Feb 28, 2011

நீங்க பேர்டாண்ணே?

10 கருத்துக்குத்து

 

  சென்ற வாரம் பதிவர் சந்திப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்தேறியது. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் இயக்குனர் சீனு இராமசாமி கலந்துக் கொண்ட இச்சந்திப்பு வழக்கமான சந்திப்பாக இல்லை. ஏன் என்பதை கடைசியில் பார்ப்போம். சீனு பேசும்போது பதிவர்கள்தான் முதலில் அவர் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் தந்ததாக குறிப்பிட்டார். அதுவும் உண்மைத்தமிழன் “காவியம்” என சொல்லியிருந்ததாக பெருமைப்பட்டார். அவர் இனிது இனிது படத்தைக் கூட அப்படித்தான் சொன்னார் என பின்வரிசையில் இருந்து ஒரு குரல் வந்தது. பதிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இச்சந்திப்பை திட்டமிட்டதாக சொன்னார் சீனு. படம் வெற்றி என்பதை உறுதி செய்த அவருக்கு வாழ்த்துகளையும், பதிவர்களை உற்சாகமூட்டும் விதத்தில் நேரில் வந்து பேசியதற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வோம். இனி சந்திப்பில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்.

வழக்கம் போல் அறிமுக உரையை வழங்க பதிவர் சுரேகா மைக்கை பிடித்தார். மைக் லேசாக நடுங்குவதை பார்த்த ஒருவர் “எல்லா நிகழ்ச்சியிலும் இவர்தானே முதல்ல பேசுறார். அப்புறமும் ஏன் கை நடுங்குது” என்றார். பின் வரிசையில் அவர் அருகில் இருந்தவர் பதில் சொன்னார் “அட அது கை நடுக்கம் இல்லைங்க. ஆஹா இவனான்னு மைக் நடுங்குது”. கேள்விக்கேட்டவர் பின்வரிசை நபரிடமிருந்து சில இருக்கைகள் தள்ளியே அமர்ந்துக் கொண்டார்.

அடுத்த நிகழ்வாக வந்திருந்தவர்கள் சுய அறிமுகம் செய்து கொண்டார்கள். முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து நின்று “என்னை எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்” எனத் தொடங்கினார். ”எழுந்து நின்னா எல்லோருக்கும் தெரியும்தான். பேர சொல்லுங்க” என பின்வரிசையில் இருந்து குரல் வந்தது. வழிந்தபடி ஏதோ ஒரு பெயர் சொன்னார் அந்த “பிரபல” பதிவர். நிறைய ”பஸ்” (Google Buzz) ஓனர்களும் வந்திருந்தார்கள். சர்க்கஸ் சிங்கம், அஞ்சா சிங்கமென சில சிங்கங்களும் வந்திருந்தார்கள். ஏனோ பெண் சிங்கம் மட்டும் வரவில்லை. வலையில் திமுகவிற்கு ஆதரவு குறைவு என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது என்றால் லக்கி பொங்கிவிடுவார். அதனால் விட்டுவிடுவோம்.

அடுத்து இயக்குனர் பேசினார். சில பதிவர்கள் விமர்சனம் என்ற பெயரில் ஈவு இரக்கமின்றி எழுதித் தள்ளுவதை குறையாக சொன்னார். பதிவர்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் துடிக்க வேண்டாமா? அந்த பின் வரிசை கலகக்காரருக்கு துடித்தது. “படம் எடுக்கிறவங்களும் ஈவு இரக்கமில்லாமதானே எடுக்கிறாங்க? பார்க்கிறவங்க நிலைமைய கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?” என்றார் புரட்சி வீரர். சிரிப்பையே பதிலாக தந்த சீனு கடைசியாக ஆம் என ஒத்துக் கொண்டார். வாழ்க பதிவர்கள். வாழ்க அந்த புரட்சி வீரர்.

தென்மேற்கு பருவக்காற்று வெளிவருவதில் இருந்த சிக்கல்கள் குறித்து கவலைப்பட்டார் சீனு. தியேட்டர்காரர்கள் படம் பிக்கப் ஆகும்வரை ஓட்டுவதில்லை என்றார். 25 ஆம் நாள் போஸ்டர் அடித்த பின் பார்த்தால், 24ஆம் நாள் படத்தை எடுத்துவிட்டார்களாம். இதையும் கிண்டலடித்து ஏதோ சொன்னார் பின்வரிசைக்காரர். ஏன் சார் டைரக்டர ஓட்டுறீங்க என ஒரு பதிவர் அவரிடம் வினவ, “அவர்தான் சார் ஓட்ட மாட்றாங்கன்னு கவலைப்பட்டாரு” என பதிலளித்தார் கலகக்காரர். கப்சிப் கமரக்கட்டு ஆனால் வினவியவர்.

அடுத்தப் படம் குறித்தும் பேசினார் சீனு. “நீர்பறவை” என்று பெயர் வைத்திருக்கிறார். குடிகாரர்(ர்ர்ர்) ஒருவரை பற்றிய படமாம். பதிவர்களிலே பல ஹீரோக்கள் இருப்பதாக முன்வரிசையில் யாரோ சொல்ல,தண்டோராவின் பெயருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.  நானும் புதுமுகங்களையே விரும்புகிறேன் என்றார் சீனு. “எங்கள குடிக்க வைக்கலாம். ஆனா நடிக்க வைக்க முடியாது” என்றார் பின்வரிசைக்காரர். அதன்பின் சீனு பேசும் போதெல்லாம் அந்த தொப்பிப் போட்ட பின்வரிசைக்காரரை கவனித்தபடியே பேசினார்.

நீர்ப்பறவைக்கு “ப்” போடாமல் நீர்பறவை என்றே அச்சடித்திருக்கிறார்கள். இயக்குனரின் மனைவி தமிழ் ஆசிரியையாம். இரவு 11 மணிக்கு இதை தவறென தலையில் குட்டியிருக்கிறார். “ப்” போட்டே ஆகணும். இல்லையென்றால் நீரும் பறவையும் என ஆகிவிடுமென எச்சரித்திருக்கிறார். “ப்” போடலாம். ஆனா “இப்பவே” போட முடியாது இல்லையா என்றார் மீண்டும் பின்வரிசைக்காரர். நீர்பறவைக்கு ”நீங்கள் பறவை” என இன்னொரு அர்த்தமும் அவையில் சொல்லப்பட்டது. எழுந்து நின்று தண்டோராவைப் பார்த்த பின்வரிசைக்காரர் “நீங்க பேர்டாண்ணே” என்றார்.

கடைசி கேள்வியாக சீனுவிடம் பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பீர்களா என கேட்கப்பட்டது. சிறுபடங்கள் மட்டுமே எடுக்க விரும்புவதாக அவர் சொன்ன பதிலை கேட்காத இன்னொருவர் “விஜய் கால்ஷீட் கிடைச்சா அவர வச்சு படம் எடுப்பீங்களா?” என்றார். பின்வரிசைக்காரர் தொப்பியோடு எழுந்து நின்று திரும்பி பார்க்க கேள்வி கேட்டவர் டர் ஆகி சொன்னார் “சாரி.சகா நீங்க இருக்கிறத கவனிக்கல”

_______________________

முதல் பத்தியில் சொன்ன விஷயம் இதுதான். இது போன்ற சிறப்பு விருந்தினர்கள் வந்தால் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது. அவர் பேசும்போது எல்லோரும் இருக்கையில் அமர்ந்து அவர் ஆற்றும் சொற்பொழிவை கேட்க வேண்டியிருக்கிறது. பதிவர் சந்திப்பு என்பதே சுவாரஸ்யமான உரையாடல்களால்தான் எனக்கு பிடித்திருக்கிறது. அதை தகர்க்கும்படி பாதி டிஸ்கஷனில் மேல போங்க என்று தள்ளினால் ஒரு மாதிரி இருக்கிறது. வந்திருக்கும் சிறப்பு விருந்தினரை மதிக்க வேண்டும் என்றாலும் அதற்காக நம் சந்தோஷத்தை விட்டு தர முடியுமா? எனவே பதிவர் சந்திப்பை எந்த சிறப்பு விருந்தினர் வருகையோடும் சேரத்து வைக்காதீங்க. என்னால் தொப்பியை போட்டுக்கிட்டு கம்முன்னு கடைசி வரைக்கும் வாயை மூடிக்கிட்டு உட்கார முடியாது.

சீனு சொன்ன முக்கியமான விஷயம், நல்ல புராடக்ட் என்றாலும் விளம்பரம் அவசியம். உண்மைதான். இந்தாங்க. தென்மேற்கு பருவக்காற்று பற்றிய என் பார்வையை படிக்க இங்கே அழுத்துங்க.

________________

தொப்பி போட்ட பின்வரிசைக்காரரின் புகைப்படம்.

Valaimanai Tamil Bloggers Meet 5

Feb 27, 2011

மீண்டும் ஒரு ஆணாதிக்கப் பதிவு

16 கருத்துக்குத்து

 

14 /02 / 2010, மாலை 6 ம‌ணி

இட‌ம் : க‌‌ஃபே காஃபி டே

(மு.கு : ஹிஹிஹி என்ற இடத்தில் எல்லாம் “கலகலன்னு” சிரிக்கிற பொண்ணுங்க சிரிப்ப நினைச்சுகோங்க)

கதாநாய‌கி: ஹேய். நான் சொன்னேன்ல‌. ராம். இன்னைக்கு ப்ர‌போஸ் ப‌ண்ணிட்டேன்.

ந‌ண்பி 1: வாவ்.. பார்க்க‌ எப்ப‌டிடி இருப்பான்?

கதாநாய‌கி ; நான் சொன்னா ந‌ம்ப‌ மாட்டீங்க‌. வாலி அஜித் மாதிரியே இருப்பான்

ந‌ண்பி2: பார்த்துடி. அண்ண‌ன் இருக்க‌ போறான்.

ந‌ண்பி 1 :இவ‌ ல‌வ் ப‌ண்ற‌தே அண்ண‌ன்கார‌ன‌த்தானாம் (ஹிஹிஹிஹி)

ந‌ண்பி 3: அதெல்லாம் இருக்க‌ட்டும். என்ன‌ வேலை செய்றான்?

கதாநாய‌கி: பேங்க்ல மேனேஜ‌ர். சிட்டி பேங்க்.

ந‌ண்பி 4: எங்க‌? யுனிவ‌ர்சிட்டில‌யா? (ஹிஹிஹிஹி)

நண்பி 5: எல‌க்ட்ரிசிட்டில‌. போடி. பைய‌ன் எப்ப‌டி? ட்ரிங்க்ஸ், ஸ்மோகிங் உன்டா?

கதாநாய‌கி: எப்ப‌வாது குடிப்பான். ஆனா நோ ஸ்மோகிங். ஹி ஹிஸ் எ நைஸ் பெர்ச‌ன் யு நோ

ந‌ண்பி4: இதெல்லாம் ஓக்கே. கேர்ள் ஃப்ரென்ட்ஸ் எத்த‌னை பேரு? எனி அஃப‌ய‌ர் பிஃபோர்?

கதாநாய‌கி: இல்ல‌டி. நான் தான் ஃப‌ர்ஸ்ட்.

ந‌ண்பி 2: ந‌ம்ப‌முடிய‌வில்லை.. வில்லை.. ல்லை..லை.. (ஹிஹிஹிஹிஹி)

கதாநாய‌கி:இல்ல‌ப்பா. என‌க்கு தெரியாதா?

ந‌ண்பி 4: ச‌ரி. வீடு எங்க‌ இருக்கு? சொந்த‌ வீடா வாட‌கை வீடா? சென்னைதான் நேட்டிவா?

கதாநாய‌கி: ம்ம். அண்ணா ந‌க‌ர்ல‌. இண்டிபென்ட‌ட் ஹ‌வுஸ். அப்பா ரிட்ட‌ய‌ர்ட் அட்வ‌கேட்.

ந‌ண்பி 5: வ‌க்கீலுக்கு ஏதுடி ரிட்ட‌யெர்மென்ட்? (ஹிஹிஹிஹிஹி)

க‌தாநாய‌கி : இப்போ பிராக்டீஸ் ப‌ண்ணாம‌ இருக்க‌லாம் இல்ல‌?

****

***

****

***

ந‌ண்பி 1: என்ன‌வோ போ. என‌க்கு ச‌ரியா ப‌ட‌ல‌.ரொம்ப‌ ஃப்ள‌ர்ட் ப‌ண்ற‌‌ பைய‌ன் மாதிரி தெரியுது.

ந‌ண்பி 2: ம்ம். யோசிச்சு செய்

ந‌ண்பி 3: ஐ ஃபீல் யூ டிச‌ர்வ் பெட்ட‌ர் ஒன் டிய‌ர்

ந‌ண்பி 4: அம்மா ஒத்துப்பாங்க‌ளா?

ந‌ண்பி 5: இன்ட்ரோ கொடு. பார்த்துட்டு சொல்றோம்.

___________________-

14 02 2010, மாலை 6 ம‌ணி

இட‌ம் : பீச்

க‌தாநாய‌க‌ன் : ம‌ச்சி.திவ்யா இன்னைக்கு ல‌வ் யுன்னு சொல்லிட்டாடா. நாங்க‌ளும் ல‌வ் ப‌ண்றோமில்ல‌..

ந‌ண்ப‌ன் 1: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 2: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 3: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 4: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 5: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

____________________________

ஒரு வருடம் கழித்து.. அதே காஃபி ஷாப்பில்

கதாநாயகி  : We broke up.

நண்பி 1 : ஓ. விடுடி. நான் தான் முதல்லே சொன்னேன் இல்லை. அவன் சரியில்லைன்னு

நண்பி 3: அகைன் ஐ அம் சேயிங், யு டிசர்வ் பெட்டர் ஒன் டியர்.

கதாநாயகி : ம்ம். ஆமாம்

நண்பி 2 : அவனையெல்லாம் நிக்க வெச்சு சுடணும்..

_________________________

அதே பீச்

கதாநாயகன் : விட்டு போயிட்டாடா

நண்பன் 1: டேய்.. நல்ல பொண்ணுடா. கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் நீ

கதாநாயகன் : நான் என்னடா செஞ்சேன்? கஷ்டமா இருக்குடா

நண்பன் 2: அவ நல்லா இருப்பா. நீ கவலைப்படாத.

கதாநாயகன் : ம்ம்

நண்பன் 1: டேய். வா தண்ணியடிக்கலாம்.

நண்பன் 2 : ஆமாண்டா. வா போலாம்.

Feb 15, 2011

வாழ்க வாழை

15 கருத்துக்குத்து

 

  டியூஷன் சேர  நுழைவுத்தேர்வு எழுதியதுண்டா நீங்கள்? என் பள்ளித்தோழர்கள் எழுதியிருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் காலரைத் தூக்கிக் கொண்டு நடந்திருக்கிறார்கள். சில பெற்றோர்கள் இதற்கு “ட்ரீட்” எல்லாம் தந்திருக்கிறார்கள். பாஸாகாத மாணவர்கள் பொதுத்தேர்வில் தோற்றது போல் அழுதிருக்கிறார்கள். நல்லவேளையாக யாரும் தற்கொலைக்கு முயன்றது இல்லை. அட நெசமாத்தாங்க. நான் படித்தப் பள்ளியில் நாகராஜன் என்றொருவர் இருந்தார். திறமையான ஆசிரியர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரிடம் சேர்ந்தால் நல்ல மதிப்பெண்கள் நிச்சயம் என்ற நம்பிக்கையே மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம். 90 மார்க் எடுக்கும் மாணவன் அவரிடம் சேர்ந்தால் 95 எடுப்பான். 95 எடுப்பேன் என்பீர்களேயானால் 100 அடிக்க வைப்பார். எவ்வளவு முயன்றாலும் 100க்கு மேல் முடியாது என்பதால் என்னைப் போன்ற ஆட்கள் அவரிடம் சேர்வதில்லை. அவரின் இலக்கு நன்றாக படிக்கும் மாணவனை இன்னும் செதுக்கி சிறந்த மாணவனாக்குவது. அந்த ”நன்றாக படிக்கும்” மாணவர்களை தேர்ந்தெடுக்கத்தான் நுழைவுத்தேர்வு. இதுவும் ஒரு வித  கல்விச்சேவைதானே?

image

அப்பா, அம்மாவின் அக்கறையில் 90 மதிப்பெண் எடுப்பவனை சதமடிக்க வைத்து எழுதிய பேனாவை தூக்கிக் காட்ட வைக்க நாகராஜன்கள் இருக்கிறார்கள். நல்ல விஷயம். ஆனால் தங்கள் வம்சத்திலே பள்ளிக்கு செல்லும் முதல் தலைமுறை மாணவர்களை 90 எடுக்க வைக்க உதவ யாராவது வேண்டாமா? அல்லது படித்தவர்கள் வீட்டில் இருந்தாலும் பணரீதியான, சமூக ரீதியான பிரச்சினைகளால் தவிப்பவர்களை கரையேற்ற ஒரு பரிசல் வேண்டாமா? ”வாழையடி வாழையாக” என்பார்களே! அது போல வளர்ந்த மரம் இன்னொன்றை உருவாக்கினால் அழகுதானே? அதைத்தான் செய்கிறார்கள் மேலே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் நல்லவர்கள். முட்டிமோதி ஓரளவிற்கு நன்றாக படித்து இப்போது நல்ல நிலையில் இருக்கும் முதல் தலைமுறை வெற்றியாளர்கள் இவர்கள். “அன்பில் செழித்த உறவு.. இது தலைமுறை தாண்டிய கனவு” என்ற இலக்குடன் பயணிக்கும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கு ”வாழை” என்ற பெயரையே பொருத்தமாக வைத்திருக்கிறார்கள். வெற்றித் தோல்விகளை பிரதானப்படுத்தாமல் முயற்சியை மட்டுமே முன்னெடுத்து செல்கிறார்கள். கல்வியின் புரிதலை தருவதும் அதை சார்ந்த முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதும் தான் வாழையின் அடிப்படை. மேலும் நாம் அனைவருக்கும் நம் கல்வி திட்டத்தின் மேல் இருக்கும் வருத்தம்... வாழ்க்கைக்கு தேவையான கல்வியை (வாழ்க்கை கல்வி)   அது தரவில்லை என்பது தான். வாழை இதை தருகிறது

  6-10வது படிக்கும் மாணவர்களை தத்தெடுத்துக் கொள்கிறார்கள். இந்த மாணவர்களை Wards என்கிறார்கள். ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு Mentor இருப்பார். வருடத்திற்கு ஆறு முறை நடக்கும் workshopல் இவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். அது தவிர கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பேசிக் கொள்கிறார்கள். படிப்பில், மட்டுமல்ல அந்த மாணவனுக்கு வரும் எந்த சந்தேகத்தையும் Mentorயிடம் கேட்கலாம். Mentorன் வேலை அந்த மாணவனை படிப்பில் சிறக்க வைப்பது மட்டுமல்ல தன்னம்பிக்கையை வளர்ப்பது, Communication skillஐ செம்மையாக்குவது, இந்தப் போட்டி உலகை போட்டி போட்டு சமாளிப்பது என சகல விதத்திலும் மாணவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

”அன்புள்ள கார்க்கி அண்ணணுக்கு,

மணி எழுதுவது. எப்படி இருக்கீங்க? நான் போன வாரத்த விட இப்ப ரொம்ப நல்லா, சந்தோஷமா இருக்கேன். இங்க நடந்த பேச்சுப் போட்டில நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி பேசி முதல் பரிசு வாங்கிட்டேன். யார் எழுதி தந்தாங்கன்னு கேட்டாங்க. இது எழுதி மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்கல. கார்க்கி அண்ணன் சொன்னத வச்சு நானே புரிஞ்சு, பேசினேன்னு சொன்னப்ப ஒரே கைத்தட்டல். எனக்கு ரொம்ப பெருமையா, சந்தோஷமா இருக்கு. இந்த வருஷம் எப்படியும் நான் முதல் மார்க் வாங்கிடுவேன்.

உங்க ஆஃபீஸ் எப்படியிருக்கு? புதுசா ஒரு புராஜெக்ட்ன்னு ஃபோன்ல சொன்னீங்களே. ஆரம்பிச்சிடீங்களா? வேலைலே முழுசா இருக்காம உடம்ப பார்த்துக்கோங்கண்ணா.

அன்புடன்,
மணிகண்டன்.

இப்படி ஒரு கடிதம் நமக்கு வந்தால் எப்படி இருக்கும்? வாழையின் மாணவர்கள் பலரின் பெற்றோர்கள் தினக்கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள். அல்லது சூழ்நிலை காரணமாக உறவினர்களின் வீட்டில் தங்கி படிக்கும் மாணவர்கள். அதாவது அவர்களுக்கு மனம் விட்டு பேச ஒரு உறவு வேண்டி இருப்பவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் வாழையின் சேவை பெரிதும் உதவுகிறது. கல்வி மட்டுமின்றி, அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு முக்கிய உறவும் வாழை மூலம் கிடைக்கிறது

நம்ம வாழ்க்கைல நம்மளுக்காக நேரம் ஒதுக்கினவங்கள  மறக்க முடியாது. அப்படிப்பட்ட நேரம் நம்மளோட அடுத்த தலைமுறைக்கு அவசியம்.  நான் இன்னிக்கு சுயமா யோசிச்சு முடிவு எடுக்குறேன்னா அதுக்கு காரணம் என்னோட கல்வியும் எனக்கு கிடைச்ச வழிகாட்டுதலும் தான்... எனக்கு கிடைச்ச வழிகாட்டுதல  என்னோட அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பையும் கடமையும் உணர்ந்து தான் நான் என்னை வாழைல இணைச்சுக்கிடேன்” பெருமை பொங்க சொல்கிறார் திவ்யா. இவர் வாழையில் மூன்று வருடங்களாக சேவை புரிகிறார்

“இந்த சமூகத்திடம் நான் வாங்கிய கடனை அடைக்க இது ஒரு வழியா பார்க்கிறேன். என் கண்காணிப்பில் வளரும் மாணவன் நாளைக்கு இந்த சமூகத்துக்கு இன்னும் பல நன்மையை செய்வான். அப்போ விதை நான் போட்டதுன்னு பெருமையா தேவர் மகன் சிவாஜி மாதிரி சொல்வேன் என்று சிரிக்கிறார் இன்னொரு மெண்ட்டர்.

வாழை 2005 ல் தொடங்கப்பட்டது. வாழையின் நிறுவனர்களும் முதல் தலைமுறையாக கல்வியின் சுவையை ருசித்தவர்கள்தான். இங்கே இருக்கும் mentorகள் பலரும் அப்படித்தான். அதனால் மாணவர்களை நன்றாக புரிந்துக் கொள்கிறார்கள். அதே சமயம் தங்கள் கடந்து வந்த பாதையை அவ்வபோது மாணவர்கள் வடிவில் நினைவு கூர்வதால் வெற்றி அவர்களின் தலையில் ஏறுவதில்லை.

  முக்கியமான பிரச்சினைக்கு வருவோம். வாழையில் ஒவ்வொரு மாணவனுக்கும் பிரேத்யேகமாய் ஒரு வழிகாட்டி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கேற்ற எண்ணிக்கையில்தான் மாணவர்களை சேர்க்கிறார்கள். ஆனால் திருமணம், இடம் மாற்றம் போன்ற சில காரணங்களால் சில பெண் வழிகாட்டிகள் விலக நேர்ந்ததால் தற்போது ஒருவரே 4, 5 மாணவர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை.  வழிகாட்டிகள் கிடப்பதுதான் இவர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். உதவ தயாராக இருப்பவர்கள் இங்கே க்ளிக்குங்கள். உங்களின் ஒரு க்ளிக் யாரோ ஒருவருக்கு வாழ்க்கையை கொடுக்கப் போகிறது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

_________________________________________________________________________

இது அதீதம் என்ற இணைய இதழில் வெளிவந்த கட்டுரை. மேலும் “கண்ணா…லவ் பண்ண ஆசையா” என்ற காதலர் தின சிறப்புக் கட்டுரையும் வெளிவந்திருக்கிறது. அதைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

Feb 14, 2011

அறிஞர்களின் பொன்மொழிகள்

14 கருத்துக்குத்து

 

முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.

1) முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும்.

2)  காதலிக்கிறவன் இன்னைக்கு பார்க்குக்கு போவான். நாளைக்கே அவன் பாருக்கு போவான்.

3) பொண்டாட்டிங்க எல்லாம் காங்கிரஸ் மாதிரி. கூடவே இருந்தாலும் தலைவலி தருவாங்க. காதலிகள் எல்லாம் வைகோ மாதிரி. சொல்ற பேச்சு கேட்டு அழகா நடந்துப்பாங்க.

4)  வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும். ஆனா குட்டிக்கு கொடுத்த பணம் கையை விட்டு போகும்.

5) ஹாஃப் அடிச்சா சவுண்டு விடுவான். ஃபுல் அடிச்சா கிரவுண்ட்ல விழுவான். அவன் தாண்டா குடிகாரன்

6) ஃபர்ஸ்ட் பஸ் ஃபர்ஸ்ட் வரும். கடைசி பஸ் கடைசியா வரும்.

7) 4 தடவ ஷேவ் செஞ்ச ஜில்லெட்டும், மண்ணெண்ணயில ஓட்டுற புல்லட்டும் பிரச்சினை கொடுக்கத்தான் செய்யும்.

8)  எதை நீ எடுத்தாயோ அது ஃப்ரென்ச்சு படத்திலிருந்து சுட்டது
     எதை நீ கொடுத்தாயோ அது கொரிய படத்திலிருந்து சுட்டது
     எந்த ஃபிகர் இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொவருடையதாகிறது
    மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
    இந்த மாற்றம் சினிமா நியதியாகும்

இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்

1) டெய்லர் தங்கவேலு

2) தாடிக்காரன் தாமு

3) குடும்பஸ்தன் குமாரு

4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்

5) குவார்ட்டர் கோவிந்தன்.

6) டிரைவர் டக்ளஸ்

7) மெக்கானிக் மைக்கேல்

8) சினிமா சின்னசாமி

ஏழுவின் காத‌ல் சோக‌ம் (காத‌ல‌ர் தின‌ சிற‌ப்புப்ப‌திவு)

18 கருத்துக்குத்து
  காத‌ல் மீது விர‌க்தியில் இருக்கும் ந‌ம்ம‌ ஏழு நேத்து வ‌ழ‌க்க‌ம் போல‌ அரைபிய‌ரும், வாட்ட‌ர் பாக்கெட்டையும் துவ‌ம்ச‌ம் செய்த‌ பின் சொன்ன‌ க‌தையை எழுதியிருக்கிறேன்.சோ, க‌தை -  ஏழு. எழுத்தாக்க‌ம் - ‍கார்க்கி.ஓகே?
____________-

இன்னைக்கு காத‌ல‌ர் தின‌மாம். த‌மிழ‌ர்க‌ள் நியூ இய‌ர் கொண்டாடும்போது என்னை மாதிரி சிங்கிள் சிங்க‌ங்க‌ள் வேல‌ன்ட்டைன்ஸ் டே கொண்டாட கூடாதா? லீவு கேட்டால் உன‌க்கு எதுக்கு லீவு என்கிறார் டேமேஜ‌ர். கொடுமை. 45 வ‌ய‌தில் அவ‌ர் லீவு போட்டிருக்கிறார். ல‌வ்வுக்கு எதுக்குடா வ‌ய‌சுன்னு ம‌ட்டும் சொல்லிடாதீங்க‌. ஏன்னா, டொய்ங்ங்ங்ங்ங்ங்.. ஃப்ளாஷ்பேக்.

அப்போ நான் யூ.கே. ஜி ப‌டிச்சிட்டுருந்தேன். ப‌க்க‌த்து சீட்டு ஷைலுவிட‌ம் "இந்தா இன்னொரு ப‌ல்ப‌ம்" என்று கொடுத்த‌ போது உஷா டீச்ச‌ர் பார்த்துவிட்டு உடைத்துவிட்டார், ப‌ல்ப‌த்தையும் என் காத‌லையும். போதாதென்று அம்மாவிட‌ம் குற்ற‌ச்சாட்டு " உங்க‌ பைய‌ன் பொண்ணுங்க‌ ப‌க்க‌த்திலே உட்காரான்". நீ வ‌ள‌ர‌ணுன்டா ஏழு என‌ என‌க்கு நானே சிலேட்டில் எழுதுக் காட்டிக்கொண்டேன்.

ஒரு வ‌ழியாக‌ ப‌த்தாவ‌து வ‌ந்து சேர்ந்துவிட்டேன். 15 வ‌ய‌சு. ப‌ருவ‌ம் ப‌வ‌ர்ஃபுல்லாக‌ ப‌வ‌ர்ப்ளே ஆடும் வ‌யசு. தோசை செய்ய‌ ஸ்ட‌வ்வு.. மீசை வ‌ந்தா ல‌வ்வுன்னு ம‌ன‌ம் ம‌ந்த‌காச‌ நிலையில் மித‌க்க‌, ம‌துமிதாவே ந‌ம‌ஹா என‌ எல்லா புக்ல‌யும் எழுதிவைத்தேன். க‌ண‌க்கு டியூஷ‌ன் சென்று க‌ண‌க்கு செய்த‌து இது ம‌ட்டுமே. விஷ‌ய‌ம் கேள்விப்ப‌ட்ட‌ டியூஷ‌ன் சார் முத‌ல்முறையாக‌ மார‌ல் ச‌யின்ஸ் பாட‌ம் எடுத்தார். "ப‌த்தாவதுதான் ஒருத்த‌ன் லைஃபுக்கு ரொம்ப‌ முக்கிய‌ம்.ல‌வ்வுக்கு இல்லை.  ப‌டிக்கிற‌‌ வ‌ய‌சுல‌ எதுக்குடா இதெல்லாம்? நீ ந‌ல்லா ப‌டிக்கிற‌‌ பைய‌ன்" என்று சொல்லிவிட்டு போன‌வ‌ர் த‌மிழ் சினிமா ஹீரோ போல‌ கொஞ்ச‌ தூர‌ம் போன‌தும் திரும்பினார். "நான் பாட‌ம் ப‌டிக்கிற‌த‌ சொன்னேன்" என்று ப‌ன்ச் வைத்தார்.

  அடுத்த‌ காத‌ல் ப‌டிச்சி முடிச்சிட்டுதான் என்ப‌தில் நான் உறுதியாக‌ இருந்தேன். அதே போல‌ 20 வ‌ய‌தில் ஸ்டார்ட் ஆன‌து அடுத்த‌ இன்னிங்ஸ். ஒரு ப‌க்க‌ம் வேலை வேலையென‌ இன்ட்டெர்வியூவுக்கு ஓடினேன். இன்னொரு ப‌க்க‌ம் திவ்யா திவ்யான்னு காத‌லிக்க‌ ஓடினேன். பீச்சில் வைத்து க‌ட‌லை ம‌ட்டுமே போட‌ முடிந்த‌து. க‌ட‌லை வாங்க‌ காசில்லை. இந்த‌ க‌ஷ்ட‌த்த‌ சொல்லி அழ‌ ந‌ண‌ப‌னை வ‌ர‌ சொன்னேன். பிய‌ர் வாங்கித் த‌ந்த‌வ‌ன் சைட் டிஷாக‌ அட்வைசையும் த‌ந்தான். "வேலைக்கு போ மாமு. அப்புற‌ம் பாரு. எல்லா ஃபிக‌ரும் உன் பின்னாடி வ‌ருவாங்க‌" இதென்ன‌டா வ‌ம்பா போச்சு என‌ திவ்யாவையும் ம‌ற‌ந்து போனேன். திவ்யா இல்லைன்னா ஒரு த்ரிஷா என‌ என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

அப்புற‌ம் வேலையில் சேர்ந்து. ந‌ல்லா ச‌ம்பாதிச்சு, லைஃபுல‌ செட்டில் ஆன‌பின் ஒரு ந‌ல்ல‌ நாளில் ல்த‌கா சைஆ மீண்டும் துளிர் விட்ட‌து. இந்த‌ முறை ந‌ம்மை த‌டுக்க‌ எந்த‌ கார‌ண‌மும் இல்லை. ம‌வ‌னே சொல்லி அடிக்க‌ணும்டா ஏழு என‌ க‌ள‌த்தில் இற‌ங்கினேன். நினைத்த‌ப‌டியே ஒரு டைவாவும் சிக்கிய‌து. லொள்ளையும், ஜொள்ளையும் ஒன்றாக‌ சேர்த்து ஊற்றி காத‌ல் செடியை வ‌ள‌ர்த்துக் கொண்டிருந்தேன். விஷ‌ய‌ம் கேள்விப்ப‌ட்ட‌ ஒரு வெல் விஷ‌ர் சொன்னார். "எல்லாம் புரியுது ஏழு. ஆனா இதை நீ க‌ல்யாண‌துக்கு முன்னாடி செஞ்சிருக்க‌ணும்".

சார். என‌க்கு இன்னும் க‌ல்யாண‌ம் ஆக‌ல‌!

டேய். நான் உன்னை சொல்ல‌ல‌. அவ‌ங்க‌ள‌ சொன்னேன்.

ப்ச். 35 வ‌ய‌சுல‌ ல‌வ் ப‌ண்ணா க‌ல்யாண‌ம் ஆன‌ ஆன்ட்டி கிடைக்காம‌ டாப்சியா கிடைக்கும்?
_______________________

அனைவ‌ருக்கும் காத‌ல‌ர் தின‌ வாழ்த்துக‌ள்

.

Feb 13, 2011

பயணம்.. இவ்ளோ வேகம் கூடாது

14 கருத்துக்குத்து

 

பயணம் எனக்கு எப்போதும் பிடித்தமானதாகவே இருக்கிறது. பணம், பயம், பணயம் என அது தொடர்புடைய வார்த்தைகள் பயணத்திலே ஒளிந்துக் கொண்டிருக்கிறது. இது நான் எங்கேயோ படித்ததா அல்லது என் தக்குனூண்டு மூளையில் உதித்ததா என்பது இப்போது முக்கியம் இல்லை.. நாம் பயணம் திரைப்படம் குறித்து பேசப்போகிறோம். இரண்டரை மணி நேரம் கட்டிப் போட்டு ஒரு Virtual travel அழைத்துச் சென்ற ராதாமோகன்&டீமை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது இந்த பயணம்.

சென்னை –தில்லி விமானத்தை கடத்தும் தீவிரவாதிகள், தங்களது தலைவனை விடுதலை செய்ய சொல்கிறார்கள். விமானம் பழுதாகி திருப்பதியில் தரையிறக்கப்படுகிறது. உள்ளே இருக்கும் 100 பேரின் பயணம் இப்போது பணயம் வைக்கப்படுகிறது. தலைவனோடு 100 கோடி பணமும் கேட்கிறார்கள். பயணிகளின் பயம் நம்மையும் தொத்திக் கொள்ள, திரைக்கதை வேகமெடுக்கிறது. நாலாவது ரீலில் கதை டேக் ஆஃப் ஆகும்போது எனது சீட் பெல்ட்டை சரிபார்த்துக் கொண்டேன். தேவி தியேட்டர் சீட்டில் பெல்ட் ஏது? ராதாமோகனின் வெற்றியது. அந்தக் காட்சியில் கைத்தட்டினார்கள் என்று யாரும் இயக்குனரிடம் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் எனக்கு ஒவ்வொரு ரீலின் முடிவிலும் கைத்தட்டல்கள் கேட்டவண்ணம் இருந்தது.

விமானத்தின் உள்ளே நடக்கும் சம்பவங்கள், தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்க பிரதிநிதிகளின் நடவடிக்கைகள், வெளியே மீடியா செய்யும் களேபரங்கள். இந்த மூன்றும்தான் கதைக்களம். சற்று உன்னைப் போல் ஒருவனை நினைவுப்படுத்தினாலும் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் நகைச்சுவை படத்தைத் தணித்துக்காட்டுகிறது.

படம் தொடங்கியவுடன் விமானத்தில் ஏறும் பயணிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் காட்டப்படுகின்றன. நடிகராக வரும் பப்லுவின் பெயரைத் தவிர மீதிப் பெயர்கள் தேவையற்றவை. அதனால்தானோ என்னவோ ஆங்கிலத்தில் இருக்கின்றன. பயணத்தின் போது சக பயணிகளை உற்று கவனிக்கும் பயணியாக நீங்கள் இருந்தால் இந்த பயணம் உங்களின் அதி முக்கிய பயணமாக இருக்கக்கூடும். முடிந்தவரை ஒவ்வொரு பாத்திரத்தையும் அர்த்தத்தோடும் அழகியலோடும் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதற்கான நடிகர்களை தேர்ந்தெடுத்து தனது முத்திரையை மிக அழுத்தமாக பதித்திருக்கிறார்.

[payanam1[11].jpg]

பாதிரியராக வரும் எம்.எஸ்.பாஸ்கரை இனியும் பட்டாபி என அழைக்க முடியாது. கடத்தப்பட்ட விமானத்தில் பயத்தின் உச்சியில்  அனைவரும் இருக்கும்போது கடத்தல்காரர்களிடம் பைபிள் வாசிக்க அனுமதி வாங்கி படிக்குமிடத்தில் தொடங்குகிறது ஃபாதரின், மன்னிக்க, பாஸ்கரின் நடிப்புப் பயணம். ”இங்கு இருக்கும் எல்லோருக்கு கடமை இருக்கு. குடும்பம் இருக்கு. எனக்கு தேவன் மட்டுமே. ஊழியம்தான் என் கடமை. அதனால் அடுத்து யாரையாவது கொல்லணும்ன்னா என்னை கொல்லுங்க” என்னும் போது அதுவரை கைத்தட்டி களைத்த அரங்க செய்வதறியாமல் திகைக்கிறது. படம் முடியும் போது எல்லாப் பயணிகளும் கலைந்து சென்றுவிட்ட பின் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களின் அருகில் ஜபித்துக் கொண்டிருக்கிறார் ஃபாதர். My heart skipped a beat என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஹேட்ஸ் ஆஃப் ஃபாதர்.

டீலா நோ டீலா ரிஷிக்கு இப்படி நடிக்கத் தெரியுமா? பக்கத்து சீட் சனாகானிடம் கடலைப் போடும் மன்மதனாய் அறிமுகமாகிறார் இந்த டாக்டர். ஆம்.என்ன டாக்டர் என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

நேர்முகத்தேர்வுக்காக தில்லிக்கு செல்பவராக வருகிறார் குமரவேல். இரண்டு நாட்களாய் சுத்தப்படுத்தாமல் இருக்கும் கழிவறைக்காக கடத்தல்காரர்களிடம் மல்லுக்கு நிற்கிறார். கக்கூசுக்கும் காஷ்மீருக்கும் என்னய்யா தொடர்பு என்ற அவர் கோபம் நியாயமானது. தங்கள் தலைவனை விடுவிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுவிட்டதால் நாளைக்கு நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள் என்ற செய்தி கேட்டு அனைவரும் கைத்தட்டுகிறார்கள். அப்படியே கழிவறையையும் சுத்தப்படுத்த ஆள் வருவார்கள் என்றபோது குமரவேல் மட்டும் கைத்தட்டுகிறார். யாருக்கும் நேராத ஒன்று அவருக்கு மட்டும் நேர்கிறது. என்னவென்று படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். அவரின் பக்கத்து சீட் ஜோதிடராக மனோபாலாவும் கச்சிதம்.

ஷைனிங் ஸ்டார் சந்திரகாந்தாக பப்லு. அவரின் ரசிகராக சாம்ஸ். தன் ஆதர்ச நாயகன் திரையில் செய்வதை நிஜத்திலும் செய்து காப்பாற்றுவார் என்று சாம்ஸ் நிம்மதி பெரு மூச்சு விடுகிறார். ஆனால் ஷைனிங் ஸ்டாரோ கரப்பான்பூச்சிக்கு பயந்து காலை மேலே தூக்கிக் கொள்கிறார். உற்று கவனிக்கையில் இயக்குனர் சந்திரகாந்த்தை கிண்டலடிக்கவில்லை.  அதை நிஜமென நம்பி ஏமாறும் ரசிகனையே கலாய்த்திருக்கிறார். ஆனால் தியேட்டர் என்னவோ இது அஜித். இது விஜய். அந்த டயலாக் விஜய்காந்த் என நம்பி ஏமாறிக் கொண்டுதான் இருந்தது.  “பதுங்குனா சைலண்ட் பாய்ஞ்சா வயலண்ட்”, “தாய்க்கு ஒண்ணுன்னா ஆம்புலன்ஸ கூப்பிடுவேன். தாய்நாட்டுக்கு ஒண்ணுன்னா நானே ஓடுவேன்” என்ற சந்திரகாந்த் பன்ச்களை சொல்லிவிட்டேன் என்று நினைக்க வேண்டும். இது போல பல அதிரடிகள் படம் முழுக்க வருகிறது.

இவர்களை காப்பாற்றும் கமோண்டாவாக நாகர்ஜூனன். பேச்சுவார்த்தை நடத்துபவராக பிரகாஷ்ராஜ். நாகர்ஜூனன் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அப்படியென்ன செய்தார் என்று கேட்டால் எதுவும் சொல்லமுடியவில்லை. அடக்கி வாசித்திருப்பதை பாராட்டுவது சரியா என்ற சந்தேகம் காரணமாயிருக்கலாம். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல்  ஆங்கிலத்தில் கோவப்படுகிறார்.

இருக்கும் மற்ற பாத்திரங்கள் குறித்தும் எழுதிக் கொண்டே போகலாம். ஒரு கதையில் இத்தனை பேர் மனதில் நிற்க முடியுமா என்ற ஆச்சரியம் அடங்க சில நாட்களாவது நிச்சயம் ஆகும்.

விஜியின் வசனம் மொழியின் வெற்றிக்கு முக்கிய காரணமென்பேன். இதில் விஜிக்கு மாற்றாக த.செ.ஞானவேல். பிரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை தொடருக்கு (விகடன்) ரசிகன் நான். அதன் எழுத்தாக்கம் த.செ. ஞானவேல் தான். பல இடங்களில் தியேட்டர் கைத்தட்டுகிறது இவரது வசனத்திற்கு. சில இடங்களில் கண்டுக்கொள்ளாமல் வீணாகிறது. உதாரணத்திற்கு சில.

“அப்போ யூசுஃப் கானை ரிலீஸ் செய்ய போறாங்களா” என்கிறார் நாகர்ஜூன்.  “இல்லை பயணிகளை” என்கிறார் பிரகாஷ்ராஜ். யாருக்கு யார் முக்கியம் என்பதை சொல்ல பக்கங்களோ, ரீல்களோ தேவைப்படவில்லை. ஒரு கேள்வி. ஒரு பதில் போதுமானதாயிருக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து சிகிச்சைக்கு வந்த குழந்தை மீது சிநேகமாகிறான் ஒரு தீவிரவாதி. அவனிடம் குழந்தை சென்னை டாக்டர்கள் நல்லாத்தானே பார்த்துக்கிட்டாங்க என்கிறது. எல்லா டாக்டர்களுமே நல்லவங்கதான் என்கிறான் தீவிரவாதி. அப்போ நீயும் டாக்டராயிருக்கலாம் என்ற குழந்தையின் பதிலில் தீவிரவாதியே கலங்கும் போது….

பேசிக் கொண்டேஏஏஏஏ இருக்கும் வயதான ஐ.ஏ.எஸ்களிடம்  கோவத்தில் சொல்கிறார் நாகர்ஜூன் “You are just old. Not experienced”

இது என்ன புனிதப்போர் என்று விளக்கும் தீவிரவாதி சொல்கிறான் “மூணு நாளாச்சு. எல்லா பெண்களும் பத்திரமாயிருக்காங்க. உங்க போலீஸ் ஸ்டேஷனிலோ, ஆர்மிக்காரங்ககிட்டயோ மாட்டியிருந்தா மூணு நாளில் என்னாயிருக்கும் தெரியுமா”. உண்மையில்லை என்று மறுக்க முடியாமல் இருக்கிறது நம் தேசத்தின் வரலாறு.

இன்னும் பல இடங்களை சொல்லலாம். பேனா எடுத்து குறிப்பெடுத்துக் கொள்ள திரைக்கதை இடமளிக்கவில்லை. ஓடிக் கொண்டேயிருக்கிறது. இப்பதிவின் தலைப்பு அதை குறிக்கும் வகையில்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

எழுதும் போதே ஏர் ஹோஸ்டசின் அபாரமான நடிப்பைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கிறது மனது. அப்படியென்றால் தலைவாசல் விஜய் என நீண்டுக் கொண்டே போகும். படம் பார்த்து ரசித்துக் கொள்ளுங்கள்

குகனின் கேமரா விமானத்தில் உள்ளிருந்து தீவிரவாதிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நைசாக னாகர்ஜூன் அறைக்கு தாவுகிறது. எந்த இடத்திலும் உறுத்தாமல் செவ்வனே நம்முடன் பயணிக்கிறது கேமரா. பிண்ணணி இசை பெரிதாய் ஈர்க்கவுமில்லை. சொதப்பவுமில்லை. குறைகள் என்று பார்த்தால் கடத்தப்பட்ட உணர்வே இல்லாமல் பாத்திரங்கள் அடிக்கும் சில நகைச்சுவைகள், டப்பிங் சிங் ஆகாதது, 5 நாள் கதையில் 50 உடையில் வரும் நாகர்ஜூன் போன்றவற்றை கூறலாம்.

இரவுக்காட்சி பார்த்துவிட்டு வந்து நள்ளிரவு 2 மணிக்கு இதை தட்டச்சிக் கொண்டிருப்பதை ராதாமோகனுக்கு நான் தரும் பரிசாக நினைக்கிறேன். நிச்சயம் நீங்கள் சாதாமோகன் இல்லை சார். இனிவரும் உங்கள் படங்களை முதல் நாளே பார்ப்பேன் என்ற உறுதிமொழி தருகிறேன்.

Feb 8, 2011

ஆடுறா ராமா

17 கருத்துக்குத்து

 

சினிமா மீது மோகம் வரும் முன்பே நடனத்தில் மீது காதல் உண்டெனக்கு. நான் பார்க்கும் எல்லாப் படங்களிலும் சற்று உற்று கவனிக்கும் ஒரு விஷயம் நடனம். என்னைக் கவர்ந்த சில நடன இயக்குனர்களைப் பற்றிய பதிவு தான் இது.

இந்தப் பட்டியலில் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ராஜூ சுந்தரம் ஆகியோரை சேர்க்கவில்லை. ஒரு டான்சராக எனக்கு பிரபுதேவாவைத்தான் பிடிக்கும். ஆனால் Choreographer என்ற வகையில் ராஜு சுந்தரத்தின் பரம ரசிகன். லாரன்ஸும் நல்ல நடன இயக்குனரே.

1) ஷோபி:

shobi

ஆத்திச்சூடி பாடலில் ஆடினாரே அவரேதான். ராஜு சுந்தரத்தின் பள்ளியில் இருந்து வந்தவர். பல படங்களில் பார்த்திருப்பீர்கள். எனக்கு தெரிந்து ராஜூவின் குழுவில் இருந்து வந்தவர்களில் வித்தியாசமான முறையில் நடனம் அமைப்பவர் இவர்தான். வாள மீனுக்கு பாடலுக்கு இவரது நடனம் அத்தனை கச்சிதம். என்னைப் பொறுத்தவரை அந்தப் பாடலின் மாபெரும் வெற்றிக்கு காரணம் மாளவிகாவும் நடனமும்தான்.இப்போதைக்கு எனது ஃபேவரிட் டான்ஸ் மாஸ்டர்.

ஹிட்ஸ்:

ஆத்திசூடி, கண்ணும் தான் கலந்தாச்சு, வாள மீனுக்கு விலாங்கு மீனுக்கு, வாடி வாடி கை படாத சிடி, டாக்சி டாக்சி

2) தினேஷ்

தினா என்றும் ஒருவர் இருக்கிறார். கத்தாழ கண்ணால் பாடலுக்கு நடனம் அமைத்தவர். அவரல்ல இந்த தினேஷ் . ஒரு முறை விஜயின் படத்தில் ராஜு சுந்தரம் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்க இருந்தார். விஜயுடன் ஆட இருந்தவர் சிம்ரன். ராஜுவுக்கும் சிம்ரனுக்கும் இடையே அப்போது பிரச்சினை இருந்தது. சிம்ரன் வருகிறார் என்ற விஷயம் தெரிந்து செட்டை விட்டு சென்றுவிட்டார் ராஜு. படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்த ராஜுவின் சம்மதத்தோடு விஜய் கைகாட்டிய ஆள்தான் தினேஷ். அந்தப் பாடல் ஆல் தோட்ட பூபதி. தமிழகத்தையே ஆட வைத்த அந்தப் பாடலில் ஒரு ஓரமாக ஆடவும் செய்தார். பிரபுதேவாவின் எல்லாப் படங்களிலும் ஒரு பாடலாவது இவருக்கு இருக்கும்.

ஹிட்ஸ்:

ஆல் தோட்ட பூபதி, மாம்பழமாம் மாம்பழமாம், தீம்தனக்க தில்லானா,வா வா என் தலைவா

3) ஸ்ரீதர்

untitled

மச்சான் பேரு மதுரவில் ஆரம்பித்தது இவர் பயணம். ராஜுவின் ஆஸ்தான டான்சர்களில் ஒருவர். சில விளம்பரப்  படங்களிலும் ஆடி இருக்கிறார். இவருடன் வந்த இன்னொருவர் ஜானி. இருவருக்குமே நல்ல உடல்வாகு. ஜானி இவரை விட நன்றாக ஆடக்கூடியவர். என்றாலும் நடன இயக்குனராக அவர் கலக்கவில்லை. இவரது நடனத்தில் ராஜுவைப் போல் சற்று காமெடியும் கலந்திருக்கும்.  தமிழகத்தையே ஆட வைத்த நாக்க முக்கவின் நடனம் இவரதுதான்.

ஹிட்ஸ்:

மச்சான் பேரு மதுர,  படிச்சு பார்த்தேன் ஏறவில்லை, நாக்க முக்க

4) அசோக்ராஜா

2008101050321601

ராஜுவோட வேலை செய்திருந்தாலும் அவரது குழுவில் அதிகம் ஆடாதவர், அல்லது முன் வரிசையில் இல்லாதவர். ஆரம்பமே அதகளம் இல்லை. ஓ போடு இவரது முதல் ஹிட். பின் ஒரு சின்ன இடைவெளி. திருமலையில் வாடியம்மா ஜக்காம்மாவில் திரையில் சில வினாடிகள் தோன்றினார். தொடர்ந்து விஜய் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு தெரிந்து ராஜுவுக்கு அடுத்தபடி நிறைய ஒப்பனிங் சாங்கிற்கு நடனம் அமைத்தவர் என்ற பெருமை கொண்டவர். சற்று உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்பதை விஜய் டிவியில் வந்த ”உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அறிவார்கள்

ஹிட்ஸ்:

ஆடுங்கடா என்னை சுத்தி, வாடா வாடா தோழா, ஓ போடு, வாடியம்மா ஜக்கம்மா

5) பிரேம் ரக்‌ஷித்:

DSC_00321233077629

தெலுங்கு திரையுலகில் இருந்து வந்தவர். ஆந்திராவில் கிட்டத்தட்ட அனைத்து முண்ணனி நடிகர்களுக்கும் ஆஸ்தான நடன இயக்குனர். well defined steps  ஆக இல்லாமல் வித்தியாசமான முறையில், குறிப்பாக கால்களை மடக்கி ஆடும் ஸ்டைல் இவருடையது. ஒரு பாடல் சொன்னாலே புரிந்துக் கொள்வீர்கள். எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலில் விஜயின் கால்களை மடக்கி ஒடித்தவர் இவர் தான். இந்தப் பட்டியலில் ராஜுவின் பள்ளியில் இருந்து வராத ஒரே ஒருவர். இவரது தெலுங்கு பாடல்கள் இன்னும் தூளாக இருக்கும். சாம்பிளுக்கு ஒன்று இங்கே

ஹிட்ஸ்:

எல்லாப் புகழும், டன் டன் டன்னா டர்னா.

*************************************************

பின்.கு 1: இவர்களைத் தவிர சரோஜா சாமான் நிக்கோலா புகழ் கல்யான், சிம்புவின் ஃபேவரிட் ராப்ர்ட், கூல் ஜெயந்த் என பலர் இருந்தாலும் என்னைக் கவரவில்லை என்பதால் குறிப்பிடவில்லை.

பின். கு 2: விஜயின் பாடல்களே அதிகம் இருப்பதாக தெரிகிறதா? எனக்கு விஜயின் நடனம் பிடிக்குமென்பதால் அவரது பாடல்களுக்கு நடனம் அமைத்தவர்கள் பெயரை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். மற்றவர்கள் படங்களில் அந்த ஆர்வம் இருக்காது.

இலவச இணைப்பு : என்னைப் பொறுத்தவரை பீட்ஸ், பாடலின் வேகம், ஒளிப்பதிவு, ஆடுபவர்கள் என எல்லாமும் பாடலுக்கு ஏற்றவாறு பக்காவாக (நடனத்தை பொறுத்தவரை)  அமைந்த பாடல்

 

Feb 7, 2011

ஜிந்த்தக்தா ஜிந்த்தக்தா ஜிந்த்தக்தா த்தா

14 கருத்துக்குத்து

image 
ஹலோ பாஸ். நான் ராஜா பேசுறேன். எப்படி இருக்கீங்க? நான் உங்க பிளாக் ரெகுலரா படிப்பேன்.

சொல்லுங்க ராஜா. நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

மனசு சரியில்ல பாஸ். உங்கக்கிட்ட பேசினா சரியா போகுன்னு நினைக்கிறேன். உங்க மொக்கையெல்லாம் எங்களுக்கு மருந்து பாஸ் மருந்து,,

அப்படி என்ன ஆச்சு தல? சொல்லுங்க

நான் ஒரு பொண்ண காதலிச்சேன் பாஸ்.

நாங்க மட்டும் என்ன பசங்களையா லவ் பண்றோம்?

கலாய்க்கதீங்க பாஸ். ஒன்சைட் லவ்.

ஃப்ரண்ட் சைடா, பேக்சைடா தல?

என்ன பாஸ்? புரியல.

ஒன்சைடுன்னு சொன்னீங்களே. அதான் எந்த சைடுன்னு..

இதெல்லாம் ஓவருங்க. நான் லவ் பண்ண பொண்ணு அவ.

சாரி தல. அப்புறம் சொல்லுங்க.

அப்போ நான் ஆறாவது படிச்சிட்டிருந்தேன்.

இப்ப வரைக்கும்… சரி. ரிப்பீட் ஜோக் வேணாம். நீங்க சொல்லுங்க.

அப்பவே அவ மேல அப்படி ஒரு லவ் சார்

முதல்ல சைடு லவ்வுன்னு சொன்னீங்க. இப்ப என்ன மேல, டாப்புல?

கோவப்படுத்தாதீங்க பாஸ்.

அதுக்கில்ல தல. பொண்ணுங்கள மட்டும் நம்பவே கூடாது. முன்ன பின்ன தெரியாத பொண்ணுன்னா கூட உங்கக்கிட்ட கேட்டா ஹெல்ப் பண்ணுவீங்களா இல்லையா?

ஆமாம். பண்ணுவேன்.

ஆனா முன்னபின்ன தெரியாத பையனுக்கு எந்த பொண்ணாவது ஹெல்ப் பண்றாங்களா? அட தெரிஞ்ச பசங்க கஷ்டப்படறாங்களேன்னு ஒரு முத்தமாவது தந்து இருக்காங்களா? பசங்கதான் தல வெயிட்டு.

நாமதான் வெயிட்டுன்னு நீங்க சொல்றது ரைட்டு மாதிரி தெரிஞ்சாலும் பொண்ணுங்கதான் பாஸ் ஸ்வீட். ஒரு தடவ ஹனி இல்லை ஹனி.. அதான் பாஸ் தேன். அது கடவுள்கிட்ட கேட்டுச்சாம் நான் தானே உலகத்துல ஸீவ்ட்டுன்னு. அதுக்கு கடவுள் சொன்னாராம். இல்லையில்லை. இந்த ராஜான்னு ஒருத்தன் லவ் பண்றானே.. அந்த பொண்ணுதான் ஸ்வீட்ன்னு. அந்த ராஜா நான் தான் பாஸ். இதுல இருந்து என்ன தெரியுது?

ம்ம்.. கடவுள் கூட ஜோக்கெல்லாம் அடிப்பாருன்னு புரியுது தல. பொண்ணுங்க மெண்ட்டாலிட்டி நான் சொல்றேன் கேளுங்க. எல்லா அம்மாவும் தன் பொண்ணுக்கு தனக்கு கிடைச்சத விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பாருன்னு நினைப்பாங்க. ஆனா தன் மகனுக்கு மட்டும் எப்படியும் தன்னை விட சுமாரான பொண்ட்டாட்டி தான் கிடைப்பான்னு சொல்வாங்க.

உங்க சைக்காலிஜி பேச்சுல என் லவ்வ விட்டனே பாஸ். கதையை கேளுங்க. எனக்கு தாடி வச்சா அழகா இருக்கும்ன்னு 10வது படிக்கிறப்ப சொன்னா.

11வதுல பேசுறதையே ஸ்டாப் பண்ணியிருப்பாங்களே அண்ணி. கரெக்டாண்ணே?

ம்ம்.ஆமா.எப்படி?

கழட்டி விடப் போறேன்னு சொல்லாம சொல்லி இருக்காங்க. நீங்களும் ஆடு மாதிரி வளர்த்துக்கிட்டு திரிஞ்சிருக்கீங்க.

அப்படியா பாஸ்? பொண்ணுங்கள ரொம்ப நம்பிட்டேனே. ச்சே

விடுங்க தல. இனிமேலாவது புரிஞ்சு நடந்துக்கோங்க. பொண்ணுங்க சக்தி மாதிரி. அத ஆக்கவோ அழிக்கவோ முடியாது. law of conversion of energy படிச்சி இருக்கீங்களா? அந்த மாதிரி

இனிமேல எந்த பொண்ணு கூடவும் பேசக்கூடாது பாஸ். இருக்கிற எல்லா நம்பரையும் உடனே அழிச்சுடறேன்.

அட இப்பதானே தல சொன்னேன். அவங்கள அழிக்க முடியாதுன்னு. வேணும்ன்னா ஒரு சக்திய இன்னொரு சக்தியா மாத்தலாம்.

புரியலையே குரு.

ரொம்ப சிம்பிள்.  இப்ப நம்பர் உங்க ஃபோன்ல இருக்கா. அது அழிக்கிற சக்தியா இருக்கு. அதெல்லாம் என் ஃபோனுக்கு வந்துட்டா நல்ல சக்தியா மாறிடும். லைனா எல்லா நம்பரையும் பேரையும் சொல்லுங்க பார்ப்போம்

_____

ஹலோ.. ஹலோ

உன்னையெல்லாம் மதிச்சு ஃபோன் பண்னேன் பாரு. என்னை அடிச்சுக்கணும்.

ஜிந்தாக் தக் தக் ஜிந்தாதக் தக் ஜிந்தாக் தக் தக் தா…

Feb 4, 2011

”தல” பாட்டு

16 கருத்துக்குத்து

 

 

 

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!

 

மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ

Feb 1, 2011

கன்னக்கோல்

21 கருத்துக்குத்து

 

ஊழிப்பெருங்கடல் உள்விழுங்கும் கன்னப் பெருஞ்சுழி
சேர்ந்துழன்ற விழிமிசை வயதும் வசமிழந்து
உறுதேன் சுவையேகிட வன்மத்தால் வாலிபத்தில்
காமமாகிய காமங்கலந்து காமம் இடறா
சொல்லிழைத்து மறைபொருளோடு சாமரமேகி
வாழ்த்தொன்றாய் சமர்ப்பித்தான் நல்லிசையெனவே!

மெட்டமைத்த வித்தகன் தன்னிறை யிசையாலே
இதுவரை இசையாத மனத்தினாளும் சேர்ந்திசைக்க
காப்பியக் காட்சிகள் விழியாளும் பிம்பங்களாய்
இதழ்கள் ஒத்திசைக்க தோள்தழுவ கையணைக்க
மதிபுரள மனம்பிறழ ஊறுவினை நீதிவழி
காலமீன்ற இவன்விதி அவள்திசை மாற்றிற்று!

திரையிடா கதையொன்றில் நடிக்காத பாத்திரமவள்
காணாத பாசத்தின் கடையீறு எழுத்துமவள்
உகுக்காத கண்ணீரில் கலையாத கோலமவள்
எழுதாத எழுத்துக்களும் போற்றாத அழகியவள்!

உள்விழுங்கி உள்ளுறைந்து தன்மயமாதலுள்
கனவும் காதலும் காமமும் அன்றாடமாக்கி
காலந்தின்ற பசிநோயும் அவள்திசை மாற்றிற்று!

ஒளிமறைவில் உறவாடி இருள்மறையின் கோசமிட்டு
புறம்பேசி அறம்போற்றி உயிர்வாழும் நற்சபையோர்
எச்சிலென்றா எச்சமென்றா பிழையென்றா பிச்சியென்றா
இதுபோலும் மாந்தர்களை எப்படித்தான் இகழ்வாரோ?

 

all rights reserved to www.karkibava.com