Feb 15, 2011

வாழ்க வாழை


 

  டியூஷன் சேர  நுழைவுத்தேர்வு எழுதியதுண்டா நீங்கள்? என் பள்ளித்தோழர்கள் எழுதியிருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் காலரைத் தூக்கிக் கொண்டு நடந்திருக்கிறார்கள். சில பெற்றோர்கள் இதற்கு “ட்ரீட்” எல்லாம் தந்திருக்கிறார்கள். பாஸாகாத மாணவர்கள் பொதுத்தேர்வில் தோற்றது போல் அழுதிருக்கிறார்கள். நல்லவேளையாக யாரும் தற்கொலைக்கு முயன்றது இல்லை. அட நெசமாத்தாங்க. நான் படித்தப் பள்ளியில் நாகராஜன் என்றொருவர் இருந்தார். திறமையான ஆசிரியர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரிடம் சேர்ந்தால் நல்ல மதிப்பெண்கள் நிச்சயம் என்ற நம்பிக்கையே மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம். 90 மார்க் எடுக்கும் மாணவன் அவரிடம் சேர்ந்தால் 95 எடுப்பான். 95 எடுப்பேன் என்பீர்களேயானால் 100 அடிக்க வைப்பார். எவ்வளவு முயன்றாலும் 100க்கு மேல் முடியாது என்பதால் என்னைப் போன்ற ஆட்கள் அவரிடம் சேர்வதில்லை. அவரின் இலக்கு நன்றாக படிக்கும் மாணவனை இன்னும் செதுக்கி சிறந்த மாணவனாக்குவது. அந்த ”நன்றாக படிக்கும்” மாணவர்களை தேர்ந்தெடுக்கத்தான் நுழைவுத்தேர்வு. இதுவும் ஒரு வித  கல்விச்சேவைதானே?

image

அப்பா, அம்மாவின் அக்கறையில் 90 மதிப்பெண் எடுப்பவனை சதமடிக்க வைத்து எழுதிய பேனாவை தூக்கிக் காட்ட வைக்க நாகராஜன்கள் இருக்கிறார்கள். நல்ல விஷயம். ஆனால் தங்கள் வம்சத்திலே பள்ளிக்கு செல்லும் முதல் தலைமுறை மாணவர்களை 90 எடுக்க வைக்க உதவ யாராவது வேண்டாமா? அல்லது படித்தவர்கள் வீட்டில் இருந்தாலும் பணரீதியான, சமூக ரீதியான பிரச்சினைகளால் தவிப்பவர்களை கரையேற்ற ஒரு பரிசல் வேண்டாமா? ”வாழையடி வாழையாக” என்பார்களே! அது போல வளர்ந்த மரம் இன்னொன்றை உருவாக்கினால் அழகுதானே? அதைத்தான் செய்கிறார்கள் மேலே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் நல்லவர்கள். முட்டிமோதி ஓரளவிற்கு நன்றாக படித்து இப்போது நல்ல நிலையில் இருக்கும் முதல் தலைமுறை வெற்றியாளர்கள் இவர்கள். “அன்பில் செழித்த உறவு.. இது தலைமுறை தாண்டிய கனவு” என்ற இலக்குடன் பயணிக்கும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கு ”வாழை” என்ற பெயரையே பொருத்தமாக வைத்திருக்கிறார்கள். வெற்றித் தோல்விகளை பிரதானப்படுத்தாமல் முயற்சியை மட்டுமே முன்னெடுத்து செல்கிறார்கள். கல்வியின் புரிதலை தருவதும் அதை சார்ந்த முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதும் தான் வாழையின் அடிப்படை. மேலும் நாம் அனைவருக்கும் நம் கல்வி திட்டத்தின் மேல் இருக்கும் வருத்தம்... வாழ்க்கைக்கு தேவையான கல்வியை (வாழ்க்கை கல்வி)   அது தரவில்லை என்பது தான். வாழை இதை தருகிறது

  6-10வது படிக்கும் மாணவர்களை தத்தெடுத்துக் கொள்கிறார்கள். இந்த மாணவர்களை Wards என்கிறார்கள். ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு Mentor இருப்பார். வருடத்திற்கு ஆறு முறை நடக்கும் workshopல் இவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். அது தவிர கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பேசிக் கொள்கிறார்கள். படிப்பில், மட்டுமல்ல அந்த மாணவனுக்கு வரும் எந்த சந்தேகத்தையும் Mentorயிடம் கேட்கலாம். Mentorன் வேலை அந்த மாணவனை படிப்பில் சிறக்க வைப்பது மட்டுமல்ல தன்னம்பிக்கையை வளர்ப்பது, Communication skillஐ செம்மையாக்குவது, இந்தப் போட்டி உலகை போட்டி போட்டு சமாளிப்பது என சகல விதத்திலும் மாணவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

”அன்புள்ள கார்க்கி அண்ணணுக்கு,

மணி எழுதுவது. எப்படி இருக்கீங்க? நான் போன வாரத்த விட இப்ப ரொம்ப நல்லா, சந்தோஷமா இருக்கேன். இங்க நடந்த பேச்சுப் போட்டில நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி பேசி முதல் பரிசு வாங்கிட்டேன். யார் எழுதி தந்தாங்கன்னு கேட்டாங்க. இது எழுதி மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்கல. கார்க்கி அண்ணன் சொன்னத வச்சு நானே புரிஞ்சு, பேசினேன்னு சொன்னப்ப ஒரே கைத்தட்டல். எனக்கு ரொம்ப பெருமையா, சந்தோஷமா இருக்கு. இந்த வருஷம் எப்படியும் நான் முதல் மார்க் வாங்கிடுவேன்.

உங்க ஆஃபீஸ் எப்படியிருக்கு? புதுசா ஒரு புராஜெக்ட்ன்னு ஃபோன்ல சொன்னீங்களே. ஆரம்பிச்சிடீங்களா? வேலைலே முழுசா இருக்காம உடம்ப பார்த்துக்கோங்கண்ணா.

அன்புடன்,
மணிகண்டன்.

இப்படி ஒரு கடிதம் நமக்கு வந்தால் எப்படி இருக்கும்? வாழையின் மாணவர்கள் பலரின் பெற்றோர்கள் தினக்கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள். அல்லது சூழ்நிலை காரணமாக உறவினர்களின் வீட்டில் தங்கி படிக்கும் மாணவர்கள். அதாவது அவர்களுக்கு மனம் விட்டு பேச ஒரு உறவு வேண்டி இருப்பவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் வாழையின் சேவை பெரிதும் உதவுகிறது. கல்வி மட்டுமின்றி, அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு முக்கிய உறவும் வாழை மூலம் கிடைக்கிறது

நம்ம வாழ்க்கைல நம்மளுக்காக நேரம் ஒதுக்கினவங்கள  மறக்க முடியாது. அப்படிப்பட்ட நேரம் நம்மளோட அடுத்த தலைமுறைக்கு அவசியம்.  நான் இன்னிக்கு சுயமா யோசிச்சு முடிவு எடுக்குறேன்னா அதுக்கு காரணம் என்னோட கல்வியும் எனக்கு கிடைச்ச வழிகாட்டுதலும் தான்... எனக்கு கிடைச்ச வழிகாட்டுதல  என்னோட அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பையும் கடமையும் உணர்ந்து தான் நான் என்னை வாழைல இணைச்சுக்கிடேன்” பெருமை பொங்க சொல்கிறார் திவ்யா. இவர் வாழையில் மூன்று வருடங்களாக சேவை புரிகிறார்

“இந்த சமூகத்திடம் நான் வாங்கிய கடனை அடைக்க இது ஒரு வழியா பார்க்கிறேன். என் கண்காணிப்பில் வளரும் மாணவன் நாளைக்கு இந்த சமூகத்துக்கு இன்னும் பல நன்மையை செய்வான். அப்போ விதை நான் போட்டதுன்னு பெருமையா தேவர் மகன் சிவாஜி மாதிரி சொல்வேன் என்று சிரிக்கிறார் இன்னொரு மெண்ட்டர்.

வாழை 2005 ல் தொடங்கப்பட்டது. வாழையின் நிறுவனர்களும் முதல் தலைமுறையாக கல்வியின் சுவையை ருசித்தவர்கள்தான். இங்கே இருக்கும் mentorகள் பலரும் அப்படித்தான். அதனால் மாணவர்களை நன்றாக புரிந்துக் கொள்கிறார்கள். அதே சமயம் தங்கள் கடந்து வந்த பாதையை அவ்வபோது மாணவர்கள் வடிவில் நினைவு கூர்வதால் வெற்றி அவர்களின் தலையில் ஏறுவதில்லை.

  முக்கியமான பிரச்சினைக்கு வருவோம். வாழையில் ஒவ்வொரு மாணவனுக்கும் பிரேத்யேகமாய் ஒரு வழிகாட்டி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கேற்ற எண்ணிக்கையில்தான் மாணவர்களை சேர்க்கிறார்கள். ஆனால் திருமணம், இடம் மாற்றம் போன்ற சில காரணங்களால் சில பெண் வழிகாட்டிகள் விலக நேர்ந்ததால் தற்போது ஒருவரே 4, 5 மாணவர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை.  வழிகாட்டிகள் கிடப்பதுதான் இவர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். உதவ தயாராக இருப்பவர்கள் இங்கே க்ளிக்குங்கள். உங்களின் ஒரு க்ளிக் யாரோ ஒருவருக்கு வாழ்க்கையை கொடுக்கப் போகிறது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

_________________________________________________________________________

இது அதீதம் என்ற இணைய இதழில் வெளிவந்த கட்டுரை. மேலும் “கண்ணா…லவ் பண்ண ஆசையா” என்ற காதலர் தின சிறப்புக் கட்டுரையும் வெளிவந்திருக்கிறது. அதைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

15 கருத்துக்குத்து:

மோகன் குமார் on February 15, 2011 at 10:19 PM said...

மீ தி பஸ்ட்டு

படிக்கலை இன்னும். படிசிடுறேன் ஓகே ?

King Viswa on February 15, 2011 at 10:22 PM said...

மிகவும் நல்ல விஷயம் இது. நானும் என்னுடைய தலைமுறையில் முதல் தலைமுறை கிராஜுவேட். உதவ முயல்கிறேன்.

தகவலுக்கு நன்றி.


கிங் விஸ்வா
இன்று ரிலீஸ் ஆன இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

SK on February 15, 2011 at 11:49 PM said...

அருமை சகா!!! வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாழை குழுவை சேர்ந்த அனைவருக்கும்!!

மாணவன் on February 16, 2011 at 5:45 AM said...

உயரிய நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கபட்ட அருமையான முயற்சி வாழையின் இந்த உழைப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்...

வாழை வாழையடி வாழையாய் மென்மேலும் செழிக்க வாழ்த்துக்கள் :)

"ஸஸரிரி" கிரி on February 16, 2011 at 8:18 AM said...

மிகவும் நல்ல விஷயம் சகா!

மோகன் குமார் on February 16, 2011 at 8:49 AM said...

கார்க்கி நாங்களும் துணை என்கிற அமைப்பின் மூலம் இதே போன்ற உதவிகள் செய்கிறோம். www.thunai.org என்ற முகவரியில் பார்க்கவும்.

மிக நல்ல விஷயம். இப்படியும் எழுதுங்கள். உங்களை போன்றோர் எழுதினால் நிறைய பேரை சேரும்

தராசு on February 16, 2011 at 9:19 AM said...

வாழ்த்துக்கள் தல,

இன்னும் மழை பெய்வதின் காரணம் இதுதான்

பிரதீபா on February 16, 2011 at 2:49 PM said...

//'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
-பாரதி//

முகப்புல சரியா தான் போட்டிருக்காங்க.. என்னால் இங்கிருந்து ஏதேனும் உதவி செய்ய முடியுமாவென கேட்டிருக்கிறேன்.
வாழை-நிச்சயம் பலன் தரும்.

நன்றி கார்க்கி.

அன்புடன் அருணா on February 16, 2011 at 3:16 PM said...

பூங்கொத்து கார்க்கி!

கனாக்காதலன் on February 16, 2011 at 5:33 PM said...

சிறந்த பகிர்வு. நன்றி.

ஷர்புதீன் on February 16, 2011 at 7:50 PM said...

:)

கயல் on February 17, 2011 at 12:08 AM said...

மிகவும் அருமை கார்க்கி. வாழ்த்துக்கள்!

பா.ராஜாராம் on February 24, 2011 at 12:48 PM said...

அருமை சகா! (தானா வருது) :-)

வாழ்த்துகள் வாழை! பகிர்வுக்கு நன்றி கார்க்கி!

உமா கிருஷ்ணமூர்த்தி on February 26, 2011 at 3:58 PM said...

//வாழை வாழையடி வாழையாய் மென்மேலும் செழிக்க வாழ்த்துக்கள் ://


நான் இதை வழி மொழிகிறேன் .

deepak on May 17, 2012 at 11:15 PM said...

அருமையான பதிவு .. இனி இந்த தலைமுறை "சுயநல தலைமுறை " என்ற சொல்லை நிக்குவோமாக .. நானும் ஒரு வாழை அமைப்பில் ஒருவன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் ..

 

all rights reserved to www.karkibava.com