Jan 13, 2011

வாங்க முடியாத கார்


 

நேற்று மீண்டும் ஒரு முறை புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இணையத்தில் மேய்பவர்களுக்கு சென்னையில் இந்த கண்காட்சியைத் தவிர வேறெதுவுமே நடக்கவில்லையா என்ற சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. அவர்களுக்காக இதோ சில சம்பவங்கள்.

1) சீமான் அம்மாவினடி சேர்ந்தார்.

2) நடக்குமா நடக்காதா என்றிருந்த சங்கமம் தொடங்கிட்டது.

3) நடிகர் கார்த்தியின் வீடு முன்பு நாடர்கள் மறியல் செய்தார்கள்.

சரி.நாம் புத்தக கண்காட்சிக்கு வருவோம். கொட்டிகிடக்கும் புத்தகங்களை பார்க்கும் போது மலைப்பாக இருந்தது. ரியல் எஸ்டேட்டினால் திடீர் கோடீஸ்வரன்கள் ஆன பாக்கியவான்களின் புத்திரர்கள் சினிமாவில் நடிப்பது போல , பதிவின் மூலம் கிடைத்திருக்கும் ரீச் பலரை “எழுத்தாளர்” ஆக்கியிருக்கிறது. ஆனால் அதன் எண்ணிக்கை புத்தகங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் 1 % குறைவாகவே இருக்கும். எல்லாப் புத்தகத்தின் பின்னால் இருக்கும் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, தேர்தல் அறிக்கையை படிப்பது போல குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

”நகர வாழ்வின் நெருக்கடிகளினூடே இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்திருக்கிறார் ஆசிரியர். அன்றாட வாழ்க்கையின் அபத்தங்களை பற்றிய நுண்ணிய பார்வை இவரின் எழுத்துக்கு தார்மீக பொறுப்பேற்கிறது. நாம் தினமும் காணும் அனைவரும் இவரின் கதைகளில் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இலக்கிய மேதைகள் வரிசையில் இவர் பெயரும் வரும் நாள் தொலைவில் இல்லை. இத்தொகுப்பு அதற்கு பிள்ளையார் சுழி”. இதற்கு கீழோ, வலது புறமாகவோ கண்ணாடியை கையால் அளப்பது போன்று போஸ் தந்திருப்பார் ஆசிரியர். கவிஞர் என்றால் கைகளை கட்டிக் கொண்டு அடிவானில் பறக்கும் திசைக்காட்டி பறவையை பார்த்துக் கொண்டிருப்பார். கட்டுரையாளர் என்றால் குறுந்தாடியுடன் மென்சோகத்தை முகத்தில் தவழ விட்டுக் கொண்டிருப்பார். இதை வைத்தே அது சிறுகதை தொகுப்பா, கவிதைகளா, கட்டுரைகளா என்று அறிபவனே உண்மையான வாசகன்.

அப்படி ஒரு சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது “நல்ல புக்கு சார்” என்று வந்தார் ஒருவர். பதிப்பாளராக இருக்குமோ என்று பார்த்தேன். 50 ரூபாய் சார். 40க்கே தர்றோம் என்றார். சிரித்தேன். நல்லா இருக்குன்னு விமர்சனம் வந்திருக்கு சார். 35க்கே கூட கொடுப்பாங்க என்று கவுண்ட்டரை காட்டினார். இன்னுமொரு முறை சிரித்தால் 25 ஆகுமோ என்று சிரித்தேன். 30 ஆனது. எக்ஸ்பயரி டேட் ஆன புத்தகமாக இருக்குமோ என்று மீண்டுமொரு முறை புத்தகத்தை நோட்டம் விட்ட போது ஆசிரியரின் முகம் பரிச்சமாய் தெரிந்தது. யாராக இருக்கும் என்று நிமிர்ந்தால் அட்டையில் இருந்த ஆசிரியர் உயிர்பெற்று எதிரில் வந்து 25 ரூபாய்க்கு கம்மியா தர மாட்டாங்க சார் என்றார்.

இன்னொரு ஸ்டாலில் இயக்குனர் சீனு ராமாசமி எழுதிய ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல் என்ற புத்தகம் கண்ணில் பட்டது . பாலு மகேந்திராவின் முன்னுரையோடு  இருந்த கவிதை தொகுப்பில் மொத்தம் 32 கட்டுரைகள் இருந்தன. அதன் பின் அட்டையில் கோட்,சூட் டையோடு இருந்தார் சீனு இராமசாமி. அவரின் கூடல் நகர் 1997ல் வெளி வந்ததாக சொல்லியிருந்தார்கள். நான் அதை 2005லோ 2006லோதான் பார்த்தேன்.

கார் வாங்குவது எப்படி என்று நர்சிம் தரும் டிப்ஸ் கிழக்கில் புத்தகமாக கிடைக்கிறது. அவரிடம் வாங்கவே முடியாத கார் எது தெரியுமா சகா என்ற போது சிரித்து மழுப்பினார். சுவாமி ஓம்கார் என்றேன். பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் நம் சுவாமி.  “எனக்கு ஃபோன் செய்பவர்கள் எல்லாம் நாத்திகர்களாகவே இருக்கிறார்கள். சொல்லி வைத்தது போல் சாமி இல்லையா என்கிறார்கள்.” இப்படி வெடி வைப்பதில் சுவாமி கில்லாடி. சுவாமி ஒரு எஞ்சினியர். ஓம்கார் என்பதால் மெக்கானிக்கல் எஞ்சினியர் என்றேன் நான். இல்லையில்லை அவர் சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்றார் இன்னொருவர். உள்ளே இருக்கும் உயிரை சாஃப்ட்வேர்னு சொல்றீங்களா என்றார் சுவாமி. உள்ள இருந்தா அது அண்டேர்வேர் சுவாமி என்றேன் நான். சுவாமி சாப்பிடறது தான் வேர் என்றார் அப்துல்லா. சாமியார்கள் எல்லாம் ரஞ்சிதாக்கள் கூட ஜில்ஜில் ஜிகாஜிகா செய்யும் வேளையில் எங்களிடம் மொக்கை வாங்க வேண்டும் என்று அவர் தலையில் எழுதிய கடவுளை என்ன செய்வது?

இந்த புக் ஃபேரில் சந்தித்த முக்கியமான நபர் பதிவர் எம்.எஸ்.கே. தன்னை இதுவரை வெளிப்படுத்திக் கொள்ளாத கிணற்று தவளை அவர். டெரர் கவிதைகள் எழுதுவதில் அண்ணன் அனுஜன்யாவையே ஓரங்கட்டியவர். சேம்பிளுக்கு ஒன்று தருகிறேன். கவிதை அலர்ஜி என்பவர்கள் டபுள் புரமோஷனில் அடுத்த பத்திக்கு தாவிவிடவும்.

பெருவானத்தின்
அனைத்துத் திசைகளையும்
விழுங்கிச் செரித்த
கருநீலப்பறவையொன்று
மலைப்பாறையொன்றின் மீது மோதி
உயிரை மாய்த்துக்கொண்டது
செஞ்சூரிய நிறத்து மலை
வான் நீல நிறத்துக்கு
மாறத்துவங்கியது
மெல்ல மெல்ல.

எழுதுற மாதிரியே பேசறீங்க சகா என்றார். அவ்ளோ மொக்கையாவா இருக்கேன் என்று கேட்க நினைத்து ஆமாம் என்ற பதிலை தவிர்க்க கேள்வியையே தவிர்த்தேன். ஆனால் அவர், அவரின் எழுத்து போல சீரியஸ் இல்லை. 25 வயதுக்கே உரிய துள்ளலுடனே இருக்கிறார். யூமா வாசுகியின் ரத்த உறவு எங்க கிடைக்கும் சகா என்று என்னிடம் கேட்காத போதே புரிந்தது எனக்கு. எம்.எஸ்.கே வை நான் கலாய்த்த பதிவை படிக்க இங்கே சொடுக்கலாம்.

வம்சி பதிப்பகம் பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். மீண்டும் ஒரு முறை சென்றபோது அய்யனாரின் தனிமையின் இசை புத்தகம் எடுத்தேன். அய்யனாரின் மாஸ்டர் பீஸில் ஒன்றான என்னை விட்டு போயிருக்க வேண்டாம் ஹேமா, புத்தகத்தில் மீராவாகியிருந்தது. இண்டெக்ஸீல் 46ஆம் பக்கத்தில் இந்த கதை என்றார்கள். ஆனால் உள்ளே 57ஆம் பக்கத்தில் இருந்தது. இன்னொரு புத்தகத்தில் பக்கங்களே தவறாக பைண்ட் செய்ப்பட்டிருந்தது. வம்சியிடம் ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஃபினிஷிங் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த முறை நான் வாங்கிய சில புத்தகங்கள்:

1) ஸ்ட்ராபெரி – உயிர் எழுத்து பதிப்பகம். (ஜாலியோ ஜிம்கானா கதைகள் என்கிறார்கள்)

2) உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி பதிப்பகம்.

3) சித்தர் பாடல்கள் – நக்கீரன் பதிப்பகம்.

4) வெயில் தின்ற மழை – நிலாரசிகன் - உயிர்மை

5) பாலகாண்டம் – நா.முத்துக்குமார் – பட்டாம்பூச்சி பதிப்பகம்.

6) கதை நேரம் – பாலுமகேந்திரா – வம்சி பதிப்பகம் (திரைக்கதை+மூலக்கதைகள்)

பி.கு :

1) அரங்கில் கீழே போடப்பட்டிருந்த மிதியடிகள் பச்சை, நீலம் போன்ற நிறங்களில் இருந்தன. கீழைக்காற்று பதிப்பகம் அருகே இருந்த மிதியடி மட்டும் சிவப்பு நிறத்தில் இருந்ததை கவனித்தீர்களா?

2) 4,5 இளைஞர்கள் எஸ்.ராவிடம் பவ்யமாக பேசிக் கொண்டிருக்க, தலைவர் சாரு அவருக்கு பக்கத்தில் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திக் கொண்டிருந்த புகைப்படமும், சிறப்பு பதிவும் பொங்கல் கழித்து வெளியாகும்.

13 கருத்துக்குத்து:

Kaarthik on January 13, 2011 at 12:35 AM said...

"வாங்கவே முடியாத கார் - சுவாமி ஓம்கார்" ரூம் போட்டு யோசித்தவைகளில் ஒன்றா?? அப்போ அந்த காரோட கீ நீங்களா CarKey? ;-)

ப்ரியமுடன் வசந்த் on January 13, 2011 at 12:40 AM said...

//செஞ்சூரிய நிறத்து மலை
வான் நீல நிறத்துக்கு
மாறத்துவங்கியது
மெல்ல மெல்ல. //

அட!

செஞ்சூரிய நிறத்து மாலை வான் அப்படின்னு வந்தாலும் பொருந்துதே!

சுசி on January 13, 2011 at 4:50 AM said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் கார்க்கி.

Philosophy Prabhakaran on January 13, 2011 at 5:23 AM said...

// ”நகர வாழ்வின் நெருக்கடிகளினூடே இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்திருக்கிறார் ஆசிரியர். அன்றாட வாழ்க்கையின் அபத்தங்களை பற்றிய நுண்ணிய பார்வை இவரின் எழுத்துக்கு தார்மீக பொறுப்பேற்கிறது. நாம் தினமும் காணும் அனைவரும் இவரின் கதைகளில் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இலக்கிய மேதைகள் வரிசையில் இவர் பெயரும் வரும் நாள் தொலைவில் இல்லை. இத்தொகுப்பு அதற்கு பிள்ளையார் சுழி”. இதற்கு கீழோ, வலது புறமாகவோ கண்ணாடியை கையால் அளப்பது போன்று போஸ் தந்திருப்பார் ஆசிரியர். கவிஞர் என்றால் கைகளை கட்டிக் கொண்டு அடிவானில் பறக்கும் திசைக்காட்டி பறவையை பார்த்துக் கொண்டிருப்பார். கட்டுரையாளர் என்றால் குறுந்தாடியுடன் மென்சோகத்தை முகத்தில் தவழ விட்டுக் கொண்டிருப்பார். இதை வைத்தே அது சிறுகதை தொகுப்பா, கவிதைகளா, கட்டுரைகளா என்று அறிபவனே உண்மையான வாசகன். //

இந்த பத்தி முழுவதும் செம நக்கல்ஸ்... ரசித்துப் படித்தேன்... எழுத்துநடை அருமை அண்ணா...

மிதியடி கலர் வரைக்கும் உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க போல... அந்த எஸ்.ரா, சாரு படத்தை சீக்கிரமா வெளியிடுங்க...

மாணவன் on January 13, 2011 at 6:48 AM said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

MSK on January 13, 2011 at 10:55 AM said...

நன்றி சகா.. :)

//இதை வைத்தே அது சிறுகதை தொகுப்பா, கவிதைகளா, கட்டுரைகளா என்று அறிபவனே உண்மையான வாசகன்//
lol :)))

//கீழைக்காற்று பதிப்பகம் அருகே இருந்த மிதியடி மட்டும் சிவப்பு நிறத்தில் இருந்ததை கவனித்தீர்களா//
புரட்சி பரவிக்கொண்டே வருகிறது.. அடுத்தவருடம் எல்லா மிதியடியும் சிவப்பு நிறமாகிவிடும்.. புரட்டாசி வருகிறது.. ச்சே. புரட்சி வருகுது..

நர்சிம் on January 13, 2011 at 11:48 AM said...

//இருந்த கவிதை தொகுப்பில் மொத்தம் 32 கட்டுரைகள் இருந்தன//

;);)

தர்ஷன் on January 13, 2011 at 11:53 AM said...

//எக்ஸ்பயரி டேட் ஆன புத்தகமாக இருக்குமோ //
//உள்ளே இருக்கும் உயிரை சாஃப்ட்வேர்னு சொல்றீங்களா என்றார் சுவாமி. உள்ள இருந்தா அது அண்டேர்வேர் சுவாமி என்றேன் நான்//

அட இதெல்லாம் சூப்பர் சகா

//இருந்த கவிதை தொகுப்பில் மொத்தம் 32 கட்டுரைகள் இருந்தன//

//அவரின் கூடல் நகர் 1997ல் வெளி வந்ததாக சொல்லியிருந்தார்கள். நான் அதை 2005லோ 2006லோதான் பார்த்தேன்.//

நமக்கு குறைகள் மட்டும்தான் தெரியுமோ?

//தலைவர் சாரு அவருக்கு பக்கத்தில் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திக் கொண்டிருந்த//

போங்க சகா அவரு 2000 பேருக்கு ஆட்டோகிராப் போட்டதைப் பார்த்து நீங்களெல்லாம் கண்ணுப் பட்டதால்தான் இப்ப வெப்சைட்டுக்கு ஏதோ ஆகிருச்சு

சிட்டி பாபு on January 15, 2011 at 5:09 PM said...

ஆசிரியரின் முகம் பரிச்சமாய் தெரிந்தது. யாராக இருக்கும் என்று நிமிர்ந்தால் அட்டையில் இருந்த ஆசிரியர் உயிர்பெற்று எதிரில் வந்து 25 ரூபாய்க்கு கம்மியா தர மாட்டாங்க சார் என்றார்.

பாவம் இப்படி போட்டு தாக்கி றீங்களே

மோகன் குமார் on January 20, 2011 at 10:16 AM said...

இப்போ தான் படிச்சேன். செம காமெடி

ஆதிமூலகிருஷ்ணன் on January 21, 2011 at 4:07 PM said...

”நகர வாழ்வின் நெருக்கடிகளினூடே இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்திருக்கிறார் ஆசிரியர். அன்றாட வாழ்க்கையின் அபத்தங்களை பற்றிய நுண்ணிய பார்வை இவரின் எழுத்துக்கு தார்மீக பொறுப்பேற்கிறது. நாம் தினமும் காணும் அனைவரும் இவரின் கதைகளில் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இலக்கிய மேதைகள் வரிசையில் இவர் பெயரும் வரும் நாள் தொலைவில் இல்லை. இத்தொகுப்பு அதற்கு பிள்ளையார் சுழி”.//

ஓம்கார்//

பல இடங்களில் ரசித்துச் சிரித்தேன். செமையான பதிவு.

கடைசியா MSK யை நீ முதல்ல பிடிச்சிட்டியா? அவனை எபப்டியாவது வெளிய வரவைச்சு புடிச்சு கலாய்க்கணும்னு நானல்லவா பிளான் பண்ணியிருந்தேன். :-(

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on January 26, 2011 at 1:20 AM said...

ஒரே பதிப்பகத்தாரின் ஒரே மாதிரியான புத்தகக் கண்காட்சி பதிவுகளைப் படித்து அலுத்திருந்த எனக்கு, உங்கள் பதிவு பிடித்திருந்தது.

deepak on January 9, 2012 at 11:22 PM said...

உங்க புத்தகம் எப்போ கார்க்கி.. படிச்சிட்டு நாங்களும் கமெண்ட் பன்னுவோம்ல .. :)

 

all rights reserved to www.karkibava.com