Dec 4, 2010

ரத்த சரித்திரம் – ஓ ஆனால் நெகட்டிவ்


 

ரத்தசரித்திரம் என்ற திரைப்படத்தை பற்றி எழுதும் முன் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். எனக்கு எதிராக நடத்தப்படும் வினைக்கு உடனே எதிர்வினை செய்வதுண்டு. ஆனால் காத்திருந்து பழி வாங்கலில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது மட்டும் இருந்திருந்தால் இந்த படத்தை எடுத்தவரை, பாருடா என்று சொன்ன நண்பனை, ஐனாக்ஸ் நிறுவத்தினரை, டிக்கெட் கிழித்துக் கொடுத்தவரை என ஒருவரையும் விடாமல் பழி தீர்த்திருப்பேன்.

ஒரு எம்.எல்.ஏ தனது வலது(1) கையின் பேச்சைக் கேட்டு இடது(2) கையை வெளியே அனுப்புகிறார். இடது(1) கை கொதித்தெழுந்து தனது இன மக்களை தூண்டிவிடுகிறார். விஷயம் கேள்விப்பட்ட வலது(1)கை, இடதுகையின் வலது(2)கையை வைத்தே அவர் கதையை முடிக்கிறார்.  இறந்தவரின் ஒரு மகனையும் போலீஸ் லாக்கப்பிலே சமாதி கட்டுகிறார்கள். இன்னொரு மகன் என்று ஒருவர் இருந்தால் என்ன செய்வார்? வெகுண்டுழுவார்தானே? அதேதான் நடக்கிறது. அவர் இறக்கவில்லை என்னும்போதே அவர்தான் நாயகன் பிரதாப் ரவி(விவேக் ஓப்ராய்) என்று புரிந்துக் கொண்டீர்களேயானால் வெரிகுட். தன் இன மக்களின் ஆதரவோடு எம்.எல்.ஏ, அவரின் வலது(1) கையென எல்லோரையும் என்ரெட்டி செய்கிறார்.(அந்த ஊரில் ஏது கவுண்டர்?). ஆனந்தபுரம்(?) என்ற அந்த ஊரில் அவர் ஒரு பெரிய சக்தியாக வளர்கிறார். வழக்கம் போல ஒரு அரசியல் கட்சி அவரை அரவணைத்து கொள்கிறது. வார்டு தலைவர் பதவியெல்லாம் இல்லாமல் நேரிடையாக எம்.எல்.ஏவாக்கி மந்திரியும் ஆக்குகிறது. இவர் அரசியலில் இருந்தாலும் தனது நிழற்படை மூலம் யாரெல்லாம் இவருக்கு எதிராக திரும்புவார்கள் என்று நினைக்கிறாரோ, கவனிக்க, நினைக்கிறாரோ எல்லோரையும் போட்டுத் தள்ள சொல்கிறார். இதுதான் முதல் பாகத்தின் சாராம்சம். 

இரண்டாம் பாகம் என்ன சொல்கிறது? அதேதான் சொல்கிறது. இப்போது எம்.எல்.ஏவாக விவேக் ஓப்ராய். அவரால் கொல்லப்படும் குடும்பத்தில் ஒருவராக சூர்யா. முதல் பாகம் போல முதல் ஷெட்யூலில் சூர்யாவின் அப்பா, அடுத்த ஷெட்யூலில் அவரின் மிச்ச குடும்பத்தினர் கொல்லப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமென சூர்யா நினைக்கும் பிரதாப் ரவியை போட்டுத்தள்ள அவர் முறுக்கேறிய உடம்போடும், கண்களில் கொலைவெறியோடும், மனம் முழுவதும் பழி வாங்கும் எண்ணத்தோடும், முகமெங்கும் கரியோடும் அலைகிறார். அவரை கொல்ல முடிந்ததா? எப்படி பழி வாங்குகிறார் என்பதை மீதிப்படம் சொல்கிறது.  ஆரம்பத்தில் திரை முழுவதும் ரத்தம் தெறிக்கிறது என்றால் முடிவில் திரையரங்கு முழுவதுமே ரத்தம் தெறிக்கிறது. பார்வையாளர்களில் கைக்குட்டை எடுத்து வந்த புண்ணியவான்கள் கழுத்தில் இருந்து கொட்டும் குருதியை அழுத்தி பிடித்தபடி வெளியேறுகிறார்கள்.

என்னதான் பிரச்சினை படத்தில்? இசையும், ஒளிப்பதிவும்தான். முதல் துளி ரத்தம் காதில் இருந்துதான் வருகிறது நமக்கு. வாயாலே மியூஸீக் போடுவார்கள் தெரியுமா?அது போல ஏதேதோ ஒலிக்கிறது. ஒரு இடத்தில் கூட காட்சியோடும், கதையோடும் சேர்ந்து பயணித்ததாக நினைவிலில்லை. ஒளிப்பதிவும் அப்படியே. தேவையே இல்லாமல் கன்னாபின்னாவென சுற்றுகிறது. ஒரு காட்சியில் அப்படியே 180 டிகிரி சுற்றி மொத்த காட்சியும் தலைகீழாக வருகிறது. ஒரு வேளை அந்த காட்சிக்கு பின் நாயகனோ, கதையோ அப்படியே மாறப்போகிறதா என்று நர்சிம் போல கூட யோசித்துப் பார்த்துவிட்டேன். ம்ஹூம். இன்னொரு கறிவேப்பிலைக் காட்சிதான். ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் புத்திசாலித்தனமாய் இருந்தாலும் மொத்தத்தில் எரிச்சலைத் தருகிறது என்றுதான் சொல்வேன். அடுத்த பிரச்சினை ஸ்லோ மோஷன் காட்சிகள். ஏற்கனவே விவிஎஸ் லஷ்மண் ஓடும் வேகத்தில் பயணிக்கிறது படம். அது போதாமல் 3 நிமிடங்கள் எல்லாம் ஸ்லோ மோஷனில் சாவடிக்கிறார்கள். தயவு செய்து தியேட்டரிலும் ரிமோட் கொடுங்கப்பா. ம்யூட் போடவும், ஃபார்வர்ட் செய்யவும் இந்தப் படத்தில் நிறைய வேலை இருக்கிறது.

திரைக்கதை குழப்பமாக இல்லையென்றாலும் திருப்பங்கள் இல்லாமல் இருக்கிறது. அரசியல், ரவுடிகள் எல்லாம் இருக்கும்போது அட என நிமிர வைக்கும் திருப்பங்கள் நிறைந்திருக்க வேண்டாமா? ஜெயிலில் இருக்கும் சூர்யாவை இன்னொரு அரசியல்வாதி சந்தித்து எலக்‌ஷனில் நிற்க சொல்கிறார். ஜெயிலில் இருக்கும் நான் எப்படி என்று அவர் கேட்கும்போதே வெளியே வெட்டியாக சுற்றும் ப்ரியாமணி என்ற சூர்யாவின் மனைவி கதாபாத்திரம் நமக்கு நினைவுக்கு வருகிறது.ஆனால் பெரிய திட்டம் என்பது போல அந்தக் காட்சியை மெதுவாக நகர்த்துகிறார் இயக்குனர். அதே போல் டிவி பாம் பற்றி முதலிலே பார்வையாளனுக்கு சொல்லிவிட்ட பிறகு அது வெடிப்பதை சீக்கிரம் காட்டிவிட வேண்டியதுதானே?  டிவியை பிரிப்பது, எடுத்து மேஜை மீது வைப்பது, ப்ளகில் மாட்டுவது, அதை ஆன் செய்வது எல்லாம் க்ளோசப்பிலும், ஸ்லோ மோஷனிலும் காட்டி குண்டு வெடிக்கும் முன்பே நம்மை பரலோகத்திற்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள்.

படத்தின் பலம் நடிப்பு. சூர்யாவை அடுத்து பார்ப்போம். விவேக் ஓப்ராயை பாராட்டி 4 பதிவுகள் எழுதினால்தான் என் ஆர்வம் அடங்கும். அவரின் 3 திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். இதில் நான் பார்த்தது பிரதாப் ரவி. ஒரு இடத்தில் கூட விவேக் ஓப்ராய் தெரியவே இல்லை. அவரைக் கொல்ல சூர்யா முயற்சித்து தோற்கும் அந்த முதல் காட்சியில் தப்பித்த பின் ஒரு நடை நடப்பார் பாருங்கள். பாருங்கள். வெளியே நடக்கும் போராட்டங்களையும், அவர் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் துல்லியமான உடல்மொழியிலும், முகபாவனைகளிலும் கொண்டுவருகிறாரே! அது நடிப்பு. அவர் நடிகர். சூர்யாவும் அதகளம் செய்திருக்கிறார். ஆனால் நந்தாவில் வந்த அதே வெறி அவர் கண்களில் ரத்த சரித்திரம் வரை தொடர்கிறது. எனக்கு என்னவோ அவரின் நடிப்பு அந்தந்த காட்சிகளை கணக்கில் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் எல்லாமே சூர்யாவேவாகவா இருக்கும்? இதில் சூர்யாவின்(பாத்திரத்தின் பெயரே அதேதான்) கோபம், பேரழகினில் வரும் சூர்யாவின் கோபம், ஆதவனில் ஆதவனின் கோபம், காக்க காக்க அன்புச்செல்வனின் கோபம் என எல்லாமே ஒரேவிதமாக இருப்பதாக தோன்றுகிறது.

இப்போதெல்லாம் லாஜிக் என்ற வார்த்தையை எனது திரைப்படங்கள் குறித்த பதிவுகளில் பயன்படுத்துவது இல்லை. இதற்கும் வேண்டாமென நினைக்கிறேன். ஆனால் கேட்க வேண்டுமென்றால் சில விஷயங்கள் இருக்கின்றன. தன் குடும்பத்தை சீக்கிரமே ஆனந்தபுரத்தில் இருந்து அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்லும் சூர்யா 5 வருடம் வரை அழைத்து செல்லாதது ஏன்? தனது குடும்பம் இறக்கும் வரை சூர்யா-ப்ரியாமணிக்கு குழந்தை இல்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு பழி வாங்குவது மட்டுமே யோசித்து குளிக்காமல் கூட சுற்றும் சூர்யாவிற்கு குழந்தைக்கும் முயற்சி செய்யும் எண்ணம் வந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேளை அந்த வெடிகுண்டு சம்பவத்தின் போதே மூன்று மாதமாக இருக்கலாமே என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆந்திர அரசியலின் கதை, இந்தி டெக்னீசியன்கள், டப்பிங் போன்ற காரணிகளால் நம்பகத்தன்மை குறைந்தது போலிருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய? மொத்தமாய் படம் ஒரு வித அயர்ச்சியை தருகிறது. டெக்னிக்கலாகவும் படம் மிரட்டவில்லை. பழிவாங்குதலில் இருக்கும் நிறைவை மட்டும் சொல்லாமல் பெரும்பான்மையான தவறுகள் சந்தர்ப்பவசத்தால் நடக்கின்றன என்பதை காட்சிகளால் சொன்ன ஒரு விஷயத்திற்காக மட்டும் பாராட்டலாம். மற்றபடி பாலம் கட்ட அணில் தந்த உதவி போல் இந்த ரத்தசரித்திரத்தை எழுத நம்மிடம் சில துளி ரத்தம் கேட்பதற்காக கண்டித்துக் கொள்கிறேன்

21 கருத்துக்குத்து:

சரவணகுமரன் on December 4, 2010 at 10:47 PM said...

//தயவு செய்து தியேட்டரிலும் ரிமோட் கொடுங்கப்பா.//

//குண்டு வெடிக்கும் முன்பே நம்மை பரலோகத்திற்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள்//

:-)

சரவணகுமரன் on December 4, 2010 at 10:48 PM said...

//பேரழகினில் வரும் சூர்யாவின் கோபம், ஆதவனில் ஆதவனின் கோபம், காக்க காக்க அன்புச்செல்வனின் கோபன் என எல்லாமே ஒருவிதமாக இருப்பதாக தோன்றுகிறது//

ஆமாங்க, நம்மாளு மாதிரி வெரைட்டி காட்ட மாட்டேங்குறாரு! :-)

சிவா என்கிற சிவராம்குமார் on December 4, 2010 at 10:50 PM said...

போச்சா படம்! நான் கூட ஏதோ பண்ணுவாங்கன்னு நெனச்சேன்!

எஸ்.கே on December 5, 2010 at 3:36 AM said...

டிரெய்லரே பயங்கரமாதான் இருந்திச்சு!
ஆனால் விமர்சனம் நல்லா சிரிக்க வச்சிச்சு!

philosophy prabhakaran on December 5, 2010 at 3:37 AM said...

இது தெரிஞ்ச விஷயம் தான்... ட்ரைலர் பார்க்கும்போதே தெரியலையா...

சுசி on December 5, 2010 at 4:58 AM said...

கண்டிப்பா படம் பாக்கணும் கார்க்கி.. இந்த விமர்சனத்தை நினைச்சுக்கிட்டே..

ஹஹாஹா..

மாணவன் on December 5, 2010 at 5:25 AM said...

விமர்சனம் உங்கள் பாணியில் கலக்கல் அண்ணே,

தொடருங்கள்.......

Karthik on December 5, 2010 at 6:19 AM said...

Someone must write to Prime Minister to stop RGV from keep employing the ridiculous camera angels, even more ridiculous camera movements, that crying-out-to-god-about-the-injustice song in the bg for nothing. One hopes he writes a the script to be dramatic.

Surya's character became one dimensional too soon in the movie. But easily the best moments of the movie is when he is in the center of the frame.

Btw Is it just me who felt as if i've seen every scene of this movie in some RGV movie earlier?

Bullet on December 5, 2010 at 9:51 AM said...

விமர்சனம் கலக்கல்

Ŝ₤Ω..™ on December 5, 2010 at 10:29 AM said...

Saga.. If the slowmotion shots have been avoided, the nonvie wud hv ended in 1.5hrs itself. Balance 1hr ku RGV ena panuvar paavam..
While watching the movie, instead of involving us in the happenings n having sympathy towards Surya, v cud only yarn.. Got a feel wen movie will end n wen we can go out and hv a cup of coffee..

மோகன் குமார் on December 5, 2010 at 12:46 PM said...

ரொம்ப தேங்க்ஸ். டிவியில் அவங்களே போட்டா கூட பார்க்க கூடாதுன்னு புரியுது. வெறும் வன்முறை படங்கள் ரொம்ப அலர்ஜி.

Hanif Rifay on December 5, 2010 at 1:42 PM said...

//என்ரெட்டி செய்கிறார்.(அந்த ஊரில் ஏது கவுண்டர்?)//

எப்பிடி இப்படிலாம்...

எதோ துரை ஹிந்தி பக்கம் போயிருக்கே ... நல்ல படமோ'ன்னு நினச்சேன்... புட்டிகிச்சா.....

விக்னேஷ்வரி on December 5, 2010 at 10:31 PM said...

கார்க்கி, உங்க விமர்சனம் எப்போவுமே நல்லா இருக்கும்ங்கறதை மறுபடியும் நிரூபிச்சிருக்கீங்க. ரொம்ப நல்ல விமர்சனம்.

சூர்யா... குட்டைப் பசங்க நடிக்கற படமெல்லாம் நான் பார்க்கறது இல்ல.

ஜனகனின் எண்ண ஜனனங்கள் on December 5, 2010 at 11:23 PM said...

நல்ல விமர்சனம்....அந்த டிவி பொம் விசயம் உண்மைலேயே சலிப்புக்கு உரியது.....சுத்த போர்(எப்புடியும் எடுக்கலாம்) படம்

Maduraimalli on December 7, 2010 at 12:24 AM said...

சூர்யா... குட்டைப் பசங்க நடிக்கற படமெல்லாம் நான் பார்க்கறது இல்ல.

// watch your tongue m'dm..

கார்க்கி on December 7, 2010 at 9:07 AM said...

@maduraimali,

sagaa, Hope u would have seen many comments teasing other actors more than this. I have seen ur comments too in the post like that. So, u have to be open if u criticizie others.

I cant watch silently if u r angry on my blog with other readers.

BTW, is surya not a shorter one?

Anonymous said...

I didn't accept ur review. Because the film was too good. It's really a new experience to tamil cinema. I too accept this film has too much of violence and no turning points. But u have already know it's a real story. Not an imagination. Then how can they add such a stupid kind of turning points..... It's a 'pakka' RVG film..
Watch it for a new experience. Becaz this film has no stupid punches and no heroism like a unbelievable stunts. The real action lovers and RVG fans enjoyed this film......

கார்க்கி on December 7, 2010 at 9:30 PM said...

bala,

thanks for ur comments.

its nice to hear "stupid punches" from u :))))

mahendren on December 8, 2010 at 5:31 PM said...

surya super star avalathan sollamudium

ஆதிமூலகிருஷ்ணன் on December 10, 2010 at 12:24 AM said...

சில வரிகளை மட்டுமே ஏற்கலாம். பொதுவாக ஒரு நல்ல ஆக்ஷன் படம் எனலாம். இப்படி வாருமளவுக்கெல்லாம் இல்லை.

தலைப்பு, ப்ரொமோஸ் எல்லாவற்றிலுமே இது ஒரு வன்முறைப் படம் என தெளிவாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் வம்படியாக பார்த்துவிட்டு நிறைய வன்முறை என்பதில் அர்த்தமில்லை.

கார்க்கி on December 11, 2010 at 5:22 PM said...

விளம்பரங்களை தெளிவாக பார்த்த ஆதி பதிவை அப்படி படிக்கவில்லை போலும். எங்கேனும் வன்முறை அதிகம். அதுவே படத்தின் குறை என்று சொல்லியிருக்கேனா? நான் சொன்னது ஒளிப்பதிவும், இசையும் சரியில்லை. திரைக்கதையில் திருப்பங்கள் இல்லை.

நீங்கள் ஆடும் வீடியோகேமில் கூட காரணங்கள் சரியாக அமையும்போதே சண்டையினை ரசிப்பீர்கள் அல்லவா? இங்கு அப்படியில்லாமல் போவதான நான் உணர்ந்தேன்.

மத்தபடி வன்முறை படமென்று தெரிந்துதான் போனேன். அதை குறைவாக சொல்லவில்லை

 

all rights reserved to www.karkibava.com