Jul 26, 2012

ஒன்லைனர்

9 கருத்துக்குத்து

 

Everyதிங்கள் is impossible

எல்லா இறைவனும் புகழுக்கே

காதல் கண்ணுக்கு இல்லை.

மறையொன்றும் இல்லை குறைமூர்த்தி கண்ணா #நாத்திகர்கள் வெர்ஷன்

என் வாழ்க்கைடா இது

பிள்ளையார் படம் # மத கேலண்டர்.

கையில இருக்கே சிங்கம். கவலை ஏண்டா தங்கம். #தோழி வெர்ஷன்

பூனைக்கு பிறந்ததுதானே புலியாகிறது?

தூக்கம் #ரீஸ்டார்ட்

Jul 13, 2012

பில்லா - நல்லா

38 கருத்துக்குத்து

 

நீண்ட முடியுடன் மார்க்கெட்டில் தகறாரு செய்யும் ”ஏய்ய்ய்ய்ய்ய்” வில்லனை துவம்சம் செய்யும் ஹீரோவின் அடிபொடிகள் ஓரமாக நிற்கவும். விளிம்பு நிலை மாந்தர்களின் விட்டேத்தியான வாழ்க்கையை பதிவு செய்வது ஒவ்வொரு கலைஞனின் கடமை என்பவர்கள் அவர்களுக்கு பின்னால் நிற்கவும். படம்ன்னா நம்மள போட்டுத் தாக்கணும். ரெண்டு நாள் நம்மள ஆக்ரமிக்கணும் என்னும் வேலையில்லா பட்டதாரிகள் நிற்காமல் ஓடி விடவும். இது தல சாம்ராஜ்யம். இங்கு நல்லவனுக்கு வேலையில்லை. நாம வாழணும்ன்னா எத்தனை பேரை வேணும்னாலும் கொல்லலாம் என்னும் அதிரடி தலபாட்டை இது. பில்லா, அசல்,மங்காத்தா, ட்ரெண்டில் இன்னொரு அதகளம் தான் பில்லா2.

ஒரு படத்தில் எது இருக்கிறதோ இல்லையோ. தல இருந்தால் போதும் என்ற தமிழ் சினிமா இலக்கணத்தை மீண்டுமொருமுறை அழுத்தமாக நிரூபிக்கிறது இப்படம். இலங்கை அகதியாக இந்திய எல்லைக்குள் வருகிறார் டேவிட் பில்லா. இதற்கு முன் இலங்கை தமிழை எத்தனை பேர் பேசி நடித்திருக்கிறார்கள்? ஆனால் அஜித்தின் மாடுலேஷனுக்கு முன்னால் தெனாலி கமலே டக் அவுட் தான்.மாஸ் மட்டுமல்ல நடிப்புக்கும் நான் தான் அத்தாரிட்டி என்று தல சொல்லி அடிக்கும் அந்த அகதிகள் முகாம் எபிசோட் பட்டாசு. “நாங்க அகதிங்க தான். அநாதை இல்லை” என்ற வசனத்தை தனக்கேயுரிய பிரத்யேக உச்சரிப்பில் தல சொல்லும் போது ஒட்டு மொத்த அரங்கமும் அதன் வலி உணர்ந்து அமைதி காக்கிறது. தல மட்டுமல்ல, தல ரசிகனும் அடிப்படையில் மனிதாபிமானம் உள்ளவன் என்று ஆத்மார்த்தமாக உணர்ந்த தருணமது.

முகாமிலிருந்து இருந்து சென்னைக்கு வைரங்களை கடத்தும் வேலையை செய்கிறார் அஜித்.சென்னையில் இளவரசுவின் அதை ஒப்படைக்கும்போது தாம் ஏமாற்றப்பட்டோம் என்று தெரியும்போது “இதெல்லாம் எனக்கு தூசு” என்பதை தனது அசால்ட்டான பாடி லேங்குவேஜ் மூலம் மட்டும் வெளிப்படுத்துகிறார். அங்கே தொடங்குகிறது பில்லாவின் தாதாபயணம். கதை மட்டும் கேட்காதீர்கள். கதை சொல்லும் சினிமா இல்லை பில்லா. இது வரலாறு. ஒரு மாபெரும் கேங்ஸ்டரின் வாழ்க்கை வரலாறு. அது ஒரு நேர்க்கோட்டில் பயணிக்குமா? திரைக்கதை ஆங்காங்கே ஜம்ப் அடிப்பது போல் எழுதிய இயக்குனரை எப்படி பாராட்டுவது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றிர்க்கு மேற்பட்டவர்கள் இருந்தாலே கேங் தான் என எத்தனை பேருக்கு தெரியும்? அஜித்தின் கேங்கில் அவர், ரஞ்சித். இருவர் மட்டுமே. படத்தில் அஜித்தின் தலையீடே இல்லை என்று சொன்னார். ஆனால் அஜித் வாழ்க்கை பற்றிய குறியீடுகள் படம் நெடுக விரவிக் கிடக்கின்றன.

கோவாவுக்கு அஜித் செல்லும் போதே அரங்கில் அதிரடி ஆரம்பமாகிவிட்டன. இந்தியாவின் மிகப்பெரிய டானுக்கு ஒரு அசைன்மெண்ட் வருகிறது. ரிஸ்க் என கைக்கழுவ பார்க்கிறார். அஜித் முடிச்சு தறேன் என களத்தில் இறங்குகிறார். ஏதோ ஒரு ஸ்பெஷல் டீம் இன்வால்வ் ஆகியிருப்பதால் பெரிய ரிஸ்க் என்கிறார் இந்திய டான். இண்ட்டெர்னேஷன்ல் டான் சிரித்துக் கொண்டே செல்கிறார். தன்னை பெரிய திறமைசாலியாக நிரூபிக்கும் முக்கிய காட்சி. எப்படிடா காப்பாத்துவாரு என சீட்டின் நுனிக்கு வரவைத்த இயக்குனர், நம்மை மூக்கின் மீது விரல் வைக்க சொல்கிறார். இந்த காட்சியை விளக்கவெல்லாம் முடியாது. திரையில் பார்த்து அதிசயித்து போவதுதான் நியாயம். அஜித் இந்தக் காட்சியில் க்ளாஸ்.

அங்கே இருந்து ஜார்ஜியாக்கு செல்கிறது திரைக்கதை. பெரிய ஆயுத வியாபாரியுடனான வர்த்தகம் பேசி முடிக்கிறார். அஜித்தின் ஸ்டைலிஷான உடைகளும், அட்டகாசமான நடையும் நம்மை முழுமையாக ஆக்ர்மித்துக் கொள்ளும் வேளையில் இடைவேளை. கிட்டத்தட்ட துள்ளிக் குதிக்காத குறை. இப்படி ஒரு ஆக்‌ஷன் படம் பார்த்து எத்தனை நாட்களாயிற்று?

”போட்டுக் கெடுத்து கெட்டு போனவன் இருக்கான். ஆனா கோட்டு போட்டு கெட்டுப் போனவனே இல்லை” – இடைவேளை கமெண்ட்

”சார். தலையை இறக்குங்க” என்றார் பின் சீட்டுக்காரர். “டேய். தலையவா இறக்க சொல்ற” என சண்டைக்கு போனேன். “உங்க தலைய சொன்னேன் சார்” என ஜகா வாங்கினார். அவர் எனக்கு மட்டும் இல்லைடா. உனக்கும் தலதான் என்று வீம்பாக சண்டை போட்டுவிட்டி இரண்டாம் பாதிக்கு தயாரானேன்.

இரண்டாம் பாதிதான் படத்துக்கு உயிர். அடுத்து என்ன நடக்கும் என இருக்கும் நகத்தையெல்லாம் கடிக்க வைக்கும் திரைக்கதை. ஆக்ரோஷமான அஜித்தின் நடிப்பு.தாறுமாறான யுவனின் பின்னணி இசை என ஒரு உலகப்பட ரேஞ்சுக்கு எடுத்திருக்கிறார்கள். டானுக்கு ஏது எமோஷன்ஸ்? தனது ஜோடியை வில்லன் க்ரூப் கழுத்தை அறுத்துக் கொண்ண அடுத்த நிமிடம் தல சொல்கிறார் “என் வாழ்க்கைல ஒவ்வொரு…..” . அதாவது எனக்கு காதலியும் வேண்டாம் என்பதை தலையே முடிவு செய்து அவன் மூலமாக கொல்ல வைக்கிறார். இப்படி சொல்ல்க் கொண்டே போகலாம். புத்திசாலித்தனமான காட்சிகள் பல புரியாமல் விட்டுவிடுவது நல்லதுதான். இன்னொருமுறை பார்க்க அதுவே காரணமாக இருக்கும்.

நான் சொல்லும் எதையுமே உங்களால் படம் பார்க்காமல் உணர முடியாது. இணையம் முழுக்க இருக்கும் தல எதிர்ப்பாளர்களின் வதந்திகளை நம்பாமல் படத்துக்கு போங்க. பில்லாக்கு நான் கியாரண்ட்டி.

எக்ஸடசியில் இருக்கிறேன். பில்லா ஹேங் ஓவர் அடங்க எனக்கு சில நாட்கள் ஆகும். அதனால் பதிவை முழுதாக முடிக்க முடியவில்லை.

Jul 8, 2012

ஈடா ஈடா ஈடா..எந்த படமுமில்லை இதற்கு ஈடா

26 கருத்துக்குத்து

 

ஒரு அக்மார்க் ஈரோயிச படம்.

பாட்டி வடை சுட்ட கதையை சுவாரஸ்யமாய் சொல்லும் கதை சொல்லிகள் உண்டு. புளியமரத்தில் இருக்கும் ஜடாமுனியை லாலிபாப் ரேஞ்சுக்கு சொல்பவர்களும் உண்டு. ராஜ்மெளலி(இயக்குனர்) முதல் வகை. எந்த ஒரு சாதாரன ஒன்லைனரையும் தனது அழுத்தமான திரைக்கதையாலும், அனாயசமான மேக்கிங்காலும் அக்மார்க் எண்டெர்டெயினராக மாற்றுவதில் கில்லாடி. மகதீரா பார்த்த மயக்கத்தில் இவரின் அனைத்து தெலுங்கு படங்களையும் தேடித்தேடி பார்த்த காலமுண்டு. தமிழகத்தில் இவரின் எல்லா படங்களையும் பார்த்த ஒரு சிலரில் நானும் ஒருவன். கொடுமை என்னவென்றால் கஜேந்திரா, ஸ்டூடண்ட் நம்பர் 1 எல்லாம் இவரின் படங்கள்தான். தோசை மாவில் மட்டுமல்ல சுவை என்பதற்கு அந்த ரீமேக்குகள் சாட்சி.

நான் ஈக்கு வருவோம். ட்ரெயிலரிலே கதை சொல்லிவிட்டார்கள் சமந்தாவும் நானியும் காதலர்கள். சுதீப்(வில்லன்) ஒரு காமந்திரன். சமந்தாவை அடைய எண்ணி நானியை போட்டுத் தள்ளுகிறான். நானி, ஈயாக வந்து சுதீப்பை போட்டுத் தள்ளுகிறான். தட்ஸ் ஆல். இதையெல்லாம் கண்டுபிடிப்பது ஒரு விஷயமே இல்லை.ஆனால் அடுத்து எப்படி இவை நடக்கின்றன என்பதில் இருக்கிறது திரைக்கதை சுவாரஸ்யம். என்னைப் போன்ற வெறித்தனமான ராஜ்மெளலி ரசிகர்களுக்கு இது கைகூடியிருக்க கூடும். படம் நெடுக அவரின் க்ளிஷே திரைக்கதை என்றாலும் களம் புதிது என்பதால் ஈர்க்கிறது.

முதல் முக்கால் மணி நேரம் சமந்தா நானி காதல் போர்ஷன். அதில் கூட சின்ன சின்ன சுவாரஸ்யங்களும், காதலை ரசிக்கும்படியும் இருப்பது ராஜ்மெளலி ஸ்பெஷல். நானியை நவீன கார்த்திக் என்று கூட சொல்லலாம். மெளன ராகம் ரேஞ்சுக்கும் அவருக்கு அழுத்தமான பாத்திரம் இல்லை. அவரும் அந்த கார்த்திக் அளவிற்கு துறுதுறு இல்லை. ஆனால் சொல்லலாம். கெளதமின் நீதான் என் பொன் வசந்தம் தெலுங்கு பதிப்பில் நானிதான் நாயகன். அட, சமந்தாதான் நாயகி.

நானி ஈயாக பிறப்பதில் ஆரம்பிக்கிறது நான் ஈ. வசனமே இல்லாமல், கிராஃபிக்ஸையும், பின்னணி இசையையும் நம்பி 10 நிமிடங்களுக்கு மேல் ஓட்டுகிறார் இயக்குனர். அரங்கம் ஆரப்பரிக்க தொடங்குகிறது. நானி, நான் ஈ டா என அட்டகாசமாய் கிளம்புகிறார். உடனே ”இனி..இடி” என இடைவேளை போடாமல் இரண்டு சேம்பிள் அதகளங்களை எடுத்து விடுகிறார் ராஜ்மெளலி. அதிலே மிரண்டு போய்விடுகிறார்கள் ரசிகர்கள்.  முதல்முறையாக தமிழக அரங்கில் இடைவேளைக்கு கைத்தட்டல் சத்தம் சீலிங்கை முட்டியதை கேட்க முடிந்தது.

ராஜ்மெளலியிடம் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், எந்த ஒரு விஷயத்தை கையிலெடுத்தாலும் அதில் சாத்தியப்படும் எல்லா க்ரியேட்டிவிட்டியையும் எடுத்து விடுவார். எல்லாமே கனக்கச்சிதமாக ஸ்க்ரிப்ட்டிலே பொருந்துவது கூடுதல் சிறப்பு. ஒரு ஈயை வைத்து என்னவெல்லாம் யோசிக்க முடியும்? அதுவும் அநத ஈக்கு சிறப்பு பேய்த்தனங்கள் எதுவும் கிடையாது. படம் பார்க்கும் முன் முடிந்தால் இந்த ஹோம் ஒர்க்கை செய்து பாருங்கள். எத்தனை காட்சிகள் உங்களால் யோசிக்க முடிகிறது என்பது சுவாரஸ்யமான ஒன்றாய்தானே இருக்கும்?

ஒவ்வொரு கேரக்ட்ரைசேஷனும் அழகு. சமந்தா ஒரு மினியேச்சர் ஆர்டிஸ்ட். ஈ போன்ற ஒரு சின்ன பறவைக்கு உதவப் போகும் பெண் இப்படி ஒரு திறமை கொண்டவராக அமைத்தது திரைக்கதையில் எப்படியெல்லாம் உதவும்? அதே போல் நானி பட்டாசு தொடர்புடைய வேலை செய்கிறார். வில்லன் துப்பாக்கி ஸ்பெஷலிஸ்ட். எல்லாமே திரைக்கதைக்கு தேவைப்படுகிறது. பார்த்து பார்த்து பாத்திரங்கள் பிடிக்கிறார் ராஜ்மெளலி. ஒரு காட்சியில் கூட இருக்கட்டும் எடுத்து வைங்க என்ற பாலாத்தனம் கிடையாது. தீர்க்கமான ஸ்க்ரிப்ட், அதற்கு அர்ப்பணிப்பான மேக்கிங். இதுதான் சார் என் சீக்ரெட் என திரைமொழியில் சொல்கிறார்.

காதலர்களின் தேசியப் பறவையாக இனியும் பட்டாம்பூச்சியை சொல்ல முடியாது. ஈயாக மாறிவிடக்கூடும்.இந்த ஈதய காதல் நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் நல்லதொரு இடம் பிடிக்கும்.ஸ்க்ரிப்ட் பக்கா என்றால் யார் வேண்டுமென்றாலும் ஹீரோவாகலாம். ஒரு ஈயை ஹீரோவாக்கி, ஹீரோவை சூப்பர் ஹீரோவாக்கியதெல்லாம் உச்சக்கட்ட அதகளம்.

கன்னடத்திற்கு சுதீப், தெலுங்கிற்கு நானி.. தமிழ் போஸ்டருக்கு ஆளில்லையென சந்தானத்தை சேர்த்திருக்கிறார்கள் ஒரே ஒரு காட்சியில் போனவர் க்ளைமேக்ஸ் முடிந்து பேர் போடும்போது வருகிறார். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியில் வீட்டுக்கு செல்ல நினைத்தவர்களை நிறுத்தி ஒரு அட்டகாசமான ஸ்வீட்பீடா தருகிறார், படம் பாருங்க. புரியும்.

எழுதிக் கொண்டே போகலாம். நான் ஈ பற்றியும், ராஜ்மெளலி பற்றியும், ஒரு தடவ பார்த்துட்டு வந்துடுங்களேன்

நான் ஈ – Flies well

Jul 4, 2012

jail bharo

11 கருத்துக்குத்து

இன்று திமுக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகிறார்கள். அம்மா பெரியதாய் ஏதும் அலட்டிக் கொண்டதாய் தெரியவில்லை. அவர் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என வழக்கம் போல் இணைய புரட்சியாளனாய் யோசித்த விஷயங்களை பார்க்கலாம்

 

1)  உள்ள போறவங்க எல்லோரும் ராசா மாதிரி நெஞ்சுக்கு நீதி புக்க‌ படிச்சே தீரணும்ன்னு ஆத்தா ஆர்டர் போட்டிருந்தா ஒரு பய வந்திருக்க மாட்டான்

2) ஒவ்வொரு செல்லையும் கொரில்லா செல்லாக மாத்தி வடிவேலுவை பத‌றி ஓடச் செய்தவரை போன்ற ஆட்களை சேர்த்து அடைத்து விடலாம்.

3) சடார்ன்னு ஜாமீன் கட்டணத்தை 100 மடங்கு ஏத்தி ஆர்டர் போட்டுடலாம். பெட்ரோல் மாதிரி அடுத்த வாரம் இறக்கிடலாம். கல்லா நிரம்பி வழியும்

4) போன போராட்டத்துல செய்த மாதிரி எவன்லாம் குஷ்பூ இடுப்ப கிள்றதுக்காக வந்திருக்கான்னு கேமரா வச்சு புடிப்போம்ன்னு அறிவிச்சுடலாம். பாதி கூட்டம் கம்மி ஆயிடும்

5) திமுக உறுப்பினர் அட்டை காமிச்சாதான் உள்ள விடுவோம்னு சொல்லிடலாம். கள்ள திமுககாரன் மாட்டிப்பான். அதிமுக அட்டையை காமிச்சாதான் வெளிய விடுவோம்னு சொல்லிடலாம். அம்மாவுக்கு ஆளு சேரும்

6) இன்று ஒரு நாள் ஜெயில் எல்லாம் பொதுமக்கள் பார்வைக்குன்னு சொல்லிட்டு அனுமதிக் கட்டணமா தலைக்கு 1000 ரூபாய் வாங்கிடலாம்.

7)புதன்கிழமை ஆனா புழல்ல சிக்கன் போடுறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டுதான் இன்னைக்கு தேதிய குறிச்சிருக்காரு அரசியல் சாணக்யாரு. அதனால இன்னைக்கு மட்டும் காக்கா பிரியாணி போட்டுடலாம். கோஷம் போடுறவங்க எல்லாம் "திமுக திமுக"ன்னு கத்துறதுக்கு பதிலா "காகாகாகா"ன்னு கத்துவாங்க.

 

அம்மாவின் ராசி எண் 7 ஆக மாடிவிட்டப்படியால் இதோடு முடித்துக் கொள்கிறேன்.

Jul 2, 2012

உடன்பிறப்புகளே

4 கருத்துக்குத்து

 

குறும்படம் எடுப்பது தும்முவதை போலாகிவிட்டது. எப்படி வலைப்பூக்கள் எழுத்தென்னும் கலையை கெடுத்து விட்டதாக புலம்புகிறார்களோ அதே கதைதான். 6000 ரூபாய் கைப்பேசியிலே படமெடுத்துவிடலாம். டொரென்ட்டின் உதவியுடன் மிகச்சிறந்த எடிட்டரிலே வெட்டி ஒட்டி விடலாம். பவர்பாயின்ட்டில் டைட்டிலை அழகழகாய் ஓட விடலாம். ஓரடி மைக்கிலே டப்பிங்கை முடித்து,இணையத்தில் மேய்ந்தால் பின்னணி இசை கோப்புகள் எல்லா காட்சிகளுக்கும் ஆயிரமாயிரம் கிடைத்துவிடும். இறுதியாக A film by ______ என்றொரு வாக்கியத்துடன் படத்தை முடித்து யூட்ய்பூனாந்தாவிடம் சம்ர்ப்பித்துவிட்டு, ஃபேஸ்புக் பிளாக் ப்ளஸ் என சேர்த்துவிட்டால் முடிந்தது. You are a film maker now.

கிட்டத்தட்ட எல்லாம் இல்லை. நான் எடுத்த, நடித்த எல்லா குறும்படங்களும் இதே குப்பைதான். (A film by Karki என்று மட்டும் போட்டுக் கொண்டதில்லை.) குறைந்தபட்ச முன்னேற்பாடுகள் கூட செய்ததில்லை. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. யார் யார் எல்லாம் வெட்டியா இருக்காங்களோ, அவர்களை காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாய் போய், மண்டையில் எப்போதோ யோசித்துவைத்த பாடாவாதி ஒன்லைனர்களில் ஒன்றை டிக் அடித்து விட வேண்டியது. பிறகு அதை படமெடுக்கிறேன் பேர்வழியென லோலாய்த்தனம் பண்ணிவிட்டு, உங்கள் பார்வைக்கு விட்டுவிட வேண்டியது. இதை மட்டும்தான் செய்திருக்கிறேன். ஏனெனில் அப்போதெல்லாம், எனக்கு அந்த நாளை சுவாரஸ்யமாய் கடத்த வேண்டுமென்ற நோக்கம் மட்டும்தான். அந்த குடிபோதையின் முடிவாக நாங்களெடுத்த ஆஃப்பாயில்தான் அந்தப் படங்கள். அதான் கூகிள் இலவசமா பட்டா தந்திருக்கானே என்ற மமதையில் ரிலீஸும் செய்தாயிற்று. சொல்லவே வெட்கமாக இருக்கிறது.

ஒரு நல்ல நாளில் பலராமன் என்பவர் அழைத்தார். பெங்களூர் வாசியான அவர் என்னோடு ஒரு படம் பண்ண வேண்டுமென்றார். அதுக்கென்ன பாஸ். வாங்க ஜமாய்ச்சிடலாம் என்றேன்.அவரே என் பதிவில் ஒன்றை டிக் அடித்திருந்தார். இம்முறை என் உட்டாலாக்கடி முகத்தை காட்ட வேண்டாமென்று அவரையே இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தேன். (அது பற்றி இப்பதில் முடிஞ்சா படிச்சிக்கோங்க). அப்போதுதான் பலரமான பழக்கமானார். அவரும் ஒரு  Short film maker என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் முதல் பத்தியில் சொன்னது போன்ற ஆளில்லை.

பலராமனின் முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு வருட வித்தியாசம். ஆனால் ஒரு வருடத்தில் ஆறு மாதாமவது அடுத்த படத்திற்காக உழைத்திருக்கிறார். சென்ற வாரம் வெளியான உடன்பிறப்புகளே இவரது படம்தான். இதன் ஒன்லைனர் உருவாக்கிய நாளிலிருந்து என்னிடம் விளக்கியிருக்கிறார். பென்சிலால ஒரு நோட்டில் சீன் எழுத ஆரம்பித்து பின் வசன‌ங்கள் என முழுமையாய் அர்ப்பணித்து உருவாக்கினார். ஸ்க்ரிப்ட் தயார் ஆனவுடன் பெஙக்ளூர் நண்பர்களுடன் ஒரு ஞாயிறு மாலையில் இது குறித்தும் கலந்துரையாடினார். நண்பர்களின் ஆர்வம், படத்தை அடுத்துக்கட்டத்திற்கு நகர்த்தியது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆட்கள் தேடும்பணி ஆரம்பமானது. மீண்டும் சந்திப்பு. மீண்டும் சந்திப்பு. ஒத்திகை. சந்திப்பு.

படத்திற்கு என்னென்ன தேவையோ அது தயார் செய்துவிடுவார். எங்க கதை வேற. துப்பாக்கி இல்லையே கார்க்கி என ஆதி சொன்னால், கதைப்படி கத்தியில் குத்திக் கொல்வான் வில்லன். அவ்வளவுதான். ஆனால், பலராமன் அப்படியில்லை. சென்னையில் இருந்து துப்பாக்கியை வரவைப்பார். அந்த ஈடுபாடும், உழைப்பும்தான் என்னை பலராமனை ஆச்சரியமாய் பார்க்க வைக்கிறது. அவரது படங்கள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனா நான் சொல்ல வருவது, அவரது டெடிகேஷனை. இன்றைய காலத்தில் ஒரு குறும்படத்தின் அதிகப்பட்ச வாழ்வு 3 நாட்கள். அதன் பின்னர் மறந்துவிடுவார்கள். அந்த மூன்று நாள் கூத்துக்காக அவர் செலவழிக்கும் காலம் ஒரு வருடம். அதனால் என்ன? படம் சரியில்லை என்று சொல்லலாம். ஆனால் என்றாவது அவர் மிகச்சிறந்த குறும்படம் ஒன்றை எடுத்தால் அதற்கு இவையெல்லாம் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். இருந்தே தீரும்.

ஏற்கனவே சொன்னது போல குறும்படம் எடுப்பதே ஒரு அலாதியான விஷயம். ஒரு மண்ணும் தெரியாத 4 பேரு சேர்ந்து ஏதோ தெரிந்தது போலவே கலந்து பேசி, படத்தையும் எடுத்து உஸ்ஸ்ஸ்.. இந்த காமெடிய பாருங்க.

உடன்பிறப்புகளே குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.படத்தையும், படம் பற்றிய மற்ற விவரங்களையும் இயக்குனர் பதிவில் இங்கே காணலாம்.

Links:

youtube channel

Facebook page

____________________

Few tweets

Vijaygopalswami@VG_S

உடன்பிறப்புகளே படத்த இப்பத்தான் பாத்தேன். டரியல்... குறிப்பா நம்ம @TPKD_ அண்ணே சிறப்போ சிறப்பு :))

பாலா @Piliral

உடன்பிறப்புகளே அட்டகாசமான ஆரம்பம் தொடரட்டும் கலக்கல்... @tpkd_ @iamkarki @balaramanl @ikingkafil @lalitharam

selventhiran@selventhiran

கதை, வசனம், நடிப்பு, இசை, தொழில் நுட்பம் என சகல பரிமாணங்களிலும் படுதிராபையாக இருந்தது 'உடன் பிறப்புகளே' குறும்படம்.

Balaraman@BalaramanL

பலரால் குறையாக பார்க்கப்பட்டவை - பின்குரல், ஒலிப்பதிவு, நடிப்பு, நாடகத்தன்மை. #உடன்பிறப்புகளே

Kokilah Kanniappan@kokilahkb

@BalaramanL விறுவிறுப்பாக இருந்தது :-) இன்னும் பல முயற்சிகளைத் தொடர வாழ்த்துகள் :-) உடன்பிறப்புகளே குழுவினருக்கு ஒரு சபாஷ் :-)

 

all rights reserved to www.karkibava.com