Feb 28, 2011

நீங்க பேர்டாண்ணே?


 

  சென்ற வாரம் பதிவர் சந்திப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்தேறியது. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் இயக்குனர் சீனு இராமசாமி கலந்துக் கொண்ட இச்சந்திப்பு வழக்கமான சந்திப்பாக இல்லை. ஏன் என்பதை கடைசியில் பார்ப்போம். சீனு பேசும்போது பதிவர்கள்தான் முதலில் அவர் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் தந்ததாக குறிப்பிட்டார். அதுவும் உண்மைத்தமிழன் “காவியம்” என சொல்லியிருந்ததாக பெருமைப்பட்டார். அவர் இனிது இனிது படத்தைக் கூட அப்படித்தான் சொன்னார் என பின்வரிசையில் இருந்து ஒரு குரல் வந்தது. பதிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இச்சந்திப்பை திட்டமிட்டதாக சொன்னார் சீனு. படம் வெற்றி என்பதை உறுதி செய்த அவருக்கு வாழ்த்துகளையும், பதிவர்களை உற்சாகமூட்டும் விதத்தில் நேரில் வந்து பேசியதற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வோம். இனி சந்திப்பில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்.

வழக்கம் போல் அறிமுக உரையை வழங்க பதிவர் சுரேகா மைக்கை பிடித்தார். மைக் லேசாக நடுங்குவதை பார்த்த ஒருவர் “எல்லா நிகழ்ச்சியிலும் இவர்தானே முதல்ல பேசுறார். அப்புறமும் ஏன் கை நடுங்குது” என்றார். பின் வரிசையில் அவர் அருகில் இருந்தவர் பதில் சொன்னார் “அட அது கை நடுக்கம் இல்லைங்க. ஆஹா இவனான்னு மைக் நடுங்குது”. கேள்விக்கேட்டவர் பின்வரிசை நபரிடமிருந்து சில இருக்கைகள் தள்ளியே அமர்ந்துக் கொண்டார்.

அடுத்த நிகழ்வாக வந்திருந்தவர்கள் சுய அறிமுகம் செய்து கொண்டார்கள். முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து நின்று “என்னை எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்” எனத் தொடங்கினார். ”எழுந்து நின்னா எல்லோருக்கும் தெரியும்தான். பேர சொல்லுங்க” என பின்வரிசையில் இருந்து குரல் வந்தது. வழிந்தபடி ஏதோ ஒரு பெயர் சொன்னார் அந்த “பிரபல” பதிவர். நிறைய ”பஸ்” (Google Buzz) ஓனர்களும் வந்திருந்தார்கள். சர்க்கஸ் சிங்கம், அஞ்சா சிங்கமென சில சிங்கங்களும் வந்திருந்தார்கள். ஏனோ பெண் சிங்கம் மட்டும் வரவில்லை. வலையில் திமுகவிற்கு ஆதரவு குறைவு என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது என்றால் லக்கி பொங்கிவிடுவார். அதனால் விட்டுவிடுவோம்.

அடுத்து இயக்குனர் பேசினார். சில பதிவர்கள் விமர்சனம் என்ற பெயரில் ஈவு இரக்கமின்றி எழுதித் தள்ளுவதை குறையாக சொன்னார். பதிவர்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் துடிக்க வேண்டாமா? அந்த பின் வரிசை கலகக்காரருக்கு துடித்தது. “படம் எடுக்கிறவங்களும் ஈவு இரக்கமில்லாமதானே எடுக்கிறாங்க? பார்க்கிறவங்க நிலைமைய கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?” என்றார் புரட்சி வீரர். சிரிப்பையே பதிலாக தந்த சீனு கடைசியாக ஆம் என ஒத்துக் கொண்டார். வாழ்க பதிவர்கள். வாழ்க அந்த புரட்சி வீரர்.

தென்மேற்கு பருவக்காற்று வெளிவருவதில் இருந்த சிக்கல்கள் குறித்து கவலைப்பட்டார் சீனு. தியேட்டர்காரர்கள் படம் பிக்கப் ஆகும்வரை ஓட்டுவதில்லை என்றார். 25 ஆம் நாள் போஸ்டர் அடித்த பின் பார்த்தால், 24ஆம் நாள் படத்தை எடுத்துவிட்டார்களாம். இதையும் கிண்டலடித்து ஏதோ சொன்னார் பின்வரிசைக்காரர். ஏன் சார் டைரக்டர ஓட்டுறீங்க என ஒரு பதிவர் அவரிடம் வினவ, “அவர்தான் சார் ஓட்ட மாட்றாங்கன்னு கவலைப்பட்டாரு” என பதிலளித்தார் கலகக்காரர். கப்சிப் கமரக்கட்டு ஆனால் வினவியவர்.

அடுத்தப் படம் குறித்தும் பேசினார் சீனு. “நீர்பறவை” என்று பெயர் வைத்திருக்கிறார். குடிகாரர்(ர்ர்ர்) ஒருவரை பற்றிய படமாம். பதிவர்களிலே பல ஹீரோக்கள் இருப்பதாக முன்வரிசையில் யாரோ சொல்ல,தண்டோராவின் பெயருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.  நானும் புதுமுகங்களையே விரும்புகிறேன் என்றார் சீனு. “எங்கள குடிக்க வைக்கலாம். ஆனா நடிக்க வைக்க முடியாது” என்றார் பின்வரிசைக்காரர். அதன்பின் சீனு பேசும் போதெல்லாம் அந்த தொப்பிப் போட்ட பின்வரிசைக்காரரை கவனித்தபடியே பேசினார்.

நீர்ப்பறவைக்கு “ப்” போடாமல் நீர்பறவை என்றே அச்சடித்திருக்கிறார்கள். இயக்குனரின் மனைவி தமிழ் ஆசிரியையாம். இரவு 11 மணிக்கு இதை தவறென தலையில் குட்டியிருக்கிறார். “ப்” போட்டே ஆகணும். இல்லையென்றால் நீரும் பறவையும் என ஆகிவிடுமென எச்சரித்திருக்கிறார். “ப்” போடலாம். ஆனா “இப்பவே” போட முடியாது இல்லையா என்றார் மீண்டும் பின்வரிசைக்காரர். நீர்பறவைக்கு ”நீங்கள் பறவை” என இன்னொரு அர்த்தமும் அவையில் சொல்லப்பட்டது. எழுந்து நின்று தண்டோராவைப் பார்த்த பின்வரிசைக்காரர் “நீங்க பேர்டாண்ணே” என்றார்.

கடைசி கேள்வியாக சீனுவிடம் பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பீர்களா என கேட்கப்பட்டது. சிறுபடங்கள் மட்டுமே எடுக்க விரும்புவதாக அவர் சொன்ன பதிலை கேட்காத இன்னொருவர் “விஜய் கால்ஷீட் கிடைச்சா அவர வச்சு படம் எடுப்பீங்களா?” என்றார். பின்வரிசைக்காரர் தொப்பியோடு எழுந்து நின்று திரும்பி பார்க்க கேள்வி கேட்டவர் டர் ஆகி சொன்னார் “சாரி.சகா நீங்க இருக்கிறத கவனிக்கல”

_______________________

முதல் பத்தியில் சொன்ன விஷயம் இதுதான். இது போன்ற சிறப்பு விருந்தினர்கள் வந்தால் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது. அவர் பேசும்போது எல்லோரும் இருக்கையில் அமர்ந்து அவர் ஆற்றும் சொற்பொழிவை கேட்க வேண்டியிருக்கிறது. பதிவர் சந்திப்பு என்பதே சுவாரஸ்யமான உரையாடல்களால்தான் எனக்கு பிடித்திருக்கிறது. அதை தகர்க்கும்படி பாதி டிஸ்கஷனில் மேல போங்க என்று தள்ளினால் ஒரு மாதிரி இருக்கிறது. வந்திருக்கும் சிறப்பு விருந்தினரை மதிக்க வேண்டும் என்றாலும் அதற்காக நம் சந்தோஷத்தை விட்டு தர முடியுமா? எனவே பதிவர் சந்திப்பை எந்த சிறப்பு விருந்தினர் வருகையோடும் சேரத்து வைக்காதீங்க. என்னால் தொப்பியை போட்டுக்கிட்டு கம்முன்னு கடைசி வரைக்கும் வாயை மூடிக்கிட்டு உட்கார முடியாது.

சீனு சொன்ன முக்கியமான விஷயம், நல்ல புராடக்ட் என்றாலும் விளம்பரம் அவசியம். உண்மைதான். இந்தாங்க. தென்மேற்கு பருவக்காற்று பற்றிய என் பார்வையை படிக்க இங்கே அழுத்துங்க.

________________

தொப்பி போட்ட பின்வரிசைக்காரரின் புகைப்படம்.

Valaimanai Tamil Bloggers Meet 5

10 கருத்துக்குத்து:

sriraj_sabre on February 28, 2011 at 11:42 PM said...

அந்த தொப்பிப் போட்ட பின்வரிசைக்காரர் ரொம்ப அறிவாளினே!!

மாணவன் on March 1, 2011 at 5:58 AM said...

//அந்த தொப்பிப் போட்ட பின்வரிசைக்காரர் ரொம்ப அறிவாளினே!!//

இவரு யாருன்னு புரிஞ்சுடுச்சு... :))

எல் கே on March 1, 2011 at 7:48 AM said...

அந்த தொப்பிக்காரரைதான் தேடிக்கிட்டு இருந்தேன்,,. இப்ப கிடைச்சிட்டார்

adada on March 1, 2011 at 11:46 AM said...

pathivar santhippin bathippukkalai kothu parottavil(cable sankar) ennudaya (adada)commentil kanalaaam.

கார்க்கி on March 1, 2011 at 12:09 PM said...

ராஜ், க‌ரெக்டா சொன்னீங்க‌

மாண‌வ‌ன், நீ ஷார்ப் த‌ம்பி

எல்.கே, ந‌ன்றி "பிர‌ப‌ல‌" ப‌திவ‌ரே..ஹிஹிஹி :))

அட‌டா, க‌ல‌க்குறீங்க‌ பாஸ். க‌மென்ட்டெல்லாம் ப‌டிச்சு புல்ல‌ரிச்சு போயிட்டேன். ஒருத்த‌ர் பேசுற‌ப்பா எழுந்து வெளிய‌ போற‌து எல்லாம் ச‌பை நாக‌ரீக‌மா? க‌ரெக்டா சொன்னீங்க‌. உங்க‌ள‌ மாதிரி ஒருத்த‌ர‌தான் வ‌லையுல‌க‌ம் எதிர்பார்க்குது. ச‌க்க‌ர‌ சுரேஷ், சக்திவேல் போன்ற‌ பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் ஹிஸ்ட‌ரியை கொஞ்ச‌ம் தெரிஞ்சு வ‌ச்சிக்கோங்க‌. உத‌வியா இருக்கும்

அமுதா கிருஷ்ணா on March 1, 2011 at 12:09 PM said...

தொப்பி நல்லாயிருக்கே..

adada on March 1, 2011 at 12:31 PM said...

pathivar santhippin enadu aadangalai kothu parottavil (cable sankar) pathivu seithu irukkiren... varungal ondru kooduvom.
jayavel9840398398

adada on March 1, 2011 at 12:40 PM said...

anne neengale sollunga yar andha chakkar suresh matrum sakthi vel, romba bayangaramanavargala, etho mirattal mathiri theriyudhu..

நிலவு on March 1, 2011 at 7:33 PM said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html

பட்டது போதுமா ! பழ நெடுமாறா !

உமா கிருஷ்ணமூர்த்தி on March 4, 2011 at 10:02 PM said...

அந்த தொப்பிகாரர் தாங்கள் தானோ ?

 

all rights reserved to www.karkibava.com