Nov 24, 2010

அனுஜ’ம்’யா


 

2008 தன் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த வேளை. பதிவுலகை ”அடுத்தக் கட்டத்திற்கு” எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும், அந்த ஜோதியும் என் கைக்கு வந்துவிட்டதாக உணர்ந்துக் கொண்டிருந்த சமயம். தொலைக்காட்சி அலைவரிசைகளை டக் டக்கென்று மாற்றுவது போல தமிழ்மண முகப்பில் இருந்த எல்லாப் பதிவுகளை மேய்ந்துக் கொண்டிருந்தேன். என் செய்கைக்கு தோதான ஒரு கவிதை கண்ணில்பட்டது.

அலைவரிசை மாற்றங்களில்
நிராகரிக்கப்பட்ட பாடலொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்;
விலக மறுத்த வரிகள்
கவரவில்லையெனினும்
இலயிக்கத்துவங்கியது மனம்
அலைவரிசை மாற்றங்களின்
சாத்தியக்கூறுகளில்

மீண்டும் படிக்கையில் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது. எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். அனுஜன்யா என்றிருந்தது. பின்னூட்டம் ஏதும் போடாமல் வந்துவிட்டேன். தொடர்ச்சியான வாசிப்பில் அவர் கவிதைகளின் காதலன் ஆகிவிட்டேன் என்று சொல்லலாம். ஈழம் குறித்து நான் எழுதிய பதிவு ஒன்றில் விரிவாய் அவர் போட்டிருந்த பின்னூட்டமும், அதைத் தொடர்ந்து நடந்த பரிமாற்றமும் எங்களிடையேயான முதல் உரையாடல் எனலாம். அப்போதுதான் அனுஜன்யா என்ற பெயர் சுஜாதா மாதிரி என்பது தெரிந்தது எனக்கு. அனுஜன்யா அவர் புனைபெயர். (ஒரு உண்மை சொல்கிறேன். ஒரு முறை கூட அவரின் நிஜப்பெயரை நான் கேட்கவில்லை. இன்றுவரை அது எனக்கு தெரியாது)

எழுத்து பொய் சொல்லாது. அனுஜன்யாவிற்கு வயது 40க்கு மேலிருக்கும் என்பது அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும்.அல்லது தெரிந்துவிடும். அதனால் அவரைத் தொடர்பு கொண்டு பேச ஒரு வித தயக்கம் எனக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது. 2009 ஆம் ஆண்டில் ஒரு நாள் “தல” சென்னை விஜயம் செய்தார். ஐ.ஐ.டி வளாகத்தில் பதிவர் சந்திப்பு நடந்தேறியது. எங்கள் முதல் சந்திப்பும் அன்றுதான் நடந்தது. சந்திப்புக்கு முன் அவருடன் அலைபேசியில் சில விநாடிகள் உரையாடினேன். “நான் ஷார்ப்பா 5 மணிக்கு வந்துடுவேம்மா”. சில நூறு மாதங்கள் ஒன்றாய் பழகிய ஒருவரின் நெருக்கத்தோடு ஒலித்தன அவ்வார்த்தைகள். அத்தனை மிருதுவான ஒரு மனிதரை நான் பார்த்ததேயில்லை. கவிஞர்கள் ரசனைக்காரர்கள் என்றாலும் வீம்பானவர்கள். நெருங்கவே முடியாத வட்டத்திற்குள் வாழ்பவர்கள் என்றொரு கற்பிதம் எனக்குள் இருந்தது. அதை உடைத்தெறிந்த இருவர் அனுஜன்யாவும், ஜ்யோவ்ராம் சுந்தரும். உலகிலே அழகானதொரு புன்னகையோடு வாம்மா என்று அழைத்து கைகுலுக்கினார். எம்.ஜி.ஆரின் கைகளுக்கு பிறகு மிக மிருதுவான உள்ளங்கை இவருடையதாகத்தான் இருக்கக்கூடும்.

அந்த சந்திப்பு மாதிரி பிறிதொன்று எனக்கு வலையுலகில் இன்னும் ஏற்படவில்லை. ஐஐடி வளாகத்தின் அழகைத் தாண்டி அழகாய் இருந்தது அந்த சந்திப்பு. அதைப் பற்றி நான் சொல்வதை விட அனுஜன்யாவின் வார்த்தைகளில் படியுங்கள். கவிதைதான் எழுதுவார் என்றிருந்த இன்னொரு மாயையை உடைத்து அற்புதமான பத்தியை தந்திருந்தார். நான் அதிக முறை வாசித்த அவரின் பதிவு இதுவாகத்தான் இருக்கும். எங்களிருவருக்கும் இடையே இருக்கும் வெகு சொற்பமான பிடித்தங்களில் ஒன்று அய்யணாரின் எழுத்து. என்னை அவரிடம் எளிதில் இழுத்ததில் அய்யணார் எழுத்தின் மீதான என் ஆர்வம் முக்கியமான காரணம் என்று சொல்வார்.

அனுஜன்யா அவர்களை யாருக்கும் தெரியாமல் சந்திக்க ஒருமுறை மும்பைக்கு ரகசிய பயணம் மேற்கொண்டேன். ரகசியம் அவருக்கே தெரியாமல் போனது சோதனை. திடீர் பயணம் என்பதால் முன்கூட்டியே அவரிடம் சொல்ல முடியவில்லை. கவிஞர் முக்கிய அலுவல் காரணமாக வேறு ஊருக்கு சென்றுவிட்டார். நான் சென்றது என் குடும்பத்துடன் என்பதால் தனது கார், காரோட்டி, காருக்கு தேவையான எரிபொருள் என எல்லாவற்றையும் அனுப்பி வைத்திருந்தார்.  இரண்டு நாட்கள் மும்பையில் எந்த தொல்லையும் இல்லாமல் என் வேலையை முடிக்க காரணமே அவரின் கார் தான். அன்று அவரை சந்திக்க முடியாமல் போன வருத்தம் இன்றும் என்னுள்ளே இருக்கிறது.

DSC00193

அனுஜன்யா இப்பொழுது எழுதுவதில்லை. காரணம் சிலருக்கு தெரிந்திருக்கலாம். உண்மையான காரணம் தெரிந்தவர்கள் அவரின் மென்மையான மனதை உணர்ந்தவராயிருப்பார்கள். பட்டர்ஃப்ளை எஃபெக்ட் தான் என்றாலும் அதற்கு நானும் காரணமாயிருந்திருக்கிறேன். இந்தப் பிரச்சினையில் சம்பந்தமேயில்லாமல் காயப்பட்ட அவருக்கு அதன்பின் அதிகம் அலைபேசியது கூட இல்லை. என்ன பேசுவது என்ற காரணம் என்வசம் இருந்தாலும் ஏதாவது பேசியிருக்க வேண்டும் என்ற வேதனையும் இருக்கிறது. சமீபகாலமாக அடிக்கடி அவரை நினைத்துக் கொள்கிறேன். சுவையான பழங்கள் எல்லாம் தடித்த தோல் கொண்டவையாகத்தான் இருக்கின்றன. விதிவிலக்காக இருக்கும் கொய்யா போன்ற பழங்களைத்தான் அணில்கள் கடிக்கின்றன. அனுஜன்யா கொய்யா போன்றவர்.

வலையுலகம் வேண்டாமென்றால் சரி. வழக்கம்போல சிற்றிலிகக்கியங்களுக்கு எழுதி அனுப்பலாமே என்றேன் ஒரு முறை. எழுதவே புடிக்கலம்மா என்ற அவரின் குரலில் தெரிந்த ஏமாற்றம்  ஏதோ செய்தது. இந்தப் பதிவு கூட அவரை எழுத வேண்டுமென்ற அழைப்பு அல்ல. ஒரு நல்ல மனிதனின் எழுத்தின் வாயிலான நட்பை இழந்திருக்கிறோம் என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு. கவிதை எழுதினாலும் எழுதாவிட்டாலும், என்னோடு பேசினாலும் பேசாவிட்டாலும் அனுஜன்யா எப்போதும் எனது விருப்பமான நண்பர். ஆலோசகர். நலம்விரும்பி. மிஸ் யூ தல.

39 கருத்துக்குத்து:

ப்ரியமுடன் வசந்த் on November 24, 2010 at 11:46 PM said...

//சுவையான பழங்கள் எல்லாம் தடித்த தோல் கொண்டவையாகத்தான் இருக்கின்றன. விதிவிலக்காக இருக்கும் கொய்யா போன்ற பழங்களைத்தான் அணில்கள் கடிக்கின்றன. அனுஜன்யா கொய்யா போன்றவர்.//

ம்ம்

சீக்கிரம் வாங்க தல

நிறைய அணில்கள் காத்திருக்கிறோம்..

ஸ்ரீதர் நாராயணன் on November 25, 2010 at 12:21 AM said...

//அனுஜன்யா இப்பொழுது எழுதுவதில்லை. //

ஒருவேளை இந்தப் இடுகையில போட்டிருக்கற ’வில்லன்’ படத்தைப் பார்த்து பயந்திருப்பாரோ? :))

எனக்குக் தெரிந்தவரை குசும்பனாரின் கலாய்த்தலுக்கு பயந்துதான் தல ஒதுங்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையாமா?

சுசி on November 25, 2010 at 1:13 AM said...

//ஒரு நல்ல மனிதனின் எழுத்தின் வாயிலான நட்பை இழந்திருக்கிறோம் என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு. //

அருமையா எழுதி இருக்கிங்க கார்க்கி.

விளையாட்டாகத் தொடங்கி போகப் போக உங்கள் மன வேதனையோடு படிக்கும் எங்களையும் சேர்த்து சொல்ல வைத்து விட்டீர்கள்..
//மிஸ் யூ தல//

மாணவன் on November 25, 2010 at 6:14 AM said...

ஒரு சிறந்த படைப்பாளி
எழுதுவதில்லை என்பது அனைவருக்குமே வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது,

//ஒரு நல்ல மனிதனின் எழுத்தின் வாயிலான நட்பை இழந்திருக்கிறோம் என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு. //

இதில் உங்களின் நட்பின் வெளிப்பாடுத் தெரிகிறது

அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

Mahesh on November 25, 2010 at 7:14 AM said...

ANU"GEM"YA !!!!

என். உலகநாதன் on November 25, 2010 at 8:13 AM said...

கார்க்கி,

எனக்கும் பிடித்தமானவர் அனு.

என்னுடைய பல இடுகைகளுக்கு அவர் பின்னூட்டம் எழுதி என்னை பாராட்டி இருக்கிறார். மும்பை செல்லும்போது சந்திக்கலாம் என்று இருக்கிறேன்.

நான் ஏற்கனவே நேரில் சொல்லி இருந்ததைப்போல இந்த மாதிரி எழுத்து நடையைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

என். உலகநாதன் on November 25, 2010 at 8:14 AM said...

//அந்த சந்திப்பு மாதிரி பிறிதொன்று எனக்கு வலையுலகில் இன்னும் ஏற்படவில்லை//

நாம கூட சந்தித்தோமே கார்க்கி!

சும்மா ஜாலிக்கு!!!!!

ரவிச்சந்திரன் on November 25, 2010 at 8:45 AM said...

அண்ணன் அனுஜன்யா ஒரு சிறந்த எழுத்தாளர். தமிழ்மணத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது ”குலத்தொழில்” (http://anujanya.blogspot.com/2009/09/blog-post_22.html)என்ற அவருடைய கவிதையை முதன் முதலில் வாசித்தேன். அன்றிலிருந்து அவருடைய எழுத்துகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். என்னுடைய சோம்பேறித்தனத்தால் பின்னூட்டங்கள் போடுவதில்லை.

அண்ணன் அவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!

வெண்பூ on November 25, 2010 at 9:00 AM said...

//
ஒரு நல்ல மனிதனின் எழுத்தின் வாயிலான நட்பை இழந்திருக்கிறோம்
//

இல்லை கார்க்கி... ஒரு நல்ல மனிதனின் எழுத்தை நட்பின் காரணமாக இழந்திருக்கிறோம். :(

இப்போவெல்லாம் அங்கங்கே அவரோட பின்னூட்டம் பாக்குறப்பவெல்லாம் அவர்ட்ட பேசலாமான்னு தோணும், ஆனா பேசுனா மறுபடியும் அந்த கசப்பான விசயங்களே பேசப்பட்டு அவர் மனசு வருத்தப்பட்டுமேன்னுதான் நான் அவரை கூப்பிடுறதே இல்லை...

காத்திருக்கிறோம் அனுஜன்யா...

குசும்பன் on November 25, 2010 at 9:42 AM said...

என்ன கார்க்கி அவருக்கு 40 வயசுக்கு மேலன்னு சொல்லிட்டு பில்லா அஜித் போட்டோ போட்டு இருக்க? அவர் போட்டோ கிடைக்கவில்லையா?!

தல இவனோட நக்கலுக்காகவே நீ திரும்பி வந்து இவனை கட்டி போட்டு ஒரு நாலு ஜந்து கவிதை படியுங்கள்!
இந்த பதிவை ஏன்டா போட்டோம் என்று பீல் செய்ய உடுங்க தல...:))

குசும்பன் on November 25, 2010 at 9:43 AM said...

//அனுஜன்யா கொய்யா போன்றவர். //

அனுஜன்யாவை ங்கொய்யா என்ற கார்க்கி ஒழிக ஒழிக!

குசும்பன் on November 25, 2010 at 9:45 AM said...

//நான் அதிக முறை வாசித்த அவரின் பதிவு இதுவாகத்தான் இருக்கும். //

ஏன்னா அவரு எழுதி பத்தி ஒன்னே ஒன்னுதானே!:))

குசும்பன் on November 25, 2010 at 9:47 AM said...

//எனக்குக் தெரிந்தவரை குசும்பனாரின் கலாய்த்தலுக்கு பயந்துதான் தல ஒதுங்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையாமா?
//

அவ்வ்வ்வ்வ்வ்வ் அண்ணே! நான் அவர் ரசிகன்!:))

கும்மிட்டு பின்னூட்டத்தை பார்க்கும் பொழுதுதான் நீங்க போட்டு கொடுத்தது தெரிகிறது:(

குசும்பன் on November 25, 2010 at 9:48 AM said...

// அதை உடைத்தெறிந்த இருவர் அனுஜன்யாவும், ஜ்யோவ்ராம் சுந்தரும்.//

இந்த குருஜி இருக்காரே குருஜி அவரு என்ன மாயம் மந்திரம் செஞ்சாருன்னு தெரியல எல்லோரையும் மயக்கி வெச்சிருக்காரு!

Karthik on November 25, 2010 at 9:49 AM said...

I'm a very big fan of his prose. Its most unfortunate that he is no longer active in blogosphere. Miss you thala. :-(

Great post Karki. Very genuine.

குசும்பன் on November 25, 2010 at 9:52 AM said...

ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு மெயில் அனுப்பி வாங்க தல வந்து நாலு அஞ்சு கொத்து குண்டு மாதிரி கவிதை எழுதி வீசுங்கன்னு மெயில் அனுப்பினா அவரு சிரிக்கிறாருய்யா...ஏன்னு கேட்டா என்னை நினைவு வெச்சிருந்ததுக்கு நன்றியாம்.

இவரோட கவிதை எல்லாம் மறக்க முடியும் ரகம்(ரணமா?)

குசும்பன் on November 25, 2010 at 9:52 AM said...

//Karthik said...
I'm a very big fan
//

தல உங்களுக்கு பிக் பேன் எல்லாம் இருக்காங்க...நான் உங்களுக்கு பிக் ஏசியா இருப்பேன் வாங்க...

வழிப்போக்கன் - யோகேஷ் on November 25, 2010 at 10:32 AM said...

//
எம்.ஜி.ஆரின் கைகளுக்கு பிறகு மிக மிருதுவான உள்ளங்கை இவருடையதாகத்தான் இருக்கக்கூடும்
//
அடேங்கப்பா.......... என்னவொரு உவமானம்..

நர்சிம் on November 25, 2010 at 10:39 AM said...

கார்க்கி,

என்ன எழுதுவதென்று தெரியவில்லை. காரணம் அவரின் லேட்டஸ்ட்(கடைசி என்ற வார்த்தை உயபோகிக்க விருப்பம் இல்லை..) பதிவு.. நர்சிம்மைப் பற்றியும் பற்றாமலும்..

அவரைப் பற்றி, மூன்று முறை எழுதி ஆனால் அதை பதிவிட்டு மீண்டும் அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்த விருப்பம் இல்லாமல் அமைதி காக்கிறேன்.

நிகழ்விற்குப் பின்னால் மிக அதிகமாகவும் உரிமையோடும் என்னைக் கடிந்து கொண்டது அவர் மட்டுமே. அவ்வளவு திட்டினார். உண்மையிலேயே ஒரு அண்ணன் இருந்தால் எந்த மொழியில் என்னிடம் பேசி இருப்பாரோ அந்த மொழியில் பேசினார்.

அதன் பிறகு எவ்வளவு முறை சொல்லியும் ‘என்னால இப்போ எழுதவே முடியல’ என்ற பதிலைத் தந்தார்.

நானே எழுதுறேனே.. என்ற பதிலில் ‘நானே’வை எவ்வளவு அர்த்தத்தில் அவரிடம் சொல்லி இருப்பேன் என்பது என் மனதிற்கு மட்டுமே தெரியும்.

அவரை சந்தித்து பேசிய தருணங்களை யோசிக்கும் பொழுது, ஓவ்வொரு முறையும் அவரின் டைமிங் ஜோக்குகளும் அந்த அப்பாவித்தன பார்வையும் மட்டுமே வந்து போகும்.

சில சொல்லமுடியாத சங்கடங்கள் மனப்பிறழ்வை ஏற்படுத்தி விடும் என வாசித்திருக்கிறேன். அனுஜன்யா விசயத்தில் என் மனது துடிப்பது அவ்வகையில் என்னை இட்டும் செல்லலாம்.

தவிர்த்தல் தவறே இல்லை..தவிர்த்தலின் நிமித்தம் நாமாகும் பொழுது தவிப்பைத் தவிர வேறொன்றும் மிஞ்சுவதில்லை.

என் தனிப்பட்ட வாழ்வில் நான் இழந்தவைகள் நிறைய.அதைப் பற்றிய கவலை ஒருபொழுதும் என்னைச் சூழ்ந்ததில்லை.
ஆனால்
சில இழப்புகளுக்கு நான் காரணமாகிப் போகிறபோது அதை தாங்க முடிவதில்லைதான்.

அவரை மீண்டும் எழுதச் சொல்லி அழைக்கும் தகுதியை நான் இழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன.

பரிசல்காரன் on November 25, 2010 at 11:07 AM said...

கடைசி இரண்டு பத்திகளில் உன் வலி தெரிகிறது.

ஜி-

வாங்க...

எம்.எம்.அப்துல்லா on November 25, 2010 at 11:23 AM said...

// எல்லோரையும் மயக்கி வெச்சிருக்காரு!

//

சாய்ந்தரத்துக்குமேல பார்த்தின்னா குருஜியே மயங்கிதான் இருப்பாரு :))

காவேரி கணேஷ் on November 25, 2010 at 11:23 AM said...

யோவ்,

என்னய்ய பண்றீங்க, ஆளாளக்கு போன் போட்டு , அவர எழுத சொல்லமா, பின்னுட்டம் போட்டுகிட்டு.

அனுஜன்யா வாரம்னு அறிவிச்சு எல்லோரும் போன் பண்னுங்கப்பா..

பா.ராஜாராம் on November 25, 2010 at 11:39 AM said...

மிக நெகிழ்வான, உண்மையான, அற்புதமான பதிவு கார்க்கி!

அனுஜன்யாவின் எழுத்தை வாசித்தவர்கள், வாசிப்பவர்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது கார்க்கி இப்பதிவு.

ப்ளீஸ்..வாங்க அனு சீக்கிரம்.

ILA(@)இளா on November 25, 2010 at 11:51 AM said...

இப்ப பதிவு போட்ட அப்துவுக்கு 40 பின்னூட்டம் தாண்டிருச்சு. என்னவே தெனறுது இங்கன?

குசும்பன் on November 25, 2010 at 12:22 PM said...

//இப்ப பதிவு போட்ட அப்துவுக்கு 40 பின்னூட்டம் தாண்டிருச்சு. என்னவே தெனறுது இங்கன?
//

அது பசுவை பற்றி எழுத நினைச்சு தென்னை பற்றி எழுதிய பதிவு...

இது அப்படியே பசுவின் அருமை பெருமை எல்லாம் எழுதிய பதிவு என்பதால் மக்கள் கும்ம தயங்குறாங்க போல...

குசும்பன் on November 25, 2010 at 12:25 PM said...

//அப்போதுதான் அனுஜன்யா என்ற பெயர் சுஜாதா மாதிரி என்பது தெரிந்தது எனக்கு/

அட நீ வேற கார்க்கி, இந்த பேரை பார்த்து ஏதும் சூப்பர் பிகரா இருக்கும் என்று நினைச்சு பலபேர் லவ் லெட்டர் எல்லாம் அனுப்பியிருக்காங்க.

குசும்பன் on November 25, 2010 at 12:26 PM said...

//பரிசல்காரன் said...
கடைசி இரண்டு பத்திகளில் உன் வலி தெரிகிறது.


///

அப்ப அதுக்கு மேல இருக்கும் பத்தியில் என்ன தெரியுது? காணமல் போன ஆட்டு குட்டி எங்க தெரியும்?

குசும்பன் on November 25, 2010 at 12:28 PM said...

// கவிஞர்கள் ரசனைக்காரர்கள் என்றாலும் வீம்பானவர்கள். நெருங்கவே முடியாத வட்டத்திற்குள் வாழ்பவர்கள் //

ரமேஷ்வைத்யா, ஆடுமாடு இவுங்களும் இதே மாதிரிதான்.

குசும்பன் on November 25, 2010 at 12:30 PM said...

//Mahesh said...
ANU"GEM"YA !!!!

//
ANU "GYM" ya, அவரு உடம்ப பாருங்கய்யா பழனிபடிக்கட்டு மாதிரி எத்தனை கட்ஸ்ன்னு சிக்ஸ் பேக் அனுஜன்யா, கம் பேக்!

இப்படிக்கு
கட் பாடி கந்தன்

குசும்பன் on November 25, 2010 at 12:32 PM said...

அனு"கம்"யா..

இப்படிக்கு
வார்த்தை வித்தகர் கார்க்கி

பிரதீபா on November 25, 2010 at 3:28 PM said...

உங்களோட மிகச்சிறந்த பதிவுகளில் இது ஒன்று கார்க்கி. எங்கள் இவ்வளவு பேரின் அன்புக்காகவாவது நீங்கள் திரும்பி வந்தால் நன்றாக இருக்குமே அனுஜன்யா !

sivakasi maappillai on November 25, 2010 at 3:39 PM said...

இதனால் சகல பதிவர்வர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...
யாரவது ஒதுங்கனும்னு நெனச்சீங்கன்னா.... மூத்த அண்ணன் ஆதி மாதிரி ஒரு கருத்து கணிப்பு
நடத்திட்டு ஒதுங்கிக்குங்க... இல்லாட்டி இந்த கார்க்கி, அப்துல் அண்ணன் மாதிரி பதிவர்கள் உங்கள புகழ்றமாதிரியே (ஒரு படத்துல வடிவேலு ஒரு தாதாவ முட்டுசந்துக்கு கூப்டு வர்ற மாதிரி) முச்சந்தில நிறுத்தீருவாங்க.... ஜாக்கிரதை

ஸ்ரீதர் நாராயணன் on November 25, 2010 at 6:37 PM said...

//நீ திரும்பி வந்து இவனை கட்டி போட்டு ஒரு நாலு ஜந்து கவிதை படியுங்கள்!
இந்த பதிவை ஏன்டா போட்டோம் என்று பீல் செய்ய உடுங்க தல...:))
//

இப்படி சேலஞ்சிங்கா ஏதாவது சொன்ன தல உடனே பேனாவை (லாப்டாபை) திறந்து கவிதை மழை பொழிஞ்சிடமாட்டாரா? குட் ஸ்ட்ராடிஜி குசும்பன்.

//இந்த பேரை பார்த்து ஏதும் சூப்பர் பிகரா இருக்கும் என்று நினைச்சு பலபேர் லவ் லெட்டர் எல்லாம் அனுப்பியிருக்காங்க.//

ஓ... இப்பதான் புரியுது உங்க “வலி”. :(

அனுஜன்யா!

Come back பெட்டிஷன்ல நானும் ஒரு கையெழுத்துப் போட்டிருக்கேன். இந்த குசும்பன் கொட்டத்தை அடக்கறதுக்காவது சீக்கிரமா எழுத ஆரம்பியுங்க தல. :)

இராகவன் நைஜிரியா on November 25, 2010 at 6:44 PM said...

மீ ஒரு ப்ரசண்ட் போட்டுக்கிறேன்.

RaGhaV on November 26, 2010 at 1:49 AM said...

அத்தனை பேரின் அன்பும் உங்கள் எழுத்தின் மீது உள்ளது அனுஜன்யா. பார்த்து செய்ங்க..

"உழவன்" "Uzhavan" on November 26, 2010 at 11:24 AM said...

ஏன் இப்பலாம் அனுஜன்யா எழுதுரதில்ல" என நான் என்னையே சில சமயம் கேட்டுக்கொண்டதுண்டு. "ஏதாவது வேலை இருக்கும். வந்து எழுதுவார்" என நானே பதில் சொல்லிக்கொண்டதுமுண்டு. இபோதும் அதே நம்பிக்கையில்தான் இருக்கிறேன் "விரைவில் எழுதுவார்" என..

"ராஜா" on November 26, 2010 at 11:28 AM said...

சகா உங்களுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளேன் .. நேரம் இருந்தால் இந்த லிங்கிற்கு வந்து தவறாமல்
பாருங்கள்

http://apkraja.blogspot.com/2010/11/blog-post_3840.html

மோகன் குமார் on November 26, 2010 at 11:50 AM said...

கார்க்கியிடமிருந்து சீரியசான எழுத்து.. நரசிம் பின்னூட்டமும் மனதை தைக்கிறது. அனுஜன்யா மீண்டு(ம்) வாங்க.

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com on November 27, 2010 at 9:33 AM said...

Anujanya is one of my favorite poet.
He should come back and write more kavithaigal

 

all rights reserved to www.karkibava.com