Mar 23, 2011

ஃபுட்போர்டு அடித்தால் நோ ஃபிகர்


 

இன்னொசெண்ட் இளங்கோவைப் பற்றிய முன்னுரை ஏதுமின்றியே முதல் அத்தியாயம் எழுதிவிட்டேன். இருந்தும் அவ்விரண்டு சம்பவங்கள் கொண்டு அவனைப் பற்றி நீங்கள் யூகித்திருக்கக்கூடும். யாரும் யூகிக்க முடியாதவண்ணம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத செய்கைகள் செய்வான் இளங்கோ என்பது உங்கள் யூகமாக இருந்திருக்குமேயானால் உங்கள் யூகம் ஓரளவு சரியானதே.ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஒரு நாள் எங்கள் நண்பனொருவன் கழுத்தில் டாட்டூ குத்தியிருந்தான். அவன் கேர்ள் ஃப்ரெண்ட் பெயர் அதிகம் வெளியே தெரியாமல் பின்னங்கழுத்தில் அழகாய் இருந்தது. அவள் காதலி இவன் பெயரை எங்கே பச்சை குத்தியிருப்பாள் எனக் கேட்டான் நண்பன். நல்ல ஃப்ரெண்டுடா நீ என சிலர் ஒதுங்கிக் கொள்ள, ஒரு சிலர் ஏடாகூடமாய் யூகித்துக் கொண்டிருந்தார்கள். இடையில் வந்த இளங்கோ, “சிம்பிள். அவளும் கழுத்துலதான் பச்சை குத்தியிருப்பா.” என்றான். யாரும் எதிர்பாக்காத விடை என்றாலும் இளங்கோ சொன்னதுதான் சார். எதிலும் நேர்மையானவன்.

இளங்கோ பார்ப்பதற்கு ஒரு மாதிரிதான் இருப்பான். எப்போதும் டீ ஷர்ட் தான். Pepe, Giordono என்று தமிழ் எழுத்தாளன் ரேஞ்சுக்கு விதவிதமான உயர்ரக ஆடைகளே வாங்குவான். ஆனால் பேண்ட் மட்டும் எப்போதும் சங்கர் கட்பீசில் பிட்டில் வாங்கி, குமார் டெய்லரிடம் தைத்துதான் அணிவான். ”நாம எப்பவுமே மத்தவங்கள பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோல இருக்கிற மாதிரி தானே பார்க்கிறோம்? அப்போ டீஷர்ட் மட்டும் நல்லா இருந்தா போதும்” என்பது இளங்கோவின் சித்தாந்தந்தங்களில் ஒன்று. அவனிடம் நாங்கள் தொலைபேசியில் பேசுவதை குறைத்ததற்கு அச்சிந்தாந்தமும் ஒரு முக்கிய காரணம். வெட்ட ஒட்டிய சிகையலங்காரம் தான் அவனது ட்ரேட்மார்க். மூன்று நாளாய் குளிக்காததன் பரிகாரமாய் பாடி ஸ்பேரேவும், மூன்று நாளாய் சவரம் பண்ணாதததன் அடையாளமாய் Stubbled லுக்கும் இருக்கும். மொத்தத்தில் ஒரு மார்க்கமான கலவையாய் அவனது குணத்தைப் போலவே இருப்பான் இளங்கோ.

இளங்கோ என்றால் இளவரசன் என்று சொன்னான் நண்பன். கோ என்றால் அரசன். இளமையான கோ என்றால் இளவரசன் தானே என்றான். அவன் சொன்னது சிலப் பெண்கள் முன்னிலையில் என்பதுதான் இங்கே குறிப்பிட்டுக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். ஆனா இளங்கோவோ அது தவறு. நான் ஒரு கண்ணுக்குட்டி என்றான். பெண்கள் சில்மிஷ சிரிப்பு சிரிப்பதையும் கவனிக்காமல் தொடர்ந்தவன் “கோன்னா மாடுன்னு கூட ஒரு அர்த்தம் இருக்கு. அப்படிப்பார்த்தா நான் கண்ணுக்குட்டி” என்றான். அப்பெண்கள் சிரிப்போடு நகர்ந்து போனபின்  “ராஜாவ யாருடா கொஞ்சுவாங்க? கண்ணுக்குட்டியதான் தூக்கி முத்தம் கொடுத்து கொஞ்சுவாங்க .அதான் இப்படி சொல்றான்” என்றான் இன்னொருவன். அவனுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை பேசுவது போல சென்றுவிட்டான்.  இன்றுவரை அவன் பெண்களுக்காக விழுவானா மாட்டானா என்பது புரியாத புதிர். ஆனால் இவனுக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு என்பது எங்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை. இன்னொரு சம்பவம் சொன்னால் புரிந்துக் கொள்வீர்கள்.

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். இளங்கோவிற்கு படியில் பயணம் செய்வது அறவே பிடிக்காது. எந்த பொண்ணுடா ஃபுட்போர்டு அடிப்பா? அதனால தான் நடுவுல போய் நிக்கிறான்” என்பான் ஒருவன். அன்றும் அப்படியே. மாநகரப் பேருந்தின் பிரேக் நல்ல நிலையில்தான் இருக்கும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் சட்டென்று சட்டென்று சடென் பிரேக் அடித்துக் கொண்டிருந்தார் ஓட்டுனர். எல்லோரையும் போலவே இளங்கோவும் முன்னிருந்த ஒரு யுவதியின் மேல் விழுந்துக் கொண்டிருந்தான். “Hey. What u doing” என்று எரிந்து விழுந்தவரிடம் சன்னமாய் சொன்னான் “B.Com final year”. எங்கள் பக்கம் திரும்பியவனிடம் என்னடா என்றால் “நமக்கு எப்பவும் படிப்புதானே மச்சி முக்கியம்” என்றான். எரிச்சலாய் கேட்ட அப்பெண்ணின் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்ததை நாங்கள் கவனித்துவிட்டோம். அம்மாவை கணிக்கத் தவறிய வைகோ போல இளங்கோ மட்டும் அடுத்த ஸ்டாப்பில் பேருந்தில் இருந்து வெளிநடப்பு செய்தான். விஜய்காந்த், கம்யூனிஸ்ட் போல வேலைக்காவது என்று தெரிந்தும் நாங்கள் மட்டும் பேருந்து கூட்டணியை தொடர்ந்தோம்.

3 கருத்துக்குத்து:

டக்கால்டி on March 24, 2011 at 2:14 AM said...

Vanthen...Politics mix panniya iruthi varigal arumai

Athammohamed on March 24, 2011 at 11:26 AM said...

super thala...nice as usual.

தனுசுராசி on March 24, 2011 at 11:44 AM said...

வைகோவை வாரியதால் தான் ஒரு மைனஸ் ஒட்டுன்னு நினைக்குறேன்.

 

all rights reserved to www.karkibava.com