Dec 31, 2010

நியு இயர்ங்கோ. எஞ்சாயுங்கோ..

20 கருத்துக்குத்து

 

நாளைக்கு நியூ இயர்ங்க. பொதுவா வருஷத்தின் முதல் நாள் உஷாரா இருக்கணும்ன்னு சொல்வாங்க. அன்னைக்கு அழுதா வருஷம் பூரா சீரியல் கேரக்டர் மாதிரி அழுவாங்களாம். அன்னைக்கு சிரிச்சா சினேகா மாதிரி சிரிச்சிட்டே இருப்பாங்களாம். அதனால் முதல் நாள் எந்த பிரச்சினையிலும் மாட்டாம எப்படி உஷாரா இருக்கிறதுன்னு பார்ப்போம்.

1) முதல் நாளு கோவிலுக்குப் போனா நல்லதுன்னு வீட்டுல சொல்வாங்க. அப்படி சொன்னா கம்முன்னு போயிட்டு வந்துடுங்க. தரிசன க்யூ 4 தெருவுக்கு நின்னாலும் போனோமா, சக்கரைப் பொங்கலையும் கேசரியையும் சாப்ட்டோமான்னு இருங்க. வருஷ மொத நாளே இப்படி தெருவுல நிக்கனுமான்னு கேள்வி கேட்டா அப்புறம் அந்த வருஷத்துல நடக்கிற எல்லா சொதப்பலுக்கும் நீங்க கோவிலுக்கு போவ அடம் பிடிச்சதுதான் காரணம்ன்னு சொல்வாங்க. கிருஷ்ணரா இருக்க வேண்டிய நீங்க, நரகாசூரனா மாறுனாலும் ஆச்சரியபடறதுக்கில்ல. அதனால ஃபேனுக்கு காயிலும், வைஃபுக்கு கோயிலும் ரொம்ப முக்கியம்ன்றத மறந்துடாதீங்க.

2) கையில கேமராவோடு அலையுற பார்ட்டிங்க கிட்ட உஷாரா இருங்க. எல்லோரிடமும் உங்க நியூ இயர் ரெசொலுயுஷன் என்னன்னு கேட்கிற மாதிரி அவங்க கிட்டயும் கேட்டா “8 மெகா பிக்சல்”னு கேமராவோடு ரெசொலுயுஷன சொல்லி காண்டாக்கிடுவாங்க. புது வருஷம் வருதோ இல்லையோ இங்கிலாந்த கண்ட பாண்டிங் மாதிரி நமக்கு கொலைவெறி வந்துடும்.

3) மோடி வைக்கிறதுன்னு சொல்வாங்க தெரியுமா? ஏதாவது ஒண்ண புதுசா செய்யும்போது தடங்கல் மாதிரி பேசுறது. இல்லைன்னா மூஞ்ச தூக்கி வச்சிக்கிறது. அதுக்கு பேருதான் மோடி. வருஷ தொடக்கத்தில வீட்டுல தங்கம் வாங்கி வச்சா வருஷம் முழுக்க தங்கமா கொட்டும்ன்னு சொல்வாங்க. உங்களுக்கு வேற மாதிரி தோணலாம். மொத நாளே பர்ஸூல இருந்த காசு காலி ஆனா வருஷம் முழுக்க அப்படித்தானே ஆகும்ன்னு தோணலாம். நமக்கு தோன்றதெல்லாம் பலிக்காது. காசு இல்லைனாலும் கிரெடிட் கார்டுல தேய்ச்சு தங்கத்த வாங்கித் தந்து சிங்கம் ஆயிடறதுதான் நல்ல ஆணுக்கு அழகு.

4) நியு இயர்ல முக்கியமான விஷயம் தண்ணி. நம்ம அரசாங்கம்தான் டாப்பாச்சே. புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் இரவு 11 மணிக்கே முடிக்கணும்ன்னு சொல்லி அலப்பறைய விடுவாங்க. தண்ணி தராத கட்நாடகா அரச திட்டுறவங்க, நம்ம நாட்டு மகக்ளுக்கு செய்யும் கொடுமையெல்லாம் எந்த உச்ச நீதிமன்றமும் கேட்காது.  எல்லா பாரிலும் பார்க்கிங்னு ஒரு இடம் கொடுத்துட்டு வெளிய வந்து வண்டி எடுக்கிறவங்கள ட்ரங்க்கன் டிரைவ்ன்னு தொல்லைய கொடுப்பாங்க. இதுல இருந்து தப்பிக்க ஒரே வழி சரக்கோட ஒரு ஃப்ரெண்ட் வீட்டுல சங்கத்த கூட்றதுதான். இந்த கூட்டணிக்கு ராமதாஸ கூட கூப்பிடலாம். ஒரு பிரச்சினையும் வராது.

5) நியு இயர் அன்னைக்கு சைட் அடிச்சு, அதுல ஒரு ஃபிகர்கிட்ட கைகுலுக்கி ஹேப்பி நியு இயர்ன்னு சொன்னா  அந்த வருஷம் சுபிட்சமா இருக்கும்ன்னு எப்படியும் உங்க ஃப்ரெண்டுல ஒருத்தன் சொல்லியிருப்பான். அப்படி முடிவெடுத்தா ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க. நீங்க ஹேப்பி நியு இயர் சொல்லப் போற ஃபிகர்க்கும் உங்களுக்கும் அதுகப்பட்சம் 3 இல்லைன்னா 4 வருஷம்தான் கேப் இருக்கணும். இல்லைன்னா சேம் டூ யூ அங்கிள்ன்னு அது சொல்றது மத்தவங்க காதுல ஷேம் டூ யூ அங்கிள்ன்னு விழுந்துடும். அப்புறம் வருஷம் முழுக்க அந்த பொண்ண பார்த்தாலே ராடியாவ பார்த்த தொழிலதிபர் கணக்கா ஓடி மறையணும்.

6) கடைசியா ரொம்ப முக்கியமான பதிவுலகம். நேரா போய் ஃலெஃப்ட்டுல திரும்பினா வெற்றி நிச்சயம், அதோ பூட்டு நீங்க சாவின்னு தன்னம்பிக்கை டானிக்கை பேரல் கணக்கில் இந்த ஆண்டில் ஊற்றுகிறோம்ன்னு ஒரு பக்கம் போட்டு தாளிப்பாய்ங்க. இது என்ன உன் கொள்ளுத்தாத்தா கொண்டாடியா விழாவான்னு “கேள்வியா” கேட்டு இன்னொரு பக்கம் வறுப்பாங்க. ”இணிய புத்தான்டு வாழ்த்துகல்னு” புதுசா ஒரு மொழிப்பித்தன் கிளம்பி வருவான். இதையெல்லாம் லெஃப்ட் ஹேண்டால ரிமூவ் பண்ணிட்டு சாளரத்த படிச்சிங்கன்னு வைங்க, இந்த நாள் மாத்திரமல்ல, வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளே!!!!!!!!!!!

 

WISH YOU ALL A VERY HAPPY AND

PROSPEROUS NEW YEAR

Dec 29, 2010

குறும்பட ஸ்க்ரிப்ட்

17 கருத்துக்குத்து

 

குறும்படம் எடுத்துட்டு தானே உங்களுக்கு காமிக்கிறோம்? ஒரு சேஞ்சுக்கு நாங்க அடுத்த எடுக்கப் போகும் ஷார்ட் ஃபில்மின் ஸ்க்ரிப்ட் சொல்றேன். படிச்சிட்டு சொல்லுங்க

சீன் 1

லொகேஷன் : பள்ளிக்கூடம்

(மரத்துக்கு கீழ மூணாங்கிளாஸ் நடந்துட்டு இருக்கு. வாத்யார் முழு ஆண்டு தேர்வில் பாஸாகி நாலாம் வகுப்புக்கு போறவங்க லிஸ்ட்ட படிக்கிறாரு.)

வாத்யார் : மதன். நீயும் பாஸ் ஆயிட்ட.

மதன் : சார். என்ன அஞ்சாங்கிளாஸூக்கு டபுள் புரமோஷன் போடுங்க.

வாத்யார் : நீ நல்லா படிக்கிற பையன் தான். ஆனா டபுள் புரமோஷன் எல்லாம் கொடுக்க முடியாது

மதன் : இல்லைன்னா மூணாங்கிளாஸ்லே உட்கார வைங்க. நாலாங்கிளாஸ் மட்டும் வேணாம் சார்.

____________________________________

சீன் 2

லொகேஷன் : ஹைவே, பைக்கில் மதனும் நண்பனும்

மதன் : மச்சி. உன் பைக்குல எத்தன கியர்?

நண்பன் : அஞ்சுடா

மதன் : நான் மூணுல இருந்து நேரா அஞ்சுக்கு போயிடுவேன், ஓக்கேவா?

நண்பன் : ஏன்? நாலாவது கியர் போட மாட்டியா?

மதன் : முடியாது

என்றபடி வ்ரூம் என சீறிப்பாய்கிறான், அஞ்சாவது கியரில்

______________________________

சீன் 3

லொகேஷன் : கல்லூரி வாசல்

நண்பன் : டேய். ஃபுல் டீட்டெயில் கிடைச்சாச்சு. பேரு கம்லா. ஈ.சி.ஏ ஃபைனல் இயர். இப்போதைக்கு யாரையும் லவ் பண்ணல.

மதன் : ஃபேமிலி டீட்டெயில்ஸ்?

நண்பன் : அப்பா இன்கம்டேக்ஸ்ல வேலை செய்றாரு. அம்மா டீச்சர். மொத்தம் நாலு பசங்க. இவதான் கடைசி

மதன்: அப்போ நாலாவது பொண்ணா?

நண்பன் : ஆமாண்டா

மதன் : அப்போ வேணாம்டா.

_______________________________________________

சீன் 4

லொகேஷன் : நண்பர்கள் அறை

மதன் : 3 பால்ல 6 ரன். ஈசிதாண்டா

நண்பன் : கஷ்டம்டா. பார்த்தியா..ரைனா அவுட்.

மதன் : 2 பால்ல 6. அடிறா சிக்ஸ்

நண்பன் : ஃபோர் போன கூட போதும் மச்சி. கடைசி பால்ல தொட்டுவிட்டு 2 ஓடலாம். இல்லைன்னா டை ஆக்கிடலாம்

மதன்: ஃபோர்லாம் அடிச்சானா டென்ஷன் ஆயிடுவேன். ஒன்லி சிக்ஸ்.

நண்பன் : அப்படி என்னதாண்டா உனக்கு பிரச்சினை ஃபோர் கூட. நாலாம் நம்பர பார்த்தாலே டெரர் ஆயிடுற?

___________________

மதன் முகம் கடுப்பாகுது. அப்படியே கட் பண்ணி கேரளாவில் இருக்கும் சாரு நிவேதிதா கட் அவுட்டை காட்டுறோம். அவர் சென்ற வருடம் ஜெமோ புத்தகத்தை கிழிப்பதை காட்டுகிறோம். இன்னொரு எழுத்தாளரின் புத்தக அறிமுக கூட்டத்தில் அந்தப் புத்தகத்தை குப்பை என்று பேசுவதை காட்டுகிறோம். மொத்தத்தில்  சாரு(இந்தில 4..ஹிஹிஹி) என்ற வார்த்தை மீது மதனுக்கு இருக்கும் வெறுப்பை காட்டவே இந்தப் படம்.

குறீயிடுகள்:

1) படத்தில் மொத்தன் 4 சீன்

2) மதன், வாத்தியார், நண்பன்1, நண்பன்2 என 4 கதாப்பாத்திரங்கள்

3) படம் மொத்தம் 4 நிமிடங்கள் தான்.

4) இதை ஒரு நாலந்திர படமென்றும் சொல்லலாம்.

மொத்த குறியீடும் நான்குதான். இந்த ஸ்க்ரிப்ட்டை மேலும் எப்படி மெருகேற்றலாம் என்பது குறித்த உங்கள் ஆலோசனைகளை எதிர்ப்பார்க்கிறோம். :))

டிஸ்கி : அண்ணன் சாரு பற்றி தெரியாதவர்கள் உடனே கூகிளில் சென்று சாரு நிவேதிதா என்று தேடவும். மேலதிக சேதாரங்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது

Dec 27, 2010

வேலையோ வேலை - 3

12 கருத்துக்குத்து

 

யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே என்பார்கள். உங்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்கும் முன்னரே உங்களது ரெஸ்யும் நிறுவனத்தின் கைகளுக்கு சென்றுவிடும். ஆக, உங்களைப் பற்றிய முதல் இம்ப்ரெஷனை ஏற்படுத்தப்போவது நீங்கள் அல்ல. உங்களின் CVதான். எனவே ரெஸ்யும் உங்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் அமைவது முக்கியம். ரெஸ்யும் எழுதுவது ஒரு கலை. இதை இப்படித்தான் எழுத வேண்டும் என்று வரையறுக்க முடியாது. ஏனெனில் உங்களைப் போலவே அதுவும் தனித்தன்மை வாய்ந்தது. ஆனால் எவையெல்லாம் இருக்க வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லலாம்.

ரெஸ்யும் என்பது நீங்கள் இது வரை செய்து வரும் வேலைகள் பற்றிய பட்டியல் மட்டுமல்ல. அது உங்களைப் பற்றியது. உங்களைப் பற்றி என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அவையெல்லாம் அதில் இருக்க வேண்டும். பெரும்பாலும் Resume ஆங்கிலத்திலே எழுதப்படுகிறது என்பதால் அது பற்றிய வார்த்தைகளை ஆங்கிலத்திலே காண்போம்.

1) Contact Information  : 

Mail id, Mobile number, Landline number இந்த மூன்றும் இருத்தல் அவசியம். official மெயில் முகவரிகளையும், அலுவலக மொபைல் அல்லது லேண்ட்லைன் எண்ணையும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

2) Job Objective: 

இது முக்கியம். நீங்கள் எந்த மாதிரி வேலை எதிர்பார்க்கிறீர்கள், உங்களின் vision எல்லாம் தெளிவாக சொல்லப்பட வேண்டும். முடிந்தவரை வேறு ஒரு ரெஸ்யுமில் இருந்து  எடுத்தாளாமல் உங்கள் சொந்த மொழியில் எழுதுங்கள்.

3) Qualification & SKills:

உங்களின் தகுதிகள், திறமைகள் என எல்லாவற்றையும் பட்டியல் இடப்பட வேண்டும். Bulletin formatல் இருந்தால் இடம் மிச்சமாகும். பார்க்கவும் நன்றாக இருக்கும். எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அது தொடர்பான தகவல்களை முதலில் சொல்லலாம்.

4) Work Experience: 

இப்போது இருக்கும் வேலையில் இருந்து தொடங்கி, முந்தைய அனுபவங்கள் பற்றி எழுதுங்கள். Position, Name of the company, Duration, ஆகியவை ஒவ்வொன்றுக்கும் தரப்பட வேண்டும். அந்த வேலையில் உங்களது Responsibilities மட்டும் பட்டியிலிடாமல் அதில் உங்களின் accomplishments என்னவென்று சொல்வதுதான் சரி. 

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். “Redesigning the layout of the shop floor”  என்பது ஒரு responsibility என்று வைத்துக் கொள்வோம். அதை இப்படி எழுதலாம் “Transformed a Poor utilized ,inefficient shop  floor into a smooth-running operation by totally redesigning the layout; this increased the productivity and saved the company thousands of dollars”. இதையே “Redesigning the layout of the shop floor” என்று எழுதினால் முழுமையாகாது

இரண்டு வேலைகளுக்கு நடுவே இடைவெளி இருந்தால் அதை தெளிவாக குறிப்பிட்டு, காரணத்தையும் சொல்லி விடுவது நல்லது. முடிந்தவரை quantifiable terms ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

5) Education :

  பெரும்பாலானவர்கள் தங்களது கல்லூரி தகவல்களை மட்டுமே தருகிறார்கள். இப்போதெல்லாம் நமது 10வது மதிப்பெண்களை கூட கணக்கில் கொள்கிறார்கள். எனவே இந்த இடத்தில் 10வது முதல், கடைசியாக பயின்ற/பயிலும் பாடம் வரை தெளிவாக சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் ஏதேனும் பட்டம் வாங்கியிருந்தால், அதை இந்திய படிப்பிற்கு இணையான தகவ்ல்கள் கொண்டு விளக்கப்பட வேண்டும். இந்த டேட்டாக்களை Tabular formatல் தந்தால் படிக்க வசதியாக இருக்கும் . கீழ்கண்ட தகவல்கள் கொடுப்பது நம்பகத்தன்மையை அதிகரிக்கும்

1) Course
2) Joining year & year of passing
3) Marks scored
4) Instituion / Board
5) Specialization
6) Achievements

இந்த 5 பிரிவுகளும் நிச்சயம் இருக்க வேண்டும். இன்னும் நம் வேலைக்கேற்ப பிரிவுகள் சேர்க்கலாம். அதே போல சிலர் பல நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும் ஒரே வேலையைத்தான் செய்திருப்பார்கள். அவர்கள் Responsibilitiesஐ மொத்தமாக பட்டியிலிட்டுவிட்டு, Companies worked என்பதை தனியாக சொல்லி விடலாம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனிப்பட்ட வேலைப் பற்றிய தகவல்களை தர வேண்டியதில்லை. Front office admin, Saftey officers போன்றவர்கள் இந்த மாதிரியான ரெஸ்யும் தயார் செய்யலாம்.

  செய்ய வேண்டியவை பார்த்தாயிற்று. இனி செய்யக் கூடாதவை என்னவென்று பார்க்கலாம்.

1) இது உங்களின் ரெஸ்யும். எனவே “ I have worked“ (நான்) என்று எழுதுவது தேவையில்லாதது. எந்த இடத்திலும் இப்படி வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்.

2) உங்கள் வேலைக்குத் தொடர்பில்லாத Hobbies தேவையே இல்லை. புகைப்படத்துறையில் வேலைக்கு விண்னப்பிக்கிறவர் Photography தொடர்பான Hobby யை சொல்லலாம். மற்றவர்களுக்கு தேவையில்லை.

3) உங்களின் மதம், சாதி சார்ந்த தகவல்களுக்கு ரெஸ்யுமில் இடமில்லை. தேவைப்பட்டால் கேட்கும் போது தரலாம். ஆனால் ரெஸ்யுமில் நிச்சயம் இவை தேவையில்லாத விஷயங்கள்

4) உங்கள் பெயர் Common Name ஆக இருந்தால் பாலினம் குறித்து சொல்ல வேண்டும் அல்லது முதல் பக்கத்திலே Mr.Karki அல்லது Ms.Kamla என்று சொல்லி விடலாம்.

5)  ரெஸ்யும் பார்க்க/படிக்க எளிமையாய் இருக்க வேண்டும். எனவே எழுத்துருக்கள்(Fonts) எளிமையாய் இருக்க வேண்டும். Arial font, 10Pt பொதுவாக பயன்படுத்தப்படும் எழுத்துரு. வரிகளுக்கு இடையேயான இடைவெளி 1.5 ஆக இருந்தால் தெளிவாக இருக்கும். பத்தித்தலைப்புகளை Bold & Underline செய்தால் போதும். அளவைக் கூட்டத் தேவையில்லை.

6) தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வது எல்லோருக்குமே பிடித்தமான செயல்தான். ஆனால் Innovative, Self Starter, Team Player என்பது போன்ற பொதுவான வார்த்தைகள் காலாவாதியாகி கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. Linked in blogல் வந்த இந்தப் பதிவு அதைப் பற்றி விரிவாக அலசுகிறது. விருப்புமிருப்பவர்கள் படித்துக் கொள்ளலாம்.

ரெஸ்யூமை அடுத்த வாரத்திற்குள் தயார் செய்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் எங்கே, எப்படி எல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்

________________

End of Part - 3

தென்மேற்கு பருவக்காற்று

10 கருத்துக்குத்து

 

தென்மேற்கு பருவக்காற்று – வடகிழக்கு பருவக்காற்று. இரண்டையும் இன்னொருமுறை உச்சரித்துப் பாருங்கள். தென்மேற்கு என்னும்போது மனதிற்குள் ஜில்லென்று இருக்கிறதா? தமிழ்மொழி 3000 வருடத்தையும் தாண்டிய மொழி. அதன் வார்த்தைக்கு ஒரு சக்தி உண்டு. அந்த காற்றைப் போல அந்த வார்த்தையும் ஜில்லென்றுதான் இருக்கும்.  கிடக்கட்டும். பதிவிற்கு வருவோம். இந்த வாரம் தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. வைரமுத்து இந்த படம் பார்த்து அழுதது, சரண்யா தன் வாழ்நாளில் மிக முக்கிய படமாக இதை சொன்னது போன்றவை செய்தியாக கண்ணில் பட்டபோது படத்தின் மேல் ஆர்வம் வந்தது. ஆனால் படம் வெளிவந்த விஷயம் நண்பர் ஒருவர் சொல்லித்தான் தெரியும். நிதி இல்லாமல் விளம்பரம் செய்யாமல் போன காலம் போய் “நிதிக்கள்” இருப்பதால் சரியாக விளம்பரம் செய்ய முடியாத நிலையாக இருக்கலாம்.

சில வருடங்கள் முன்பு தமிழ்சினிமாவின் நம்பிக்கைகளில் பரத்தும் இருந்தார். அவர் நடித்த கூடல் நகர் படத்தை முதல் நாளே பார்த்தேன். இயக்குனர் சீனு ராமசாமி என்ற பெயர் சட்டென கவர்ந்தது. விசாரித்ததில் பாலு மகேந்திராவிடம் பணியாற்றியவர் எனத் தெரிந்தது. ஆனால் கூடல் நகர் என்னை பெரிதும் ஏமாற்றியது. அதே இயக்குனர் இயக்கிய படம் தான் தென்மேற்கு பருவக்காற்று. கதை கொஞ்சம் பழகிய ஒன்றுதான். பொதுவாக படத்தின் கதையை சொல்வதில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை. திரைக்கதையும், ட்ரீட்மெண்ட்டுமே ஒரு படத்தை நல்ல படமாக்குக்கிறது என நம்புகிறேன். ஒரு வரியில் சொல்லப்போனால் கிராமத்து பிண்ணணியில் மீண்டும் ஒரு காதல் கதை எனலாம். . புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் அதில் இருக்கும் நேர்த்திக்காக இயக்குனரை பாராட்டலாம்.

Thenmerku Paruvakatru

படத்தைப் பற்றி பேச ஆரம்பித்ததும் முதல் வரியிலே தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் செழியன். நம்மை அப்படியே தூக்கிக் கொண்டு போய் தேனியில் உட்கார வைக்கிறார். ஆடுகளோடு நாமும் மேஏஏ என கத்துகிறோம். வெயிலின் உக்கிரம் அந்த ஏ.சி அரங்கின் உள்ளேயும் வியர்க்க வைக்கிறது. நம்மை சுற்றி கதையென்ற ஒன்றை இயக்குனர் சொல்ல ஏதுவாக நம்மை திரை கடத்தும் வேலை செய்த செழியன் தமிழ் சினிமாவின் மிக முக்கிய கண்டுபிடிப்பு என்பதில் இம்மியளவும் எனக்கு சந்தேகமில்லை. “உன் கண்ணால அவங்க என்ன பார்க்கலை” என்றுத்ரிஷா சொன்ன வசனம் இங்கே படு மொக்கையான உவமை என்றாலும் அதையே சொல்ல வேண்டியிருக்கிறது. செழியனின் கண்களால் நான் இதுவரை தேனியை பார்த்ததில்லை. செழியன் கண் தானம் செய்திருந்தால் சில கோடிகளை இழந்துவிட்டார் எனலாம்.

நாயகன் வசந்த் சேதுபதி என்ற புதுமுகம். ஓரளவிற்கு நடிப்பும் வருகிறது. நாயகியை பேராண்மையில் பார்த்த ஞாபகம். பூ படத்தில் மேக்கப் போட்டவரே இவருக்கும் போட்டது போலிருந்தது. இருவரின் பங்களிப்பும் படத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. நடிகர்கள் என்ற வகையில் சரண்யாவை எல்லோரும் பாராட்டியதாக தெரிகிறது.ஆனால் எனக்கேனோ நாயகனின் முறைப்பெண்ணாக வந்தவரை பிடித்து தொலைக்கிறது. அவரின் நடிப்பு நிச்சயம் அக்காட்சியை சற்று தரமுயர்த்தியிருக்கிறது. மற்றபடி எந்த பாத்திரமும், நடிகர்களும் கவரவில்லை. ரஹ்நந்தனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பிரச்சினை அது வெளிவந்திருக்கும் நேரம். குடிசை வீடும், கருப்பு நிற நாயகியும், தாடி வளர்த்த நாயகனும் கிட்டத்தட்ட க்ளிஷே ஆகிக் கொண்டிருக்கும் வேளை இது. இந்த மூன்றையும் பார்த்த உடனே ஒரு பெரிய கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறான் தமிழ்ப்பட ரசிகன். இதே டோனில் மாதம் 2 படங்கள் வெளியாகிறது. ஆனால் வருடத்தில் ஒன்றோ, இரண்டோதான் நல்ல படமாக இருக்கிறது. அது எந்தப் படம் என்று தெரியும் வரையில் எந்தப் படமும் தியேட்டரில் நிற்பதில்லை. ஆர்வத்தில் முதல் வாரமே பார்த்த சில படங்கள் கடித்த கடியில் துணிந்த முயற்சி செய்யவும் மனமொப்பவில்லை. படத்தின் மிகப்பெரிய பிரச்சினை இதுவென்பேன்.

அடுத்து கதை. இயக்குனர் கதைக்கும், திரைக்கதைக்கும் பெரிதாய் மெனக்கெட்டதாய் தெரியவில்லை. சில இடங்களில் லொகேஷனுக்கு போனபின்பு எழுதியதாய் அல்லது மாற்றியதாய் உணர்ந்தேன். இது போன்ற ஒரு கதை எடுக்கலாம் என்ற உந்துதலில் எழுதப்பட்ட கதையாகத்தான் எனக்குப் பட்டது. கதைக்களம், பாத்திரங்கள் தந்த ஒரு நிறைவை ஏனோ கதையோ, திரைக்கதையோ தராமல் போனது ஏமாற்றமே. அழுத்தமாய் மனதைக் கீறி ஒரு தழும்பை ஏற்படுத்தாமல் ஒரு சிராய்ப்பை மட்டுமே இப்படம் உண்டாக்குகிறது. போன பத்தியில் சொன்னது போல் சமீபகாலமாக இதே போன்ற சில சிராய்ப்புகளை வாங்கியதால் தென்மேற்கு பருவக்காற்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை சிறிய இடைவெளியில் நழுவ விடுகிறது.

இந்த பஸ் தேனிக்கு போகுமா என்று ஒருவர் கேட்க, போகும் ஆனா சுத்திட்டு போகும் என்கிறார் கண்டக்டர். “இது பெரிய சுற்றுலா பேருந்து, வாய குறைங்கப்பா கண்டக்டரங்க எல்லாம்” . அங்கதம் அலட்டும் வசனங்கள் மெல்லிய புன்னகையை வரவழைத்துக் கொண்டே இருக்கின்றன. ”பையன் ஆடு மேய்க்கிறாரு. எதிர்காலத்தை நினைச்சு பயப்படறாரு. ஒரு நல்ல சீட்ட பாருங்க  ஜோசியரே” என்பது போன்ற நச் வசனங்கள் வசனகர்த்தாவை வாழ்த்த வகை செய்கின்றன. கடைசியாய் ஒன்றை சொல்லி விடுகிறேன்.

“என்னை ஜெயில்ல போட்டுட்டா தொழில்ல யாருங்க பார்த்துப்பா?

அதை பார்க்கக்கூடாதுன்னுதாண்டா ஜெயில்ல போடுறோம்.”

மொத்தத்தில் சீனு ராமசாமி நம்பிக்கை ஏற்படுத்தினாலும் தென்மேற்கு பருவக்காற்று இந்த முறை பொய்த்துத்தான் போனது. கூடல்நகரில் தடுக்கி கீழே விழுந்த இயக்குனர் எழுந்த ஓட முயற்சி செய்திருக்கிறார். ஓடுவது சந்தேகமென்றாலும் எழுந்து நின்ற முயற்சிக்கு கைத்தட்டலாம். கை கொடுத்து தூக்கி விடுவதை விட கைத்தட்டலே அவருக்கு உத்வேகத்தை தரும். அவ்வேகத்தில் அவர் ஒடியபின் கைக்குலுக்கிக் கொள்ளலாம். அடுத்த முறை இன்னும் நல்லதொரு படத்தை தருவார் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்.

Dec 22, 2010

உததுது.. குளிதுது..

23 கருத்துக்குத்து

 

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

என்றார் வள்ளுவர். எந்த பெற்றோருக்கும் அவர்கள் பிள்ளையின் மழலைப் பேச்சு சந்தோஷத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.ஆனால் குழந்தை வளர்ந்த பின்னும் அப்படியே பேசிக் கொண்டிருந்தால்? 5 வயது பையன் “அததா மழைதா அதை மழைதா” என்று பாடிக் கொண்டிருந்தால் ரசிக்கவா முடியும்? பப்லு அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தான். பொதுவாகவே அவன் வயது குழந்தைகளை விட உயரமாகவும் பருமனாகவும் இருப்பான். உருவம் அப்படி. பேச்சு இப்படி என்றால் என்ன சொல்ல?

அது யார் பப்லு என்று யோசிக்கும் புது நண்பர்களுக்கு.. பப்லு என் அக்கா பையன். சிறுவயதில்(பப்லுவின் சிறுவயதில்) அவன் அம்மா வேலை நிமித்தம் வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால் யூ.கே.ஜி முதல் என் கட்டுப்பாட்டிலே வளர்ந்தான். இப்போது நாலாவது படிக்கிறான். அடிக்கடி பள்ளியை மாற்ற வேண்டாம் என்பதால் அவனது பெற்றோரும் எங்கள் வீட்டருகே வந்துவிட்டார்கள். இதுவரை நானும் பப்லுவும் ஒன்றாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.அந்தக் கதைகளை இங்கே படிக்கலாம்.

விஷயத்திற்கு வருவோம். 5 வயது வரை பப்லுவுக்கு “ட” “ர” சரியாக வரவில்லை. அவன் சொன்ன “உததுது” என்பதற்கு உதறுது என்று அர்த்தம் என்பதை நான் மட்டுமே அறிவேன். சிலசமயம் அவன் உச்சரிப்பை வைத்து நக்கல் செய்தாலும் பல சமயங்களில் எப்போது சரியாக பேசுவான் என்று கவலையே மிஞ்சியிருந்தது. இப்போது நன்றாகவே பேசுகிறான். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு.

இந்த வெள்ளிக்கிழமை “சுட்டிச்சாத்தான்” என்ற படம் வெளிவரயிருக்கிறது. மை டியர் குட்டிச்சாத்தான் – 3டி ஆக வந்து இந்தியா முழுவதும் சக்கைப் போடு போட்ட படத்தை மீண்டும் எடுக்கிறார்கள். பழைய படத்தின் சில காட்சிகளை அப்படியே வைத்துக் கொண்டு சந்தானம், பிரகாஷ்ராஜை வைத்து புதிதாய் பல காட்சிகளை எடுத்து உருவாக்கி இருக்கிறார்கள். ஜிஜோ என்பவர் இயக்குகிறார். இளையராஜா இசையில் உருவான அதே பாடல்களை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். வசனத்தையும் பாடல்களையும் ”எந்திரன் புகழ்” மதன் கார்க்கி எழுதி இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த மூன்று குழந்தைகளில் ”ஹீரோ” குழந்தைக்கு பப்லுதான் குரல் தந்திருக்கிறான். ஒழுங்காய் பேசுவானா என்று நினைத்தவனின் குரல் நன்றாக இருக்கிறது இன்னொருவருக்கு பேச சொல்லியிருப்பது பெரிய விஷயமில்லையா? என் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்.

Sutti Sathan

இந்த வாய்ப்பு மதன் கார்க்கி மூலமாகத்தான் கிடைத்தது. ஒரு முறை நாங்கள் சந்தித்த போது பப்லுவும் உடன் இருந்தான். அவனது குரலும், உச்சரிப்பும் அவர் நினைவில் இருக்கும்படி அன்று உருப்படியாக பேசிவிட்டான் என நினைக்கிறேன். சுட்டிச்சாத்தான் படத்திற்கு பிண்ணணி பேச குழந்தைகள் தேவைப்பட்ட போது அவர்தான் பப்லுவை பரிந்துரை செய்தார். முதல் நாள் குரல் தேர்வு ஏ.வி.எம்மில் நடைபெற்றது. அன்று மட்டுமே நான் உடன் இருந்தேன். அவன் குரல் தேர்வான பின் மொத்த ரெக்கார்டிங்கிற்கும் உடன் இருந்து பக்குவமாய் வேலை வாங்கியவர் மதன் கார்க்கி. அவரின் ஆர்வத்திற்கும், பொறுமைக்கும் (எனக்குதானே தெரியும் பப்லு பற்றி) நிச்சயம் பாராட்டைச் சொல்லியே ஆக வேண்டும். கூடுதலாக இப்போது நான் நன்றியும் சொல்லிக் கொள்கிறேன். நன்றி மதன்.

ஆக மக்களே, வீட்டில் குழந்தைகள் இருந்தால் தவறாமல் இந்த சுட்டிச்சாத்தான் – 3டி க்கு அழைத்து செல்லுங்கள். குழந்தை இல்லாவிட்டால் என்ன? நீங்களே குழந்தையாக மாறி சென்றுவிடுங்கள். படம் பார்த்துவிட்டு மறக்காமல் பப்லுவின் குரல் சூப்பர் என்று பின்னூட்டமிட்டு விடுங்கள். இல்லையென்றால் என்னை ஏறி மிதப்பான் பப்லு. படம் வெற்றி பெற மொத்த டீமிற்கும், பப்லுவுக்கும் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்.

கிருஷ்ண‌ருட‌ன் கிறிஸ்தும‌ஸ் (கார்க்கி)

4 கருத்துக்குத்துஅலுவல‌க‌த்தில் கிறிஸ்தும‌ஸ் கொண்டாட்ட‌த்தை முன்னிட்டு போஸ்ட‌ர் போட்டி வைத்தார்க‌ள். Men After Marriage என்ற‌ த‌லைப்பிற்கு நான் என் அணி சார்பில் த‌யார் செய்த‌ போஸ்ட‌‌ர் இது. :))


ப‌ட‌த்தை க்ளிக்கி பெரிய‌தாய் பார்க்க‌லாம்

Dec 20, 2010

வேலையோ வேலை - 2

18 கருத்துக்குத்து
முதல் அத்தியாயம்
_____________
    இந்த வாரம் நாம் இருக்கும் வேலையை பற்றியும், நிறுவனத்தை பற்றியும் என்னவெல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று பார்ப்போம்.பொதுவாக நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் முதன்மையானது “what is your roles & responsibilities?”. இதற்கு பதில் சொல்வது சற்று சிக்கலான விஷயம். இருக்கும் எல்லா வேலையும் நானே செய்கிறேன் என்ற ரீதியில் சொல்வது தவறு. அல்லது நாம் தினமும் செய்யும் வேலைகளை மட்டும் ப‌ட்டிய‌லிடுவ‌தும் தவறு. பிறகெப்படி சொல்லலாம்? ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

    ஷிவா ஒரு உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளராக  பணிபுரிகிறார். அந்நிறுவனம் உற்பத்தித் திறனுக்கு (production techniques) பிரசித்தி பெற்றது. Press Shop என்ற பிரிவில் கிட்டத்தட்ட 100 தொழிலாளர்களுக்கு ஷிவா மேற்பார்வையாளர். இதே போல் மற்ற இரண்டு ஷிஃப்டுகளுக்கும் இரண்டு மேற்பார்வையாளர்கள் உண்டு. அவரவர் ஷிஃப்ட்டில் நடக்கும் உற்பத்தி, தரம், பாதுகாப்பு(சேஃப்ட்டி) போன்ற‌வ‌ற்றிற்கு அவரவரே பொறுப்பு.  ஷிவா  ஒரு நேர்முகத்தேர்வுக்கு சென்றார். அது ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனம். தேர்வில் அவரது வேலையைப் பற்றி கேட்ட போது அவரே production, quality, safety, technical upgradation, planning என எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாகவும், மற்ற இரண்டு மேற்பார்வையாளர்கள் இவரது சொற்படியே வேலை செய்வதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் அது உண்மையில்லை. இதே வேலைக்கு இவருடன் பணிபுரியும் விஜய் என்கிற இன்னொரு மேற்பார்வையாளரும் சென்றிருக்கிறார். அவரிடம் கேட்ட போது அவர் முதலில் தங்கள் நிறுவன Hierarchy யை சொல்லியிருக்கிறார்.
Plant head
Production ManagerPlanning ManagerQuality ManagerSafety ManagerPaint Shop Manager
Press ShopAssemblyTool Room
3                        3                        2

   இந்த படத்தில் பிரஸ் ஷாப்ப்பில் இருக்கும் மூன்று உதவி மேலாளர்களில் ஒருவர் தான் விஜய், ஷிவா. மற்றபடி பிளானிங், தரம், பாதுகாப்பு போன்றவற்றிர்க்கு தனித்தனி மேலாளர்கள் உண்டு. இதை விவரித்த பின் விஜய்க்கு தன் வேலை குறித்து பேசுவது எளிதானது. தனது வேலையில் அவர் செய்த முக்கியமானவற்றை பட்டியிலிட்டார். அதாவது தான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சொல்லாமல், என்னவெல்லாம் செய்தார் என்பதை சொன்னார்.

1) எனது ஷிஃப்ட்டில் 4500 பேனல்கள் உற்பத்தி செய்ய வேண்டும்
(I am responsible for output 4500  panels / shift)


2) எந்தவிதமான விபத்துகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(I am responsible for zero harm. That is no accident)


3) உற்பத்தியையும், தரத்தையும் கூட்ட, வேண்டியதை செய்ய வேண்டும்.
( I am responsible for improvements which increase productivity and quality)


இப்படி கதையளக்காமல் விஜய் சொன்னதை பார்ப்போம்.

1)  With the help of operators, We have changed the product flow slightly which increased the output by 10% ie, 5000 panels/shift

2) We have a safety track record of 10000 hrs of No accident.

3) Initiated KAIZEN acitivites. Motivated team to implement 52 kaizens in last year. And our team has been awarded  for BEST IMPROVEMENT of the year by management.

  இதை கேட்கும்போதே தேர்வாளர்களுக்கு எல்லாம் புரிந்துவிடும். எந்த பதிலும் சந்தேகத்துக்கு இடமளிக்கவில்லை. உற்பத்தி எத்தனை சதவீதம் உயர்ந்தது என்று கேட்க கூட விடாமல் அதையும் சொல்லியிருக்கிறார் விஜய். இது போன்ற பதில்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். முடிந்தவரை நாம் என்ன செய்தோம் என்று சொல்கிறோமோ அதன் முடிவை சொல்லிவிட வேண்டும். அவர்கள் கேட்ட பின் சொல்வதில் நம்பிக்கையின்மை வர வாய்ப்பிருக்கிறது. விஜய் பேசியதை கவனித்தால் இன்னொரு முக்கியமான விஷயம் புலப்படும். எங்கேயுமே அவர் நான் இதை செய்தேன் என்று சொல்லவில்லை.  ஆப்பரேட்டர்கள் உதவியுடன் செய்ததாக சொல்லியிருக்கிறார். குழுவினருடன் இணைந்து KAIZEN  செய்ததாக சொல்லியிருக்கிறார். அதாவது Team player என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். 100 பேரை சமாளிக்க team handling abilities தான் முக்கியம். இந்த வேலைக்கு அடிப்படையே அதுதான். I am team player என்று ரெஸ்யுமேவில் மட்டும் குறிப்பிடாமால், வாயால் சொல்லாமல் நிறுவியிருக்கிறார். ஆக, இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள். நேர்முகத்தேர்வை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தனியே விரிவாக பார்க்கவிருக்கிறோம்.இங்கே நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, நம் வேலையைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம், எப்படி சொல்கிறோம் என்பதே.

   விஜயிடம் கேட்கப்பட்ட அடுத்த கேள்வி அவர் ஏன் இந்த நிறுவனத்தில் சேர விரும்புகிறார் என்பது. இருக்கும் நிறுவனத்தில் ஏதாவது பிரச்சினையா என்றும் கேட்டார்கள். ”ஆட்டோமொபைல் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறை. இப்போது இந்தியா உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. 2040க்குள் அது முதல் மூன்று இடங்களுக்கும் சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதற்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் இருக்கிறது. மேலும் தானியங்கி நிறுவனங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனமாக இருப்பதால் உலகளவில் சிறந்த உற்பத்தி முறையை அவர்கள் கையாள்வார்கள். அதை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். நான் இப்போது வேலை செய்யும் நிறுவனம் நல்ல நிலையில் இருந்தாலும், உற்பத்தி முறைகளில் தானியங்கி நிறுவனங்கள் அளவுக்கு இல்லை. இதுதான் நான் வேலை மாறுவதற்கான முக்கிய காரணங்கள்” என்றார் விஜய்.

   இதை படிக்கும்போது அவர் சொன்ன காரணங்கள் உங்களுக்கு திருப்தியாக இருந்ததா? ஆம் எனில் இதே போன்று நீங்கள் இருக்கும் துறையின் வளர்ச்சி விகிதம், எதிர்கால திட்டங்கள் குறித்து எவ்வளவு விஷயம் உங்களுக்கு தெரிகிறது என்று யோசித்து பாருங்கள். அதோடு கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்ளுங்கள்.

1) உங்கள் நிறுவன ஹையரார்க்கியில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
2) உங்கள் வேலையின் அடிப்படையான தேவையென்ன?
3) அதற்கு தொழில்நுட்ப ரீதியான தேவைகள் என்ன?
4) அந்த வேலையை திறம்பட செய்யத் தேவையான charecterstics என்ன?
5) உங்கள் வேலையின் KRA, Key result Areas என்ன?
6) இந்த வேலையில் இருந்து ஒரு படி மேலே செல்ல இன்னும் என்னவெல்லாம் உங்களுக்கு தேவை?
__________________
End of Part - 2

டுமீல்குப்பம் ரகசியம் – வீடியோ

30 கருத்துக்குத்து

 

 

ஸ்பாட்டுக்கு போன பிறகு முடிவு செய்யப்பட்டு ரெகார்ட் செய்த வீடியோ.. அதான் மேக்கப் இல்லாமல் இருக்கோம். ஹிஹிஹி

Dec 17, 2010

பப்லுவும் நானும் கூடவே ஹரிணியும் கெசில்லாவும்

13 கருத்துக்குத்து

 

சென்ற மாதம் நான், வினோத்(என் கஸின்), பப்லு(அக்கா பையன்) மூவரும் வேளச்சேரி Dominos pizza சென்றோம். Chicken mexican red wave, cheese burst எங்களுடைய ஒரே சாய்ஸ். ஆர்டர் எடுத்த பெண் அநியாயத்துக்கு க்யூட்டாக இருந்தார். நான் அவளை கவனிப்பதை, கவனித்த வினோத் “க்யூட்டா இருக்கால்ல” என்று காதில் கிசுகிசுத்தான். ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். நேரமானதால் பப்லு  அக்காவிடம் போய் கேட்டான். அவர் feedback form கொடுத்து இத ஃபில் செய்ப்பா. அதுக்குள்ள வந்துடும் என்றார். இதுக்குள்ள அவ்வளவு பெரிய பிஸ்ஸா எப்படி வரும் என்று கேட்ட பப்லுவை ஆச்சரியமாக பார்த்தார் அந்த அக்கா.

எல்லாவற்றிலும் excellent டிக் செய்துவிட்டு,மறக்காமல் என் ஃபோன் நம்பரையும் எழுதிவிட்டு “do you want to appreciate any specific person” என்ற இடத்தில் அக்கா பெயரை எழுதலாம் என்று பப்லுவை போய் பேர் கேட்க சொன்னேன். அதெல்லாம் வேண்டாம் என்று கவரை மூடி ஒட்டிவிட்டான் பப்லு. நான் இழுக்க, அவன் இழுக்க ஃபார்ம் டர்ர்ர்ர்ர். பேனாவை மட்டுமாவது கொடுக்கலாம் என்று போனால், பார்ம்? என்றது க்யூட். வேற ஒரு ஃபார்ம் வாங்கிக் கொண்டு, ur name  என்றேன். வெள்ளைதாளில் Gezillaa  என்று எழுதி, its an odd name என்றபடி பேப்பரை நீட்டினாள். அவள் பெயருக்கு கீழே Karki  என்று எழுதி, நானும் ரவுடிதான் என்றேன். எல்லாவற்றிலும் excellent போட்டு, என் பெயருடன் ஃபோன் நம்பரையும் எழுதி கொடுத்து விட்டு வந்தேன். என் போர்ஷனும் காலி செய்துக் கொண்டிருந்தான் பப்லு. பரவாயில்லை என்று நிறைஞ்ச மனசோடு கிளம்பினோம்.

காரில் வரும்போது வேறு விஷயத்துக்கு பப்லுவை நான் மிரட்ட, பதிலுக்கு பப்லு மிரட்டினான். பாட்டிக் கிட்ட சொல்லிடுவேன். நீ அந்த பொண்ணுகிட்ட “ I like u. Shall we go out” சொன்னேன்னு சொல்லிடுவேன் என்றான். பிட்ஸாதாண்டா சாப்பிட்டுக்கிட்டு இருந்த பிசாசு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, எப்போது இப்படி பெரிய ஆளானான் பப்லு என்று யோசிக்க தொடங்கினேன். வினோத் தன் கேர்ள் ஃப்ரெண்டை பேபி என்று அழைப்பதை ஒரு நாள் கேட்டுவிட்டான் பப்லு. வீட்டுக்குள் நுழைந்தவுடன் கத்தினான் ” கார்க்கி மாமாவுக்கும் பேபி கிடைச்சாச்சு”

___________________________________

சென்ற வாரம் ஒரு நல்ல மழைநாளில் மீண்டும் Domino’s pizza வேண்டுமென்று அடம்பிடித்தான் பப்லு. வேண்டாம் என்று சொல்ல எத்தனித்த நேரத்தில் கெசில்லா ஞாபகம் வர, சரி வா கார்ல போயிட்டு வரலாமென்று கிளம்பினோம். தோமினோஸில் ஒரு கெட்ட விஷயம், கவுண்ட்டரில் இருக்கும் அனைவரும் காதில் ஃபோனை வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள். Dine inஐ விட delieveryதான் அவர்களுக்கு முக்கியம். ஆனால் கவுண்ட்டரில் தொங்கிய போர்டில் “ To decide what you want to have will take more time than our service ” என்று காமெடி செய்திருந்தார்கள். அதுவா முக்கியம் என்று நகர்ந்த நேரம் “what you want sir” என்றார் ஒருவர். கெஸீலா என்று என்னையறியாமல் வாய் திறக்க வந்தபோது, பப்லு ”chicken mexican redwave” என்று முந்திக் கொண்டு என்னைக் காப்பாற்றினான். கெசிலா இல்லையென்று முடிவு செய்தபின் தான் கவுண்ட்டரில் இருந்து நகர்ந்தேன்.

excuse me என்று எண்ட்ரீ கொடுத்தார் இன்னொரு க்யூட் தேவதை. இவரும் அநியாயத்துக்கு அழகாக இருந்தார். பப்லு எங்கே இருக்கான் என்று தேடினேன். டேபிளில் இருந்த crossword puzzleஐ சீரியஸாக படித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை. அவள் ஆர்டர் செய்துவுடன் கவுன்ட்டரில் இருந்தவர் பேர் கேட்க,  ஹரிணி என்றாள். நல்ல பெயர்தானே? பப்லு எதிரே வந்து அமர்ந்து நம்ம க்யூட் தேவதையை பார்த்துக் கொண்டிருந்தேன். பாவம். முகம் மட்டும் ஏனோ படு சீரியஸாக இருந்தது. சிரிக்கவே மாட்டேன் என்று பந்தயம் கட்டிவிட்டார் போலும்.

    எப்படியோ மூக்கு வேர்த்து ஃபோன் செய்தான் வினோத். விஷயத்தை அமுக்கமாக பப்லுவுக்கு கேட்காத மாதிரிதான் சொன்னேன். எப்படியோ கேட்டுவிட்ட பப்லு ”மாமா, யாரு வினோத்தா? என்றான் சத்தமாக. ஒரு லுக் விட்டுவிட்டு திரும்பி விட்டாள் ஹரிணி. அந்த அக்கா பத்திதானே பேசறீங்க என்றான் பப்லு. அக்கா, மாமா மேட்ச் ஆனாலும் எப்படி கேட்டது என்று முழித்தேன். கிளம்பும் போது அந்த அக்காவைப் பார்த்து சிரித்தான் பப்லு. அப்போதும் உம்மென்றே இருந்தாள். கண்ணாடிக் கதவை திறந்து வெளியே வந்தேன் நான். பப்லு பாதி திறந்திருந்த கதவின் வழியாக “ஹரிணி” என்றான். அவள் திரும்பியவுடன் “கொஞ்சம் சிரி நீ”என்று சொல்லிவிட்டு ஓடி வந்தான். நான் சொல்லிக் கொடுத்துதான் பப்லு சொன்னதாக நினைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். ம்க்கும். கிளம்பும்போதுதான் தோணுமா உனக்கு என்றபடி பப்லுவுடன் கிளம்பினேன். ஹரிணி.. கொஞ்சம் சிரி நீ. ரைமிங்காத்தான் சொல்லியிருக்கான் பப்லு

Dec 15, 2010

கோப்பை முழுவதும் மழை

17 கருத்துக்குத்து

 

  மார்கழியில் கல்யாணம் நடப்பதில்லை. ஆனால் காதல் பூக்க அது தோதான மாதமாகத்தான் இருக்கிறது.  தெருமுழுவதும் கோலம் போட்டுக் கொண்டிருக்கும்  தேவதைகளை பார்க்கவே அதிகாலையில் எழுந்திருக்கலாம். அப்பொழுதை மேலும் ரம்மியமாக்கும் கொட்டும் பனி. குளிருக்கு இதம் சிகரெட் தான் என்று சொன்ன என் நண்பன் கூட அக்காலை வேளையில் தன் நெருப்பு நண்பனை விலகியிருந்ததுண்டு. ஜில்லென்றிருக்கும் தண்ணீரில் முகம் கழுவி, தேவைப்பட்டால் கொஞ்சம் ஃபேர்&லவ்லி தடவி, ஜம்மென்று தெருவில் இறங்கி நடப்பதே அலாதியான அனுபவம் தான். தெருமுனையில் இருக்கும் தேநீர்க்கடையை அடைவதற்குள் மனது நிரம்பியிருக்கும்.

அப்பொழுது நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். நடந்து செல்லும் தூரத்தில் கடற்கரை வேறு. மற்ற பெருநகரங்களை போல தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ளவில்லை புதுவை. எல்லோர் வீட்டு வாசல்களிலும் அழகிய கோலங்கள் மார்கழி மாதத்தில் நிச்சயம் உண்டு. அப்படி ஒரு மார்கழி மாதத்தின் முதல் நாளில்தான் அவளை சந்தித்தேன். காதலின் அ,ஆ,இ,ஈ சொல்லித் தந்த டீச்சரம்மா அவளெனக்கு. அவளே எனக்கு மிச்ச சொச்சத்தையும் சொல்லித்தந்து போனதால் இதுவரை வேறெங்கும் படிக்கவில்லை.

காதலை பல்வேறு வடிவங்களில் படித்தாகிவிட்டது. என் பங்குக்கு முடிந்தவரை எழுதியும் ஆகிவிட்டது. பதிவாக, கதையாக, அனுபவமாக, கவிதையாக, குறுஞ்செய்தியாக ட்விட்டாக என எனக்கு தெரிந்த எல்லா வடிவத்திலும் காதலை படித்துவிட்டேன். எவ்வித பூச்சுகளும் இல்லாமல், ஒரு வரி கூட புனைவாக மாற்றாமல், உள்ளதை உள்ளபடி – உள்ளத்தில் உணர்ந்தபடி சொல்ல ஏதுவான உரைநடையே காதலை சொல்ல சிறந்த வடிவம் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆமாம். நேற்று வரை இருந்தது. ஒரு கவிதை, ஒரே ஒரு கவிதை அவ்வெண்ணத்தை தடம் தெரியாமல் அழித்துச் சென்றது.

நேற்று விகடனை புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு தேதியெல்லாம் நினைவிலில்லை. அம்மா பக்கத்தில் அமர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். தாமதமாக அதை கவனித்த போதுதான் மார்கழி மாதமும், மேலே சொன்ன காதலும் என்னை தட்டியெழுப்பியது. வேகமாய் புரட்டப்பட்ட தாள்கள் நின்றுபோனது. நின்றுபோன பக்கத்தில் குட்டி குட்டியாய் கவிதைகள். பெரும்பாலும் ஒரு வித வேகத்தில் அதை கடந்து போகும் நான், நின்று நிதானித்து வாசித்தேன்.

உனக்கு நிறைய
கேள்விகள் இருந்தன
நிறைய சமாளிப்புகள்
நிறைய குற்றச்சாட்டுகள்
நிறைய கோபங்கள்
நீ கையசைத்துப்போகும்போது
என்னிடம் ஒரு காதல் இருந்தது
கொஞ்சம் தேநீர் இருந்தது
நிறைய மழை இருந்தது

-லதாமகன்

ஒரு நாவல் எழுதிவிடலாம். ஒரு காதல் முறிவையும், அதன் பின் இருக்கும் வலியையும், ஏமாற்றத்தையும், சோகத்தையும் வைத்து ஒரு பெரிய நாவல் எழுதிவிடலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கும் அதன் பிண்ணணியில். அதன் வீரியம் குறையாமல், அதன் வலி குறையாமல் இங்கே கவிதையாக்கியிருக்கிறார் லதாமகன். ஒவ்வொரு வரியையும், வார்த்தையையும், எழுத்தையும் படித்து படித்து பார்க்கிறேன். வார்த்தைகளில் கஞ்சத்தனத்தையும், வலியை பதிவதில் களவாணித்தனத்தையும் கொண்டிருக்கிறார் கவிஞர். எந்தவொரு காதல் முறிவும் ஒருவரை அனாதையாக்குவதில்லை. துணைக்கு காதலை விட்டுத்தான் செல்கிறது. இக்கவிதை அதை உறுதி செய்கிறது.

இதை படிக்கும்போது உங்களுக்கு மிகச்சாதரணமாய் தெரியலாம். ஆனால் ஒரு புகைப்படத்தை போல, ஒரு நிகழ்வை கண்முன்னே கொண்டு வந்து மனதுக்கு மிக நெருக்கத்தில் வந்த விட்ட இந்தக் கவிதை என்னளவில் மிக முக்கியமான ஒன்று. காதலையும், அதன் அழகையும் சொல்ல வேறு வடிவங்கள் சிறப்பானதாய் இருக்கலாம். சொல்ல முடியாமல் மனதுக்குள் புகைந்துக் கொண்டிருக்கும் வலியை பதிவு செய்வதில் கவிதைக்குத்தான் முதலிடம். மனதுக்கு இதமாய் இருக்கிறதா, கனமாய் வலிக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஏதோ செய்கிறது. நன்றி லதாமகன்.

_______________________________________________________________________________

சென்ற வருடம் இதே தேதியில் நான் எழுதிய பதிவு -

அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை

Dec 14, 2010

வேலையோ வேலை

25 கருத்துக்குத்து

 

  வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். புட்டிக்கதைகள் மொக்கைகென்றே எழுதினேன். தோழி அப்டேட்ஸ் உள்ளூர ஊறிக்கொண்டிருந்த காதலை சொல்ல எழுதினேன். www.600024.com என்ற இணையத்தளத்தில் விஜயைப் பற்றி “அழகிய தமிழ் மகன்” என்ற தொடரும் எழுதி வருகிறேன்.  நண்பர் மோகன்குமார்,  துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும்  வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார். நான் ஒரு மனிதவள நிறுவனத்தில் (Manpower Consultant) பணிபுரிகிறேன். எனவே என் வேலை தொடர்பான விஷயங்கள் குறித்து எழுதலாம் என நினைத்தேன் எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம்.  மீண்டும் ஒருமுறை நண்பர் மோகன்குமாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

_______________________________________

  மதன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் மதன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. மதனின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம்.  வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க மதனும் தயாராகவே இருக்கிறார்.

  மதன் பரவாயில்லை. அருணின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அருண் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அருணிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் .  எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.

மேற்கண்ட சம்பவங்களில் அருண் அல்லது மதன் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”. 

சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5  வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.

1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?

3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?

4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?

5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?

இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். என்னால் முடிந்தளவு தகவல்கள் சேகரித்து தருகிறேன்.

கருத்துகள், சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் iamkarki@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

_____________

End of part - 1

Dec 12, 2010

சித்து+2 - நகுரதினா திரனனா

18 கருத்துக்குத்து

 

சென்ற சனிக்கிழமை எனக்கு தனிக்கிழமை ஆகிப் போனது. காலையில் இருந்து வீட்டிலே இருந்துவிட்டு தோழியை பார்க்கலாமென ஐந்து மணியளவில் கிளம்பினேன். மவுண்ட் ரோடை நெருங்கிய சமயம் அல்வாவை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினாள். மீட்டிங் ரத்தானது. ஏதாவது சினிமாவுக்கு செல்லலாம் என்றால் மணி 6.20. ஆகிவிட்டது. பக்கத்தில் இருந்த சத்யமுக்கு சென்று அன்றைய ராசிபலனான “யோகம்” என்பதை சோதித்து பார்ப்பதென முடிவு செய்தேன். பைக்கை பாலத்தின் கீழே நிறுத்திவிட்டு டிக்கெட் கிடைக்குமா என்று பார்க்க கவுண்ட்டரை நோக்கி ஓடினேன். எதிரில் வந்த சென்னையின் ஹைலைட் சமாசாரங்களை கூட கவனிக்கவில்லை நான்.

எதிர்காலத்தில் நாங்கள் எடுக்கப்போகும் குறும்படத்தை சத்யமில் ரிலீஸ் செய்தால் போதும். ஒரு வாரம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும். கேப்டனின் விருதகிரி கூட ஹவுஸ்ஃபுல் ஆனா ஒரே திரையரங்கு சத்யமாக சத்யமாகத்தான் இருக்கும்.டிக்கெட் கிடைக்காமல்  தொங்கிய தலையை கண்ட ஒருவர் சார் டிக்கெட் வேண்டுமா என்றார். பிளாக் டிக்கெட் விற்பவர்கள் டை கட்டுவதில்லை என்பது என் சிற்றறிவுக்கு தெரியும். எக்ஸ்ட்ரா டிக்கெட் போல என விசாரித்தேன். சித்து +2 சார் என்றார். இவர் பேரையே நான் கேட்கவில்லை. படித்துவாங்கிய டிகிரியெல்லாம் சொல்கிறாரே என்று வியந்தேன். பின் தான் தெரிந்தது நம் திரைக்கதை பிதாமகர் கே.பாக்யராஜ் அவர்கள் இயக்கிய படமாம். அவரது வாரிசு சாந்தனு நாயகனாம். வேறு வழியில்லை. நேரமமுமில்லை. கொடுங்க சார் என்று இரண்டு 100 ரூபாய் தாள்களை நீட்டினேன். சில்லறை இல்லை என்றவர் 120 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்க்கே தந்தார். “யோகம்” என்ற ராசிபலனை இதுதான் என்ற தவறாக எடுத்துக் கொண்டேன். இன்னும் 15 நிமிடங்களே இருந்தது. சத்யம் இருக்கும் தெரு ஒன்வே என்பதால் தலையை சுற்றி மூக்கை தொடுவதை போல சுற்ற வேண்டாம். எடுறா கார்க்கி ஃப்லைட்ட என்று பைக்கை நோக்கி ஓடினேன்.

போகும் வழியில் உட்லேண்ட்ஸ் திரையரங்கில் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார் கேப்டன். இந்த படம் மட்டுமில்லைடா, எந்த படம் பார்த்தாலும் சுடுவேன் என்று அவர் சொன்னதாக எனக்கு தெரிந்தது. கேப்டன் அரசியல்வாதி ஆனபிறகு அவர் சொல்வதை யார் கேட்கிறா? அங்கிருந்து சத்யமை அடைந்தபோது மணி 6.40. பார்க்கிங்கில் சித்து +2 என்ற போது எதேச்சையாக சிரித்தார் டிக்கெட் கிழிப்பவர். ஆடுறா ராமா என்பது போல ஓடுறா ராமா என்று ஓடி அரங்கை அமர்ந்தேன். “பிரின்ஸ் ஜூவல்லரி..பனகல் பார்க்” என்ற விளம்பரத்தை பார்த்ததும்தான் நிம்மதியானேன். சரியான நேரத்தில் வந்ததை கூட “யோகம்” என்ற ராசிபலனோடு ஒப்பீட்டு குதுகலமடைந்தது மனது.,

படம் தொடங்கியது. ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்த டிரெயினில் ஏறிவிட்டார் நாயகி. அவரே பார்ப்பதற்கு வழக்கமான நாயகியின் தோழியை போலதான் இருந்தார் என்றால், தோழியின் லட்சணம் இந்நேரம் புரிந்திருக்கும் உங்களுக்கு. “சென்னையில் இருக்கும் என் ஃப்ரெண்ட் ஃபோன் நம்பர மட்டும் நம்பி நீ போறது எனக்கு சரியாப்படல.ஒரு வேளை அவர் நம்பர் மாறியிருக்கலாம். அவர் வீட்ட மாத்தியிருக்கலாம். அப்படி ஆயிட்டா நீ என்ன செய்வ”. படம் பார்ப்பவர்களுக்காக வசனம் பேசிக் கொண்டிருந்தார் நாயகியின் தோழி. கிரகம் நாயகி சென்னை வந்தபின் அதே போல் ஆகிவிடுகிறது. அந்த ஃபோனை அவர் ஊரிலே பண்ணிவிட்டு டிரெயின் ஏறியிருக்க கூடாதா என்றெல்லாம் நான் கேட்கவில்லை. படம் முழுக்க இதே போன்ற காட்சிகள்தான். வசனம் எல்லாமே பாத்திரங்கள் பேசுவதாக இல்லை. பார்ப்பவர்களுக்கு கதை சொல்லவே எழுதப்பட்டிருக்கிறது. கிருஷ்ண டாவின்சியின் கதைக்கு 6 பேர் +பாக்யராஜ இணைந்து விவாதம் வேறு செய்திருக்கிறார்களாம். அப்படி என்னதான் கதை என்பதை பார்ப்போம் வாருங்கள்.

சித்துவும், பவித்ராவும் +2 கோட்டடித்துவிட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள். சரி.டிரெயினில் வருகிறார்கள். வந்த இடத்தில் இருவரும் சந்தித்து ஒரு வாரம் ஒன்றாக இருக்கிறார்கள். பவித்ராவுக்கு இடையில் (அந்த “இடையில்” இல்லப்பா. நடுவுல) சித்து மேல் காதல் வருகிறது. சித்துவுக்கும் காதல் வரும் நேரம், பவித்ரா +2வில் பாசாகவில்லை.ச்சே. சாரி ஃபெயிலாகவில்லை. நல்ல மார்க் என்று சித்துவுக்கு தெரியவருகிறது. இதை சொன்னால் டாக்டர் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் பவி(முழு பேர எல்லாம் சொல்ல முடியாதுப்பா) தன்னை விட்டு போய்விடுவாளென்று மறைத்துவிடுகிறார், இந்த நேரத்தில் என்கவுண்ட்டரை பொழுதுபோக்காக செய்யும் போலிசுடன் சித்து உரச, ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறார் ஏசி. சித்து-பவி தங்கியிருக்கும் வீட்டுக்கு போலிஸ் வரும்போது பவியை காணவில்லை. ஹவஸ் ஓனர் இவன் தனியாகத்தான் தங்கியிருந்தான். பெண்ணெல்லாம் இல்லை என்று குண்டு போட ”மவனே நீ காலிடா ” என்று என்கவுண்ட்டர் ஏகாம்பரம் பிளிறுகிறார். இப்பதாங்க இடைவேளை.

சாப்டாச்சா? வாங்க கதைக்கு போவோம். பவியை அவர் பெற்றோர் தான் வந்து அழைத்து சென்றுவிடுவார்கள். தப்பித்து வந்த சித்துவிடம் ஹவுஸ் ஓனர் இதை சொல்ல, தலைவர் பவியின் ஊருக்கு செல்கிறார். அங்கு பவியை சமாளித்து, கஞ்சா கருப்பு உதவியுடன் அவர் பெற்றோர்,லூசு மாமாவை சமாளித்து கைப்பிடிக்கும் நேரம் என்கவுண்ட்டர் ஏகாம்பரம் வந்துவிடுகிறார். ஆனால் அடுத்த முறை சித்துவை பார்க்கும்போது அந்த பெண்ணுடன் இருந்தால் விட்டுவிடுவதாக அவர்களுக்குள் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்டாம். ங்கொய்யால இந்த ரெண்டு கே.பு.னால எவன் ஜெண்ட்டில்மேனுன்னுதான் தெரியல. அவன் போனா என்ன? இன்னொரு லூசு மாமா இருக்கான் இல்ல? அவன் ஆளு அனுப்புறான். அவர்கள் சித்துவின் வயிற்றில் குத்திவிடுகிறார்கள். இதற்கு மேல தியேட்டரில் இருந்தால் அந்த கத்தி நம்ம மேல பாயும்ன்னு ஓடி வந்துட்டேன்.

இதற்கு நடுவில் பவி வீட்டில் வேலை செயும் குஜராத்தி வேலைக்காரிக்கு சித்து மேல ஒரு இது வருகிறது. படத்தின் ஒரே ஆறுதல் இவர்தான் என்பதை நான் சொன்னால் ஜொள்ளு என்பீர்கள். எனவே நான் சொல்லவில்லை. சாந்தனுவின் நடனம் அருமை. பாக்யராஜ் வரும் அந்த பாடலும் ஓக்கே. இரண்டு ஜிகிடிகளும் ஒன்றாக தெறம காட்டும் அந்த கடைசிப் பாடலும் சூப்பர். மத்தபடி அசல்,சுறா என்று பார்க்கும் என்னைப் போன்றவர்களையே சற்று அசைத்துப் பார்க்கிறான் சித்து.

கதைதான் சொத்தை. நாயகன் மகன் ஆகிவிட்டதால் வேறு வழியில்லை. நாயகியையாவது ஒழுங்காக பிடித்தார்களா? இல்லை. இசையையாவது? ம்ஹூம். காமெடி? சுத்தம். திரைக்கதை? உஸ்ஸ்ஸ்ஸ்.. வசனம்? சவசவ. தியேட்டர மட்டும் பக்காவாக பார்த்து ரிலீஸ் செய்துவிட்டார்கள். தனுசு ராசிக்கு யோகம் என்றுதான் போட்டிருந்தது ராசிபலனில். அம்மாவிடம் சொல்லி நான் கடக ராசியா என்று பார்க்க சொல்ல வேண்டும். அதற்குதான் கண்டம் என்று போட்டிருந்தார்கள்.

தனியாக சென்றதால் கடைசிவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தேன். வெளியே வந்து பார்க்கிங்கில் வண்டியை எடுத்தபோது இருவர் பேசிக் கொண்டார்கள் “மச்சான். சாந்தனுவுக்கும் அந்த ஹீரோயினுக்கும் செட் ஆயிடுச்சாம். படம் நல்லா இருக்கோ இல்லையோ கிளுகிளுப்பா இருக்கும். பாக்யராஜ் படம் வேற”. பைக்கை ஸ்டார்ட் செய்தபடி அவர்கள் காதுபட பாடினேன் “நகுரதினா திரனனா.. திரனனா திரனனா திரனனாஆஆஆஆஆ”

சித்து +2 =  ( –20)

பிற்சேர்க்கை: ஒரு சில வசனத்திற்கு விசில் சத்தம் காதை பிளந்தது. ஆனால் அது சீரியஸ் வசனம் என்பதை மறந்து சிரித்தார்கள். உதாரணம்.

சித்து :நீ டாக்டருக்கு படிக்கணும் பவி

பவித்ரா: டேய் நீ இல்லைன்னா நானே பேஷண்ட் ஆயிடுவேண்டா.

இன்னும் யாருக்காவது உதாரணங்கள் வேண்டுமா?

Dec 9, 2010

சாக்லெட்டா? சாக்லெட்டுக்கா?

17 கருத்துக்குத்து

 

வெளிநாட்டில் இருந்து வரும் உன் அண்ணன் என்ன வாங்கி வருவான் என்றேன் தோழியிடம். சாக்லெட் என்றாள். யாருக்கு வாங்கி வருவானென்றா கேட்டேன்? என்ன வாங்கி வருவான் என்றுதானே கேட்டேன்!!

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

ஊரெங்கும் மழைக் கொட்டிக் கொண்டிருந்த நாளில், சேலை அணிந்து வந்த தோழி கேட்டாள் “நல்லாருக்கா?”. அந்தக் கேள்வியை அவள் சேலையிடம் கேட்டதாக எண்ணி சேலையின் பதிலுக்காய் காத்திருந்தேன் நான் பொறாமையுடன்.

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

உடம்பு சரியில்லாமல் போன நாளன்று கண் பட்டுவிட்டதாக சொன்னார் அம்மா. தோழியின் கண் படாததால் வந்த காய்ச்சல் தான் அது என்று எப்படி சொல்வது?

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

தொலைபேசியை சிரித்துக்கொண்டே எடுக்காதே என்றால் முடியாது என்கிறாள் தோழி .எடுத்த பின்பும்  ரிங் அடித்துக் கொண்டிருப்பதாய் நினைத்து பேசாமலே இருக்கிறேன் என்பதை சொன்னால் மீண்டும் சிரிப்பாள் என விட்டுவிட்டேன்

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

உதடுகள் பேசும் வார்த்தைகளை விட இதயங்கள் பேசும் வார்த்தைக்கு அர்த்தம் அதிகம் என்கிறாள் தோழி. சரியென்ற நான் ஒரு கமலஹாசன் முத்தம் தாயேன் என்றேன். துள்ளி வந்தவளிடம் இதற்கு மட்டும் உதடுகள் எதற்கு என்றவுடன் வெட்கி, நாணி, கோணி ஓடினாள், முத்தம் தந்த பின் தான்.

Dec 8, 2010

காவலன் பாட்ட கேளுங்க

25 கருத்துக்குத்து

 

மன்மதன் அம்பு, எங்கேயும் காதல், ஆடுகளம், வானம் என எஃப்.எம்கள் பிசியாக இருக்கும் வேளை இது. யார் படமாக இருந்தாலும் விஜயின் பாடல்களுக்கு இருக்கும் மவுசு குறைந்ததே இல்லை. அதே எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிறது காவலன் பாடல்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய்-வித்யாசாகர் கூட்டணி. மெலடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு வரியில் வெர்டிக்ட்டை சொல்லிவிட்டு விமர்சனத்திற்குள் நுழைவோம்.

“காவலன் – விஜய்க்கு திருப்புமுனையாக அமையுமா இல்லையா என்பது 18ஆம் தேதி தான் தெரியும். ஆனால் சந்தேகமேயில்லாமல் வித்யாசாகருக்கு ரீஎண்ட்ரீதான்.”

1) விண்ணைக்காப்பான் – திப்பு,&ஸ்வேதா (பாடல் – பா.விஜய்)

கொஞ்சம் ஒதுங்குங்கண்ணா என்று கபிலனிடம் சொல்லிவிட்டு பா.விஜயிடம் ஒப்படைத்திருக்கிறார் ஓப்பனிங் பாடலை. நீண்ட நாட்களுக்கு பிறகு திப்பு. ஆரம்ப இசை வித்தியாசம் என்றாலும் ட்ரம்ப்பெட்,  என அதே கருவிகள். உற்சாகம் மேலிடுகிறது. இந்த முறை விஜயின் புகழ் பாடாமல் இறைவனை போற்றி தொடங்குகிறது

விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்

வெறும் குத்துப்பாட்டென ஒதுக்கிவிட முடியாத பீட். வித்யாசாகரின் குத்துப்பாடல்களில் என்னைக் கவர்ந்த அம்சம் எங்கேயும் டெம்ப்போ குறையாமல் போவதுதான். கில்லியின் தொடக்கப் பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை ஆட வைத்துக் கொண்டேயிருக்கும். இதிலும் அப்படித்தான். ஒரு நொடி கூட நிற்காமல் ஓடுகிறது. என்னதான் இறைவனை புகழ்ந்து தொடங்கினாலும் விஜய் ரசிகர்களை குளிர்விக்க ஏதாவது சேர்க்காமல் இருப்பாரா பா.விஜய்?

ஆலால கண்டனே..ஆட்டத்துக்கு மன்னனே..ஆனந்த தாண்டவம் ஆடுவோமே

விஜயே பாடும்படி எழுதியவரிகள். கண்ணனைப் பார்த்து பாடுவது போல் வருகிறது. ஆனால் யாரை குறிக்கிறது என சொல்லவும் வேண்டுமா????????? அடுத்த பாடலுக்கு போகாமல் இங்கேயே சிக்கி தவிக்கிறது என் மனமெனும் சிடி.

2) யாரது.. யாரது – கார்த்திக் & சுசித்ரா ( யுகபாரதி)

  வித்யாசாகரின் மெலடிகளுக்கு சில பிரத்யேக முகவரிகள் உண்டு. கேட்கும் முதல் நொடியிலே இதை அப்படியொரு பாடலென வகைப்படுத்தி விட முடிகிறது. இது தனுஷ் பாடல் என்றும் சொல்லலாம். கேட்ட உடனே பிடிக்க வில்லையென்றாலும் கேட்க கேட்க பிடித்து போகிறது. பித்து பிடிக்க வைக்கிறது.  சுசித்ராவின் பெயர் இருந்தும் பாடவில்லையென என நினைக்காமல் பார்த்துக் கொள்கிறார் கார்த்திக். வெறும் ஹலோ, ஹம்மிங் மட்டும் சுசித்ராவுக்கு. சித்திக் இதை பார்ப்பதற்கும் இதமான ஒரு பாடலாக படமாக்கியிருப்பார் என நம்புகிறேன்

உச்சந்தலையில் அவள் வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

யுகபாரதி கொஞ்ச காலம் அறிவுமதியின் வீட்டில் தங்கியிருந்தாராம். இப்பவாது நம்பறீங்களா?

3) ஸ்டெப் ஸ்டெப் – பென்னி தயாள் & மேகா (விவேகா)

சில நாட்களாகவே என் காலர் ட்யூன் இந்தப் பாடல் தான். ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மட்டுமே கேட்க முடிகிறது. இருந்த 4 பாடல்களில் அலைபேசி தரத்தில் கேட்ட போதே பச்சக்கென ஒட்டிக் கொண்ட பாடல். பாடியது எனது ஃபேவரிட் பென்னி தயாள். ஆரம்ப இசையை கேட்டவர்கள் யாரும் விஜய் பாடலென்றோ, வித்யாசாகர் பாடலென்றோ சொல்ல மாட்டார்கள். பேஸ், எலக்ட்ரிக் கிட்டார் எல்லாம் பொதுவாக விஜய் ஆண்டனி  வசமோ, ஹாரீசின் வசமோதான் இருக்கும். கொஞ்சம் தாங்கப்பா என்று கேட்டு வாங்கியிருக்கிறார் வித்யாசாகர்.

பார்க்கதான் சிறுபுள்ள..கலக்குற பயபுள்ள..
இளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை

ஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.
என்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை

லைட்டாக தளபதி புராணம் பாடினாலும் மற்ற வரிகள் பாடலின் மெட்டுக்கும், மூடுக்கும் நச்சென பொருந்துகிறது. விவேகா கந்தசாமி டைப் பாடலிலிருந்து ஸ்டியரிங்கை இப்படி திருப்பியதற்கு கோடி நன்றிகள். இப்போதைக்கு இதுதான் என் பிக் ஆஃப் த ஆல்பம். பாடலை கேட்க விரும்புகிறவர்கள் தாராளமாக என்னை அழைக்கலாம். முன்கூட்டியே குறுஞ்செய்தியில் சொல்லிவிட்டால் எடுக்க மாட்டேன். எண் :9789887048

4)  சடசட சடசட – கார்த்திக் (பாடல்- யுகபாரதி)

  இந்த மாதிரி பாடலையெல்லாம் கார்த்திக்கிடம் கொடுத்து விட்டால் பாதி வேலை முடிந்தது இசையமைப்பாளருக்கு. கடன் வாங்கிய கிட்டாரை சொன்னதை விட அதிகமாகவே பயன்படுத்திவிட்டார். பல்லவி முடிந்த பின் வரும் கிட்டார் பிட்டை கேட்டுப்பாருங்கள். இப்படியெல்லாம் நம்மால் வாசிக்க முடிந்தால் எத்தனை பேரை ஆச்சரியப்படுத்தலாம்?

கங்கைநதி வெள்ளம் சிறுசங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னஞ்சிறுபிள்ளை ஒரு சொப்பனத்தை வைத்துக்கொண்டு கண்ணுறக்கம் கேட்டுநிக்குதே

யுகந்தோறும் பாரதியென வாழட்டும் யுகபாரதி. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஏனோ குஷி, ப்ரியமுடன் கால விஜய் படங்கள் நினைவில் ஊசலாடி செல்கின்றன.

5) பட்டாம்பூச்சி – கே.கே. &ரீட்டா (கபிலன்)

  சுமாரான வேகத்தில் ஒரு டூயட். ஹாயாக அமர்ந்து காலால் தாளம் போட்டுக் கொண்டு விஜயின் நக்கலையும், அசினின் சிணுங்கலையும் ரசித்து மகிழலாம். அதற்கு தோதாக செல்லமாய் சிணுங்கி பாடுகிறார் கே.கே. அப்படி போடு என நயாக்ராவாய் கொட்டிய குரலை அடக்கி ஆள்கிறார் வித்யாசாகர். கபிலனுக்கு பிரமோஷனா என்பது தெரியவில்லை. 

அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..
உதடும் உதடும் பேசும்பொழுது உலகை மறந்தேனே

என்ன வேலை சொன்னாலும் அதை செவ்வனே செய்வேண்ணா என்கிறார். நோ நோ இது அரசியல் இல்லை. காதல் மட்டுமே :))

_______________________________________

விஜய் ரசிகர்களின் தேர்வு  : விண்ணைக் காப்பான்

எஃப்.எம்களின் தேர்வு : பட்டாம்பூச்சி

மெலடி ரசிகர்களின் தேர்வு : யாரது யாரது

நடன ரசிகர்களின் தேர்வு :ஸ்டெப் ஸ்டெப்

விஜய் படத்தின் பாடல்கள் முழுமையாக எல்லோரையும் திருப்தி செய்து பல நாட்கள் ஆகிறது. காவலன் அக்குறையை தீர்க்க வந்தது என்பதில் சந்தேகமேயில்லை. 17 ஆம் தேதி படம் வெளிவருவது உறுதி என்று சொல்லியிருக்கிறார்கள் காத்திருக்கிறோம்ண்ணா. உங்களுக்காக பாடலின் சில பகுதிகள் தொகுத்து தந்திருக்கிறேன்.கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

Dec 6, 2010

யாமினி..யாமினி..

12 கருத்துக்குத்து
நகரின் மையப்பகுதியில் இருந்த அந்த வணிக வளாகத்தை மதன் அடைந்த போது மணி பகல் பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. பார்க்கிங் டோக்கன் வாங்கிய அடுத்த நொடி அண்டர்கிரவுண்டுக்குள் சீறிப் பாய்ந்தது அந்த புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ். கருப்புநிற ஸ்லீவ்லெஸ் பனியனும், நீல நிற டெனிம் ஜீன்ஸும் மதனின் ஜிம் பாடிக்கு தோதாக இருந்தது. லிஃப்ட்டுக்கு காத்திராமால் எஸ்குலேட்டரில் ஏறி ஓடியவனை அங்கே இருந்த அனைத்து பெண்களின் கண்களும் டாவடித்துக் கொண்டிருந்தது.

You made it man. Come fast.Movie gonna start in a few minutes.

மதனுக்காக காத்திருந்த வினோ அவசரப்படுத்தினான்.

hang on dude. அங்க பாரு என்றான் மதன்.

மதன் அணிந்திருந்த அதே நிற ஸ்லீவ்லெஸ் டீஷர்ட்டும், ஜீன்ஸூம் அணிந்துக் கொண்டு இவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள் மது. மதனின் கண்கள் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, வினு ஜிம்பாப்வே நாட்டு பணவீக்கத்தைப் போல பெருத்திருந்த அவளின் மார்பகங்களை வெறித்துக் கொண்டிருந்தான். Dare to touch? என்ற வாசகத்தில் to மட்டும் பள்ளத்தில் இருந்தது.

Excuse me என்றவளுக்கு மதன் மட்டும் தான் வழிவிட்டான். சிறிது தூரம் சென்றவள் திரும்பி பார்த்து புன்னகைத்தாள். வினுவை நகர்த்திவிட்டு முன்னால் சென்று ஹாய் என்றான் மதன். சேம் பின்ச் என்றவள் I am Madhu என்று கைகளை நீட்டினாள்.

அதன் பின் நடந்தவற்றை வயிற்றெரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்த வினுவின் செல்ஃபோன் சிணுங்கியது.மதன் தான் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தான்.
Sry dude. Going 2 watch movie vth her. plz wait 4 me.

அந்த sms அவனுக்கு கோவத்தை தந்தாலும் மதனை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டே சென்றான். படம் முடியும் வரை இன்னொரு மது சென்னையில் இருக்கிறாளா என்று தேடிக் கொண்டிருந்தான். Madhan calling என்பதைப் பார்த்ததும் குழப்பத்துடன் எடுத்தான் வினு.

என்னடா. அதுக்குள்ள?

She wants to move on re. where r u?

()()()()()

நடந்ததை மதன் சொல்ல சொல்ல, வினு திறந்த வாயால் கேட்டுக் கொண்டிருந்தான். கையிலிருந்த KFC Zinger burger காய்ந்து போயிருந்தது. சன்னமான குரலில் வினு சொன்னான், she doesn't wear brassiere da.

ஆமாண்டா. உனக்கு எப்படி தெரியும் என்று அலறினான் மதன்.

”எனக்கு இதெல்லாம் தெரிஞ்சிடும். உனக்கு எப்படி தெரியும்” நக்கலாக கேட்டான் வினு. மதனின் சிரிப்பு விளக்கியது.

உனக்கு மச்சம்டா. என்று 21 இன்ச் பைசெப்ஸில் குத்தினான் .

its paining man என்ற மதன், மறந்தே போச்சுடா. டாட்டூ போடனும்தான் நான் ஸ்லீவ்லெஸ் போட்டு வந்தேன். போலாமா என்றான்.

()()()()()

வினுவும், மதனும் அந்த கேட்லாகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வினு மதனின், கேமரா செல் மூலம் நல்ல டிசைன்களை படம் பிடித்துக் கொண்டிருந்தான். அப்போது வந்த எஸ்.எம்.எஸ்ஸை மதனுக்கு தெரியாமல் வினுவே படித்தான்.
“hey man. Find out & wipe off my lipstick marks. ".

மதனைப் பார்த்தான். அவன் கண்ணுக்கு எங்கேயும் மார்க் தெரியவில்லை. அவனிடம் மெசெஜைக் காட்டினான். அவனை முறைத்துக் கொண்டே,where is the restroom என்று ஓடிய மதன், அரை மணி நேரம் கழித்தே திரும்பினான். ஒரு வழியாக ஒரு டாட்டூவை முடிவு செய்தான். டேட்டூவை போன்றே அழகான பெண் மதனை உள்ளே அழைத்தாள்.

you can have someone name in this tatoo sir. It wont be clearly visible.

யோசிக்காமல் சொன்னான் மதன் “Y A M I N I"
_________________________________________

நகரின் ஒதுக்குபுறமான ஏரியா அது.  இப்போது ஆங்காங்கே சில ஃபார்ம் ஹவுஸ்கள் இருந்தாலும் இதுக்கு முன் இது என்ன ஏரியா (lake) என்று கேட்க தூண்டும்படி இருந்தது அந்த ஏரியா. நகத்தை கடித்தபடி யாமினிக்காக காத்திருந்தான் மகேஷ். தெருமுனையில் கேட்ட ஹார்ன் சத்ததில் யாமினியின் வருகை உறுதியானது. காரில் இருந்து அவள் வெளி வருமுன்னே தலையை விண்டோக்குள் விட்டு கேட்டான்,

“சிக்கிட்டானா?”

சிரித்துக் கொண்டே அவன் மூக்கோடு மூக்கை உரசி சொன்னாள், “யாமினியை பார்த்து வேணான்னு சொல்ற ஆம்பிளை இருக்கானா?”

அவனுக்கு பொண்ணா இருந்தாப் போதும். அவன் 10 வருஷமா என் ஃப்ரெண்ட். அவன பத்தி எனக்குத் தெரியாதா?

ஆனா என் கிட்ட அப்படியில்ல. மொத நாளே என் பேரை டேட்டூ குத்திக்கிட்டான். தெரியுமா?
வெல்டன் டியர் என்றபடி தலையை வெளியெடுத்தவன் செல்ஃபோனோடு உள்ளே சென்றான். யாமினி காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்று சுதந்திரமாய் ஒரு குளியல் போட்டு டர்க்கி டவல் மட்டும் சுற்றிக் கொண்டு வந்தாள். வந்தவளை ஆசையோடு அள்ள முயன்ற  மகேஷை தள்ளிவிட்டாள்.

எனக்கு முழு திட்டத்தையும் சொல்லு. இனி நான் என்ன செய்யனும்?

முதல்ல இந்த துண்டை கழட்டு. அப்புறம்..

பீ சீரியஸ் மஹேஷ். ஜி என்ன சொன்னாரு?

ம்ம். நீ மதனை காதலிக்கணும். அவன் வீட்டுக்குள்ள உரிமையோட போற அளவுக்கு பழகணும். அப்புறமா அந்த வீட்டுக்குள்ள இருந்து என்னென்ன செய்யணும்னு ஜி சொல்லுவாரு. இப்போதைக்கு அவனை உன் மேல பைத்தியமாக்கணும். நாளைக்கு அவன எங்க மீட் பண்ணப் போற?

சத்யம் தியேட்டர். அவன் இப்பவே பைத்தியமாயிட்டான். இங்க பாரு. “Shall we meet tonight? plz...
smsஐ கண்டு சீரியஸானான் மகேஷ். யாமினி.. அவன் உன்னை எல்லாம் முடிஞ்சதும் கழட்டி விட பார்க்கறான். நீ அவன லவ் பண்ணணும். ஞாபகம் வச்சுக்கோ. வேற எதுக்கும் இடம் தராதே.

எல்லாம் எனக்கு தெரியும். எப்படி செய்தா அவன் வழிக்கு வருவான்னு தெரியும். நான் இப்பவே அவன் வீட்டுக்குத்தான் போறேன். என்ன எடுக்கணும்னு ஜி கிட்ட நீ கேட்கறீயா இல்ல நானே கேட்கவா?

இவ்ளோ அவசரம் வேணாம் டியர். யோசிச்சு செய்யணும்.

ஒரு ரிவால்வரையும், டெஸ்ட் ட்யூப் போன்ற ஒரு சிறு கண்ணாடி குப்பியையும் எடுத்து கொண்டு கிளம்பினாள்.

ஹேய். அவன் கிட்ட எந்த பேரை சொன்ன?

ஏன்? யாமினி தான்.

புல்ஷிட். நிஜப்பேரை யாராவது சொல்வாங்களா?

அதனால்தான் அந்த பேரை சொன்னேன் என்றபடி டிவியில் சத்தத்தைக் கூட்டினாள்.
என்ன சொல்ற என்றவனை நோக்கி துப்பாக்கியை நீட்டினாள்.

ஐ அம் நாட் யாமினி மிஸ்டர் மகேஷ்.உங்க நண்பனை வளைக்கிறதுக்கு உதவியதற்கு நன்றி.
துப்பாக்கி வெடித்த சத்தத்தையும் மீறி ஷ்யாம் டிவியில் பாடிக் கொண்டிருந்தார்
யாமினி யாமினி
_________________________________________________________________________________

பிகு: நான் எழுதிய – எழுதிக்கொண்டிருக்கும் – எழுதப்போகும் க்ரைம் கதையின் ஒரு அத்தியாயம் இது. சேம்பிளுக்காக உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன். ஒரு வேளை இந்தக் கதையை முழுவதும் எழுதி முடித்தால் மற்ற அத்தியாயத்தையும் பதிவேற்றுகிறேன்

Dec 4, 2010

ரத்த சரித்திரம் – ஓ ஆனால் நெகட்டிவ்

21 கருத்துக்குத்து

 

ரத்தசரித்திரம் என்ற திரைப்படத்தை பற்றி எழுதும் முன் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். எனக்கு எதிராக நடத்தப்படும் வினைக்கு உடனே எதிர்வினை செய்வதுண்டு. ஆனால் காத்திருந்து பழி வாங்கலில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது மட்டும் இருந்திருந்தால் இந்த படத்தை எடுத்தவரை, பாருடா என்று சொன்ன நண்பனை, ஐனாக்ஸ் நிறுவத்தினரை, டிக்கெட் கிழித்துக் கொடுத்தவரை என ஒருவரையும் விடாமல் பழி தீர்த்திருப்பேன்.

ஒரு எம்.எல்.ஏ தனது வலது(1) கையின் பேச்சைக் கேட்டு இடது(2) கையை வெளியே அனுப்புகிறார். இடது(1) கை கொதித்தெழுந்து தனது இன மக்களை தூண்டிவிடுகிறார். விஷயம் கேள்விப்பட்ட வலது(1)கை, இடதுகையின் வலது(2)கையை வைத்தே அவர் கதையை முடிக்கிறார்.  இறந்தவரின் ஒரு மகனையும் போலீஸ் லாக்கப்பிலே சமாதி கட்டுகிறார்கள். இன்னொரு மகன் என்று ஒருவர் இருந்தால் என்ன செய்வார்? வெகுண்டுழுவார்தானே? அதேதான் நடக்கிறது. அவர் இறக்கவில்லை என்னும்போதே அவர்தான் நாயகன் பிரதாப் ரவி(விவேக் ஓப்ராய்) என்று புரிந்துக் கொண்டீர்களேயானால் வெரிகுட். தன் இன மக்களின் ஆதரவோடு எம்.எல்.ஏ, அவரின் வலது(1) கையென எல்லோரையும் என்ரெட்டி செய்கிறார்.(அந்த ஊரில் ஏது கவுண்டர்?). ஆனந்தபுரம்(?) என்ற அந்த ஊரில் அவர் ஒரு பெரிய சக்தியாக வளர்கிறார். வழக்கம் போல ஒரு அரசியல் கட்சி அவரை அரவணைத்து கொள்கிறது. வார்டு தலைவர் பதவியெல்லாம் இல்லாமல் நேரிடையாக எம்.எல்.ஏவாக்கி மந்திரியும் ஆக்குகிறது. இவர் அரசியலில் இருந்தாலும் தனது நிழற்படை மூலம் யாரெல்லாம் இவருக்கு எதிராக திரும்புவார்கள் என்று நினைக்கிறாரோ, கவனிக்க, நினைக்கிறாரோ எல்லோரையும் போட்டுத் தள்ள சொல்கிறார். இதுதான் முதல் பாகத்தின் சாராம்சம். 

இரண்டாம் பாகம் என்ன சொல்கிறது? அதேதான் சொல்கிறது. இப்போது எம்.எல்.ஏவாக விவேக் ஓப்ராய். அவரால் கொல்லப்படும் குடும்பத்தில் ஒருவராக சூர்யா. முதல் பாகம் போல முதல் ஷெட்யூலில் சூர்யாவின் அப்பா, அடுத்த ஷெட்யூலில் அவரின் மிச்ச குடும்பத்தினர் கொல்லப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமென சூர்யா நினைக்கும் பிரதாப் ரவியை போட்டுத்தள்ள அவர் முறுக்கேறிய உடம்போடும், கண்களில் கொலைவெறியோடும், மனம் முழுவதும் பழி வாங்கும் எண்ணத்தோடும், முகமெங்கும் கரியோடும் அலைகிறார். அவரை கொல்ல முடிந்ததா? எப்படி பழி வாங்குகிறார் என்பதை மீதிப்படம் சொல்கிறது.  ஆரம்பத்தில் திரை முழுவதும் ரத்தம் தெறிக்கிறது என்றால் முடிவில் திரையரங்கு முழுவதுமே ரத்தம் தெறிக்கிறது. பார்வையாளர்களில் கைக்குட்டை எடுத்து வந்த புண்ணியவான்கள் கழுத்தில் இருந்து கொட்டும் குருதியை அழுத்தி பிடித்தபடி வெளியேறுகிறார்கள்.

என்னதான் பிரச்சினை படத்தில்? இசையும், ஒளிப்பதிவும்தான். முதல் துளி ரத்தம் காதில் இருந்துதான் வருகிறது நமக்கு. வாயாலே மியூஸீக் போடுவார்கள் தெரியுமா?அது போல ஏதேதோ ஒலிக்கிறது. ஒரு இடத்தில் கூட காட்சியோடும், கதையோடும் சேர்ந்து பயணித்ததாக நினைவிலில்லை. ஒளிப்பதிவும் அப்படியே. தேவையே இல்லாமல் கன்னாபின்னாவென சுற்றுகிறது. ஒரு காட்சியில் அப்படியே 180 டிகிரி சுற்றி மொத்த காட்சியும் தலைகீழாக வருகிறது. ஒரு வேளை அந்த காட்சிக்கு பின் நாயகனோ, கதையோ அப்படியே மாறப்போகிறதா என்று நர்சிம் போல கூட யோசித்துப் பார்த்துவிட்டேன். ம்ஹூம். இன்னொரு கறிவேப்பிலைக் காட்சிதான். ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் புத்திசாலித்தனமாய் இருந்தாலும் மொத்தத்தில் எரிச்சலைத் தருகிறது என்றுதான் சொல்வேன். அடுத்த பிரச்சினை ஸ்லோ மோஷன் காட்சிகள். ஏற்கனவே விவிஎஸ் லஷ்மண் ஓடும் வேகத்தில் பயணிக்கிறது படம். அது போதாமல் 3 நிமிடங்கள் எல்லாம் ஸ்லோ மோஷனில் சாவடிக்கிறார்கள். தயவு செய்து தியேட்டரிலும் ரிமோட் கொடுங்கப்பா. ம்யூட் போடவும், ஃபார்வர்ட் செய்யவும் இந்தப் படத்தில் நிறைய வேலை இருக்கிறது.

திரைக்கதை குழப்பமாக இல்லையென்றாலும் திருப்பங்கள் இல்லாமல் இருக்கிறது. அரசியல், ரவுடிகள் எல்லாம் இருக்கும்போது அட என நிமிர வைக்கும் திருப்பங்கள் நிறைந்திருக்க வேண்டாமா? ஜெயிலில் இருக்கும் சூர்யாவை இன்னொரு அரசியல்வாதி சந்தித்து எலக்‌ஷனில் நிற்க சொல்கிறார். ஜெயிலில் இருக்கும் நான் எப்படி என்று அவர் கேட்கும்போதே வெளியே வெட்டியாக சுற்றும் ப்ரியாமணி என்ற சூர்யாவின் மனைவி கதாபாத்திரம் நமக்கு நினைவுக்கு வருகிறது.ஆனால் பெரிய திட்டம் என்பது போல அந்தக் காட்சியை மெதுவாக நகர்த்துகிறார் இயக்குனர். அதே போல் டிவி பாம் பற்றி முதலிலே பார்வையாளனுக்கு சொல்லிவிட்ட பிறகு அது வெடிப்பதை சீக்கிரம் காட்டிவிட வேண்டியதுதானே?  டிவியை பிரிப்பது, எடுத்து மேஜை மீது வைப்பது, ப்ளகில் மாட்டுவது, அதை ஆன் செய்வது எல்லாம் க்ளோசப்பிலும், ஸ்லோ மோஷனிலும் காட்டி குண்டு வெடிக்கும் முன்பே நம்மை பரலோகத்திற்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள்.

படத்தின் பலம் நடிப்பு. சூர்யாவை அடுத்து பார்ப்போம். விவேக் ஓப்ராயை பாராட்டி 4 பதிவுகள் எழுதினால்தான் என் ஆர்வம் அடங்கும். அவரின் 3 திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். இதில் நான் பார்த்தது பிரதாப் ரவி. ஒரு இடத்தில் கூட விவேக் ஓப்ராய் தெரியவே இல்லை. அவரைக் கொல்ல சூர்யா முயற்சித்து தோற்கும் அந்த முதல் காட்சியில் தப்பித்த பின் ஒரு நடை நடப்பார் பாருங்கள். பாருங்கள். வெளியே நடக்கும் போராட்டங்களையும், அவர் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் துல்லியமான உடல்மொழியிலும், முகபாவனைகளிலும் கொண்டுவருகிறாரே! அது நடிப்பு. அவர் நடிகர். சூர்யாவும் அதகளம் செய்திருக்கிறார். ஆனால் நந்தாவில் வந்த அதே வெறி அவர் கண்களில் ரத்த சரித்திரம் வரை தொடர்கிறது. எனக்கு என்னவோ அவரின் நடிப்பு அந்தந்த காட்சிகளை கணக்கில் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் எல்லாமே சூர்யாவேவாகவா இருக்கும்? இதில் சூர்யாவின்(பாத்திரத்தின் பெயரே அதேதான்) கோபம், பேரழகினில் வரும் சூர்யாவின் கோபம், ஆதவனில் ஆதவனின் கோபம், காக்க காக்க அன்புச்செல்வனின் கோபம் என எல்லாமே ஒரேவிதமாக இருப்பதாக தோன்றுகிறது.

இப்போதெல்லாம் லாஜிக் என்ற வார்த்தையை எனது திரைப்படங்கள் குறித்த பதிவுகளில் பயன்படுத்துவது இல்லை. இதற்கும் வேண்டாமென நினைக்கிறேன். ஆனால் கேட்க வேண்டுமென்றால் சில விஷயங்கள் இருக்கின்றன. தன் குடும்பத்தை சீக்கிரமே ஆனந்தபுரத்தில் இருந்து அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்லும் சூர்யா 5 வருடம் வரை அழைத்து செல்லாதது ஏன்? தனது குடும்பம் இறக்கும் வரை சூர்யா-ப்ரியாமணிக்கு குழந்தை இல்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு பழி வாங்குவது மட்டுமே யோசித்து குளிக்காமல் கூட சுற்றும் சூர்யாவிற்கு குழந்தைக்கும் முயற்சி செய்யும் எண்ணம் வந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேளை அந்த வெடிகுண்டு சம்பவத்தின் போதே மூன்று மாதமாக இருக்கலாமே என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆந்திர அரசியலின் கதை, இந்தி டெக்னீசியன்கள், டப்பிங் போன்ற காரணிகளால் நம்பகத்தன்மை குறைந்தது போலிருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய? மொத்தமாய் படம் ஒரு வித அயர்ச்சியை தருகிறது. டெக்னிக்கலாகவும் படம் மிரட்டவில்லை. பழிவாங்குதலில் இருக்கும் நிறைவை மட்டும் சொல்லாமல் பெரும்பான்மையான தவறுகள் சந்தர்ப்பவசத்தால் நடக்கின்றன என்பதை காட்சிகளால் சொன்ன ஒரு விஷயத்திற்காக மட்டும் பாராட்டலாம். மற்றபடி பாலம் கட்ட அணில் தந்த உதவி போல் இந்த ரத்தசரித்திரத்தை எழுத நம்மிடம் சில துளி ரத்தம் கேட்பதற்காக கண்டித்துக் கொள்கிறேன்

Dec 3, 2010

”அது”வாகவே இருக்கட்டும்

26 கருத்துக்குத்து

 

ஒரு நேரம்..
பெருக்கெடுத்து ஓடுகிறது
கண்மாய் உடைத்து செல்லும்
வெள்ளம் போல..

ஒரு நேரம்
வருடி செல்கிறது
குழலில் இருந்து ஒழுகும்
மெல்லிசையைப் போல

வலமென்றோ இடமென்றோ
கைக்காட்ட முடிவதில்லை.

மேலென்றோ கீழென்றோ
இடைக்கோடிட முடிவதில்லை.

அவள்
குரலின் கதகதப்பையும்
அன்பின் வெதுவெதுப்பையும்
என்னுள்ளே புதைத்துவிடுகிறேன்.
வெடித்து வெளிவரும் நாளில்
மடிந்து போயிருக்க வேண்டும் நான்.

 

all rights reserved to www.karkibava.com