Oct 27, 2010

படைப்பாளி..எழுத்தாளன்..கவிஞன்..கலைஞன்

29 கருத்துக்குத்து

 

ஒரு படைப்பாளிக்கு சுதந்திரமான வாழ்க்கை அவசியம். ஒரு எழுத்தாளனுக்கு அக உலகின் அழுத்தங்கள் இருக்கவே கூடாது. ஒரு கலைஞனுக்கு காலக்கெடு எல்லாம் பொருட்டே இல்லை.. ஒரு கவிஞனுக்கு நினைத்ததை செய்து பார்க்கும் வசதிகள் கைக்கூட வேண்டும்.  சரி அதுக்கு என்ன இப்ப என கையை முறுக்காதிங்க. இப்படி எல்லாமும் சேர்ந்து என் போன்று ஒரு படைப்பாளியை, கலைஞனை, எழுத்தாளனை, கவிஞனை.. புரிஞ்சிடுச்சா? அதான் விஷயம். வேற ஒண்ணும் இல்லை. நான் ரொம்ப பிசி..

___________________________________________________________________________________

விஜய் டிவி நீயா நானாவில் நம்ம பரிசல்காரன் பங்கு பெற்றாராம். ”பரிசல்.. நீயா அது?” என்று எல்லோரும் கேட்க, அவரும் டிவியில் வந்த சில நொடிகள் க்ளிப்பிங்கைப் பார்த்து ”நானா அது?” என்று திருப்பி கேட்க ஒரே தமாஷாம். இவர் பேச வேண்டிய தலைப்பு. (கவனிக்க:பேசிய தலைப்பு இல்லை) வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்று. நானும் தேவையில்லை என்பேன். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்?

___________________________________________________________________________________

தீபாவளிக்கு பட்டாசெல்லாம் வந்து சேர்ந்துடுச்சு. தினம் ஒரு திரியென வெடிக்கிறான் பப்லு. நேத்து வெடிச்ச பட்டாசு சரியா வெடிக்கலைன்னு பட்டாசுக் கடைக்காரருக்கு (நண்பர்தான்) ஃபோன் செய்து புலம்பினான். அவரும் “இங்க வாங்கியதுதானே? நம்ம கடைல எல்லாம் நல்லா வெடிக்குமே” என்றாராம். அதுக்கு பப்லு சொல்லியிருக்கிறான்

”உங்க கடைல நல்லா வெடிக்கும். அதுக்காக தீபாவளிய அங்கயா கொண்டாட முடியும்? எங்க வீட்டுலயும் வெடிக்கணும் இல்ல?”

இது அடுத்த பல்பு

வீட்டிற்கு வந்த உறவினர் சிலரிடம் அம்மா செய்த கைவினைப் பொருட்களை காட்டிக் கொண்டிருந்தான். ஓலையில் செய்த கூடை ஒன்றை காட்டி “இந்த கூட நான் செய்தது” என்றான். அமைதியின் திரு உருவான அவர் கேட்டார் “கூடை நீ செய்தியா? இல்ல செஞ்சவங்க ’கூட’ நீ இருந்தியா?

கொஞ்ச நேரம் யோசிச்ச பப்லு சொன்னான் “அந்த சோஃபால உட்காராதீங்க. அது கார்க்கி மாமா சோஃபா. அதான் இப்படி பேசறீங்க”

$%^&*@#$

________________________________________________________________________________

பீச்சுக்கு சென்றால் நானும் பப்லுவும் 50ரூபாய்க்காவது பலூன் ஷூட் செய்வோம். ஹார்ஸ் ரைடிங், ஷூட்டிங் இதெல்லாம் ஐ.பி.எஸ் ஆகவிருக்கும் பப்லுவுக்கு டிரெயினிங்.ஹிஹிஹி. விஷயம் என்னவென்றால் வீட்டுக்கு வந்தவுடன், ”மம்மி இவன் ஒரு கடைல 50 ரூபாய் சுட்டுட்டான்” என்றான் பப்லு. அக்காவும் என்னடா என்பது போல் முறைக்க, சிரித்துக் கொண்டே சொன்னான் “பலூன் சுட்டான் மம்மி”

இதைக் கேட்ட என் மம்மி ஒரு பழையக் கதை சொன்னார்கள். அப்போது நான் அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருந்தேனாம்.(தூள் படம் பார்த்தவர்கள் அமைதியாக இருக்கவும்). அப்பாவிடம் வந்து 50 கி.மீ ஸ்பீடில் ஓடுன பஸ்ஸ சைக்கிளில் ஓவர்டேக் செய்ததாக சொல்லியிருக்கேன். அவரும் வேகமாக போகக் கூடாது என்று சொல்ல, பதிலுக்கு நான் சொன்னது ” ஆனா நான் ஓவர்டேக் செஞ்சப்ப அது நின்னுக்கிட்டுதான் இருந்தது”

பப்லு என்னைப் பார்த்து அப்ப நீயும் என் டீம்தாண்டா என்றார். ரெண்டு மம்மியும் ஒன்றாக சொன்னார்கள். ம்க்கும்

________________________________________________________________________________

ட்விட்டரில் உதிர்த்த சில கருத்துகள் இதோ. தொடர்ந்து வலைபாயுதேவில் என் ட்வீட்டுகளையும் பிரசுரிக்கும் விகடனுக்கு என் நன்றிகள்

சிகரெட் பிடிக்கும் அப்பாக்கள், குழந்தைகள் தீபாவளிக்கு பட்டாசு கேட்டால் மட்டும் “காசை கரியாக்காத” என்று சொல்வது ஏமாற்று வேலை

அம்மா ஆயுத பூஜை அன்று வீட்டில் வெத்தல கொடி கட்டினார்கள். திமுக கொடியை கட்டினாலாவது டிவி கிடைத்திருக்கும்.

சிம்புவை காதலிப்பவர்களின் பிரச்சினை அவர்கள் டீ.ஆரின் மருமகள் என்பதே.அவர் father in law இல்லை. feather in law என்பதை யார் உணர்வார்கள்?

ஆளாளுக்கு writer என்ற முன்பெயரோடு கிளம்புகிறார்கள். இவர்களெல்லாம் எந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்கிறார்கள்?

Oct 24, 2010

”ழ” டீக்கடை

33 கருத்துக்குத்து

 

    டீக்கடை என்பது தமிகத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. பெரும்பாலும் நடத்துவது நாயர் என்றாலும், குடிப்பது அசாம் டீ என்றாலும் அது நம் அடையாளம்தான். ஒரு நல்ல டீக்கடை என்பது டீயின் சுவையில் இல்லை. கடைக்கு முன்னால் இருக்கும் பென்ச், பக்கத்தில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் ஆகியவையே அதன் மதிப்பை கூட்டும் சக்தி பெற்றவை. அதிகாலையில் ஸ்ட்ராங்கா, சக்கரை கம்மியா ஒரு டீயினூடே அன்றைய தினத்தந்தியை மேய்ந்துவிட்டு, 4வது தெரு ராமாசமியிடம் நிதியமைச்சரின் புதிய திட்டம் ஒன்றின் குறையை விளக்குவதில் இருக்கும் அலாதியான சுகம் பெருசுகளுக்கு வேறு எதில் கிடைத்துவிடும்?

பெருகளுக்கு சரி.இளசுகளுக்கு? அதிகாலை என்றேன் அல்லவா? இப்போது காலை 8 மணி. பள்ளிக்கூட பெதும்பைகள்,  பாலிடெக்னிக் மங்கைகள், கல்லூரி மடந்தைகள், வேலைக்கு செல்லும் அரிவை, தெரிவை பேரிளம்பெண்கள் என எல்லா வயது பெண்டிரும் பேருந்து நிறுத்தத்தை போகன்வில்லாவாக மாற்றும் நேரம். நம்மின காளையர்கள் டீக்கடை குட்டிச்சுவரை நிஜமாகவே குட்டிச்சுவாராக மாற்றும் பொருட்டு நாயரின் திட்டுக்களுக்கு வந்தனம் சொல்லி அக்கவுண்ட்டில் வாங்கிய தம்மை இழுத்தபடி விடும் ஏக்கப்பெருமூச்சுகள் பேருந்து வரும் சத்தத்தையே அடக்கிவிடும்.

உஸ்ஸ்.. ஆலமரம், பசுமாடு கதையாகும் முன்பு சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். டீக்கடையின் அடுத்தக்கட்ட நகர்வுதான் காஃபி ஷாப்கள்.  இந்த கஃபேக்கள் பலர் கூடி பேசும் இடமாகாத்தான் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட காஃபி ஷாப்கள் பல தீம்களை (Theme) அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிகத்திலே தமிழ் மொழியை மையமாக கொண்ட ஒரே தேநீர் விடுதி “ழ” தேநீர் விடுதி அல்லது ZHA Cafe.  

image    யோசித்துப்பாருங்கள். தரையில் மெத்தை. சம்மனமிட்டு அமரலாம். குளிரூட்டப்பட்ட அறை. படிக்க பொன்னியின் செல்வன் உட்பட பல நூல்கள்(தேடிவிட்டேன். சாருவின் நூல்கள் எதுவும் இல்லை. தைரியமாக செல்லலாம்) . ஆடுவதற்கு பல்லாங்குழி அல்லது தாயம். பேசுவதற்கு நண்பர்கள். பார்ப்பதற்கு படங்கள். பேசிப் பேசி களைத்துப் போனால் என்ன குடிக்கலாம்? கோலி சோடா குடிக்கலாம். இருமல் என்றால் சுக்குக்காப்பி குடிக்கலாம். கருப்பட்டி காஃபி குடிக்கலாம். பதனீரை ஆரஞ்சு ஃப்ளேவரில் குடிக்கலாம். ஈனா மீனா டீக்கா குடிக்கலாம். அப்படின்னா என்னவா? போய் குடிச்சு பாருங்க.

சரி சாப்பிட என்ன கிடைக்கும்? அதிரசம் பிடிக்குமா? வாழைப்பத்தோடு சாப்பிடுங்க.  குஷ்பூ இட்லி மட்டும்தானே தெரியும். காக்டெயில் இட்லி சுவைத்துப் பாருங்கள். இங்கே வாழைப்பூ வடை கூட இருக்கிறது. பஜ்ஜி, போண்டா என சகல தமிழ் உணவுகளும் கிடைக்கின்றன. ”டீக்கடை” என்ற ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு. ஒரு கோப்பை தேநீர், உப்பு பிஸ்கெட் அதாங்க சால்ட் பிஸ்கெட். கடல மிட்டாய். ஒரு தினத்தந்தி என கிராமத்து நினைவுகளை கிளறும் உணவுவகைகள். இதிலெல்லாம் தமிழ் மணம் சரி. விலை எப்படி என்று கேட்கறீர்களா? மற்ற காஃபி ஷாப்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான். சென்னை ஃபில்டர் காஃபி 40 ரூபாய். சுக்குக்காஃபி 45 ரூபாய்.

image

மொத்தம் 3 ரூம்கள் இருக்கின்றன. தரையில் அமர்ந்து பேசும்வகையில் ஒன்று, பரமபத தீமில் ஒன்று. இன்னொன்று தெரியவில்லை. ஒரு பெரிய கூடமும் இருக்கிறது. ஒரு வீட்டை டீக்கடையாக மாற்றியிருக்கிறார்கள். நிச்சயம் ஒரு முறை சென்று வரலாம். அடையாறில் இருக்கும் கஃபேயின் முகவரி

25, 2nd Street,
Kamarajar Avenue ,
Adyar, Chennai -20
Phone :044-42116027

கூகிள் மேப்பில் இந்த இடத்திற்கு செல்லும் வழியைக் காண இங்கே க்ளிக்குங்கள்

இதன் நிறுவனர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏதேனும் ஒரு அறையை கரோக்கே பாடும் வகையில் அமைத்தால் நன்றாக இருக்கும். அதுவும் பாராதியார் பாடல்கள், மற்ற தமிழிசைப்பாடல்கள் வைத்தால் ஆஹா… அடுத்த முறை நீங்கள் சென்றால் மறக்காமல் இந்த கோரிக்கையை வைத்துவிட்டு வாருங்கள். பிரதியுபகாரமாக நான் செய்வது “நான் பாட மாட்டேன்” என்ற உறுதிமொழி.

” – அகு

nit-2

Oct 21, 2010

தேவர்களின் ஜொள்ளு

31 கருத்துக்குத்து

 

rain-girl  

நவராத்திரி நாட்களில் சுண்டல் சாப்பிட செல்லும் ஆண்ட்டிகள் வீட்டுக்கு தோழியையும் அழைத்து சென்றேன். எல்லா ஆண்டிகளும் “இந்த பொம்மையை என் கொலுவுக்கு தறியா”ன்னு” ஒரே டார்ச்சர்.

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

   ரியல் எஸ்டேட் செய்யும் நண்பன் ஒருவன் எங்க இடம் வேணும்ன்னு சொல்லு மச்சி என்கிறான். தோழியின் மனதில் என்று சொல்லிவிடலாமா அவனிடம்?

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

எனக்கு தெரிந்தவரை ரேவதிதான் கொள்ளை அழகு என்கிறாள் தோழி. உனக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று சொல்லி மாட்டிக்க நான் என்ன லூசா?

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

   மருத்துவமனை கம்பவுண்டரை கவிதை எழுத வைக்க ஒரே வழி, பிரிஸ்க்ரிப்ஷனில் தோழியின் பெயரை எழுத வைப்பதுதான் என்பது டாக்டருக்கு தெரிந்திருக்கிறது

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

அப்படி என்னதாண்டா என்கிட்ட புடிச்சிருக்கு என்ற தோழியிடம் உன் குரல் என்று சொன்னேன். பேசிக் கொண்டே இருக்கிறாள். இதழ்கள் அல்லது உன் நல்ல மனசு என்று சொல்லியிருக்க வேண்டும்.

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

நான் தெருவில் நடந்தால் மட்டும் மழை வருவது ஏன் என்கிறாள் தோழி. தேவர்களின் ஜொள்ளுக்கு மழை என்று பெயர் சொல்வதை ஏற்றுக் கொள்வாளா தோழி?

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

பேருந்தை விமானம் ஆக்குவது சுலபம். எதிரே தோழியை வர சொன்னாள் போதும். #அப்படியேறெக்கைகட்டிபறக்குறமாதிரிஇருக்கும்

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

தோழியை எப்படியாவது எழுத்தாளார் ஆகுமாறு சொன்னேன். ஏன் என்று விழிகள் விரித்தாள். அவளின் நடை அவ்வளவு அழகானது என்பதை எப்படி சொல்வது?

___________________________________________________________________________________

Oct 19, 2010

பெரிய மனுஷன் ஆயிட்டேனே!

31 கருத்துக்குத்து

 

எப்படி இருக்கிங்க மக்கா? கொஞ்ச நாளா நான் ரொம்ப பிசி.. இன்னும் கொஞ்ச நாள் இப்படித்தான் இருப்பேன்னு நினைக்கிறேன்.  உலகம் சுத்துறுது நின்னுடாது..போய் ஜோலியப் பாரு என்று கமெண்ட்ட போகும் நண்பர்களுக்கு நன்றி

____________________________________________

உலகிலே மிகக் கடினமான விஷயம் எதுவென்று என்னைக் கேட்டால் எளிதில் சொல்லிவிடுவேன், தண்ணியடிக்கும் பழக்கமில்லாத ஒருவன் தண்ணி பார்ட்டிக்கு செல்வது என்று. சிறுவயதில் இருந்தே எனக்கு இந்த நல்லப் பழக்கம் உண்டு. அதாங்க தண்ணியடிக்காமல் இருப்பது. அப்போது எனக்கு 18 வயது(தங்கம்.. உனக்கு இப்பவும் 18 தாண்டா). கல்லூரி நண்பன் ஒருவன் பார்ட்டி தருவதாக சொன்னான். அதுவும் தண்ணி பார்ட்டிடா என்று அழுத்தி சொன்னான். எனக்கு விருப்பமில்லை என்றேன். இன்னொரு நண்பன் தான் சும்மா வந்து வேடிக்கை பாரு மச்சி. கலக்கலா இருக்குமென்று பவர் சோப் போட்டு பிரயின் வாஷ் செய்தான். அதைத் தொடர்ந்து நான் வருவதாகவும் ஆனால் தண்ணியடிக்க சொல்லி தொல்லைப் பண்ணக்கூடாதென்றும் பார்ட்டி தருபவனிடம் சொன்னேன். அது உன் இஷ்டம் மச்சி என்றவனிடம் என்னடா ஸ்பெஷல் என்றேன். ”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா” என்றான்.

     அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைத் தொடர்ந்து பல பார்ட்டிகளுக்கு செல்லத் தொடங்கினேன். ஏ.சி பாரில் அன்லிமிட்டெட் சைட் டிஷ் என்பதால் டின்னரையும் அங்கேயே முடித்து விடுவது என் வாடிக்கையாகிவிட்டது. எவ்வளவு சைட் டிஷ் வைத்தாலும் சில நிமிடங்களில் அரைத்து தள்ளியதால் கிரைண்டர் கார்க்கி என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. இது என்னடா ஃப்ரீயா கொடுக்கிறத சாப்பிட்டா கூடவே ஃப்ரீயா டைட்டிலும் தர்றாங்களேன்னு ஆச்சரியமாக இருந்தது. உண்மையை சொல்லப் போனால் நான் இது போன்ற பார்ட்டிகளுக்கு செல்ல முக்கிய காரணம் சைடு டிஷ் மட்டும் அல்ல. சரக்கு உள்ளே போகும் வரை கந்தசாமியாக இருப்பவன் முதல் கல்ப் அடித்ததும் கம்யூனிஸ்டாக மாறுவான். ஸ்மால் அடித்தவன் சுவாமிகள் ஸ்ரீஸ்ரீ ஆயா பகவானின் லீலைகளை எடுத்துரைப்பான். லார்ஜ் அடித்தவன் இந்தியாவின் லா& ஆர்டர் குறித்து கவலை தெரிவிப்பான். லைட்ஸ் ஆன் சுனிலை மட்டுமே படிப்பவன் என்று நினைக்கும் ப்ரகஸ்பதி தோப்பில் முகமது மீரானைத் தெரியுமா என்று மிரள வைப்பான்.

     இந்த வயதில், அதாங்க 18 வயதில் தண்ணியடிப்பவர்களில் இரண்டு பேராவது காதல் தோல்வியில் இருப்பார்கள். அவர்களின் ஃபீலிங்க்ஸ் கொடுமை சொல்லி மாளாது. நாத்தம் புடிச்ச குப்பைத்தொட்டிக்கு பக்கத்தில் அவளைப் பார்த்ததில் தொடங்கி, அவளது கூந்தல் மணம் வரை மணிக்கணிக்கில் சிலாகிப்பார்கள். தண்ணியடிக்காமல் ஸ்டெடியாக இருக்கும் என்னைப் போன்றவர்கள் தான் அவர்களின் டார்கெட். அந்தக் கதைக்கெல்லாம் பல சமயம் ரிப்பீட் ஆடியன்சாக இருந்த கொடுமையும் நேர்ந்ததுண்டு. இரண்டாம் முறை கேட்கும்போது அந்த கதை நமக்கு தெரியாதது போல் நடிக்க வேண்டும். இல்லையெனில் நாமும் அந்த ஜீலியட்டுக்கு நூல் விட்டதாக நினைத்துக் கொண்டு ரோமியோ நம் மீது பாய்ந்துவிடும் அபாயமுண்டு. கடைசியாக அவர் ஆஃபாயில் போடும் சமயம் வந்ததும் ”விடு மச்சி. உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பொறக்க போறா?” என்ற டயலாக்கோடு நகர்ந்து விட வேண்டும். இல்லையெனில் கறை நல்லது விளம்பரத்தில் நம் கதையும் வந்துவிடக்கூடும்.

      காதல் கதைகள் பெரும்பாலும் சுவாரஸ்யமாக இருந்துவிடுமென்பதால் தப்பித்து விடலாம். ஆனால் தப்பித் தவறி அரசியல் ஆர்வலரிடம் மாட்டிக் கொண்டால் செத்தோம். வட்ட செயலாளரின் தகிடுதத்தத்தில் ஆரம்பிக்கும் பேச்சு பில்கேட்ஸுக்கும் சிதம்பரத்திற்கும் இடையே நடந்த டீலிங் வரை செல்லும். மாட்டையும் மக்களையும் வைத்து கம்யூனிசத்திற்கும் ஃபாஸிஸத்திற்கும் இன்னும் பல இஸத்திற்கும் விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் நம் மூளையில் நெப்போலியன் நர்த்தனம் ஆடத் தொடங்குவார். “உன்கிட்ட ரெண்டு மாடு இருக்கு. ஒன்னை பக்கத்தில் இருக்கிறவன்கிட்ட கொடுத்தா அது சோஷலிசம். ரெண்டு மாடையும் அரசே எடுத்துக்கிட்டு உனக்கு பால மட்டும் ஃப்ரீயா கொடுத்தா அது கம்யூனிஸம். அந்த பாலுக்கு காசு கேட்டா அது ஃபாஸிஸம்.ஒரு மாட்ட வித்து ஒரு காளை மாட்ட நீ வாங்கினா அது கேப்பிட்டிலிஸம்” இப்படி போகும் இஸ ரயிலில்  இருந்து ரன்னிங்கில் இறங்கி வரத் தெரியாதவர்கள் இது போன்ற பார்ட்டிகளுக்கு போகாமல் இருப்பதே உசிதம்.

      ரன்னிங்கில் இறங்கி இந்தப் பக்கம் பார்த்தால் பாபா முத்திரையோடு நித்திரையில் ஆழ்ந்திருப்பார் ஆன்மிக குடிகாரர். தெரியாமல் அவரை எழுப்பிவிட்டால் அவ்வளவுதான். இதெல்லாம் சிற்றின்பம். பதரே பேரின்பம் அவனிடத்தில் உண்டு என மேலே கையை காட்டுவார்கள். ஆனால் அவர் கண்கள் கீழ் நோக்கி இருக்கும். நாம் மேலேதான் பார்க்க வேண்டும். கட்டாயம் ஒரு குரு-சீடன் கதை சொல்வார். நாமும் பயபக்தியுடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஓஷோ தெரியுமா என்றால் ஆம் என்று சொல்லக்கூடாது. தவறி சொல்லிவிட்டால் நீ நினைக்கிற மாதிரியான ஆளில்ல அவரு என்று நம் மனதில் இருப்பதைப் புட்டு புட்டு வைப்பார். இன்பம்-துன்பம்,நல்லது-கெட்டது, ஆசை-ஏமாற்றம் என போகும் பிரசங்கத்தை லாவகமாக முடிக்க தெரிந்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த பிரபஞ்சம் போல அதுவும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கும்,

     குடிக்கும் வரை கோலாகலமாக செல்லும் வைபவம் திரும்பும் வழியில் சொதப்பும். அத்தனை பேரும் பிரச்சினை செய்ய மாட்டார்கள். ஆனால் நிச்சயம் ஒருவன் செய்துவிடுவான். அவனை பத்திரமாக ஹாஸ்டலில் சேர்க்க வேண்டிய தார்மீக கடமை ஓசியில் சைட் டிஷ் சாப்பிட்டவனுக்கே அதிகம். வரும் வழியில் தேமேவென மேமேன்னு கத்திக் கொண்டிருக்கும் ஆட்டிடம் சென்று பேசத் தொடங்குவார் அன்றைய மேன் ஆஃப் தி மேட்ச். ஆட்டை, ராஜ பாளையத்து நாய் என நினைத்து வீரமாக அதன் எதிரில் நின்று பழங்கதைகள் பேசுவார்.”அன்னைக்கு என்ன துரத்துன இல்ல. இப்ப என் மச்சான் கூட இருக்கான். தொரத்து பார்ப்போம்”என அருகிலிருக்கும் ஏதாவது ஒரு மச்சான் மீது கை போட்டுக் கொள்வார். அரைகுறை மப்பில் இருக்கும் மச்சானும் மாப்பிள்ளைக்காக அந்த ஆட்டை மிரட்டுவார். அது மிரண்டு ஓடும். விடாமல் துரத்தி மாப்பிள்ளையின் நன்மதிப்பை பெற்றிடுவார் மச்சான். மறுநாள் ஏண்டா ஆட்டை துரத்தினன்னு யாராவது கேட்டா, மச்சான் அந்த சமயத்துல மட்டன் கேட்டான். கடையெல்லாம் மூடிட்டாங்க. அதுக்காக மச்சான்கிட்ட இல்லைன்னு சொல்ல முடியுமா என்று தயார் செய்து வைத்திருக்கும் புனைவை பிரசுரிப்பார்கள். அவசரப்பட்டு சிரித்துவிட்டால் அடுத்த பார்ட்டியில் காராசேவு கிடைக்காதென்பதால் நானும் வாய் மூடி இருந்துவிடுவேன்.

    இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கால் கிலோ மிக்சருக்கும், வறுத்த கடலைக்கும் நான் பட்ட பாட்டைக் கண்டு எனக்கு வெறுப்பு வந்தது. என்னடா செய்யலாமென்று பல ஆங்கிளில் யோசித்து ஒரு நல்ல நாளில் ஒரு நல்ல முடிவு எடுத்தேன். எடுத்த முடிவின்படி கச்சிதமாக காரியத்தை முடித்த பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று இன்னொரு நண்பனையும் பார்ட்டிக்கு  அழைத்தேன். என்னடா விசேஷம் பார்ட்டியெல்லாம் தர்ற என்றான்.

”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா”என்றேன்

Oct 17, 2010

நாடகம் பார்க்கலாமா?

5 கருத்துக்குத்து

 

  அண்ணன் ஆதி அவர்கள் எழுதிய பதிவு இது. பலரை சென்றடைய என் பங்கிற்கு நானும் அதை பதிவிடுகிறேன். முடிந்தவர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

___________________________________________

அவனுக்கு ஒரு 10 வயதிருக்கும். அவ்வளவு அழகாக இருப்பான். படிப்பில் படு சுட்டி. சோடாபுட்டி கண்களை உருட்டி விழித்து 'கெக்கெக்கெ' என்று அடக்கமுடியாமல் அவன் சிரிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவனால் நடக்க இயலாது, வீல் சேரில்தான் அமர்ந்திருப்பான். பல சமயங்களில் அவனை விளையாட்டுத்திடலில் காணலாம். மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் சேரைக் கைகளால் நகர்த்தி விளையாட்டுத்திடலுக்கு வந்து பிற பிள்ளைகளுடன் பந்து விளையாடிக்கொண்டிருப்பான்.

நான் அங்கு பணியில் சேர்ந்திருந்த சமயத்தில் ஒருநாள், அவன் வீல் சேரில் போய்க்கொண்டிருந்தான். நான் அவனை கடந்து போகும் போது, "சார் சார், கிளாஸுக்கு டைமாயிடுச்சு.. என்னை கிளாஸில் விட்டுடுங்க சார்.. ப்ளீஸ்" என்றான். நானும் அவனது வீல் சேரைத் தள்ளிக்கொண்டு வகுப்பறை நோக்கிப் போனேன். கிளாஸை அடையும் முன்பே காரிடாரில் எதிரே நிறுவனத் தலைவர் வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். பக்கத்தில் நெருங்கியதும் அவர் அவனை நோக்கி சற்று கோபத்துடன், "குமரா, வாட் இஸ் திஸ்.?" என்றார்.

நான் விழித்துக்கொண்டிருக்க, குமரன் கூலாக பதிலளித்தான், "நான் வேண்டாம்னு சொன்னேன் சார். இந்த சார்தான் கேட்கலை, நானே கிளாஸ்ல விடறேன்னு சொல்லி தள்ளிக்கொண்டு வருகிறார்.". அவரது கோபம் என் மீது திரும்பியது, ‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுப் போய்விட்டார். முதலில் அதிர்ச்சியடைந்தாலும் இந்த நிகழ்ச்சியும், அவனது குறும்பும் என்னால் மறக்கமுடியாத ஒன்று.

அங்கு பள்ளி, இல்லம், உணவு விடுதி, உள்ளேயே இருந்த விளையாட்டுத்திடல் என மாற்றத்திறன் கொண்ட பிள்ளைகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருப்பார்கள். தாங்குகட்டைகள், காலிபர்கள், மூன்று சக்கரசைக்கிள்கள், வீல்சேர்கள் என கருவிகள் உதவியோடு அவர்கள் இயங்குவார்கள். சிலர் அதையும் பயன்படுத்தமுடியாமல் இன்னும் மோசமான நிலையிலும் இருப்பார்கள். நல்ல நிலையில் உள்ள குழந்தைகளும், சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அவர்களுடன் எப்படிப் பழக கற்பிக்கப்படுகிறார்கள் என்றும் ஒருவருக்கொருவர் எந்தச்சூழலில் எவ்வாறான உதவிகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் அனுபவத்தாலறிந்தேன். நாளடைவில் அவர்களது நிஜமான தேவை என்ன என்பது புரியத்துவங்கியது. அந்தக் குழந்தைகளில் பலரோடு அவர்களது விளையாட்டு நேரங்களில் நட்புடன் பழகத்துவங்கினேன். அது ஓர் அனுபவம்.

அந்த அனுபவத்தை எனக்குத் தந்தது அமர் சேவா சங்கம்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆய்குடி கிராமத்தில் இருக்கும் இந்த 'அமர்சேவா சங்கம்' மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 30ம் தேதி மாலை 6.30க்கு சென்னை, ராணி சீதை ஹாலில் கிரேஸிமோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா' நாடக நிகழ்வு நிகழவிருக்கிறது.

என்னைக் கண்டித்த அந்நிறுவனத்தலைவர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்.

அவர் உலகின் அபூர்வ உடல் பிரச்சினைகளில் ஒன்றான தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் (Paraplegic). தலையைத் தவிர உடலின் வேறு எந்த அங்கமும் வேலை செய்யாது. 1986ல் இந்தியாவின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்நிறுவனத்திலிருந்து வெளிவந்த பின்னும், இன்றும் அவரது அன்புக்கு பாத்திரமானவனாக நான் இருப்பதில் எனக்கு எப்போதும் ஒரு கர்வம் உண்டு. சங்கம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்விக்கூடம், இல்லம் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி போன்ற பல விஷயங்களில் ஈடுபட்டுவருகிறது. சங்கத்தின் நம்பகத்தன்மைக்கு நானே சாட்சி. மேல் விபரங்கள் தேவையெனில் சொல்லத் தயாராக இருக்கிறேன். இந்த இணையத்தளத்தையும் நாடலாம். https://www.amarseva.org/

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான கொஞ்சம் டிக்கெட்டுகளை விற்கும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.

Rs.250 - Rose - 3rd Class

Rs.500 - Jasmine - 2nd Class

Rs.1000 - Lotus - 1st Class

டிக்கெட்டுகளுக்காக மட்டுமின்றி விருப்பமிருப்பவர்கள் சிறிய, பெரிய தொகைகளை நன்கொடைகளாகவும் அனுப்பலாம். நிகழ்ச்சி நிகழ்வதால் இந்நேரத்தில் Rs. 5000க்கு மேல் அனுப்புவர்கள் 3 Lotus டிக்கெட்டுகளை பரிசாகப் பெறலாம். Rs. 10000க்கு மேல் அனுப்புபவர்கள் ஒரு விஐபி பாஸ் உட்பட மேலும் சில Lotus டிக்கெட்டுகளைப் பெறலாம். வாய்ப்பு இருப்பவர்களிடமிருந்து லட்சங்களில் நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.

நிகழ்ச்சிக்காகவோ/ அல்லது நிகழ்ச்சிக்காக அல்லாமலோ நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் பணம் அனுப்பவேண்டிய வங்கி எண் : 612901093918. இது அமர்சேவாசங்கத்தின் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண்ணாகும்.


செக்/டிடியாகவும் அனுப்பலாம் (in favour of Amar Seva Sangam payable at Chennai). அவற்றை அனுப்பவேண்டிய முகவரி : Amar Seva Sangam, No. 1, First Street, Lakshmipuram, Royapettah.Chennai 600 014. Phone No. 044-28114035 24618666

மேற்கண்ட வழிகளில் பணம் அனுப்பியவர்கள் உடனே sumathi.srini@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரில் டாக்டர். சுமதியைத் தொடர்பு கொண்டு பணம் அனுப்பிய விபரங்களைக் கூறி, டிக்கெட்டுகளுக்கான முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள். மெயிலில் உங்கள் முகவரியையும் தெளிவாக குறிப்பிடுங்கள். தயவுசெய்து அந்த மெயில் அனுப்பும் போது நிர்வாக வசதிக்காக mail@amarseva.org என்ற முகவரிக்கும், தகவலுக்காக thaamiraa@gmail.com என்ற எனது முகவரிக்கும் காப்பி (CC) அனுப்ப மறக்காதீர்கள்.

அனுப்பியவர்களுக்கான டிக்கெட்டுகள் மற்றும் ரசீதுடன் அக்.30 மாலை 4 மணி முதல் ராணிசீதை ஹாலில் நான் காத்துக்கொண்டிருப்பேன். நிகழ்ச்சிக்கான விருப்பமிருப்பவர்கள், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவேண்டியிருப்பதால் 25ம் தேதிக்கு முன்னர் விரைந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சிக்காக அல்லாமல் பணம் அனுப்ப விரும்புபவர்கள் காலக்கெடுவின்றி எப்போதும் அனுப்பலாம்.

சுசியக்கா வாழ்க…வாழ்க..

9 கருத்துக்குத்து

 

  இன்று பிறந்த நாள் காணும் நார்வே நாட்டு நாசராணி, அட ரைமிங்கா வந்துடுச்சுங்க.. நார்வே நாட்டு மகாராணி சுசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..


  இன்று போல் என்றும் 35வது பிறந்த நாளே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

___________________________________________________________________________________

அவரின் ஃபேவரிட் பதிவொன்று..

எல்லாரும் நலமா மக்களே!
ஓகே. அப்டீன்னா அப்டியே பதினேழாம் தேதி வெள்ளிக் கிழமைய நோக்கி ரிவர்ஸ்ல வாங்க.

   வந்திட்டீங்களா? இப்போ மணி நாலு முப்பது. பொட்டிய மூடி வச்சிட்டு வீட்டுக்கு கிளம்பறேன். கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் கழிச்சு வீட்டு முன்னாடி வண்டிய நிறுத்தி ரிமோட் எடுத்து garage கதவ திறக்கிறேன். ஒரு வழியா லாரிய நண்பர்கள் எங்க வண்டிக்கு வச்ச செல்லப் பெயர் உள்ள ஏத்தினதும்தான் ஞாபகம் வந்திச்சு. அடடா நாளைக்கு barbecue party க்கு நண்பர்கள கூப்ட்ருந்தோம், எதுவும் வாங்கலையேன்னு. சரி இப்பவே அதையும் முடிச்சிரலாம்னு ரிவர்ஸ போட்டு பின்னாடி எடுத்.. டமார் படார்னு கலவையா ஆனா பயங்கரமா ஒரு சவுண்டு. சுருக்கமா #"@#$%^&*@#$$%!@#$%^&*இப்டி.
ஒண்ணும் இல்லீங்க உள்ள வந்ததுமே வழக்கம்போல ரிமோட்ட அழுத்திட்டேன். கதவு அதுங் கடமைய செய்றதுக்காக மூட ஆரம்பிச்சிருக்கு. நான் ரிவர்ஸ்ல வர்றேன்னு அதுக்கு தெரியுமா என்ன! உடனடி நடவடிக்கையா ரிமோட்ட மறுபடி அழுத்தினதால லாக் ஆகி கதவு நின்னிடுச்சி. நல்லவேள ஸ்டெப்னிக்குள்ள கதவு மாட்டிக் கிட்டதால சேதாரம் கொஞ்சம் கம்மி. மிட்சுபிஷி பஜீரோ இப்போ பிஞ்சரோ ஆய்டிச்சு. சம்பவ நேரம் குணாவும் பசங்களும் வீட்ல இல்ல. இவ்ளோ பெரிய சமாசாரத்த சூ மந்த்ரகாளி போட்டா மறைக்க முடியும்? வந்ததும் குணா பாத்திட்டாரு. கதவுதான் மறுபடி மூட மாட்டாம நிக்குதே.கேள்வி நம்பர் ஒண்ணு.ஏய் என்னடி ஆச்சு? அது வந்துப்பான்னு ஆரம்பிக்கும்போதே கேள்வி நம்பர் ரெண்டு நெனப்ப எங்க வச்சிட்டு வந்தே? ..................................................................................................................... இருங்க, குணா திட்டும்போது சுசி எதுவும் பேச மாட்டா. அவர் திட்ற டைம்ல நாம நெனப்ப நான் எங்க வச்சேன்னு பாத்திர்லாம். 15 min. ரிவர்ஸ்ல வாங்க.

   புறப்படறதுக்கு சற்று முன் அக்கா கிட்ட இருந்து ஒரு மின்னஞ்சல். மவளே இன்னிக்கும் நீ எனக்கு கால் பண்ணலன்னு வச்சுக்கோன்னு ஆரம்பிச்சுதங்கச்சீங்கிரதினால கெட்ட வார்த்தை எதுவும் போடலை எக்கச்சக்கமா எழுதி இருந்தா. கட்டாயம் கால் பண்ணனும்னு நெனச்சேன். படிச்ச பதிவுக்கெல்லாம் மறக்காம பின்னூட்டம் போட்டேனான்னு நினச்சேன். அப்போ பாத்து Byonce Knowels பாடின Halo ப்ளே ஆச்சா அப்புறம் எந்த நினைவும் இல்ல. எத்தன வாட்டி சொல்றது பாட்ட போட்டுக் கிட்டு டிரைவ் பண்ணாதேன்னு. அது அலறலேன்னா இசை ரசிகர்கள் குணாவை மன்னிக்கட்டும் கதவு மூடுற சத்தம் கேட்டிருக்கும் இல்ல. சின்னதா ஒரு பாயின்ட் இருக்குதோ?
நான் ஏன் குணா திட்டும்போது கம்னு இருக்கேன்னு நீங்க கேக்கலேன்னாலும் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?

  கேட்டுக்குங்க. ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு அவர் சந்தோஷப்படுவார். ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப்ஆயிடுவார். மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு எனக்கும் ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

   இவ்ளவுக்கும் சுசி ஸ்டேடியாதான் இருந்தா. கடைசீல ஒண்ணு சொன்னார் பாருங்க. அப்போதான் லைட்டா கண்ல தூசி. மத்தபடி தப்பு பண்ணினா சுசி அழமாட்டா. லண்டன் போம்போது நகைக்கடைக்கு போணும்னு சொல்லிட்டிருந்தே இல்ல ன்னு மனச் சாட்சியே இல்லாம சொல்லிட்டாரு. ரெண்டு நாளா நான் அவர்கூட பேசல. நீங்க நினைக்கிறாப்லையே அவர் ஓவர் நிம்மதியா இருக்காரேன்னுட்டு மறுபடி பேச ஆரம்பிச்சிட்டேன். அதுவும் இன்னைக்கு பன்றிக் காய்ச்சலோட அறிகுறி என்னன்னு பன்றிக்கறி சாப்டுக் கிட்டே அவர் கேட்டப்போ நான் சொன்ன பதிலோட லைஃப் பழைய ஃப்ளோல போக ஆரம்பிச்சிடிச்சு.

  அப்டியே நீங்க நிம்மதியா இருக்கிறதா பதிவாண்டவர் சொன்னாரா அதான் மனசு கேக்கலை. என் பதிவ போட்டுட்டன்.வரட்டுமா உறவுகளே!

Oct 15, 2010

பிளாகர் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்

19 கருத்துக்குத்து

 

சில மாதங்கள் முன்பு நடந்த காமெடி இது.பப்லுவின் தமிழாசிரியை குடியரசு தின விழாவைப் பற்றி ஐந்து வரிகள் எழுதி வர சொல்லியிருந்தார்கள் .  பிளாகுல எல்லாம் எழுதறியே. அதான் மிஸ்கிட்ட எங்க மாமா நல்லா எழுதுவாருன்னு சொன்னேன். எழுதிக் கொடு என்றான் நானும் வெகு ஜோராக ஆரம்பித்தேன் ”இந்தியா 1950 ,ஜனவரி 26ஆம் தேதி குடியரசானது” அப்புறம்? எவ்ளோ யோசிச்சும் அடுத்த வரி வரவில்லை. என்னடா என்பது போல் பார்த்தான் பப்லு.  இருடா செல்லம் என  அலைபேசி சித்தருக்கு அலைபேசினேன். அந்த உரையாடல்

ஹலோ

சொல்லு சகா. பிரச்சினை முடிஞ்சுதா?

இருங்க. இது வேற மேட்டர் (மேட்டர் விளக்கப்படுகிறது)

இவ்ளோதானா? எழுதிக்கோ சகா “இன்றோடு இந்தியா குடியரசாகி 60 ஆண்டுகள் ஆகின்றன”. ………….

அப்புறம் சகா…

அப்புறம் என்ன சகா? வீட்டுல எல்லாம் செளக்கியமா?

யோவ். குடியரசு தினம் பற்றி…

இரு சகா. என் நண்பர் ஒருத்தர்.. நல்லா சொல்லுவார் (கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்)

ஹலோ செளந்தர். நான் $%^& பேசறேன். குடியரசு தினத்தைப் பத்தி ஒரு அஞ்சு லைன் வேணும். கார்க்கி தெரியும்ல? லைன்லதான் இருக்காரு

அப்படியா? நல்லா இருக்கிங்களா சகா?

ஆங். இருக்கேன். சொல்ல்லுங்க எழுதிக்கிறேன்

இப்பவேவா? நாளைக்கு சொல்லவா?

டொக்.

நான் என்ன ஆனந்த விகடனில் போடவா கேட்டேன்? மீண்டும் நானும் அலைபேசி சித்தரும் தொடர்ந்தோம். இரு சகா கூகிளில் தேடலாமென்றார். சரியென்றேன்

குடியரசு தினத்தைப் பற்றி…(கூகிளாண்டவர் கருணை காட்டுகிறார்)

சகா சொல்றேன் எழுதிக்கோ

இருங்க. பேனா எடுக்கிறேன்.ம்ம்

“தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப காந்திஜி முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர். அந்த நாள் தான் பிறகு குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது”  இந்த மேட்டர் சேர்த்து அஞ்சு வரி எழுதலாமே சகா.

(எழுதும்போதே பப்லுவின் பால் கலர், சிவப்பாக மாறியதை நான் கவனிக்கவில்லை )

ஆமாம். போதும். ரொம்ப டேங்க்ஸூங்க

அட இதுல என்ன. சரி. நாளைக்கு என்ன போஸ்ட்.

இனிமேல்தான் யோசிக்கனும்.

டொக்.

வைத்த பின் தான் படித்துப் பார்த்தேன், பிரக்ஞை என்பது போன்ற வார்த்தைகள் குறித்த பிரக்ஞை எனக்கே இல்லாத பப்லு என்ன செய்வான்? அந்த பேப்பரைக் காட்டு என்றான். இல்லடா நான் வேற எழுதறேன்னு அடுத்த கால் போட்டேன் சிரிப்பு பதிவருக்கு. அவர் பி.ஏ ஹிஸ்டரி.

சொல்லு தோஸ்த்

(மேட்டர் இவருக்கும் விளக்கப்படுகிறது)

இதெல்லாம் என்னை கேட்கனும். %^&* க்கு என்ன தெரியும்? நான் ஹிஸ்டரி ஸ்டூடண்ட் தெரியுமில்ல?

நீ ஸ்டூண்டட்டா இருந்த ஹிஸ்டரி எனக்குத் தெரியும். ஆனா.

டேய். பப்லுக்காக சொல்றேன்.1947ல சுதந்திரம் வாங்கினோமா?அப்புறமா அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்டம் இயற்ற ஒரு குழு அமைச்சாங்க. அந்த குழு இப்ப இருக்கிற குழு மாதிரி பஜ்ஜி போண்டா சாப்பிடமா ரெண்டு வருஷத்தில ரெடி பண்ணிட்டாங்க. அந்த நாள் தான் குடியசுதினம்.

இதுவா பப்லுவுக்கு சொன்னது? எப்படி தோஸ்த் அஞ்சு வரில?

அது உன் வேலை. எனக்கு வேற வேலை இருக்கு

டொக்.

மீண்டும் பப்லு. மீண்டும் சிவப்பு. மீண்டும் ஃபோன் எடுக்க போனவனைத் தடுத்தான். நீ ஆணியே புடுங்க வேணாம், நான் பார்த்துக்கிறேன். நீ போய் பிளாகுல மொக்கைப் போடு என்றான். என் பின்னால் சுற்றி வந்த ஒளிவட்டம் மெல்ல மறைந்து கொண்டிருந்தது.

அது சரி. நம்ம வேலை அதானே என்று இதோ இந்த மொக்கையை எழுதுகிறேன். யோசிச்சுப் பாருங்க. எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Oct 13, 2010

ராஜாங்கமே..ஆனந்தமே

30 கருத்துக்குத்து

 

இளையராஜா சொன்னது இது.  “கடவுளைப் பற்றி நாம் பாடியா அவன் புகழ் ஓங்க போகிறது?. இறைவன் அதையெல்லாம் தாண்டியவன். இறைவனை புகழ்ந்து நான் பாடுவது என் ஆத்ம திருப்திக்காக”. அதையேதான் நானும் சொல்கிறேன். நானெல்லாம் ராஜாவின் இசையைப் பற்றி எழுதி என்னவாக போகிறது? இது என் திருப்திக்காக.

ஒவ்வொரு இசை ரசிகனுக்கும் நிச்சயம் ராஜாவின் பாடல்களில் சிறந்தது என்றே 20 பாடலாவது இருக்கும். எனது வரிசையில் முக்கியமான பாடல் கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பெற்ற “கற்பூர பொம்மை ஒன்று”.  காலையில் கேட்க காவியம் பாடவா தென்றலே, இரவில் கேட்க நிலாவே வா என ரகம் பிரிப்பதுண்டு. எந்த நேரத்திலும் கேட்கலாம் என்று நினைக்க வைக்கும் பாடல்களில் பிரதானமானது இந்தப் பாடல். “ம்ம்ம்ம்ம்” என்று தொடங்கும் சுசீலாவின் குரல் புற உலகின் அழுத்தங்களை மறந்து இப்பாடலில் முழுமையாக லயிக்க நம்மை தயார் செய்து விடுகிறது.

கற்பூர பொம்மை ஒன்று..கை வீசும் தென்றல் ஒன்று

தூறலாய் தொடங்கும் மழை மெல்ல அதிகரிப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். இசையோடு இரண்டற கலந்து விடுகிறது வரிகளும், சுசிலாவின் குரலும். பல்லவியின் முடிவில் ஆரம்பமாகிறது குழலின் ஓசை. குழல் முடியும் இடத்தில் அதிர்கிறது வயலின்களின் தந்திகள். இசைக்கருவிகளோடு ராஜா நடத்தும் ராஜாங்கத்தின் முடிவில் பாடகியின் கையில் தரப்படுகிறது இசை ஜோதி. லாவகமாய் ஏந்தி நடை போடுகிறார்.

பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்

சரணத்தின் முடிவில் ஒரு வரி பல்லவி மட்டும் வருகிறது. அடுத்து ராஜாவின் அதகளம். இந்த முறை வயலினுக்கு முன்னுரிமை. வயலினின் முடிவில் குழல். கடைசியில் வயலினும், குழலும் இணைந்து மனதை பிசைந்துவிட்டு ஓய்கின்றன. பாடல் முடிவை நோக்கி நகரும் வேளையில் அணிச்சையாக கண்களின் ஓரம் கண்ணீர் வரத்தான் செய்கிறது. எந்த இடத்தில் மனம் கனக்கிறது. எந்த வரியில் அணை உடைகிறது என்று கண்டுபிடிக்கவே முடிவதில்லை.  எத்தனை முறை கேட்டாலும் கண்ணீரின் வரத்து மட்டும் நிற்பதே இல்லை.

நான் ஒரு தாயும் இல்லை. எனக்கு மகளும் இல்லை. என்னை ஏன் இந்தப் பாடல் இப்படி வதைக்க வேண்டும்? சில நேரம் பெருமைப்படுத்த வேண்டும்? சில நேரம் அழ வைக்க வேண்டும்? கடவுளின் இருப்பைப் போல இந்த பாடலின் உணர்வுகளும் எனக்கு என்னை மீறிய ஒரு சக்தியாகத்தான் தெரிகிறது. இந்தப் பாடலை சமீபகாலமாக நான் அடிக்கடி கேட்பதற்கு காரணமாக நான் ஒருவரை நினைக்கிறேன். எந்த வகையில் அவர் காரணம் என என்னை நானே பல தடவை கேட்டதுண்டு. கடவுளைப் போல, இந்தப் பாடலைப் போல அதுவும் மர்மமாகவேத்தான் இருக்கிறது.

படம் : கேளடி கண்மனி
பாடியவர் : பி.சுசீலா
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : மு.மேத்தா


கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....


பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

Oct 11, 2010

மொக்கைவர்மன்

14 கருத்துக்குத்து

 

  மொக்கைவர்மன் என்று ஒரு தொடர் ஆரம்பித்தேன். ஏனோ பாதியில் நின்றுவிட்டது. தொடரலாம் என்று படித்து பார்த்தபோது இந்த முதல் அத்தியாயம் மட்டுமே சுமாராக இருந்ததாக தோன்றியது. மீண்டும் உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்

____________________________________________________________________________

 

ஆந்தைகள் அலறும் நேரம்தான். ஆனால் பல்லவ அரசின் சமஸ்தான எல்லைக்குள் இருக்கும் ஆந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கும். இருப்பினும் அவை எழுப்பும் குறட்டை சத்தம் அலறுவதை விட கர்ணக்கொடூரமாக இருக்குமென்பதால் அந்த ஒலியின் மூலம் நாம் நள்ளிரவு என்பதை அறியலாம். இருபத்து ஏழரையாம் நக்கல் வர்ம மகாராஜா வாயிலில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். 28ஆம் நக்கல் வர்மனாகத்தான் இவர் பெயர் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவரது அண்ணன் 27ஆம் நையாண்டி வர்மன் சிறிது காலம் அரசாண்டு விட்டு ஒரு போருக்கு பயந்து ஓடியதால் இவர் பதவியேற்றார். பாதியில் பதவியேற்றதால் இருபத்து ஏழரையாம் நக்கல் வர்ம மகாராஜா ஆகிவிட்டார். வாயிலுக்கு வருவோம். அது அலர்ஜி என்பவர்கள் காட்டனுக்கோ, சில்க்குக்கோ வரலாம்.ஆனால் நான் வாயிலுக்குத்தான் செல்கிறேன்.

மன்னரின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன. பல்லவ சமஸ்தானத்தை அவ்வபோது எதிரிகள் சூழ்ந்து கொண்டு போருக்கு அழைக்கும்போது கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிடுவது மன்னரின் வழக்கம்.அப்படியாகத்தான் மன்னரின் முகத்திலும் ரேகைகள் வந்திருக்ககூடுமென சீனாவில் இருந்து வந்த ஷியோமியோகியோ என்ற பிரயாணி தனது குறிப்பில் சொல்லியிருக்கிறார். வரலாறு என்பதால் தேவைப்படும் இடங்களில் ஆதாரத்தையும் காட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படி குறிப்பிடும் ஆதாரத்தை நம்பாமல் அந்த ஆதாரத்திற்கு ஆதாரத்தை நீங்கள் கேட்கக்கூடும்.அப்படி கேட்பவர்களுக்கு ஆவென அலறும்படி தாரம் அமையுமென சாபம் விடுகிறேன். விஷயத்திற்கு வருவோம். 72வது வயதில் மகாராணி(அவருக்கு 54 வயது) கர்ப்பமுற்றால் எந்த மன்னருக்குத்தான் பயம் தோன்றாது? இருந்தாலும் நாற்பத்தியெட்டு ஏக்கருக்கு பரந்த விரிந்த சம்ஸ்தானத்தை ஆள ஒரு ஆள் தேவையென்பதால் மன்னர் அதை லூஸில் விட்டுவிட்டார். பிறக்க போவதே ஒரு லூஸ் என்பது முன்னரே மன்னருக்கு தெரிந்ததா என்பது தெரியவில்லை.  ஆனால் புதிதாக பணியில் சேர்ந்த ஜோசிய அப்ரண்ட்டிஸின் மூளையின் ஒரு மூலையில் மும்தாஜ் மூடிக் கொண்டு ஆடியது.

மாமன்னா! பிறக்கப் போகும் குழந்தை தங்களைப் போல் இல்லாமல் அரசியைப் போல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று சமயோஜித புத்தியே இல்லாமல் கேட்டு வைத்தார் அப்ரண்ட்டீஸ்.

ஹாஹாஹாவென சிரித்த மன்னரின் மகா சிரிப்பில் அரண்மனை ஆந்தைகளே சற்று பயந்துதான் போனது. எழுபத்தி இரண்டு வயதில் கூட இப்படி சிரிக்கும் மன்னன் இன்னும் பத்து வருடம் கழித்தும் இளவரசனோ இளவரசியோ பெற்றெடுக்கக்கூடுமென நினைத்தார் அப்ரண்ட்டீஸ். மன்னரை விட மகாராணி வீரமானவர். இது தெரியாமல் கேட்டு வைத்தார் அப்ரண்ட்டீஸ்.

மன்னர் மகாராணியை மணந்த கதை சுவையானது. ஏற்கனவே சொன்னது போல் சரித்திரத் தொடரில் இது ஒரு இம்சை.(உன் தொடரே இம்சை என்பவர்களுக்கு வைத்துக் கொள்கிறேன் கச்சேரியை). எல்லாவாற்றிற்கும் டொய்ங்க் என சுத்தி ஒரு ஒளிப்பின்னாடியையோ(அதாங்க ஃப்ளாஷ்பேக்) அல்லது ஆதாரத்தையோ காட்ட வேண்டும். இப்போது டொய்ங்ங்.

   பல்லவ எல்லை மட்டுமல்ல, எட்டுத்திக்கும் இருந்து வந்த பல வீரர்களால் அடக்க முடியாத காளை ஒன்று மகாராணியாரின் தந்தையிடம் இருந்தது. அதை அடக்கித்தான் மகாராணியாரை மணந்தார் மன்னன். அந்தக் காளையை அடக்கும் வீரனால் தான் இந்த அடங்காப் பிடறியை அடக்க முடியும் என்று அவர் தந்தை நினைத்தது மன்னருக்குத் தெரியாமல் போனது அவரது துரதிர்ஷடவசம்தான். அதனால் பிறக்கப் போகும் குழந்தை அவரைப் போல் இருக்கக்கூடாது என்பதற்காக அதற்கு தேவையான பூஜைகளை உடனே அப்ரண்டீசை செய்ய சொன்னார் மன்னர். கடந்த காலம் முடிந்து நிகழ்காலம் வந்த போது டொய்ங்க் என சக்கரத்தை ரிவர்ஸில் சுற்ற மறந்துவிட்டேன். இது போன்ற லாஜிக்கெல்லாம் விஜய் படம் பார்க்கும் ரசிகர்கள் போல மறந்துவிடுவது நலம். அதைவிட்டு ஈரானிய படத்தில் என்று துவங்கும் வாசகர்கள் மதனின் வந்தார்கள் வென்றார்களை படிக்கலாம். அல்லது படிக்காமலே ஒரு விமர்சனம் எழுதலாம். விஜய் பட ரசிகர்கள் என் கைகளை பிடித்துக் கொள்ளுங்கள். நாம் இப்போது அரசி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழையப் போகிறோம்.

உள்ளே வலியால் துடித்துக் கொண்டிருந்தார் அரசி. அந்த சத்தம் கேட்டு உள்ளே வந்த மன்னன் வைத்தியம் பார்க்கும் பாட்டியிடம் விசாரித்தார். இரட்டைப் பிள்ளை போல் தெரிகிறது. இந்த வயதிலும் எப்படி அரசே என்று கேட்டார் பாட்டி. வழக்கம் போல் மன்னர் சிரித்துவிட்டு பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். மன்னரின் சிரிப்புக் கேட்ட உள்ளே ஓடிவந்த தலைமை மந்திரி நிலவரம் புரியாமல் வழக்கம் போல் ”அவர் எனர்ஜி மன்னா” என்று சொன்னார்

இதைக்  கேட்டு உள்ளே இருந்த அனைத்து வைத்தியரும் தாதியரும் சிரித்த சிரிப்பு விண்ணையே பிளந்திருக்க வேண்டும். மேற்புறம் கூரை இருந்ததால் அப்படியெதுவும் ஆகவில்லை. மந்திரி சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கிறது என வலி மறந்து சிரித்த அரசியும் சிறிது நேரத்தில் அலற, அறையில் இருந்த அனைவரும் மெளனமானார்கள். ஆனால் ஒரே ஒரு சிரிப்பு சத்தம் மட்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அப்போதுதான் அரசிக்கும் பிரசவம் ஆனது. குழந்தை அழுது கொண்டே பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தக் குழந்தை  சிரித்துக் கொண்டேயிருந்தது. ரோஜாப்பூ நீரில் குளித்து முடித்த இளவரசர் மன்னரின் கைக்கு வந்தார். பிறக்கும் போதே சிரித்த உனக்கு மொக்கை வர்மன் என்ற பெயரே பொருத்தமானது. இது போன்று யாரும் இதுவரை பிறக்காததால் ”முதலாம் மொக்கை வர்ம பல்லவன்” என அழைக்கப்படுவாய் என்றார் மன்னர். குழந்தையை மேலே தூக்கிப் போட்டு விளையாடிய மன்னர் கூடவே தனது ட்ரேட்மார்க் சிரிப்பையும் உதிர்க்க, டென்ஷனான இளவரசர் மன்னரின் முகத்தில் நீர்ப்பாசனம் செய்தார். இனிப்புக்கு பதில் தவறுதலாக உப்புப் போட்டு அரசி போடும் கொட்டைவடிநீர் என நினைத்து சப்புக் கொட்டிய மன்னனின் முகத்தில் காலால் ஒரு டிஷ்யும் விட்ட நம் கதாவேந்தர்  தனக்கு பெரிய தலைவலியாக வருவார் என்பதை மன்னர் அப்போது அறியவில்லை.

Oct 8, 2010

தோழி அப்டேட்ஸ் = Honey Updates

25 கருத்துக்குத்து

 

  மீன் குழம்பை மட்டும் தோழியை ஊட்ட சொல்லவேக் கூடாது. நல்ல காரமான குழம்பையும் பாயாசமாக்கி விடுகிறாள்

________________________________________________________________________________

உன் காதல் எனக்கு மிக அதிகம் என்றேன் தோழியிடம்.சிரித்தவள் என்ன செய்யலாம் என்றாள்.இதுதான் சரியான் நேரம். அவள் தங்கையின் காதல் சரியாக இருக்குமென்று சொல்லிவிட வேண்டும்

________________________________________________________________________________

தம்மடிடா தம்மடிடா என்று நச்சரித்த தோழியை திட்டி விட்டேன். சமாதானப்படுத்த ஃபோன் செய்தால் “நான் உன்ன முத்’தம் தானே அடிக்க சொன்னேன்” என்று சிரிக்கிறாள்.

________________________________________________________________________________

   மொபைலில் இருந்து சில நேரம் ட்விட்டுவதால் தோழி அப்டேட்ஸ் ஆங்கிலத்தில் எழுத வேண்டியிருக்கிறது. அதற்கு Honey updates என்று பெயரிட்ட இளாவிற்கு நன்றி. இதோ சில சேம்பிள்கள்.

Honey loves apple. Thats why i dint do medicine. (An apple a day keeps doctor away)

Honey said that she will give me an english kiss, if i speak english without a mistake. Now i am planning to learn french

My darling asked me to buy dabur company. Reason is she doesn't want others to say "Dabur honey". She is always "karki honey"

Honey said that she is 1 and i am 0. When i am divided by her, we will get love. That is infinity. #kanakku..pandra..karki

Plz dont ask me why i wear glass nowadays. My honey always wants a mirror in front of her.

i said"My future is bright,beautiful,divine&i can see it right away.My angel asked "HOW"?Plz sumone tell her dat she is my future

Oct 6, 2010

எந்திரன் – எவ்ளோ ரன்?

33 கருத்துக்குத்து

 

enthiran-robo-hq-new-stills-tb003

அம்மன் கோவில் திருவிழாவில் அவ்வளவு அழகாக அம்மனை ஜோடித்திருப்பார்கள். அதைப் பார்ப்பதற்கே கூட்டம் சேரும். எல்லா பக்தர்களின் கண்களும். எப்போது திறக்கும். எப்போது கடவுளை தரிசிக்கலாம் என்று கதவை நோக்கியே இருக்கும்போது, பின்னாலிருந்து கடவுளின் குரல் கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் நிஜமாகவே கடவுள் வந்து பேசினால்? இந்த உற்சாகத்தை சென்ற வெள்ளியன்று சத்யம் திரையரங்கில் உணர்ந்தேன். எப்போது எந்திரன் தொடங்கும் என்ற ஆர்வத்தோடு வெள்ளித்திரையையே வெறித்துக் கொண்டிருந்த நேரம், திடிரென அனைவரும் பின்னால் திரும்பி பார்த்தனர். யாரோ வி.ஐ.பி வந்திருக்கிறார் போலும் என்று நினைத்து நானும் திரும்பினேன். அங்கே “சூப்பர் ஸ்டார்”.

அந்த மனநிலையில் படம் பார்த்துவிட்டு வந்து எழுதினால் சரியாக வருமா? வசீகரனைப் பற்றி எழுதுவதை விட ரஜினிகாந்த்தை பற்றியே அதிகம் எழுத நேரிடும் என்பதால் இரண்டாம் முறை பார்த்துவிட்டு எழுதலாம் என்று நினைத்தேன். முதல் முறை அதிர்ஷ்டவசமாக சத்யம் டிக்கெட் ஒன்றே ஒன்றென கிடைத்தது. இரண்டாம் முறை மாயாஜாலில். தயவு செய்து யாரும் இனிமேல் மாயாஜால் பக்கம் போய்விடாதீர். பாடாவதி திரை, நசுங்கி போன இருக்கைகள். டெண்ட் கொட்டாய்க்கு 320 ரூபாயாம். இனி படம் பற்றிய என் பார்வை.

   சுஜாதா சிறுகதை எழுதுவது எப்படி என்று சில முக்கிய விஷயங்களை சொல்லி இருக்கிறார். “வெள்ளிக்கம்பி போல் அருவி விழுந்துக் கொண்டிருந்தது. பறவைகள்…” என்று நீட்டி முழுக்குவது காலாவாதியான உத்தி. முதல் வரியிலே கதை தொடங்கிவிட வேண்டும். இதையே திரைக்கதைக்கும் சொல்கிறார். அவரின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் சொல்லும் முக்கியமான விதி ”முதல் 10 நிமிடங்களில் கதை எதை நோக்கி செல்கிறது என்பது பார்வையாளனுக்கு சொல்லப்பட வேண்டும்” என்கிறார். எந்திரனின் முதல் 5 நிமிட காட்சிகள்.. சாட்சாத் சுஜாதாவேதான். இசை வெளியீட்டு விழாவிலே அவரை நினைவுக் கூராமல் விட்டது ஏதோ செய்தது. படத்தின் கிரெடிட்டிலும் வசனத்தில் மட்டும் போட்டது இன்னொரு உறுத்தல். அதனால் என்ன? எல்லா காட்சிகளிலும் வாழ்கிறார் வாத்யார். இது சுஜாதா எழுதியதுதான் என்று பலரும் சொல்லியிருக்கும் சில வசனங்கள் அவர் எழுதவில்லை. அந்த வகையில் குறை தெரியாமல் பார்த்துக் கொண்டதற்கு ஷங்கர் & கோவிற்கு பாராட்டுகள்.

ஒரு விஞ்ஞான சோதனைக் கூடம். முதல் சீனில் ஒரு ரோபோ நடந்து செல்கிறது. விஞ்ஞானியான ரஜினியிடம் சனா தந்ததாக தருகிறது. அலட்சியப்படுத்திவிட்டு வேலையை தொடர்கிறார் அவர். அடுத்து ரோபோ அங்கே வேலை செய்யும் உதவியாளர்களுக்கு தண்ணீர் தருகிறது. அவர்கள் யார் என்பதை அவர்களே சொல்கிறார்கள். அது எந்த மாதிரியான ஆய்வுக்கூடம், அந்த மூவரும் யார் என்பது எல்லாம் தெளிவாக சொல்லப்படுகிறது. அடுத்த காட்சியில் ஐஷ்வர்யா வருகிறார். அவர் வசீகரனை காதலிப்பதும், ஆராய்ச்சி பணியில் சனாவை கண்டுக்கொள்ளாமல் விடுவதும் பிரச்சினையை துவக்குகிறது. பின் சமாதானப்படுத்தி ஒரு டூயட்டில் காதலைப் புதுப்பித்துக் கொள்கிறார் வசீகரன்.  அங்கே நிமிர்ந்து உட்காரும் நம்மை இடைவேளை வரை சிரிக்க வைக்கிறார். பிரமிக்கை வைக்கிறார். பாடவைக்கிறார்.ஆட வைக்கிறார். யார் ஷங்கரா என்கிறீர்களா? ஷங்கரின் ரோபோ. ரோபோவை அது இது என்றழைக்கலாம் தான். ஆனால் சிட்டி என்கிற ரோபோ சமைக்கிறது. சண்டை போடுகிறது. முத்தம் வாங்குகிறது. பிரசவமே பார்க்கிறது. அதனால் சிட்டியை “றார்” என்றழைக்கலாம்.

ஒரு ஸ்மூத் டேக் ஆஃப் ஆகும் எந்திரன், இரண்டாம் பாதியில் தடுமாறியிருப்பது வருத்தம்தான். 4 பாடல்கள், ரிப்பீட் அடிக்கும் காட்சிகள் என சற்று தொய்வாகும் படத்தை கடைசி 20 நிமிட கிராஃபிக்ஸ் கலாட்டா காப்பாற்றி விடுகிறது. சிட்டி ரோபோ அலெக்ஸ் பாண்டியன் ஸ்டைல் ரோபோவாக மாறிய பின் ராக்கெட் வேகத்தில் திரைக்கதை பயணித்து க்ளைமேக்ஸை நெருங்கியிருந்தால் பின்னியிருக்கும்., இன்னும் கொஞ்ச நேரம் அந்த ரஜினியை பார்த்திருக்கலாம் என்ற ஏக்கத்தோடு அரங்கை விட்டு வந்திருக்கலாம். ஆனால் ஸ்லோ மோஷன் காட்சிகளால் புஸ்ஸாகி போகிறது. இருந்தாலும் அந்த “ம்மே காட்சி” போதும், நினைத்து நினைத்து சிரிப்பதற்கு.

இடைவேளை முடிந்த பின் வரும் முதல் காட்சியை காணத் தவறாதீர்கள். சிட்டி, ஸ்லீப்பிங் மோடில் போகும் போது சனா தந்த முத்தம் நினைவுக்கு வர, தனது கண்கள் வழியாக சனாவின் வீடியோவை ஒளிபரப்புகிறார். அப்போது ரஜினியின் முகத்தில் தெரியும் உணர்வுகள்…உஸ்ஸ்ஸ்.. இந்த வயதிலும் ரொமாண்ட்டிக்கான ஒரு பார்வையை அவரைத் தவிர யாராலும் தர முடியாது. அதே காதலின் தீபம் ரஜினி. அதே போல் ரோபொவில் சில தவறான புரொகிராமை வில்லன் சேர்த்து விட, வேறு மாதிரியாக மாறுகிறது. அந்த காட்சியில் ரஜினியின் சிரிப்பும், வில்லத்தனமும் டாப் கிளாஸ்.

  தொழில்நுட்பம் உலகத்தரம் என்கிறார்கள். ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ் என்பதில் வேண்டுமென்றால் அப்படி சொல்லலாம். ஆனால் இசை அப்படி கேட்கவில்லை எனக்கு. அதே போல் வில்லனின் உதடசைவு பொருந்தவில்லை. அவருக்கு தமிழ் தெரியாததால் பபுல் கம்மை மென்றிருப்பார் என்றும் சொல்ல முடியாது. அவர் பேசும் ஆங்கில வசனங்கள் கூட பொருந்தவில்லை. டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது. படத்தின் முதல் 20 நிமிடங்களில் ரஜினியின் உதடசைவு கூட பொருந்தாத மாதிரியே எனக்கு தோன்றியது. எடிட்டிங்கும் ஒன்றும் பிரமாதம் போல் எனக்கு தெரியவில்லை. கிளிமாஞ்சாரோ பாடலும், அதன் லீடும் படத்தின் தொய்வுக்கு பிரதானமான காரணம் என்பது என் கருத்து. எல்லாவற்றிர்க்கும் சேர்த்து கலக்கிய மனிதர் ரத்னவேலு.

  என்ன நக்கலா என்ற டிராஃபிக்கின் கேள்விக்கு “இல்லை நிக்கல். எல்லா போல்ட்டும் நிக்கல்ல செஞ்சது”. இது மதன் கார்க்கியின் வசனம் என நினைக்கிறேன். இது போல பல இடங்கள் யார் எழுதியிருப்பார் என்று யூகிக்க வைப்பது சுவாரஸ்யம். படம் முடியும்போது ரோபோ சொல்லும் வசனம் “காதல் வந்தா மனுஷனுக்கு நட்டு கழண்டிடும் சொல்றது சரிதான்”. சொல்லிக்கொண்டே தனது நட்டு ஒன்றை கழட்டும் இடம் நச். அதே போல வில்லன் ரோபோவிடம் ஏடாகூடமாய் பேச அழகாய் பதில் தருகிறது சிட்டி “நீ என்ன பொல்யூட் பண்ற”. டிரெயிலரில் புகழ்பெற்ற வசனம்

“You cant do this chitti. உன்னை உருவாக்கினவன் நான். இதுக்கு பேருதான் துரோகம்”

“You can do this vasi.உன் ஆராய்ச்சிக்காக காதலை விட்டுக்கொடுக்கலாம். இதுக்கு பேருதான் தியாகம்”

இது போல ஆங்காங்கே பளிச் தெறிக்கிறது வசனங்கள். சுஜாதா-ஷங்கர்-கார்க்கி. எந்த வசனம் யார் எழுதியது என எப்படி கண்டுபிடிப்பது?

பாடல்கள் கேட்கும்போது இருந்த உற்சாகம் திரையில் ஏனோ குறைவாகவே தெரிகிறது. முதல் பாடலே மெலடியாக இருந்தது சற்று டெம்போவை குறைக்கிறது. அதே போல் கிளிமாஞ்சாரோவின் பிளேஸ்மெண்ட்டும், அதன் லீடும் எரிச்சல். அரிமா அரிமா க்ளைமேக்ஸை நோக்கி ஓடும் குதிரைக்கு கடிவாளம். சரியான சிச்சுவேஷன் பாடல் என்றால் இரும்பிலே ஒரு இருதயம் தான். தனிப்பாடலாக கேட்கும்போது இருந்த சுவாரஸ்யத்தை விட படத்தில் பார்க்கும் போது அர்த்ததுடன் ஒலிக்கிறது. அப்பாடலின் முடிவில் ஐஷ்வர்யா ஒரு சிவப்பு நிற ஆடையில் ஆடும் ஆட்டம், ஆட்டம் பாம்.  பூம் பூம் ரோபோ இன்னும் ரிச்சாக எடுத்திருப்பார்கள் என்றெண்ணினேன். “ஆட்டோ ஆட்டோக்காரா. கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராஃபுக்கா” என்ற வரிகளை காட்சிப்படுத்தியதில் இருக்கிறது ஷங்கரின் புத்திசாலித்தனம். அழகான ஓவியம் அது. அதே போல காதல் அணுக்கள் பாடலில் “நீ நியுட்டனின் விதியா” என்ற வரிகளில் ரஜினி ஆப்பிளை கீழே போடுவதும், “காதலில் நேரமும் இளைத்துவிட்டதோ” என்ற வரிகளில் Hour Glssஐ காட்டியதும் சுவாரஸ்யம். ஆனால் மொத்தமாக இதில் ஷங்கரின் மேஜிக்கல் பாடல்கள் சற்று சறுக்கல்தான்.

இது எப்படி கமலுக்கு செட் ஆகும்? ஷாருக்கா! நோ வே.  அஜித்தெல்லாம் நடிச்சிருந்தா அவ்ளோதான்.. அரங்கின் வெளியே பலரும் பேசிய வார்த்தைகள் இவைதான். சூப்பர்ஸ்டாருக்காக ஸ்க்ரிப்ட் மாற்றப்பட்டதா? இல்லை ஸ்க்ரிப்ட்டை தன் வசமாக்கினரா ரஜினி என்பது மில்லியன் டாலர் கேள்வி. எந்த அமளியும் இல்லாமல் ரஜினி அறிமுகம் ஆகும்போது இது ரஜினி படம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் படம் முடிவதற்குள் ஒரு முழுமையான ரஜினி படம் பார்த்த திருப்தி வருகிறது. வசீ, சிட்டி, வில்லன் ரோபோவென மூன்று முகத்தில் முன்னூறு மார்க்கையும் ஸ்கோர் செய்கிறார் சூப்பர்ஸ்டார்.

மொத்ததில் நம்ம ஊர் மசாலாவில் கொஞ்சம் டெக்னிக்கல் மிரட்டல்கள் தந்து, அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தியதற்கு நிச்சயம் ஷங்கரையும், எந்திரனையும் கைத்தட்டி வரவேற்கலாம். விஷுவல் எஃபெக்ட்ஸ் பற்றி யோசித்த சமயத்தில் சற்று திரைக்கதைக்கும் அழுத்தம் தந்திருந்தால் எங்கேயோ போயிருப்பான் எந்திரன்.

ரஜினி  - என்றும் இந்திரன் + ஷங்கர் – சினிமா மந்திரன் + சன் பிக்சர்ஸ் – வியாபார தந்திரன்

=

எந்திரன்

டாட்.

 

all rights reserved to www.karkibava.com