Apr 28, 2011

சுப ஆரம்பம்

33 கருத்துக்குத்து

 

  ஹாய் ஹாய் ஹாய்..

  எல்லோரும் நல்லா இருக்கிங்களா? நம்ம ராம் கோபால் வர்மா அஞ்சே நாள்ல ஒரு படத்தை எடுத்திருக்காராம். இதுல ஷூட்டிங் மட்டும்தான் கணக்கு. ஸ்க்ரிப்ட், போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் எல்லாம் தனி. அந்த மாதிரி நாம ஏன் குறும்படத்துல..நோ நோ.. திட்டாம கேளுங்க. நாம ஏன் ஒரு மணி நேரத்துல ஒரு குறும்படம் எடுக்க கூடாதுன்னு யோசிச்சேன். குறும்படம் எடுக்க முடியலைனாலும் ஒரு விளம்பரப்படம் எடுக்கலாமேன்னு யோசிச்சு எடுத்தும் முடித்துவிட்டோம். கான்செப்ட் யோசிச்சது, படப்பிடிப்பு, எடிட்டிங் என எல்லாமே ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டோம். இதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். ஆனால் ஒரு மணி நேரம் என்பதை கெடுவாக வைத்துக் கொண்டதால் முடிந்தவரை முடித்து வலையேற்றுகிறோம். இதே கான்செப்ட்டில் இன்னும் சில விளம்பரப்படங்கள் எடுக்கவிருக்கிறோம். அவை அவுட்டோரில், நல்ல கேமராவில், நல்ல முறையில் எடுக்க ஆசை. இந்தப் படம் சாதாரன டிஜிட்டல் கேமராவிலும், மொபைல் கேமராவிலும் எடுக்கப்பட்டது.

இதில் வரும் கிட்டார் பிட் ட்விட்டர் ஒருவர் வாசித்தது. அதையே நான் வாசித்து உபயோகப்படுத்த எண்ணினேன். அந்த 1 மணி நேரக்கணக்கால் அதுவும் இயலாமல் போனது. சிறந்த விளம்பரப்படத்திற்கான விருதுக்கு இது செல்லக்கூடும் என்பதால்(ஹிஹி) லைவ் ரெக்கார்டிங் முறை என்று முடிவானது. சற்று இரைச்சல் இருக்கக்கூடும்.

Apr 25, 2011

I am single - தோழி

20 கருத்துக்குத்து

 

8 லார்ஜ், 12 பியர் என்று பிலிம் காட்டுகிறார்கள். நான் தோழியின் 4 முத்தங்கள் வரை தாக்குபிடித்திருக்கிறேன்

--------------------------------------------------------------------------------------------------------------

தோழியுட‌ன் இனி செஸ் விளையாட‌ கூடாது. நான் தானே உன‌க்கு ராணி? எதுக்கு இன்னொரு ராணியென‌ வெட்டிவிடுகிறாள் ஆட்ட‌ம் துவ‌ங்கும்முன்பே

--------------------------------------------------------------------------------------------------------------

தோழி :உன் டீஷ‌ர்ட் சைஸ் சொல்லு அம்மு 

நான்: எக்செல்

தோழி : அது இல்லைன்னா?

நான்: ப‌வ‌ர்பாயின்ட்டோ, வேர்டோ வாங்கிடு

தோழி :போடாங்ங்ங்ங்ங்

--------------------------------------------------------------------------------------------------------------

உனக்கு இலக்கியமும் தெரியவில்லை. வாசிப்பனுபவமும் இல்லை என்றவர்கள் எல்லாம் தோழியை அறிமுகப்படுத்தியவுடன் கூனி குறுகினார்கள்

--------------------------------------------------------------------------------------------------------------

I am single என்ற வாசகம் கொண்ட டீஷர்ட் போட்டுக்கொண்டு வெறுப்பேற்றுகிறாள் தோழி.. எனக்கு வந்த ஏடாகூட சந்தேகத்தை கேட்க நினைத்து ஏனோ கேட்காமல் விட்டுவிட்டேன்

--------------------------------------------------------------------------------------------------------------

நேற்றிரவு தேவதைகளுடன் கனவில் பிரச்சினை. அவர்களில் யார் தோழியின் சாயலில் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமாம் நான்

--------------------------------------------------------------------------------------------------------------

குழலினிது யாழினிது என்பர் தோழியின்
குரல் கேட்கா தவர்

Apr 20, 2011

வ‌ள்ளுவ‌ர்தான்யா க்ரேட் (கார்க்கி)

21 கருத்துக்குத்து
 

  ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கொன்றை மரத்தை பார்த்துக்கொண்டிருந்தான். மழை ஓய்ந்த மஞ்சள் வெய்யிலில் பழுத்த இலைகளும் பச்சை இலைகளும் லேசான காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

"அதுக்காக‌ வ‌ச‌ந்த் டிவி பார்க்கிற‌‌தெல்லாம் ஓவ‌ர்டா" .க‌ணீர் குர‌ல் அவ‌னை திருப்பிய‌து.

நான் வ‌ந்த‌து கூட‌ தெரியாம‌ அப‌ப்டி என்ன‌டா வெறிச்சு பார்த்துட்டு இருக்க‌? உன் கூட‌ எல்லாம் ரூம் எடுத்தேன் பாரு.. என்னை சொல்ல‌ணும்" - எஃப்.எம் கேட்டுக் கொண்டே வேலை செய்வ‌து போல் அவ‌ன் எஃப்.எம் ஒலிப‌ர‌ப்பிக் கொன்டே த‌ன் வேலைக‌ளை செய்ய‌த் துவ‌ங்கினான்.

ஜ‌ன்ன‌லை வெறித்துக் கொண்டிருந்த‌வ‌ன் சேன‌லை மாற்றிவிட்டு த‌லையாட்டினான்.

"என்ன‌டா ஆச்சு உன‌க்கு? ஏன் பேய‌றைஞ்சா மாதிரி இருக்க‌?" ‍-  எஃப்.எம் ஆறுத‌லாய் கேட்ட‌து

 "என்ன‌டா சொல்ற‌து?  பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை

அப்ப‌டின்னா?

 "தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?" இதான் அர்த்த‌ம். இந்த‌ மாதிரிதான் அவ‌ன் ஃப்ரென்ட்ஷிப்ப‌ நினைச்சேன்..

யாரு? அந்த‌ வெள்ளைய‌த்தேவ‌னை சொல்றியா?

ம்ம்.. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

இதுக்கு என‌க்கு அர்த்த‌ம் தெரியுமே!!உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ,ந‌ண்பனுக்குத் துன்பம் வந்தால்அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. க‌ரெக்ட்டா? நேத்துதான் நீ த‌ந்த‌ புக்ல‌ ப‌டிச்சேன்.

ம்ம். அப்ப‌டித்தானே நான் இருந்தேன்?

ஆனா நீ இப்ப‌ செய்ற‌ வேலை அப்ப‌டி இல்லையே? அவ‌ன் த‌ப்பு செஞ்சிட்டான்னு நீயுமா இப்ப‌டி செய்ய‌ணும்?

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது

இது நான் இன்னும் ப‌டிக்க‌ல‌. நீயே அர்த்த‌த்த‌ சொல்லு.

 உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

அப்ப‌டி என்ன‌ அவ‌ர் ந‌டிச்சிட்டாரு? ப‌டிப்பு, வேலையெல்லாம் பார்த்தா நீ ப‌ழ‌குவ‌? அப்ப‌டிப் பார்த்தா நீ என்கிட்ட‌ பேசியே இருக்க‌ கூடாதே?

உன் கேள்வியிலே‌ ப‌தில் இருக்கு பாரு. அது பார்த்து ப‌ழ‌க‌ல‌. ஆனா சொன்ன‌ எல்லாமே பொய்யுன்னு தெரிஞ்சா தாங்கிக்க‌ முடியுமா?

என்ன‌ ஆதாரம்? என்ன‌ ஏமாத்திட்டாரு உன்னை?

உன‌க்கு நிரூபிக்க‌ வேணாம்டா.. என‌க்கு தெரியும். கேட்க‌ வேண்டிய‌ கேள்வியெல்லாம் எஸ்.எம்.எஸ்ஸுல‌ கேட்டுட்டேன். அவ‌னும் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு ம‌ன்னிப்பா கேட்டுட்டான். இந்த‌ மொபைல்ல‌தான் இருக்கு.

அப்புற‌ம் ஏன் ம‌த்த‌வ‌ங்க‌ கிட்ட‌ அவ‌ன‌ ப‌த்தி சொன்ன‌?

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
 தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?" இப்ப‌டி வாழுற‌ ஒருத்த‌ன‌ நாமே கொண்டாடினோம். இப்ப‌ அவ‌னால‌ நிறைய‌ பேருக்கு பிர‌ச்சினைன்னு வ‌ந்தா சொல்ல‌ வேண்டிய‌தும் நாம‌ தானே?

ம்ம். அப்ப‌ இங்க‌ "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" வ‌ராதா?

தெரியாம‌ செஞ்ச‌ த‌ப்புன்னா ப‌ர‌வாயில்லைடா. இது பிளான் ப‌ண்ணி செஞ்சது. யார்கிட்ட‌ பேசினாலும் நான் சொன்ன‌ குற்ற‌ச்சாட்டையே சொல்றாங்க‌.

ம்ம்..  இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும். அப்ப‌டி ஆயிட்டா?

இல்லைடா.. சில‌ மாச‌மாவே எல்லாம் ந‌ண்ப‌ர்க‌ளும் சொல்லிட்டுத்தான் இருந்தாங்க‌

இப்ப‌ என்ன‌ ப‌ண்ண‌ போற‌?

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.  செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும். அத‌னால் வில‌கிற‌துதான் க‌ரெக்ட். இனிமேல‌ எங்கேயும் இதை ப‌த்தி பேச‌ வேணாம்னு முடிவு செஞ்சிட்டேன்..

ம்.. விடு ம‌ச்சி.. ஆனா வ‌ள்ளுவ‌ர்தான்யா க்ரேட்.. எல்லாத்துக்கும் எழுதி வ‌ச்சிருக்கான் பாரு.

 
 
 

Apr 17, 2011

சைட்டடிக்கலாம் வாங்க – 1

35 கருத்துக்குத்து

 

   என் நண்பன் ஒருவன் வீராணம் பைப் ஸைஸில் லென்ஸும் ஒரு கேமராவும் வைத்திருக்கிறான். கிடார் வைத்திருக்கும் எல்லோருக்கும் அது வாசிக்கவும் தெரியும் என்று நம்பும் தமிழன், கேமரா வைத்திருக்கும் எல்லோரும் ஃபோட்டோகிராஃபர் எனவும் நம்பிவிடுவான். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆனால் அந்த கேமராவும் பைப் சைஸ் லென்சும், கூடவே இவனும் படம் பிடிக்க கிளம்பிவிடுவான்.  இந்த மாதிரி ஃபோட்டோ செஷனுக்கு போகும் நபர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஒரு 4 பக்க பிரிண்ட் அவுட் ஒன்றை அறையில் ஒட்டியிருக்கிறான். அந்த லிஸ்ட் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இதுவல்ல. நாம மேட்டருக்கு வருவோம். செயற்கை லென்சினால் படம்பிடிக்க போகும் இவர்களுக்கே இவ்ளோ அதுப்புன்னா, இயற்கை லென்சால் படம் பிடிக்க போகும் நமக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?

   என்ன புரியலையா? நமது கண்களால் நாம் பிடிக்கும் படம் தானே சைட் அடிப்பது? அவர்கள் மெமரி கார்டில் சேமிப்பதை நாம் மன அறையில் சேமிக்கிறோம். லென்சை திருகி அவர்கள் ஸூம் செய்வதை நாம் கால்களை முன்பின், சைடு பக்கம் நகற்றி பிடிக்கிறோம். நல்ல ஃபோட்டோ எடுப்பவன் கையில் மட்டுமில்லை, எதை எடுக்கிறோம் என்பதிலும் இருக்கு என்பார்கள். இங்கேயும் அதுதானே? ஆக சைட் அடிக்கும் எல்லோரும் ஒரு விதத்தில் புகைப்பட கலைஞர்களே. “அதுக்கி இன்னா இப்ப?” என்ற லூஸ் மோகன் ஸ்டைலில் கேட்பீர்களேயானால் நானும் அப்படியே பதில் சொல்கிறேன். “சைட் அடிக்க போச்சொல்ல உஜாரா போனும்ப்பா. மெர்சில் ஆகாம நான் சொல்றத கேட்டீன்னா அப்பாலிக்கா சோக்கா சைட் அடிக்கலாம்”

   சைட் அடிக்கும் ஆசை இல்லாதவர்களை எதிர்கால இந்தியாவின் தூண்கள் என அழைப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. அதாவது அவர்கள் இளைஞர்களே இல்லையென்கிறேன். இதை பற்றி நாம் மேலும் பேசி பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சைட் அடிப்பதென முடிவு செய்துவிட்ட சில நபர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புள்ளிகளை, அதாங்க பாயிண்ட்டுகளை மட்டும் பார்ப்போம். ஏற்கனவே தமிழ் சினிமா போல முதல் 4 ரீல் வரை கதையே சொல்லாமல் இழுத்தாகிவிட்டது.

   நாம் ஒன்றும் ABC பிரைவேட் லிமிட்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலைக்கு  இண்டெர்வியு செல்லவில்லை. இந்த காலர் மட்டும் வெள்ளையா இருக்கிற சட்டையை போடுவது, நாய்க்கழுத்துல சங்கிலி மாதிரி டையை கட்டிக்கிறது, சாயம் போன வெள்ளை நிற அல்லது ஸ்கை ப்ளூ நிற சட்டை போடுறது, அப்புறம் தப்பு செஞ்சவன உள்ள தூக்கி போடுற மாதிரி இன்சர்ட் செய்றது. இதெல்லாம் ஸ்ரீசாந்த் வஸ்துக்கள் . நம்ம டீமில் இருந்தா நிச்சயம் டர்ருதான். உங்கக்கிட்ட டீஷர்ட் இருக்கா? ரொம்ப ஃபங்க்கியா எல்லாம் வேணாம். அதுக்குன்னு ரெண்டு பட்டன் வச்ச தாத்தா காலத்து டீஷர்ட்டும் வேணாம். V நெக் என்றால் உசிதம். ரவுண்ட் நெக்கில் நல்ல கலர் + வாசகம் என்றால் இன்னும் உசிதம்.

“Answer is beer. Whats the question”

“Some people read tshirt slogans. Are you?”

   இது போன்ற பாழாப்போன வாசகம் இருந்தால் அதை பைக் துடைக்கவோ, அல்லது கால்மிதியடியாகவோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் customized வாசகங்கள் பிரிண்ட் செய்து கொள்ளலாம்..

I am on diet. Plz dont smile at me.

I am cool. I am not the reason for global warming.

“இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது

போன்ற வாசகங்கள் நல்ல ரீச்சை தரும். மேலும் நல்ல வாசகங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம். எல்லா பாலினருக்கும் டயலாக்குகள் கைவசம் உண்டு.

  தர்மத்தின் தலைவன் படம் பார்த்திருக்கீங்களா? அதில் ஒரு சீனில் சூப்பர்ஸ்டார் வெறும் சட்டையோடு வேட்டி இல்லாமல் காலேஜுக்கு கிளம்புவாரு. செம சிரிப்பு இல்லை?அப்புறம் சிரிக்கலாம். நீங்களும் இப்ப டீஷர்ட் மட்டும்தான் போட்டிருக்கிங்க. நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. ஓவர் ஜிங்ஜாக் வேலை இல்லாத ஒரு டெனிம் ஜீன்ஸ் போதும். டீஷர்ட் நிறத்திற்கு மேட்ச்சா இருந்தா போதும். உடனே ரெண்டும் ஒரு நிறத்துல போட்டுக்கிட்டு 80களின் கமலஹாசன் ரேஞ்சுக்கு வராதீங்க. அடுத்த்து ஷூ.. என்னது செப்பலா? நோ பாஸ். கோவிலுக்கே போனாலும் ஷூதான். சாக்ஸ் போட்டு, ஷூ போடுற சாக்குல குனிஞ்சு நாலு பேர பார்க்கலாம். ஷூ கண்டிப்பா வேணும். ஆஃபீஸ்க்கு போடுற கருமத்தை எல்லாம் விடுங்க. நல்லதா ஒரு ஷூ இதுக்குன்னு வாங்கி வச்சிக்கோங்க. After all sighting is better than fighting.

கொஞ்சம் நிமிருங்க. டிரெஸ், ஷூ எல்லாம் ஓக்கே. பைக்லதானே போறோம்? ஒரு கூலர்ஸ் எடுத்துக்கோங்க. ஐபிஎல் பார்க்க வந்த தீபிகாவோட கண்ணாடி மாதிரி பெருசா வேணாம். ரொம்ப சிம்பிளா இருந்தா போதும். ஆங்.. இப்ப ஓக்கே.. என்ன பாஸ்? CT 100, ஸ்ப்லெண்டர் இதெல்லாம் மாப்பிள்ளை வண்டி. அதாவது சீதனமா கொடுக்கிற வண்டி.போய் யமஹா FZ இல்லைன்னா பல்சர் யார்கிட்டவாது கடன் வாங்கிட்டு வாங்க. நாம் எவ்ளோ பெரிய வேலைக்கு போறோம்? இதுக்கெல்லாம் வண்டி தந்து ஹெல்ப் பண்ணதானே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க?

ரெடி ஜூட். அடுத்த அத்தியாயத்தில் எங்க சைட் அடிக்க போறோம்னு பார்க்கலாம்.

____________________________________________

பிகு: பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் சந்தியா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.

Apr 15, 2011

ப‌திவ‌ர் திரும‌ண‌ வாழ்த்து

4 கருத்துக்குத்து

வலையுலகம் அறியாத வலையுலக காதல் ஜோடி அவர்கள். சூர்யா ஜோ என்று வைத்துக் கொள்வோமா? சூர்யாதான் முதலில் எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிந்தவர் என்றாலும், ஜோ சென்னையிலே இருப்பதால் பப்லுவிடம் அலைபேசி தோஸ்த் ஆகிவிட்டார். விஷம். ச்சே விஷயம்  இதுதான். நம்ம சூர்யா ஒரு மொக்கை அடித்திருக்கிறார். உடனே ஜோ, நான் தான் பப்லுவோட தோஸ்த், அதனால் மொக்கை அடிக்கிறது என்னோட காப்பிரைட்டு என்று சொல்லியிருக்கிறார். சும்மா விடுவாரா சூர்யா? உனக்கு பப்லுதான் தோஸ்து. ஆனா நான் அவன் குருவுக்கே தோஸ்து என்றாராம்.

              ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை வச்சு காமெடி பண்றாங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!

http://www.karkibava.com/2009/11/blog-post_18.html

 

இந்த‌ப் ப‌திவில் நான் குறிப்பிட்ட‌ காத‌ல் ஜோடி யாரென‌ தெரியுமா? ப‌திவ‌ர் ட்ரூத் & ப‌திவ‌ர் புன்ன‌கை. இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இன்று திரும‌ண‌ம் ந‌டைபெற்ற‌து. இருவ‌ரும் 32ம் பெற்று பெருவாழ்வு வாழ‌ வாழ்த்துவோம்.

IMG_0219

Apr 12, 2011

மாப்பிள்ளையும் சில பின்குறிப்புகளும்

19 கருத்துக்குத்து

 

எம்ஜிஆர் படம் வரை தெரியும். அதற்கு முந்தைய டிரெண்ட் எனக்கு தெரியவில்லை. அம்மாவிற்கோ, நண்பனுக்கோ ஹீரோ ஒரு சத்தியம் செய்து கொடுத்துவிட,  அதை தெரிந்துக் கொண்டு வில்லன் ஹீரோ முன்னாடி அட்டகாசம் செய்ய, ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவால் பொறுக்க முடியாமல் சத்தியத்தை மானசீக வாபஸ் பெற்று களத்தில் இறங்க, அங்கே தொடங்கும் ஒரு ஃபைட். இப்படித்தான் இந்த ஏப்ரல் மாதம் முழுக்க பிளாக் எழுத மாட்டேன் என தோழியிடம் நான் சொல்லிவைக்க, அப்படியே அதை ஃபாலோ செய்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த மாலையில் அக்கா வந்து படத்திற்கு அழைக்க, தவிர்க்க முடியாமல் நானும் சென்றுவிட, இதோ நள்ளிரவு 2 மணிக்கு இந்தக் கருமத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பத்தி 1ன் பின்குறிப்பு : விமர்சன சூறாவளி கேபிள் சங்கரின் சட்டப்படி முதல் பத்தி இப்படித்தான் “செய்ய,இறங்க,ஓட,முடிக்க” என கமா போட்டு எழுத வேண்டுமாம். மொத்த பத்தியும் இரண்டு வாக்கியங்களில் எழுதி விட வேண்டுமாம்.

மாப்பிள்ளை என்றொரு திரைக்காவியத்தை கண்ட நான் இங்கே உங்கள் முன்னால் பரோலில் வெளிவந்த கைதி போல் நிற்கிறேன். நான் பட்ட பாட்டை படிக்கும் நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.  இது நீங்கள் எனக்கு செய்யும் உதவி இல்லை. கடமை. பெரு நாட்டில் இப்படி ஒரு படம் பார்த்துவிட்டு வந்து இரவு நேரமென்றும் பார்க்காமல் எழுதும் எழுத்தாளானை அம்மக்கள் கொண்டாடுகின்றனர்.. தமிழ்நாடு லைட்டை ஆஃப் செய்யுடா கஸ்மாலம் என்று பக்கத்து வீட்டுக்காரன் திட்டும் அளவிலே இருக்கிறது. என் வாழ்வில் மிகப்பெரிய இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. ஒன்று இந்த விடியா தமிழகத்தில் பிறந்தது, இரண்டாவது மாப்பிள்ளை போன்ற ஆகாவலி படங்களை பார்த்து தொலைப்பது.

பிகு: இப்பத்தி புரிய உங்களுக்கு தற்கால கட்டுரையாளன் கம் நாவலிஸ்ட் குறித்த பிரக்ஞை இருக்க வேண்டும்

மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? அது சூப்பர்ஸ்டார் நடித்த சூப்பர் ஹிட் படமாச்சே என்பவர்களுக்கு.. ஆம். அது உண்மைதான். மறுக்கவில்லை. ஆனால் ரஜினியின் மாப்பிள்ளை நடித்த இந்த மாப்பிள்ளை மாமனாரின் ஆல் டைம் பெஸ்ட் மொக்கையான குசேலனை சூப் வைத்து குடித்துவிடுகிறது. வீட்டோடு மாப்பிள்ளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் தியேட்டரோடு மாப்பிள்ளை மட்டும் கூடவே கூடாது என சூப்பர்ஸ்டாரின் காதுகளில் யாரேனும் கூவிவிடுங்கள். வழக்கமாக ஒரு மொக்கைப்படம் வந்தால் ரசிகர்கள் கேட்கும் பொதுவான கேள்வி “கதையை கேட்டானா இல்லையா?”. இரண்டு மாப்பிள்ளையின் கதையும் ஒன்றுதான். உடனே ”அப்புறம் ஏன் கதை என சுராஜ் தன் பெயரைப் போட்டுக் கொண்டாரென” என்னிடம் கேட்காதீர்கள். நான் அவ்விஷயத்தில் வைகோவைப் போல கையாலாகதவனாக இருக்கிறேன். விஷயம் என்னவென்றால் தமிழ் மசாலா படத்திற்கு தேவை கதை இல்லை. திரைக்கதையும், அதை தாங்கும் நடிகர்களும். இதில் தனுஷ் என்ற 4 எலும்பும் 2 மீட்டர் தோலும், மனிஷா கொல்றாடா என்பவரும், ஹன்சிகா முட்டிக்கோநீ என்பவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆசிஷ் வித்யார்த்தியும் அவர்தம் அழகிய ஒட்டுமீசையும் கூட உண்டு.

கதைதான் ஒரு படத்திற்கு முக்கியம் என்னும் அறிவுசீவிகள் “கைப்புள்ள. ஏமாறாத” என ஆட்காட்டி விரலை தன்னை நோக்கி காட்டி உஷாராகும் வடிவேலுவை நினைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இண்டெக்ஸ் ஃபிங்ரின் நெய்பரை காட்டிக் கொள்ளலாம். இப்போது பார்த்தாலும் சுவாரஸ்யப்படுத்தும் கதையை கந்தலாக்கி, அதை வெள்ளாவியில் போட்டு இன்னும் கசக்கி, அதை நாய்க்குட்டிக்கு போட்டு அழகுப்பார்த்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, செகண்ட் யூனிட் டைரக்‌ஷன், சிறப்பு சப்தம் பற்றியெல்லாம் நான் எழுதினால் பெரு நாட்டில் மட்டுமல்ல, சிறு நாட்டிலும் ஏளனம் செய்வார்கள். படத்தில் ஒரு ஆறுதலான விஷயம், தனுஷிற்கு வரும் கோவமெல்லாம் லாஜிக்கிலாக இருக்கிறது. தல அஜித் படம் பார்க்க சென்று, டிக்கெட் கிடைக்காமல் மேனஜருடன் சண்டைப் போட்டு பொட்டியை தூக்கி வந்துவிடுகிறார். அங்கே இயக்குனர் அற்புதமான ஒரு குறியீட்டை வைத்திருக்கிறார். ”தல படத்துக்கே டிக்கெட் கிடைக்கலைன்னா, எப்படி மத்த படத்துக்கு கிடைக்கும்?.”

இந்தப் பத்திக்கான பின்குறிப்பு: அஜித் ரசிகர்கள் சினம் கொள்ள வேண்டாம். நான் படம் பார்த்து நொந்து போயிருக்கிறேன். எங்கேயாவது எனக்கு கிளுகிளுப்பாக இருக்கும் விஷயங்களை நுழைக்காவிட்டால் தூக்கம் வந்துவிடும். எங்க கடைசி படம் சுறாவும் காலி. உங்க அசலும் காலி. அதனால் இத லூசுல விட்டுடுங்க.

மாப்பிள்ளை. பேரையாவது மாத்தியிருக்க வேண்டாமா? இப்போதோ எப்போதோ, இன்றோ நாளையோ மாப்பிள்ளையாக காத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் இந்தப் படம் பார்த்து தவறான முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? போகட்டும். கெளசல்யா போன்ற மொக்கை ஃபிகரிடமும் கூட ஏதாவது ஒண்ணு நல்லா இருக்குமே! இந்தப் படத்தில் அப்படி ஏதுமில்லையா என நீங்கள் நினைக்கலாம். என்னோட ராசி நல்ல ராசி என்றொரு பாடல். அப்படியே ரீமிக்ஸ் தான். ஆனால் மெட்டை மாற்றாமல் பீட்டை மட்டும் மாற்றி கலக்கியிருக்கிறார். இதே ஃபார்முலாவை சுராஜும் பின்பற்றியிருந்தால் நான் நிம்மதியாக தூங்கியிருப்பேன். எல்லாம் விதியென போக முடியவில்லை.

பிகு: எல்லா பத்திக்கும் தனியே பின்குறிப்பு போடுகிறானே!! என்ன விஷயம் என யூகித்தீர்களா? ஆம். படத்தில் பெரும்பாலான “ட்விஸ்டுகள்” முதலில் காட்டப்படுகின்றன. அதன் பின் சம்பந்தப்பட்டவர்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் அது விளக்கபப்டுகிறது. இந்த த்ராபையான டெக்னிக்கை ஏதோ க்ரையோஜீனிக் இஞ்சினை கண்டுபிடித்தது போல் பெருமையாக காட்ட முயல்கிறார் இயக்குனர். அதே போலதான் நானும் அந்தந்த பத்திக்கு தொடர்புடைய விளக்கங்களை அங்கங்கே சொல்லிவிட்டேன்.

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் மோசர்பியரில் 30 ரூபாய் சிடியை என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். தயவு செய்து இதை பார்க்க வேண்டாம். பக்கத்தில் பைபிளோ, கீதையோ இல்லை. அதில் கைவைத்து சொல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள் “சத்தியமாக இனிமேல் நான் தனுஷ் ரசிகன் என சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆடுகளம் போல ஆறு படம் நடித்தாலும் இச்சத்தியம் ஆக்டிவாக இருக்கும்”. ஆமென்.

Apr 3, 2011

ப்ளீடி ப்ளூ

11 கருத்துக்குத்து

 

131007

வா   ழ்  த்  து  க  ள் இ  ந்  தி  யா

சொல்வதற்கு ஏதுமில்லை. சச்சினின் 21வருட கனவு பலித்தது, தோனி&கோ வால். வெற்றிக்கு அனைவரும் காரணம் என்றாலும் என் பார்வையில் ஒரு ரேங்கிங்.

1) சாஹீர் கான்

2) சச்சின் டெண்டுல்கர்

3) யுவ்ராஜ் சிங்.

4)  கெளதம் கம்பீர்

5) வீரேந்தர் சேவாக்

6) விராத் கொலி

7) சுரேஷ் ரைனா

8) முனாஃப் பட்டேல்

9) ஹர்பஜன் சிங்

10) ஆஷிஹ் நெஹ்ரா

11) யூசுஃப் பதான்

12) அஷ்வின்

13) பியுஷ் சாவ்லா

14) ஸ்ரீசாந்த்

dhoni

தோனிக்கு ரேங்க் எல்லாம் கிடையாது. அவர்தான் என் மேன் ஆஃப் தி சீரிஸ்..

 

all rights reserved to www.karkibava.com