Jun 30, 2011

நானும் சினிமாவும், ப‌ண்ணையாரும் ப‌த்மினியும்


 

 

சினிமா.. உங்க‌ள் எல்லோரையும் போல‌வே என‌க்கும் இத‌ன் மீது அள‌வில்லா ஆசையுண்டு. என்னிட‌மும் ஒரு க‌தையுண்டு. என்னிட‌மும் க‌ன‌வுண்டு. ஆனால் என் ர‌ச‌னையும், எதிர்பார்ப்பும் உங்க‌ளை போல‌ இருக்குமா என்ப‌து ச‌ந்தேக‌ம்தான். சினிமா குறித்தான‌ பார்வை ஒவ்வொருவ‌ருக்கும் வேறுப‌டுகிற‌து. அதிக‌ம் எதிர்பார்க்க‌ப்ப‌டும் சினிமாக்க‌ள் வெளியாகும் வேளையில் அதுகுறித்து எழுதும்போதோ, பேசும்போதோ இந்த‌ எண்ண‌ இடைவெளி பூதாக‌ர‌மாக‌ வெளிவ‌ருகிற‌து.நீங்க‌ள் ர‌சிக்கும் சினிமாவை யாராவது ச‌ரியில்லை என‌ ஒதுக்கினால் ந‌ம் ர‌ச‌னையையே அவ‌ர் கிண்ட‌ல‌டிப்ப‌தாய் எடுத்துக் கொண்டு ச‌ண்டை போடுகிறீர்க‌ள். இந்த‌ நீங்க‌ளில் சில‌ நேர‌ம் நானும் அட‌க்க‌ம் என்ப‌தை குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். என்ன‌ள‌வில் சினிமா என்ப‌து என்ன‌? அல்ல‌து என‌க்கான‌ சினிமா எது என்ப‌து ப‌ற்றி எழுத‌ வேண்டுமென‌ நீண்ட‌ நாட்க‌ளாய் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அலுவ‌ல‌க‌த்தில் இருந்தே எழுதிவிட‌ வேண்டும் என்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைந்துவிட்ட‌து. கார‌ண‌ம் என்ன‌வென்ப‌தை பின்ன‌ர் பார்ப்போம். முத‌லில் சினிமா குறித்தான‌ என் பார்வையை சொல்லிவிடுகிறேன்.

சினிமா என்ப‌தை உண‌ர்வுக‌ளை சொல்லும் க‌ருவியாக‌த்தான் நான் பார்க்கிறேன். காத‌ல் திரைப்ப‌ட‌ம் என்றால் எனக்கு அந்த‌ உண‌ர்வு வ‌ர‌ வேண்டும். அலைபாயுதேவில் மாத‌வ‌ன் ஷாலினியை தேடிச்செல்லும் காட்சி நினைவிருக்கிற‌தா? ப‌ட‌கில் இருந்து இற‌ங்கும் ஷாலினி, மாத‌வ‌னை பார்க்கும் காட்சியில் அவ‌ர் க‌ண்ணில் தெரியும் காத‌லை நான் உண‌ர்ந்தேன். அந்த‌ உண‌ர்வை பார்வையாள‌ன் உண‌ர‌ அத‌ற்கு முந்தைய‌ காட்சிக‌ள் எல்லாம் தேவைப்ப‌டுகின்ற‌ன‌. ஷாலினி அக்காத‌லை உண‌ர்கிறார் என்னும் போது அத‌ற்கு வ‌லுவான‌ கார‌ண‌ங்க‌ள் தேவைப்ப‌டுகின்ற‌ன‌.இசை தேவைப்ப‌டுகிற‌து இவையெல்லாம் முறையாய் அமையும்போது முக்கிய‌க்க‌ட்ட‌த்தில் பார்வையாள‌னும் அதை உண‌ர்கிறான்.

     இதில் உண‌ர்வுக‌ள் என‌ நான் சொல்வ‌து ந‌வ‌ரச‌ங்களையும் தான். காத‌லிக்க‌ நேர‌மில்லை பார்த்து சிரித்துக் கொண்டேதானே இருந்தார்க‌ள்? இருந்தாலும் அது கிளாசிக் ப‌ட‌மாக‌ கொண்டாட‌ப்ப‌டுவ‌தில்லையா? கில்லி ஒரு ம‌சாலா ப‌ட‌ம் தான். அத‌ன் இறுதிக்காட்சியில் விஜ‌ய் பிர‌காஷ்ராஜை அடிக்கும்போது எல்லோருக்கும் இன்னும் அடிடா என்ற‌ உண‌ர்வு வ‌ந்த‌து தானே? காத‌ல் கோட்டையில் தேவ‌யானி, அஜித் ஸ்வெட்ட‌ரை பார்த்துவிட‌ வேண்டுமென‌ ஒவ்வொருவ‌ரும் விரும்பிய‌தால்தானே ப‌ட‌ம் ஓடிய‌து? இதுதான் நான் ந‌ம்பும் சினிமா. பொய்யான‌ பாத்திர‌ங்க‌ள் ந‌ம் முன்னே வ‌ந்து நிஜ‌மான‌ ஒரு உண‌ர்வை ஏற்ப‌டுத்த‌ முடியுமென்றால், அதுதான் என‌க்கான‌ சினிமா. இத‌ற்கு இசை, ஒளிப்ப‌திவு, ப‌ட‌த்தொகுப்பு எல்லாமே உத‌விதான் செய்ய‌ முடியும். சொல்ல‌ வ‌ரும் க‌தையின் சாராம்ச‌ம் என‌க்கு பிடிபடாம‌ல் போனால் ஒளிப்ப‌திவு எப்ப‌டி இருந்தால் என‌க்கென்ன‌? அத‌ற்காக‌ சினிமாவை வெறும் க‌தை சொல்லியாக‌ நான் பார்க்க‌வில்லை. க‌தையே இல்லாம‌ல் பிதாம‌க‌ன் நம்முள் பாதிப்பை ஏற்ப‌டுத்த‌வில்லையா? சூர்யாவின் சாவு நம்மை க‌ல‌ங்க‌ வைத்த‌து என்ப‌துதான் உண்மை. அது அவ‌ன் இவ‌னில் வ‌ராம‌ல் போன‌து ஏன் என்ப‌தை பேசுவ‌துதான் ச‌ரியான‌ விம‌ர்ச‌ன‌மாக‌ இருக்க‌ முடியும்.

ஒரு வெறுமையான‌ காகித‌ம் போல் வ‌ருகிறான் பார்வையாள‌ன். அதில் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ க‌தை எழுதுகிற‌து சினிமா. அது அவ‌னுக்கு நெருக்க‌மாக‌, ந‌ம்ப‌க‌த்த‌ன்மையாக‌ இருந்தால் அவ‌னும் உட‌ன் ப‌ய‌ணிக்கிறான். இதை செய்யாத‌ ப‌ட‌ம் தோல்விய‌டைகிற‌து. அவ‌தார்,ஜுராசிக் பார்க், டைட்டானிக் போன்ற‌ டெக்னிக்க‌ல் ப‌ட‌ங்க‌ள் கூட‌ ஏதோ ஒரு உண‌ர்வை ஏற்ப‌டுத்திய‌து. அதுதான் ம‌ற்ற‌ கிராஃபிக் ப‌ட‌ங்க‌ளுக்கும் இத‌ற்கும் இருக்கும் வித்தியாச‌ம். வெற்றிப்பெற்ற‌ எல்லா திரைப்பட‌ங்க‌ளும் இந்த‌ விதிக்குள் நிச்ச‌ய‌ம் அட‌ங்கும். அந்த‌ விதி "ப‌ட‌ம் சொல்ல‌ வ‌ந்த‌தை பார்வையாள‌ன் உண‌ரும் வ‌ண்ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கும்". அது பேர‌ர‌சு ப‌ட‌மாக‌வும் இருக்க‌லாம். பாலா ப‌ட‌மாக‌வும் இருக்க‌லாம். காத‌லாக‌வும் இருக்க‌லாம். க‌லாய்ப்ப‌தாக‌வும் இருக்க‌லாம்.

அழ‌ வைப்ப‌து சிர‌ம‌ம‌ல்ல‌. சிரிக்க‌ வைப்ப‌தே சிர‌ம‌ம். இத‌னால்தான் ந‌கைச்சுவைப் ப‌ட‌ங்க‌ளில் கால‌ம் க‌ட‌ந்து நிற்கும் ப‌ட‌ங்க‌ள் அதிக‌ம் வ‌ருவ‌தில்லை. பெரும்பாலான‌ சினிமா ர‌சிக‌ர்க‌ள் இள‌ வ‌ய‌தின‌ராக‌ இருப்ப‌தால்தான் காத‌ல் ப‌ட‌ங்க‌ள் அதிக‌ம் வ‌ருகின்ற‌ன‌. அல்ல‌து எல்லா ப‌ட‌ங்க‌ளிலும் காத‌ல் அதிக‌மாக‌ இருக்கிற‌‌து. அவ‌ர்க‌ளுக்கு காத‌லை சொல்லும் போது எளிதில் அவ்வுண‌ர்வு சென்ற‌டைகிற‌து. மேலும் ந‌ம் வாழ்வில் ந‌ட‌ந்த‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தை அத்திரைப்ப‌ட‌ம் பேசும்போது எளிதில் ஒன்றிவிடுகிறோம். ந‌ன்றாக‌ வாழ்ந்து ஏதோ ஒரு கார‌ண‌மாக‌ வீழ்ச்சிய‌டைந்த‌வ‌ர்க‌ளுக்கு பாண்ட‌வ‌ர் பூமி மிக‌வும் பிடித்த‌ப்ப‌ட‌மாக‌ இருக்கும். நீ கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் சிம்பு மாதிரி இருக்கிற‌‌டா என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு விண்ணைத்தாண்டி வ‌ருவாயா வேத‌மாக‌ தெரியும். ஹெச்.ஐ.வி டெஸ்ட் எடுத்தாலும் பாஸிட்டாவாக‌த்தான் இருக்க‌ணும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு அங்காடித்தெரு பிடிப்ப‌தில்லை. புர‌ட்டாசி மாத‌த்தைக்கூட‌ புர‌ட்சி மாத‌ம் என்று சொல்லும் தோழ‌ர்க‌ளுக்கு மேல‌த்த‌ட்டு வ‌ர்க்க‌த்தை தொட்டுப்பேசும் ப‌ட‌ங்க‌ள் பிடிப்ப‌தில்லை. ஆக‌, ஒரு ப‌ட‌ம் ஒருவ‌ருக்கு பிடிப்ப‌த‌ற்கு ப‌ட‌த்தில் இருக்கும் வ‌ஸ்துக்க‌ளை தாண்டி ஏதோ ஒன்று கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.. என‌க்கு வ‌சீக‌ராவும், விஜ‌யும் பிடித்து தொலைத்த‌ற்கும் இதுபோல் ஒன்றுதான் கார‌ண‌மாக‌ இருக்க‌க்கூடும்.

என் க‌தை கிட‌க்க‌ட்டும். சினிமாவிற்கு வ‌ருவோம். இன்று காலை ஒரு குறும்ப‌ட‌ம் பார்க்க‌ நேர்ந்த‌து. நாளைய‌ இயக்குன‌ரில் வெளியான‌ "ப‌ண்ணையாரும் ப‌த்மினியும்" என்ற‌ ப‌ட‌ம் தான் அது. இதுகுறித்து எழுதி இதுவ‌ரை பார்க்காத‌வ‌ர்க‌ளை வெறுப்ப‌டைய‌ செய்ய‌ப்போவ‌தில்லை. இன்று ப‌ட‌த்தை பார்த்துவிடுங்க‌ள். இன்னொரு நாள் அதுகுறித்து பேச‌லாம். இதுவ‌ரை நான் பார்த்த‌ 200க்கும் அதிக‌மான‌ த‌மிழ் குறும்ப‌ட‌ங்க‌ளில் இது ஆக‌ச்சிற‌ந்த‌து எனு நினைக்கிறேன். மொத்த‌க்குழுவின‌ருக்கும் வாழ்த்துக‌ள்.

14 கருத்துக்குத்து:

உமா கிருஷ் on June 30, 2011 at 2:50 PM said...

நானும் பார்த்தேன் இந்த படத்தை.மிக அருமை.யாரும் நடித்ததாக தெரியவில்லை.சில நேரங்களில் உயிரில்லாத பொருட்களின் மீதும் தனிப் பற்று வந்துவிடுவதுண்டு.என் பள்ளிக்காலங்களை இனிமையாக்கிய சைக்கிள் அதை வேறு ஒருவருக்கு கொடுக்கும் பொழுது வலியுடன் உணர்ந்தேன்.இப்படி ஒவ்வொருவர் மனதினுள்ளும் தனியே ஏதேனும் ஒரு பொருள் மீதான அபரிமிதமான பிரியத்தை படம் பிடித்து காட்டியிருக்கின்றார்கள்.இயல்பான நகைச்சுவையுடனும் போக போக மெலிதான அவருடைய வருத்தங்களையும் நம்மைத்தாக்க வைத்துவிடுகின்றார்கள்.சபாஷ் படம் !!!

அதிலை on June 30, 2011 at 2:57 PM said...

:)

amas on June 30, 2011 at 4:30 PM said...

மிக நல்ல படம். குரும்படங்களில் வேளிக்கொணரப்படும் உணர்வுகள் ஒரு நல்ல சிறுகதை படித்த திருப்தியை ஏற்படுத்துகிறது. அதுவும் இப்படத்தைப் பார்க்கும் பொழுது நமக்கு மனதில் ஒரு இனிமையான எண்ணம் ஏற்படுகின்றது. Thanks for show casing this feel good movie!
amas32

பிரதீபா on June 30, 2011 at 4:47 PM said...

ரொம்ப மனசை தொட்ட படம். அருமையா எடுத்திருக்காங்க.. உங்க நண்பர் வட்டம்-ன்னா கண்டிப்பா வாழ்த்துக்கள் தெரிவிச்சுடுங்க கார்க்கி ! இசை, நடிகர்கள், திரைக்கதை எல்லாமே நேர்த்தி !! இதுவரைக்கும் இப்படி ஒரு நல்ல குறும்படம் ஒன்றோ இரண்டோ தான் பார்த்திருப்பேன். இது எல்லாவற்றையும் மிஞ்சி விட்டது

பிரதீபா on June 30, 2011 at 4:56 PM said...

சினிமா -என்றால் உங்களுக்கு எப்படி என்று விவரித்தது அருமை கார்க்கி !! (முதலில் படம் பார்த்துட்டு அப்புறம் என்ன எழுதி இருக்கீங்க ன்னு படிச்சேன் ). நன்கு செதுக்கிய ஒரு வடிவம் !

இரசிகை on June 30, 2011 at 4:59 PM said...

ஹெச்.ஐ.வி டெஸ்ட் எடுத்தாலும் பாஸிட்டாவாக‌த்தான் இருக்க‌ணும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு அங்காடித்தெரு பிடிப்ப‌தில்லை

:)))

ஆதிமூலகிருஷ்ணன் on June 30, 2011 at 9:22 PM said...

என்ன சந்தேகம்? தமிழில் இதுவரை (எடுக்கப்பட்ட குறும்படங்களிலேயே கூட இருக்கலாம்)நான் பார்த்த குறும்படங்களிலேயே மிகச்சிறப்பான படம் என தயங்காமல் சொல்லிவிடுவேன்.

பண்ணையாரின் மகள் காரைக்கொண்டு போகும் போது மனம் சற்றே கலங்கியது. வந்ததும் மகிழ்ச்சிக்கு அளவேது? அதுபோலவே கிளைமாக்ஸிலும். எந்த வலுவான கதைகளையும் விட நெஞ்சைத்தொடுமளவு இருந்துவிட்டால் இதுபோன்ற மெல்லிய கதைகளுக்கே என் ஓட்டு.!

மல on July 1, 2011 at 9:35 AM said...

அண்ணா படம் ரொம்ப அருமை...அதை விட உங்கள் ரசனை அருமை...................

அப்புறம் நம்ம சாருவ (சாட்டிங் மேட்டர்) பத்தி கொஞ்சம் எழுதுங்கள் ...அண்ணா.......

kids doctor on July 1, 2011 at 11:05 AM said...

மனதை தைத்தது !!

Mohamed Faaique on July 2, 2011 at 12:36 AM said...

சூப்பர்... குறுமபடம்.....

உங்களுக்கு பிடித்த வசீகரா எனக்கு பிடித்த படம்... எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்’னு எனக்கே தெரியாது.....

உங்களுக்கு பிடிக்காத ஆயுத எழுத்து’ம் எனக்கு பிடித்த படம்... அதையும் எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்’னு எனக்கே தெரியாது.....

Anitha on July 2, 2011 at 4:53 PM said...

மிகவும் அருமையான குறும்படம். எப்பொழுதும் போல உங்களின் குறும்பான விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன். நன்றி.

viswa on July 2, 2011 at 9:15 PM said...

nize.

sivakasi maappillai on July 4, 2011 at 1:29 PM said...

அருமை...

ஆனா எனக்கு.. 'ரத்தம்' குறும்படம்தான் பிடிச்சது...

Shanmuganathan on July 8, 2011 at 11:25 AM said...

நான் மிகவும் ரசித்தேன் , Uma kirush sonnathupol எனக்கும் எனது சைக்கிள் தான் ஆகபெரிய செண்டிமெண்ட்..... வெளியூர் வந்ததினால் என் வீட்டில் எடுத்து விற்று விட்டார்கள்.. இப்போ நினைத்தாலும் எனக்கு அழுகை வரும்... மிகவும் நன்றி இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தற்கு..

 

all rights reserved to www.karkibava.com