Jun 12, 2012

ஜன்னல் அளவே வானம்


 

ஓநாயாக இருந்து பார்த்தால்தான் ஓநாயின் நியாயம் புரியும்

இது போலத்தான் ட்விட்டரும். ஒரு ட்விட்டராய் இருந்தால்தான் அதன் ஆனந்தம் புரியும். எல்லோரையும் போலவே எனக்கும் ஆரம்பத்தில் அதன் சூட்சமங்கள் புரியவில்லை. 2008ல் ஆரம்பித்த கணக்கு வீட்டின் மூலையில் இருக்கும் ட்ரெட்மில்லை போலத்தான் தேமேவென கிடந்தது. அதுவேனும் துணி காயப்போட உதவும். ட்விட்டர் எதற்கும் பயன்படவில்லை எனக்கு. 17ஆம் வாய்ப்பாட்டையே விடா முயற்சி விஸ்வரூப வெற்றியாக மனப்பாடம் செய்த எனக்கு ட்விட்டரை கைப்பற்ற ஓரிரு ஆண்டுகள் ஆயிற்று. அதன் பின் நடந்தவை எல்லாம்.. அட.. இருங்க பாஸ். வரலாறெல்லாம் இல்லை.

கவிதை என்பது ஒரு பாடாவதி வடிவம் என்ற கருத்து இன்னும் பரவவில்லை. அது அழகியல் ததும்பம் வடிவம் என்றும், இல்லையில்லை உண்மைக்கு பக்கத்தில் இருந்தாலே அது நல்ல கவிதை என்றும் சர்ச்சைகள் நடந்தவண்ணம் தான் உள்ளது. ஆனால் இதையெல்லாம் தாண்டி கவிதையில் கையாளப்படும் சொற்சிக்கனம் அதற்கு பல அர்த்தங்களை கொடுக்கிறது என்பது உண்மை. பக்கம் பக்கமாக எழுதப்படும் கதைகள் சொல்லும் அல்லது கொடுக்கும் உணர்வை ஒரு நல்ல கவிதை அகஸ்மாத்தாய் தந்துவிடும். கூடவே சொற்களின் சிக்கனம் அதற்கு வேறு சில அர்த்தங்களையும் அது குறிந்த சிந்தனைக்கு வாசலையும் திறந்துவிடும். கவிதையின் சப்ஸ்ட்யூட்டாக நான் ட்விட்டரை பார்க்கிறேன்.

ஜன்னல் அளவே வானம் #அலுவலகம்.

சடெரென பின்னந்தலையில் அடித்து, சட்டையைப் பிடித்து உலுக்கி என்னை இன்று வரை ஆக்ரமித்திருக்கும் ஒரு ட்வீட். இது, எழுதியவரின் மூளையில் உதித்த போது அவர் என்ன செய்து கொண்டிருந்திருப்பார் என்ற யோசனையில் தினமும் 5 நிமிடமாவது செலவாகிறது எனக்கு. போலவே, இந்த மூன்று வார்த்தைகளுக்குள் எப்படியும் 300 அர்த்தமாவது பொதிந்திருக்கிறது என்பேன்.ஒரு கதையிலோ அல்லது வேறு எதிலோ இது ஒரு வரியாக மட்டும் வந்திருந்தால் இதே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் இதே மூன்று வார்த்தையில் எழுதப்பட்டிருக்குமா என்பதும் ஊர்ஜிதமில்லை. இதுதான் ட்விட்டரின் சிறப்பென்கிறேன். கவிதைக்கு தலைப்பு போல ட்விட்டில் ஹேஷ் டேக்(#). அதை அர்த்தத்தோடு அழகாய் கையாளும்போது சுவாரஸ்யம் கூடிப் போகிறது.

இதை எழுதியவர் க்ரிஷ் சிதம்பரம் (@cheethaa). எனது ஆல் டைம் ஃபேவரிட் ட்விட்டர். நேரில் பார்த்ததில்லை. அலைபேசியில் பேசியதில்லை. ஆனால் திருக்குறளை விட அதிக எண்ணிக்கையில் இவரது ட்விட்களை மனப்பாடமாக சொல்வேன். இரண்டடி உலக பொதுமறையிலே 50% கழிவெடுத்து ஒரு வரியில் சொன்னதும் ஒரு காரணமாய் இருக்கலாம். நிச்சயம் அவரது ஒவ்வொரு ஒரு வரி ட்வீட்க்குள்ளும் ஒரு நூறு பக்க விஷயங்கள் இருப்பதாகவே நம்புகிறேன்.

 

எல்லா போராட்டங்களும் முதலில் யாசகமாகத்தான் துவங்கியிருக்கும்.

சிலிர்த்துப் போன இன்னொரு ட்வீட். இதுவரை நான் படித்த வரலாறுகளை வேறு ஒரு கோணத்தில் மீண்டும் படிக்கவோ, யோசிக்கவோ வைக்க இந்த ஒரு வரியால் எப்படி சாத்தியமானது என்பது மட்டும் "சிதம்பர" ரகசியம்.

 

பாக்டீரியாவெல்லாம் கண்ணுக்குத் தெரியும் வரை உற்றுப் பார்த்தால் வாழ்வு சிறக்காது

வாழ்வது எப்படி, வாழ்க்கை என்பது என்ன.. இப்படி ஒராயிரம் பாடல்கள் கேட்டிருப்போம். அதுவும் இதையேத்தான் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்படி ஜஸ்ட் லைக் தட் சொல்லியிருக்குமா? பாருங்கள். இந்த ஜஸ்ட் லைக் தட் தான் வாழ்க்கை என்பதாகவும் தோன்றுகிறது எனக்கு. சீத்தாவின் ட்வீட்டுகள் முப்பரிமாண யானை மாதிரி. எங்கிருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பாதாகத்தான் தோன்றும்.

ஏற்கனவே சொல்லப்பட்ட வாக்கியங்களை கலைத்துப் போட்டு புது அர்த்தம் த‌ருவதில் க்ரிஷ் ஒரு புதுப்பேட்டை மெக்கானிக் போல எனலாம்.

 

அத்தனைக்கும் ஆசை. படு

கிட்டத்தட்ட என் பெயரை விட அதிகமுறை நான் மற்ற ட்விட்டர்களிடம் சொன்னது இந்த ட்விட்டாகத்தான் இருக்கும். இடையில் வந்த ப் என்ற ஒற்றில் "ப"வை மட்டும் எடுக்க, புள்ளி தானாக கீழே விழுந்து இப்படி ஆகிப் போனது.  இவரின் ட்வீட்டை எடுத்தாளும்போது எழுத்துப்பிழையோ, வேறு இலக்கணப்பிழையோ இருந்தால் சரிப்படுத்த முயற்சிக்கவே கூடாது. அதற்கு பின்னும் ஏதும் விஷயம் இருக்கலாம். இருக்கும். Krish is a brilliant.

அவர் எழுதியது கொஞ்சமே என்றாலும் அவரைப் பற்றியும், அவரது ட்வீட்கள் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். கொஞ்சம் நீங்களாக அவரை ரசிக்க, அணுக ஏதுவாக எனக்கு பிடித்த ட்வீட்களை குறிப்பிட்டுவிட்டு செல்கிறேன். இனி நீங்களாச்சு.. அவராச்சு.

கணினி ராசி சிம்கார்டு லக்னம் பேச்சிலர் நட்சத்திரம்

என்னிலடங்கா ஆசைகள்

துணிச்சல் அதிகரிக்கும்போது துணி சுருங்கும்

இந்தப் பக்கத்தை நான் படிப்பதுகூட வரலாறாகிறது

காதலி சொர்க்கம். காதல் நரகம்

மீறல்களின் சுவாரசியம் பின்பற்றுதலில் இல்லை

குறையோ நிறையோ. நீரிருந்தால் தளும்பும்

ஒரு விஷயத்தை பிரபலமாக்க ரகசியம் என பெயர் வைத்துவிடுங்கள்

தெரிந்தேதான் கிருஷ்ணனை நீல நிறத்தில் உலவ விட்டிருக்கிறார்கள்

Practice makes mistakes perfect

சோம்பேறி என்பவன் செய்கிற வேலையை பாதியிலேயே

கோழி அசைவம். பாக்டீரியா சைவம்

Tom & Jerry யில் Tom ஐ ஹீரோவாக எண்ணுபவர்கள் வில்லன்கள்

கைகளெங்கும் ரேகை நதிகள். ரசிப்பவனுக்கு நதி. அற்றவனுக்கு விதி

பீத்தோவனின் உச்சம் தொடும் இசைக்கு நிகரானது RX-100 ன் சப்தம்

நீரற்ற குளமெங்கும் நிறைந்திருக்கும் வானம்

தோன்றுவதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்தால் என் பெயர் சாரு

_______________________________________________

முழுவதும் படிக்க  https://twitter.com/#!/cheethaa

க்ரிஷ் இப்போழுது ட்விட்டர் பக்கம் வருவதேயில்லை.வேறு ஏதோ ஒரு தளத்தில் அட்டகாசம் செய்து கொண்டிருப்பார் அல்லது அதற்காக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பார் என்பது மட்டும் திண்ணம். ட்விட்டரை விட்டு காலி செய்யலாம் என்ற எண்ணம் சமீப காலமாக‌ எழும் போதெல்லாம் இவரது ட்வீட்களை படிக்கிறேன். அவர் என்றேனும் ஒரு நல்ல செய்தியோடு வருவார். அதுவரை இருக்கலாம் என ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். மிஸ் யூ சீத்தா

me_cheetha

9 கருத்துக்குத்து:

Anonymous said...

ஒரு சிறந்த, மனம் திறந்த சக மனித பாராட்டு. இதை படித்துவிட்டு "வாவ்" என்றேன் அணிச்சையாக. நானும் சீத்தாவின் தீவிர ரசிகன் என்று இங்கும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். இதை அவர் தவறாமல் படிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பும் உண்டு. யூ ஆர் கிரேட் கார்க்கி. மனம் திறந்த பாராட்டு.

குழந்தபையன் on June 12, 2012 at 10:57 AM said...

Cheetha brilliant man..

மோகன் குமார் on June 12, 2012 at 11:13 AM said...

//தோன்றுவதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்தால் என் பெயர் சாரு//

Last punch :))

Let us hope Cheetha comes back soon.

மதன்ராஜ் மெய்ஞானம் on June 12, 2012 at 11:19 AM said...

Super Post Karki..! Hope Krish comes back soon!

jroldmonk on June 12, 2012 at 11:37 AM said...

'எண்ணிலடங்கா ஆசைகள்' என்று ஞாபகம்.அவர் தொட்டதெல்லாம் பெஸ்ட் தான்.நல்ல பதிவு..

கார்க்கி on June 12, 2012 at 11:48 AM said...

Thanks all

@jroldmonk,
எண்ணிலடங்கா என்பது சரியான வார்த்தை. அவர் அதை "என்னிலடங்கா" என்றே எழுதினார்.

solaivanam on June 12, 2012 at 12:06 PM said...

அருமை! அவன் வருவானா! அவன் வருவானா! ஒரு நாள் வருவார், காத்திருப்போம் :-)

பரமேஷ் on June 12, 2012 at 10:36 PM said...

நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை கார்க்கி. தான் இன்றளவும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியாத உயரத்தில் இருக்கும் ட்விட்டர். அவரின் பக்கத்தை லேப்டாப் மற்றும் மொபைலில் fav செய்து வைத்துள்ளேன். என்றேனும் வருவார் என்பது திண்ணம். :-):-)

அதிலை on June 13, 2012 at 10:21 AM said...

முதுகு சொரியாமல், முகமறியா திறமைசாலியை, பாராட்டி அறிமுகப்படுத்திய உங்கள் பரந்த மனம் பாராட்டுக்குரியது .... அந்த சோம்பேறி tweet அருமை... ஏன்னா அவர் சொன்ன வித

 

all rights reserved to www.karkibava.com