Nov 4, 2011

நாய் வளர்க்க ஆசைப்படும் இலக்கியவாதி


 

  நான் ஒரு இல‌க்கிய‌வாதி. இந்த‌ வ‌ரியை ப‌டித்த‌தும் நீங்க‌ள் துணுக்குறுவ‌தை என்னால் உண‌ர‌ முடிகிற‌து. நான் ஒன்றும் கூபாவிலோ, குறைந்த‌ப‌ட்ச‌ம் கேர‌ளாவிலோ வாழ்ப‌வ‌ன் அல்ல‌ என்ப‌தை ந‌ன்கு அறிவேன். இல‌க்கிய‌வாதி என்றாலே ஒரு நாயைப் போல‌ ந‌ட‌த்த‌ப்ப‌டும் சூழ‌லில் வாழும் சாதார‌ண‌ எழுத்தாள‌ன் தான் நான். நான் நாய் இல்லை என்ப‌தை என‌க்கு நானே அடிக்க‌டி சொல்லிக் கொள்ள‌ வேண்டுமென்ற‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌ நான் நாய் வ‌ள‌ர்க்க‌ப் போகிறேன். அத‌ற்காக‌ ஒரு நாயை வாங்க‌ப் போகிறேன்.

Pug-and-dog-worms

”வீடில்லாததும் ஈடில்லாததுமான என் நாய்” இந்த வரிகள் எங்கே படித்தேன் என்று நினைவிலில்லை. ஆனால் அன்று முதல் ஒரு கேள்வி என் ஆழ்மனதில் எதிரொலிக்கத் தொடங்கியது. அது அவருடைய நாய் என்றால் அவர் வீட்டில் இருக்கலாமே? அவருக்கே வீடு இல்லையெனில் அதையேன் நாய்க்கு வீடில்லை என்று சொல்ல வேண்டும்? போகட்டும். அந்த நாயைப் போலவே (அந்தப் போலவே இல்லை) அந்த வரியும் அவருக்கு சொந்தமானது. முழுமையாக தெரியாமல் குழம்புவானேன்?

உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதில் எனக்கு நிகர் யாருமில்லை என நினைப்பவன் நான். நாய் வளர்க்கப் போகிறேன். என்னைப் போலவே நாய் வளர்க்க… இங்கே கொஞ்சம் நில்லுங்கள். நானும் நாய் வளர்க்க ஆசைப்படுகிறேன். அதே போல் நீங்களும் ஆசைப்படுகிறீர்கள். இதை எப்படி சொல்வது? என்னைப் போல் நாய் வளர்க்க ஆசைப்படும் நீங்கள் என்றால் நான் நாயாகிவிடும் அபாயம் இருக்கிறது. நாய் வளர்க்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவது போல நீங்களும் என்று எழுதலாம்தானே? எழுதலாம். அப்புறம் நடை சுவாரஸ்யமாக இருக்காது. அந்த நடை கிடக்கட்டும். வாங்க.  நாய் கடைக்கு ஒரு நடை போயிட்டு வருவோம். எவ்வளவு நேரம்தான் நீங்களும் நிற்பீர்கள்?

நாய் வாங்குவதில் பல சூட்சமங்கள் உண்டு.இது போன்று நுணுக்கமான விஷயங்களில் என் அளவுக்கு விவரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என உறுதியாக சொல்கிறேன்.  எந்த நாயாக இருந்தாலும் அதன் பெற்றோரின் பெயர் தெரிந்துக் கொள்ள வேண்டும். பெயர் வைப்பதில் நம்ம மக்கள் விவரமானவர்கள். ஒபாமாவின் பெயரை தன் நாய்க்கு வைத்துவிட்டு அமெரிக்காவுக்கே தான் தான் எசமான் என்ற ரீதியில் யோசிப்பவர்கள். இல்லையேல் ஒசாமா என்று பெயரிட்டு மாலையில் அதை வாக்கிங் அழைத்து செல்லும் போது ஸ்காட்லாந்து போலிஸ் கணக்காக ஒசாமா என் கையில் என கதையளப்பார்கள். ஒபாமாவோ, ஒசாமாவோ நமக்கு வேண்டாம். இல்லையேல் நம் நாய்க்குட்டியை ஒ.நாய் என்று பலர் கிண்டலடிக்க நேரிடும்.நில்லுங்க. இங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். பத்தி பெரிதாகிறது. எனவே அந்த சந்தேகத்தைப் பத்தி அடுத்த பத்தியில் பார்ப்போம். அடுத்த பத்தி வரை நடந்து வந்து அங்கே நிற்கவும்.

நாயை நாய் என்று சொன்னால் அதன் அப்பா நாயையும் நாய் என்றுதானே சொல்ல வேண்டும்? அப்படியென்றால் எப்படி ஓ.நாய் ஆகும்? இல்லை,பெயரை வைத்து கூப்பிட்டால் நம் நாயின் பெயருக்கு முன்னால்தானே ”ஓ” சேரும்? இந்த சந்தேகம் உங்களுக்கு வந்ததா என்ற சந்தேகம் எனக்குண்டு. அதைப் பற்றி அடுத்த பத்தியிலும் பார்க்க மாட்டோம். பயப்பட வேண்டாம். இந்தப் பத்தியில் இந்த சந்தேகத்தை மட்டும் தீர்ப்போம். எதையும் நாம் அரைகுறையாக செய்வோம் என்பதால் இது சாத்தியமே. இன்னும் நாய் வாங்கவே இல்லை. அதற்குள் இந்த பெயர் பிரச்சினை தேவையில்லாதது. வேகமாய் நடங்க. கடை மூடிட போறான். நாய்கடைக்கு முன்னால் ஒரு நாயர் கடை உண்டு. டீ நன்றாக இருக்குமென நண்பன் சொன்னான்

என் நண்பனின் பெயர் நீலமேகம். ப்ளு க்ராஸில் உறுப்பினர்.  அதனால் அவன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. அந்த பெயர் இருந்ததாலும் அவன் அதில் சேரவில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்று. அவன் சொன்னான், நாய்களை வீட்டில் வைத்து வளர்ப்பது அவற்றின் மீது நம் அன்பு செலுத்தவதற்கு என்பது சொத்தை வாதமாம். அவற்றின் மீது உண்மை அன்பிருப்பவர்கள் அதை சுதந்திரமாக சுற்றவே அனுமதிப்பார்களாம். நானும் அவனும்தான் அறையை ஷேர் செய்திருக்கிறோம். வீட்டை நான் தான் சுத்தப்படுத்துவேன். வீட்டை பராமரிப்பதில் எனக்கு போட்டியாளரே இருக்க முடியாது.  ஆனால் வாடகையை அவன் மட்டும் பார்த்துக் கொள்கிறான். மோசக்காரன். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி செல்லும் என் ஆசை நாயை நான் இல்லாத போது அவிழ்த்துவிட்டால் என்ன செய்வது?யோசிக்க வேண்டிய விஷயம். எனக்கென ஒரு வீடு இல்லாத போது நாய் அவசியமா?

வீடில்லாத,ஈடில்லாத நான்..இப்போது என்ன செய்ய?

6 கருத்துக்குத்து:

நடராஜன் on November 4, 2011 at 4:12 PM said...

வீடு இல்லாத நாய் தெருநாய் தானே! பொதுவா கேட்டேன்! :)

என். உலகநாதன் on November 4, 2011 at 6:06 PM said...

நல்லாத்தானேயா இருந்த? என்னாச்சு உனக்கு? - இப்படினு கேட்க ஆசையா இருக்கு கார்க்கி.

suryajeeva on November 4, 2011 at 6:13 PM said...

கருத்துக் குத்தில உள்குத்து வைக்க விரும்பல..

அமுதா கிருஷ்ணா on November 4, 2011 at 6:24 PM said...

நல்ல வேளை ஒரு நாய் தப்பித்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) on November 5, 2011 at 3:40 AM said...

என்ன? சாரு வியாதியா?

இரசிகை on November 6, 2011 at 8:05 PM said...

:))

 

all rights reserved to www.karkibava.com