Jun 30, 2011

நானும் சினிமாவும், ப‌ண்ணையாரும் ப‌த்மினியும்

14 கருத்துக்குத்து

 

 

சினிமா.. உங்க‌ள் எல்லோரையும் போல‌வே என‌க்கும் இத‌ன் மீது அள‌வில்லா ஆசையுண்டு. என்னிட‌மும் ஒரு க‌தையுண்டு. என்னிட‌மும் க‌ன‌வுண்டு. ஆனால் என் ர‌ச‌னையும், எதிர்பார்ப்பும் உங்க‌ளை போல‌ இருக்குமா என்ப‌து ச‌ந்தேக‌ம்தான். சினிமா குறித்தான‌ பார்வை ஒவ்வொருவ‌ருக்கும் வேறுப‌டுகிற‌து. அதிக‌ம் எதிர்பார்க்க‌ப்ப‌டும் சினிமாக்க‌ள் வெளியாகும் வேளையில் அதுகுறித்து எழுதும்போதோ, பேசும்போதோ இந்த‌ எண்ண‌ இடைவெளி பூதாக‌ர‌மாக‌ வெளிவ‌ருகிற‌து.நீங்க‌ள் ர‌சிக்கும் சினிமாவை யாராவது ச‌ரியில்லை என‌ ஒதுக்கினால் ந‌ம் ர‌ச‌னையையே அவ‌ர் கிண்ட‌ல‌டிப்ப‌தாய் எடுத்துக் கொண்டு ச‌ண்டை போடுகிறீர்க‌ள். இந்த‌ நீங்க‌ளில் சில‌ நேர‌ம் நானும் அட‌க்க‌ம் என்ப‌தை குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். என்ன‌ள‌வில் சினிமா என்ப‌து என்ன‌? அல்ல‌து என‌க்கான‌ சினிமா எது என்ப‌து ப‌ற்றி எழுத‌ வேண்டுமென‌ நீண்ட‌ நாட்க‌ளாய் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அலுவ‌ல‌க‌த்தில் இருந்தே எழுதிவிட‌ வேண்டும் என்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைந்துவிட்ட‌து. கார‌ண‌ம் என்ன‌வென்ப‌தை பின்ன‌ர் பார்ப்போம். முத‌லில் சினிமா குறித்தான‌ என் பார்வையை சொல்லிவிடுகிறேன்.

சினிமா என்ப‌தை உண‌ர்வுக‌ளை சொல்லும் க‌ருவியாக‌த்தான் நான் பார்க்கிறேன். காத‌ல் திரைப்ப‌ட‌ம் என்றால் எனக்கு அந்த‌ உண‌ர்வு வ‌ர‌ வேண்டும். அலைபாயுதேவில் மாத‌வ‌ன் ஷாலினியை தேடிச்செல்லும் காட்சி நினைவிருக்கிற‌தா? ப‌ட‌கில் இருந்து இற‌ங்கும் ஷாலினி, மாத‌வ‌னை பார்க்கும் காட்சியில் அவ‌ர் க‌ண்ணில் தெரியும் காத‌லை நான் உண‌ர்ந்தேன். அந்த‌ உண‌ர்வை பார்வையாள‌ன் உண‌ர‌ அத‌ற்கு முந்தைய‌ காட்சிக‌ள் எல்லாம் தேவைப்ப‌டுகின்ற‌ன‌. ஷாலினி அக்காத‌லை உண‌ர்கிறார் என்னும் போது அத‌ற்கு வ‌லுவான‌ கார‌ண‌ங்க‌ள் தேவைப்ப‌டுகின்ற‌ன‌.இசை தேவைப்ப‌டுகிற‌து இவையெல்லாம் முறையாய் அமையும்போது முக்கிய‌க்க‌ட்ட‌த்தில் பார்வையாள‌னும் அதை உண‌ர்கிறான்.

     இதில் உண‌ர்வுக‌ள் என‌ நான் சொல்வ‌து ந‌வ‌ரச‌ங்களையும் தான். காத‌லிக்க‌ நேர‌மில்லை பார்த்து சிரித்துக் கொண்டேதானே இருந்தார்க‌ள்? இருந்தாலும் அது கிளாசிக் ப‌ட‌மாக‌ கொண்டாட‌ப்ப‌டுவ‌தில்லையா? கில்லி ஒரு ம‌சாலா ப‌ட‌ம் தான். அத‌ன் இறுதிக்காட்சியில் விஜ‌ய் பிர‌காஷ்ராஜை அடிக்கும்போது எல்லோருக்கும் இன்னும் அடிடா என்ற‌ உண‌ர்வு வ‌ந்த‌து தானே? காத‌ல் கோட்டையில் தேவ‌யானி, அஜித் ஸ்வெட்ட‌ரை பார்த்துவிட‌ வேண்டுமென‌ ஒவ்வொருவ‌ரும் விரும்பிய‌தால்தானே ப‌ட‌ம் ஓடிய‌து? இதுதான் நான் ந‌ம்பும் சினிமா. பொய்யான‌ பாத்திர‌ங்க‌ள் ந‌ம் முன்னே வ‌ந்து நிஜ‌மான‌ ஒரு உண‌ர்வை ஏற்ப‌டுத்த‌ முடியுமென்றால், அதுதான் என‌க்கான‌ சினிமா. இத‌ற்கு இசை, ஒளிப்ப‌திவு, ப‌ட‌த்தொகுப்பு எல்லாமே உத‌விதான் செய்ய‌ முடியும். சொல்ல‌ வ‌ரும் க‌தையின் சாராம்ச‌ம் என‌க்கு பிடிபடாம‌ல் போனால் ஒளிப்ப‌திவு எப்ப‌டி இருந்தால் என‌க்கென்ன‌? அத‌ற்காக‌ சினிமாவை வெறும் க‌தை சொல்லியாக‌ நான் பார்க்க‌வில்லை. க‌தையே இல்லாம‌ல் பிதாம‌க‌ன் நம்முள் பாதிப்பை ஏற்ப‌டுத்த‌வில்லையா? சூர்யாவின் சாவு நம்மை க‌ல‌ங்க‌ வைத்த‌து என்ப‌துதான் உண்மை. அது அவ‌ன் இவ‌னில் வ‌ராம‌ல் போன‌து ஏன் என்ப‌தை பேசுவ‌துதான் ச‌ரியான‌ விம‌ர்ச‌ன‌மாக‌ இருக்க‌ முடியும்.

ஒரு வெறுமையான‌ காகித‌ம் போல் வ‌ருகிறான் பார்வையாள‌ன். அதில் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ க‌தை எழுதுகிற‌து சினிமா. அது அவ‌னுக்கு நெருக்க‌மாக‌, ந‌ம்ப‌க‌த்த‌ன்மையாக‌ இருந்தால் அவ‌னும் உட‌ன் ப‌ய‌ணிக்கிறான். இதை செய்யாத‌ ப‌ட‌ம் தோல்விய‌டைகிற‌து. அவ‌தார்,ஜுராசிக் பார்க், டைட்டானிக் போன்ற‌ டெக்னிக்க‌ல் ப‌ட‌ங்க‌ள் கூட‌ ஏதோ ஒரு உண‌ர்வை ஏற்ப‌டுத்திய‌து. அதுதான் ம‌ற்ற‌ கிராஃபிக் ப‌ட‌ங்க‌ளுக்கும் இத‌ற்கும் இருக்கும் வித்தியாச‌ம். வெற்றிப்பெற்ற‌ எல்லா திரைப்பட‌ங்க‌ளும் இந்த‌ விதிக்குள் நிச்ச‌ய‌ம் அட‌ங்கும். அந்த‌ விதி "ப‌ட‌ம் சொல்ல‌ வ‌ந்த‌தை பார்வையாள‌ன் உண‌ரும் வ‌ண்ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கும்". அது பேர‌ர‌சு ப‌ட‌மாக‌வும் இருக்க‌லாம். பாலா ப‌ட‌மாக‌வும் இருக்க‌லாம். காத‌லாக‌வும் இருக்க‌லாம். க‌லாய்ப்ப‌தாக‌வும் இருக்க‌லாம்.

அழ‌ வைப்ப‌து சிர‌ம‌ம‌ல்ல‌. சிரிக்க‌ வைப்ப‌தே சிர‌ம‌ம். இத‌னால்தான் ந‌கைச்சுவைப் ப‌ட‌ங்க‌ளில் கால‌ம் க‌ட‌ந்து நிற்கும் ப‌ட‌ங்க‌ள் அதிக‌ம் வ‌ருவ‌தில்லை. பெரும்பாலான‌ சினிமா ர‌சிக‌ர்க‌ள் இள‌ வ‌ய‌தின‌ராக‌ இருப்ப‌தால்தான் காத‌ல் ப‌ட‌ங்க‌ள் அதிக‌ம் வ‌ருகின்ற‌ன‌. அல்ல‌து எல்லா ப‌ட‌ங்க‌ளிலும் காத‌ல் அதிக‌மாக‌ இருக்கிற‌‌து. அவ‌ர்க‌ளுக்கு காத‌லை சொல்லும் போது எளிதில் அவ்வுண‌ர்வு சென்ற‌டைகிற‌து. மேலும் ந‌ம் வாழ்வில் ந‌ட‌ந்த‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தை அத்திரைப்ப‌ட‌ம் பேசும்போது எளிதில் ஒன்றிவிடுகிறோம். ந‌ன்றாக‌ வாழ்ந்து ஏதோ ஒரு கார‌ண‌மாக‌ வீழ்ச்சிய‌டைந்த‌வ‌ர்க‌ளுக்கு பாண்ட‌வ‌ர் பூமி மிக‌வும் பிடித்த‌ப்ப‌ட‌மாக‌ இருக்கும். நீ கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் சிம்பு மாதிரி இருக்கிற‌‌டா என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு விண்ணைத்தாண்டி வ‌ருவாயா வேத‌மாக‌ தெரியும். ஹெச்.ஐ.வி டெஸ்ட் எடுத்தாலும் பாஸிட்டாவாக‌த்தான் இருக்க‌ணும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு அங்காடித்தெரு பிடிப்ப‌தில்லை. புர‌ட்டாசி மாத‌த்தைக்கூட‌ புர‌ட்சி மாத‌ம் என்று சொல்லும் தோழ‌ர்க‌ளுக்கு மேல‌த்த‌ட்டு வ‌ர்க்க‌த்தை தொட்டுப்பேசும் ப‌ட‌ங்க‌ள் பிடிப்ப‌தில்லை. ஆக‌, ஒரு ப‌ட‌ம் ஒருவ‌ருக்கு பிடிப்ப‌த‌ற்கு ப‌ட‌த்தில் இருக்கும் வ‌ஸ்துக்க‌ளை தாண்டி ஏதோ ஒன்று கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.. என‌க்கு வ‌சீக‌ராவும், விஜ‌யும் பிடித்து தொலைத்த‌ற்கும் இதுபோல் ஒன்றுதான் கார‌ண‌மாக‌ இருக்க‌க்கூடும்.

என் க‌தை கிட‌க்க‌ட்டும். சினிமாவிற்கு வ‌ருவோம். இன்று காலை ஒரு குறும்ப‌ட‌ம் பார்க்க‌ நேர்ந்த‌து. நாளைய‌ இயக்குன‌ரில் வெளியான‌ "ப‌ண்ணையாரும் ப‌த்மினியும்" என்ற‌ ப‌ட‌ம் தான் அது. இதுகுறித்து எழுதி இதுவ‌ரை பார்க்காத‌வ‌ர்க‌ளை வெறுப்ப‌டைய‌ செய்ய‌ப்போவ‌தில்லை. இன்று ப‌ட‌த்தை பார்த்துவிடுங்க‌ள். இன்னொரு நாள் அதுகுறித்து பேச‌லாம். இதுவ‌ரை நான் பார்த்த‌ 200க்கும் அதிக‌மான‌ த‌மிழ் குறும்ப‌ட‌ங்க‌ளில் இது ஆக‌ச்சிற‌ந்த‌து எனு நினைக்கிறேன். மொத்த‌க்குழுவின‌ருக்கும் வாழ்த்துக‌ள்.

Jun 18, 2011

அவன் இவன்

27 கருத்துக்குத்து

 

தமிழ்சினிமாவின் உண்மையான வளர்ச்சி படைப்பாளிகள் வசமோ, நடிகர்கள்வசமோ, தொழில்நுட்ப கலைஞர்கள் வசமோ நிச்சயம் இல்லை. அது பார்வையாளனிடம் உள்ளது. இன்னமும் மரத்தை சுத்தி டூயட் பாடும் நடிகனையும், சொடுக்கு போட்டு பன்ச் வசனம் பேசும் நாயகனையும் பார்த்து சிலிர்த்துக் கொண்டிருந்தால் உலகம் நம்மை மதிக்காது. தமிழ் ரசிகனும் இதை உணர்ந்தே வைத்திருக்கிறான். கடந்த சில வருடங்களாக இது பலமுறை உண்மையென்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவன் இவனை தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடுவதன் மூலம் இதை ஆணித்தரமாக நிரூபிக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டியிருக்கிறது. நான் கொண்டாடப் போகிறேன்.

சினிமா என்ற கலை கூட மேல்த்தட்டு மக்களுக்கானது என்றுதான் மாற்றி வைத்திருந்தார்கள் மணிரத்னங்களும், பாலச்சந்திரர்களும். முதல்முறையாக விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பதிவு செய்ய துணிந்தவர் பாலா மட்டுமே. பின் பாலா போலவே படமெடுக்கிறேன் பேர்வழி என பலரும் குதித்தது தமிழ்மக்களின் ஏழரை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பாலா படத்தில் இருக்கும் உண்மையும், விசாலமும் வேறு எவரின் படத்திலும் இருப்பதில்லை. விசாலத்தோடு இப்படத்தில் விஷாலும் சேர்ந்திருக்கிறார். நடிப்பில் தனக்கான விலாசத்தையும் கண்டறிந்திருக்கிறார். இனி அவன் இவனை பற்றி பார்ப்போம்.

விஷாலும் ஆர்யாவும் சகோதர்கள். அப்பா ஒருவர், ஆனால் அம்மா வேறு. இதை படிக்கும் நேரத்தில் உங்கள் மனம் அக்னி நட்சத்திரத்தை நினைத்திருந்தால் அதுதான் நமது சாபக்கேடு. இதில் விஷால் சற்று பெண் சாயல் கொண்டவராக இருக்கிறார். மாறுகண் வேறு. அவர் அரவாணிதான் என்று எங்கும் பாலா சொல்லவில்லை. இவரும் ஆர்யாவும் ஊர் ஜமீனின் வளர்ப்பு பிள்ளைகளாக வளர்கிறார்கள். இருவரும் மோதிக் கொண்டே இருந்தாலும் அன்பின் இழை இருவருக்கு இடையேயும் மெல்லிய கீற்றாய் ஓடுவதை பாலா என்னும் கதை சொல்லி அழகாய் காட்டியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும், ஜமீனுக்கும் நடக்கும் ஒரு மிகப்பெரிய சம்பவம் தான் இரண்டாம் பாதி. ஜமீனை ஏன் கொல்கிறார்கள் என்பதும், அதற்கு ஆர்யாவும், விஷாலும் என்ன செய்தார்கள் என்பதும் காட்சிகள் மூலம் பார்த்து தெரிந்துக் கொள்ளப்படவேண்டியவை.

பாலாவின் மற்ற படங்களில் காட்சிகளில் தெறிக்கும் குரூரமான விடயங்கள் இதில் குறைவென்று சொல்ல முடியாது. இல்லையென்றே சொல்லலாம். அன்பும், அன்பு சார்ந்த இடமும் இனி பாலாவின் படமென்று சொன்னாலும் தவறேயில்லை. செய்வது திருட்டுத்தனம், வாழ்வது அடிமை வாழ்க்கை என்றாலும் ஒவ்வொரு பாத்திரமும் அன்புக்காக வாழ்வது அழகு. குரூரமென நான் சொன்ன மற்ற பாலா படங்களிலும் இந்த அன்பு வாழ்ந்துக் கொண்டுதான் இருந்தது.

ஒரு நாயகன் இதற்கு முன் என்ன ஆட்டம் போட்டிருந்தாலும் சரி, இல்லை ஆட்டமே போடத் தெரியாதவராகவும் சரி.பாலா என்ற மாயக்கலைஞனின் நிழல் பட்டதும் பிறவிக்கலைஞன் ஆகிவிடுவார். இதில் விஷாலுக்கு அப்பாக்கியம் கிடைத்திருக்கிறது. விக்ரமுக்கும், சூர்யாவிற்கும் இரண்டாம் முறையும் அந்த யோகம் கிடைத்தது போல ஆர்யாவிற்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசமே. இந்த முறை ஆர்யாவிற்கு பெரிய சவால் ஏதுமில்லை. விஷாலின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது.

பாலாவின் மிகப்பெரிய பிரச்சினை அவரின் ஆணாதிக்க சிந்தனைதான். அவரின் எல்லா நாயகர்களும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்களாகவும், குரூரமாக இயங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். தனக்கோ, தன்னை சார்ந்தவர்களுகோ ஏற்படும் துரோகங்களையும், இன்னல்களையும் எதிர்க்க அவர்கள் மிகப்பெரிய ஒரு ஆணாக எழ முயல்வதாகவே சித்தரிக்கிறார். பிதாமகனில் விக்ரமுக்கு வரும் அதே ஆக்ரோஷம்தான் இதில் விஷாலுக்கு வருகிறது. மரணத்தையும், பழிவாங்குதலையும் தாண்டி தலித்களுக்கும், விளிம்பு நிலை மாந்தர்களுக்கும் இருக்கும் பலப்பிரச்சினைகள் குறித்தும் பாலா மட்டுமே படம் ஏடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் சினிமா இருக்கிறது. இதை மனதில் வைத்துக் கொண்டே பாலா செயல்பட்டால்….

 

 

 

 

உஸ்ஸ்ஸ்… இப்படி படத்தை பத்தி பேசாம வேற ஏதாச்சும் பேசினாதான் அவன் இவனை பாராட்ட முடியும். இப்பதான் ஆரண்ய காண்டம் பத்தி எழுதி இவனுக்கு சினிமாவே தெரியாதுன்னு பேரு வாங்கினேன். அதுக்குள்ள இதையும் குப்பை படம் எழுத நான் என்ன லூசா? இன்னொரு தடவ பதிவ படிங்க. படம் நல்லா இருக்கு. நல்லா இருக்கு.. நல்லா இருக்கு..சொல்லிட்டேன்

Jun 15, 2011

Stranger - அடுத்த‌ பிர‌ச்சினை

12 கருத்துக்குத்து

 

 

Directed by - aathi

Jun 14, 2011

ஆரண்ய காண்டம் - கிளாஸ்

36 கருத்துக்குத்து

 

எப்படி தொடங்குவது என்று புரியாமல் எழுத அமர்ந்திருக்கிறேன். ஒரு நல்லப்படம் வந்திருக்கிறது என்ற நண்பர்களின் அறைகூவலை கேட்டு ஆவலுடன் போய் பார்த்தப் படம் தான் ஆரண்ய காண்டம். இது எந்த வகையான படம், படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என ஓரளவு தெரிந்துக் கொண்டேதான் படம் பார்க்க சென்றேன். எனவே எதிர்பாராத ஏமாற்றம் என்னை ஆட்கொண்டு எழுதுவதாக நினைத்துவிட வேண்டாம். முடிவுடனே ஆரம்பிக்கிறேன். படம் எனக்கு பிடிக்கவில்லை. படத்தைப் பற்றி நெகட்டிவாக ட்விட்டரில் சொன்ன போதே ஒருவர் எல்லோரும் பாராட்டினா எதிர்த்து பேசி அட்டென்ஷன் சீக் பண்றீங்களா என்றார். அதை தவிர்க்கவே தலைப்பை இப்படி வைத்தேன்.

எது தர்மம்? உனக்கு எது தேவையோ அதுவே தர்மம். இதைத்தான் திரைக்கதை எழுதும் முன் இயக்குனர் மனதில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டார். அதனால் கதையில் வரும் எல்லோரையும் எப்போது வேண்டுமென்றாலும் அவரால் திசை திருப்ப முடிகிறது. இதுபற்றி மேலும் நாம் பேசும் முன்பு கதையை ஓரளவு தெரிந்துக் கொள்ளுதல் உசிதம்.கதை சொன்னால் இனிமேல் பார்க்கிரவர்களுக்கு சுவாரஸ்யம் போய்விடுமே என்பீர்களேயானால், பரவாயில்லை.இனிமேல் படம் பார்க்க போகிறவர்களை பற்றி நான் கவலைப்படுவதாயில்லை.

ஜாக்கி ஷெராஃப் ஒரு தாதா. அவரிடம் வேலை செய்கிறார் சம்பத். போதை பவுடர் ஒரு பாக்கெட்(2 கோடி ரூபாயாம்) சீப்பாக வருவதாக சொல்கிறார். அது எதிரணிக்கு போக வேண்டிய மருந்து. குருவியாக அதை எடுத்த சென்ற நபர் காசுக்கு ஆசைப்பட்டு இவரிடம் பேரம் பேசுகிறார். ஜாக்கி வேண்டாம் என்று சொல்ல “நீங்க டொக்கு ஆயிட்டீங்க” என்று சொல்லிவிடுகிறார். சம்பத்தே அதை டீல் செய்ய நினைக்க, ஜாக்கி தன் அடியாட்களிடம் சம்பத்தை போட்டுத் தள்ள சொல்கிறார். எதிரணியும் சம்பத்தை நோக்கி நகர, மருந்து குருவியிடமிருந்து சென்னைக்கு பஞ்சம் புகும் ஒரு அப்பா , மகனிடம் சிக்குகிறது. இதற்கு நடுவில் ஜாக்கியின் சிறுவயது செட்டப்பிற்கும், ஜாக்கியின் கூடவே இருக்கும் ரவிகிருஷ்ணாவிற்கும் காதலாம். அவர்கள் ஜாக்கியின் வசம் இருக்கும் 50 லட்சத்துடன் மும்பைக்கு எஸ்ஸாக பிளான் போடுகிறார்கள். போதை மருந்து என்ன ஆனது, சம்பத் தப்பித்தாரா, அப்பா மகனுக்கு என்னவாகிறது என்ற முடிவை நோக்கி படம் நகர்கிறது. ஆம் நகர்கிறது.

திரைக்கதையில் மிளிர்கிறார் இயக்குனர். குழப்பமான கதையை நன்றாகவே விளக்கியிருக்கிறார். சிலர் பதிவில் சொன்னது போல குவென்டின் டொரண்டினோ ஸ்டைல், நான் லீனியர் எழவெல்லாம் சத்தியமாக ஏதுமில்லை. மிக மிக தெளிவான திரைக்கதை யுத்திதான். ஆனால் இருக்கையின் நுனிக்கு நம்மை வரவழைத்து பறக்க வேண்டிய காட்சிகள் நத்தை வேகத்தில் நகர்வது ஏமாற்றம். படத்தில் எனக்கு பிடித்த ஒரு சில விஷயங்களில் திரைக்கதையும், பாத்திரத்தேர்வும் முக்கியமானவை.

அப்படி என்றால் பிரச்சினை? எல்லோருக்கும் பிடித்திருந்த ஒளிப்பதிவு எனக்கு எரிச்சலையே தந்தது. காரணம் ஒளியமைப்பு. மஞ்சள் நிற பேக்டிராப் என முடிவு செய்துவிட்டார்கள். ஒரு வேளை ஜாக்கி ஒரு காட்சியில் பால் குடித்திருந்தால் அவர் மஞ்சள் நிறப்பாலையே குடித்திருப்பார். காட்சி எங்கு நடக்கிறதென்றாலும் ஒளிப்பதிவாளருக்கு ஒரே ஒரு விதிதான். ஒரு அடிக்கு வெளிச்சம். அடுத்த 4 அடிகள் இருட்டு.. அடுத்து ஒரு அடி வெளிச்சம். மீண்டும் 4 அடிகள் இருட்டு. அந்த வெளிச்சம் அந்த இடத்தில் எப்படி வருமென்று யோசிப்பது அவர் வேலையில்லை. பகல் நேரத்தில் ஒரு டீக்கடை காட்டுகிறார்கள். அதுவும் இருட்டுதான். ஒரு லாட்ஜை காட்டுகிறார்கள் அங்கேயும் கேண்டில் லைட் டின்னர் தான். ஜாக்கியின் வீடும் அப்படித்தான். கோணங்கள் என்றளவில் பெரிதாய் பிரச்சினையில்லை. ஆனால் ஒளிப்பதிவு மோசமானதாய் எனக்கு தெரிந்தது.

அடுத்து வசனம். இதுவும் பலராலும் பாராட்டப்பட்டது. எனக்கு வசனங்கள் புத்திசாலித்தனமானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது படத்தில் யாரால் பேசப்பட்டது என்பதில் உண்டு.

“சம்பத்: அப்பானா உனக்கு ரொம்ப புடிக்குமாடா”

பையன்: அப்படியில்லை. ஆனா அவர் எனக்கு அப்பா”

அந்த பையன் படத்தில் அப்படி பேசுவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்பதே என் கேள்வி. அவனைக் கூட கொஞ்சம் புத்திசாலியாக காட்டுகிறார்கள். ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 50 லட்சம் கொள்ளையடிக்க திட்டமிடும் போது கூட வீடியோகேம் ஆடும் ரவிகிருஷ்ணா பேசுகிறார்.

“மீன் புழுவை சாப்பிடுது. மீன மனுஷன் சாப்பிடுறான். எல்லாம் கரெக்ட்டுதான்”

இவ்வசனம் எப்படிபட்டது என்பதை விடுங்க. ரவி இப்படி பேசும் பாத்திரமா? இப்படி படம் நெடுக உலவும் அனைத்து கதாபாத்திரங்களும் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை சீரிய இடைவெளியில் பறைசாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். கதை வடசென்னையில் நடப்பதாக எங்கேவாது சொன்னார்களா என தெரியவில்லை. ஆனால் போதை மருந்தை வைத்திருக்கும் அப்பா-மகன் செளகார்பேட்டை ஏரியாவில் இருப்பதாக ஒரு போர்டு சொன்னது. அதை வைத்து உறுதி செய்துகொண்டேன். தமிழில் இருக்கும் எல்லா வசை சொற்களும் வாரி இறைக்கும் பாத்திரங்கள் சென்னையின் இனிஷியலை ஒரு இடத்தில் கூட உபயோகித்ததாக தெரியவில்லை. கிட்டத்தட்ட தாதாக்கள், அடியாட்கள் மாநாடே நடத்தலாம் என்றளவிற்கு ஆட்கள் இருந்தும் ஒருவர் கூட சென்னை பாஷை பேசவேயில்லை.

மதராச(ப்)பட்டணம் என்ற படத்தை பாராட்டிய விகடன் “40களில் சென்னை மக்களின் மொழியையும், உடையையும் இன்றைய சந்ததியினர் இப்படம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்” என்றெழுதியிருந்தது. 88 வயதான எங்கள் தெரு தாத்தா வாக்கிங்கில் சொன்னார், அப்படி ஒரு உடையை சென்னை மக்கள் யாரும் அணிந்ததே இல்லையாம். பின்னர் அது லகானை பார்த்து டிசைன் செய்தது என்றறிந்தேன். பெயரில் கூட “ப்” இல்லாமல் இருந்தது. இதுதான் இவர்களின் ஹோம் ஒர்க். இதை நாம் நல்ல முயற்சி என்று சொல்லாவிட்டால் ஏளனமாக பார்க்கப்படுவோம். இந்தப் படத்தில் ஓரளவிற்கு நன்றாகவே டீடெயிலிங் செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால் வசனம் சென்னையை பிரதிபலிக்கவில்லை. இந்த முயற்சியையாவது நாம் பாராட்ட வேண்டும் என்றால் யார்தான் கஷ்டப்படாமல் படம் எடுக்கிறார்கள்? பாராட்டு முயற்சிக்கா, படத்திற்கா?

ஒரு பேட்டியில் கதையில் எதிர்பாராத தருணங்கள் அதிகம் என்றார் சம்பத். நான் மட்டுமல்ல என்னுடன் படம் பார்த்த இன்னும் சிலரும் சம்பத்தின் நடவடிக்கைகளை அழகாய் எடுத்தியம்பினார்கள், காட்சிகள் வரும் முன்பே. ரவி – செட்டப் காதல் ஜோடியின் முடிவு, ஜிஸ்ம் என்ற இந்தி படத்தை பிட் மட்டுமின்றி முழுவதுமாய் பார்த்த எல்லோருமே எளிதில் யூகித்து விடுவார்கள். ஆக ஜாக்கியின் முடிவும் தெரிந்த ஒன்றுதான். இதில் என்ன புதுசு என்பது புரியவில்லை.

படத்தில் ஏதேனும் குறியீடுகள் ஒளிந்திருக்கின்றனவா என்றறிய கையில் விளக்கெண்ணய் வைத்திருந்தேன். யாஸ்மின் என்ற பெயரை ”யெஅஸ்மின்” என்றும் P.S வினோத் என்பதில் S க்கு பிறகு புள்ளியில்லாமலும் போட்டதை தவிர வேறு எந்த பாடாவதி குறியீடும் கண்ணில் படவில்லை. சம்பத் போலிஸ் ஜீப்பில் இருந்து தப்பிக்கும் காட்சியொன்றில் இடது பக்கமிருந்து மீடியன் கோட்டை தாண்டி வலது பக்க சாலையில் ஓடுகிறார். இது அவர் போக்கை மாற்றுவதாக குறிக்குமேயானால் பின்நவீன குறியீடு 3 என எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறேதும் எனக்கு தெரியவில்லை.

நடிகர்களில் ஜாக்கியின் உடல் மொழி பிரமாதம். ஆனால் குரல் தெளிவாக இல்லை. சம்பத் வழக்கம் போல. அவரின் பாத்திரம் நன்றாக இருப்பதால் பிடித்து போய்விடுகிறது. மற்றபடி அனைவரும் ஓரளவிற்கு சொன்ன வேலையை செவ்வனே செய்கிறார்கள். யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொள்கிறார்கள். அதுதானே தர்மம்? கடைசிக் காட்சியில் ஜாக்கியின் செட்டப் பணத்தை மளிகை கடை அண்ணாச்சியிடம் கொடுத்து வைக்கிறார். அதை அண்ணாச்சி ஆட்டையை போடுவதாக காட்டியிருந்தால் இன்னொரு தர்மம் கூடியிருக்கும்.

படத்தின் பிண்ணனி இசை ஓக்கே. காதல் காட்சிகளில் அமைதியும், ஆக்‌ஷன் காட்சிகளில் ரொமாண்டிக் இசையும், கொலை செய்யும் போது புல்லாங்குழலும் அட போட வைக்கின்றன. எதையாவது புதுசா செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தெரிகிறது. அடுத்த முறை டூயட் பாடலை சோக ராகத்திலும், சுடுகாட்டு பாடலை அமெரிக்க பீட்டிலும் யுவன் முயற்சிக்கலாம்.

படத்தை என் கண்களால் பார்த்தேன். பிடிக்கவில்லை. அது படத்தின் பிரச்சினையல்ல. உன் கண்களின் பிரச்சினை என்று சொல்பவர்கள் சொல்லலாம். ஆனால் அவை என் கண்கள் என்பதால் நான் படத்தைத்தான் குறை சொல்லுவேன். ரத்த சரித்திரம், ஆரண்ய காண்டம் போன்ற வன்முறை படங்கள் எனக்கு பிடிக்காமல் போவதால் நானும் ஜாக்கியைப் போல “டொக்கு” ஆகிவிட்டேனோ என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனா இதே வகையிலான வேறு சில படங்கள் பிடித்து தொலைத்ததால் இன்னும் டக்கராகத்தான் இருக்கிறேன் என்பது நிரூபனம் ஆனது. இது ஒரு தமிழ்ப்படம். தமிழ்நாடு, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா உலகில் ஒரு நாடு. ஆக இதுவும் ஒரு உலகப்படம் என்று சொல்வதன் மூலமே இதற்கு உலகப்படம் என்ற லேபிள் கிடைக்கும். ஆனா அப்படி பார்த்தால் கரகாட்டக்காரனும், சம்சாரம் அது மின்சாரமும் கூட உலகப்படங்கள் ஆகிவிடும்.

மொத்தத்தில் ஆரண்ய காண்டம் – ஆபத்தான கண்டம்.

________________________

படத்தின் இடைவெளியில் அரங்கிலிருந்தே நான் எழுதிய சில ட்வீட்டுகள்:

1) யப்பா சாமீகளா.நீங்களும் உங்க உலகப்படமும். Total disappointment till interval

2) @parisalkaaraan போய்யா யோவ். Total artificial. சென்னைன்னா என்னா தெரியுமா? ராயபுரம்ன்னா என்ன தெரியுமா?

3) டேய். என்ன ரிலீஸ் பண்ணுங்கடா.. ஜாமீனாவது கொடுங்கடா. நான் என்ன கனிமொழியா?

4) இப்போது  உலகின் சந்தோஷமான மனிதன் நான் தான். படம் முடிந்துவிட்டது.

Jun 13, 2011

மச்சி. ஒரு குவார்ட்டர் சொல்லேன்

7 கருத்துக்குத்து

 

வரவர பப்லுவின் தொல்லை தாங்கல என்றுதானே சொல்லிக் கொண்டிருந்தேன். நேற்றுதான் ஒரு நல்ல விஷயம் சொன்னான்.

டேய். மம்மி அவங்க செல்லப் பையனுக்கு கல்யாணம் பண்ண போறாங்களாம்.

நல்ல விஷயம் மாதிரி தெரியுதேன்னு அவனிடம் இருந்து மேலதிக விவரங்கள் கறக்க பேச்சு கொடுத்தேன். அதுவும் செல்லப்பையனுக்கு என்பதை அவன் அழுத்தி சொன்னவிதம் கேட்கவே இனிமையாக இருந்தது.சும்மா எல்லாம் விஷயத்த சொல்ல மாட்டான் பப்லு. ரெண்டு பேரும் KFCக்கு யமஹாவில் பறந்தோம். சிக்கன் வந்தவுடன் அவன் சாப்பிட ஆரம்பித்த நேரம் நான் ஆரம்பித்தேன்.

கல்யாணம்ன்னு சும்மா சொல்லி இருப்பாங்கடா.

இல்லடா. சீரியசாதான் சொன்னாங்க. இவன் இனிமேல் சரிப்பட்டு வரமாட்டான். கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு சொன்னாங்க.

ம்ம்.. பார்ப்போம். என்ன செய்றாங்கன்னு.

அபி மாமாக்கு நடந்த கல்யாண மண்டபமே ஓக்கே இல்லை?

அது பெருசுதான். இருந்தாலும் புதுசா ஒண்ணு பார்க்கலாம்டா.

ஏ.ஆர்.ரகுமான் தான் மியூசிக் கச்சேரி வாசிக்கணும். செமயா இருக்கும்டா

இதெல்லாம் ஓவரு.

ஹலோ. நாங்க பேசுவோம். நீ கேட்டுதான் ஆகணும். கேட்டரிங் பாபு அங்கிள்தான். பிசாவும், பாஸ்தாவும் கண்டிப்பா இருக்கணும்.

பாஸ்தாவா?

ஆமாம். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வருவாங்க. அதான் எங்களுக்கு புடிக்கும்.

அவங்க எல்லாம் எதுக்குடா?

நான் கூப்பிடுவேன். உனக்கு என்ன?

சரி. உன் இஷ்டம்.

நாம ocean familydaa. எல்லோரும் ப்ளூ கலர்ல டிரெஸ் எடுப்போம். உனக்கு ப்ளூ கலர்ல லாங் குர்தா. ஓக்கேவா?

உனக்கு? ப்ளூ கலர்ல பட்டு சட்டையா?

இல்லை. பட்டு கலர்லே பட்டு சட்டை.

எதுக்குடா?

நான் போட்டுப்பேன். உனக்கு என்ன வந்துச்சு?அன்னைக்கு ஃபேஷன் பரேடுல அந்த டிரெஸ்ல போனப்ப எல்லோரும் நல்லா இருக்குனுதானே சொன்னாங்க.

உன் இஷ்டம்டா சாமி (கல்யாணம் நடந்தா சரிதான்னு நினைத்துக் கொண்டேன்)

ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஸ்கூலுக்கு போனா கிண்டல் செய்வாங்க. அதான் பிரச்சினை

உன்னை மட்டும் ஏண்டா கிண்டல் பண்ணுவாங்க? எல்லோரும்தானே பாஸ்தா சாப்பிடுவாங்க.

அது சரி. ஆனா கல்யாணம் எனக்கு மட்டும்தானே? என் ஃப்ரெண்ட்ஸூக்கு இல்லையே

என்ண்டா?????????உனக்கா?

ஆமாம். எங்க மம்மிதான் எனக்கு கல்யாணம்னு சொன்னாங்க. நீ உங்க மம்மி சொன்னாங்கன்னு நினைச்சியா?

மவனே.. வீட்டுக்கு வா..

அங்கேயே அடித்தால் நல்லா இருக்காதுன்னு  வீட்டுக்கு வந்தோம். பைக்கில் இருந்து இறங்கி ஓடியவன் சத்தமாக சொன்னான்

“பாட்டி. இவனுக்கு அதுக்குள்ள கல்யாணம் வேணுமாம்.. உன் பையன ஒழுங்க வளக்க மாட்டியா”

மனதுக்குள்ள சன்னமாக மனசாட்சி சொன்னது கேட்டது “மச்சி. ஒரு குவார்ட்டர் சொல்லேன்”

Jun 9, 2011

கூகிள் மிராக்கிள்

5 கருத்துக்குத்து

 

Untitled

இணைய‌ ப‌ய‌னாள‌ர்க‌ள் அனைவ‌ரும் தின‌மும் மின்ன‌ஞ்ச‌ல் திற‌‌க்கிறார்க‌ளோ இல்லையோ, கூகிளில் தேடாம‌ல் இருப்ப‌தில்லை. ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ன் பிற‌ந்த‌நாளில் இருந்து ஒபாமாவின் அடுத்த‌க்க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை வ‌ரை எதை தேடினாலும் சிறு விள‌க்க‌ம் கொடுக்க‌ த‌வ‌றுவ‌தில்லை கூகிள். அப்ப‌டி ப‌ய‌ங்க‌ர‌ டிராஃபிக் கொண்ட‌ கூகிளில் முக‌ப்பு ப‌க்க‌த்தில் இதுவ‌ரை நீங்க‌ள் விள‌‌ம்ப‌ர‌ங்க‌ள் க‌ண்ட‌துன்டா? 75% ப‌க்க‌ம் வெள்ளையாக‌, காலியாக‌த்தானே இருக்கு? பின் ஏன் எந்த‌ விள‌ம்ப‌ர‌மும் இல்லை? க‌ட‌ந்த‌ 6 வ‌ருட‌ங்க‌ளாக‌ உறுத்திக் கொண்டிருக்கும் இந்த‌க் கேள்விக்கும் ப‌திவிற்கும் எந்த‌ ச‌ம்ப‌த‌ம‌முமில்லை என்று சொல்லி உங்க‌ள் வ‌யிற்றில் பீர் வார்க்கிறேன்.

கூகிள் டோட‌ல் என்று இப்போதெல்லாம் தின‌மும் ஒரு டிச‌னை வெளியிடுகிற‌து கூகிள் நிறுவ‌ன‌ம். பிர‌ப‌ல‌ங்க‌ளில் பிற‌ந்த‌நாள் அல்ல‌து திருவிழா என‌ அந்த‌ந்த‌ நாளின் சிற‌ப்பிற்கு தொட‌ர்பாக‌ ஒரு டோட‌ல் வெளியிடுகிற‌து. இன்று பிர‌ப‌ல‌மா‌‌ன இசைக்க‌லைஞ‌ர் லெஸ் பால் என்ப‌வ‌ர‌து பிற‌ந்த‌ நாளாம். அவ‌ரை சிற‌ப்பிக்கும் வித‌மாக‌ ஒரு கிடார் டோட‌லை வெளியிட்டிருக்கிற‌து கூகிள். ம‌வுசைக் கொண்டு த‌ந்திக‌ளை மீட்டினால் கிடார் இசை பொங்குகிற‌து. அத‌ன் வ‌டிவ‌ம் GOOGLE  என்று இருக்குமாறு டிசைன் செய்திருக்கிறார்க‌ள். ம‌வுஸ் ம‌ட்டுமின்றி, கீபோர்டில் த‌ட்ட‌சுவ‌த‌ன் மூல‌மாக‌வும் ச‌த்த‌த்தை எழுப்ப‌லாம். அத‌ற்கு முத‌லில் அந்த‌ டோட‌லில் இருக்கும் கீபோர்ட் ப‌ட‌த்தை க்ளிக்குங்க‌ள். இல்லையெனில் நீங்க‌ள் டைப்புவ‌து எல்லாம் தேடுவ‌த‌ற்கான‌ குறிச்சொற்க‌ளாக‌ எடுத்துக் கொள்ளும் கூகிள்.

இப்போது கீழே இருக்கும் எழுத்துக‌ளை த‌ட்ட‌ச்சி பாருங்க‌ள். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாருக்கான‌ நோட்ஸை கூகிள் டோட‌லுக்கு ஏற்ற‌து போல் எழுதி இருக்கிறேன். நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌தெல்லாம் அந்த‌ பாட‌லில் எங்கெல்லாம் கேப் வ‌ருமோ அங்கெல்லாம் இடைவெளி விட்டு த‌ட்ட‌ச்ச‌ வேண்டும்.

உதார‌ண‌த்திற்கு “YY EE” என்ப‌தை த‌ட்டச்சும் போது “YY” அடுத்த‌டுத்தும், பின் ஒரு சின்ன‌ இடைவெளி விட்டு “EE” என்ப‌தை அடுத்த‌டுத்தும் டைப்ப‌ வேண்டும். சில‌ நோட்ஸ் ச‌ரியாக‌ வ‌ர‌வில்லை. அது என் த‌ப்பா, கூகிள் குறையா என்ப‌தை நீங்க‌ளே முடிவு செய்து கொள்ளுங்க‌ள் :)

YY  EE  RR E

WW  II  UU  Y

EE  WW  II  U

EE  WW  II  U

நான் காலைல‌ இருந்து என் இனிய‌ பொன் நிலாவே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாம‌ழை, என்னுள்ளே என்னுள்ளே எல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்

Jun 8, 2011

தோழிக்கு பிற‌ந்த‌நாள்

13 கருத்துக்குத்து

 

சென்னையை குளுமையாக்க‌, ப‌சுமையாக்க‌ இவ்வ‌ள‌வு ம‌ழைத் தேவையில்லை. ம‌துரைக்கு சென்றிருக்கும் தோழியை வ‌ர‌ சொன்னாலே போதும்.

புற‌உல‌கை ம‌ற‌ந்து "ச‌ப்ஜெக்ட்டில்" ம‌ட்டுமே முழு க‌வ‌ன‌மும் செலுத்தி ம‌ன‌தை ஆன‌ந்த‌த்தில் ஆழ்த்துவ‌தால் பிற‌ந்த‌ நாள‌ன்று வெகு அழ‌காய் வ‌ந்த‌ தோழியை சைட்டடிப்ப‌தும் ஒரு வகை தியான‌மே

தோழி "ம‌ல‌ர்க‌ளே ம‌ல‌ர்க‌ளே" என்று பாடும்போதெல்லாம் பூமியில் சில‌ ல‌ட்ச‌ம் பூக்க‌ள் ம‌ல‌ர்ந்து விடுவ‌து நிச்ச‌ய‌ம்

”நைட்டெல்லாம் யார செல்லம்ன்னு சொல்லிட்டு இருந்த” என்றாராம் தோழியின் அம்மா. அறை நண்பனிடம் என் கதையை விசாரிக்க வேண்டும்.கொஞ்சம் டேஞ்சர்தான்

உன் பிறந்த நாளன்று அதிகாலை முதலே உன் வீட்டுக்கருகில் இருந்த மரத்தின் உச்சியில் மறைந்திருந்தேன். எழுந்தவுடன் ஜன்னல் கதவைத் திறந்தாய். அன்றுதான் நீ குளிப்பதே உன் அழகையெல்லாம் அழிக்கத்தான் என்று தெரிந்துக் கொண்டேன்.

எல்லோர் வீட்டுப் பெண்களும் பூக்களை சூடி அழகாகிறார்கள். நீ மட்டும்தான் தினம் ஒரு வகை பூவெனச் சூடி பூக்களை அழகாக்கிறாய்.

உன்னை சில நிமிடங்கள் பார்த்த எனக்கே இருப்புக் கொள்ளவில்லை. எப்படித்தான் அன்று உன்னை முழுவதுமாய் பார்த்தும் உடையாமலிருக்கிறது உன்  வீட்டுக் கண்ணாடி?

காலை முதலே உன்னைப் பின்தொடர்ந்து வருகிறேன் என்பதை நீ அறிந்தும், இரவு வீட்டுக்குள் நுழையும்முன் தான் ஒரு பார்வைப் பார்த்தாய். இதை காலையிலே செய்திருந்தால் என் நண்பர்களுக்கு ஒரு ட்ரீட்டாவது கிடைத்திருக்கும்.

அன்று மாலை நீயும் கோவிலுக்கு வந்தாய். "யார் பேருக்குப்பா அர்ச்சனை" என்ற அய்யரிடம் " சாமி பேருக்கு" என்றேன். அவரும் சரியாய் உன் பெயருக்கு அர்ச்சனை செய்தார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அந்தக் கோவில் சாமிக்கும் உன் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்.

________________________

உண்மையில் திரும‌ண‌த்தில் சேரும் காத‌ல் தான் தோல்விய‌டைகிற‌து. சேராத‌ காத‌ல் க‌டைசி வ‌ரை உயிர்ப்புட‌ன் தான் இருக்கிற‌து

 

all rights reserved to www.karkibava.com