Jun 26, 2012

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

12 கருத்துக்குத்து

 

மனிதர்களும் நகரங்களும் ஒவ்வாமல் போகும்போது காட்டுக்குள் சென்றுவிட வேண்டும் என்பது போல தோன்றும்.இம்முறை அப்படியில்லாமல் மனதிற்கு விருப்பமான சில நண்பர்களுடன் மலையேறலாம்(Trekking) என முடிவானது. சென்னைக்கு அருகில், ஆந்திர எல்லையில் இருக்கும் நாகாலா மலைத்தொடருக்கு செல்வதாக திட்டம்.

  காடுகள் மனித மிருகங்களுக்கும் பிடித்தமான ஒன்றுதான் என்பதை மீண்டும் இம்முறை உணர முடிந்தது. மலையை நெருங்கும் வேளையில், அவரவர் வயதை மறந்து ஒரு உற்சாக மனநிலையில் முன்னேறி கொண்டிருந்தனர். இப்படி முகத்திலறையும் காற்றோடு கைகுலுக்கி நடைபழகி வெகு காலம் ஆயிற்று.காற்று முகம் தழுவிய பாங்கு, வாழ்வில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு முத்தம் தருபவனின் கவனத்தை ஒத்திருந்தது. கறிக்குழம்பில் இருப்பதிலே ஆக சிறந்த துண்டை தம்பிக்கு லாகவமாக பறிமாறும் அக்காவின் அன்பு போல அத்தனை சுத்தமான காற்றை சுவாசிப்பதே அலாதியாக இருந்தது. வீசும் காற்றெங்கும் மெல்லிய ஈரம் கலந்திருந்தது.

எனக்கு என்னவோ காடுகளிலும், மலைகளிலும் வசிப்பவர்கள் மட்டும்தான் வாழ்வதாக நம்பிக்கை. நாம் சுவாசித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறோம். மலையின் வழியே இறங்கி ஓடி வரும் ஓடையின் வாலை பிடித்த பின், நதிமூலத்தை தேடி பயணம் ஆரம்பமானது. . நான் அருலிருந்து பார்த்து பழகிய நண்பர்கள் தனியே நடந்து செல்கையில் வித்தியாசமானவர்களாக தெரிந்தனர். இயற்கையோடு அவர்கள் இணையும் தருவாயில் கடலில் கலந்த ஆறாக தன்மை மாறிவிடுகிறார்கள்.காடுகளும், மலைகளும் ஒரு மனிதனின் சுபாவத்தையே மாற்றிவிடுகின்றன‌.

வழியெங்கும் மின்சார வெளிச்சமில்லை. சூரிய வெளிச்சம் மரங்களில் விழுந்து சுத்தமாகி ஒழுகிக் கொண்டிருந்தது. நில்லாமல் ஓடும் ஓடையின் சீரான ஒலி, ஒரு உணர்ச்சிமயமான காட்சிக்கு முழுப் பொருத்தமாய் கோர்க்கப்பட்ட இளையராஜாவின் இசைக்கு ஒப்பானதாக இருந்தது. களைப்பு தெரியாமல் நடக்க அது போதுமானதாகவும் இருந்தது. வழியெங்கும் காட்டுப்பூக்களுடன் கைலுக்கிக் கொண்டே நடப்பது மகோத்துவமான ஒன்றாக இருந்தது.  மேகம் மிதக்கும் அவ்வானத்தையோ, அல்லது பூமி முடியும் அந்த எல்லையையோ என்றேனும் போய் பார்த்து விட வேண்டும் என உள்ளுக்குள் ஒரு அசரீரீ சொல்லிக் கொண்டேயிருந்தது. ஜென் குருக்கள் காடுகளில் வாழ்ந்திருக்க முடியாது. காடுகள் தான் அவர்களை உருவாக்கியிருக்க கூடும்.

வாழ்க்கைப் பயணம் நொண்டியடிக்கும் போதெல்லாம் ஒரு பயண வாழ்க்கை என்னை உற்சாகப்படுத்தி விடுகிறது. அருவிகள் ஆர்ப்பரிக்கும் காட்டை ஒரு சில நொடிகள் உற்றுப் பார்த்தால் போதும். மெளனத்தை சடாரென போர்த்திக் கொள்ளும். யாருக்காகவும் பொழிவதில்லை நிலா என்பது போலதான் காடுகளும். வாழ்வின் உன்னதமான சந்தோஷங்கள் எதுவும் விலைக் கொடுத்து வாங்குபவையாக இல்லை.

  மலையேறுவதை மட்டுமே ஒரே ஒரு பொழுதுபோக்காக கொண்டவர்களிடன் பேச்சுக் கொடுத்தேன். இத்தனை கடினமான ஒரு பயணம் அவர்களுக்கு எந்த மாதிரியான சுகத்தை கொடுக்கிறதென்பதை அறியும் ஆவல் என்னை ஆட்கொண்டிருந்தது.

பெரும்பாலானவர்களுக்கு மனித வாசனையற்ற இடமாக இருக்க வேண்டும் என்பதே காரணமாக இருக்கிறது. மாதத்தில் ஓரிரு நாட்கள் இந்த மாதிரியான இடங்களுக்கு வந்துவிட வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு போதையாகத்தான் இருக்கிறது. இரண்டு இரவுகள் கடுமையான மலைப்பயணத்தின் முடிவில் , ஒரு காட்டு யானையின் பிளிறலை மட்டுமே கேட்டு லயித்ததை உற்சாகமாய் சொன்னார் அவர். பார்க்கவும் இல்லை, சத்தத்தை மட்டுமே கேட்டார்களாம். காடுகள் அவர்களின் காதலிகள். இருந்தும், அவர்கள் சல்லாபிப்பதில்லை. அன்பை மட்டும் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். ஆம், அந்த நண்பர் காடெங்கும் என்னைப் போன்றவர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். காட்டிற்கு முன் அவர் வாமணன் தானே? தன்னாலான அளவிற்கு குப்பைகளை சேகரித்து நாட்டுக்குள் கொண்டு வந்து போடுகிறார். கொஞ்சம் என்னிடம் கொடுங்களேன் என்று சொல்லுமளவிற்கு நான் எப்போது நல்லவானாவேன் என்று தெரியவில்லை.

பயணம் முழுவதும் உதிராப்புன்னகையொன்று அனைவரின் இதழ்களிலும் பூத்திருந்தது. மலையிறங்கியப்பின் நீரில்லா நீர்த்தேக்கம் ஒன்றில் அமர்ந்து அளவளாவிய போது களைப்பான முகங்கள் அடுத்த முறை எப்போது போகலாம என விசாரித்தது ஆசுவாசுமாய் இருந்தது.

  காட்டு ராணியே!! உன்னை கற்பழிக்க இனி கூட்டம் கூட்டமாய் வந்துக் கொண்டுதானிருப்போம்.

Jun 20, 2012

உடன்பிறப்புகளே

6 கருத்துக்குத்து

 

  அடுத்த குறும்படம்.. இதுல என் வேலை அவ்வளவா இல்லை. இருந்தாலும் இயக்குனர் என்னையும் அவர் டீமுல சேர்த்துக்கிட்டாரு. படத்த பார்த்திடுங்க.. சில விஷயங்கள நாளைக்கு சொல்றேன்.

 

Jun 13, 2012

வேளச்சேரி டூ மயிலாப்பூர்

16 கருத்துக்குத்து

 

வெயில் கம்மியா இருந்தா பைக்ல தானே போவ? என்ன கார் இன்னைக்கு?

  அம்மா செய்ற உப்புமால உப்பு இருக்கோ இல்லையோ சொல்ற எல்லாத்திலும் ஒரு பாயின்ட் இருக்கும். நமக்குதான் அது லேட்டா புரியும். இன்னைக்கு காலைல ஆஃபீஸ் கிளம்பினப்ப அம்மா அப்படி கேட்டத நானும் பெருசாவோ, மீடியமாவோ எடுத்துக்கல. கருப்பு நிற யமஹாவை விட்டு கருப்பு நிற ஐ20ல கிளம்பினேன். வேளச்சேரி 100 அடி சாலையின் முடிவில் இடதுபுறம் திரும்ப முடியாமல் எல்லா வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றிருந்தன. ஹால்டா நிறுத்தத்தின் அருகில் சாதா சாலையை சிமென்ட் சாலையாக மாற்றும் பணி நடப்பதால் எல்லா வண்டியையும் ரேஸ் கோர்ஸ் வழியா திருப்பி விட்டிருக்கானுங்க. ஆனா அந்த ரோடுல அவ்ளோ வண்டி போனா தாங்காது. அதையும் தாண்டி போனா கிண்டி ஜி.எஸ்.டி ரோடுல மெட்ரோ ரயில் வேலை நடக்குது. இந்த எந்த எழவையும் கவனிக்காம ஒரே ஒரு கோடு மீசை வரைஞ்ச போலீஸ் நின்னுக்கிட்டு எல்லா வண்டியையும் திரும்பி போக சொல்லிட்டு இருந்தாரு. கபாலத்தில் மணியடிக்க வண்டில எவ்ளோ டீசல் இருக்குன்னு பார்த்தேன். தூசியை துச்சமென மதித்து ஏசியை ஆஃப் பண்ணிட்டு ரெண்டு பட்டனை கழட்டி விட்டு ஆட்டத்துக்கு தயாரானேன்.

போச்சா. இன்னைக்கு லன்சலதான் எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்லணும்

எல்லா பஸ், கார், பைக்கும் தல போல மெல்ல நட‌ மெல்ல நட போட்டுக் கொண்டிருந்தன. அப்பாடா.. நகரவாச்சும் செய்யுதேன்னு, பிராயசித்தமாக மங்காத்தா சிடியை தட்டினேன். என்ன அஜித் குத்தம் ஆனதோ தெரியல. ஸ்லோ மூவிங் எல்லாம் காணாமல் போய் அட்டென்ஷனில் நிற்க ஆரம்பித்தன எல்லா வண்டிகளும். பக்கத்து ஃப்ளாட் ஆளிடமே பேசியேயிராத மென்பொருள் வல்லுநர் ஒருவர் வெறுத்துப் போய் பக்கத்து காரில் இருந்தவரிடம் “What happened? Any idea?” என பேச தொடங்கமளவிற்கு ஆகிப் போனது. நாமளும் நம்ம நண்பர்களிடம் பேசலாம் என மொபைலை எடுத்து ட்வீட் செய்தேன்.

“வேளச்சேரி ட்ராஃபிம் ஜாம்ல மாட்டிக்கிட்டவங்க யாரா இருந்தா 7072 ப்ளாக் ஐ20கிட்ட வாங்க. பேசிட்டு இருக்கலாம். RT plz :))))))”

சென்னை சமீபகாலமாக உள்கட்டமைப்பில் படு மோசமாகி வருகிறது. திமுக கடைசி ஒரு வருடத்தில் சாலைகளை போடவேயில்லை. அம்மா வந்து ஒரு வருடத்தில் போடவேயில்லை. ஆனா மழை மட்டும் ஓவர் டைம் பார்த்து தன் கடமையை இன்னும் வீரியத்துடன் செய்துவிட்டு சென்றது. பார்க்கும் இடமெல்லாம் காதல் தண்டபாணி முகத்தை போலத்தான் இருக்கிறது. ரோடு சரியில்லை என புலம்புவனை "நீங்க பரவாயில்லை. எங்க ஏரியால ரோடே இல்லையென" இன்னொருவர் ஆஃப் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இவனுங்க மெட்ரொ கட்டி முடிக்கிறதுக்குள்ள நம்ம ஆளுங்க பவர்கட் மேல பழிய போட்டு மக்கள் தொகையை இன்னும் ஒரு கோடி ஏத்தி வச்சுடுவானுங்க. வேலையை விட்டுட்டு குத்தாலம், அம்பாசமுத்திரம்ன்னு போய் பிச்சையாச்சும் எடுக்கலாம்ன்ற அளவுக்கு கடுப்பா இருந்துச்சு.  என்ன செய்வது என தெரியாமல் சிடியில் இருந்து எஃப.எம்முக்கு மாத்தி வைச்சேன்.

ஹொய்யா.. புது ரூட்டுல தான்.. ஹொய்யா.. நல்ல ரோட்டுலதான் நின்றாடும் வெள்ளி நிலவு

இந்த ஆர்ஜேக்கள் ஹோம் ஒர்க் செய்துவிட்டு வந்துதான் பாட்டுகளை போடுறாங்கன்னு நம்ப வேண்டியதா இருக்கு. சரி. வெள்ளி நிலவ தேடலாம்ன்னு சுத்திமுத்தி பார்த்தேன். இடதுபுறம் இருந்த காருல ஒரு லவ் ஜோடி ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். அது என்ன சொல்வாங்க? ரோம் நகரம் எரிய எவனோ எதையோ வாசிச்சேனாமே.. சரி பேசிட்டு இருக்கிற காதலர எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்ன்னு லைட்டா டைரக்ஷன மாத்தினேன். அந்த கிளி தாவி வந்து அவ ஆளுக்கு ஒரு கிஸ் அடிச்சுது. பதட்டப்படாம முயற்சி பண்ணுங்க செல்லங்களா. அடுத்த சிக்நல தாண்டுறதுக்குள்ள குழந்தை வண்டியிலே பொறந்துடும்ன்னு அவங்களையும் , சன் கன்ட்ரோல் ஃபிலிம எடுக்க உத்தரவிட்ட ஜெ.வின் வம்சம் தழைக்கட்டும்ன்னு அவங்களையும் மனசார வாழ்த்தினேன்.

இனி இடது பக்கம் திரும்ப வேண்டாமென வலது பக்கம் திரும்பினேன். கண்ணாடிய டக் டக்ன்னு தட்டினாரு ஒருத்தாரு. திறந்தா, அண்ணே லிஃப்ட் கொடுக்கிறீங்களா கிண்டி வரைக்கும்ன்னாரு அந்த‌ 40 வயது ஜென்டில்மேன். இப்ப கொடுத்தா அது லிஃப்ட் இல்லைங்க.  ரூம் போடுறது. நீங்க நடந்தே போயிடுங்கன்னு சொல்லிட்டேன். முறைச்சுக்கிட்டே போனத பக்கத்துல இருந்த‌ ஃபாஸ்ட் ட்ராக் டிரைவர் சிரிச்சிட்டே பார்த்தாரு. இவனையும் ஏன் விட்டு வைக்கணும்ன்னு "உங்க வண்டி பேர Slow Track மாத்திக்கங்கண்ணான்னு” ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தேன். சிரிப்பு முறைப்பா மாறும் தருணம் இருக்கிறதே.. அத அப்புறம் சிலாகிக்கலாம். முதல்ல கண்ணாடிய ஏத்திட்டு உட்காருடான்னு அடி வாங்க மனசில்லாத மனசாட்சி சொல்லுச்சு. Closed.

அப்ப‌வும் ட்ராஃபிக் நகர விடல. வண்டிய ஆஃப் பண்ணிட்டு பேப்பர், பேனா இருக்குதான்னு பார்த்தேன். விஷ்ணுபுரத்துக்கு போட்டியா எழுதணும்ன்னு நினைச்சத செயல்படுத்த நல்ல‌ வாய்ப்பு. ம்ஹூம். பேனா இல்லை. பேப்பரும் இல்லை. எல்லா வண்டியும் ஆஃப் பண்ண பிறகும் புகை வந்துச்சு. விக்குற பெட்ரோல் விலையில இப்படி ஆனா டிரைவர் சீட்டுல இருக்கிரவனுக்கு புகை வராமா என்ன வரும்? இது ஆகுறதில்லைன்னு ரிவர்ஸ் எடுக்க பார்த்தேன். பக்கத்தில் ஒரு டிராஃபிக் போலீஸ் நின்னுட்டு இருந்தாரு. அவர்கிட்ட வேற வழி இருக்கான்னு கேட்கலாம்ன்னு கூப்பிட்டா திரும்பவே இல்லை. இத்தனைக்கும் அங்க U Turn ந்னு போடு இருந்துச்சு.. சைகை காமிச்சேன். ம்ஹூம். திரும்பல. Traffic Police at manduvinkarai signal. Plz turn ந்னு ட்வீட் போட்டேன். திரும்பவே இல்லை. சரின்னு “Sir.police sir” கத்தி பார்த்தேன். திரும்பினாரு.

யு டர்ன் அடிச்சு போகவா சார்ன்னு கேட்டேன். You cant Turn ந்னு அவ‌ரும் இங்கிலீஷுலே பேசினாரு. உலகத்துல எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்குன்னு அசரீரியா அஜித் சொன்னதும் "ஓக்கே ஓக்கே"ன்னு சைகையால காமிச்சிட்டு கம்முன்னு இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா வண்டி நகர்ந்துச்சு. நடந்து போன ஒருத்தரு காரு வச்சிருக்கிரவன திட்டிட்டே போனாரு. அவருக்கு ப்ளாட்ஃபார்ம் இருக்கு. அதுவும் அங்க இருந்த ப்ளாட்ஃபார்ம் காலியாவே இருந்துச்சு. அத விட்டு ரோட்டுல போயிட்டு எல்லோரையும் திட்டினாரு. காரு வச்சிருருந்தா அவன் காரா இருக்கணும்ணு அவசியம் இல்லைங்க. அண்ணன், அக்கா காரா இருக்கலாம். அட. காரு ஓட்ட காரெல்லாம் வேணாம். குழந்தையா இருந்தா போதும்னு அவர்கிட்ட சொல்லலாம்ன்னு கூப்பிட்டேன். சிவப்பு சட்டைக்காரரு பார்க்க கொஸ்டின் மார்க் ஆளு மாதிரியே இருந்தாரு. ஏற்கனவே அவங்க‌ளுக்கும் எனக்கும் பிளாக், பின்னூட்ட சண்டை இருக்கு. இப்ப இது வேறயா? .  புதிய கீதையாட்டம் அப்பதான் எனக்கு தோணுச்சு "எல்லா பிரச்சினைக்கும் ஒரே ஒரு தீர்வு இருக்கு. அதான் கண்ணாடிய ஏத்திட்டு பாட்டு கேட்கிறது" . Again closed

கண்ணாடி நீ. கண்றாவி நான்.
என் வீடு நீ. ஸ்டோர் ரூம் நான்.
என் தேடல் நீ உன் தொல்லை நான்.

எஸ்.பிபி சரண் பாடிகொண்டேயிருக்க 8.20க்கு கிளம்பினவன் 11 மணி அளவில் ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன். வந்தவுடன் பாஸ் கேட்டாரு "We have an immediate client meet. Shall we start “

Where?

XYZ developers. Velachery

 

 

.

Jun 12, 2012

ஜன்னல் அளவே வானம்

9 கருத்துக்குத்து

 

ஓநாயாக இருந்து பார்த்தால்தான் ஓநாயின் நியாயம் புரியும்

இது போலத்தான் ட்விட்டரும். ஒரு ட்விட்டராய் இருந்தால்தான் அதன் ஆனந்தம் புரியும். எல்லோரையும் போலவே எனக்கும் ஆரம்பத்தில் அதன் சூட்சமங்கள் புரியவில்லை. 2008ல் ஆரம்பித்த கணக்கு வீட்டின் மூலையில் இருக்கும் ட்ரெட்மில்லை போலத்தான் தேமேவென கிடந்தது. அதுவேனும் துணி காயப்போட உதவும். ட்விட்டர் எதற்கும் பயன்படவில்லை எனக்கு. 17ஆம் வாய்ப்பாட்டையே விடா முயற்சி விஸ்வரூப வெற்றியாக மனப்பாடம் செய்த எனக்கு ட்விட்டரை கைப்பற்ற ஓரிரு ஆண்டுகள் ஆயிற்று. அதன் பின் நடந்தவை எல்லாம்.. அட.. இருங்க பாஸ். வரலாறெல்லாம் இல்லை.

கவிதை என்பது ஒரு பாடாவதி வடிவம் என்ற கருத்து இன்னும் பரவவில்லை. அது அழகியல் ததும்பம் வடிவம் என்றும், இல்லையில்லை உண்மைக்கு பக்கத்தில் இருந்தாலே அது நல்ல கவிதை என்றும் சர்ச்சைகள் நடந்தவண்ணம் தான் உள்ளது. ஆனால் இதையெல்லாம் தாண்டி கவிதையில் கையாளப்படும் சொற்சிக்கனம் அதற்கு பல அர்த்தங்களை கொடுக்கிறது என்பது உண்மை. பக்கம் பக்கமாக எழுதப்படும் கதைகள் சொல்லும் அல்லது கொடுக்கும் உணர்வை ஒரு நல்ல கவிதை அகஸ்மாத்தாய் தந்துவிடும். கூடவே சொற்களின் சிக்கனம் அதற்கு வேறு சில அர்த்தங்களையும் அது குறிந்த சிந்தனைக்கு வாசலையும் திறந்துவிடும். கவிதையின் சப்ஸ்ட்யூட்டாக நான் ட்விட்டரை பார்க்கிறேன்.

ஜன்னல் அளவே வானம் #அலுவலகம்.

சடெரென பின்னந்தலையில் அடித்து, சட்டையைப் பிடித்து உலுக்கி என்னை இன்று வரை ஆக்ரமித்திருக்கும் ஒரு ட்வீட். இது, எழுதியவரின் மூளையில் உதித்த போது அவர் என்ன செய்து கொண்டிருந்திருப்பார் என்ற யோசனையில் தினமும் 5 நிமிடமாவது செலவாகிறது எனக்கு. போலவே, இந்த மூன்று வார்த்தைகளுக்குள் எப்படியும் 300 அர்த்தமாவது பொதிந்திருக்கிறது என்பேன்.ஒரு கதையிலோ அல்லது வேறு எதிலோ இது ஒரு வரியாக மட்டும் வந்திருந்தால் இதே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் இதே மூன்று வார்த்தையில் எழுதப்பட்டிருக்குமா என்பதும் ஊர்ஜிதமில்லை. இதுதான் ட்விட்டரின் சிறப்பென்கிறேன். கவிதைக்கு தலைப்பு போல ட்விட்டில் ஹேஷ் டேக்(#). அதை அர்த்தத்தோடு அழகாய் கையாளும்போது சுவாரஸ்யம் கூடிப் போகிறது.

இதை எழுதியவர் க்ரிஷ் சிதம்பரம் (@cheethaa). எனது ஆல் டைம் ஃபேவரிட் ட்விட்டர். நேரில் பார்த்ததில்லை. அலைபேசியில் பேசியதில்லை. ஆனால் திருக்குறளை விட அதிக எண்ணிக்கையில் இவரது ட்விட்களை மனப்பாடமாக சொல்வேன். இரண்டடி உலக பொதுமறையிலே 50% கழிவெடுத்து ஒரு வரியில் சொன்னதும் ஒரு காரணமாய் இருக்கலாம். நிச்சயம் அவரது ஒவ்வொரு ஒரு வரி ட்வீட்க்குள்ளும் ஒரு நூறு பக்க விஷயங்கள் இருப்பதாகவே நம்புகிறேன்.

 

எல்லா போராட்டங்களும் முதலில் யாசகமாகத்தான் துவங்கியிருக்கும்.

சிலிர்த்துப் போன இன்னொரு ட்வீட். இதுவரை நான் படித்த வரலாறுகளை வேறு ஒரு கோணத்தில் மீண்டும் படிக்கவோ, யோசிக்கவோ வைக்க இந்த ஒரு வரியால் எப்படி சாத்தியமானது என்பது மட்டும் "சிதம்பர" ரகசியம்.

 

பாக்டீரியாவெல்லாம் கண்ணுக்குத் தெரியும் வரை உற்றுப் பார்த்தால் வாழ்வு சிறக்காது

வாழ்வது எப்படி, வாழ்க்கை என்பது என்ன.. இப்படி ஒராயிரம் பாடல்கள் கேட்டிருப்போம். அதுவும் இதையேத்தான் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்படி ஜஸ்ட் லைக் தட் சொல்லியிருக்குமா? பாருங்கள். இந்த ஜஸ்ட் லைக் தட் தான் வாழ்க்கை என்பதாகவும் தோன்றுகிறது எனக்கு. சீத்தாவின் ட்வீட்டுகள் முப்பரிமாண யானை மாதிரி. எங்கிருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பாதாகத்தான் தோன்றும்.

ஏற்கனவே சொல்லப்பட்ட வாக்கியங்களை கலைத்துப் போட்டு புது அர்த்தம் த‌ருவதில் க்ரிஷ் ஒரு புதுப்பேட்டை மெக்கானிக் போல எனலாம்.

 

அத்தனைக்கும் ஆசை. படு

கிட்டத்தட்ட என் பெயரை விட அதிகமுறை நான் மற்ற ட்விட்டர்களிடம் சொன்னது இந்த ட்விட்டாகத்தான் இருக்கும். இடையில் வந்த ப் என்ற ஒற்றில் "ப"வை மட்டும் எடுக்க, புள்ளி தானாக கீழே விழுந்து இப்படி ஆகிப் போனது.  இவரின் ட்வீட்டை எடுத்தாளும்போது எழுத்துப்பிழையோ, வேறு இலக்கணப்பிழையோ இருந்தால் சரிப்படுத்த முயற்சிக்கவே கூடாது. அதற்கு பின்னும் ஏதும் விஷயம் இருக்கலாம். இருக்கும். Krish is a brilliant.

அவர் எழுதியது கொஞ்சமே என்றாலும் அவரைப் பற்றியும், அவரது ட்வீட்கள் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். கொஞ்சம் நீங்களாக அவரை ரசிக்க, அணுக ஏதுவாக எனக்கு பிடித்த ட்வீட்களை குறிப்பிட்டுவிட்டு செல்கிறேன். இனி நீங்களாச்சு.. அவராச்சு.

கணினி ராசி சிம்கார்டு லக்னம் பேச்சிலர் நட்சத்திரம்

என்னிலடங்கா ஆசைகள்

துணிச்சல் அதிகரிக்கும்போது துணி சுருங்கும்

இந்தப் பக்கத்தை நான் படிப்பதுகூட வரலாறாகிறது

காதலி சொர்க்கம். காதல் நரகம்

மீறல்களின் சுவாரசியம் பின்பற்றுதலில் இல்லை

குறையோ நிறையோ. நீரிருந்தால் தளும்பும்

ஒரு விஷயத்தை பிரபலமாக்க ரகசியம் என பெயர் வைத்துவிடுங்கள்

தெரிந்தேதான் கிருஷ்ணனை நீல நிறத்தில் உலவ விட்டிருக்கிறார்கள்

Practice makes mistakes perfect

சோம்பேறி என்பவன் செய்கிற வேலையை பாதியிலேயே

கோழி அசைவம். பாக்டீரியா சைவம்

Tom & Jerry யில் Tom ஐ ஹீரோவாக எண்ணுபவர்கள் வில்லன்கள்

கைகளெங்கும் ரேகை நதிகள். ரசிப்பவனுக்கு நதி. அற்றவனுக்கு விதி

பீத்தோவனின் உச்சம் தொடும் இசைக்கு நிகரானது RX-100 ன் சப்தம்

நீரற்ற குளமெங்கும் நிறைந்திருக்கும் வானம்

தோன்றுவதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்தால் என் பெயர் சாரு

_______________________________________________

முழுவதும் படிக்க  https://twitter.com/#!/cheethaa

க்ரிஷ் இப்போழுது ட்விட்டர் பக்கம் வருவதேயில்லை.வேறு ஏதோ ஒரு தளத்தில் அட்டகாசம் செய்து கொண்டிருப்பார் அல்லது அதற்காக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பார் என்பது மட்டும் திண்ணம். ட்விட்டரை விட்டு காலி செய்யலாம் என்ற எண்ணம் சமீப காலமாக‌ எழும் போதெல்லாம் இவரது ட்வீட்களை படிக்கிறேன். அவர் என்றேனும் ஒரு நல்ல செய்தியோடு வருவார். அதுவரை இருக்கலாம் என ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். மிஸ் யூ சீத்தா

me_cheetha

Jun 11, 2012

தோழி சூழ் உலகு

3 கருத்துக்குத்து

 

அந்த பக்கம் தலை வைக்காத என்கிறார் அம்மா.பரவாயில்லையென தெற்கு பக்கம் தலை வைத்து படுக்கிறேன்.. சீக்கிரம் வாடி :)

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

கங்காரு குட்டி போல எட்டி எட்டி பார்த்துக் கொண்டேயிருக்கிறது உன் நினைவு

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நீ திரும்ப வந்தபின் சொல்லப்போகும் கதைகளுக்கு எப்படியெல்லாம் விழிகள் விரிய ஆச்சரியப்படலாம் என பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

தோழி சூழ் உலகு

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

ஏதேனும் ஒரு இசை அலைவரிசையில் தொகுப்பாளினி ஆகிவிடு செல்லம். முழுநேர “இசை” நிகழ்ச்சி அதுவாகத்தான் இருக்கும்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

கண்ணுக்கு எட்டாத தூரம் போனவள் கண் மூடிய உடன் தெரிகிறாள். #காதலன் ஐ கேர்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

உன் இன்மையை உணர்வதை விட நீயில்லாமல் வாழ முடியாது என்ற உண்மையைத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

விளையாட போகக்கூடாது என சொல்லும் அம்மாவிடம் கெஞ்சும் பிள்ளை போல, தோழியை பார்க்க கெஞ்ச வேண்டியிருக்கிறது காலத்திடம்.

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

சரசர சாரக்காத்து கேட்கும்போது சன் டிவில் போகும்போது சாரப்பாம்பு போல நெஞ்சு உன்னை தேடி ஓடுதே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நேற்றிரவு தேவதைகளுடன் கனவில் பிரச்சினை. அவர்களில் யார் தோழியின் சாயலில் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமாம் நான்

 

all rights reserved to www.karkibava.com