Aug 30, 2010

தமிழ் சினிமா


 

ஹாலிவுட்டிற்கு இணையான/ சவால் விடும் தரத்தில் இருக்கும்.

மேலே சொன்ன வார்த்தைகளை அட்சரம் பிசகாமலும், அல்லது அதே அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளாலும் நாம் அடிக்கடி கேட்டதுண்டுதான். தமிழ் சினிமா இயக்குனர்கள் ஹாலிவுட் படங்களின் சிடிக்களை பார்த்து படமெடுத்தால் அதுவும் உலகத்தரம் என்று நினைப்பது வாடிக்கை. அல்லது வேடிக்கை. ஆனால் நிஜமாகவே தமிழ் சினிமாவின் சில துறைகள் உலகத்தரத்தில் மிளிரத்தான் செய்கிறது. அவை பெரும்பாலும் தொழிநுட்பம் சார்ந்த கலைஞர்களின் கைவண்ணமாக இருக்கிறது.

இன்றைய தமிழ் சினிமாவில் மிகச் சிறந்து விளங்கும் துறையென்றால் ஒளிப்பதிவை சொல்லலாம். பாலு மகேந்திரா, பிசி.ஸ்ரீராமில் ஆரம்பித்து ரவி.கே.சந்திரன்,ராம்ஜி, பாலசுப்ரமணியம், ரத்னவேலு, நீரவ் ஷா, ரவிவர்மன், மணிகண்டன், திரு என நீளும் பட்டியல் மனோஜ் பரமஹம்சா வரை செல்கிறது. ராவணன் போன்று கண்டெண்ட்டில் மோசமான படங்களில் கூட ஒளிப்பதிவாளர்களின் உழைப்பு அசாத்தியமானது. அதன் அழகை, நேர்த்தியை திரையில் வெகுவாக ரசிக்க முடிகிறது. இந்திய சினிமாவின் ஆகப் பெரிய இண்டஸ்ட்ரியான பாலிவுட்டில் கூட தமிழ் ஒளிப்பதிவாளர்களின் ராஜ்ஜியமே தற்போது நடக்கிறது.

இதற்கு அடுத்து இசையை சொல்லலாம். ஆனால் இளையராஜா, ரகுமானிற்கு பிறகு உலகத்தரத்தில் யாரும் வரவில்லையென்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஹாரீஸ் ஜெயராஜும், யுவனும் அதற்கு தகுதியானவர்கள் என்றாலும் அப்பட்டமான காப்பிகள் மூலம் அத்தகுதியை இழக்கிறார்கள். இருந்தாலும் இந்த இரண்டு மேதைகள் வாழும் வரை எவ்வளவு தரமான படமென்றாலும் அதற்கேற்ற இசையை எதிர்பார்க்கலாம். இந்தியா முழுவதும் தேடினாலும் இந்த இரண்டு லெஜென்ட்களுக்கு இணையான சமகால இசையமைப்பாளர்களை கண்டுபிடிப்பது சாத்தியமற்ற ஒன்று.

இசை என்னும் போது பாடலாசிரியர்களையும் வசனகர்த்தாக்களையும் பார்த்துவிடலாம். சுஹாசினி எல்லாம் ஞாபகம் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வந்துவிட்டார். நா.முத்துக்குமாரை சொல்வேன். இன்னும் பல புதுப்புது பாடலாசிரியர்கள் நன்றாக எழுதினாலும் தொடர்ச்சியாக 7, 8 வருடங்கள் தரமான பாடல்கள் எழுதி வரும் ஒரே நபர் அவர்தான். பழைய ஆட்களை விட்டுவிடுவோம். வாலியும், வைரமுத்துவும் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்பட்டியலில். அதே போல இப்போது வசனத்தில் விளையாடும் ஜெயமோகன், பாஸ்கர் சக்தியை சொல்லலாம். நான் கடவுளின் வசனம் குறிப்பிடத்தக்கது. இவர்கள் திறமையில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இன்னும் பல படங்கள் வந்த பின்னே தான் சொல்ல முடியும்.

நமது இயக்குனர்களை இந்த வரிசையில் சேர்க்க தயக்கமாகத்தான் இருக்கிறது. மேக்கிங் என்றவகையில் மணிரத்னம், ஷங்கர் போன்ற ஒரு சிலரை சேர்க்கலாம் என்றாலும் கதை, திரைக்கதை அடிப்படையில் இருவரையும் விலக்க வேண்டியிருக்கிறது. அமீர் போன்ற இயக்குனர்கள் யோகி போன்ற பாடாவதி படங்களையும், ஜெராக்ஸ் காப்பி உருவல்களையும்  கொடுக்காமல் இருந்தால் பருத்தி வீரன், ராம் என்ற இரண்டு படங்களுக்காகவே சேர்க்கலாம். வெறும் டைரக்‌ஷன் மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். கதை, திரைக்கதை வேறு துறை என்ற ஹாலிவுட் இலக்கணத்தை காட்டுவீர்களேயானல் ஷங்கர் வரக்கூடும். ஏன்? கே.எஸ்.ரவிக்குமாரைக் கூட அதில் சேர்க்கலாம். தசாவாதாரத்தை அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேறு யாரால் முடியும்? கூட்டி கழித்து பார்த்தால் கடைசியில் பாலா என்ற ஒருவரைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

கடைசியாக நடிப்பு. உலகத்தரத்தில் அல்ல, இந்திய அளவில் கூட நம் நாயகர்களில் கமலைத் தவிர யாரும் தெரியவில்லை. நிச்சயம் ரஜினி தகுதிக்குரியவர் தான். ஆனால் அதற்கான முயற்சியை அவர் எடுக்கவில்லை. விக்ரமை சொல்லலாம்.அவ்வளவுதான். ஆனால் இந்த ஹீரோக்களைத் தாண்டி நடிப்பின் மூலம் வெற்றி பெறுபவர்கள் குணசித்திர நடிகர்கள்தான். சொல்லப்போனால் இந்தப் பதிவை நான் தொடங்கியது ஜெயப்பிரகாஷ் என்ற நடிகரைப் பற்றி எழுதத்தான். அப்போதுதான் இது போன்று வேடங்களில் தற்போது கலக்கி வரும் பிரபு, பிரகாஷ்ராஜ், டெல்லி கணேஷ் போன்ற குணசித்திர நடிகர்கள் நினைவுக்கு வந்தார்கள். தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்கள் என்று பட்டியலிட்டு பார்த்த போது சிவாஜி, கமல் என்ற இரண்டு ஹீரோக்களைத் தவிர மற்ற அனைவரும் கேரக்டர் ஆர்டிஸ்ட்தான். ரங்காராவ்,எம்.ஆர். ராதா, மனோரமாவில் தொடங்கி ஜெயபிரகாஷ் வரை சொல்லலாம். இனி ஜெயபிரகாஷைப் பற்றி ஒரிரு பத்தியுடன் நிறைவு செய்து கொள்ளலாம்.

சமீபத்தில் வெளிவந்த வம்சம், நான் மகான் அல்ல படங்களை காணும் வாய்ப்பு கிட்டியது. வம்சம் படத்தில் ஜெயபிரகாஷிற்கு வில்லன் வேடம். கண்களில் குரோதம் கொப்பளிக்க மனிதர் நடக்கும் போதே பதட்டம் தொற்றிக் கொள்கிறது பார்வையாளனுக்கு. சிரிப்பில் கூட விஷம் கலந்து சிரிக்கிறார். பட்டை சாராயமும், பன்னிக்கறியும்(இது பற்றி மேலதிகக தகவலுக்கும், தேவதை தரிசனத்திற்கும் உடனே வம்சம் பார்க்கவும்) சாப்பிட மனிதனின் உடலிலுள்ள எல்லா திசுக்களும் நாட்டியம் ஆடுகின்றன. இயல்பான உடல் மொழியும், இம்மியளவும் அதிகமாகாத முகபாவனைகளும் அனாவசியமாக வருகிறது ஜெயபிரகாஷிற்கு. வம்சம் படம் உங்களை ஈர்த்திருந்தால் சந்தேகமேயில்லாமல் அதன் பெரும்பங்கு இவருடையதாகத்தான் இருக்கும்.

vamsammovie030710_51

வம்சம் பாத்திரத்திற்கு நேர் எதிர் பாத்திரத்தை நான் மகான் அல்ல படத்தில் ஏற்றிருக்கிறார். கால் டேக்ஸி ஓட்டுனராக வருகிறார்.  ஆசைக்கு ஒரு பொண்ணு ஆஸ்திக்கு ஒரு பையன், அதுக்கு ஒரு மனைவி. காலையில் நாலு இட்லி புதினா சட்னி, வாடகைக்கு வீடென கச்சிதமான லோயர் மிடில் கிளாஸ் குடும்பம் ஒன்றின் தலைவன். தன்னால் அனுபவிக்க முடியாமல் போனதை மகனின் மூலம் தீர்த்துக் கொள்ளும் தந்தை அவர். ஒரு காட்சியில் நாயகியிடம் தனது மகனைப் பற்றி சொல்லும்போது  “அவன் அப்படியே என் ஜெராக்ஸ்” என்பார். ஒரு சில நொடிகளே வரும் அக்காட்சியில் ஒரு ஆத்ம திருப்தியையும், சந்தோஷத்தையும் மிரட்டலாக காட்டி நடித்திருப்பார். அதே போல அவர் இறக்கும் காட்சியையும் சொல்லலாம். மொத்தத்தில் தமிழ் சினிமாவிற்கு ஒரு அற்புதமான நடிகர் கிடைத்திருக்கிறார். பிரகாஷ் ராஜையும், சாயாஜி ஷிண்டேயையும் வீணடித்தது போல இவரையும் சீக்கிரம் டெம்ப்ளேட் நடிகராக்கமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி: இப்பதிவில் ஜெயபிரகாஷ் பற்றி எழுதத்தான் ஆரம்பித்தேன். வேறு சில தகவல்கள் அதிகம் ஆகிவிட்டது. இதில் இருக்கும் கருத்தெல்லாம் என் கருத்துகளே. பிரகாஷ் ராஜ் எல்லாம் ஒரு நடிகனா? ரகுமான் மட்டும் காப்பியே அடிக்கலையா என்பது போன்ற விவாதங்களுக்காக எழுதப்பட்டதல்ல.

என்னைக் கவர்ந்த தமிழ் சினிமா குணசித்திர நடிகர்கள்:

ரங்காராவ், எம்.ஆர்.ராதா, மனோரமா, நாகேஷ், டெல்லி கணேஷ், பிரகாஷ்ராஜ், நாசர், பிரபு, பீலிசிவம், கிஷோர், ஜெயபிரகாஷ், தேங்காய் சீனிவாசன், பூவிலங்கு மோகன், மோகன் ராம், எஸ்.பி.பி.. இன்னும் பலர்.

38 கருத்துக்குத்து:

M.G.ரவிக்குமார்™..., on August 30, 2010 at 11:38 PM said...

சூப்பர் சகா!.......ஜெயப்பிரகாஷின் நடிப்பைப் போலவே அவரைப் பற்றிய அளவான,கச்சிதமான எழுத்து!...இதை ஜெயப்பிரகாஷ் அவர்களும் படிக்க வேண்டும்!...

கனவுகள் விற்பவன் on August 31, 2010 at 12:03 AM said...

"பசங்க" படத்த விட்டுடீங்களே...அதுவும் நல்லா பண்ணிருப்பாரு...

மதுரை சரவணன் on August 31, 2010 at 12:05 AM said...

நல்லவிதமான விமர்சனம்... தொடருங்கள் வாழ்த்துக்கள்

Cable Sankar on August 31, 2010 at 12:20 AM said...

எனக்கு தெரிந்து சமீப காலத்தில் மிக வெர்சடைலாக கேரக்டர்கள் ஏற்று நடித்துக் கொண்டிருப்பவர் ஜெயப்பிரகாஷ்.. இவர் ஒரு தயாரிப்பாளர். ஜி.ஜே பிலிம்ஸ் என்கிற பெயரில் நிறைய படஙக்ளை தயாரித்தவர்.

புதிய மனிதா on August 31, 2010 at 12:52 AM said...

அட நமக்கும் இது தெரியும் ஆனால் பதிவாய் போட தோனலையே என நினைக்கவைத்த அசத்தல் பதிவு கார்கி அண்ணா...

புதிய மனிதா on August 31, 2010 at 12:59 AM said...

i added in ur follower list......

சுரேகா.. on August 31, 2010 at 1:10 AM said...

நடிகரான தயாரிப்பாளர்..! பாத்திரம் உணர்ந்து பின்னி எடுக்கும் பக்குவம் உள்ளவர் பற்றி எழுதி...பின்னி எடுத்திருக்கீங்க சகா!

சுசி on August 31, 2010 at 1:16 AM said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க கார்க்கி.

ஒன்றோட ஒன்று தொடர்பா கொண்டு வந்து எதிர்பாராத விதமா ஜெயப்பிரகாஷ் நடிப்பு பத்தி சொன்ன விதம் நல்லா இருக்கு.

// அதுவும் உலகத்தரம் என்று நினைப்பது வாடிக்கை. அல்லது வேடிக்கை. //
// தேவதை தரிசனத்திற்கும் //

அங்கங்க உங்க டச் :))))

// இவரையும் சீக்கிரம் டெம்ப்ளேட் நடிகராக்கமாறு கேட்டுக் கொள்கிறேன்//

கண்டிப்பா ஆக்கிடுவாங்க :((((

king on August 31, 2010 at 1:46 AM said...

seriousa eluthuna kooda thevathai darisana matter vuda maateengalappa neenga :)

ஆதிமூலகிருஷ்ணன் on August 31, 2010 at 2:40 AM said...

அவசர கோலத்தில் எழுதப்பட்ட பதிவு.

ஜெயப்பிரகாஷ் திறமையானவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Saravana Kumar MSK on August 31, 2010 at 2:53 AM said...

ஜெயபிரகாஷ் பற்றி நானும் இரண்டுவார்த்தையாவது எழுதணும்ன்னு நெனச்சிட்டு இருந்தேன்.. வம்சம், நா.ம.அ பார்த்த பின்.. நீங்க எழுதிட்டீங்க... :))

குறிப்பா வம்சம் இவர் இல்லைனா, படம் பார்ப்பது ரொம்ப கடினம்.

Saravana Kumar MSK on August 31, 2010 at 2:55 AM said...

//Cable Sankar said...

எனக்கு தெரிந்து சமீப காலத்தில் மிக வெர்சடைலாக கேரக்டர்கள் ஏற்று நடித்துக் கொண்டிருப்பவர் ஜெயப்பிரகாஷ்.. இவர் ஒரு தயாரிப்பாளர். ஜி.ஜே பிலிம்ஸ் என்கிற பெயரில் நிறைய படஙக்ளை தயாரித்தவர்.//

இந்த தகவல் புதிது.. என்னென்ன படங்களை தயாரித்து இருக்கிறார்..?? ஏதாவது படம் பேரு சொல்லுங்க..

நாய்க்குட்டி மனசு on August 31, 2010 at 8:05 AM said...

ரொம்ப சீரியஸ் ஆக எழுதப்பட்ட பதிவு போலிருக்கேன்னு நினைக்கும் போதே "அதுக்கு ஒரு மனைவி. " அது தானே குறும்பு இல்லாம கார்க்கியா ?

Anbu on August 31, 2010 at 9:43 AM said...

எல்லாமே ஓ.கே தான் அண்ணா.. (பசங்க படம் மறந்துட்டீங்களா..)

ஆனால் நடிப்பில்...

விக்ரமிற்கு அடுத்தாவது சூர்யாவை சொல்லி இருக்கலாம்..

சரி விடுங்க...

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலீங்ஸ்....

Mohamed Faaique on August 31, 2010 at 9:45 AM said...

நாசர் ரொம்ப நல்ல நடிகர்.

Sriakila on August 31, 2010 at 9:52 AM said...

ஜெயப்பிரகாஷ் எனக்கும் மிகவும் பிடித்த நடிகர். 'பசங்க' படத்திலேயே அவருடைய நடிப்பு அபாரமாக இருந்தது. அடுத்தடுத்தப் படங்களில் மெருகேறிக் கொண்டே இருக்கிறார். 'நான் மகான் அல்ல' படத்தில் இவரைப் போன்ற அப்பா, நமக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது அவருடைய நடிப்பு.

நல்லப் பதிவு!

பிரியமுடன் பிரபு on August 31, 2010 at 10:14 AM said...

"பசங்க" படத்த விட்டுடீங்களே...அதுவும் நல்லா பண்ணிருப்பாரு...

சேரனின் மாயகண்ணடிதான் அவரின் முதல் படம் என நினைக்கிறேன் , இன்னும் பார்க்கலாம்

taaru on August 31, 2010 at 10:20 AM said...

இந்த லிஸ்ட்ல இன்னும் கொஞ்சம் பேர். ஜெய்கணேஷ்,ரவி [நிழல்கள்],கிஷோர், ராதா ரவி, ஹனிபா, ரகுவரன், வடிவுக்கரசி,விக்ரம் அப்பா,...இன்னும் நீளும்..

//(இது பற்றி மேலதிகக தகவலுக்கும், தேவதை தரிசனத்திற்கும் உடனே வம்சம் பார்க்கவும்)///
தானைத் தலைவி,தங்கத் தலைவி வாழ்க... என்னாஞ்சே, இங்க வாஞ்சே... கார்க்கி வந்துருக்காக வான்ஞ்சே...

கார்க்கி on August 31, 2010 at 10:25 AM said...

நன்றி ரவி.

கனவுகள், நான் பசங்க படம் பார்க்கவில்லை.

நன்று சரவணன்

ஆமாம் கேபிள். உஙக்ளை அழைத்து மேலதிக தகவல் பெற நினைத்தேன். ஆனால் பதிவு தடம் மாறி போனதால் விட்டுவிட்டேன் :)

நன்றி புதிய மனிதா

நன்றி சுரேகா..

சுசி, ஹிஹிஹி.. நன்றி

கிங், அவளின்றி ஒரு அணுவும் அசையாது :)

ஆதி, இருக்கலாம் சகா. நன்றி

MSK, நன்றி. GJ cinemas என்ர பெயரில் செல்லமே,காக்கி போன்ற பல படங்கள் தயாரித்திருக்கிறார்கள்

நாய்க்குட்டி, அதை கூட எடுக்கவிருந்தேன். நல்ல வேளை :)

அன்பு, சூர்யா திறமையான நடிகர். சந்தேகமேயில்லை. ஆனால் கமல், விக்ரம் அளவிற்கு இன்னும் வரணும்.

நன்றி முகமது

நன்றி அகிலா. உண்மைதான்

taaru, பாருங்க. ரகுவரனையே விட்டுருக்கிறேன்.! ஜெய்கணேஷ், ஹனீவா ஓக்கே. நிழல்கள் ரவி,ராதாரவி எல்லாம் மொக்கை. கிஷோர் என் பட்டியலில் இருக்கிறாரே

நர்சிம் on August 31, 2010 at 11:09 AM said...

அவர் நடிப்பைப் பார்க்கும் பொழுது என்னோடு படம் பார்த்துக்கொண்டிருந்தவரிடம் இவரைப்பற்றி நான் சொன்ன கருத்து கிட்டத்தட்ட இதேதான் சகா..

மிக நல்ல பகிர்வு.

நிவாஸ் on August 31, 2010 at 11:13 AM said...

சிவாஜி, கமல் தவிர இன்னும் யாரும் வரல
விக்ரம், சூர்யா வுக்கு அந்த தகுதிகள் இருக்கு

சகா, தயரிப்பாளர விட்டுட்டீங்களே சகா

ஜில்தண்ணி - யோகேஷ் on August 31, 2010 at 1:36 PM said...

இசையில் யுவன் இன்னும் நிறைய முயற்சிகள் செய்தால் தான் நிலையான இடம் பிடிக்க முடியும் :)

அப்பரம் ஜெயபிரகாஷ் அவர்களை பசங்க படத்துல வாத்தியாரா பாத்தேன் :)

எல்லா கேரக்டர்ளையும் சர்வ சாதாரணமாக செய்றார் வியப்பா இருக்கு :)

விக்ரமும் சூர்யாவும் கண்டிப்பா வருவாங்கன்னு எதிர்பாப்போம்

யுவகிருஷ்ணா on August 31, 2010 at 1:47 PM said...

// “அவன் அப்படியே என் ஜெராக்ஸ்” //

இதை சொல்லும்போது ஜெயப்பிரகாஷின் கண்களை பார்க்க வேண்டும். World class acting.

vinu on August 31, 2010 at 2:37 PM said...

namma raguvarnai vittuteengalea saga

Karthik on August 31, 2010 at 3:12 PM said...

இந்த மாதிரி லிஸ்ட் போடுபோது நடக்கறதுதான்.

ஆனா மேக்கிங்ல சிறந்தவர்கள்னு மணியையும், ஷங்கரையும் ஒரே மூச்சில் சொல்றது அநியாயம். மௌனராகத்தையும் பாய்ஸையும் பிரிச்சுப் பார்க்கலைனா விட்ருங்க.

செல்வராகவனை எப்படி விட்டீங்க? அவர் எடுக்கறது வாந்திங்கறீங்களா?

எல்லாத்துக்கும் மேல தமிழ்ல உண்மையிலேயே ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுப்பவர் அண்ணன் 'அஜித் எனக்கு தேவையில்லை' புகழ் கௌதம் வாசுதேவ மேனன் மட்டுமே. ;)

Karthik on August 31, 2010 at 3:15 PM said...

i second vinu. raguvaran was a fantastic actor. and nasser too. :)

கார்க்கி on August 31, 2010 at 3:29 PM said...

நர்சிம் நன்றி

நிவாஸ், யார சொல்றீங்க தயாரிப்பாளர்னு?

ஜில்தண்ணி, விக்ரமாவது பரவாயில்லை. மொக்கைப் படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் வருஷக்கணக்கா உழைக்கிறாரு. சினிமா மீதான அவர் காதல் மதிக்கப்பட வேண்டியது. ஆனால் சூர்யா அப்படியில்லை. சிங்கமும், ஆதவனையும் விரும்பி செய்கிறார். பாலாவின் படத்தில் நடிக்க மறுக்கிறார். அவருக்கு மாஸ் ஹீரோ ஆசை இருக்கிறது. ஆனாலும் அவர் திறமையான நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

உண்மைதான் லக்கி. நல்ல நடிகர்.

கார்த்திக், மணியையும் ஷங்கரையும், ஒரே தராசில் வைக்கவில்லை. இருவரும் அவரவர் பாணியில் சிறந்தவர்கள். நிச்சயம் ஷங்கர் மேக்கிங்கில் கில்லாடி. இருவரின் குறையும் கதைதான். சுஜாதா சொன்னது “சிறந்த திரைக்கதை இன்று கிடைத்தால் மணியால நிச்சயம் உண்மையான உலக சினிமா கொடுக்க முடியும்”. மணியின் மாஸ்டர் பீஸ் மெலனராகத்தையும் ஷ்ங்கரின் மிக மோசமான படத்தையும் ஒப்பிடும் போதே தெரிந்துவிட்டது, நீ மணியின் தீவிர ரசிகனென்று :)))

செல்வராகவனை எனக்கு காதல் கொண்டேன், புதுப்பேட்டையில் பிடித்தது. இப்பட்டியலில் இட்ம பெற 2 படங்கள் போதாது. அதனால் சொல்லவில்லை. நேலும் இனிமேல் அவரிடம் இருந்து நல்ல படம் வருவது கஷ்டம் என பட்சி சொல்கிறது.

தயவு செய்து கெளதமை இதில் சேர்க்க வேண்டாம். அவர் மேக்கிங் கிளாஸ்தான். ஆனால் மொக்கை.

நாசர் பெயர் லிஸ்டில் இருக்கிறது. ரகுவரம் எப்படி மிஸ் செய்தென் என்று தெரியவிலையென பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன்.

எல்லாவற்ரையும் விட இது என் பார்வை. அவரவர்க்கு பிடித்த கலைஞர்கள் இருப்பார்கள். இதில் விவாதமாக பார்க்க வேண்டியது எந்த துறை உயர்ந்திருக்கிறது என்றுதான். ஆட்களை உஙக்ள் தேர்விற்கே விட்டுவிடுகிறேன்

vanila on August 31, 2010 at 3:45 PM said...

மெலனராகம் .. தெலுங்குப்படமா ?..

R Gopi on August 31, 2010 at 3:58 PM said...

ரொம்ப சீரியஸ் பதிவு. அதனால அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கறேன்

Bhupesh Balan on August 31, 2010 at 5:11 PM said...

இயக்குனர் வரிசையில் மிஷ்கினை விட்டு விட்டீர்களே கார்க்கி!!!

தமிழ்ப்பறவை on August 31, 2010 at 7:37 PM said...

தலைவரே ‘மௌனராகம்’ கிளாசிக்கல் மேக்கிங்னா....’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்ன லோக்கல் படமா?
‘மவுன ராகத்தில்’ இருக்கும் கமர்ஷியல் அயிட்டம் இல்லாமல் இருக்கலாம் அதில். ஆனால் மூலம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ அல்லவா?
’நெஞ்சத்தைக் கிள்ளாதே’,’உதிரிப் பூக்கள்’மகேந்திரனை விட்டு விட்டீர்களே..
என்ன அவரால் படபூஜைக்குக் கொடுக்கிற காசுலயே படத்தை முடிச்சிட முடியும். அதான் அவ்ரோட குறை.
உங்களோட உலகத் தரத்துக்கு அளவுகோல் ‘பிரமாண்டமும்’, ஆஸ்கரும்தானா?
மற்ற படி இப்பதிவின் நோக்கம் ஜெயப்பிரகாஷ் என்பதால் வாழ்த்திக் கொள்கிறேன். அவரப் பத்தி ஸ்பெஷலாச் சொல்றதுக்குக் கூட வார்த்தை இல்லை. மனிதர் அவ்வளவு இயல்பு.

கார்க்கி on August 31, 2010 at 7:42 PM said...

வாநிலா, ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்கிற்கு என்னா வில்லத்தனம்?

வாங்க கோபி

பூபேஷ், நந்தலாலா பார்த்துட்டு சொல்வோம். அஞ்சாதேவும், சித்திரம் பேசுதடியும் ஓரளவு நல்ல படங்கள்.

பரணி, நான் சொல்லாமல் விட்டிருக்கலாம். ஆனால் பதிவில் எங்கேயும் இப்போது சினிமாவில் இயங்காதவர்கள் பற்றி சொல்லவில்லை. அபப்டியென்றால் சிவாஜி, எம்.எஸ்.வி, பற்றியெல்லாம் எழுதி இருப்பேனே :))

சேது, நந்தா, பிதாமகனில் என்ன பிரம்மாண்டம்? பாலாவைத்தானே சிறந்த இய்க்குனர் என்று சொல்லியிருக்கிறேன்

நிவாஸ் on August 31, 2010 at 8:29 PM said...

ஏவிஎம், பிரமிட், டூயட் மூவிஸ், ஆஸ்க்கார் பில்ம்ஸ், ஷங்கர் பிக்சர்ஸ் இப்டி நிறைய பேர் இருக்கங்களே சகா

மகேஷ் : ரசிகன் on August 31, 2010 at 11:36 PM said...

ஜெயப்பிரகாஷைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

மகேஷ் : ரசிகன் on August 31, 2010 at 11:40 PM said...

உங்க லிஸ்ட் சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஆனால் தானைத் தலைவன் ரகுவரனை விட்டுவீட்ட்டீர்களே சகா!

மகேஷ் : ரசிகன் on August 31, 2010 at 11:40 PM said...

பிடிக்காதா?

LAKSHMANAN on October 5, 2010 at 6:33 PM said...

supper ....keep it up...

a.hariharasuthan on October 15, 2010 at 2:54 PM said...

gunachithira natikarkalnu partha enakku manivannan romba piticha natikar.matrapadi jayaprakash unmayave romba iyalba natikiraru. pasanga patam pakkalainu solliyiruntheenga, muthalla atha parunga athulathaan thadi etuthutu muthanmuthala natippulayum vithiyasam kamikka arampichuruntharu.avar natikka arampithu oru varutamthan agiratham.

 

all rights reserved to www.karkibava.com