Jan 31, 2011

சுடுறா சுடுறா..சூனாபானா

23 கருத்துக்குத்து

 

image

image

image 

image

image

image

Jan 30, 2011

கலைஞர் ஒழிக

39 கருத்துக்குத்து

 

சென்ற‌ வார‌ம் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ம் இது. அவ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரும் அலுவ‌ல‌க‌ ப‌ணி நிமித்த‌ம் ஒரு பாரில் ச‌ந்தித்திருக்கிறார்க‌ள். ர‌ம்ம‌டிக்க‌லாம் என‌ முடிவு செய்து விலை உய‌ர்வாக‌ என்ன‌ ர‌ம் இருக்கிற‌து என்று கேட்டிருக்கிறார்க‌ள். அலுவ‌ல‌க‌த்தில் ப‌ண‌ம் த‌ந்துவிடுவார்க‌ள் என்ப‌தால் அதிக‌ விலையில் கேட்டிருக்கிறார்க‌ள். ப‌ணியாள‌ர் சொன்ன‌ எந்த‌ பிரான்டும் இவ‌ர்க‌ளுக்கு பிடிக்க‌வில்லை. நிதான‌மிழ‌ந்த‌ ப‌ணியாள‌ர் "ரொம்ப‌ காஸ்ட்லியா வேணும்ன்னா ஸ்பெக்ட்ர‌ம் தான் சார் வாங்க‌ணும். அது சி.ஐ.டி கால‌ணியில் கிடைக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.ஸ்பெக்ட்ர‌ம் என்ப‌து புரிந்திருக்கும். அது என்ன‌ சி.ஐ.டி கால‌ணி என்று முழிப்ப‌வ‌ர்க‌ளுக்கு; அங்குதான் முத‌ல்வ‌ரின் புத‌ல்வி க‌னிமொழியின் வீடு இருக்கிற‌து.

  ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ளின் தேர்வாக‌ இருந்த‌ திமுக‌ சென்ற‌ தேர்த‌லில் அடித்த‌ட்டு ம‌க்க‌ளின் ஆத‌ர‌வையும் பெற்று ஆட்சியில் அம‌ர்ந்த‌து. ஆனால் இன்றைய‌ நிலையில் ஏ,பி,சி என‌ எல்லா ம‌ட்ட‌ங்க‌ளிலும் திமுக‌விற்கு எதிரான‌ நிலையே இருக்கிற‌து. ல‌ட்ச‌ங்க‌ளிலில் ஊழ‌ல் ந‌ட‌ந்திருக்கிற‌து. கோடிக‌ளில் கூட‌ ந‌ட‌ந்திருக்கிற‌து. ஆனால் ல‌ட்ச‌ம் கோடிக‌ளில் ஊழ‌ல் என்ப‌தை த‌மிழ‌ன் இப்பொழுதுதான் கேள்விப்ப‌டுகிறான். அது ஊதி பெரிதாக்க‌ப்ப‌ட்ட‌ தொகை என்றாலும் திமுக‌ வ‌ச‌ம் வ‌ந்த‌ தொகை இது வ‌ரை யாராலும் "ல‌வ‌ட்ட‌ப்படாத‌" தொகை என்ப‌து ம‌ட்டும் நிச்ச‌ய‌ம். சோப்புக்கு ஷாம்பூ இல‌வ‌ச‌ம் என்ப‌து போல் இந்த‌ ஊழ‌லோடு வெளியான‌ ராடியா டேப் விவ‌கார‌ம் திமுக‌வின் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மான‌த்தையும் க‌ப‌ளீக‌ர‌ம் செய்துவிட்ட‌து. அடித்தட்டு மக்கள் வரை ராடியா டேப் விவகாரம் பரவவில்லையென்றாலும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. கலைஞர் கொடுத்த டிவி வழியாகவே மக்கள் இதை தெரிந்துக் கண்டதை “சொந்த செலவும் சூணியம்” என நக்கலடிக்கிறார்கள்.

சென்ற‌ முறை நான் திமுக‌விற்கு வாக்க‌ளிக்க‌ முக்கிய‌ கார‌ண‌ம் த‌ர்ம‌புரியில் அதிமுக‌வின‌ர் மூன்று மாண‌விக‌ளை உயிரோடு எரித்த‌ ச‌ம்ப‌வ‌ம்தான். அத‌ற்கும் ச‌ற்றும் குறையாத‌ வ‌கையில் ம‌துரை தின‌க‌ர‌ன் அலுவ‌ல‌க‌த்தில் ஒரு துய‌ர‌ ச‌ம்ப‌வ‌த்தை ந‌ட‌த்தி காட்டிய‌து திமுக‌. ம‌துரை மாந‌க‌ராட்சி மேய‌ர் என‌ நினைக்கிறேன். புட‌வையை ம‌டித்துக் க‌ட்டிக் கொண்டு க‌ல‌வ‌ர‌த்தில் இற‌ங்கிய‌ காட்சி இன்னும் நினைவில் இருக்கிற‌து. இப்போது ச‌ன் குடும்ப‌மும் க‌லைஞ‌ர் குடும்ப‌மும் ஒன்று சேர்ந்துவிட்டார்க‌ள். ஆனால் உயிர் இழ‌ந்த‌வ‌னின் குடும்ப‌ம் என்ன‌ செய்து கொண்டிருக்கும்? என்னைப் போல‌ அவ‌ர்க‌ளும் மான‌ங்கெட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் என்றால் ச‌ன் டிவியோ, க‌லைஞ‌ர் டிவியயையோத்தான் பார்த்துக் கொண்டிருக்கும். திமுக‌வின் நிர்வாகிக‌ள் எப்போதும் இல்லாத‌ அள‌விற்கு ர‌வுடியிச‌த்திலும், வ‌ன்முறையிலும் இற‌ங்கிவிட்டார்க‌ள். இன்னும் ஒரு முறை அவ‌ர்க‌ள் வ‌ச‌ம் ஆட்சி வ‌ந்தால் ர‌ஜினியின் வ‌ச‌ன‌த்தைத்தான் சொல்ல‌ நேரிட‌ம். "த‌மிழ‌க‌த்தை ஆண்ட‌வ‌னாலும் காப்பாற்ற‌ முடியாது".

தாத்தா க‌தை எழுதுகிறார். பேர‌ன்க‌ள் த‌யாரிக்கிறார்க‌ள். விநியோக‌ம் செய்கிறார்க‌ள். ந‌டிக்கிறார்க‌ள். ஸ்டாலினும். அழ‌கிரி ம‌ட்டும் ஏன் பொறுமை காக்கிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை. பிர‌புவையும், பிர‌காஷ்ராஜையும் த‌மிழ‌க‌த்தின் எல்லையைத் தாண்டி ஓட‌ சொல்லிவிட்டால் அவ‌ர்க‌ள் இருவ‌ரும் அழ‌காக‌ அந்த‌ பாத்திர‌ங்க‌ளில் ந‌டிக்க‌லாம். க‌னிமொழி க‌விஞ‌ர் தானே? அவ‌ரையே பாட‌ல் எழுத‌ சொல்லிவிட‌லாம். ம‌னோர‌மாவிற்கு வ‌ய‌தாகிவிட்ட‌து. கூப்பிடுங்க‌ள் ராஜாத்தி அம்மாளை. இந்திய‌ அள‌வில் சிற‌ந்த‌ குடும்ப‌ப் ப‌ட‌த்திற்கான‌ தேசிய‌ விருதை த‌ராமாலா போய்விடுவார் ம‌ன்மோக‌ன் சிங்?

த‌மிழ‌க‌த்தின் மீன‌வ‌ர்க‌ள் 500 பேர் இல‌ங்கை ராணுவ‌த்தால் சுட்டுக் கொல்ல‌ப் ப‌ட்டிருக்கிறார்க‌ள்.  க‌டித‌ம் எழுதி முடித்துவிட்டாராம். க‌வ‌ர் ஒட்ட‌ கோந்து வாங்கி வ‌ர‌ போயிருக்கிறாராம் த‌ங்க‌பாலு. மீன்க‌ள் செத்து மித‌ந்தாலே க‌ட‌ல் கெட்டுவிடும். இங்கே மீன‌வ‌ர்க‌ள் செத்து மித‌க்கிறார்க‌ள். அப்பொழுது மூவ‌ர்ண‌க்கொடியை ப‌ற‌க்க‌விட்டுக் கொண்டிருக்கிறார் க‌லைஞ‌ர். இனி அவ‌ர் மீன் குழ‌ம்பு சாப்பிடும்போதெல்லாம் முள் தொண்டையை ம‌ட்டுமா குத்தும்? அவ‌ர் ம‌ன‌தையும் குத்தாதா? மீனுக்கு இருக்கும் முதுகெலும்பு கூட‌ இவ‌ருக்கு இல்லாம‌ல் போன‌து ஆச்ச‌ரிய‌ம்தான். த‌மிழ‌ன‌த்த‌லைவ‌ரே!! மீன‌வ‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் தான் என்ப‌தை எப்போது உண‌ர்வீர்க‌ள்? தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் மிதப்பேன் என்றவரை உண்மையிலே தூக்கி எறிய வேண்டிய காலம் வந்துவிட்டது.

ஜெய‌ல‌லிதாவோடு ஒப்பிடும்போது க‌லைஞ‌ர் தேவ‌லாம் என்ற‌ எண்ண‌த்தில்தான்  திமுகவிற்கு  வாக்க‌ளித்தோம். இத‌ற்கு அவ‌ரே தேவ‌லாம் என்று எண்ணும்ப‌டி ந‌ட‌ந்துக் கொண்டிருக்கிறார் 87 வ‌ய‌து இளைஞ‌ன். இவர் குடும்ப‌த்து உறுப்பின‌ர்க‌ளுக்கு வாக்குரிமை இருக்கும்வ‌ரை  டெப்பாசிட் பாதுகாப்பாக‌த்தான் இருக்கும். ஆனால் வெற்றி திமுகவை விட்டு தூர‌ வில‌கிவிடும். ஈழ‌த்தின் ஓல‌ம் இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கிற‌து. இப்பொழுது அது த‌மிழக‌த்தின் க‌ட‌ற்க‌ரை வ‌ரை வ‌ந்துவிட்ட‌து. த‌மிழ‌க‌த்தின் உள்ளே வ‌ரை அது வ‌ராம‌ல் இருக்க‌ காங்கிர‌ஸ் + திமுக‌ கூட்ட‌ணியை எதிர்ப்ப‌தைத் த‌விர‌ வேறு வ‌ழியில்லை.

Jan 27, 2011

டெரர் ட்வீட்ஸ்

18 கருத்துக்குத்து

 

சிம்பு காலில் ஆணி #ஆவ‌ணி வ‌ந்தா தானே டாப்புல‌ போக‌ முடியும்?

வாழும் க‌லை சொல்லித் த‌ருகிறாராம் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்.  உங்க‌ளுக்கு ந‌க்மா இருந்தாங்க‌. எங்க‌ளுக்கு யார் இருக்கா?

நித்யாவின் ஆசிரமத்தில் ”கோடான கோடி” பாட்டுக்கு ஆடிய நடிகை சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். #கேமராசரியாவைடாலெனின்

சாரு பேசுவ‌தை எல்லாம் பார்க்கும் போது அவ‌ர் எப்ப‌டி சாப்பிடுவார் என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ருகிற‌து #verbaldiarrhea

உசுரு போனா கூட‌ ம‌சுரா போச்சுன்னு விட‌ முடியும்.. ஆனா ஒரு ம‌சுரு போனா கூட‌ உசுரே போற‌ மாதிரி இருக்கு. #முடிகொட்டுத‌ல்

விமர்சனத்தின் முடிவில் ரைமிங்காக பன்ச் வைக்கும் பதிவர்கள் மங்காத்தாவுக்கு என்ன சொல்வார்கள் என்ற பயம் என்னை ஆட்கொள்கிறது

சாரு பிளாகில் எழுத‌லாம். ஃபேஸ்புக்கில் எழுத‌லாம். புத்த‌க‌ம் எழுத‌லாம். ஆனா உண்மையா  ம‌ட்டும் எழுத‌வே முடியாது

ராடியாகிட்ட பேசுறதும் ரேடியோலும் பேசுறதும் ஒண்ணுதான். எல்லோரும் கேட்கிறாங்கப்பா

புர‌ட்டாசி வ‌ந்தா க‌வுச்ச‌ சாப்பிட‌ முடியாது. புர‌ட்சி வ‌ந்தா பிஸ்ஸா சாப்பிட‌ முடியாது

க‌லைஞ‌ர் மாதிரி அம்மாவும் சினேக‌னை ந‌டிக்க‌ வைத்து ப‌ட‌மெடுத்தால் என்ன‌ பெய‌ர் வைப்பார்? - இலைஞ‌ன்

I love cricket because dada played it.

இனி வ‌ரும் ப‌ட‌ங்க‌ளின் க‌தைத்தேர்வில் க‌வ‌ன‌மாக‌ இருப்பேன் - அஜித் #நீ புடுங்குற‌து எல்லாமே தேவையில்லாத‌ ஆணிதான்

தண்ணி பிடிக்க போன பொம்பளையும், தண்ணியடிக்க போன ஆம்பிளையும் சண்டை போடாம வந்ததா சரித்திரமா கிடையாது #விருதகிரிராக்ஸ்

"தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது: தங்கபாலு" அதுசரி. நீங்க இன்னும் காங். தலைவரா நீடிக்கிறீங்களா? #டவுட்டு

மு.க‌. அழ‌கிரி அண்ணே.. நீங்க‌ வெறும் முக‌வா இல்ல‌ நாக்க‌முக‌வா? #ட‌வுட்டு

முத‌லிர‌வு ந‌ட‌க்க‌ ஏதுவான‌ இட‌ம் பால்க‌னிதான். அதில்தானே பாலும் க‌னியும் இருக்கிற‌து?

அனைவ‌ருக்கும் ச‌மோசா வ‌ழ‌ங்கி வ‌ர‌வேற்ற‌தால் இன்று முத‌ல் அவ‌ர் ச‌மோசா சாரு என்ற‌ழைக்க‌ப்படுவாராக‌

திருட்டுன்னு வ‌ந்துட்டா நாங்க‌ திமுக‌கார‌னா மாறிடுவோம் #எக‌ன‌மொக‌ன‌ப‌ன்ச்

ப‌திவ‌ர்ன்னு ஃபார்ம் ஆயிட்டா நாங்க‌ ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிடுவோம் #எக‌ன‌மொக‌ன‌ப‌ன்ச்

சரோஜா தேவிக்கு கொடுத்திருக்கணும் “கோபால் பரிசு” #கோபால்கோபால்

சிங்கிளாக வாழ்வதும், திங்கிள் அன்று வேலைக்கு போவதும் கொடுமையோ கொடுமை

க‌லைஞ‌ரின் மொத்த‌ குடும்ப‌த்திற்கும் வாக்குரிமை ம‌றுத்தாலொழிய‌ திமுக‌வை தோற்க‌டிக்க‌ முடியாது. #எத்த‌னைபேருடாசாமீ

Jan 26, 2011

ரஜினியும் டீ.ஆரும்

32 கருத்துக்குத்து

 

  சென்ற முறை எங்கள் அலுவலகத்தில் நடந்த விளையாட்டில் “I love you karki” என நான் செய்த கூத்து தெரியும்தானே? தெரியாதவர்கள் இதை படிங்க. மற்றவர்கள் ஒரு லாங் ஜம்ப் போட்டு அடுத்த பதிக்கு வரவும்.

வார‌ இறுதியை ம‌கிழ்வுட‌ன் கொண்டாட‌ ஏதுவாக‌ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் வெள்ளி மாலை Friday Fizz கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷ‌ன் ம‌ற‌ந்து வீடு திரும்ப‌ அது உத‌வும். ஒவ்வொரு வார‌மும் யாராவது ஒருவ‌ர் தொகுத்து வ‌ழ‌ங்குவார்க‌ள். இந்த‌ வார‌ம் ஒரு ந‌ல்ல்ல்ல்ல‌ விளையாட்டு. முத‌ல் ந‌ப‌ர் சொல்லும் வாக்கிய‌த்தோடு சில‌ வார்த்தைக‌ள் சேர்த்து அடுத்த‌வ‌ர் தொட‌ர‌ வேண்டும். அர்த்த‌மும் வ‌ர‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு I am going  என்றால் அடுத்த‌ ந‌ப‌ர் I am going to a market என்று சொல்ல‌லாம். இப்ப‌டியே தொட‌ர‌ வேண்டும். இன்னொரு விஷ‌ய‌ம் வார்த்தைக‌ளை ம‌ற‌ந்து விட‌க்கூடாது. இருக்கும் எல்லா பெண்க‌ளும் எதிர‌ணியில் இருந்த‌தை எண்ணி க‌டுப்பாக‌ இருந்தேன். இது கூட‌ ந‌ல்ல‌துக்குத்தான் என்று பின்ன‌ர் தான் புரிந்த‌து. முன்னால் இருந்த‌வ‌ர் I Went  என்று தொட‌ங்க‌ என்னிட‌ம் I went to the beach where i had seen a smart guy என்று வ‌ந்த‌து. நான் என் ப‌ங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karki என்றேன். அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karki என்று சொல்லியே ஆக‌ வேண்டும். ஒவ்வொருவ‌ரும் சொன்ன‌பின் நான் Thank you என்ற‌ போது அவ‌ர்க‌ள் முக‌த்தை பார்க்க‌ணுமே.. ஹிஹிஹிஹி.

இந்த வாரம் இவன் என்னடா செய்வான் என்ற ரீதியில் என்னை முறைத்துக் கொண்டே உள்ளே வந்தது பெண்கள் அணி. இந்த முறை தொகுத்து வழங்கியவர் பெயர் ராதிகா என்று வைத்துக் கொள்ளுங்களேன். மேஜையின் மீது 100 பொருட்களை கொட்டி பேப்பரால் மூடி இருந்தார். ஒரு நிமிடம் மேஜையின் மீதிருக்கும் பொருட்களை பார்த்தவிட்டு 45 நொடிகளில் நினைவிலிருக்கும் பொருட்களை எழுத வேண்டுமாம். பழைய விளையாட்டு. நான் 22 பொருட்களை எழுதிவிட்டேன். ஆனால் பெண்கள் சைடில் 30 ஐ தாண்டியது அவர்கள் போட்டிருந்த சீரியல் நம்பரில் தெரிந்தது. (பெண்கள்னாலே சீரியல்தானே?)பெரும்பாலான பொருட்களை தொகுப்பாளினி அவர்களிடம் வாங்கி வந்திருந்ததால் அவர்களால் எளிதில் எழுத முடிந்தது. இன்னும் சில நொடிகளே இருக்குமென்பதால் குறுக்கு வழியை யோசித்தேன். பேப்பரை திருப்பி ”ரம்யா..ரம்யா.. ” என்று எழுதி விட்டேன். சரிபார்க்க வாங்கிய ராதிகா என்ன இது என்றார். மூணேமுக்கால் கிலோ அசடையும், கொஞ்சம் அப்பாவித்தனத்தையும் முகத்தில் கொண்டு வந்த நான் சொன்னேன் “எனக்கு ரம்யா தவிர வேறு எதுவும் ஞாபகத்துல இல்லை”

___________________________

ராதிகா ஒரு கணக்கு புலி. அதனால் சில புதிர் கணக்குகளும் கேட்டார். இரண்டு அப்பாக்களும், இரண்டு மகன்களும் மீன் பிடிக்க சென்றார்களாம். ஆளுக்கொரு மீன் பிடித்தார்களாம்.ஆனால் அவர்கள் வசம் இருந்ததோ 3 மீன்கள் மட்டும்தானாம். எப்படி என்று சிரித்தார் ராதிகா. அந்த சிரிப்புக்காகவே இது போன்ற மொக்கை கேள்விகள் எத்தனை வேண்டுமென்றாலும் கேட்கலாம். ம்ம். கணக்குக்கு வாங்க. யோசித்து விடையை சொல்வதற்குள் எதிரணி வடையை கவ்வியது. மீன் பிடிக்க போன பிரகஸ்பதிகள் தாத்தா, அப்பா, பையனாம். அப்போ 2 மகன்கள், 2 அப்பாக்கள் தானே? உடனே மறுத்த நான் சொன்னேன் “அப்போ போனது 5 அப்பா, 2 மகன்”.  தாத்தா என்பவர் பேரனுக்கு ஃபோர்ஃபாதர் தானே? அவர் ஃபாதர் + ஃபோர்ஃபாதர் = 5 ஃபாதர் என்றேன். சிரித்த ராதிகா முறைத்துக் கொண்டிருந்தார்.

________________________

மூளைக்கு அதிக வேலை கொடுத்து டயர்டானதால் கடைசியாக ஒரு ஜாலி ரவுண்ட் சொன்னார் கணக்கு டீச்சர். ரஜினியும், டீஆரும் பேசிக் கொள்வது போல் ஒரு காட்சி நடித்துக் காட்ட வேண்டும். டீ ஆர் என்னும்போதே வடை கிட்டிய ஃபீல் கிடைத்தது. எப்போதும் தன்னை ஹீரோவென நினைத்துக் கொள்ளும் நண்பனை ரஜினியாக நடிக்க சொன்னேன். குஷியாக ஓக்கே சொன்னான். சீன் என்னன்னா, பாட்ஷா படத்தில் மெடிக்கல் சீட் கேட்க போவாரே!! அதுதான். நான் தான் மெடிக்கல் காலேஜ் ஓனர். அவன் ரஜினி. என்னிடம் வந்து “அய்யா என்.பேரு பாட்ஷாங்க. எனக்கு இன்னொரு பேரும் இருக்கு” என்பான். அதன் பின் டீஆர் வசனம் தான். சீனை சொன்னவுடன் சூப்பர்ஸ்டாருக்கு முகமெல்லாம் பல்லாய் இருந்தது. அவன் பேசிய பின் நான் தொடங்கினேன்.

“உனக்கு இருக்குடா ரெண்டு பேரு. எனக்கு சொந்தமா இருக்கு டா மூணு ஊரு..

ரோடு போட வேணும்டா தாரு..அது மேல போகும்டா என் பென்ஸ் காரு

இந்த காலேஜ்ல நான் பெரிய சாரு. எனக்கு மேல யாரும் இல்லை பாரு

உங்கிட்ட பேசுறதே எனக்கு போரு. வெளிய போக அங்கிருக்கு டோரு..

ஹேய்.. டண்டணக்கா.. டணக்கு டக்கா”

மொத்தப் பேரும் கலக்கல் என எனக்கு கை கொடுக்க, சூப்பர்ஸ்டார் பாவமாக ஓரத்தில் நின்று முறைத்துக் கொண்டிருந்தார். வாழ்க டீ.ஆர்.

_________________________

அன்று கேட்கப்பட்ட சில புதிர்கள் இதோ. பின்னூட்டத்தில் பதில் அளிக்கலாம்.   இதெல்லாம் lateral thinking என்று சொன்னார். ஆனால் விடையை லேட்டாக சொல்லக்கூடாது. 30 செகண்ட் தான் டைம் தந்தார்

    1)

EMPTY

2)  sgeg
      gges
      segg
      gesg
      sgge

3) YOU JUST ME – What is this?

4)  pplea + nnabaa+ praesg + mwaetoenrl + ugaav  = ??????

5) 7,6, 3,2.  ஒரே ஒரு முறை இந்த எண்களை பயன்படுத்தி 33 விடையாக வரவழைக்க வேண்டும். முடியுமா?

Jan 23, 2011

கோ – கேளுங்’கோ’

28 கருத்துக்குத்து

 

என்னிடம் இருக்கும் பெரும்பான்மையான சட்டைகள் ஆரஞ்சு / நீல நிறங்களே. ஒரே கலர்ல ஏண்டா எடுக்கிற என்று அம்மா திட்டாத நாள் கிடையாது. அவர் சேலை எடுக்க செல்லும் முன்பே இந்த முறை ராமர் நீலம் என்று முடிவு செய்துவிட்டே வெளியே செல்ல இடது காலை வைப்பார்கள். அவருக்கு நிறம்தான் பிரதானம். டிசைன் அடுத்ததே. ஹாரீஸின் இசை அப்படித்தான். கேட்டது போன்றே இருக்கும். ஆனா கேட்க கேட்க வசீகரிக்கும். அடுத்த ஹாரீஸ் ஆல்பம் வரும்வரை நின்று விளையாடும். டிசைன் வேறு என்றால் உங்களுக்கு நிறத்தில் பிரச்சினையில்லை என்பீர்களேயானால் ஹாரீஸின் ரசிகர் குழுவிற்கு இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.

File:Ko cover.jpg

கோ பாடல்கள் தான் கடந்த 2 நாட்களாக எனக்கு பிரேக்ஃபாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம். ஏற்கனவே இந்தக் கூட்டணி தந்த அயனின் வெற்றி ஹாரீஸுக்கு எக்ஸ்ட்ரா குளோக்கோஸை தந்திருக்கிறது. தினுசு தினுசான சத்தமும், டிசைன் டிசைனான ஆர்கெஸ்ட்ரசைசேஷனும் கிறங்கடிக்கிறது. என்னைப் பொறுத்தவரை இளைஞர்களின் யூத் ஐகான் யுவன் இல்லை, ஹாரீஸ்தான். யுவனிடம் இல்லாத கன்ஸிஸ்டென்ஸி ஹாரீஸிடம் இருக்கிறது. ஒரே மெட்டை பயன்படுத்துவதை சொல்லவில்லை, தொடர் ஹிட்டை சொல்கிறேன்.

1) அகநக (விஜய் பிரகாஷ், திப்பு, ரனினா ரெட்டி, ராப்- Emcee, srik, Jesc) பா.விஜய்.

  யோகி பியின் வல்லவனின் ஆரம்பம் போல தொடங்குகிறது. முதல் கவனிப்பில் எளிதில் தாம்தூமில் வந்த திகுதிகு அல்லது புதுப்புது பாடலின் காப்பி என்று ஒதுக்கிவிட முடியும். அந்த எண்ணத்தை லெஃப்ட் ஹேண்டால் தள்ளிவிட்டு மிச்சப்பாட்டை கேளுங்கள். ஹோசன்னா புகழ் விஜய் பிரகாஷின் ஆதிக்கத்தை இடையில் வரும் ராப் துவம்சம் செய்கிறது. அதுவும் அந்த பெண்குரலில் வரும் ராப்.. CHILL.. எந்த மொழியென்றுதான் தெரியவில்லை. எழுதியவருக்கு ஒரு கலைமாமணி பார்சேல்.

இதுதான் இதுதான் இளமை உலகம். வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்.

வெரி வெரி சமத்துகள் அழகா/  கொழு கொழுப்புகள் அழகா

தோள் சாய்ந்த அணைப்பு / அவன் தோழன் என்ற நினைப்பு / ஏன் இந்த படைப்பு/ இங்கில்லை களைப்பு

Competetive world என்பதையும், கலக்கல் யூத் உலகம் என்பதையும் வார்த்தைகளில் வடித்தெடுத்திருப்பவர் பா.விஜய். பேனா இருக்க சிக்ஸ் பேக் பேண்ட் எதுக்கு தலைவா? நடிப்பெல்லாம் விட்டொழியுங்கள். நீண்ட நாள் கழித்து ஒரு திருப்தியான பாட்டு பா.விஜயிடமிருந்து.

Verdict : Rockingggggggggg

2) நெற்றிப்பொட்டில் (நரேஷ் ஐயர்) மதன் கார்க்கி

சின்னப்பாட்டு. ஆனால் ஹாரீஸீன் அதகளமான பீட்டில் சுர்ரென்று தொடங்குகிறது. பேஸ்கிட்டார் இல்லாத ஹாரீஸ் பாட்டா? இதில் perfect blend ஆக வந்திருப்பதில் இன்னும் சுகம். எந்திரனின் ஹேங் ஓவரோடு மதன் கார்க்கி எழுத வேண்டிய பாட்டு. எழுதியுமிருக்கிறார்.

Cafe beachஇலும் - கனவிலே
கோட்டைக் கட்டினோம்
facebook wallஇலும் - எங்கள்
கொள்கை தீட்டினோம்

இதில் cafe beach என்ற வார்த்தைக்குப் பின் வரும் டிரேட்மார்க் “பபப்பா.. பாப்பப்பா” ஹம்மிங் சூப்பர். நரேஷ் ஐயரின்  குரலில் இருக்கும் மென்மை இந்தப் பாடலுக்கு எப்படி ஒத்துப் போனது என்பது ஆச்சரியம்தான்.

Verdict : worth listening twice in a row.

3) அமளி துமளி (ஹரிஹரன், ஷ்வேதா மேனன், சின்மயி) விவேகா)

அருள் படத்தில் வரும் ஒட்டியானம் செஞ்சுத்தாரேன் பாடலில் ஒரு கால் கிலோ எடுத்துக்கோங்க. ஹசிலி ஃபிசிலியில் ஒரு கால் கிலோ. ஜனகராஜ் ஒரு படத்தில் ஸ்வீட் வாங்குவாரே! அப்படி எடுத்திருக்கிறார் ஹாரீஸ். அதனாலென்ன? Assorted sweets தானே இப்போது டிரெண்ட்? பின்னி பெடெலெடுக்கும் பாடல். பல்லவியை விட சரணத்தின் மெட்டு நச்சென்றிருக்கிறது. கண்ட இடத்தில் சங்கதி போடுவதுதானே ஹரியின் ஸ்பெஷல்!! மனுஷன் அனுபவிச்சு பாடியிருக்கிறார். அதிலும் இரண்டாவது சரணத்தை அவர் தொடங்கும் இடம்..வாவ். இதுதான் அந்த சரணம்

கால்களில் ஆடிடும் கொலுசு.. அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது நான் கவியரசு

ஹரி பாடும் ஒவ்வொரு வார்த்தையும், எழுத்தும் தெளிவாக புரிகிறது. சின்மயி கடைசி எழுத்தை மட்டும் சாப்பிட்டு விடுகிறார். விவேகா மேலே சொன்ன வரியைத் தவிர மற்றதை ஜஸ்ட் லைக் தட் எழுதியிருக்கிறார், எது எப்படியோ.. எட்டுத்திக்கும் கலக்க போகும் பாடல் இதுதான்.

Verdict : Pick of the album.

4) என்னமோ ஏதோ (ஆலாப் ராஜு, பிரஷாந்தினி, ஸ்ரீசரன், emcee, Jesc) மதன் கார்க்கி

ஷேவாக்கின் சிக்சரோடு தொடங்க வேண்டும் இந்தப் பாடல் பற்றி எழுத வேண்டுமென்றால். வித்யாசாகரின் குத்துப்பாட்டில் கூட ஒரு மெலடி இருக்கும். ஹாரீஸீன் மெலடியில் கூட ஒரு Rock ஃபீல் இருக்கும். வசீகரா பாடலில் இருந்த ஒரு ஃப்ரெஷ்னஸும், இன்னோவேஷனும் இதிலும் இருக்கிறது. ஆனால் இசைக்கோர்வையை விட பாடல் வரிகள் புதுமையாக இருக்கிறது. ஹாரீஸை கேட்டு கேட்டு பழகியதால் அப்படி இருக்கலாம். பாடலின் USP இதுதான் ”ஏனோ.குவியமில்லா குவியமில்லா.. ஒரு காட்சிப்பேழை”. கதைப்படி நாயகன் ஒரு புகைப்படக்கலைஞன் என நினைக்கிறேன். குவியமில்லா என்றால் Out of focus. காட்சிப்பேழை என்றால் display. வித்தியாசமான சிந்தனை இல்லையா? பாடல் முழுக்கவே இது போன்று ஃப்ரெஷான வரிகள் கேட்கும்போது ரசிக்க வைக்கின்றன.

நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்

இதில் நெஞ்செல்லாம் என்ற இடத்தில் மூச்சு வாங்கி பாடுகிறார். எஸ்.பி.பி ஸ்டைலில் ஒரு ஸ்லைடுடன் ஒரே வரியாக பாடியிருந்தால் சுகமாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாடலோடு ஃபெவிகாலும் தந்திருக்கிறார்கள். பச்செக்கன ஒட்டிக் கொள்கிறது.

Verdict: Dont miss it.

5) Gala Gala (திப்பு, க்ரிஷ், ஹரிசரன், சயோனரா பிலிப்) கபிலன்.

   எப்படி சார்? ஒரே பாட்டை இத்தனை விதமா தறீங்க. பாடிய நால்வரும் எனக்கு பிடித்தவர்கள். மற்றபடி விசேஷமாய் ஒன்றும் தெரியவில்லை.

இன்னொரு மெலடி இருக்கிறது. வெண்பனியே என்று தொடங்கும் பாடலை பாம்பே ஜெயஸ்ரீயும், ஸ்ரீராமும் பாடியிருக்கிறார்கள். பொதுவாக இது போன்ற ஹாரீஸ் மெலடி முதலில் எனக்கு பிடிப்பதேயில்லை. ஆனாலும் ஹிட் ஆகியிருக்கின்றன. இப்போதைக்கு நான் இதை அதிகம் கேட்பதில்லை.

ஹாரீஸூக்கு ஒரு ராசி உண்டு. அவரது முதல் படமான மஜ்னு தாமதமாக வெளியானது. முதலில் வெளியான இரண்டாவது படமான மின்னலேவும் தாமதமானது. அதன் பின் உள்ளம் கேட்குமே, பீமா, லேசா லேசா,சாமுராய், அரசாட்சி, தொட்டிஜெயா, வேட்டையாடு விளையாடு, தாம் தூம் வரை எல்லாமே சொன்ன தேதியில் வெளிவரவில்லை. இப்போது எங்கேயும் காதல் கூட அப்படியே தூங்கிக் கொண்டிருக்கிறது, அப்படி ஏதும் ஆகாமல் கோ உடனே வெளிவந்து ஜீவாவிற்கு இன்னொரு மைல்கல்லாக அமைய வாழ்த்துவோம்.

________________________________

திசைமானி இல்லா நாளில் அடிவானம் ஏனில்லை.

கடையாணி இல்லா நாளில் கடிவாளமும் ஏனில்லை.

கோ படத்திற்காக மதன் கார்க்கி எழுதி படத்தில் இடம்பெற முடியாமல் போன வரிகள் இவை. பாடலில் வந்த வரிகளை விட எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். எந்த ஆதரவும் இல்லாமல் தனித்து நிற்கும் நாயகனைப் பற்றி சொல்கிறது.

Jan 19, 2011

தோழியில்லாத 6 மாசம்

22 கருத்துக்குத்து

 

வாழ்க்கைல எதுவுமே நிரந்தரமில்லைன்னு சொல்றாரு ஒரு மகான். அவர் சொல்றதுலயும் உண்மை இருக்குன்னு நேத்துதான் யோசிச்சு பார்த்தேன். கொஞ்ச நாளா தோழிக்கிட்ட சரியா பேசுற வாய்ப்பு கிடைக்கல. ஒரு வேளை தோழிக்கிட்ட இருந்து ஒரு ஆறு மாசம் எந்த தொடர்பும் இல்லாம விலகியிருந்தா என்னனென்ன நடக்கும்ன்னு திங்க் பண்ணேன். ஒரு பதிவு ரெடி ஆயிடுச்சு.

1) இனிமேல  பொறை ஏறாது. அதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இட்லி சாப்பிடும்போது தோழி என்னை நினைச்சுப் பொறை ஏறினா தண்ணி குடிக்கலாம். தண்ணி குடிக்கும்போதும் தோழி நினைச்சு அதுக்கும் பொறை ஏறினா என்ன செய்றது?

2) பெட்ரோல் விலை குறையும். ஆமாங்க. அன்னைக்கு ஒரு பெட்ரோல் பங்குல பார்த்தேன். “Save petrol.Avoid Girl Friends”உண்மைதான். 60  கி.மீ தந்த பைக்க விட்டு தோழிக்காக யமஹா வாங்கினேன். அது 40தான் கொடுக்குது. அது மட்டுமில்லாம வண்டி நல்லாயிருக்குன்னு எக்ஸ்ட்ரா கொஞ்ச தூரம் ஓட்ட சொல்றா. எவ்ளோ பெட்ரோல் வேஸ்ட்? அதனால் தோழி இல்லைன்னா பெட்ரோல் மிச்சம். பெட்ரோல் மிச்சம்ன்னா விலை குறைவு.

3) நல்ல வெளிச்சமா லைட் எரியிற இடத்துல சாப்பிடலாம். ஆமாங்க. ரொமாண்ட்டிக்கா இருக்கும்ன்னு எத்தனை தடவதான் கேண்டில் லைட் டின்னருக்கே போறது? "நீ சிரிக்கிறப்ப உன் கூட எங்க சாப்பிட்டாலும் அது கேண்டில் லைட் டின்னர்தான் செல்லம். ஏன்னா நீயே ஒரு மெழுகு பொம்மைதான்"ன்னு சொன்னா கூட வொர்க் அவுட் ஆகாது. அதுக்கு எதுக்கு தோழி சிரிக்கணும்ன்னுதானே கேட்கறீங்க? கே.லை. டின்னர்ல மெழுகு "பளீர்"ன்னு எரிஞ்சிட்டு இருக்குமில்ல? அதான்.

4) அடுத்து மிஸ்டு கால்ஸோஃபோபியா. ஸ்கூல் போகும்போது நான் மிஸ்ஸூக்கே பயப்படாதாவன். ஆனால் இந்த மிஸ்டு கால்ஸ் பார்த்தா..உஸ்ஸ்ஸ். மிஸ்டு கால்ஸ் கூட பிரச்சனையில்லை. அதுக்கு முன்னால் நம்பர் வரும் பாருங்க. சச்சின் 20-20 ல அடிக்கிற மாதிரி 52, 68ன்னுதான் இருக்கும். ஒரு தடவ 108 கால்ஸ் எல்லாம் மிஸ் ஆயிருக்கு. அதுக்கெல்லாம் கவலைப்படாம சைலண்ட்ல போட்டு மேட்ச் பார்க்கலாம்.

5) நமக்கு எல்லாம் எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கும். அது சரிதான். ஆனா தேடி வாங்கிட்டு வருவா பாருங்க. ஒரு நாள் ஒரு குர்தா வாங்கிட்டு வந்தா. நானும் பார்த்துட்டு நல்லா இருக்கே. துப்பட்டா இல்லையா? எப்போ போடப்போறன்னு கேட்டா "இது உனக்குதாண்டா செல்லம்"ன்னு டெரர் ஆயிட்டா.இன்னொரு நாள் எப்படிடா தொப்பைய குறைக்கலாம்ன்னு பிளான் போட்டுட்டு இருக்கேன். டைட்ஸ் வாங்கிட்டு வந்து "இது போடு அம்மு. ஆர்ம்ஸ் சூப்பரா இருக்கு"ம்னு சொல்றா. விட்டா ஃபர்ஸ்ட் நைட்க்கு ரேமன்ட்ஸ்ல சூட் வாங்கித் தருவா. அதுல இருந்து எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

6) பதிவெழுத கஷ்டப்படுவேன். எதுவும் எழுதி டிராஃப்டில் வைக்காத நேரத்தில் தோழியே சரணம்ன்னு எழுத உட்கார்ந்தா தோழி அப்டேட்ஸ் வேகமா ரெடி ஆயிடும். இனிமேல முடியாது. மண்டையை உடைச்சு, மசாலவ தெளிச்சு கவிதையோ, புனைவோதான் எழுதணும்.

7) முக்கியமா தூங்கலாங்க. நல்லா தூங்கலாம். தோழிகிட்ட இருக்கிற பெரிய பிரச்…

பதிவு பாதிதான் இருக்குன்னு நினைக்காதிங்க. எனக்கு இருக்கிறதோ சின்ன இதயம். எவ்ளோ நேரம்தான் அதுவும் தோழி இனி இல்லைன்னுறத தாங்கும்? அதான் பாதில டப்ஸுன்னு வெடிச்சிடுச்சு. எனக்கே இப்படின்னா இத படிச்சிட்டு தோழி என்ன சொல்வாளோ????????

Jan 18, 2011

நீதிப்பதிவு

23 கருத்துக்குத்து

 

காவலனைப் பற்றி நெகட்டிவ் பேச்சுகள் வர தொடங்கிவிட்டன. வலையுலகில் 50% ஆதரவாகவும், 40% குப்பை என்பதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. கேபிள் சங்கர் போல சில பேர் சராசரி படமென்றும் சொல்லியிருக்கிறார்கள். ரசனை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதிகமான ரசிகர்களுக்கு திருப்தி தந்திருக்கிறதா என்பதே முக்கியம். அதை கலெக்‌ஷன் தான் சொல்லும். அந்த வகையில் சனிக்கிழமை மதியம் வெளியாகி சென்னை ஏரியாவில் 51 லட்சம் வசூல் செய்திருக்கிறான் காவலன். வெள்ளியன்று வெளியாகிய ஆடுகளம் 69 லட்சமும், சிறுத்தை 67 லட்சமும் வசூலித்திருக்கின்றன. இத்தனைக்கும் காவலனுக்கு சப் அர்பனில் கிடைத்த தியேட்டர்கள் மோசமானவை. ஆன்லைன் புக்கிங் இல்லாததால் 50 ரூபாய்க்கே டிக்கெட்கள் விற்பனையாகியிருக்கின்றன. 5 காட்சிகள் குறைவாக ஓடியதை வைத்து கணக்கிட்டால் காவலன் வெள்ளியன்று வெளியாகியிருந்தால் 85 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கலாம். காவலனை தடுக்க நினைத்தவர்களுக்கு ஒன்று நிச்சயம் தெரிந்திருக்கும். அரசியலில் எப்படியோ, சினிமாவில் தளபதியை ஒரு **றும் புடுங்க முடியாது.

நீதி : தளபதியை எதிர்ப்பவன் தலைவிதி இடது கையால் எழுதப்பட்டிருக்கும்

_______________________

அந்தப் பதிவர் ஹெ.ஆர். மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். புதிதாய் வேலைக்கு சேர்ந்த இடத்தில் ஒருவர் அவரிடம் வந்து “ எனக்கு போன கம்பெனிலே 10000 தந்தாங்க சார். எனக்கு இங்க 14 ஆயிரம் கொடுக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். வழக்கம் போல கிரிக்கெட்டில் இருந்து உதாரணம் சொல்லியிருக்கிறார் லபக்தாஸ்.  “கங்குலி 2 லட்சம் டாலரில் இருந்து தன்னை 4 லட்சம் டாலருக்கு உயர்த்திக் கொண்டார். அவரை யாருமே வாங்கவில்லை. ஆனால் 50 ஆயிரம் டாலரில் இருந்த முரளி கார்த்திக்கை 4 லட்சம் டாலர் தந்து வாங்கியிருக்கிறார்கள்.உன் மதிப்பை நீ சொல்லாதே. கம்பெனி சொல்லும்”. இதைக் கேள்விப்பட்ட மேனேஜ்மெண்ட் இவரைப் பாராட்டி மெயில் தட்டிவிட்டிருக்கிறது. கொடுமை என்னவென்றால் சேர்ந்த 6 மாசத்தில் அவர்கள் தருவதாக சொன்ன இன்க்ரிமெண்ட்டை அவர் அடுத்த நாள் கேட்பதாக இருந்தாராம். அதே சிக்சரை இவரிடம் போடாமல் இருக்குமா மேனேஜ்மெண்ட்? கங்குலியை விட அதிக வருத்தத்தில் இருக்கிறாராம் உதாரண பதிவர்.

நீதி : கங்குலியைப் பற்றி தப்பா பேசினா டப்பா டான்ஸ் ஆடிவிடும்.

_______________________________

என்ன சொல்லியும் கேட்பதாய் இல்லை அந்த பதிவர். சச்சரவுக்கு முன்பு அவர் செய்த காரியங்கள் காணாமல் போய்விட்டன. சரி பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கியபின்னும் அவ்வபோது கொலைகாரன் தாண்டா நீ என்று சீண்டியபடி இருந்தார்கள். அப்பிரச்சினை தொடர்புடைய பதிவு ஒன்றை ஒரு போட்டிக்கு அனுப்பி மீண்டும் பழைய நினைவுகளை கிளறினார். அதிசயம் என்னவென்றால் அப்போட்டியின் நடுவர் குழுவில் அவரும் இருந்தார். ஆனால் இப்பிரிவுக்கு அவர் நடுவர் இல்லையாம். அவரது ஆதரவாளர்கள் தான் நடுவர்களாம். ஆதரவாளர்கள் பங்குபெறும் பிரிவுக்கு இவர் நடுவராம். இருந்தும் அவரது பதிவு வெற்றி பெறவில்லை. நான் கூட அவர்தான் வெற்றி பெறுவார் என நினைத்து அவருக்கே வாக்களித்திருந்தேன். வீணாகிவிட்டது.

நீதி: தர்மத்தின் வாழ்வதனை..

_________________________________

அரசியல் களம் அடுத்த மாதம் சூடு பிடிக்குமாம். கேப்டனும் மேடமும் கைக்கோர்ப்பது உறுதி என்கிறார்கள். ஒரு கையால் ஜால்ரா போட்ட வைகோவிற்கு சீமான் கைக்கொடுக்க வந்திருக்கிறாராம். சத்தம் ஓவராகக்கூடும். இந்தப்பக்கம் விரிந்த கைக்காரர்கள் சுருங்கிய கையை கைக்குள் போட்டுக் கொண்டுவிடுவார்கள் என்கிறார்கள். “கருணாநிதி ஒரு பச்சை துரோகி” என்ற அய்யாவை வாங்கய்யா என்று சொல்வதும் உறுதியாம். மிச்சமிருக்கும் துக்கடா கம்யூனிஸ்டுகள் கைக்கு எதிர்ப்பக்கம் தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பலம் வாய்ந்த பா.ஜ.க. தனியே நிற்க போகிறார்களாம். இன்னும் கார்த்திக், சரத் கட்சிகள் முடிவெடுக்கவில்லை. பாமகவை சேர்த்துக் கொள்ளும் திமுகவை மானங்கெட்டவர்கள் என்பதா, பாமகவை சொல்வதா?

நீதி : அரசியலில் ஒன்லி பீதி. நோ நீதி

_______________________

Jan 15, 2011

காவலன் – இப்போது என்ன செய்வார்கள்?

61 கருத்துக்குத்து

 

இந்த நாளிற்காகத்தான் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன்.

காவலன் என்னை முழுமையாய் திருப்திபடுத்தியிருக்கிறது. கதை ஒரு பத்தி, இசை சூப்பர், ஒளிப்பதிவு கச்சிதம், எடிட்டிங் ஷார்ப் என்ற டெம்ப்ளேட்டிற்குள் இந்தப் பதிவை என்னால் அடக்க முடியவில்லை. ஒவ்வொரு ஃப்ரேமிலும் விஜய் தந்திருக்கும் ஸ்பெஷல் படையலை வார்த்தைகளில் என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை எனக்கு பிடித்த விஜய் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் சித்திக்கின் கதையும், திரைக்கதையும் உங்களை உட்கார வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

பாடிகார்டு உடையோடு விறைப்பாக நடக்கும் விஜய் ”லைஃப்ல ஒரு சேஞ்ச் வேணுமில்லை” என்று மாறும் இடத்தில் நிமிர்ந்து உட்காருகிறோம். ஒரு பெண்ணின் குரல் தன்னுள் எந்த விதமான மாறுதலை ஏற்படுத்துகிறது என்பதை விஜய் வெளிப்படுத்தியிருக்கும்  விதம் அவருக்குள் இருக்கும் நடிகனை வெளிகொண்டு வந்திருக்கிறது. விஜயோடு சேர்ந்து நாமும் அந்தக் குரலை காதலிக்க தொடங்குகிறோம். விஜய் காதலை சொல்லப் போகும் காட்சியில் அனைவரும் கையைத் தூக்கி ஆல் தி பெஸ்ட் சொல்கிறார்கள்.  பாட்டு, சண்டைக்குத்தான் லாயக்கு என்று விஜயை சொல்பவர்களில் ஒரு சிலரையாவது மாற்றிவிடுவான் காவலன். விஜய்க்கு பன்ச் வசனம் எல்லாம் தேவையில்லை. அவர் பேசும் சாதாரண வசனத்திற்கு கூட ரசிகர்களே ஒரு அர்த்தம் வைத்து பன்ச் ஆக்கிவிடுகிறார்கள்.

ராஜ்கிரனுக்கு பாடிகார்டாய் வரும் விஜய், அவரது மகள் அசினுக்கு காவலனாய் ஆகிறார். அவருடன் அதே கல்லூரியில் சேரும் விஜய்க்கு ஒரு அழைப்பு வருகிறது. நம்பர் இல்லாமல் வரும் அழைப்பின் எதிர்முனையில் ஒரு பெண். கொஞ்சம் கொஞ்சமாய் விஜய்க்கு அவர் மீது காதல் வர, ஒரு கட்டத்தில் சந்திக்க நினைக்கிறார்கள். என்னை சந்தித்தால் என்னுடன் கண்காணாத இடத்திற்கு வந்து விடுவாயா என்பவரிடம் சரி என்கிறார். அந்த குரல் அசிந்தான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் க்ளைமேக்ஸில் என்ன ஆகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.

விஜயின் அஸீஸ்டென்ட்டாக வடிவேலு. விஜயே படத்தை தாங்குவதால் இவர் எக்ஸ்ட்ரா போனஸ். “அய்யோ..பாவம். அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு” என்று வெடிக்கும் வடிவேலுவின் காமெடி சரவெடி. ”ஃபோன் அவர்து. டோன் என்னுது” என்று லந்து கொடுக்கும் வடிவேலுவை நம்பியே சித்திக் இருக்கிறார். அழகு அசின் இதில் இன்னும் அதே அழகுடன் இருக்கிறார். அழுகை க்ளோஸப்பில் மேக்கப்பை குறைத்திருக்கலாம். கடைசி 20 நிமிடம் மலையாளத்தில் சூப்பர் என்றார்கள். இதில் கொஞ்சம் சுமார் தான். செண்ட்டிமெண்ட் கொஞ்சம் தூக்கல். ஆனால் தாய்மார்களின் பேராதரவு இந்த படத்திற்கு கிடைக்க காரணமாய் இருக்கப் போவது அந்த கடைசி 20 நிமிடங்கள்தான். மொத்தத்தில் காவலன் ரசிகர்களை காக்கிறான். தைரியமா போயிட்டு வாங்க.

  2008ல் நான் வலையுலகிற்கு வந்த பின் வெளிவந்த விஜய் படங்கள் வில்லு, வேட்டைக்காரன், சுறா. ஆசைத் தீர தளபதியை ரசித்துவிட்டு, பொங்கும் உற்சாகத்தை பதிவு செய்ய இது வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னதான் விஜய் ரசிகனாக இருந்தாலும் மேலே சொன்ன மூன்று படங்களும் சூப்பர் என்று எழுதவில்லை. நான் காதலுக்கு மரியாதை, வசீகரா, குஷி,சச்சின் படம் பார்த்து விஜன் ரசிகன் ஆனவன். ஆக்‌ஷன் வரிசையில் திருமலை, கில்லியைத் தவிர வேறெதுவும் பெரிதாய் கவரவில்லை. போக்கிரி உட்பட. அதனால் காவலன் என்னை ஈர்த்ததில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. படம் பார்க்கும் போது அதிக எதிர்பார்ப்புடன் போக வேண்டாம். காவலன் எனக்கு 100% ஓக்கே. உங்கள் ரசனை மாறக்கூடும். ஆனால் பிடிக்காமல் போக வாய்ப்பில்லை.

படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கலகள் ஏராளம். எல்லாவற்றிற்கும் பின்னால் இருந்தவர்கள் யாரென்று சொல்லவும் வேண்டுமா? என்ன ஆனாலும் பரவாயில்லை. இது படமல்ல. என் பிரஸ்டிஜ் என்று சொன்னாராம் தளபதி. 13 கோடி ரூபாய் டெப்பாசிட் கட்டியிருக்கிறார், தனது பாக்கெட்டில் இருந்து. எதிர்த்து நின்றவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றுதான் “தளபதிடா”.

சுறாவில் ஒரு பாடல்:

வெற்றி கொடி ஏத்து..வீசும் நம்ம காத்து..

வருங்காலம் நம்ம கையில் தாண்டா..

ஈர்க்குச்சி என்று நம்மை என்னும் பேர்க்கு..

தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு..

:))))))

அனைவருக்கும் சாளரம் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Jan 13, 2011

வாங்க முடியாத கார்

13 கருத்துக்குத்து

 

நேற்று மீண்டும் ஒரு முறை புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இணையத்தில் மேய்பவர்களுக்கு சென்னையில் இந்த கண்காட்சியைத் தவிர வேறெதுவுமே நடக்கவில்லையா என்ற சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. அவர்களுக்காக இதோ சில சம்பவங்கள்.

1) சீமான் அம்மாவினடி சேர்ந்தார்.

2) நடக்குமா நடக்காதா என்றிருந்த சங்கமம் தொடங்கிட்டது.

3) நடிகர் கார்த்தியின் வீடு முன்பு நாடர்கள் மறியல் செய்தார்கள்.

சரி.நாம் புத்தக கண்காட்சிக்கு வருவோம். கொட்டிகிடக்கும் புத்தகங்களை பார்க்கும் போது மலைப்பாக இருந்தது. ரியல் எஸ்டேட்டினால் திடீர் கோடீஸ்வரன்கள் ஆன பாக்கியவான்களின் புத்திரர்கள் சினிமாவில் நடிப்பது போல , பதிவின் மூலம் கிடைத்திருக்கும் ரீச் பலரை “எழுத்தாளர்” ஆக்கியிருக்கிறது. ஆனால் அதன் எண்ணிக்கை புத்தகங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் 1 % குறைவாகவே இருக்கும். எல்லாப் புத்தகத்தின் பின்னால் இருக்கும் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, தேர்தல் அறிக்கையை படிப்பது போல குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

”நகர வாழ்வின் நெருக்கடிகளினூடே இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்திருக்கிறார் ஆசிரியர். அன்றாட வாழ்க்கையின் அபத்தங்களை பற்றிய நுண்ணிய பார்வை இவரின் எழுத்துக்கு தார்மீக பொறுப்பேற்கிறது. நாம் தினமும் காணும் அனைவரும் இவரின் கதைகளில் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இலக்கிய மேதைகள் வரிசையில் இவர் பெயரும் வரும் நாள் தொலைவில் இல்லை. இத்தொகுப்பு அதற்கு பிள்ளையார் சுழி”. இதற்கு கீழோ, வலது புறமாகவோ கண்ணாடியை கையால் அளப்பது போன்று போஸ் தந்திருப்பார் ஆசிரியர். கவிஞர் என்றால் கைகளை கட்டிக் கொண்டு அடிவானில் பறக்கும் திசைக்காட்டி பறவையை பார்த்துக் கொண்டிருப்பார். கட்டுரையாளர் என்றால் குறுந்தாடியுடன் மென்சோகத்தை முகத்தில் தவழ விட்டுக் கொண்டிருப்பார். இதை வைத்தே அது சிறுகதை தொகுப்பா, கவிதைகளா, கட்டுரைகளா என்று அறிபவனே உண்மையான வாசகன்.

அப்படி ஒரு சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது “நல்ல புக்கு சார்” என்று வந்தார் ஒருவர். பதிப்பாளராக இருக்குமோ என்று பார்த்தேன். 50 ரூபாய் சார். 40க்கே தர்றோம் என்றார். சிரித்தேன். நல்லா இருக்குன்னு விமர்சனம் வந்திருக்கு சார். 35க்கே கூட கொடுப்பாங்க என்று கவுண்ட்டரை காட்டினார். இன்னுமொரு முறை சிரித்தால் 25 ஆகுமோ என்று சிரித்தேன். 30 ஆனது. எக்ஸ்பயரி டேட் ஆன புத்தகமாக இருக்குமோ என்று மீண்டுமொரு முறை புத்தகத்தை நோட்டம் விட்ட போது ஆசிரியரின் முகம் பரிச்சமாய் தெரிந்தது. யாராக இருக்கும் என்று நிமிர்ந்தால் அட்டையில் இருந்த ஆசிரியர் உயிர்பெற்று எதிரில் வந்து 25 ரூபாய்க்கு கம்மியா தர மாட்டாங்க சார் என்றார்.

இன்னொரு ஸ்டாலில் இயக்குனர் சீனு ராமாசமி எழுதிய ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல் என்ற புத்தகம் கண்ணில் பட்டது . பாலு மகேந்திராவின் முன்னுரையோடு  இருந்த கவிதை தொகுப்பில் மொத்தம் 32 கட்டுரைகள் இருந்தன. அதன் பின் அட்டையில் கோட்,சூட் டையோடு இருந்தார் சீனு இராமசாமி. அவரின் கூடல் நகர் 1997ல் வெளி வந்ததாக சொல்லியிருந்தார்கள். நான் அதை 2005லோ 2006லோதான் பார்த்தேன்.

கார் வாங்குவது எப்படி என்று நர்சிம் தரும் டிப்ஸ் கிழக்கில் புத்தகமாக கிடைக்கிறது. அவரிடம் வாங்கவே முடியாத கார் எது தெரியுமா சகா என்ற போது சிரித்து மழுப்பினார். சுவாமி ஓம்கார் என்றேன். பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் நம் சுவாமி.  “எனக்கு ஃபோன் செய்பவர்கள் எல்லாம் நாத்திகர்களாகவே இருக்கிறார்கள். சொல்லி வைத்தது போல் சாமி இல்லையா என்கிறார்கள்.” இப்படி வெடி வைப்பதில் சுவாமி கில்லாடி. சுவாமி ஒரு எஞ்சினியர். ஓம்கார் என்பதால் மெக்கானிக்கல் எஞ்சினியர் என்றேன் நான். இல்லையில்லை அவர் சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்றார் இன்னொருவர். உள்ளே இருக்கும் உயிரை சாஃப்ட்வேர்னு சொல்றீங்களா என்றார் சுவாமி. உள்ள இருந்தா அது அண்டேர்வேர் சுவாமி என்றேன் நான். சுவாமி சாப்பிடறது தான் வேர் என்றார் அப்துல்லா. சாமியார்கள் எல்லாம் ரஞ்சிதாக்கள் கூட ஜில்ஜில் ஜிகாஜிகா செய்யும் வேளையில் எங்களிடம் மொக்கை வாங்க வேண்டும் என்று அவர் தலையில் எழுதிய கடவுளை என்ன செய்வது?

இந்த புக் ஃபேரில் சந்தித்த முக்கியமான நபர் பதிவர் எம்.எஸ்.கே. தன்னை இதுவரை வெளிப்படுத்திக் கொள்ளாத கிணற்று தவளை அவர். டெரர் கவிதைகள் எழுதுவதில் அண்ணன் அனுஜன்யாவையே ஓரங்கட்டியவர். சேம்பிளுக்கு ஒன்று தருகிறேன். கவிதை அலர்ஜி என்பவர்கள் டபுள் புரமோஷனில் அடுத்த பத்திக்கு தாவிவிடவும்.

பெருவானத்தின்
அனைத்துத் திசைகளையும்
விழுங்கிச் செரித்த
கருநீலப்பறவையொன்று
மலைப்பாறையொன்றின் மீது மோதி
உயிரை மாய்த்துக்கொண்டது
செஞ்சூரிய நிறத்து மலை
வான் நீல நிறத்துக்கு
மாறத்துவங்கியது
மெல்ல மெல்ல.

எழுதுற மாதிரியே பேசறீங்க சகா என்றார். அவ்ளோ மொக்கையாவா இருக்கேன் என்று கேட்க நினைத்து ஆமாம் என்ற பதிலை தவிர்க்க கேள்வியையே தவிர்த்தேன். ஆனால் அவர், அவரின் எழுத்து போல சீரியஸ் இல்லை. 25 வயதுக்கே உரிய துள்ளலுடனே இருக்கிறார். யூமா வாசுகியின் ரத்த உறவு எங்க கிடைக்கும் சகா என்று என்னிடம் கேட்காத போதே புரிந்தது எனக்கு. எம்.எஸ்.கே வை நான் கலாய்த்த பதிவை படிக்க இங்கே சொடுக்கலாம்.

வம்சி பதிப்பகம் பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். மீண்டும் ஒரு முறை சென்றபோது அய்யனாரின் தனிமையின் இசை புத்தகம் எடுத்தேன். அய்யனாரின் மாஸ்டர் பீஸில் ஒன்றான என்னை விட்டு போயிருக்க வேண்டாம் ஹேமா, புத்தகத்தில் மீராவாகியிருந்தது. இண்டெக்ஸீல் 46ஆம் பக்கத்தில் இந்த கதை என்றார்கள். ஆனால் உள்ளே 57ஆம் பக்கத்தில் இருந்தது. இன்னொரு புத்தகத்தில் பக்கங்களே தவறாக பைண்ட் செய்ப்பட்டிருந்தது. வம்சியிடம் ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஃபினிஷிங் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த முறை நான் வாங்கிய சில புத்தகங்கள்:

1) ஸ்ட்ராபெரி – உயிர் எழுத்து பதிப்பகம். (ஜாலியோ ஜிம்கானா கதைகள் என்கிறார்கள்)

2) உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி பதிப்பகம்.

3) சித்தர் பாடல்கள் – நக்கீரன் பதிப்பகம்.

4) வெயில் தின்ற மழை – நிலாரசிகன் - உயிர்மை

5) பாலகாண்டம் – நா.முத்துக்குமார் – பட்டாம்பூச்சி பதிப்பகம்.

6) கதை நேரம் – பாலுமகேந்திரா – வம்சி பதிப்பகம் (திரைக்கதை+மூலக்கதைகள்)

பி.கு :

1) அரங்கில் கீழே போடப்பட்டிருந்த மிதியடிகள் பச்சை, நீலம் போன்ற நிறங்களில் இருந்தன. கீழைக்காற்று பதிப்பகம் அருகே இருந்த மிதியடி மட்டும் சிவப்பு நிறத்தில் இருந்ததை கவனித்தீர்களா?

2) 4,5 இளைஞர்கள் எஸ்.ராவிடம் பவ்யமாக பேசிக் கொண்டிருக்க, தலைவர் சாரு அவருக்கு பக்கத்தில் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திக் கொண்டிருந்த புகைப்படமும், சிறப்பு பதிவும் பொங்கல் கழித்து வெளியாகும்.

Jan 11, 2011

வேலையோ வேலை - 4

10 கருத்துக்குத்து
முந்தைய‌ அத்தியாய‌ங்க‌ள்
 
ரெஸ்யும் த‌யாரித்து விட்டீர்க‌ளா? இப்பொழுது எங்கு, எப்ப‌டி வேலைக்கு அப்ளை செய்ய‌லாம் என்று பார்ப்போம்.அத‌ற்கு முன்பு ஒரு சிறுவேலை. அனுப‌வ‌ம் குறைவாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு க‌வ‌லையில்லை. ஆனால் 10 வ‌ருட‌த்திற்கு மேல் அனுப‌வ‌ம் கொன்ட‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌  Brief profile ஒன்றை த‌யார் செய்து கொள்வ‌து உத்த‌ம‌ம். முத‌லில் இந்த‌ Brief profileஐ த‌ந்து தேர்வான‌ பின் விரிவான‌ ரெஸ்யுமேவை த‌ர‌லாம். மார்க்கெட்டில் உங்க‌ள‌து புரொஃபைல் எளிதில் கிடைத்தால் ம‌திப்பு குறைய‌க்கூடும். இதில் உங்க‌ளின் க‌ல்வித்த‌குதி, வேலை அனுப‌வ‌ம், த‌னித்திற‌மைக‌ள் பொன்ற‌வ‌ற்றை ம‌ட்டும் கொடுத்தால் போதும்.புகைப்ப‌ட‌ம் ஒன்றை இணைப்ப‌தும் ந‌ல்ல‌து. உதார‌ண‌த்திற்கு இங்கே சொடுக்குங்க‌ள். இப்போது எங்கெல்லாம் வேலைக்கு அப்ளை செய்ய‌லாம் என்ப‌தை பார்ப்போம்

1) நிறுவ‌ன‌ங்க‌ளின் இணைய‌த்த‌ள‌ங்க‌ள்:

    பொதுவாக‌ எல்லா நிறுவ‌ன‌ங்க‌ளும் த‌ங்க‌ளுக்கென‌ பிரத்யேக‌மாக‌ ஒரு இணைய‌த்த‌ள‌ம் வைத்திருப்பார்க‌ள். அத‌ன் மூல‌மாக‌வே ந‌ம‌து ரெஸ்யுமேவை அவ‌ர்க‌ளுக்கு அனுப்ப‌லாம். அல்ல‌து அவ‌ர்க‌ள் த‌ந்திருக்கும் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக்கு அனுப்ப‌லாம். ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் பொதுவாக‌ இத‌ற்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் தருகிறார்க‌ள். மேலும் இத‌ன் மூல‌ம் அனுப்ப‌ப்ப‌டும் ரெஸ்யூம்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கைக‌ளில் கிடைக்க‌ வாய்ப்பில்லை. என‌வே வேலை தேடுவ‌து என்று முடிவெடுத்த‌ பின் உங்க‌ளுக்கு விருப்ப‌மான‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் இணைய‌த‌ள‌ங்க‌ளுக்கு சென்று உங்க‌ள் ரெஸ்யுமேவை சேர்த்துவிடுங்க‌ள். இத‌ன் மூல‌ம் வேலை கிடைக்க‌ வாய்ப்பு குறைவு எனினும் உங்க‌ளுக்கு ஏற்ற‌ வேலை கிடைக்க‌ இதுவே சிற‌ந்த‌ வ‌ழியாகும்.

2) ஜாப் போர்ட்ட‌ல்ஸ் (Job Portals) :

     Naukri, Monster போன்ற‌ வேலைவாய்ப்பு இணைய‌த‌ள‌ங்க‌ளில் உங்க‌ள‌து ரெஸ்யுமேவை இணைப்ப‌து மூல‌ம் ப‌ல‌ரின் பார்வைக்கு அது செல்லும். இன்றைய‌ தேதியில் 50% வேலைக‌ள் இது போன்ற‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் வ‌ழியாக‌வே நிர‌ப்ப‌ப்ப‌டுகின்ற‌ன‌. சில‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ள‌து ஊழிய‌ர்க‌ள் இது போன்ற‌ த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்கிறார்க‌ளா என்று க‌ண்காணிப்ப‌தும் உண்டு. இது தேவைய‌ற்ற‌ ஒரு ப‌ய‌ம். ஏனெனில் எந்த‌ நேர‌த்திலும் ந‌ம்மை வீட்டுக்கு அனுப்ப‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌யாராக‌ இருக்கும்போது நாமும் ந‌ம‌து வேலைக்காக‌ ப‌திவு செய்வ‌தில் எந்த‌ த‌வ‌றும் கிடையாது. இருந்தாலும் சில‌ சின்ன‌ நிறுவ‌ன‌ங்க‌ள் இதை ஒரு பெரிய‌ த‌வ‌றாக‌ பார்க்கின்ற‌ன‌. அப்ப‌டிப்ப‌ட்ட‌ இட‌த்தில் வேலை செய்கிற‌வ‌ர்க‌ள் யோசித்து செய‌ல்ப‌டுங்க‌ள். ஃபேஸ்புக் போல‌ புர‌ஃப‌ஷ‌ன‌ல்ஸ்க்காக‌ இருக்கும் இணைய‌த்த‌ள‌ம் linkedin.com . இது ப‌ற்றி த‌னி அத்தியாய‌ம் வ‌ர‌ இருப்ப‌தால் பின்ன‌ர் பார்ப்போம்.

3) வேலை முக‌வ‌ர்க‌ள்: (Job Consultants)

  ஜாப் போர்ட்ட‌லை ந‌ம்ப‌ முடியாத‌வ‌ர்க‌ள் க‌ன்ச‌ல்ட‌ன்ட்டை ந‌ம்ப‌லாம். இவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் பெரிய‌ பிர‌ச்சினை உங்க‌ளுக்கு தேவை இருக்கும்போது உங்க‌ளுக்கு ஏற்ற‌ வேலைவாய்ப்பு அவ‌ர்க‌ளிட‌ம் இருக்காது. ஆனால் நிச்ச‌ய‌ம் அவ‌ர்க‌ளின் நெட்வொர்க்கில் என்றாவ‌து ஒரு ந‌ல்ல‌ வாய்ப்பு கிடைக்கும். என‌வே முக‌வ‌ர்க‌ளிட‌ம் ரெஸ்யும் த‌ருப‌வ‌ர்க‌ள் அவ‌ருட‌ன் ஒரு ந‌ல்ல‌ ரிலேஷ‌ன்ஷிப் வைத்துக் கொள்வ‌து ந‌ல்ல‌து. மாத‌ம் ஒரு முறை ஃபோனிலே விவ‌ர‌ங்க‌ள் கேட்டுக் கொள்ள‌லாம். மேலும் இவ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு வேலை தொட‌ர்பான‌ டிப்ஸ் த‌ரும் வாய்ப்பும் உண்டு. உங்க‌ள் அனுப‌வ‌த்திற்கு ஏற்ற‌, ந‌ல்ல‌ முக‌வ‌ர்க‌ள் ஒருவ‌ராவ‌து உங்க‌ளுக்கு அவ‌சிய‌ம் தேவை. இவ‌ர்க‌ளை ம‌ருத்துவ‌ர்க‌ளை போன்ற‌வ‌ர்க‌ள் என்று சொல்ல‌லாம். உங்க‌ளுக்கு தேவையான‌ போது உத‌வுபவ‌ர்க‌ள்.

4) எம்ப்ளாயி ரெஃபெரென்ஸ் (Employee Reference) :

  ஐ.டி துறையில் இது பிர‌ப‌ல‌மான‌ ஒன்று. ஒரு நிறுவ‌ன‌த்தின் ஊழிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் ரெஃபெர் செய்ய‌லாம். இத‌னால் ரெஃபெர் செய்ப‌வ‌ருக்கு ஊக்க‌த்தொகையும் கிடைக்கும். அவ‌ர் ந‌ண்ப‌ர்க‌ளும் ஒரு வாய்ப்பும் கிடைக்கும். வேலை தேடுப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ரெஸ்யுமேவை அனுப்பி அவ‌ர்க‌ள் நிறுவ‌ன‌த்தில் ரெஃப‌ர் செய்ய‌ சொல்ல‌லாம்.

5) செய்தித்தாள் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் :

  நீங்க‌ள் வேலை தேடுகிறீர்க‌ளோ இல்லையோ, வாராவார‌ம் Hindu Oppurtunities போன்று வேலை தொட‌ர்பான‌ Supplement க‌ளை அவ‌சிய‌ம் ப‌டியுங்க‌ள். பல‌ருக்கு இது சிற‌ந்த‌ வேலைக‌ளை த‌ந்திருக்கிற‌து. புதிய‌ த‌லைமுறை இத‌ழ் கூட‌ த‌ற்போது வேலை வாய்ப்பு செய்திக‌ளை அதிக‌ம் த‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள். உங்க‌ள் வேலைக்கு ஏற்ற‌ செய்திக‌ள் த‌ரும் செய்தித்தாள்க‌ள், ச‌ஞ்சிகைக‌ள் எதுவென்று அறிந்து தொட‌ர்ந்து க‌வ‌னித்து வாருங்க‌ள்.

ம‌ற்ற‌ வ‌ழிக‌ள் குறித்து இனி வ‌ரும் வார‌ங்க‌ளில் பார்க்க‌லாம்.

________________
End of part - 4
.

Jan 10, 2011

வ‌ருது வ‌ருது..வில‌கு வில‌கு..புர‌ட்சி வெளியே வ‌ருது

22 கருத்துக்குத்து
   
   ப‌திவுல‌க‌ ச‌கா ஒருவ‌ருக்கு அலைபேசி சித்த‌ர் என்று பெய‌ர் வைத்திருந்தேன். எப்போதுமே ஃபோனும் காலுமாக‌வே அலைப‌வ‌ர் அவ‌ர். (ஃபோன் கையில் இருந்தாலும் அதில‌ கால்தானே வ‌ருகிற‌து?) 4 வ‌ரி அழைத்த‌வ‌ரிட‌ம் பேசினால், அடுத்த‌ 4 வ‌ரி அலுவ‌ல‌க‌த்தில் யாரையாவ‌து திட்டுவார். எந்த‌ வார்த்தை ந‌ம‌க்கு, எந்த‌ வார்த்தை அவ‌ர் அலுவ‌ல‌க‌ ச‌காவிற்கு என்ப‌தை பிரித்த‌றிய‌ நாம் அன்ன‌மாக‌ வேண்டும்.இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் இவ‌ருக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு ப‌திவ‌ர் அழைத்து 30 நிமிட‌ங்க‌ள் பேசியிருக்கிறார். நியாய‌ப்ப‌டி அவ‌ர் 15  நிமிடங்க‌ள் தான் பேசினார் என்று சொல்ல‌ வேண்டும்.மீதி 15 நிமிட‌ங்க‌ள் லைனில் காத்திருந்தார். க‌டுப்பான‌ அமெரிக்க‌ பிர‌ஜை "அமெரிக்காவில் ஃபோன்ல‌ பேசும்போது ஃபோன்ல‌ ம‌ட்டும்தான் பேசுவாங்க‌" என்றாராம். க‌டுப்பான‌ இந்திய‌ பிர‌ஜை சொன்னாராம் "அமெரிக்காவில் யாரும் ஃபோன்ல‌ 30 நிமிஷ‌ம் பேச‌ மாட்டாங்க‌. சொல்ல‌ வேண்டிய‌த‌ சுருக்க‌மா பேசிட்டு வ‌ச்சிடுவாங்க‌".

சொர்க்க‌மே என்றாலும் அது ந‌ம்மூர‌ போல‌ வ‌ருமா?
_____________________________________________________________________

   வார‌ இறுதியை ம‌கிழ்வுட‌ன் கொண்டாட‌ ஏதுவாக‌ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் வெள்ளி மாலை Friday Fizz கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷ‌ன் ம‌ற‌ந்து வீடு திரும்ப‌ அது உத‌வும். ஒவ்வொரு வார‌மும் யாராவது ஒருவ‌ர் தொகுத்து வ‌ழ‌ங்குவார்க‌ள். இந்த‌ வார‌ம் ஒரு ந‌ல்ல்ல்ல்ல‌ விளையாட்டு. முத‌ல் ந‌ப‌ர் சொல்லும் வாக்கிய‌த்தோடு சில‌ வார்த்தைக‌ள் சேர்த்து அடுத்த‌வ‌ர் தொட‌ர‌ வேண்டும். அர்த்த‌மும் வ‌ர‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு I am going  என்றால் அடுத்த‌ ந‌ப‌ர் I am going to a market என்று சொல்ல‌லாம். இப்ப‌டியே தொட‌ர‌ வேண்டும். இன்னொரு விஷ‌ய‌ம் வார்த்தைக‌ளை ம‌ற‌ந்து விட‌க்கூடாது. இருக்கும் எல்லா பெண்க‌ளும் எதிர‌ணியில் இருந்த‌தை எண்ணி க‌டுப்பாக‌ இருந்தேன். இது கூட‌ ந‌ல்ல‌துக்குத்தான் என்று பின்ன‌ர் தான் புரிந்த‌து. முன்னால் இருந்த‌வ‌ர் I Went  என்று தொட‌ங்க‌ என்னிட‌ம் I went to the beach where i had seen a smart guy என்று வ‌ந்த‌து. நான் என் ப‌ங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karki என்றேன். அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karki என்று சொல்லியே ஆக‌ வேண்டும். ஒவ்வொருவ‌ரும் சொன்ன‌பின் நான் Thank you என்ற‌ போது அவ‌ர்க‌ள் முக‌த்தை பார்க்க‌ணுமே.. ஹிஹிஹிஹி..

நினைத்த‌தை முடிப்ப‌வ‌ன் நான்..நான்..நான்
_____________________________________________________

   புத்த‌க‌ க‌ண்காட்சியில் ப‌ல‌ புதிய‌ ந‌ண்ப‌ர்க‌ளை ச‌ந்திக்க‌ முடிந்த‌து. கே.ஆர்.பி செந்திலை தெரியும்தானே? புரொஃபைலில் சே குவேரா ப‌ட‌த்தை வைத்திருப்பார். அவ‌ருட‌ன் பேசிக் கொன்டிருந்த‌ போது இன்னொரு புர‌ட்சி வீர‌ர் வ‌ந்தார். எப்ப‌டியாவ‌து இந்தியாவிற்குள் புர‌ட்சியை அழைத்து வ‌ந்து விட‌ வேண்டுமென்று கயிறு க‌ட்டி இழுக்கும் குழுவின் ஆத‌ர‌வாளார‌ம் அவ‌ர். ஐப்ப‌சி போனா புர‌ட்டாசி வ‌ந்துவிடும். எது போனா புர‌ட்சி வ‌ருமென்று தெரியாம‌ல் முழிப்ப‌வ‌ன் நான். அவ‌ரிட‌மே கேட்க‌லாமே என்று நினைத்த‌ போதுதான் அந்த‌ "ச‌ம்ப‌வ‌ம்" ந‌ட‌ந்த‌து. செந்திலைப் பார்த்து ந‌ம் புர‌ட்சியாள‌ர் சொன்னார் "புரொஃபைல் ஃபோட்டோல‌ வேற‌ மாதிரி இருக்கீங்க‌". ஒரு நொடி ஸ்த‌ம்பித்துப் போனேன் நான். சே குவேராவையே தெரியாத‌ ந‌ப‌ரிட‌ம் பொறுப்பை ஒப்ப‌டைத்தால் புர‌ட்சி எங்க‌னும் வ‌ரும்?

சிவ‌ப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது..
_____________________________________________________-

   தோழி அப்டேட்ஸ் இவ‌ர்தான் எழுத‌றாரு என்று யாராவது சொல்லும்போது ம‌கிழ்வாக‌த்தான் இருந்த‌து சென்ற‌ வார‌ம் ஒரு ப‌திவ‌ரை ச‌ந்திக்கும் வ‌ரை. அவ‌ர் பெய‌ரை கேட்ட‌தும் ப‌க்கென்ற‌து. ஆம். அவ‌ரின் புனைபெய‌ர் தோழியாம். தோழி என்ற‌ பெய‌ரில் தான்‌ வ‌லையில் எழுதி வ‌ருகிறார். அவ‌ரிட‌ம் பேசும் முன்பு இன்னொருவ‌ர் வ‌ந்தார். கேபிள் ச‌ங்க‌ரிட‌ம் யார் கார்க்கி என்று கேட்டுக் கொண்டிருந்தார். முர‌ட்டு தேக‌மும், முறுக்கிய‌ கையுமாய் இருந்தவ‌ரிட‌ம் சென்று சொல்லுங்க‌ என்றேன். "நான் ராஜ‌சேக‌ர். தோழியின் க‌ண‌வ‌ர்" என்றார். ச‌..ரி..ங்..க‌.. எ..ன்..ன‌ செ..ய்..ய‌..ணு..ம் என்றேன் தைரிய‌மாக. சிரித்த‌படி தோழியை அழைத்தார். நிறைய‌ பேசினோம். நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌கு ஒரு ந‌ல்ல‌ ஜோடியை பார்த்தேன். ஏனோ என் குரு ஆதி நினைவுக்கு வ‌ந்தார். ஷோகேஸ் ம‌னைவிக‌ள் ப‌திவும் நினைவுக்கு வ‌ந்த‌து. அதை விடுங்க‌. இவ‌ர்க‌ள் இருவ‌ரும் ச‌ரியான‌ ஜோடி. கொஞ்ச‌ம் பொறாமையுட‌னே சொல்கிறேன். இருவ‌ருமே கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள். வாழ்த்துவோம்.

இனிமேல் தோழி அப்டேட்ஸ் எழுத‌வ‌தில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.(இவ‌ங்க‌ கார‌ண‌மில்லை) இன்னும் ப‌திவேற்றாம‌ல் இருக்கும் 2 அப்டேட்ஸ்க‌ள் ம‌ட்டும் எழுதி விடுகிறேன்.

வீட்டில் நூலகம் வைக்க வேண்டும் என்ற ஆசை தீரவாது தோழியை வீட்டுக்கு அழைக்க வேண்டும். அவளை மீறி என்ன இருக்கிறது புத்தகத்தில்?

என‌க்கு அடிப்பட்டு ரத்தம் வரும் இடத்தில் தோழியால் எப்படி முத்தம் கொடுக்க முடியும்? பஞ்சு வைக்க சொல்கிறார் லூசு டாக்டர்.

.

Jan 9, 2011

எங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாரு

26 கருத்துக்குத்து

 

புத்தக கண்காட்சி என்றாலே பதிவர்களுக்கு கொண்டாட்டம்தான். எல்லாப் பதிவர்களும் புத்தகம் வாசிப்பவர்கள் என்று நம்ப முடிவதில்லை. ஆனால் ஏனோ புத்தக கண்காட்சியை தங்கள் வீட்டு விசேஷம் போலவே எதிர்கொள்கிறார்கள்.  தினமும் சந்தித்து அளவளாவிக் கொள்கிறார்கள். வீடு திரும்புகையில் சில புத்தகங்களை கையில் சுமந்து செல்கிறார்கள். கேபிள் புக் எவ்ளோ போச்சுப்பா, நிலாரசிகன் கவிதைக்கு ஃபீட்பேக் எப்படி என்று அக்கறையோடு விசாரிக்கிறார்கள். தவறாமல் லிச்சி ஜூஸ் குடித்துவிட்டு பா.ராகவனிடம் அதை அப்டேட்டும் செய்துவிடுகிறார்கள். இதையெல்லாம் எல்லோரும் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் இதையெல்லாம் செய்தேன்.

  இந்த வருடத்திற்கும் போன வருடத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. எந்தவிதமான புது அனுபவத்தையும் எனக்கு தரவில்லை. இருந்தாலும் புத்தகங்களை கைகளில் ஏந்தி காகித வாசனையை நுகர்வதில் எப்போதும் சலிப்பு வருவதில்லை எனக்கு. உள்ளே நுழையும்போதே குமுதத்தின் விளம்பரங்கள் வரிசைக்கட்டி நின்றன. ரீமாசென்னுக்கு ஒரு பக்க கதைகளும், காஜல் அகர்வாலுக்கு லைட்ஸ் ஆன் சுனிலும் பிடிக்குமாம். படிப்பார்களாம். இருவருக்கும் குமுதம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை விட தமிழில் வாசிக்கத் தெரியும் என்று அறிந்த போது கிடைத்த சந்தோஷம் இணையில்லாதது.  வாழ்க. எஸ்.ஏ.பி.

இந்த முறை எனக்கு வம்சி ஸ்டால் பிடித்திருந்தது. சென்ற முறையை விட அளவில் பெரிய ஸ்டாலை எடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் அடுக்கப்பட்டதிலும் ஒரு நேர்த்தி இருந்தது. வழக்கம் போலவே அட்டை வடிவமைப்பில் வம்சி கொள்ளை அழகு. பாலு மகேந்திராவின் கதை நேரம் தொடரின் திரைக்கதையும், அதன் மூலக்கதையும் தொகுப்பாக போட்டிருக்கிறார்கள். நான் வாங்கிய முதல் புத்தகம் அதுதான். கூடவே அதன் டிவிடியும் வாங்குவது நல்லது. விகடன் சுருங்கியிருக்கிறது. மிக சிறியது என்பதால் கூட்டம் அதிகமாக தெரிந்தது.  நக்கீரன் ஸ்டாலில் கோபாலின் கட் அவுட்டும் (அவ்ளோ பெருசுதான்) எல்.சி.டி டிவியும் அமர்க்களமாய் இருந்தது. கூட்டமும் ஓரளவிற்கு இருந்தது. எந்தப் புத்தகம் வாங்க நிற்கிறார்கள் என்று ஒரு முறை பார்த்தேன். ம்ஹூம். நெற்றிக்கண் திறக்கும் முன் ஓடி வந்துவிட்டேன்.

ஓடிய திசை தெற்கு என்றாலும் அடைந்த இடம் கிழக்கு. வரிசையாக வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள். ஒரே நிறம். ஒரே அளவு. ஒரே விலை. அடுத்த வருடம் நீரா ராடியாவின் வாழ்க்கை வரலாற்றையும் எதிர்பார்க்கலாம். 2013ல் எதிர்த்த வீட்டு முனுசாமியின் விவரம் தேவையெனில் கிழக்கை நாடலாம். அவரைப் பற்றியும் புத்தகம் போட்டிருப்பார்கள். இன்னும் ஜூவியும், நக்கீரனும் ஸ்பெக்டரம் பற்றி எழுதிக் கொண்டுதான் இக்கிறார்கள். அதற்குள்ளாகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி புத்தகமே எழுதிவிட்டார் பத்ரி. வாங்க மனம் வரவில்லை. இந்த தேர்தலிலும் திமுகவிற்கே வாக்களிக்க விரும்புவதும் காரணமாய் இருக்கலாம். கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையைப் பற்றி பெரிய புத்தகம் ஒன்றும் வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினியின் பன்ச் லைன் என்ற புத்தகமும் கண்ணில் பட்டது. தமிழக மக்கள் புத்திசாலிகள். கலைஞரின் திரைப்படங்களை அவர்கள் பார்ப்பதில்லை. ரஜினியின் அரசியல் அவர்களுக்கு தேவையில்லை. அந்தந்த துறையின் ராஜாக்களை அதில் மட்டுமே ரசிக்கிறார்கள். இதை உணர்ந்த கிழக்கும் இம்முறை எழுத்துலக ராஜா சுஜாதாவின் புத்தகங்களை கொட்டியிருக்கிறார்கள். ரஜினி, கமலை விட சுஜாதாவின் பெயரும், படமும் கிழக்கின் நான்கு திசைகளிலும் மின்னுகிறது. வாத்யார் வாத்யார் தான்.

காலச்சுவடு எஸ்கேப் திரையரங்கு போல ஆகிவிட்டது. கிளாசிக் நாவல்களை தனியாக பிளாஸ்டிக் ரேப்பரில் சுற்றி 200 ரூபாய் என்கிறார்கள். ஜே.ஜே சில குறிப்புகள் 200 ரூபாய் என நினைக்கிறேன். ஒரு நிமிடம் என் கண்ணுக்கு ஜெ.ஜெ சில குறிப்புகள் என்று தெரிந்தது அதன் விலை காரணமாக.  எல்லா புத்தகங்களுமே அதிக விலை. கீழை காற்று என்று ஒரு பதிப்பகமும் கண்ணில் பட்டது. 60 வயது அம்மா, 35 வயது மகள், 14 வயது பேரன் என ஒரு குடும்பம் அங்கே இருந்தது. இவர்கள் அங்கே என்ன வாங்குவார்கள் என்றறிய நானும் உள்ளே நுழைந்தேன். நாஞ்சில் நாடன் புத்தகம் இருக்கா என்றார் 65 வயது பாட்டி. அங்கே சிரித்தால் செஞ்சிரிப்பு ஆகிவிடும் என்பதால் “கம்முன்னு” வந்துவிட்டேன். அதே பாட்டி கிழக்கிலும் வந்து நாஞ்சில் நாடனை தேடினார். உதவிக்கு வந்தவர் எடுத்து வருவதாய் சென்றார். பாட்டி அவர் தந்த புத்தகத்தை வேண்டாம் என்றார். ஏதோ சூடீ வாடின்னு சொன்னியே பாட்டிம்மா என்று எடுத்து தந்தான் பேரன் . பாட்டி பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றதால் அங்கேயும் எதுவும் வாங்காமல் நடையை கட்டினார்கள். தமிழினியில் நாஞ்சில் நாடன் துணை என்று போர்டு வைக்காத குறைதான். சாகித்ய அகாடெமி விருது வாங்கிய புத்தகம் என்ற ஸ்பெஷல் அட்டைப்படம் போட்டும் பயனில்லை. பாட்டியின் கண்களில் தமிழினி படவேயில்லை. அவருக்கு பெட்ரமாக்ஸ் லைட்டும் கிடைக்கவேயில்லை.

இளைஞர்கள் கூட்டம் உயிர்மையில் தான் அதிகமாய் இருந்தது. இங்கேயும் சுஜாதா ராஜாங்கம் என்றாலும் மற்ற புத்தகங்களும் அதிமகாய் விற்கின்றன. சாரு புத்தகங்கள் இருந்த ஷெல்ஃபின் அருகே இருந்த உதவியாளரிடம் யாராவது சீரோ டிகிரி இருக்கா என்றால் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். இன்னும் வரவில்லையாம். தினம் ஒரு பதிப்பு என்றால் என்ன செய்யும் உயிர்மையும்? என்னுடன் வந்த நண்பர் லயோலா கல்லூரி மாணவர். உயிர்மை அரங்கில் நுழைந்தவுடன் கணையாழியின் கடைசி பக்கங்கள் எடுத்துக் கொண்டார். எஸ்.ராவின் பதினெட்டாம் நூற்றாண்டின் மழையை எடுத்தார். கல்லூரி மாணவர்கள் எல்லாம் படிக்க வேண்டிய சாருவின் தப்புத்தாளங்கள் பற்றி கேட்டேன். அவர்கள் கல்லூரியில் யாரும் படிப்பதில்லையாம். ஒரு வேளை வேந்தன் ஆல் பாஸ் டுட்டோரியல் கல்லூரியை சொல்லியிருப்பாரா சாரு? இருக்கும். மாலை சாரு நீண்ட தாடிக்காரர் ஒருவருடன் உயிர்மை அரங்கின் வாசலில் அமர்ந்துக் கொண்டிருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க பெரிய Q நின்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் சாரு தாடிக்காரருடன் பேசிக் கொண்டிருக்க q நீண்டு r,s,t,u… x,y வரை போனது. இவர்களுக்கு கையெழுத்து போட எத்தனை பேனா தேவைப்படும்? தமிழ்ச்சமூகம் அத்தனை பேனா வாங்கும் நிலையிலா எழுத்தாளனை வைத்திருக்கிறது? பாவம் சாரு என்றேன் அருகிலிருந்த நண்பரிடம்.  கோவப்பட்ட அவர் “பகவதி படத்தில் உங்காளு விஜய் ஒரு ரீஃபில்லை தூக்கி தூரப்போடுவார் தெரியுமா? அது இருந்தா போதும் அந்த தாடிக்காரருக்கு கையெழுத்து போட” என்றார்.

அவர் கிடக்கிறார். சாருவின் புகழ் அறியாதவர். சாரு பார்க்க அழகாக இருக்கிறார். சாருவின் கழுத்திலும் காதிலும் தங்கம் மின்னுகிறது. ஆனால் சாரு பாவம் ஒரு காதில் தான் கம்மல் மாட்டியிருக்கிறார். எப்போது சாருவின் இரண்டு காதிலும் தங்கம் ஜொலிக்கிறதோ அன்றுதான் கூபாவை போல, இத்தாலியை போல எழுத்தாளனை மதிக்கும் சமூகம் தமிழ்நாட்டிலும் உண்டு என அர்த்தம். சுஜாதா வாழவில்லையா? அவர் புத்தகம் விற்கவில்லையா என்பவர்கள் இலக்கியம் அறியாதவர்கள். அவர்கள் நாஞ்சில் நாடனையோ, பா,விஜயையோ படிக்கலாம். ஒரு எழுத்தாளரைத்தானே முதலமைச்சர் ஆக்கியிருக்கிறோம் என்பவர்களை மன்னிக்கவே  மாட்டார் சாரு. முரசொலியில் எழுதுபவரெல்லாம் எழுத்தாளனா? தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கண்காட்சி முடிந்தவுடன் உயிர்மையின் சேல்ஸ் ரெக்கார்டை பார்க்க வேண்டும், யார் புத்தகம் அதிகம் விற்றது எனறு.

இந்த வாரம் இன்னொரு நாள் போகவிருக்கிறேன். மீண்டும் அப்போது தொடர்வோம். சாருவைப் பற்றியல்ல. புத்தக கண்காட்சியைப் பற்றி.

Jan 7, 2011

லேடீஸ்.. ஆன்சர் மீ

41 கருத்துக்குத்து

 

1) வண்டில ஃப்ரண்ட் பிரேக், பேக் பிரேக்ன்னு ரெண்டு இருக்கும் போது (காலால) லெக்  பிரேக் போட்டு தட்டி தட்டி நிறுத்தறீங்களே.. உங்க மனசுல என்ன ஷேன் வார்னேன்னு நினைப்பா?

2) இன்கமிங் காலுக்காகவும், மிஸ்டு காலுக்காகவுமே மொபைல் வாங்குறீங்களே. ஒரு வேளை மிஸ் எல்லாம் விடுற கால் என்பதால் தான் மிஸ்டு கால்ன்னு பேரு வந்ததா?

3) அஃபிஷியல் கால்ன்னா எதிர்ப்பக்கம் பேசுற ஆளு இருக்கிற திசையை நோக்கி நேரா பேசுற மாதிரி காட்டுக் கத்தல் போடுற நீங்க, பெர்சனல் கால்ன்னா மட்டும் உதடே அசையாம பேசுறீங்களே.. இதுக்கெல்லாம் தனியா ஸ்பெஷல் கிளாஸ் எதுனா போனீங்களா?

4) தலைமுடிய தவிர எல்லாத்திலும் பிங்க் கலர் தேடுறீங்க ஓக்கே. அதுக்குன்னு தேசியக்கொடி தந்தா கூட பிங்க கலர் இல்லையான்னு கேட்கிறது டூ மச்ச, இல்லையில்ல, ட்விண்டி மச்சா தெரியல உங்களுக்கு?

5) ஃபோன்ல பேசிட்டே வண்டி ஓட்டின குத்தம் சொல்றாங்க. ஆனா ஃபோன்ல பேசிட்டே குறுக்குல வந்து, கரெக்ட்டா பச்சை சிக்னல் பார்த்து ஓட்டுற எங்கள பார்த்து “humpty dumpty sat on the wall” ன்னு ஏதோ இங்கிலீஷ்ல திட்டுறீங்களே. இப்ப நான் கேட்கிறேன்.  “baba black sheep have u any wool?

6) ஜீன்ஸ், டீஷர்ட், கார்கோன்னு எங்க டிரெஸ் ஒண்ணு விடாம போட்டுட்டு சுத்துறீங்க. நாங்க கிண்டலா செய்றோம்? ஆனா நாங்க டைட்டா டீ ஷர்ட் போட்டா மட்டும் ஜாக்கெட்ன்னு சொல்றீங்க. குர்தா போட்டா துப்பட்டா எங்கப்பான்னு கலாய்க்கறீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?

7) 30 வயச தாண்டிய ஷாலினியையோ, மாளவிகாவையோ பிடிக்கும்ன்னு சொன்னா உடனே “ஆண்ட்டி பண்டாரம்ன்னு” பேரு வைக்கறீங்க. ஆனா நீங்க மட்டும் “ஐ லவ் கமல்ப்பா”, சூப்பர்ஸ்டார அடிச்சிக்க முடியுமான்னு ஜொள்ளு விடுறீங்க. உங்கள ”அங்கிள் பைத்தியங்க” சொன்னா சும்மாவா விடுவீங்க?

8) ஒரே பொண்ணுக்கு பல பேரு நூல் விட்டா சூப்பர் ஃபிகர்ன்னு மிதப்புல சுத்தறீங்க. அதே ஒரு பையன் பல பொண்ணுக்கு லெட்டர் தந்தா பொறுக்கின்னு பேரு வைக்கறீங்க.ஐ வாண்ட் டூ நோ த ரீசன் நவ். கமான் டாக் மீ.

Jan 4, 2011

ந‌ண்ப‌னுக்கு புத்தாண்டு உத‌வி

26 கருத்துக்குத்து
நான் : ஹ‌லோ. டேய் நான் கார்க்கி பேசுறேன். ஹேப்பி நியூ இய‌ர் ம‌ச்சி

ந‌ண்ப‌ன் : சொல்றா. என்ன‌த்த‌ ஹேப்பி. என்ன‌த்த‌ நியூ இய‌ர்

நான் : என்ன‌டா இப்ப‌டி ட‌ல்லா பேசுற‌?

ந‌ண்ப‌ன் : வாழ்க்கை அப்ப‌டி போதுடா. கிர‌க‌ம் புது வ‌ருஷ‌ம் பொற‌ந்தாலும் என‌க்கு ஒண்ணும் மாறாது

நான் : நான் இருக்கும் போது அப்ப‌டியெல்லாம் சொல்லாத‌ ம‌ச்சி. என்ன‌ பிர‌ச்சினை உன‌க்கு

ந‌ண்ப‌ன் : விடுறா. என் த‌லையெழுத்து

நான்: சொல்லு ம‌ச்சி. என்னால் முடிஞ்ச‌த‌ நான் செய்ய‌ மாட்டேனா?

ந‌ண்ப‌ன் : ம‌த்த‌ பிர‌ச்சினையெல்லாம் விடு. ரெண்டு வார‌மா த‌லைவ‌லி உயிர் போது. இது ச‌ரியானாலே ம‌த்த‌து ச‌ரியாயிடும்

நான்: இவ்ளோதானா.. என்கிட்ட‌ ஒரு சூப்ப‌ர் வைத்திய‌ம் இருக்கு.

ந‌ண்ப‌ன் : என்ன‌டா

நான்: காலைல, அஞ்சு மணிக்கு எழுந்திருக்கணும்? பரவாயில்லையா?

ந‌ண்ப‌ன் : இந்த வலியால நான் தூங்கறதே இல்ல... நீ மேல சொல்லு

நான்:அஞ்சு மணிக்கு எழுந்த உடனே...

ந‌ண்ப‌ன் :பல் தேய்க்கணுமா?

நான்: அவ்ளோ கஷ்டப்படதேவயில்ல... எதுவும் செய்ய கூடாதுன்னு சொல்ல வந்தேன்... எழுந்து‌ அப்ப‌டியே க‌ட்டிலே நின்னு க‌ண்ணு ரெண்டையும் மூடிக்கிட்டு ,ஒரு கைய‌ நெஞ்சு மேல‌ வ‌ச்சிக்கிட்டு இன்னொரு கைய‌ த‌லைக்கு மேல‌ தூக்க‌ணும்.

ந‌ண்ப‌ன்:டேய் என்ன‌ க‌லாய்க்கிறியா?

நான்:சொல்ற‌த‌ கேளுடா. இப்ப‌டி நின்னுக்கிட்டு எந்த இடம் வலிக்குதோ அந்த இடத்த மனுசுல நினைச்சிக்கிட்டு இந்த‌ ம‌ந்திர‌த்த‌ சொன்னா வ‌லி சும்மா குருவி விஜ‌ய் மாதிரி ப‌ற‌ந்து போயிடும்..

ந‌ண்ப‌ன் :ச‌ரி, அந்த மந்திரத்த சொல்லு...யார்க்கிட்டேயும் சொல்ல‌க்கூடாதா?

நான்:சொல்றேன்டா..இது என்ன‌ அஜித் ப‌ட‌மா? பார்த்த‌தா வெளிய‌ சொல்லாம‌ இருக்க‌.  இதுல என்ன ரகசியம்.. இத நீ யார்கிட்ட வேணா சொல்லலாம்.. எத்தனை பேர் கிட்ட நீ சொல்றியோ அவ்ளோ நல்லது..

நண்ப‌ன்: அட‌, அப்ப‌டியா? த‌லைவ‌லி நின்னா போதும்

நான்: மூச்ச‌ ந‌ல்லா இழுத்து மூணு தட‌வ‌ சொல்லு

""கார்க்கி வாழ்க‌. அவ‌ர் புக‌ழ் வ‌ள‌ர்க‌


 என்ன ஒன்னும் தெரியலையா? அப்படியே செலக்ட் பண்ணி பாருங்க.. மந்திரத்த இந்த அளவுக்கு கூட ஒளிச்சு வைக்கலைனா எப்ப‌டி?
 

all rights reserved to www.karkibava.com