Jul 2, 2012

உடன்பிறப்புகளே


 

குறும்படம் எடுப்பது தும்முவதை போலாகிவிட்டது. எப்படி வலைப்பூக்கள் எழுத்தென்னும் கலையை கெடுத்து விட்டதாக புலம்புகிறார்களோ அதே கதைதான். 6000 ரூபாய் கைப்பேசியிலே படமெடுத்துவிடலாம். டொரென்ட்டின் உதவியுடன் மிகச்சிறந்த எடிட்டரிலே வெட்டி ஒட்டி விடலாம். பவர்பாயின்ட்டில் டைட்டிலை அழகழகாய் ஓட விடலாம். ஓரடி மைக்கிலே டப்பிங்கை முடித்து,இணையத்தில் மேய்ந்தால் பின்னணி இசை கோப்புகள் எல்லா காட்சிகளுக்கும் ஆயிரமாயிரம் கிடைத்துவிடும். இறுதியாக A film by ______ என்றொரு வாக்கியத்துடன் படத்தை முடித்து யூட்ய்பூனாந்தாவிடம் சம்ர்ப்பித்துவிட்டு, ஃபேஸ்புக் பிளாக் ப்ளஸ் என சேர்த்துவிட்டால் முடிந்தது. You are a film maker now.

கிட்டத்தட்ட எல்லாம் இல்லை. நான் எடுத்த, நடித்த எல்லா குறும்படங்களும் இதே குப்பைதான். (A film by Karki என்று மட்டும் போட்டுக் கொண்டதில்லை.) குறைந்தபட்ச முன்னேற்பாடுகள் கூட செய்ததில்லை. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. யார் யார் எல்லாம் வெட்டியா இருக்காங்களோ, அவர்களை காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாய் போய், மண்டையில் எப்போதோ யோசித்துவைத்த பாடாவாதி ஒன்லைனர்களில் ஒன்றை டிக் அடித்து விட வேண்டியது. பிறகு அதை படமெடுக்கிறேன் பேர்வழியென லோலாய்த்தனம் பண்ணிவிட்டு, உங்கள் பார்வைக்கு விட்டுவிட வேண்டியது. இதை மட்டும்தான் செய்திருக்கிறேன். ஏனெனில் அப்போதெல்லாம், எனக்கு அந்த நாளை சுவாரஸ்யமாய் கடத்த வேண்டுமென்ற நோக்கம் மட்டும்தான். அந்த குடிபோதையின் முடிவாக நாங்களெடுத்த ஆஃப்பாயில்தான் அந்தப் படங்கள். அதான் கூகிள் இலவசமா பட்டா தந்திருக்கானே என்ற மமதையில் ரிலீஸும் செய்தாயிற்று. சொல்லவே வெட்கமாக இருக்கிறது.

ஒரு நல்ல நாளில் பலராமன் என்பவர் அழைத்தார். பெங்களூர் வாசியான அவர் என்னோடு ஒரு படம் பண்ண வேண்டுமென்றார். அதுக்கென்ன பாஸ். வாங்க ஜமாய்ச்சிடலாம் என்றேன்.அவரே என் பதிவில் ஒன்றை டிக் அடித்திருந்தார். இம்முறை என் உட்டாலாக்கடி முகத்தை காட்ட வேண்டாமென்று அவரையே இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தேன். (அது பற்றி இப்பதில் முடிஞ்சா படிச்சிக்கோங்க). அப்போதுதான் பலரமான பழக்கமானார். அவரும் ஒரு  Short film maker என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் முதல் பத்தியில் சொன்னது போன்ற ஆளில்லை.

பலராமனின் முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு வருட வித்தியாசம். ஆனால் ஒரு வருடத்தில் ஆறு மாதாமவது அடுத்த படத்திற்காக உழைத்திருக்கிறார். சென்ற வாரம் வெளியான உடன்பிறப்புகளே இவரது படம்தான். இதன் ஒன்லைனர் உருவாக்கிய நாளிலிருந்து என்னிடம் விளக்கியிருக்கிறார். பென்சிலால ஒரு நோட்டில் சீன் எழுத ஆரம்பித்து பின் வசன‌ங்கள் என முழுமையாய் அர்ப்பணித்து உருவாக்கினார். ஸ்க்ரிப்ட் தயார் ஆனவுடன் பெஙக்ளூர் நண்பர்களுடன் ஒரு ஞாயிறு மாலையில் இது குறித்தும் கலந்துரையாடினார். நண்பர்களின் ஆர்வம், படத்தை அடுத்துக்கட்டத்திற்கு நகர்த்தியது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆட்கள் தேடும்பணி ஆரம்பமானது. மீண்டும் சந்திப்பு. மீண்டும் சந்திப்பு. ஒத்திகை. சந்திப்பு.

படத்திற்கு என்னென்ன தேவையோ அது தயார் செய்துவிடுவார். எங்க கதை வேற. துப்பாக்கி இல்லையே கார்க்கி என ஆதி சொன்னால், கதைப்படி கத்தியில் குத்திக் கொல்வான் வில்லன். அவ்வளவுதான். ஆனால், பலராமன் அப்படியில்லை. சென்னையில் இருந்து துப்பாக்கியை வரவைப்பார். அந்த ஈடுபாடும், உழைப்பும்தான் என்னை பலராமனை ஆச்சரியமாய் பார்க்க வைக்கிறது. அவரது படங்கள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனா நான் சொல்ல வருவது, அவரது டெடிகேஷனை. இன்றைய காலத்தில் ஒரு குறும்படத்தின் அதிகப்பட்ச வாழ்வு 3 நாட்கள். அதன் பின்னர் மறந்துவிடுவார்கள். அந்த மூன்று நாள் கூத்துக்காக அவர் செலவழிக்கும் காலம் ஒரு வருடம். அதனால் என்ன? படம் சரியில்லை என்று சொல்லலாம். ஆனால் என்றாவது அவர் மிகச்சிறந்த குறும்படம் ஒன்றை எடுத்தால் அதற்கு இவையெல்லாம் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். இருந்தே தீரும்.

ஏற்கனவே சொன்னது போல குறும்படம் எடுப்பதே ஒரு அலாதியான விஷயம். ஒரு மண்ணும் தெரியாத 4 பேரு சேர்ந்து ஏதோ தெரிந்தது போலவே கலந்து பேசி, படத்தையும் எடுத்து உஸ்ஸ்ஸ்.. இந்த காமெடிய பாருங்க.

உடன்பிறப்புகளே குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.படத்தையும், படம் பற்றிய மற்ற விவரங்களையும் இயக்குனர் பதிவில் இங்கே காணலாம்.

Links:

youtube channel

Facebook page

____________________

Few tweets

Vijaygopalswami@VG_S

உடன்பிறப்புகளே படத்த இப்பத்தான் பாத்தேன். டரியல்... குறிப்பா நம்ம @TPKD_ அண்ணே சிறப்போ சிறப்பு :))

பாலா @Piliral

உடன்பிறப்புகளே அட்டகாசமான ஆரம்பம் தொடரட்டும் கலக்கல்... @tpkd_ @iamkarki @balaramanl @ikingkafil @lalitharam

selventhiran@selventhiran

கதை, வசனம், நடிப்பு, இசை, தொழில் நுட்பம் என சகல பரிமாணங்களிலும் படுதிராபையாக இருந்தது 'உடன் பிறப்புகளே' குறும்படம்.

Balaraman@BalaramanL

பலரால் குறையாக பார்க்கப்பட்டவை - பின்குரல், ஒலிப்பதிவு, நடிப்பு, நாடகத்தன்மை. #உடன்பிறப்புகளே

Kokilah Kanniappan@kokilahkb

@BalaramanL விறுவிறுப்பாக இருந்தது :-) இன்னும் பல முயற்சிகளைத் தொடர வாழ்த்துகள் :-) உடன்பிறப்புகளே குழுவினருக்கு ஒரு சபாஷ் :-)

4 கருத்துக்குத்து:

s suresh on July 2, 2012 at 12:11 PM said...

சிறப்பான படம்! சிறப்பான பதிவு!

Muthukumar.Govindasamy on July 2, 2012 at 12:13 PM said...

நல்ல கதை + திரைக்கதை. எதார்த்த நடிப்பு வெளிவரவில்லை என்பதை தவிர, இது ஒரு சிறந்த முயற்சி. முதல் படத்தை இனிமேல் தான் பார்க்கணும்.

சங்ககிரி ரமேஷ் on July 2, 2012 at 1:43 PM said...

இதுவரைக்கும் பாத்ததுலயே படு மொக்கையான குறும்படம் உடன்பிறப்புகளே. too many twists for a short film..poor voice syncing..யதார்த்தமா இல்ல..

Anonymous said...

இதை எங்கள் உழைப்புக்குக் கிடைத்த பரிசாக நான் எடுத்துக் கொள்கிறேன். நண்பர்களின் பாராட்டை விட உற்சாகம் தருவது வேறெதுவுமில்லை. நன்றி சகா.

 

all rights reserved to www.karkibava.com