Dec 12, 2010

சித்து+2 - நகுரதினா திரனனா


 

சென்ற சனிக்கிழமை எனக்கு தனிக்கிழமை ஆகிப் போனது. காலையில் இருந்து வீட்டிலே இருந்துவிட்டு தோழியை பார்க்கலாமென ஐந்து மணியளவில் கிளம்பினேன். மவுண்ட் ரோடை நெருங்கிய சமயம் அல்வாவை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினாள். மீட்டிங் ரத்தானது. ஏதாவது சினிமாவுக்கு செல்லலாம் என்றால் மணி 6.20. ஆகிவிட்டது. பக்கத்தில் இருந்த சத்யமுக்கு சென்று அன்றைய ராசிபலனான “யோகம்” என்பதை சோதித்து பார்ப்பதென முடிவு செய்தேன். பைக்கை பாலத்தின் கீழே நிறுத்திவிட்டு டிக்கெட் கிடைக்குமா என்று பார்க்க கவுண்ட்டரை நோக்கி ஓடினேன். எதிரில் வந்த சென்னையின் ஹைலைட் சமாசாரங்களை கூட கவனிக்கவில்லை நான்.

எதிர்காலத்தில் நாங்கள் எடுக்கப்போகும் குறும்படத்தை சத்யமில் ரிலீஸ் செய்தால் போதும். ஒரு வாரம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும். கேப்டனின் விருதகிரி கூட ஹவுஸ்ஃபுல் ஆனா ஒரே திரையரங்கு சத்யமாக சத்யமாகத்தான் இருக்கும்.டிக்கெட் கிடைக்காமல்  தொங்கிய தலையை கண்ட ஒருவர் சார் டிக்கெட் வேண்டுமா என்றார். பிளாக் டிக்கெட் விற்பவர்கள் டை கட்டுவதில்லை என்பது என் சிற்றறிவுக்கு தெரியும். எக்ஸ்ட்ரா டிக்கெட் போல என விசாரித்தேன். சித்து +2 சார் என்றார். இவர் பேரையே நான் கேட்கவில்லை. படித்துவாங்கிய டிகிரியெல்லாம் சொல்கிறாரே என்று வியந்தேன். பின் தான் தெரிந்தது நம் திரைக்கதை பிதாமகர் கே.பாக்யராஜ் அவர்கள் இயக்கிய படமாம். அவரது வாரிசு சாந்தனு நாயகனாம். வேறு வழியில்லை. நேரமமுமில்லை. கொடுங்க சார் என்று இரண்டு 100 ரூபாய் தாள்களை நீட்டினேன். சில்லறை இல்லை என்றவர் 120 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்க்கே தந்தார். “யோகம்” என்ற ராசிபலனை இதுதான் என்ற தவறாக எடுத்துக் கொண்டேன். இன்னும் 15 நிமிடங்களே இருந்தது. சத்யம் இருக்கும் தெரு ஒன்வே என்பதால் தலையை சுற்றி மூக்கை தொடுவதை போல சுற்ற வேண்டாம். எடுறா கார்க்கி ஃப்லைட்ட என்று பைக்கை நோக்கி ஓடினேன்.

போகும் வழியில் உட்லேண்ட்ஸ் திரையரங்கில் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார் கேப்டன். இந்த படம் மட்டுமில்லைடா, எந்த படம் பார்த்தாலும் சுடுவேன் என்று அவர் சொன்னதாக எனக்கு தெரிந்தது. கேப்டன் அரசியல்வாதி ஆனபிறகு அவர் சொல்வதை யார் கேட்கிறா? அங்கிருந்து சத்யமை அடைந்தபோது மணி 6.40. பார்க்கிங்கில் சித்து +2 என்ற போது எதேச்சையாக சிரித்தார் டிக்கெட் கிழிப்பவர். ஆடுறா ராமா என்பது போல ஓடுறா ராமா என்று ஓடி அரங்கை அமர்ந்தேன். “பிரின்ஸ் ஜூவல்லரி..பனகல் பார்க்” என்ற விளம்பரத்தை பார்த்ததும்தான் நிம்மதியானேன். சரியான நேரத்தில் வந்ததை கூட “யோகம்” என்ற ராசிபலனோடு ஒப்பீட்டு குதுகலமடைந்தது மனது.,

படம் தொடங்கியது. ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்த டிரெயினில் ஏறிவிட்டார் நாயகி. அவரே பார்ப்பதற்கு வழக்கமான நாயகியின் தோழியை போலதான் இருந்தார் என்றால், தோழியின் லட்சணம் இந்நேரம் புரிந்திருக்கும் உங்களுக்கு. “சென்னையில் இருக்கும் என் ஃப்ரெண்ட் ஃபோன் நம்பர மட்டும் நம்பி நீ போறது எனக்கு சரியாப்படல.ஒரு வேளை அவர் நம்பர் மாறியிருக்கலாம். அவர் வீட்ட மாத்தியிருக்கலாம். அப்படி ஆயிட்டா நீ என்ன செய்வ”. படம் பார்ப்பவர்களுக்காக வசனம் பேசிக் கொண்டிருந்தார் நாயகியின் தோழி. கிரகம் நாயகி சென்னை வந்தபின் அதே போல் ஆகிவிடுகிறது. அந்த ஃபோனை அவர் ஊரிலே பண்ணிவிட்டு டிரெயின் ஏறியிருக்க கூடாதா என்றெல்லாம் நான் கேட்கவில்லை. படம் முழுக்க இதே போன்ற காட்சிகள்தான். வசனம் எல்லாமே பாத்திரங்கள் பேசுவதாக இல்லை. பார்ப்பவர்களுக்கு கதை சொல்லவே எழுதப்பட்டிருக்கிறது. கிருஷ்ண டாவின்சியின் கதைக்கு 6 பேர் +பாக்யராஜ இணைந்து விவாதம் வேறு செய்திருக்கிறார்களாம். அப்படி என்னதான் கதை என்பதை பார்ப்போம் வாருங்கள்.

சித்துவும், பவித்ராவும் +2 கோட்டடித்துவிட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள். சரி.டிரெயினில் வருகிறார்கள். வந்த இடத்தில் இருவரும் சந்தித்து ஒரு வாரம் ஒன்றாக இருக்கிறார்கள். பவித்ராவுக்கு இடையில் (அந்த “இடையில்” இல்லப்பா. நடுவுல) சித்து மேல் காதல் வருகிறது. சித்துவுக்கும் காதல் வரும் நேரம், பவித்ரா +2வில் பாசாகவில்லை.ச்சே. சாரி ஃபெயிலாகவில்லை. நல்ல மார்க் என்று சித்துவுக்கு தெரியவருகிறது. இதை சொன்னால் டாக்டர் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் பவி(முழு பேர எல்லாம் சொல்ல முடியாதுப்பா) தன்னை விட்டு போய்விடுவாளென்று மறைத்துவிடுகிறார், இந்த நேரத்தில் என்கவுண்ட்டரை பொழுதுபோக்காக செய்யும் போலிசுடன் சித்து உரச, ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறார் ஏசி. சித்து-பவி தங்கியிருக்கும் வீட்டுக்கு போலிஸ் வரும்போது பவியை காணவில்லை. ஹவஸ் ஓனர் இவன் தனியாகத்தான் தங்கியிருந்தான். பெண்ணெல்லாம் இல்லை என்று குண்டு போட ”மவனே நீ காலிடா ” என்று என்கவுண்ட்டர் ஏகாம்பரம் பிளிறுகிறார். இப்பதாங்க இடைவேளை.

சாப்டாச்சா? வாங்க கதைக்கு போவோம். பவியை அவர் பெற்றோர் தான் வந்து அழைத்து சென்றுவிடுவார்கள். தப்பித்து வந்த சித்துவிடம் ஹவுஸ் ஓனர் இதை சொல்ல, தலைவர் பவியின் ஊருக்கு செல்கிறார். அங்கு பவியை சமாளித்து, கஞ்சா கருப்பு உதவியுடன் அவர் பெற்றோர்,லூசு மாமாவை சமாளித்து கைப்பிடிக்கும் நேரம் என்கவுண்ட்டர் ஏகாம்பரம் வந்துவிடுகிறார். ஆனால் அடுத்த முறை சித்துவை பார்க்கும்போது அந்த பெண்ணுடன் இருந்தால் விட்டுவிடுவதாக அவர்களுக்குள் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்டாம். ங்கொய்யால இந்த ரெண்டு கே.பு.னால எவன் ஜெண்ட்டில்மேனுன்னுதான் தெரியல. அவன் போனா என்ன? இன்னொரு லூசு மாமா இருக்கான் இல்ல? அவன் ஆளு அனுப்புறான். அவர்கள் சித்துவின் வயிற்றில் குத்திவிடுகிறார்கள். இதற்கு மேல தியேட்டரில் இருந்தால் அந்த கத்தி நம்ம மேல பாயும்ன்னு ஓடி வந்துட்டேன்.

இதற்கு நடுவில் பவி வீட்டில் வேலை செயும் குஜராத்தி வேலைக்காரிக்கு சித்து மேல ஒரு இது வருகிறது. படத்தின் ஒரே ஆறுதல் இவர்தான் என்பதை நான் சொன்னால் ஜொள்ளு என்பீர்கள். எனவே நான் சொல்லவில்லை. சாந்தனுவின் நடனம் அருமை. பாக்யராஜ் வரும் அந்த பாடலும் ஓக்கே. இரண்டு ஜிகிடிகளும் ஒன்றாக தெறம காட்டும் அந்த கடைசிப் பாடலும் சூப்பர். மத்தபடி அசல்,சுறா என்று பார்க்கும் என்னைப் போன்றவர்களையே சற்று அசைத்துப் பார்க்கிறான் சித்து.

கதைதான் சொத்தை. நாயகன் மகன் ஆகிவிட்டதால் வேறு வழியில்லை. நாயகியையாவது ஒழுங்காக பிடித்தார்களா? இல்லை. இசையையாவது? ம்ஹூம். காமெடி? சுத்தம். திரைக்கதை? உஸ்ஸ்ஸ்ஸ்.. வசனம்? சவசவ. தியேட்டர மட்டும் பக்காவாக பார்த்து ரிலீஸ் செய்துவிட்டார்கள். தனுசு ராசிக்கு யோகம் என்றுதான் போட்டிருந்தது ராசிபலனில். அம்மாவிடம் சொல்லி நான் கடக ராசியா என்று பார்க்க சொல்ல வேண்டும். அதற்குதான் கண்டம் என்று போட்டிருந்தார்கள்.

தனியாக சென்றதால் கடைசிவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தேன். வெளியே வந்து பார்க்கிங்கில் வண்டியை எடுத்தபோது இருவர் பேசிக் கொண்டார்கள் “மச்சான். சாந்தனுவுக்கும் அந்த ஹீரோயினுக்கும் செட் ஆயிடுச்சாம். படம் நல்லா இருக்கோ இல்லையோ கிளுகிளுப்பா இருக்கும். பாக்யராஜ் படம் வேற”. பைக்கை ஸ்டார்ட் செய்தபடி அவர்கள் காதுபட பாடினேன் “நகுரதினா திரனனா.. திரனனா திரனனா திரனனாஆஆஆஆஆ”

சித்து +2 =  ( –20)

பிற்சேர்க்கை: ஒரு சில வசனத்திற்கு விசில் சத்தம் காதை பிளந்தது. ஆனால் அது சீரியஸ் வசனம் என்பதை மறந்து சிரித்தார்கள். உதாரணம்.

சித்து :நீ டாக்டருக்கு படிக்கணும் பவி

பவித்ரா: டேய் நீ இல்லைன்னா நானே பேஷண்ட் ஆயிடுவேண்டா.

இன்னும் யாருக்காவது உதாரணங்கள் வேண்டுமா?

18 கருத்துக்குத்து:

"ஸஸரிரி" கிரி on December 12, 2010 at 11:07 PM said...

ஐயோ.... முடியலைங்க.... சத்தியமா இந்தப் படத்தை நான் சத்யத்துல பாக்க ஆசப்படறேன். ஆனா ஒரு இருவது பேரு போவணும் பாத்துக்கங்க....

போறோம்....

தமிழ்ப்பறவை on December 12, 2010 at 11:10 PM said...

பாக்யராஜ்கிட்ட பாக்கி சரக்கு எதுவும் இல்லையா...? கஷ்டம் :(

MANO on December 12, 2010 at 11:10 PM said...

nice review

கனாக்காதலன் on December 12, 2010 at 11:22 PM said...

வசனம் சூப்ப்ப்பரப்பு..

சுசி on December 12, 2010 at 11:34 PM said...

கலக்கல் விமர்சனம் கார்க்கி..

படத்தை பார்க்க வேண்டியதே இல்லைப்பா. இதுவே போதும்னு தோணுது.

//அவர்கள் காதுபட பாடினேன் “நகுரதினா திரனனா.. திரனனா திரனனா திரனனாஆஆஆஆஆ”//
ஹஹாஹா.. இதான் கார்க்கி :))

பிரியமுடன் ரமேஷ் on December 13, 2010 at 12:18 AM said...

Appa Indha attemptla paiyan appa rendu perume faila.

கனவுகள் விற்பவன் on December 13, 2010 at 1:08 AM said...

இடைவேளைக்கு கோக்கும் பாப்கார்னும்...

பதிவுலக சினிமாவிமர்சனத்தில் புதிய புரட்சி...!!!

வழிப்போக்கன் - யோகேஷ் on December 13, 2010 at 1:28 AM said...

:))

டம்பி மேவீ on December 13, 2010 at 5:07 AM said...

நல்ல வேளை. நான் இந்த படத்துக்கு தான் நேத்து போகலாம்ன்னு இருந்தேன்... ஆனா போகல.

but விதி வலியது. ரத்த சரித்திரதுல போய் மாட்டிகிட்டேன்

மாணவன் on December 13, 2010 at 5:33 AM said...

விமர்சனம் செம்ம கலக்கல்.......


//சித்து :நீ டாக்டருக்கு படிக்கணும் பவி பவித்ரா: டேய் நீ இல்லைன்னா நானே பேஷண்ட் ஆயிடுவேண்டா. இன்னும் யாருக்காவது உதாரணங்கள் வேண்டுமா?//

அய்யயோ இதே முடியல....

மோகன் குமார் on December 13, 2010 at 7:16 AM said...

டிரைலரே பாக்க சகிக்கலை படம் வேற பாத்தீங்களா

தராசு on December 13, 2010 at 9:09 AM said...

ஹலோ, படத்துக்கு போய் முழுவதும் அனுபவித்து பார்த்துட்டு, யாம் பெற்ற இ(து)ன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணத்துல சின்சியரா விமர்சனம் எழுதற பாரு தம்பி, உன் கடமை உணர்ச்சிய நினைச்சா......

மோகன் குமார் on December 13, 2010 at 9:34 AM said...

நீங்க கஷ்டப்பட்டாலும் எங்களை சிரிக்க வச்சிடீங்க. நாயகியே தோழி மாதிரி இருக்கார் போன்ற பல இடங்களில் சிரித்தேன்.

குசும்பன் on December 13, 2010 at 10:43 AM said...

செம!

செங்கோவி on December 13, 2010 at 1:38 PM said...

எப்படி இருந்த பாக்கியராஜ் இப்படி ஆயிட்டார்!!விமர்சனத்திற்கு நன்றி!
--செங்கோவி
நானும் ஹாலிவுட் பாலாவும்

கார்க்கி on December 14, 2010 at 11:17 PM said...

அனைவருக்கும் நன்றி

Speed Master on December 15, 2010 at 7:42 PM said...

ஐயோ.... இதுவுமா

வெட்டிப்பயல் on December 15, 2010 at 8:42 PM said...

//அசல்,சுறா என்று பார்க்கும் என்னைப் போன்றவர்களையே சற்று அசைத்துப் பார்க்கிறான் சித்து. //

இந்த ஒரு வரிப் போதும் :)

 

all rights reserved to www.karkibava.com