியமாக இருந்தது. பின்னர்தான் தெரியும், அவர் அதற்கு முன் தன் ஒரு சிறுப்பத்திரிக்கையில் நீயா நானாவை கிழித்து தோரணம் தொங்க விட்டுருந்தாராம். நேற்று மனுஷ்யபுத்திரன் அவர்கள் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். கெளதம சித்தார்தன் என்ற அறிஞர் பேசும்போது எல்லோரும் அசிரத்தையாக இருந்ததாகவும், 2 நிமிடமே பேசிவிட்டு “நான் நிறைய பேசிட்டேனோ” என கெளதம் சொன்னது வருத்தமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். நேரலைக்கு மட்டுமே மனுஷ் செல்வதால் இப்படி நினைத்துவிட்டார் போலும். அன்று அவர் பேச ஆரம்பித்த முதல் 10 நிமிடங்கள் அவர் என்ன பேசினார் என்பது கோபிக்கே விளங்கவில்லை. அவர் பேசியதை அவரே கேட்டு கெளதமுக்கே கிட்டத்தட்ட தூக்கம் வந்துவிட்டது. பின்னர்தான் சமாளித்து ஏதோ பேசினார். கெளதம சித்தார்தன் பெரிய எழுத்தாளராக இருக்கலாம். நிறைய செய்திருக்கலாம். நீயா நானா அரங்கிற்கு வரும் முன்பு வரைக்கும் அவர் செய்த எல்லாம் எங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவரும் நிகழ்ச்சிக்கு வந்தார். 10 நிமிடம் தொடர்ந்து அசுவாரஸ்யமாக பேசினார். அதுவும் இரவு 1 மணிக்கு. அப்போது பார்வையாளர்கள் அசிரத்தையாக இருப்பது யதார்த்தமான ஒன்றுதான். இதிலென்ன தவறென தெரியவில்லை. நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவருக்கு மட்டும் அரை மணி நேரம் மைக் கிடைப்பது சாதாரண வாய்ப்பில்லை. கோபிக்கே கூட சில சமயம் அது வாய்ப்பதில்லை. அந்த சூழ்நிலையில் மொக்கையாக பேசிய கெளதம சித்தார்தனை ஏன் கொண்டாடவில்லை என கேட்பது, ஆழ்வாருக்கு ஏண்டா அஜித்துக்கு ஆஸ்கர் கொடுக்கல என்பது போன்றதுதான். அஜித் நல்ல நடிகராக இருக்கலாம். ஆழ்வார் மொக்கை என்பதே பாயிண்ட்.

  இதில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. ஜெமோ, சாரு இப்போதும் மனுஷும் சேர்ந்து தொடர்ந்து தமிழ் இணையவாசிகள் என்றாலே இணைய மொண்ணையர்கள் என்று ஸ்தாபிக்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள். நேற்று கெளதம சித்தார்தனும் இதையேதான் சொன்னார் என்றாலும் அவரின் நோக்கம் வேறு. அவரை விட்டுவிட்டு மும்மூர்த்திகளுக்கு செல்வோம். இணையத்தின் மிக முக்கியமான பாசிடிவ் என்னவென்றால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இருக்கும் தூரம் குறைவு. எழுத்தாளன் செய்யும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக் காட்டுவதுடன் ஸ்க்ரீன்ஷாட் வேறு எடுத்து வைத்துவிடுகிறான் இந்த இணைய மொண்ணை. விசிலடிச்சான் குஞ்சுகள் என சினிமா ரசிகனை கிண்டலடித்தாலும் இவரக்ளும் கிட்டத்தட்ட அந்த இடத்தில் வைத்து வாசகன் தங்களை வழிபட வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். சாருவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும், ஜெமொவின் எழுத்தல்லாத மற்ற நடவடிக்கைகளை கவனித்தாலும் இது புரியும்.

  ஒரு முறை சாரு  வாரமலர் லெவல் கவிதையை இதுதான் இலக்கியம் என சிலாகித்தார். அடுத்த சில நாட்களிலே அந்த கவிதாயினியுடனான சாரு செய்த chat வெளியானது. சாரு சிலாகித்ததற்கான காரணம் தெரிந்தவுடன் அந்த பதிவை தளத்திலிருந்து எடுத்துவிட்டார். ஆனால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிட்டார்கள் இணைய மொண்ணைகள். இன்னொருமுறை விக்கிபீடியாவை நம்பி, அதிலிருந்த கதையை படித்து விமர்சனமே எழுதுவிட்டார் சாரு. ப்ளீச்சிங் பவுடர் என்ற பதிவர் அதையும் குறிப்பிட்டு பதிவு எழுதியவுடன் கேப்டன் போல கண் சிவந்தார் சாரு.
ஜெமோவும் விதிவிலக்கல்ல. ராம்ஜீ யாஹூ என்பவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கமெண்ட் பாக்ஸையே மூடிவிட்டார்.

   இந்த இணைய மொண்ணைகளின் வெற்றி என்ன தெரியுமா? ஜெமோவின் விஷம் கக்கும் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டு புனைவுகளை மட்டும் கொண்டாடுகிறார்கள். சாருவின் வாசகர் கடிதத்தை கூட புனைவு என்ற பிரிவில் சேர்த்து படித்து மகிழ்கிறான். ஒரு அன்னப்பறவை போல இவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை கேலி பேசுகிறார்கள்.. இவர்களின் பிம்பம் சரிய காரணமாயிருக்கிறார்கள். என்ன செய்வார்கள்? பேசி,விவாதித்து காப்பாற்றிக் கொள்வது சாத்தியமில்லாத போது அவ்வாறு சொல்பவனையே மொண்ணை என்று சொல்லிவிட்டால்?? இதைத்தான் செய்கிறார்கள். திமுகவுக்கு சமீபகாலமாக காவடி தூக்கும் மனுஷுக்கும் இந்த வழி எளிதானதாக தெரிந்தது. ராசா, வண்டியை அந்த பக்கமே விட்டுவிட்டார்.

   ஆக, இணையத்தில் மொண்ணைகளே இல்லையா என்பீர்களேயானால், இருக்கிறார்கள். முன்பெல்லாம் அரசியல் நிகழ்வு குறித்தோ, அல்லது ஒரு சமூக அவலம் குறித்தோ எத்தனை பேர் விவாத்திருப்பார்கள்? இணையம் வந்த பின் இந்த விழுக்காடு எங்கேயோ போய்விட்டது. செக்கோஸ்லோவேக்கியா என்ற நாட்டின் பெயரை எந்த குழந்தையும் முதல் தடவையே சரியாக சொல்லிவிடாது.(அந்த நாடு இரண்டாக பிரிந்தபோது அதிக சந்தோஷமடைந்தவன் நானாகத்தான் இருப்பேன்) ஆர்வம் காரணமாக இது போன்ற விஷயத்தில் கருத்து சொல்கிறவர்கள் மொண்ணையாக தெரியலாம். ஆனால் அவர்கள்தான் பிற்காலத்தில் பக்குவப்படுகிறார்கள். இதற்கு பல பேரை உதாரணமாக சொல்ல முடியும். விஷயம் என்ன்வென்றால், சரியோ தவறோ இது போன்ற நிகழ்வுகள் குறித்து பல பேர் பேசுவது மிக மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். இதுதான் எழுத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை. என் வேலையை நீ செய்தால் எப்படி? பிறகு நான் எதற்கு என்ற ஈகோ.
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது ட்விட்டரில் ஒரு hashtag - வோடு ஒரு பெரிய கூட்டம் கிளம்பியது. கிட்டத்தட்ட எல்லாமே பகடி வகை ட்வீட்ஸ்தான். ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம் அசாத்தியமானது. ஈழ விஷயத்தை முன்வைத்து காங்கிரசை ஒதுக்கியவர்கள் அன்று ஏராளம். அதில் பாதி பேருக்கு மேல் இன்று காங்கிரசை புறக்கணிக்க வேண்டிய காரணம் புரிந்து புறந்தள்ளுகிறார்கள். இந்த தொடர்பை புரிந்துக் கொள்ள வேண்டும். அன்று மொண்ணையாக காங்கிரசை சாடியவர்கள் பிற்காலத்தில் தொடர்ந்த வாசிப்பாலும், கவனிப்பாலும் புரிந்துக் கொள்கிறார்கள். முன்னோக்கி செல்கிறார்கள். ஆனால் ஜெமொவுக்கும், சாருவுக்கும் சாதாரணமானவர்கள் செய்யும் இந்த பங்களிப்பு பிடிக்கவில்லை. அவர்களுக்கான முக்கியத்துவம் குறைவதாக கவலைக் கொள்கிறார்கள்.

  இதில் சாரு ஒரு படி அதிகம். அவருக்கு உரிய அந்தஸ்தை தமிழ்ச்சூழல் வழங்கவில்லையாம். அவர் புத்தகங்கள் போதிய அளவு விற்கவில்லையாம். அதனால உலக சந்தைக்கு செல்கிறார்களாம். முதலில் ஜெமோ, எஸ்ரா அளவிற்கு இவர் புத்தகங்கள் விற்கிறதா? இல்லை. சோம.வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம், மதனின் வந்தார்கள் வென்றார்களோடு சாருவை ஒப்பிடவில்லை. சக இலக்கிய எழுத்தாளர்களின் விற்பனையயே சாரு தொடவில்லை. அடுத்த சுஜாதா என சொல்லிக்கொள்பவர், அவரின் ராயல்டியில் 10% கூட வாங்கியிருக்க மாட்டார் என்பதுதான் நிதர்சனம். ஜெமொவை பார்த்து நீங்க ஏழாவது பாஸ்ஸூன்னே. நான் sslc ஃபெயில்ண்ணே என சொல்லும்பொருட்டு ஆங்கில சந்தைக்கு செல்லும் சாரு, இன்னும் ஏழாவதே பாஸாகவில்லை என்பதை என்றுதான் உணர்வாரோ.


(தொடரும்)
 

all rights reserved to www.karkibava.com