May 31, 2012

டல்லரசு

21 கருத்துக்குத்து

 

உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கிறேன்.

சாந்தோமில் ஒரு பாய் கடையில் பிரியாணி Awesomatic க்கா இருக்குமென அலுவலக நண்பர் ஒருவர் சொன்னதையடுத்து ஆர்வம் தாங்காமல் யமஹாவை கிளப்பினேன். அடிக்கிற‌ வெயிலிலும், பெட்ரோல் விற்கும் விலையிலும் 2 கி.மீ என்பதே தூரம்தான் என்றாலும் பிரியாணிக்கு முன் ஒரு டேஷுமில்லை என்பது என் எண்ணம். பிரியாணி குறித்த சிலாகிப்பை பிறொதொரு நல்ல நாளிற்கு ஒத்தி வைத்துவிட்டு இந்த வழக்கு குறித்து அலசுவோம்.

மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை அடைந்து, பட்டினப்பாக்கம் சிக்நலில் வலதுப்பக்கம் திரும்பி சன் டிவி அலுவலகம் நோக்கி 55 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது 150 சிசி FZ16. ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தோடு பார்த்தால் ஒரு மரநிழலில் இருந்து வந்த காக்கி ஒருவர் ஓரங்கட்ட சொன்னார். எல்லா டாகுமென்ட்ஸும் பக்கா என்பதாலும், என் ஒருவனையே ட்ரிபிள்ஸ் என எண்ணும் அளவிற்கு நான் இன்னும் குண்டாகததாலும் ஓரமாய் போய் அவருக்கு கட்ட தேவையில்லை என்ற எண்ணத்தில் ஓரங்கட்டினேன். ஷாட் ஓக்கேவான்னு பாருங்க சார் என ஒளிப்பதிவாளர் இயக்குனரை அழைப்பது போல் என்னை அழைத்து அந்த வேகமானியின் திரையை காட்டினார்

55லதான் சார் வந்தேன்.

நானும் அதான் சார் சொல்றேன். 55 ல வந்திருக்கீங்க. ஓவர் ஸ்பீடு.

சார். 55 ஸ்பீடுன்றதுதான் ஓவர்.

40லதான் சார் வரணும்.

ஒழுங்கா போறவனையே புடிங்க.நிஜமா ரேஸ் போறவன விட்டுடுங்க சார். அவ்ளோ ஸ்பீடாவா சார் வந்தேன்??திடீர்ன்னு இப்படி நல்ல போலிஸா மாறினா எப்படி சார்? (சிரிச்சமேனிக்குத்தான் சொன்னேன்)

இல்ல சார். இப்பலாம் ஸ்ட்ரிக்ட்டா புடிக்கிறோம்.

நான் பொறந்ததுல இருந்தே 50க்கு எல்லாம் புடிக்க மாட்டாங்களே சார்

50ன்னா விட்டுடுவோம். நீங்க 55

இப்ப என்ன பண்ணனும் சார்?

இன்னும் கொஞ்சம் ஓரமாய் கட்டினார். ஏதேதோ சொன்னார். கேமரா பக்கம் இரண்டு காக்கிகள். 20 மீட்டர் தள்ளி நிழலில் ஒரு சார்ஜன்ட். "சாருக்கு கம்மியா போடுப்பா" என ஒருவர் சிபாரிசு வேறு செய்தார். சுற்றி வளைத்து அவர்கள் எனக்கு சொல்ல வந்தது "20 மீட்டர் தள்ளிப் போனா ஃபைன். இங்கேயே தந்தா கம்மி லஞ்சம்".

உள்ளுக்குள்ள இருந்த அண்ணா ஹசாரே தொபுக்கடீர் என குதித்தார்.

"உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா சார்? 5 கீமீ அதிகமா வந்தா 1000ரூ கேட்பீங்க. ஆனா நீங்க லஞ்சம் வாங்கினா மட்டும் யாரும் கேட்கக்கூடாது. கத்திபாரா பாலத்துல அதிகப்பட்ச வேகமே 10கிமீ சார். நீங்க போவீங்களா? 1950ல போட்டத இன்னும் மாத்தாம வச்சிருக்கான் கவர்மென்ட். நீங்களாச்சும் கொஞ்சம் யோசிச்சு புடிக்க மாட்டீங்களா சார்?வண்டி ஓட பெட்ரோல் தர மாட்டீங்க. ஆஃபீஸ்க்கு லேட்டாகும். அதுக்காக கொஞ்சம் வேகமா போனா புடிப்பீங்க. போகலைன்னா அவன் லாஸ் ஆஃப் பேன்னு புடிப்பான். கேன்சர்ன்னு ஃபோட்டோ போட்டு சிகரெட்ட விப்பீங்க. குடிக்காதன்னு சொல்லி சாரயாத்த விப்பீங்க. ஆனா நாங்க சொந்த பாதுகாப்புக்கு ஹெல்மெட்ல போடலைன்னா அதுக்கும் காசு வாங்குவீங்க.  $%^&*()_____________________________”

இந்த போலீஸ் காலைல இருந்தே நிழலில்தான் நிற்கிறார் போல. கொஞ்சம் கூட கோவப்படமால் அதே ஆஃபரை இன்னும் பாலீஷாக சொன்னார். நீங்க போடுற ஃபைன போடுங்க சார். கட்டுறேன்னு கத்தினேன். என்னிடம் இருக்கும் எல்லா நம்பரையும் வாங்கிக்கொண்டு 300ரூ அச்சடித்து காறித்துப்பியது அந்த புதிய எலக்ட்ரானிக் மிஷின். இப்போது அவர் பேச ஆரம்பித்தார்

"இந்த காசு ஒரு நல்லதுக்கு கொடுத்தேன்னு நினைச்சிக்கோங்க சார். அடுத்த தடவ வண்டிய ஸ்பீடா ஓட்டினா இது ஞாபகத்துக்கு வருமில்ல.நீங்களும் பத்திரமா வீடு போய் சேருவீங்க. 300ரூபாயால என்ன சார் ஆயிட போது"

பர்சிலிருந்து 3 நூறு ரூபாய் தாள்களை கொடுத்தேன். வாங்கிக் கொண்டார்.  "ஒண்ணு சொன்னா கோச்சிக்க மாட்டீங்க இல்ல சார்".  இல்லையென்பதாக தலையாட்டினார்.

"நைட்டு ட்யூட்டி முடிஞ்சு வீட்டுக்கு உங்க பைக்ல போவீங்க இல்ல. அப்ப ஸ்பீடோமீட்டர் ஒவ்வொரு தடவ 40க்கு மேல போறப்ப என் ஞாபகம் வரும் சார். நைட்டு சாப்பாடு இறங்கினா நீங்க நோட் பண்ண என் நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டி விடுங்க சார்"

வண்டியை விருட்டென கிளப்பி பாய் கடைக்கு விட்டேன். லன்ச் டைம் முடிந்து மணி 2.45 ஆகியிருந்தது. பிரியாணி இருக்காண்ணே என்றேன். “சாப்பிடுறவங்க எல்லாம் டேஸ்ட்டா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா கூட்டம்தான் வரல. லெக் பீசே இருக்குங்க" என்றார் பாய். டோக்கன் வாங்க பர்ஸை எடுத்தால் ஒரே ஒரு 10ரூ தாள் தனியாவர்த்தனம் செய்து கொண்டிருந்தது. இருந்த முன்னூறு ரூபாயும் ஃபைன் கட்டியாகிவிட்டது. கார்டை எல்லாம் வாங்குற அளவுக்கு பாய்கடை பிசினஸ் வளரவில்லை. எரிச்சலுடன் வண்டியை கிளப்பினேன்.

இந்த நியாயம், தர்மம் எல்லாம் மறந்து அந்த காக்கி கேட்ட 100ரூபாயை தந்திருந்தால் நான் பிரியாணி சாப்பிட்டிருப்பேன். காக்கியும் சாப்பிட்டிருப்பார். பாய் கடை பிசினஸ் வளர்ந்திருக்கும். க்ரெடிர் கார்டு வாங்குமளவிற்கு வந்திருப்பார். என்னைப் போல காசில்லாமல் வரும் ஒருவன் கார்டின் உதவியுடன் சாப்பிட்டிருப்பான். அந்த பேன்க் வளர்ந்திருக்கும். கிரெடிட் கார்ட் விற்க ஒரு பெண்ணுக்கு வேலை கிடைத்திருக்கும். அதற்காக அவர் சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கியிருப்பார். நிச்சயம் ஒரு பாய் ஃப்ரென்ட் கிடைத்திருப்பான். இருவரும் பேச தினம் 10 ரூ ரீசார்ஜ் செய்திருப்பான். அந்த மொபைல் ஷாப் ஓனர் பிழைத்திருப்பான். ச்சை

எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோமென்று உரைத்தது. அடுத்த முறை வண்டியை 55ல் ஓட்டினால் 100ருபாய்க்கு மேல் சல்லிக்காசு கொடுப்பதாக இல்லை நான்.

20120531_150319

May 28, 2012

நீலிமா

16 கருத்துக்குத்து

 

   பெண்களுக்கான ஒரு அரிமா சங்க‌ நிகழ்ச்சியில் பேசுவதற்காக  சில தலைப்புகள் கேட்டிருந்தார்கள். வழக்கமான சாலமன் பாப்பையா ரக தலைப்புகளாக இல்லாமல் சில தலைப்புகளை சொல்லியிருந்தேன். யுத்தம் செய் புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் சிறப்பு விருந்தினர் என்றதால் அந்த நிகழ்ச்சிக்கு போகும் எண்ணம் அதுவரை இல்லை. கடைசி நேர மாறுதலால் நீலிமாராணி வருவதாக ஆனதும் “அட!! நம்மாள பார்க்கலாம்” என நானும் சென்றேன்.

Neelima Rani photos Neelima Rani gallery

நீலிமாவை தெரியும்தானே? அசர வைக்கும் அழகெல்லாம் இல்லை.ஆனால் அழகுதான். எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நடிகைகளில் முக்கியமானவர். அநேக தொடர்களில் வழக்கம் போல் அழுது கொண்டிருந்தாலும் நீலிமா பெரிய திரையில் அவ்வபோது நாயகியின் தோழியாக அம்சமாக வந்து போவார். நிகழ்ச்சி நடந்த அரங்கை நான் அடைந்தபோது அவசர அவசரமாக அவர் புகைப்படம் தாங்கிய பேனர் ஒன்றை வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு லுக் + கன்னத்தை லேசாக தட்டிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.  செம ஃபிகர் பாஸ்

பெண்களுக்கான‌ நிகழ்ச்சி. வந்திருப்பவர் சீரியல் நடிகை. பேசியே கொல்லப் போகிறார்கள் என்பதை அறியாமல் இல்லை நான். சரியாக 7.45க்கு நீலிமா பிங்க் நிற சேலையில் உள்ளே வந்தார். நான் எதிர்பார்த்தது போலவே நேரில் கூடுதல் அழகோடுதான் இருந்தார். தென்றல், செல்லமேவின் வாசக நெஞ்சங்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். கூடி நின்ற‌ பெண்களில் யாரேனும் ஒருவரின் பெயரை சொல்லி இவ‌ரைப் போன்ற‌ ஒரு விசிறியை நான் கண்டதில்லை என்று எப்போது பேசத் தொடங்குவார்! பார்த்துட்டு கிளம்ப வேண்டியதுதான் என்றெண்ணத்தோடு காத்திருந்தேன்.

ஆன்ட்ராய்ட் மொபைலில் Temple Run விளையாடிக் கொண்டிருந்த போது மைக்கில் "தேவிகா அம்மா" என்றார் நீலிமா. “ஓ இவர்தான் இன்றைய மின்னல் விரலுக்கு சொந்தக்காரரா” என நிமிர்ந்தேன். இவங்கள நான் லைஃப் டைல மறக்க மாட்டேன் என தொடர்ந்தார். மன ரிமோட்டில் ம்யூட் பொத்தானை மட்டும் அமுக்கிவிடலாமா என யோசித்து நிராகரித்தேன். நல்ல வேளை. நீலிமா சொன்ன தேவிகா அம்மா அவரிடம் கேட்ட முதல் கேள்வி "நீ எந்த நாடகத்துலம்மா நடிக்கிற?". நீலிமா தென்றல், செல்லமே என்றாவுடன் அடுத்த கூக்ளியை வீசியிருக்கிறார். "ஓ. இது எந்த டிவிலம்மா வருது?"

கேட்ட நமக்கே கிள்ளிப் பார்க்க தோன்றும் போது நீலிமா என்ன நிலைக்கு ஆளாகியிருப்பார் என புரிந்துக் கொள்ள முடிகிறது. சுற்றி நின்று "கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க" என ஆஸ்கார் விருதுகளாக கொடுத்த நடுவர்கள் மத்தியில் நீலிமா ஏன் தேவிகாவை பற்றி பேச வேண்டும்? உள்ளுக்குள் அலாரம் அடிக்க மன ரிமோட்டில் சத்தத்தை கூட்டினேன்.

 

"நான் சீரியல் நடிகைதாங்க. ஆனா அதனால உங்களுக்கு என்ன நல்லது இருக்கு? ஒரு நிகழ்ச்சி பார்க்கறிங்கன்னா அதனால உங்களுக்கு ஏதாச்சும் கிடைக்கணும் இல்லை? மெகா சீரியலில் என்னங்க இருக்கு? நான் நடிக்கிற ஒரு சீரியல். 3 வருஷமா அதே இடத்துலதான் இருக்காங்க. கொஞ்சம் கூட கதை நகரல. நானும் நடிச்சிட்டுதான் இருக்கேன். அது எனக்கு ப்ரெட் & பட்டர். ஆனா உங்களுக்கு என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறத‌ லேட்டாக்குறத தான் இந்த சீரியல் செஞ்சிருக்கு. வேற ஒண்ணும் செய்யல"

நீலிமா பேசிக் கொண்டேயிருந்தார். ஒருவர் தான் இயங்கும் தளத்தை விமர்சிப்பது புதிததல்ல. பெரிய விஷயமுமில்லை. ஆனால் அதை பொது தளத்தில், ஒரு ஃபோரமில் முன்வைக்க தைரியம் வேண்டும். அதை விட முக்கியமாக அதன் விளைவுகள் குறித்த புரிதல் வேண்டும். நீலிமாவின் பேச்சில் ஒரு நிதர்சனமான உண்மையும், தீர்க்கமான புரிதலும் இருந்தது. எதிர்மறையாக பேசி கைத்தட்டல் வாங்க வேண்டுமென்ற அலட்டல் இல்லை. மேலோட்டமாக பேசி கூடியிருந்த பெண்களின் சல்சலப்புக்கு ஆளாகும் முட்டாள்த்தனமும் இல்லை. அனைவரையும் கூர்ந்து கவனிக்க வைக்கும் பேச்சு அது. அதற்காக கேட்கும் அனைவரும் டிவியை உடைத்துவிடுவார்கள் என்ற அவநம்பிக்கையும் அவரிடத்தில் இல்லை. "யாராச்சும் ஒருத்தர் இத பத்தி நாளைக்கு. இன்னைக்கு இல்லை. நாளைக்கு யோசிச்சி பார்த்தீங்கன்னா போதும் எனக்கு." என்றார் நீலிமா.

 

    நீலிமா குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் அறிமுகமானவர். சிறந்த குழந்தை நட்சத்திரம் உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறார். தமிழில் தேவர் மகன் படத்தில் நாசருக்கு மகளாக அறிமுகமாகி நான் மகான் அல்ல,சந்தோஷ் சுப்ரமணியம் மொழி என 25க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். போதுமான வருமானம் இருக்கிறது. என்ன செய்கிறார் அதை வைத்து? தம்பியை அவர் விருப்பபப்டி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.  அது வீடு. இன்னும் என்ன செய்கிறார்? ஒரு கேன்சர் விழிப்புணர்வு தன்னார்வ நிறுவனத்தில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார். இன்னும் பல என்.ஜி.ஓக்களில் பொருளுதவியும், சேவையும் செய்து வருகிறார்.மீடியா பிரபலங்கள் பொதுவாக செய்யும் பப்ளிசிட்டி ஸ்டன்ட் இல்லையது என நிச்சயமாய் என்னால் கூற முடியும்.

நீலிமாவின் பேச்சில் இதை தாண்டியும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் பல உண்டு. தான் பேச வந்திருப்பது ஒரு லயன்ஸ் கிளப் நிகழ்ச்சி என்றவுடன் அவர்களை பற்றிய தரவுகளை சேகரித்திருக்கிறார். அந்தக் குறிப்பிட்ட சங்கம் இதுவரை செய்திருக்கும் கண்தான முகாம்கள், ரத்தத்தான முகாம்கள் உள்ளிட்ட பொதுச்சேவைகளை லேடி ரமணாவாக அவர் குறிப்பிட்டபோது "நாமளா இவ்வளவு செய்தோம்" என்ற ஆச்சரியத்தோடு அரங்கம் கைத்தட்டிக் கொண்டிருந்தது. பெண்கள் குறித்தும், அவர்கள் போராட்டம் குறித்தும் நீலிமா பேசிக் கொண்டிருந்த போது சில சீரியல் சின்னாத்தாக்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதை காண முடிந்தது, இந்த முறை அவர் அழுவது நல்லது எனபது மட்டும் எனக்கு புரிந்தது. நமக்கு நேரத்துக்கு தோசை கிடைக்குமென்ற நம்பிக்கை கிட்டத்தட்ட எல்லா ஆண்களின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. நம்பி ஏமாறுவது இப்போதெல்லாம் ஆண்கள்தானே?

  கையிலிருந்த கேலக்ஸீ டேபில் எடுத்து வந்த எல்லா குறிப்புகள் பற்றியும் பேசி முடித்த திருப்தியில் அதே சிரிப்போடு நீலிமா இருக்கைக்கு திரும்பினார்.அவர் சீரியலுக்கு கிடைத்திராத பலத்த உற்சாகம் அவர் பேச்சுக்கு கிடைத்தது. முன்னர் அவரை கண்டுக்கொள்ளாத பல தாய்மார்களும் இம்முறை அவரை நோக்கி நக‌ர்ந்ததை பார்த்துக் கொண்டே நான் வெளியேறினேன். வெளியே, அதே பேனர். அதே நீலிமா. ஆனால் இப்போது  இன்னும் அழகாக தெரிந்தார். Good Job lady என தட்டிக் கொடுத்துவிட்டு இரவு நேர சென்னை சாலையில் இறங்கி நடந்த போது மனதுக்குள் இப்பதிவை எழுத ஆரம்பித்திருந்தேன். அழகுக்குத்தான் எத்தனை டைமென்ஷன்கள்?

May 22, 2012

ஏவாள்நகர்

5 கருத்துக்குத்து

 

பிரச்சினையில்லாம நம்ம கல்யாணம் நடக்குமா என்கிறாள் தோழி. சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆஃப் போன கதையை சொல்லியிருக்கிறேன்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

வெகுமானத்திற்கு அதிகமாக அழகு சேர்த்த வழக்கொன்றை தோழி மீது தொடுக்கலாமென்றிருக்கிறேன்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இவள் ஒருத்தியை காதலிக்கவே காலம் போதவில்லை. எப்ப்ப்டித்தான் நான் க்ருஷ்ணன் ஆவதோ??

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

உண்மையில் உன் மையில் க‌ரைகிற‌து என் கால‌ம்

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

தூங்குறதுக்கு முன்னாடி தோழிக்கிட்ட இனி பேசக்கூடாது. காதுல ஒரே எறும்பு

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

மழையும் வெயிலுமற்ற ஒரு நாளில் தான் என் மீது தவ்வி கவ்வியது. தப்பிக்க

எத்தனிக்காமல் அக்காதலுக்கு இரையாகி கொண்டிருக்கிறேன்..

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

அவள் ஊடுருவியிராமல் எஞ்சியிருக்கும் பகுதியென ஏதுமில்லை என் ஆழ்மனப்பரப்பில்

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

கூகிளிள் யாராச்சும் "best search engines" ன்னு தேடுவாங்களா? அவகிட்ட போய் யார் ரொம்ப அழகுன்னு கேட்கிறேன்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

நான் இருப்பது ஆதம்பாக்கம் என்றால் , அவள் இருப்பது ஏவாள்நகர் தானே!!

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

விஜய் மாதிரி அதிகம் அலட்டிக்காம இருந்த வாழ்க்கை அவ வந்தவுடனே சிவாஜி கணக்கா ஓவர் ரியாக்ட் பண்ணுது

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஒற்றையிற‌கு ந‌னைந்தபடி என் நெற்றியில் வ‌ந்து ஒட்டுகிற‌து. இங்குதான் எங்கேனும் அவ‌ள் இருக்க‌க்கூடும்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

அக‌மெல்லாம் அழ‌கால் ஆன‌வ‌ள் அவ‌ள்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

What the hell have u done in past one month னு பாஸ் க‌த்துற‌ப்ப‌ கூட‌ "அவ‌ என்ன‌ ப‌ண்ணிட்டு இருப்பான்னு" யோசிக்கிறான் பாரு.அவ‌ன் க‌ட‌வுள்

May 21, 2012

CSK da

14 கருத்துக்குத்து

 

 

இது சென்னை கிங்க்ஸ்‌ பரம்பரை
அஞ்சாறு சீச‌ன் வ‌ரை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ ர‌ன் மழைதான்
நாம முன்னேறும் படிக்கட்டு
என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது கிரகமும்
ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்
ஆடாம ஜெயிச்சோமடா
நம் தோனி வாடாமல் ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம்
சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்


இது சென்னைகிங்க்ஸ் பரம்பரை
அஞ்சாறு சீச‌ன் வ‌ரை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ ர‌ன் மழைதான்
_________________________
ஹே ஒண்ணா ரெண்டா க‌ப்பு ந‌ம‌க்குதான்டா
எல்லா சீச‌னிலும் நாம‌ ஹீரோதான்டா
கேப்ட‌ன் என்றால் ந‌ம்ம‌ தோனிதான்டா
டேபிளில் எப்போதும் டாப் ஃபோரில்தான்டா


புள்ளியில் முன்னிருக்கும் சேவாகுக்கும்
பாயின்ட்டு தேவையின்னா கடன் கொடுப்போம்
அந்த கொல்க‌த்தா ஆவான் ஊள‌‌கெத்தா
நம்ம ர‌ன்ரேட் முன்னால அவுட்கேட்
என்றாகும் பெங்க‌ளூரு சேல‌ஞ்ச‌ர்ஸ்தான்
ஹே ப்ளே ஆஃப் போயாச்சு. ந‌ம்ம‌ ப‌வ‌ர்ப்ளேவும் வ‌ந்தாச்சு
ஜெயில் பிரேக்கிங் செஞ்சாச்சு. அந்த‌ கெயில் பேக்கிங் முடிச்சாச்சு

(சீனிவாச‌ன் என்ட்ரீ)
ம‌ல்லையா என்றாலும் ஷாரூக்கான் என்றாலும்
எனக்கொரு கவலை இல்ல
ஹே நாந்தாண்டா பிசிசிஐ ராஜா
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா
நான் கேட்டால் கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரங்களை கேட்டுக்கோடா

May 14, 2012

டி டி டி டி & டி

30 கருத்துக்குத்து

  முந்தா நேத்து தெரியாம ஒரு மொக்கையை போட்டாலும் போட்டேன். 4 பேர் பாராட்டியும், 12 பேர் கெட்ட வார்த்தையால் திட்டியும் மெயில் அனுப்பியிருக்காங்க. பொது வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம் என்று அடுத்த கடமைக்கு வந்துவிட்டேன். இன்றைக்கு குடிமகன்களுக்கு நமது ஸ்பெஷல் அறிவுரைகளை பார்ப்போம்.

நாட்டுக்கு அதிக வருமானம் தருவது “குடி”மகன்கள் தான். ஆனால் அவர்கள் சரக்கடிக்கிற இடத்த பார்த்தாலே உவ்வே. யுனிவெர்சல் டேக்லைன் தெரியுமா? “Where you buy,matters”. டாஸ்மாக்க எல்லாம் நம்மால மாத்த முடியாது. ஆனா சரக்க எப்படி அடிக்கிறதுன்னு சொல்ல முடியும். ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் சொல்வா. நம்ம வயித்துக்குள்ள போடுறத எப்படி போடுறதுன்னு பார்ப்போம்.  சரக்கடிக்கிற எல்லோரும் 4D யை கண்டிப்பா ஃபாலோ செய்யணும். இப்ப ஒவ்வொரு  டி யா பார்ப்போம்.

1) Drink:
       எங்க வாங்கறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. என்ன வாங்குறோம்ன்றது ரொம்ப முக்கியம். சில பேருக்கு விஸ்கி அடிச்சா மறுநாள் மூச்சா வராது. சில பேருக்கு பியரடிச்சா வந்துட்டே இருக்கும். வோட்காவ பார்த்தாலே நாக்குல ஜலம் வருபவரும் உண்டு. பிராந்தின்னு சொன்னாலே வாந்தியெடுப்போரும் இப்பூவுலகில் உண்டு. அதனால் அவா அவா டேஸ்டுக்கும், பாடி கண்டிஷனுக்கும் ஏத்தது மாதிரி சரக்க வாங்க வேண்டியது முதல் டி.

2) Dilution:
   On the rocks அடிப்பியான்னு கேட்டா கல்லு மேல உட்கார்ந்து அடிக்கிறதா மச்சின்னு கேட்கிற அப்பிராணிகளும் இருக்காங்க. ஏழு மாதிரி பியருக்கே தண்ணி கலக்குற மொடா குடிகாரர்களும் இருக்காங்க. ஆனா சரியான மிக்சிங்ல தான் இருக்கு சூட்சமம். வோட்கான்னா லைட்டா லைம் கார்டியலும், ஸ்ப்ரைட்டும் சரியா இருக்கும். இல்லைன்னா ஆரஞ்சு ஜீஸ் மிக்ஸ் செய்து ஸ்க்ரூ டிரைவர் என்ற காக்டெயில் ஆக்கியும் அடிக்கலாம். அதே மாதிரி பிராந்திக்கு தண்ணியும், சோடாவும் சரி விகிதத்தில் கலக்கணுமாம். மாமா சொல்வாரு. விஸ்கிக்கு தண்ணியும் கோக்கும் தானாம். டக்கீலா எல்லாம் அப்படியே ராவா அடிச்சாதான் ரெஸ்பெக்ட். ரெமி மார்ட்டினுக்கு என்ன கலக்கணும்னு எனக்கு தெரியல. ஏன்னா எனக்கு மிஷ்கின தெரியாது பாருங்க. அதனால் ரெண்டாவது டி என்னன்னு ஞாபகம் வச்சிக்கோங்க. டைல்யூஷன்

3) Duration:
    எப்போ அடிக்கிறோம்ன்றது முக்கியமே இல்லை. 24X7 அடிக்கலாம். ஆனா எவ்ளோ நேரம் அடிக்கிறோம்ன்றது ரொம்ப முக்கியம்ன்னு World Health Organization சொல்லுது. வாயில வச்ச உடனே சர்ருன்னு காலி செய்றது டீசன்சியும் இல்லை. நல்லதும் இல்லை. வயசுப் பொண்ணு உதட்டுல முதல் தடவ கிஸ் பண்றது மாதிரி முதல் பெக் அடிக்கணும். அந்த நெருக்கம் அதிகம் ஆனதும் உதட்ட சுருக்குன்னு கடிக்கிற மாதிரி ரெண்டாவது பெக்க நல்ல ரசிச்சு அடிக்கணும். அப்படியே மூணாவது ரவுண்டு போகும் போது ஒரு மணி நேரமாச்சும்  ஆயிருக்கணும். அப்படி ரசிச்சு அடிச்சாதான் தண்ணி. இல்லைன்னா…

4) Dinner:
    கல்யாணதுக்கு போனா சாப்பிட சொல்லி தொல்லை செய்வாங்க. நாங்க சாப்பிட்டுதான் சாப்பிடுவோம்னு சொன்னா ரெண்டு பந்தில உட்காருவாங்கன்னு நினைச்சுட்டு போற ஆட்கள விட்டு தள்ளுங்க. ஆனா சாப்பிட்ட பிறகு சாப்பிட மறக்காதீங்க. சைட் டிஷ் சாப்பிட்டே வயித்த நிரப்புறது நல்லதில்லை. கடைசியா கொஞ்சம் தயிர் சாதமோ இல்லைன்னா புரோட்டாவோ சாப்பிட்டாதான் அடிச்ச சரக்குக்கே மதிப்புன்னு பிரியாணியோனந்தா சொல்லியிருக்காரு. அதனால் சரக்குக்கு காசு எடுக்கும்போதே ஃப்ரைட் ரைஸுக்கும் காச எடுத்து வைக்கிறவன் தான் உண்மையான குடிமகன்.

4D ஆச்சா? இப்போ குடிச்ச பிறகு செய்யக்கூடாத ஒரு டி இருக்கு. அதான் Driving. மப்புல தரையில டைவிங் அடிக்கலாம். தப்பில்லை. ஆனா டிரைவிங் பண்ணாம இருக்கிறது நல்லது. நாமலாம் நாடு முன்னேற மொத்த காசையும் அரசாங்க கேளிக்கை விடுதில (அதாங்க டாஸ்மாக்) கொட்டுற ஆளுங்க. நாட்டு மேல அவ்ளோ அக்கறை இருக்கிறப்ப நாட்டு மக்கள் மேலயும் கொஞ்சம் கருணை காட்டலாம் இல்லையா? அதனால் டிரைவ் பண்ணாம இருக்கிறது நல்லது. குடிச்சிட்டு யார வேணும்னாலும் ஓட்டலாம். ஆனா வண்டி மட்டும் வேணாம்.

அடுத்த முறை குடிக்கிறப்ப Cheers சொல்வீங்க இல்லை? அப்போ ஒரு செகண்ட் நான் சொன்னதை ஞாபகத்துல வச்சிட்டு எனக்கும் ஒரு சியர்ஸ் சொல்லுங்க.  புளகாங்கிதம் (அது என்ன பேப்பர்டா?) அடைவேன்

ஆக இப்படியாக குடித்து வந்தால் இந்த நாள் மாத்திரமல்ல, வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளே. மீண்டும் நாளை சந்திப்போமா?

May 11, 2012

நான் காலியான‌ க‌தை

33 கருத்துக்குத்து

 

அப்ப எனக்கு ரெண்டரை வயசாம். அப்பன்னா எப்பன்னு கேட்கறீங்களா?? எதிர் வீட்டு பொண்ணு பர்த்டேக்கு சாக்லெட் கொடுக்க வந்தப்ப நீயே சாக்லெட்ன்னு அவள இழுத்துட்டு போனேனாமே..அப்ப எனக்கு ரெண்டரை வயசாம். ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி பார்த்த பொண்ணே மறந்து போச்சு. இதுல 20 ஆம் நூற்றாண்டுல நடந்த சம்பவத்த ரீ சைக்கிள் பின்ல இருந்தா எடுக்க முடியும்? அத‌னால அத‌ ஃப்ரியா விடுங்க‌. நீங்க இதுல கககபோ பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா, எனக்கு சைட்டடிப்பதில் 26 .5* வருட அனுபவம் உண்டு.

(*  – இப்ப எனக்கு வயசு 29 என்பதை அறிவீராக)

வேடிக்கை பார்க்கிறதுல அதாங்க சைட்டடிக்கிறதுல பல வருட அனுபவம் என்றாலும் அடுத்த K க்கு போறதுல எனக்கு நிறைய முட்டுக்கட்டைங்க..முதல்ல நீங்க 4K பத்தி தெரிஞ்சிக்கணும். கண்ணால சைட் அடிப்பது – கடலை போடுவது – காதலிப்பது – கல்யாண செய்து கொள்வது. இப்படி படிப்படியாக முன்னேறுவதே சாலச்சிறந்தது என்கிறார் ஸ்ரீலஸ்ரீ மன்மதலோச்சின வியாச அடிகள். அவ்வகையில் பார்த்தோமேயானால் பாதி கிணறு மட்டுமே தாண்டியவன் ஆகிறேன் அடியேன். (அவரேதான் மனதை ஒருநிலைப்படுத்தி புற உலகை மறந்து கவனத்தை குவிப்பதால் சைட்டடிப்பதும் ஒரு வகை தியானமே என்றார்)

கடலை போடுவது என்பது ஒரு கலை. ஒரு பொண்ணுக்கிட்ட பேசுறப்ப அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, அவ சூர்யா ஃபேனா இல்லையா,, கிரிக்கெட்டுல எத்தனை கோல்ன்னு அவளுக்கு தெரியுமா, மொக்கை ஜோக்குக்கே சிரிப்பாளா மாட்டாளா, I hate this stupid politics என்பவளா,க்ரேசி மோகன தெரியுமா, இந்திய அணி ஜெர்சிய கூட பிங்க் கலர்ல தேடுற ஆளா, கடைசியா அவ பார்த்தது avengers இல்லை நண்பனா, இப்படி பல ஆங்கிள்ல முதல்லயே நல்லா யோசிச்சு ஸ்க்ரிப்ட் எழுதி ஆனா எல்லாமே ஸ்பாண்ட்டேனியஸா பேசுற மாதிரி பேசி, அவளையும் சிரிக்க வச்சு நமக்கும் போரடிக்காம அடுத்த நாள் காஃபிக்கோ லன்ச்சுக்கோ ரெடி பண்ணி அதே சமயம் மொபைல்ல இருக்கிற பேலன்ஸ் தீராம‌ பேசி முடிக்கிறதுக்குள்ள நாங்க படுற அவஸ்தை இருக்கே. இதுக்கு பதிலா சுனாமி வர்றப்ப கடலுக்குள்ள போய் கால நீட்டி படுத்திடலாம்..ஆனா ஒண்ணுங்க.. கடலை போடுறப்ப பார்டர தாண்டி என்னைக்கும் போக மாட்டான் கார்க்கி. எனக்கு “கடலை.. கண்ணியம்.. கட்டுப்பாடு” என்பதுதான் தாரக மந்திரம்

இப்ப அடுத்த K.. காதல். வருங்காலத்த முன்கூட்டியே தெரிஞ்சி வச்சுப்பாங்க இல்ல சில பேரு.. அது மாதிரி நானும் எப்படியும் ஒரு தேவதை நமக்காக வருவான்னு அடிஷ்னல் பேப்பரா வாங்கி தோழி அப்டேட்ஸா எழுதி தள்ளிட்டேங்க. அதுதான் நான் செய்த பெரிய தப்பு. ரெண்டு Kவ தாண்டி எந்த பொண்ணும் வராம போனதுக்கு இதுதான் காரணம்ன்னு எனக்கு லேட்டாதான் தெரிஞ்சுது. என்னை புடிச்ச பொண்ணுங்க கூட தோழி அப்டேட்ஸுக்கு பின்னால இன்னொரு பொண்ணு இருக்கிறதா நினைச்சு என்கிட்ட சொல்லாமலே விட்டாங்க. சரி பைக் வாங்கி நூல் விடுவோம்ன்னு Yamaha Fz16 வாங்கினேன்.ஆனா ஒவ்வொரு வாரமும் பதிவர் சந்திப்பு, Tweetupன்னு போறதுக்கு பேசாம Super splendorஏ வாங்கியிருக்கலாம். இதுல வேற நையாண்டி நாகராஜ், டீக்கடை கோபாலு, நரிமுக நாதாறி, நசுங்கிய சிம்பு.. ச்சே சொம்பு. இதெல்லாம் என்னன்னு யோசிக்கிறீங்களா? நம்ம பிளாகர்ஸோட புனைபெயரு.. எவனும் சொந்த பேர சொல்ல மாட்டானுங்க.. எனக்கு கூட இதையே தைரியமா சொல்றாங்களே.. அப்ப நிஜப்பேரு எவ்ளோ மோசமா இருக்கும்ன்னு தோணும். சரி அத விடுங்க. அவங்க என்ன கேட்பாங்கன்னா, அங்க விட்டுடுறீங்களா சகான்னு லிஃப்ட் கேட்பானுங்க.. வண்டிக்கு பின்னாடி சில பேரு Brother giftன்னு எழுதியிருப்பானுங்க இல்லை. அது மாதிரி இவனுங்க சட்டைல Borther Liftன்னு எழுதி வச்சிக்கலாம். சரி பாவம்ன்னு வண்டில ஏத்தினா ஆரம்பிப்பானுங்க பாருங்க

நீங்க ரொம்ப லக்கி சகா

ஏன் பாஸ்?

இல்லை. இந்த பைக்ல பையன் என்னாலயே உங்கள பிடிக்காம உட்கார முடியலையே.. உங்க தோழி எப்படி உட்காருவாங்க?

இந்த Fz பைக் இருக்கு பாருங்க. இந்திய பாகிஸ்தான் எல்லை மாதிரி எது பார்டரு, எது டிரைவர் சீட், எது பில்லியன் இடம்னே தெரியாது. நிச்சயம் யாராச்சும் ஒருத்தர் எல்லை மீறிய பயங்கரவாததுல ஈடுபட்டே ஆகணும்ன்ற மாதிரி டிசைன் பண்ணியிருப்பானுங்க. அதத்தான் நம்ம பசங்க லக்கின்னு சொல்வாங்க. நம்ம லட்சணம்தான் நமக்கு தெரியுமேன்னு ரியர்வியூ மிரர்ல என் மூஞ்சி அவனுக்கு தெரியுற மாதிரி நாசூக்கா திருப்பி விட்டுட்டு நானும் ஒரு ஸ்மைல் விடுவேன். பெரிய சிபிஐ கணக்கா ஏதோ கண்டுபிடிச்ச மாதிரி “அட சகாவுக்கு வெட்கத்த பாருங்க. நான் கண்ணாடில பார்த்துட்டேன்னு” ஃபீலிங்க்ஸ் விடுவானுங்க.. தோழியிருந்தா ஞாயித்துகிழமை சாயங்கலாம் இந்த வண்டில இவன ஏத்திக்கிட்டு சுத்த எனக்கு பைத்தியமான்னு கூடவா யோசிக்க மாட்டானுங்க? கெரகம் நம்மள ரோமியோன்னு நினைக்கிற வரைக்கும் போதும்ன்னு நானும் கண்டுக்க மாட்டேன்.

இப்படி போயிட்டிருந்த வாழ்க்கைல ஒரு சேஞ்ச் வேணும்ன்னுதான் பிளாக விட்டுடுட்டு ட்விட்டர்ல தஞ்சம் புகுந்தேன். வாழ்க்கையை புரட்டி போடுற அச்சம்பவம் நடக்கும்ன்னு நான் கனா எல்லாம் காணவில்லை. ஆனால் நடந்தது. ஆக்ச்சுவ‌லி அவ‌ள‌ நான்,.. கிர்ர்.. சிம்பு மாதிரி ஆயிட்டேனோ???? :(((

(தொடரலாம்.. தொடராமலும் போகலாம்)

May 6, 2012

ஆமீர் சார் வாழ்க

4 கருத்துக்குத்து

 

    

எப்போதும் போல ஞாயிறு காலை கிரிக்கெட் ஆடிவிட்டு வந்துவுடன் நான்  படுத்துறங்கியிருக்கலாம். ஒரு உந்துதலில் அமீர் கான் தயாரித்து, எழுதி தொகுத்தும் வழங்கும் சத்யமேவ ஜயதேவின் தமிழ் வடிவத்தை விஜய் டிவில் பார்க்க தொடங்கினேன். நீண்ட நாட்களாக அமீரின் டேபிளில் கிடந்த பல கான்செப்ட்களில் அவர் டிக் அடித்து செய்யும் நிகழ்ச்சி என்பதால் தானாகவே எதிர்பார்ப்பு எகிறிப் போயிருந்தது. அது போதாதென்று நிகழ்ச்சி குறித்த உடனடி விவாதத்திற்கு ட்விட்டரும் தளம் அமைத்து தந்திருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து பார்க்க தொடங்கினேன்.

சத்யமேவ ஜயதே ஒன்றும் புத்தம் புது கான்செப்ட் எல்லாம் இல்லை. சமூகத்தில் இருக்கும் பல பிரச்சினைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அலசுவது, அதன் உண்மையான காரணங்களை பட்டியிலிடுவது, நிபுணர்களின் கருத்துகளை கேட்பது, அதை கேட்டு கண்ணீர் வடிக்கும் ஒரு பெண்மணியின் முகத்தை க்ளோசப்பில் காட்டுவது, இடையில் சிரிக்க ஏதுவாக ஒருவரை காமெடியாக பேச வைப்பது,  முடிவில் “தலைவலிக்கு கட்டாயம் சாரிடான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என ஒரு தீர்வை சொல்வது பாணியிலான நிகழ்ச்சிதான்,

முதல் அத்தியாயத்தில் அமீர் எடுத்துக் கொண்ட தலைப்பு “பெண் சிசு கொலை”.  நிகழ்ச்சியில் என்ன செய்தார்கள், எப்படியிருந்தது என்ற விஷயத்திற்குள் நான் போக விரும்பவில்லை. மொத்தமாக அது எனக்கு எந்த விதமான சிந்தனயை ஏற்படுத்தியது என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். ட்விட்டரில் கண்ட பலரின் கருத்துகளை கணக்கில் எடுத்துக் கொண்டே இதை சொல்கிறேன்.

முதல் பிரச்சினை. யாரும் அமீர் சொன்ன விஷயத்தை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை, நான் உட்பட. “எப்படி சொன்னாரு பாரு அமீர்” என்பதே விஷயம். அதாவது பெண் சிசு கொலையை விட அதை சொன்ன அமீர் பெரிய விஷயமானார். இதுதான் நிகழ்ச்சியின் நோக்கமும் கூட என்பது பாதி நிகழ்ச்சியிலே எனக்கு புரிந்து போனது. இதை சொன்ன போது சிலர் ஒரு மசாலா படம் எடுத்தால் இந்த காசு அவருக்கு வராதா என்றார்கள். அமீருக்கு ஷாரூக் போல சல்மான் போல ஜாலி இமேஜ் இல்லை. அவர் அறிவாளி எதை செய்தாலும் ஒரு பொறுப்புணர்வு இருக்கும் என்றாகத்தான்  இருக்கிறது அவர் இமேஜ். . அவர் எப்படி “கோன் பனேகா க்ரோர்பதி” செய்ய முடியும்? அவரால் சத்யமேவ ஜயதேதான் செய்ய முடியும். மொத்த நிகழ்ச்சியும் இந்த விஷயத்தின் அடிப்படையிலே அமைந்திருப்பதாக தெரிந்ததுதான் என் முதல் எரிச்சல்.

இரண்டாவது.. இது அமீர் தயாரிக்கும் நிகழச்சி. அவருக்கு முழு சுதந்திரமும் உண்டு. இது போன்ற பிரச்சினைகளின் வீரியத்தை மக்களுக்கு எடுத்து சொல்ல உண்மையான, முழுமையான தகவல்களே போதுமென அவர் முடிவு செய்திருக்கலாம். மாறாக , மற்ற ஸ்டார் டிவி நிகழ்ச்சிகளை போல கண்ணீர் சிந்தும் பெண்மணிகளின் அழுகாச்சிகளே அதிகம் ஷார்ப்பாக எடிட் செய்யப்பட்டிருந்தன. இடையில் வழக்கறிஞர் என ஒருவரை காட்டினார்கள். ஒரு நீதிபதி நீதிமன்றத்தில் எல்லோர் முன்னிலையிலும் “ஆம்பிளை புள்ள வேணும்ன்னு கேட்கிறது” தப்பா என்றதை முடிந்தவரை நம்மை சிரிக்க வைக்குமளவிற்கு மாடுலேஷனோடு சொன்னார். அமீரே சிரித்து விட்டதால் அரங்கமும் சிரிக்க நானும் சிரிக்க வேண்டியதாயிற்று.   பின் மீண்டும் இன்னொரு ஆண்ட்டி கர்ச்சீஃபோடு எண்ட்ரி ஆனது வேறு கதை.மற்ற நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டால் அதிர்ச்சியூட்டும் பல புள்ளி விவரங்களை தந்தது பாரட்டப்பட வேண்டிய அம்சம்.

எனக்கு அமீரை பிடிக்கும்.இந்தியாவின் சிறந்த நடிகர் என்று பலரிடம் அவரைத்தான் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரும் ஒரு பிரபலமான ஸ்டார் தனக்கு எது பலமோ, எந்த இமேஜ் தன்னை வாழ வைக்குமோ அதை தூபம் போட்டு வளர்க்க என்ன செய்வார்களோ அதைத்தான் செய்கிறார், அதற்காக அவரை திறமையானவர் இல்லை என்று சொல்ல முடியுமா? ஆனால் அப்படி அவர் செய்யும் நூதன விளையாட்டை பொறுப்பு, உண்மை என யாரேனும் சொல்ல கேட்கும்போதுதான் எரிச்சலாக வருகிறது. இந்த நிகழ்ச்சி நிச்சயம் அமீர்கானை அறிவாளியாக, பொறுப்புணர்ச்சி மிக்கவராக மக்கள் இடையே அழகாய் இன்னும் ஆழமாய் நிறுவும். அதை தாண்டி எதுவும் செய்யுமென்ற நம்பிக்கை எனக்கில்லை. காரணம் அந்த எண்ணமே அவர்களிடத்திலே இல்லை. போதாக்குறைக்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் இவர்களது ஸ்பான்சராம்.

இறுதியில், அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நமது ஆதரவு வேண்டுமாம். எப்படி? 5**** என்ற ஏர்டெல்லு எண்ணுக்கு அழைத்தால் உங்கள் ஆதரவோடு காசும் எடுத்துக் கொள்வார்களாம். பாட்டு போட்டிக்கு எல்லாம் ஓட்டு போடும்போது நல்ல விஷயத்திற்கு செய்ய கூடாதா?? எந்த நிகழ்ச்சியோ நம்ம காசு காலி. அதுதான் நிதர்சனம். ஒரு அத்தியாயத்திற்கு 3 கோடி வாங்கும் அமீருக்கு நம்மாளான காசை கொடுத்து உதவுவோம். இன்னொரு க்ரூப் மற்ற மொக்கை, ஆபாச  நிகழ்ச்சிகளுக்கு இது பரவாயில்லையே என்கிறார்கள். அது விஷம் என்ற பாட்டிலில் இருக்கும் விஷம். இது மருந்து என்ற பாட்டிலில் இருக்கும் விஷம். அவ்வளவுதான் விஷயம்.

_____________________

jiiva@Actorjiiva

hats off to @aamir_khan for a super daring show! #Satyamev Jayate (TV show)... ur truly an indian icon to be inspired... :))))

Jaydeep Sarkar@sarkarjaydeep

Bravo, Aamir Khan! Thank you for not wasting the nation's time on game shows/ cultivating greed. THIS is how stardom should be used.

Rituparna Chatterjee@MasalaBai

This is embarrassing. Hate to be the party pooper.I don't know how to say this... but Aamir Khan is taking 3 cr per episode.#SatyamevJayate

இவை வெறும் உதாரணங்கள்தான். என் கண்ணில் கண்ட எந்த ட்விட்டும் சிசு கொலை பற்றி பேசவில்லை. அமீர் அதை சொன்னார். தட்ஸ் ஆல். ஆமீர் சார் வாழ்க.

 

all rights reserved to www.karkibava.com