Feb 13, 2011

பயணம்.. இவ்ளோ வேகம் கூடாது


 

பயணம் எனக்கு எப்போதும் பிடித்தமானதாகவே இருக்கிறது. பணம், பயம், பணயம் என அது தொடர்புடைய வார்த்தைகள் பயணத்திலே ஒளிந்துக் கொண்டிருக்கிறது. இது நான் எங்கேயோ படித்ததா அல்லது என் தக்குனூண்டு மூளையில் உதித்ததா என்பது இப்போது முக்கியம் இல்லை.. நாம் பயணம் திரைப்படம் குறித்து பேசப்போகிறோம். இரண்டரை மணி நேரம் கட்டிப் போட்டு ஒரு Virtual travel அழைத்துச் சென்ற ராதாமோகன்&டீமை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது இந்த பயணம்.

சென்னை –தில்லி விமானத்தை கடத்தும் தீவிரவாதிகள், தங்களது தலைவனை விடுதலை செய்ய சொல்கிறார்கள். விமானம் பழுதாகி திருப்பதியில் தரையிறக்கப்படுகிறது. உள்ளே இருக்கும் 100 பேரின் பயணம் இப்போது பணயம் வைக்கப்படுகிறது. தலைவனோடு 100 கோடி பணமும் கேட்கிறார்கள். பயணிகளின் பயம் நம்மையும் தொத்திக் கொள்ள, திரைக்கதை வேகமெடுக்கிறது. நாலாவது ரீலில் கதை டேக் ஆஃப் ஆகும்போது எனது சீட் பெல்ட்டை சரிபார்த்துக் கொண்டேன். தேவி தியேட்டர் சீட்டில் பெல்ட் ஏது? ராதாமோகனின் வெற்றியது. அந்தக் காட்சியில் கைத்தட்டினார்கள் என்று யாரும் இயக்குனரிடம் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் எனக்கு ஒவ்வொரு ரீலின் முடிவிலும் கைத்தட்டல்கள் கேட்டவண்ணம் இருந்தது.

விமானத்தின் உள்ளே நடக்கும் சம்பவங்கள், தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்க பிரதிநிதிகளின் நடவடிக்கைகள், வெளியே மீடியா செய்யும் களேபரங்கள். இந்த மூன்றும்தான் கதைக்களம். சற்று உன்னைப் போல் ஒருவனை நினைவுப்படுத்தினாலும் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் நகைச்சுவை படத்தைத் தணித்துக்காட்டுகிறது.

படம் தொடங்கியவுடன் விமானத்தில் ஏறும் பயணிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் காட்டப்படுகின்றன. நடிகராக வரும் பப்லுவின் பெயரைத் தவிர மீதிப் பெயர்கள் தேவையற்றவை. அதனால்தானோ என்னவோ ஆங்கிலத்தில் இருக்கின்றன. பயணத்தின் போது சக பயணிகளை உற்று கவனிக்கும் பயணியாக நீங்கள் இருந்தால் இந்த பயணம் உங்களின் அதி முக்கிய பயணமாக இருக்கக்கூடும். முடிந்தவரை ஒவ்வொரு பாத்திரத்தையும் அர்த்தத்தோடும் அழகியலோடும் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதற்கான நடிகர்களை தேர்ந்தெடுத்து தனது முத்திரையை மிக அழுத்தமாக பதித்திருக்கிறார்.

[payanam1[11].jpg]

பாதிரியராக வரும் எம்.எஸ்.பாஸ்கரை இனியும் பட்டாபி என அழைக்க முடியாது. கடத்தப்பட்ட விமானத்தில் பயத்தின் உச்சியில்  அனைவரும் இருக்கும்போது கடத்தல்காரர்களிடம் பைபிள் வாசிக்க அனுமதி வாங்கி படிக்குமிடத்தில் தொடங்குகிறது ஃபாதரின், மன்னிக்க, பாஸ்கரின் நடிப்புப் பயணம். ”இங்கு இருக்கும் எல்லோருக்கு கடமை இருக்கு. குடும்பம் இருக்கு. எனக்கு தேவன் மட்டுமே. ஊழியம்தான் என் கடமை. அதனால் அடுத்து யாரையாவது கொல்லணும்ன்னா என்னை கொல்லுங்க” என்னும் போது அதுவரை கைத்தட்டி களைத்த அரங்க செய்வதறியாமல் திகைக்கிறது. படம் முடியும் போது எல்லாப் பயணிகளும் கலைந்து சென்றுவிட்ட பின் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களின் அருகில் ஜபித்துக் கொண்டிருக்கிறார் ஃபாதர். My heart skipped a beat என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஹேட்ஸ் ஆஃப் ஃபாதர்.

டீலா நோ டீலா ரிஷிக்கு இப்படி நடிக்கத் தெரியுமா? பக்கத்து சீட் சனாகானிடம் கடலைப் போடும் மன்மதனாய் அறிமுகமாகிறார் இந்த டாக்டர். ஆம்.என்ன டாக்டர் என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

நேர்முகத்தேர்வுக்காக தில்லிக்கு செல்பவராக வருகிறார் குமரவேல். இரண்டு நாட்களாய் சுத்தப்படுத்தாமல் இருக்கும் கழிவறைக்காக கடத்தல்காரர்களிடம் மல்லுக்கு நிற்கிறார். கக்கூசுக்கும் காஷ்மீருக்கும் என்னய்யா தொடர்பு என்ற அவர் கோபம் நியாயமானது. தங்கள் தலைவனை விடுவிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுவிட்டதால் நாளைக்கு நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள் என்ற செய்தி கேட்டு அனைவரும் கைத்தட்டுகிறார்கள். அப்படியே கழிவறையையும் சுத்தப்படுத்த ஆள் வருவார்கள் என்றபோது குமரவேல் மட்டும் கைத்தட்டுகிறார். யாருக்கும் நேராத ஒன்று அவருக்கு மட்டும் நேர்கிறது. என்னவென்று படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். அவரின் பக்கத்து சீட் ஜோதிடராக மனோபாலாவும் கச்சிதம்.

ஷைனிங் ஸ்டார் சந்திரகாந்தாக பப்லு. அவரின் ரசிகராக சாம்ஸ். தன் ஆதர்ச நாயகன் திரையில் செய்வதை நிஜத்திலும் செய்து காப்பாற்றுவார் என்று சாம்ஸ் நிம்மதி பெரு மூச்சு விடுகிறார். ஆனால் ஷைனிங் ஸ்டாரோ கரப்பான்பூச்சிக்கு பயந்து காலை மேலே தூக்கிக் கொள்கிறார். உற்று கவனிக்கையில் இயக்குனர் சந்திரகாந்த்தை கிண்டலடிக்கவில்லை.  அதை நிஜமென நம்பி ஏமாறும் ரசிகனையே கலாய்த்திருக்கிறார். ஆனால் தியேட்டர் என்னவோ இது அஜித். இது விஜய். அந்த டயலாக் விஜய்காந்த் என நம்பி ஏமாறிக் கொண்டுதான் இருந்தது.  “பதுங்குனா சைலண்ட் பாய்ஞ்சா வயலண்ட்”, “தாய்க்கு ஒண்ணுன்னா ஆம்புலன்ஸ கூப்பிடுவேன். தாய்நாட்டுக்கு ஒண்ணுன்னா நானே ஓடுவேன்” என்ற சந்திரகாந்த் பன்ச்களை சொல்லிவிட்டேன் என்று நினைக்க வேண்டும். இது போல பல அதிரடிகள் படம் முழுக்க வருகிறது.

இவர்களை காப்பாற்றும் கமோண்டாவாக நாகர்ஜூனன். பேச்சுவார்த்தை நடத்துபவராக பிரகாஷ்ராஜ். நாகர்ஜூனன் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அப்படியென்ன செய்தார் என்று கேட்டால் எதுவும் சொல்லமுடியவில்லை. அடக்கி வாசித்திருப்பதை பாராட்டுவது சரியா என்ற சந்தேகம் காரணமாயிருக்கலாம். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல்  ஆங்கிலத்தில் கோவப்படுகிறார்.

இருக்கும் மற்ற பாத்திரங்கள் குறித்தும் எழுதிக் கொண்டே போகலாம். ஒரு கதையில் இத்தனை பேர் மனதில் நிற்க முடியுமா என்ற ஆச்சரியம் அடங்க சில நாட்களாவது நிச்சயம் ஆகும்.

விஜியின் வசனம் மொழியின் வெற்றிக்கு முக்கிய காரணமென்பேன். இதில் விஜிக்கு மாற்றாக த.செ.ஞானவேல். பிரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை தொடருக்கு (விகடன்) ரசிகன் நான். அதன் எழுத்தாக்கம் த.செ. ஞானவேல் தான். பல இடங்களில் தியேட்டர் கைத்தட்டுகிறது இவரது வசனத்திற்கு. சில இடங்களில் கண்டுக்கொள்ளாமல் வீணாகிறது. உதாரணத்திற்கு சில.

“அப்போ யூசுஃப் கானை ரிலீஸ் செய்ய போறாங்களா” என்கிறார் நாகர்ஜூன்.  “இல்லை பயணிகளை” என்கிறார் பிரகாஷ்ராஜ். யாருக்கு யார் முக்கியம் என்பதை சொல்ல பக்கங்களோ, ரீல்களோ தேவைப்படவில்லை. ஒரு கேள்வி. ஒரு பதில் போதுமானதாயிருக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து சிகிச்சைக்கு வந்த குழந்தை மீது சிநேகமாகிறான் ஒரு தீவிரவாதி. அவனிடம் குழந்தை சென்னை டாக்டர்கள் நல்லாத்தானே பார்த்துக்கிட்டாங்க என்கிறது. எல்லா டாக்டர்களுமே நல்லவங்கதான் என்கிறான் தீவிரவாதி. அப்போ நீயும் டாக்டராயிருக்கலாம் என்ற குழந்தையின் பதிலில் தீவிரவாதியே கலங்கும் போது….

பேசிக் கொண்டேஏஏஏஏ இருக்கும் வயதான ஐ.ஏ.எஸ்களிடம்  கோவத்தில் சொல்கிறார் நாகர்ஜூன் “You are just old. Not experienced”

இது என்ன புனிதப்போர் என்று விளக்கும் தீவிரவாதி சொல்கிறான் “மூணு நாளாச்சு. எல்லா பெண்களும் பத்திரமாயிருக்காங்க. உங்க போலீஸ் ஸ்டேஷனிலோ, ஆர்மிக்காரங்ககிட்டயோ மாட்டியிருந்தா மூணு நாளில் என்னாயிருக்கும் தெரியுமா”. உண்மையில்லை என்று மறுக்க முடியாமல் இருக்கிறது நம் தேசத்தின் வரலாறு.

இன்னும் பல இடங்களை சொல்லலாம். பேனா எடுத்து குறிப்பெடுத்துக் கொள்ள திரைக்கதை இடமளிக்கவில்லை. ஓடிக் கொண்டேயிருக்கிறது. இப்பதிவின் தலைப்பு அதை குறிக்கும் வகையில்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

எழுதும் போதே ஏர் ஹோஸ்டசின் அபாரமான நடிப்பைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கிறது மனது. அப்படியென்றால் தலைவாசல் விஜய் என நீண்டுக் கொண்டே போகும். படம் பார்த்து ரசித்துக் கொள்ளுங்கள்

குகனின் கேமரா விமானத்தில் உள்ளிருந்து தீவிரவாதிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நைசாக னாகர்ஜூன் அறைக்கு தாவுகிறது. எந்த இடத்திலும் உறுத்தாமல் செவ்வனே நம்முடன் பயணிக்கிறது கேமரா. பிண்ணணி இசை பெரிதாய் ஈர்க்கவுமில்லை. சொதப்பவுமில்லை. குறைகள் என்று பார்த்தால் கடத்தப்பட்ட உணர்வே இல்லாமல் பாத்திரங்கள் அடிக்கும் சில நகைச்சுவைகள், டப்பிங் சிங் ஆகாதது, 5 நாள் கதையில் 50 உடையில் வரும் நாகர்ஜூன் போன்றவற்றை கூறலாம்.

இரவுக்காட்சி பார்த்துவிட்டு வந்து நள்ளிரவு 2 மணிக்கு இதை தட்டச்சிக் கொண்டிருப்பதை ராதாமோகனுக்கு நான் தரும் பரிசாக நினைக்கிறேன். நிச்சயம் நீங்கள் சாதாமோகன் இல்லை சார். இனிவரும் உங்கள் படங்களை முதல் நாளே பார்ப்பேன் என்ற உறுதிமொழி தருகிறேன்.

14 கருத்துக்குத்து:

ஆதிமூலகிருஷ்ணன் on February 13, 2011 at 2:29 AM said...

2 மணிக்கு இதை தட்டச்சிக் கொண்டிருப்பதை ராதாமோகனுக்கு நான் தரும் பரிசாக நினைக்கிறேன்.//

இதற்கு 2.30 மணிக்கு முதல் பின்னூட்டமிடுவது ராதாமோகனுக்கு நான் தரும் பரிசு. :-)) A worthy film.!

கலாநேசன் on February 13, 2011 at 6:45 AM said...

அட... அதிகாலை எழுந்து ஆறரை மணிக்கு படித்ததும் நான் தரும் பரிசு என்று சொல்லலாமா?

படம் பார்க்கத் தூண்டும் இனிய விமர்சனம்.

நல்ல வேகம் படத்தில்...இந்தப் பதிவிலும்...

King Viswa on February 13, 2011 at 8:56 AM said...

கொஞ்சம் டிராமா இருந்தாலும் ரசிக்க வைக்கும் வித்தியாசமான படம்.
கொஞ்சம் லேட்டா வந்தாலும்கூட, காலையில ஒம்பது மணிக்கு எல்லாம் சண்டேல நான் எழுந்து கமென்ட் போடுறேன்.

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

மகேஷ் : ரசிகன் on February 13, 2011 at 9:32 AM said...

கெளப்புறா கெளப்புறா தம்பி.. என்சாய்....

அன்புடன் அருணா on February 13, 2011 at 10:09 AM said...

அய்யோ உடனே பார்க்கணுமே!

பாலா on February 13, 2011 at 11:48 AM said...

ஆமாம் நண்பரே. மிக அருமையான படம். இந்த படம் பார்த்த என் அனுபவத்தையும் கொஞ்சம் பாருங்களேன்.http://lifeisbeautiful-bala.blogspot.com/2011/02/blog-post_13.html

கார்த்தி on February 13, 2011 at 3:40 PM said...

Konjam Drama irunthalum... it was interesting

Anonymous said...

உணர்ச்சி வசப்பட்டு படத்தில் ரசிக்க கூடிய நல்ல நல்ல காட்சிகளையெல்லாம் அவுத்து விட்டீங்களே. நியாமா ?

காவேரி கணேஷ் on February 13, 2011 at 5:38 PM said...

அருமையான விமர்சனம்.

Nataraj on February 13, 2011 at 8:29 PM said...

சண்டே காலைல நேரங்கெட்ட நேரத்துல (ஆறரை மணிக்கு) எழுந்து இதை தட்டச்சுவது உங்களுக்கு தரும் பரிசாக நினைக்கிறேன்..:)
அதிஷா விமர்சனம் முற்றிலும் நேர்மாறு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்-ங்கறீங்களா?

கார்க்கி on February 14, 2011 at 10:14 AM said...

thanks to all

பொன்கார்த்திக் on February 14, 2011 at 7:00 PM said...

superu..

“நிலவின்” ஜனகன் on February 15, 2011 at 10:14 PM said...

நல்ல பதிவு..படம் பார்க்கணும்..

Arul suriyan on January 6, 2012 at 1:01 PM said...

very nice

 

all rights reserved to www.karkibava.com