Nov 13, 2012

நான் காலியான கதை - 2

24 கருத்துக்குத்து

 

நான் காலியான கதை - 1

   இப்படியொரு மகோன்னத வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்த என்னை ஒருத்தி திரும்பி பார்க்க வைக்கிறாள்ன்னா அவ எப்படிப்பட்ட ஆளா இருக்கணும்??அட அக அழகு விடுங்க. அது சொல்லி புரியாது. பார்க்கிறதுக்கு எப்படி இருப்பானாச்சும் சொல்லணும் இல்லை? சொல்றேன்.

    ரெயின் போன பின்னாடி வருமே ரெயின்போ... அந்த வில்லை நேராக்கி அங்கங்க செதுக்கி வச்ச மாதிரி இருப்பாங்க. ஊட்டிப் பக்கம் டூர் போகும்போது ஃப்ரெஷா எடுத்து வச்சிருப்பாங்களே கேரட். அத பார்க்கும்போதெல்லாம் அவளோடு உதடு மாதிரி அதுவும் பேசுமான்னு டவுட்டு வருங்க.. "உண்மையில் உன் மையில் கரைகிறது காலம்"ன்னு எழுத வச்சதே அவ கண் மை தான். அந்தக் காலத்துல அரசர்கள் அரண்மனையை சுற்றி அகழி வைப்பாங்க இல்லை. அதுதான் ஞாபகம் வரும் அவ கண்ண பார்க்கும்போதெல்லாம். அவ கேரட் உதட்ட சுழித்து அந்த அகழி கண்ணால ஒரு மாதிரி பார்ப்பா பாருங்க.. அதுக்கு நான் "யார்க்கர்"ன்னு பேரு வச்சிருக்கேன்.. தோனி மாதிரி ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் அடிக்க முயற்சி பண்ணதே இல்லை நான். ஏன்னா அவுட் ஆக்கிட்டு, அவுட் ஆனவனை ஓடி வந்து கட்டிப்பிடிக்கும் வித்தியாச ப்ரீத்தி ஜிந்தா அவள். ஆனால் அந்த யார்க்கர் எனக்கென பிரத்யேகமாய் அவள் வீசும் பந்து என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மைக்ரான் அளவே விழும் அவள் கன்னக்குழியில் நான் விழுந்து பல நாளாயிடுச்சு. ம்ஹூம். அவளா கைக்கொடுத்து தூக்கி விட்டால்தான் தாண்டி போக முடிகிறது. காதுல விழும் முடியை லைட்டா ஒதுக்கிட்டு ஐ லவ் யூ டின்னு சொல்லலாம்ன்னுதான் போறேன். தேவர் மகன் ரேவதி கணக்கா வெறும் காத்துதான் வந்து தொலைக்குது. கிட்டத்தட்ட ஒரு பொண்ணு எப்படியெல்லாம் இருக்கணுமோ அப்படியெல்லாம் இருப்பான்னு வச்சிக்கோங்க. மொக்கை மாபாதகன் சிவா சொன்னது போல "குட்டு ஃபிகருக்கு அட்டு பையந்தான் கிடைப்பான்" என்பது உண்மையாயிடுச்சு என் விஷயத்துல. இத நான் அவக்கிட்ட சொன்னபோது நீ அட்டான்னு சண்டைக்கு வந்துட்டா. "இல்லை செல்லம். என் ட்விட்டர் ஹேண்டில் @iamkarki தானே?. அத சொன்னேன்"ன்னு சமாளிச்சேன். அப்படி பார்த்தா அவ பேருக்கும் முன்னாடி @ தானே வரும்னுலாம் அவ யோசிக்கல. அப்ப‌டி யோசிச்சா என்னை எப்படி லவ் பண்ணுவான்னு எவனாச்சும் கமென்ட் போட்டீங்க.. கபாலத்துல காளியாம்பாள் கதகளி ஆடிடுவா. உங்க கபாலாம் வேற கால் கிரவுண்ட் இருக்கும். ஈசியா ஆடிடுவா ஜாக்கிரதை.

இது எல்லாமே சூப்பர்னாலும் நான் மொத்தமா விழுந்தது அவ சிரிப்புலதாங்க. சரக்க வாங்கி, மிக்ஸிங் வாங்கி,சைட் டிஷ் வாங்கி,கூட அடிக்க நண்பன கூப்பிட்டு, இடம் பார்த்து உஸ்ஸ்ஸ்ஸ்ஸ். இதெல்லாம் எதுக்குங்க? கொஞ்சம் சிரியேன் செல்லம்ன்னு சொல்லி அத பார்த்தா போதும். கிர்ருன்னு ஏறிடும். நிறைய தடவ அவள சிரிக்க வச்சு பார்த்துட்டு சந்தோஷமா பைக் ஓட்டிட்டு போறப்ப போலீஸ் மாமா என்னை Drunk&drive ல புடிச்சிட்டாருன்னா பார்த்துக்கோங்களேன். யாருக்காவது அந்த தோழி யாருன்னு கேட்கணும்ன்னு தோணுச்சுன்னா ஒரு க்ளு தர்றேன். "யார் சிரிக்கிறத பார்த்தா உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரை ஒரு வித சிலிர்ப்பு வந்து குஜாலாகிறீங்களோ.. அவதான் அவ".

image

இப்ப கவிதைக்கு வருவோம். மடக்கி மடக்கி எழுதறது எல்லாம் கவிதை இல்லீங்கண்ணா.. அவள மாதிரி ஒருத்திய மடக்கிய பிறகு எழுதறோம் பாருங்க.. அது கவிதை. சேம்பிளுக்கு ஒண்ணு சொல்றேன் பாருங்க. அன்னைக்கு நாங்க வழக்கமா மீட் பண்ற இடத்துல சந்திச்சிட்டு டைமாயிடுச்சுன்னு அவ கிளம்பி போனா. வழக்கமா ஒரு ஆப்ஜெக்ட் நம்ம கண்ண விட்டு தூரமா போனா சின்னதாதானே தெரியும்? ஆனா அன்னைக்கு அந்த ஃபிசிக்ஸே எங்க கெமிஸ்ட்ரி முன்னால மாறிடுச்சு. அந்த அற்புத தருணத்த நான் கவிதையா எழுதி வச்சிருக்கேன். படிங்க‌ளேன்.


அவள் விசித்திரமானவள்.
விட்டு விலகி தூரம் செல்ல செல்ல
பெரிதாகிக் கொண்டேயிருக்கிறாளென் கண்களுக்கு

இதான் சார் அவ. அப்படியே சட்டுன்னு அதுவரைக்கும் நாம வாழ்ந்த உலகத்த திருப்பி போட்டுடுவா. ஒண்ணுமேயில்லாத சப்பை விஷயத்த கூட அவ இருக்கும்போது அழகா பார்க்க வச்சிடுவா. இன்னொரு நாள் அப்ப‌டித்தான் வெயில்ல நடந்து போயிட்டே இருக்கேன். அவ பின்னாடி வர்ற மாதிரி ஒரு பிரமை. உடனே மூளை பேனாவ எடுக்க, மனசு பேப்பர நீட்ட ரெடியாயிடுச்சு இன்னொரு கவிதை

"நான் தானே நடக்கிறேன்.
அது என்ன?
என் பின்னால்
உன் நிழல்

காதலிச்சா மட்டும் கவிதை வராது சார். அவள மாதிரி ஒரு பொண்ண காதலிக்கணும். அட.. நான் எப்படி அவள காதலிச்சேன்? எப்ப காதல சொன்னேன்? அவ ஓக்கே சொன்னாளா? இது எதுவுமே சொல்லாம ஃபீலிங்க்ஸ கொட்டுறேன் இல்லை. அடுத்த பார்ட்ல அந்த விஷயத்தையும் சொல்லிடறேன்.

 

all rights reserved to www.karkibava.com