Jun 26, 2012

காடுகள் மலைகள் தேவன் கலைகள்


 

மனிதர்களும் நகரங்களும் ஒவ்வாமல் போகும்போது காட்டுக்குள் சென்றுவிட வேண்டும் என்பது போல தோன்றும்.இம்முறை அப்படியில்லாமல் மனதிற்கு விருப்பமான சில நண்பர்களுடன் மலையேறலாம்(Trekking) என முடிவானது. சென்னைக்கு அருகில், ஆந்திர எல்லையில் இருக்கும் நாகாலா மலைத்தொடருக்கு செல்வதாக திட்டம்.

  காடுகள் மனித மிருகங்களுக்கும் பிடித்தமான ஒன்றுதான் என்பதை மீண்டும் இம்முறை உணர முடிந்தது. மலையை நெருங்கும் வேளையில், அவரவர் வயதை மறந்து ஒரு உற்சாக மனநிலையில் முன்னேறி கொண்டிருந்தனர். இப்படி முகத்திலறையும் காற்றோடு கைகுலுக்கி நடைபழகி வெகு காலம் ஆயிற்று.காற்று முகம் தழுவிய பாங்கு, வாழ்வில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு முத்தம் தருபவனின் கவனத்தை ஒத்திருந்தது. கறிக்குழம்பில் இருப்பதிலே ஆக சிறந்த துண்டை தம்பிக்கு லாகவமாக பறிமாறும் அக்காவின் அன்பு போல அத்தனை சுத்தமான காற்றை சுவாசிப்பதே அலாதியாக இருந்தது. வீசும் காற்றெங்கும் மெல்லிய ஈரம் கலந்திருந்தது.

எனக்கு என்னவோ காடுகளிலும், மலைகளிலும் வசிப்பவர்கள் மட்டும்தான் வாழ்வதாக நம்பிக்கை. நாம் சுவாசித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறோம். மலையின் வழியே இறங்கி ஓடி வரும் ஓடையின் வாலை பிடித்த பின், நதிமூலத்தை தேடி பயணம் ஆரம்பமானது. . நான் அருலிருந்து பார்த்து பழகிய நண்பர்கள் தனியே நடந்து செல்கையில் வித்தியாசமானவர்களாக தெரிந்தனர். இயற்கையோடு அவர்கள் இணையும் தருவாயில் கடலில் கலந்த ஆறாக தன்மை மாறிவிடுகிறார்கள்.காடுகளும், மலைகளும் ஒரு மனிதனின் சுபாவத்தையே மாற்றிவிடுகின்றன‌.

வழியெங்கும் மின்சார வெளிச்சமில்லை. சூரிய வெளிச்சம் மரங்களில் விழுந்து சுத்தமாகி ஒழுகிக் கொண்டிருந்தது. நில்லாமல் ஓடும் ஓடையின் சீரான ஒலி, ஒரு உணர்ச்சிமயமான காட்சிக்கு முழுப் பொருத்தமாய் கோர்க்கப்பட்ட இளையராஜாவின் இசைக்கு ஒப்பானதாக இருந்தது. களைப்பு தெரியாமல் நடக்க அது போதுமானதாகவும் இருந்தது. வழியெங்கும் காட்டுப்பூக்களுடன் கைலுக்கிக் கொண்டே நடப்பது மகோத்துவமான ஒன்றாக இருந்தது.  மேகம் மிதக்கும் அவ்வானத்தையோ, அல்லது பூமி முடியும் அந்த எல்லையையோ என்றேனும் போய் பார்த்து விட வேண்டும் என உள்ளுக்குள் ஒரு அசரீரீ சொல்லிக் கொண்டேயிருந்தது. ஜென் குருக்கள் காடுகளில் வாழ்ந்திருக்க முடியாது. காடுகள் தான் அவர்களை உருவாக்கியிருக்க கூடும்.

வாழ்க்கைப் பயணம் நொண்டியடிக்கும் போதெல்லாம் ஒரு பயண வாழ்க்கை என்னை உற்சாகப்படுத்தி விடுகிறது. அருவிகள் ஆர்ப்பரிக்கும் காட்டை ஒரு சில நொடிகள் உற்றுப் பார்த்தால் போதும். மெளனத்தை சடாரென போர்த்திக் கொள்ளும். யாருக்காகவும் பொழிவதில்லை நிலா என்பது போலதான் காடுகளும். வாழ்வின் உன்னதமான சந்தோஷங்கள் எதுவும் விலைக் கொடுத்து வாங்குபவையாக இல்லை.

  மலையேறுவதை மட்டுமே ஒரே ஒரு பொழுதுபோக்காக கொண்டவர்களிடன் பேச்சுக் கொடுத்தேன். இத்தனை கடினமான ஒரு பயணம் அவர்களுக்கு எந்த மாதிரியான சுகத்தை கொடுக்கிறதென்பதை அறியும் ஆவல் என்னை ஆட்கொண்டிருந்தது.

பெரும்பாலானவர்களுக்கு மனித வாசனையற்ற இடமாக இருக்க வேண்டும் என்பதே காரணமாக இருக்கிறது. மாதத்தில் ஓரிரு நாட்கள் இந்த மாதிரியான இடங்களுக்கு வந்துவிட வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு போதையாகத்தான் இருக்கிறது. இரண்டு இரவுகள் கடுமையான மலைப்பயணத்தின் முடிவில் , ஒரு காட்டு யானையின் பிளிறலை மட்டுமே கேட்டு லயித்ததை உற்சாகமாய் சொன்னார் அவர். பார்க்கவும் இல்லை, சத்தத்தை மட்டுமே கேட்டார்களாம். காடுகள் அவர்களின் காதலிகள். இருந்தும், அவர்கள் சல்லாபிப்பதில்லை. அன்பை மட்டும் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். ஆம், அந்த நண்பர் காடெங்கும் என்னைப் போன்றவர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். காட்டிற்கு முன் அவர் வாமணன் தானே? தன்னாலான அளவிற்கு குப்பைகளை சேகரித்து நாட்டுக்குள் கொண்டு வந்து போடுகிறார். கொஞ்சம் என்னிடம் கொடுங்களேன் என்று சொல்லுமளவிற்கு நான் எப்போது நல்லவானாவேன் என்று தெரியவில்லை.

பயணம் முழுவதும் உதிராப்புன்னகையொன்று அனைவரின் இதழ்களிலும் பூத்திருந்தது. மலையிறங்கியப்பின் நீரில்லா நீர்த்தேக்கம் ஒன்றில் அமர்ந்து அளவளாவிய போது களைப்பான முகங்கள் அடுத்த முறை எப்போது போகலாம என விசாரித்தது ஆசுவாசுமாய் இருந்தது.

  காட்டு ராணியே!! உன்னை கற்பழிக்க இனி கூட்டம் கூட்டமாய் வந்துக் கொண்டுதானிருப்போம்.

12 கருத்துக்குத்து:

rathinamuthu on June 26, 2012 at 10:26 AM said...

நல்ல பதிவு! பதிவுகள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி எழுதுவதில்லை. அடிக்கடி எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

ravi on June 26, 2012 at 10:27 AM said...

good pics, thought you guys went to tada falls, try that place if possible later.

Bala Subramanian on June 26, 2012 at 10:33 AM said...

Annae naanum nexttu time varennae....
Chittibala

அமுதா கிருஷ்ணா on June 26, 2012 at 10:42 AM said...

என் பையன் நகுல் ஆறு முறை இங்கு போய் வந்திட்டு இப்ப குடும்பத்துடன் போகலாம் என்று என்னை கிளப்பிட்டு இருக்கான்.

யுவகிருஷ்ணா on June 26, 2012 at 10:56 AM said...

ஜாலியா என்ஜாய் பண்ண ட்ரிப்பை ஏன் இப்படி கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்க கார்க்கி? :-)

உங்க ரெகுலர் ஸ்டைல்லே அபாரமானதுதான்!

யுவகிருஷ்ணா on June 26, 2012 at 10:56 AM said...

ஜாலியா என்ஜாய் பண்ண ட்ரிப்பை ஏன் இப்படி கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்க கார்க்கி? :-)

உங்க ரெகுலர் ஸ்டைல்லே அபாரமானதுதான்!

திருவாருரிலிருந்து சுதர்சன் on June 26, 2012 at 12:25 PM said...

அடுத்த முறை போகும்போது என்னையும் மறக்காமல் அழைக்கவும்... :( :( :(

Uma on June 26, 2012 at 2:03 PM said...

மிக அருமையாக எழுதியிருக்கீங்க கார்க்கி..படித்து ஆசையா ஃபோட்டாக்களை பார்த்தால்.. 10% காடும் 90% மனித முகங்களும் தான் தெரிந்தது.

குழந்தபையன் on June 26, 2012 at 2:08 PM said...

வழக்கமான எழுத்து நடையிலிருந்து மாறி எழுதி இருக்கீங்க..

மெனக்கெடல் நிறைய தெரிது.. ஆனா ஜோவியலா எழுதினா தான் கார்க்கி. அதிலிருக்கும் சுவாரஸ்யம் இதில் குறைவு தான்..

குழந்தபையன் on June 26, 2012 at 2:56 PM said...

//உங்க ரெகுலர் ஸ்டைல்லே அபாரமானதுதான்!//

சிட்டுக்குருவி on June 26, 2012 at 4:41 PM said...

நல்லதொரு பயண அனுபவம் வித்தியாசமானதுவும் கூட....எல்லோரும் பயணத்தில் தாங்கள் பெற்ற இன்ப துன்பங்களை சொல்வார்கள் நீங்கள் ஒரு படி மேலே போய் காடுகள் மற்றும் மலைகளைன் பெருமையையும் அழகாக சொல்லியுள்ளீர்கள்.................தொடருங்கள் உங்கள் பயணங்களை

s suresh on June 29, 2012 at 8:09 PM said...

நல்லதொரு பயணக் கட்டுரை! அருமை!

 

all rights reserved to www.karkibava.com