Dec 27, 2010

தென்மேற்கு பருவக்காற்று


 

தென்மேற்கு பருவக்காற்று – வடகிழக்கு பருவக்காற்று. இரண்டையும் இன்னொருமுறை உச்சரித்துப் பாருங்கள். தென்மேற்கு என்னும்போது மனதிற்குள் ஜில்லென்று இருக்கிறதா? தமிழ்மொழி 3000 வருடத்தையும் தாண்டிய மொழி. அதன் வார்த்தைக்கு ஒரு சக்தி உண்டு. அந்த காற்றைப் போல அந்த வார்த்தையும் ஜில்லென்றுதான் இருக்கும்.  கிடக்கட்டும். பதிவிற்கு வருவோம். இந்த வாரம் தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. வைரமுத்து இந்த படம் பார்த்து அழுதது, சரண்யா தன் வாழ்நாளில் மிக முக்கிய படமாக இதை சொன்னது போன்றவை செய்தியாக கண்ணில் பட்டபோது படத்தின் மேல் ஆர்வம் வந்தது. ஆனால் படம் வெளிவந்த விஷயம் நண்பர் ஒருவர் சொல்லித்தான் தெரியும். நிதி இல்லாமல் விளம்பரம் செய்யாமல் போன காலம் போய் “நிதிக்கள்” இருப்பதால் சரியாக விளம்பரம் செய்ய முடியாத நிலையாக இருக்கலாம்.

சில வருடங்கள் முன்பு தமிழ்சினிமாவின் நம்பிக்கைகளில் பரத்தும் இருந்தார். அவர் நடித்த கூடல் நகர் படத்தை முதல் நாளே பார்த்தேன். இயக்குனர் சீனு ராமசாமி என்ற பெயர் சட்டென கவர்ந்தது. விசாரித்ததில் பாலு மகேந்திராவிடம் பணியாற்றியவர் எனத் தெரிந்தது. ஆனால் கூடல் நகர் என்னை பெரிதும் ஏமாற்றியது. அதே இயக்குனர் இயக்கிய படம் தான் தென்மேற்கு பருவக்காற்று. கதை கொஞ்சம் பழகிய ஒன்றுதான். பொதுவாக படத்தின் கதையை சொல்வதில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை. திரைக்கதையும், ட்ரீட்மெண்ட்டுமே ஒரு படத்தை நல்ல படமாக்குக்கிறது என நம்புகிறேன். ஒரு வரியில் சொல்லப்போனால் கிராமத்து பிண்ணணியில் மீண்டும் ஒரு காதல் கதை எனலாம். . புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் அதில் இருக்கும் நேர்த்திக்காக இயக்குனரை பாராட்டலாம்.

Thenmerku Paruvakatru

படத்தைப் பற்றி பேச ஆரம்பித்ததும் முதல் வரியிலே தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் செழியன். நம்மை அப்படியே தூக்கிக் கொண்டு போய் தேனியில் உட்கார வைக்கிறார். ஆடுகளோடு நாமும் மேஏஏ என கத்துகிறோம். வெயிலின் உக்கிரம் அந்த ஏ.சி அரங்கின் உள்ளேயும் வியர்க்க வைக்கிறது. நம்மை சுற்றி கதையென்ற ஒன்றை இயக்குனர் சொல்ல ஏதுவாக நம்மை திரை கடத்தும் வேலை செய்த செழியன் தமிழ் சினிமாவின் மிக முக்கிய கண்டுபிடிப்பு என்பதில் இம்மியளவும் எனக்கு சந்தேகமில்லை. “உன் கண்ணால அவங்க என்ன பார்க்கலை” என்றுத்ரிஷா சொன்ன வசனம் இங்கே படு மொக்கையான உவமை என்றாலும் அதையே சொல்ல வேண்டியிருக்கிறது. செழியனின் கண்களால் நான் இதுவரை தேனியை பார்த்ததில்லை. செழியன் கண் தானம் செய்திருந்தால் சில கோடிகளை இழந்துவிட்டார் எனலாம்.

நாயகன் வசந்த் சேதுபதி என்ற புதுமுகம். ஓரளவிற்கு நடிப்பும் வருகிறது. நாயகியை பேராண்மையில் பார்த்த ஞாபகம். பூ படத்தில் மேக்கப் போட்டவரே இவருக்கும் போட்டது போலிருந்தது. இருவரின் பங்களிப்பும் படத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. நடிகர்கள் என்ற வகையில் சரண்யாவை எல்லோரும் பாராட்டியதாக தெரிகிறது.ஆனால் எனக்கேனோ நாயகனின் முறைப்பெண்ணாக வந்தவரை பிடித்து தொலைக்கிறது. அவரின் நடிப்பு நிச்சயம் அக்காட்சியை சற்று தரமுயர்த்தியிருக்கிறது. மற்றபடி எந்த பாத்திரமும், நடிகர்களும் கவரவில்லை. ரஹ்நந்தனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பிரச்சினை அது வெளிவந்திருக்கும் நேரம். குடிசை வீடும், கருப்பு நிற நாயகியும், தாடி வளர்த்த நாயகனும் கிட்டத்தட்ட க்ளிஷே ஆகிக் கொண்டிருக்கும் வேளை இது. இந்த மூன்றையும் பார்த்த உடனே ஒரு பெரிய கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறான் தமிழ்ப்பட ரசிகன். இதே டோனில் மாதம் 2 படங்கள் வெளியாகிறது. ஆனால் வருடத்தில் ஒன்றோ, இரண்டோதான் நல்ல படமாக இருக்கிறது. அது எந்தப் படம் என்று தெரியும் வரையில் எந்தப் படமும் தியேட்டரில் நிற்பதில்லை. ஆர்வத்தில் முதல் வாரமே பார்த்த சில படங்கள் கடித்த கடியில் துணிந்த முயற்சி செய்யவும் மனமொப்பவில்லை. படத்தின் மிகப்பெரிய பிரச்சினை இதுவென்பேன்.

அடுத்து கதை. இயக்குனர் கதைக்கும், திரைக்கதைக்கும் பெரிதாய் மெனக்கெட்டதாய் தெரியவில்லை. சில இடங்களில் லொகேஷனுக்கு போனபின்பு எழுதியதாய் அல்லது மாற்றியதாய் உணர்ந்தேன். இது போன்ற ஒரு கதை எடுக்கலாம் என்ற உந்துதலில் எழுதப்பட்ட கதையாகத்தான் எனக்குப் பட்டது. கதைக்களம், பாத்திரங்கள் தந்த ஒரு நிறைவை ஏனோ கதையோ, திரைக்கதையோ தராமல் போனது ஏமாற்றமே. அழுத்தமாய் மனதைக் கீறி ஒரு தழும்பை ஏற்படுத்தாமல் ஒரு சிராய்ப்பை மட்டுமே இப்படம் உண்டாக்குகிறது. போன பத்தியில் சொன்னது போல் சமீபகாலமாக இதே போன்ற சில சிராய்ப்புகளை வாங்கியதால் தென்மேற்கு பருவக்காற்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை சிறிய இடைவெளியில் நழுவ விடுகிறது.

இந்த பஸ் தேனிக்கு போகுமா என்று ஒருவர் கேட்க, போகும் ஆனா சுத்திட்டு போகும் என்கிறார் கண்டக்டர். “இது பெரிய சுற்றுலா பேருந்து, வாய குறைங்கப்பா கண்டக்டரங்க எல்லாம்” . அங்கதம் அலட்டும் வசனங்கள் மெல்லிய புன்னகையை வரவழைத்துக் கொண்டே இருக்கின்றன. ”பையன் ஆடு மேய்க்கிறாரு. எதிர்காலத்தை நினைச்சு பயப்படறாரு. ஒரு நல்ல சீட்ட பாருங்க  ஜோசியரே” என்பது போன்ற நச் வசனங்கள் வசனகர்த்தாவை வாழ்த்த வகை செய்கின்றன. கடைசியாய் ஒன்றை சொல்லி விடுகிறேன்.

“என்னை ஜெயில்ல போட்டுட்டா தொழில்ல யாருங்க பார்த்துப்பா?

அதை பார்க்கக்கூடாதுன்னுதாண்டா ஜெயில்ல போடுறோம்.”

மொத்தத்தில் சீனு ராமசாமி நம்பிக்கை ஏற்படுத்தினாலும் தென்மேற்கு பருவக்காற்று இந்த முறை பொய்த்துத்தான் போனது. கூடல்நகரில் தடுக்கி கீழே விழுந்த இயக்குனர் எழுந்த ஓட முயற்சி செய்திருக்கிறார். ஓடுவது சந்தேகமென்றாலும் எழுந்து நின்ற முயற்சிக்கு கைத்தட்டலாம். கை கொடுத்து தூக்கி விடுவதை விட கைத்தட்டலே அவருக்கு உத்வேகத்தை தரும். அவ்வேகத்தில் அவர் ஒடியபின் கைக்குலுக்கிக் கொள்ளலாம். அடுத்த முறை இன்னும் நல்லதொரு படத்தை தருவார் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்.

10 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on December 27, 2010 at 1:09 AM said...

ஓக்கே!

ப்ரியமுடன் வசந்த் on December 27, 2010 at 1:37 AM said...

//கை கொடுத்து தூக்கி விடுவதை விட கைத்தட்டலே அவருக்கு உத்வேகத்தை தரும். //

I Like It பாஸ்..!

king on December 27, 2010 at 1:56 AM said...

well said thala

பிரதீபா on December 27, 2010 at 4:20 AM said...

ஒரு நாள் பார்ப்பேன். அப்போ சொல்றேன்.

சுசி on December 27, 2010 at 4:35 AM said...

கைதட்டல் உங்களுக்கும் சேர்த்து.

மாணவன் on December 27, 2010 at 6:29 AM said...

உங்கள் ஸ்டைலில் ரொமப யதார்த்தமா சொல்லியிருக்கீங்க அருமை அண்ணே

பகிர்வுக்கு நன்றி

Mohan on December 27, 2010 at 10:38 AM said...

Nice Review

விக்னேஷ்வரி on December 27, 2010 at 2:12 PM said...

நல்ல விமர்சனம் கார்க்கி.

பொன்கார்த்திக் on December 27, 2010 at 2:51 PM said...

:)

பரிசல்காரன் on May 19, 2011 at 5:34 PM said...

பாடல்கள் பிரமாதம். வரிகளுக்காக தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

(யாரும் தேதியைப் பார்க்காதீங்கப்பா..)

 

all rights reserved to www.karkibava.com