Mar 5, 2012

GOவா - 1


 

நீலநிற ஹவாய் செருப்பு | முட்டிக்கு சற்று கீழே வரை நீளும்  கட்டம் போட்ட கால்சட்டை| கையில்லாத தொளதொள பனியன்| புஜத்தில் டிராகுலா அல்லது சிக்கலான  ஓவியத்தின் டாட்டூ |  தலையில் ஒரு அதி பயங்கர நிறத்தில் தொப்பி போன்ற வஸ்து | முடிந்தால் காதில் ஒரு ஹெட்ஃபோன் |புருவத்தில் ஒரு சின்ன வளையம் | இத்தனை இத்யாதிகளுடன் உங்கள் ஊர்த் தெருவில் எந்த உறுத்தலும் இல்லாமல் நடந்து செல்ல உங்களால் முடியுமா? அதுவும் ஒரு துள்ளிசை கேட்கும்போது சில வினாடிகள் நின்று ஒரு குட்டி ஆட்டம் போட்டுவிட்டு நடையை தொடர முடியுமா?? நிச்சயம் முடியும் என்றால் நீங்கள் கோவாவை சேர்ந்தவர் என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும்.

சென்ற வாரம் வெள்ளி – ஞாயிறு கோவாவில் கழிக்க தீர்மானமானது. அலுவலக மக்கள் 17 பேரோடு கோவாவை நோக்கிய விமானப் பயணம் வெள்ளி காலை 12 மணிக்கு தொடங்கியது. சென்னை விமான நிலையத்தை நான் அடைந்த போது 11 மணி இருக்கும். தற்போது சென்னை ஏர்ப்போர்ட்டில் விரிவாக்கப் பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. பெங்களூரு, ஹைதை, தில்லி என எல்லா ஊர் விமான நிலையங்களும் புதிப்பிக்கப் பட்டுவிட்டன. சென்னை மட்டும்தான் பாக்கி. ஸ்ரீபெரும்புதூர் பக்கம் என முடிவான திட்டம் வழக்கம் போல அதிரடி அரசியல் ஆட்டங்களுக்கு பின் மீனம்பாக்கத்திலே விரிவாக்கப்பட்டு வருகிறது. சற்று தாமதமானாலும் ஊரின் எல்லைக்குள்ளே விமான நிலையம் இருப்பது சென்னையில் மட்டுமே என பெருமைப் பட்டுக்கொள்ளலாம். சென்னை – பெங்களூரு 30 நிமிடத்தில் செல்வோம் என பைலட் சொன்னார். ஆனால் விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லவே ஒரு மணி நேரம் ஆகும் என்பது வேறு கதை. நாம் 11 மணி கதைக்கு வருவோம்.

பகல் ஒருபோதும் அழகானதில்லை. குறைந்தபட்சம் சென்னையில் அது அழகானதில்லை.  சில்லென்ற மூடுபனி, நிலாமழை, பிறப்பிடத்தை ஊடுருவ முடியாத ஒரு வித வாசனை என சென்னையின் இரவு சிருங்காரமானது. இரவு, அமைதியினூடே அழகாய்தான் எப்போதும் இருக்கிறது. பகல் அவ்வளவு அழகில்லை. எங்கும் மனித குரல்கள், வாகன இரைச்சல், செல்போன் அழைப்பு ஒலிகள் என அது சத்தங்களால் மட்டுமே ஆனது. நான் விமான நிலையத்தை அந்த சத்தங்களுக்கிடையேதான் சென்றடைந்தேன்.

விமான பயணமும் என் மனதுக்கு அவ்வளவு நெருக்கமானதில்லை. காற்றில் பயணம் என்று சொல்லிக் கொண்டாலும் நமக்கும் காற்றிற்கும் காசு வெட்டி முறித்துப் போட்ட உறவுதான். தவழும் மேகங்களை கண்டு பரவசமடைய ஏதுமிருப்பதாக எனக்கு தெரியவில்லை. கடலுக்கு மேல் பறந்தாலாவது சிலிர்க்கலாம்.சென்னை கோவா மார்க்கத்தில் ஏரிகளே வறண்டு போய்த்தான் கிடக்கின்றன.

  ரயில் பயணம் எனக்கு விருப்பமானது. அதுவும் இரவு நேர ரயில் பயணம் ரம்மியமானது. தாண்டி செல்லும் காற்றில் முகம் புதைக்கலாம். காதில் அது சொல்லும் ரகசியம் கேட்கலாம். கைகளை நீட்டி மயிர்க்கூச்செரியலாம். தலை முடியை கோதி செல்லும் காற்றோடு சிநேகம் வளர்க்கலாம். காதல் கொள்ளலாம். கை குலுக்கலாம். இரவின் அமைதியை கிழித்து செல்லும் தடக் தடக் சத்தம் எந்த வகையிலும் இடைஞ்சலை ஏற்படுத்துவதில்லை. மனித நடமாட்டமற்ற பாதை பயத்தை தருவதில்லை. எல்லா மலையடிவாரத்திலும் என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வதற்கென்றே அழகிய குடிசை ஒன்று நிச்சயம் இருந்துவிடுகிறது. யார் இப்படி தனியே ஒதுங்கி வாழ்வது என்பது மட்டும் சிதம்பர ரகசியம். எதிர்பாரா தருணங்களில் கூடிக் குறையும் ரயிலின் வேகம் சொல்லிச் செல்லும் பாடங்கள் ஏராளம். எதிர்புறத்தில் வரும் இன்னொரு ரயில் ஆனந்தத்தை கூட்டிவிடுகிறது. என்னைப் போலவே உறக்கமில்லா இன்னொருவன் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி சென்று கொண்டிருப்பான். என்னை நானே தரிசிக்கும் ஜென் நிலை என அதை சொல்வேன்.  ஊர் எல்லையை தொட்டவுடன் எந்த வீட்டில் சீரியல் பல்பு எரிகிறது என்று பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. இழுத்து மூடப்பட்டிருக்கும் கடைகளில் கிடைக்க ஏதுமில்லை என்பதே ஒரு திருப்தியை தந்துவிடுகிறது. மீண்டும் ஊர் எல்லை.. ஆளில்லா ஒரு ரயில்வே கேட். மீண்டும் மலை.காடுகள். ரயில் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் கடைசியில் மிஞ்சும் அதே அளவு இடம்தான் ரயிலிலும் கிடைக்கிறது. எல்லையற்ற நிசப்தத்தை ஒரு சத்தத்தினூடே கொடுக்க கடலுக்குப் பின் ரயிலால் மட்டுமே முடியும்.  இரவில் ரயில் பயணம் கிட்டத்தட்ட ஒரு போதைதான்.

பள்ளிக்காலத்தில் பசுமாடு தன் வரலாறு கூறுதல் படித்து சென்றால், ஆலமரம் தன் வரலாறு கூறுதல் எழுத சொல்வார்கள். படித்ததை எழுதிவிட்டு இப்படிப்பட்ட பசுமாடானாது ஆலமரத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று முடிப்பதுண்டு. அது போல, இப்படிப்பட்ட ரயில் பயணத்தை விட்டுவிட்டு ஆகாய மார்க்கமாகவே கோவாவை சென்றடைந்தோம் என்று அறிவீராக. பிற்பகல் 2.30க்கு எங்கள் விமானம் கோவாவை அடைந்த போது . கோவா ஒரு exaggerated place என்ற என் எண்ணம் சுக்கு நூறாக போகிறது என்ற பிரக்ஞையில்லாமல் நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.

(தொடரும்)

18 கருத்துக்குத்து:

வெண்பூ on March 5, 2012 at 11:58 PM said...

ந‌ல்லா எழுதியிருக்க‌ கார்க்கி... அடுத்த‌ பாக‌த்துக்கு காத்திருக்கிறேன்..

//
கோவா ஒரு exaggerated place என்ற என் எண்ணம்
//
ஏன் ச‌கா? எல‌க்ச‌னால‌ எல்லா ஒயின் ஷாப்பையும் மூடிட்டாங்க‌ளா? :)))

சுசி on March 6, 2012 at 12:03 AM said...

அடப்பாவி.. இப்டி சட்னு தொடரும் போட்டிட்டிங்களே..

செம்ம்ம்ம்ம!! சீக்கிரம் தொடருங்க..

Philosophy Prabhakaran on March 6, 2012 at 12:09 AM said...

யோவ் கார்க்கி... வழக்கமான உங்க காமெடி ஸ்டைலை விட்டுட்டு சீரியஸா எழுதுறேன்னு ஒரு வழி பண்ணியிருக்கியேய்யா... வலது பக்கத்துல உங்க போட்டோ வேற... இத பாத்துட்டே அதை படிச்சா சிப்பு சிப்பா வருது...

நடராஜன் on March 6, 2012 at 12:21 AM said...

//அந்த பசு ஆலமரத்தில் கட்டப்பட்டிருக்கும்// எட்டாவது படிக்கும் போது கட்டுரை எழுத சொன்னால் கதையாக முடித்திருக்கும் அந்த லாவகத்தால் தான் இன்று கார்க்கி வழி சாளரத்தை பார்க்கவைக்க முடிகிறதோ?

KSGOA on March 6, 2012 at 8:27 AM said...

ரயில் பயணம் பற்றிய உங்கள் விளக்கம்
அருமை.எனக்கும் ரயில் பயணம் ரொம்ப
பிடிக்கும்.எங்கள் மாநிலம் பற்றிய உங்கள் அடுத்த பாகம் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

KSGOA on March 6, 2012 at 8:50 AM said...

நான் வசிக்கும் மாநிலம் என்று எழுதியிருக்க வேண்டும்.

அசோகபுத்திரன் on March 6, 2012 at 8:52 AM said...

நான் ஏதாவது வழி மாறி வந்துட்டனா? இது கார்க்கியோட பிளாக் தான... பின்ற போ...

Balaji on March 6, 2012 at 9:35 AM said...

மயிலறகால் வருடுவது போல் உள்ளது வார்த்தைகளின் கோர்வைகள். வாழ்த்துக்கள்.

Balaji on March 6, 2012 at 9:36 AM said...
This comment has been removed by the author.
மோகன் குமார் on March 6, 2012 at 10:27 AM said...

நற நற ...

பொறாமை? லைட்டா

புதுகை.அப்துல்லா on March 6, 2012 at 11:45 AM said...

good one :)

amas on March 6, 2012 at 12:05 PM said...

ரயில் பயணத்தைப் பற்றிய உங்கள் பகிர்வு அருமை, கவிதை போல் இருந்தது. Waiting for more :-)
amas32

Sen22 on March 6, 2012 at 2:19 PM said...

Arumai...

இரசிகை on March 6, 2012 at 3:24 PM said...

innum konjoondu yezhutheettu thodarum pottirukkalaan..:(

"ராஜா" on March 6, 2012 at 3:43 PM said...

classic karki...

Athammohamed on March 6, 2012 at 5:02 PM said...

செம, போதை தரும் எழுத்து.

கார்க்கி on March 6, 2012 at 9:32 PM said...

நெம்ப சந்தோஷம்.. நன்றி

மதன்ராஜ் மெய்ஞானம் on March 7, 2012 at 3:51 AM said...

இத மட்டும் 4 தடவ படிச்சேன்.. அருமை!

//ரயில் பயணம் எனக்கு விருப்பமானது. அதுவும் இரவு நேர ரயில் பயணம் ரம்மியமானது. தாண்டி செல்லும் காற்றில் முகம் புதைக்கலாம். காதில் அது சொல்லும் ரகசியம் கேட்கலாம். கைகளை நீட்டி மயிர்க்கூச்செரியலாம். தலை முடியை கோதி செல்லும் காற்றோடு சிநேகம் வளர்க்கலாம். காதல் கொள்ளலாம். கை குலுக்கலாம். இரவின் அமைதியை கிழித்து செல்லும் தடக் தடக் சத்தம் எந்த வகையிலும் இடைஞ்சலை ஏற்படுத்துவதில்லை. மனித நடமாட்டமற்ற பாதை பயத்தை தருவதில்லை. எல்லா மலையடிவாரத்திலும் என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வதற்கென்றே அழகிய குடிசை ஒன்று நிச்சயம் இருந்துவிடுகிறது. யார் இப்படி தனியே ஒதுங்கி வாழ்வது என்பது மட்டும் சிதம்பர ரகசியம். எதிர்பாரா தருணங்களில் கூடிக் குறையும் ரயிலின் வேகம் சொல்லிச் செல்லும் பாடங்கள் ஏராளம். எதிர்புறத்தில் வரும் இன்னொரு ரயில் ஆனந்தத்தை கூட்டிவிடுகிறது. என்னைப் போலவே உறக்கமில்லா இன்னொருவன் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி சென்று கொண்டிருப்பான். என்னை நானே தரிசிக்கும் ஜென் நிலை என அதை சொல்வேன். ஊர் எல்லையை தொட்டவுடன் எந்த வீட்டில் சீரியல் பல்பு எரிகிறது என்று பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. இழுத்து மூடப்பட்டிருக்கும் கடைகளில் கிடைக்க ஏதுமில்லை என்பதே ஒரு திருப்தியை தந்துவிடுகிறது. மீண்டும் ஊர் எல்லை.. ஆளில்லா ஒரு ரயில்வே கேட். மீண்டும் மலை.காடுகள். ரயில் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் கடைசியில் மிஞ்சும் அதே அளவு இடம்தான் ரயிலிலும் கிடைக்கிறது. எல்லையற்ற நிசப்தத்தை ஒரு சத்தத்தினூடே கொடுக்க கடலுக்குப் பின் ரயிலால் மட்டுமே முடியும். இரவில் ரயில் பயணம் கிட்டத்தட்ட ஒரு போதைதான்.//

 

all rights reserved to www.karkibava.com