Aug 30, 2010

தமிழ் சினிமா

38 கருத்துக்குத்து

 

ஹாலிவுட்டிற்கு இணையான/ சவால் விடும் தரத்தில் இருக்கும்.

மேலே சொன்ன வார்த்தைகளை அட்சரம் பிசகாமலும், அல்லது அதே அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளாலும் நாம் அடிக்கடி கேட்டதுண்டுதான். தமிழ் சினிமா இயக்குனர்கள் ஹாலிவுட் படங்களின் சிடிக்களை பார்த்து படமெடுத்தால் அதுவும் உலகத்தரம் என்று நினைப்பது வாடிக்கை. அல்லது வேடிக்கை. ஆனால் நிஜமாகவே தமிழ் சினிமாவின் சில துறைகள் உலகத்தரத்தில் மிளிரத்தான் செய்கிறது. அவை பெரும்பாலும் தொழிநுட்பம் சார்ந்த கலைஞர்களின் கைவண்ணமாக இருக்கிறது.

இன்றைய தமிழ் சினிமாவில் மிகச் சிறந்து விளங்கும் துறையென்றால் ஒளிப்பதிவை சொல்லலாம். பாலு மகேந்திரா, பிசி.ஸ்ரீராமில் ஆரம்பித்து ரவி.கே.சந்திரன்,ராம்ஜி, பாலசுப்ரமணியம், ரத்னவேலு, நீரவ் ஷா, ரவிவர்மன், மணிகண்டன், திரு என நீளும் பட்டியல் மனோஜ் பரமஹம்சா வரை செல்கிறது. ராவணன் போன்று கண்டெண்ட்டில் மோசமான படங்களில் கூட ஒளிப்பதிவாளர்களின் உழைப்பு அசாத்தியமானது. அதன் அழகை, நேர்த்தியை திரையில் வெகுவாக ரசிக்க முடிகிறது. இந்திய சினிமாவின் ஆகப் பெரிய இண்டஸ்ட்ரியான பாலிவுட்டில் கூட தமிழ் ஒளிப்பதிவாளர்களின் ராஜ்ஜியமே தற்போது நடக்கிறது.

இதற்கு அடுத்து இசையை சொல்லலாம். ஆனால் இளையராஜா, ரகுமானிற்கு பிறகு உலகத்தரத்தில் யாரும் வரவில்லையென்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஹாரீஸ் ஜெயராஜும், யுவனும் அதற்கு தகுதியானவர்கள் என்றாலும் அப்பட்டமான காப்பிகள் மூலம் அத்தகுதியை இழக்கிறார்கள். இருந்தாலும் இந்த இரண்டு மேதைகள் வாழும் வரை எவ்வளவு தரமான படமென்றாலும் அதற்கேற்ற இசையை எதிர்பார்க்கலாம். இந்தியா முழுவதும் தேடினாலும் இந்த இரண்டு லெஜென்ட்களுக்கு இணையான சமகால இசையமைப்பாளர்களை கண்டுபிடிப்பது சாத்தியமற்ற ஒன்று.

இசை என்னும் போது பாடலாசிரியர்களையும் வசனகர்த்தாக்களையும் பார்த்துவிடலாம். சுஹாசினி எல்லாம் ஞாபகம் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வந்துவிட்டார். நா.முத்துக்குமாரை சொல்வேன். இன்னும் பல புதுப்புது பாடலாசிரியர்கள் நன்றாக எழுதினாலும் தொடர்ச்சியாக 7, 8 வருடங்கள் தரமான பாடல்கள் எழுதி வரும் ஒரே நபர் அவர்தான். பழைய ஆட்களை விட்டுவிடுவோம். வாலியும், வைரமுத்துவும் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்பட்டியலில். அதே போல இப்போது வசனத்தில் விளையாடும் ஜெயமோகன், பாஸ்கர் சக்தியை சொல்லலாம். நான் கடவுளின் வசனம் குறிப்பிடத்தக்கது. இவர்கள் திறமையில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இன்னும் பல படங்கள் வந்த பின்னே தான் சொல்ல முடியும்.

நமது இயக்குனர்களை இந்த வரிசையில் சேர்க்க தயக்கமாகத்தான் இருக்கிறது. மேக்கிங் என்றவகையில் மணிரத்னம், ஷங்கர் போன்ற ஒரு சிலரை சேர்க்கலாம் என்றாலும் கதை, திரைக்கதை அடிப்படையில் இருவரையும் விலக்க வேண்டியிருக்கிறது. அமீர் போன்ற இயக்குனர்கள் யோகி போன்ற பாடாவதி படங்களையும், ஜெராக்ஸ் காப்பி உருவல்களையும்  கொடுக்காமல் இருந்தால் பருத்தி வீரன், ராம் என்ற இரண்டு படங்களுக்காகவே சேர்க்கலாம். வெறும் டைரக்‌ஷன் மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். கதை, திரைக்கதை வேறு துறை என்ற ஹாலிவுட் இலக்கணத்தை காட்டுவீர்களேயானல் ஷங்கர் வரக்கூடும். ஏன்? கே.எஸ்.ரவிக்குமாரைக் கூட அதில் சேர்க்கலாம். தசாவாதாரத்தை அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேறு யாரால் முடியும்? கூட்டி கழித்து பார்த்தால் கடைசியில் பாலா என்ற ஒருவரைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

கடைசியாக நடிப்பு. உலகத்தரத்தில் அல்ல, இந்திய அளவில் கூட நம் நாயகர்களில் கமலைத் தவிர யாரும் தெரியவில்லை. நிச்சயம் ரஜினி தகுதிக்குரியவர் தான். ஆனால் அதற்கான முயற்சியை அவர் எடுக்கவில்லை. விக்ரமை சொல்லலாம்.அவ்வளவுதான். ஆனால் இந்த ஹீரோக்களைத் தாண்டி நடிப்பின் மூலம் வெற்றி பெறுபவர்கள் குணசித்திர நடிகர்கள்தான். சொல்லப்போனால் இந்தப் பதிவை நான் தொடங்கியது ஜெயப்பிரகாஷ் என்ற நடிகரைப் பற்றி எழுதத்தான். அப்போதுதான் இது போன்று வேடங்களில் தற்போது கலக்கி வரும் பிரபு, பிரகாஷ்ராஜ், டெல்லி கணேஷ் போன்ற குணசித்திர நடிகர்கள் நினைவுக்கு வந்தார்கள். தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்கள் என்று பட்டியலிட்டு பார்த்த போது சிவாஜி, கமல் என்ற இரண்டு ஹீரோக்களைத் தவிர மற்ற அனைவரும் கேரக்டர் ஆர்டிஸ்ட்தான். ரங்காராவ்,எம்.ஆர். ராதா, மனோரமாவில் தொடங்கி ஜெயபிரகாஷ் வரை சொல்லலாம். இனி ஜெயபிரகாஷைப் பற்றி ஒரிரு பத்தியுடன் நிறைவு செய்து கொள்ளலாம்.

சமீபத்தில் வெளிவந்த வம்சம், நான் மகான் அல்ல படங்களை காணும் வாய்ப்பு கிட்டியது. வம்சம் படத்தில் ஜெயபிரகாஷிற்கு வில்லன் வேடம். கண்களில் குரோதம் கொப்பளிக்க மனிதர் நடக்கும் போதே பதட்டம் தொற்றிக் கொள்கிறது பார்வையாளனுக்கு. சிரிப்பில் கூட விஷம் கலந்து சிரிக்கிறார். பட்டை சாராயமும், பன்னிக்கறியும்(இது பற்றி மேலதிகக தகவலுக்கும், தேவதை தரிசனத்திற்கும் உடனே வம்சம் பார்க்கவும்) சாப்பிட மனிதனின் உடலிலுள்ள எல்லா திசுக்களும் நாட்டியம் ஆடுகின்றன. இயல்பான உடல் மொழியும், இம்மியளவும் அதிகமாகாத முகபாவனைகளும் அனாவசியமாக வருகிறது ஜெயபிரகாஷிற்கு. வம்சம் படம் உங்களை ஈர்த்திருந்தால் சந்தேகமேயில்லாமல் அதன் பெரும்பங்கு இவருடையதாகத்தான் இருக்கும்.

vamsammovie030710_51

வம்சம் பாத்திரத்திற்கு நேர் எதிர் பாத்திரத்தை நான் மகான் அல்ல படத்தில் ஏற்றிருக்கிறார். கால் டேக்ஸி ஓட்டுனராக வருகிறார்.  ஆசைக்கு ஒரு பொண்ணு ஆஸ்திக்கு ஒரு பையன், அதுக்கு ஒரு மனைவி. காலையில் நாலு இட்லி புதினா சட்னி, வாடகைக்கு வீடென கச்சிதமான லோயர் மிடில் கிளாஸ் குடும்பம் ஒன்றின் தலைவன். தன்னால் அனுபவிக்க முடியாமல் போனதை மகனின் மூலம் தீர்த்துக் கொள்ளும் தந்தை அவர். ஒரு காட்சியில் நாயகியிடம் தனது மகனைப் பற்றி சொல்லும்போது  “அவன் அப்படியே என் ஜெராக்ஸ்” என்பார். ஒரு சில நொடிகளே வரும் அக்காட்சியில் ஒரு ஆத்ம திருப்தியையும், சந்தோஷத்தையும் மிரட்டலாக காட்டி நடித்திருப்பார். அதே போல அவர் இறக்கும் காட்சியையும் சொல்லலாம். மொத்தத்தில் தமிழ் சினிமாவிற்கு ஒரு அற்புதமான நடிகர் கிடைத்திருக்கிறார். பிரகாஷ் ராஜையும், சாயாஜி ஷிண்டேயையும் வீணடித்தது போல இவரையும் சீக்கிரம் டெம்ப்ளேட் நடிகராக்கமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி: இப்பதிவில் ஜெயபிரகாஷ் பற்றி எழுதத்தான் ஆரம்பித்தேன். வேறு சில தகவல்கள் அதிகம் ஆகிவிட்டது. இதில் இருக்கும் கருத்தெல்லாம் என் கருத்துகளே. பிரகாஷ் ராஜ் எல்லாம் ஒரு நடிகனா? ரகுமான் மட்டும் காப்பியே அடிக்கலையா என்பது போன்ற விவாதங்களுக்காக எழுதப்பட்டதல்ல.

என்னைக் கவர்ந்த தமிழ் சினிமா குணசித்திர நடிகர்கள்:

ரங்காராவ், எம்.ஆர்.ராதா, மனோரமா, நாகேஷ், டெல்லி கணேஷ், பிரகாஷ்ராஜ், நாசர், பிரபு, பீலிசிவம், கிஷோர், ஜெயபிரகாஷ், தேங்காய் சீனிவாசன், பூவிலங்கு மோகன், மோகன் ராம், எஸ்.பி.பி.. இன்னும் பலர்.

குவார்ட்டர் வித் குரு

31 கருத்துக்குத்து

 

 குறும்படங்களாக எடுத்து தள்ளும் எங்க டைரக்டர் ஆதிக்கு நான் எழுதி தந்த ஸ்க்ரிப்ட். காஃபி வித் அனுவை லொள்ளு சபா ஸ்டைலில் பகடியாக்கும் முயற்சி.   விரைவில் இதை படமாக பார்க்கலாம். இதை படமா எடுத்தா எப்படி இருக்கும்ன்னு கருத்து சொல்லுங்க. காசா பணமா.. அட்வைஸ்ன்னா தான் நம்ம மக்கள் அள்ளி தெளிப்பாங்களே!!!! :)

_______________________________________

குரு : வெல்கம் டூ ”கிங்ஃபிஷர்” குவார்ட்டர் வித் குரு சீசன் ஏழரை. (தரை பெருக்குபவரை நோக்கி) நம்மளோட டுடேஸ் கெஸ்ட்ட பத்தி நான் ஒரு க்ளூ கொடுக்கிறேன். சாப்பாட்டு கடைன்னா உங்களுக்கு யாரு பேரு ஞாபகத்துக்கு வரும்?

பெருக்குபவர்: சரவண பவன் அண்ணாச்சி

குரு: நம்ம ஸ்டூடியோ ஸ்வீப்பர் வழக்கம் போல மப்புல கரெக்டா சொல்லிட்டாரு. இவர் பேரும் “ச”லதான் ஸ்டார்ட் ஆகுது. கெஸ்ட் பேரும் ”ச”லதான் ஸ்டார்ட் ஆகுது. Our today;s guest is an incredible idiot and most importantly a wonderful eater. we are most irritated to welcome our future director Mr cable sankar to “Kingfisher” quarter with guru season ezarai

(கைத்தட்டல் சத்தம்) அதைத் தொடர்ந்து கேபிள் டாஸ்மாக்கில் இருந்தோ, அல்லது உடைந்த படிகள் உடைய மாடியில் இருந்தோ வருவதைக் காட்டுகிறார்கள்.  பேக்கிரவுண்ட் மியூசிக். வந்தவுடன் ஒரு காலி கிங்ஃபிஷர் பியர் பாட்டிலை கொடுக்கிறார்கள்

குரு : உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சார். நம்ம ஸ்வீப்பர் கிட்ட கூட நான் கேட்டேன். “சாப்பாட்டு கடைன்னா உங்களுக்கு யார் பேரு ஞாபகத்துக்கு வரும்ன்னு. அவங்க கரெக்டா சொல்லிட்டாங்க. எப்படி சார் இந்த சாப்பாடு கடை தொடர்பதிவு போடுற ஐடியா வந்துச்சு

சங்கர்: (சிரிக்கிறார்). அது ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ். என்னோட முதல் படத்துல கூட ஒரு சீன். உப்பிட்டவனை உள்ளளவும் நினைன்னு சொல்வாங்க.

குரு: நான் கூட டாடாவை மறக்கவே மாட்டேன் சார். எங்க வீட்ல டாடா சால்ட் தான்.

சங்கர்: நான் சினிமாக்காரன். அதனால் எனக்கு ஏஞ்சலீனா ஜோலி சால்ட்தான். ஹாஹாஹா

குரு: உங்க படத்த பத்தி சொன்னிங்களே

சங்கர்: ஆமா. என் படத்திலும் முக்கிய கருவே அதான்.ஹீரோவுக்கு சாப்பாடுதான் எல்லாமே. யாரெல்லாம் அவனுக்கு சாப்பாடு போட்டாஙக்ளோ அவங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்வான். சின்ன பபுள் கம் வாங்கித் தந்தவனுக்கு தன் சட்டையே கழட்டி தருவான். இப்படி போற அவன் வாழ்க்கைல சாப்பாடு போட்டு வளர்த்தவனே வில்லன்னு தெரியும் போது நம்ம ஹீரோ என்ன செய்றார்ன்றதுதான் கதை.

குரு: வாவ். ருசிகரமான கதைன்னு சொல்லுங்க சார்

சங்கர்: இது வரை இந்த 75 வருஷ தமிழ் சினிமாவுல, சாப்பாட்ட மையமா வச்சு சில பாடல்கள் வந்திருக்கு. ஆனா முழு நீள படம் வந்ததில்ல. இதான் ஃபர்ஸ்ட்  (முகத்துல ஒரு பிரைட்னஸ் காட்றாரு)

குரு: சார். நீலப்படம்ன்னா. எப்படி சார்? படம் இங்க ரிலீஸ் ஆகுமா?

சங்கர்: ஃபுல் லெந்த் ஈட்டிங் மூவின்னு சொல்ல வறேன்

குரு: இந்த இடத்துல நான் இன்னொரு விஷயத்தையும் சொல்லனும் சார். உங்க கூட ஷார்ட்பிலிம்ல ஒர்க் பண்ண எல்லோருமே சொன்ன விஷயம். சங்கர் சார் படத்துல ஒர்க் பண்ணா சாப்பாடு நல்லா கிடைக்கும். இன்ஃபேக்ட் நான் கூட உங்க படத்துல ஒரு சின்ன கேரக்டர் செஞ்சிருக்கேன்.

சங்கர்: அந்த சின்ன கேரக்டரே நீ எவ்ளோ நேரம் செஞ்ச? (மீண்டும் சிரிக்கிறார்). வெலை செய்றது எதுக்கு? சம்பாதிக்க. சம்பாதிக்கிறது எதுக்கு? சாப்பிட. சாப்பிடறது எதுக்கு? வேலை செய்ய தெம்பு வேணும். வேலை செய்றது எதுக்கு? சம்பாதிக்க. சம்பாதிக்கிறது எதுக்கு?

குரு: (சிரிக்கிறார்) போதும் சார். உங்க முதல் படத்த பத்தி சொல்லுங்க

சங்கர்: என் சினிமேட்டோகிராஃபர் மண்டோரா தனி சொன்னது இது. சங்கர் சீக்கிரம் நீ பெரிய படம் பண்ணனும்,. ஏன்னா ஷார்ட் ஃபிலிம் படம் பண்றப்ப ஸ்மால் வாங்கித் தருவ. எனக்கு லார்ஜ் அடிச்சாதான் பத்துது. அதுக்காச்சும் நீ படம் பண்ணனுன்னு

குரு: ஹவ் ஸ்வீட். உங்க கூட ஒர்க் பண்ற எல்லோருக்குமே உங்கள் புடிக்குதே. எப்படி சார்?

சங்கர்: அத அவங்கதான் சொல்லனும்.

குரு: கரெக்டா சொன்னிங்க.  அடுத்த செக்மண்ட். “அந்த டேஷா”. இவரோட வேலை செஞ்சவங்க இவர பத்தி என்ன சொல்றாங்கன்னு கேட்போம். ஸ்டே ட்ரங்ட் வித் ”கிங்ஃபிஷர்” குவார்ட்டர் வித் குரு சீசன் ஏழரை.

மூணாவது பார்ட்ல புதுசா ஒரு சீஃப் கெஸ்ட் வருகிறார். அவர் கேபிளின் பட ஹீரோ.

குரு: நம்மளோட அடுத்த கெஸ்ட். இவரப் பத்தி சொல்லனும்ன்னா நிறைய இருக்கு. ஆனா இவரப் பத்தி நல்லத சொல்லனும்ன்னா ம்ஹூம்ம்.. இந்நேரம் கண்டுபுடிச்சி இருப்பிங்க. பட்டினிக்காரன் படத்தின் ஹீரோ மிஸ்டர். கண்ணன்.

அதே எண்ட்ரி சம்பிரதாயங்கள் மீண்டும் காட்டப்படுகின்றன

குரு: பார்க்கவே சூப்பரா இருக்கு. ரெண்டு பேரும் நல்ல டீம். அது என்ன சார் தொடைல?

கண்ணன்: இது என்னோட அடுத்த படத்தோட கெட்டப். வெளிய தெரியக்கூடாதுன்னு மறைச்சு வச்சிருக்கேன்.

குரு: உங்க ஸ்பேஷாலிட்டியே கெட்டப்தான் சார். அது என்ன ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கெட்டப் பண்றீங்க.

கண்ணன்: அதுக்கு சார்தான் காரணம் (சங்கரை). மைனருக்கு செட்டப்பும், நடிகருக்கு கெட்டபும் முக்கியம். அதுவும் அடிக்கடி மாத்திட்டே இருக்கணும்ன்னு சார் அடிக்கடி சொல்வார்.

சங்கர்: ஆமாங்க. இப்பலாம் ஆடியன்ஸ் வெரைட்டி எதிர்பார்க்கிறாங்க. ஒரே மாதிரி நடிச்சா போரிங்க ஃபீல் பண்றாங்க. என் படத்துல பார்த்திங்கன்னா, முதல் சீன்ல பாட்டியா நடிச்சவங்க இடைவேளைக்கு பிறகு வர மாட்டாங்க. வேற ஒருத்தவங்க நடிக்கிறாங்க.

___________________________________________________________________________________

மற்றவை திரையில் :)

Aug 26, 2010

ராக்கி கட்ட வருகிறாள் தோழி

29 கருத்துக்குத்து

 

 

எல்லா நாளும் கரெக்டா வர்ற. வீக் எண்ட் ஆனா மட்டும் என்னை பார்க்க ஏன் வர மாட்ற என்றாள் தோழி. நம் உறவில் எண்ட்டே இருக்க கூடாது என சமாளித்து வைத்தேன்.

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

பேரழகிகளை பிடிக்காது என்றெழுதியது தப்பா போச்சு.என்னை உனக்கு பிடிக்காதா என்கிறாள் தோழி. யார் சொன்னா?உன் தங்கச்சியைத்தான் பிடிக்காது என்றேன். புரியாமல் சிரித்து வைக்கிறாள் காதல் பிசாசு.

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

  எங்க தெருவுல ஒரு ஃபிகர் கூட இல்லை என்று தோழியிடம் சொன்னால் நிஜமாவா என புருவம் உயர்த்தினாள். . அவளைப் பார்த்த கண்களுக்கு வேற யார் ஃபிகராக தெரிவார்கள்?

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நடுச்சாலையில் ராக்கியுடன் ஓடி வருகிறாள் தோழி. என்ன ஆச்சு என்றால் “உனக்கு எல்லாமுமாக நான் இருக்கேனேடா. வேற யாரும் வேணாமே” என்று செல்லம் கொஞ்சுகிறாள். கையில் கட்ட வந்ததைப் பிடுங்கி அப்போதே கழுத்தில் கட்ட வேண்டும் போலிருந்தது.

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

என்னடா செய்ற ஆஃபிஸ்ல என்றாள் தோழி. பாட்டுக் கேட்டு கொண்டிருக்கிறேன் என்றேன். என்னைப் பார்க்க வராம இதென்னா வேலை? இதையும் சேர்த்து கேள் என செம பாட்டு விட்டாள். அதாங்க திட்டினா

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

திருவிழா அன்று சிறுவயதில் காணாமல் போய் மீண்டும் கிடைத்தாளாம் தோழி. அவள் ஊர் திருவிழாவிற்கு நான் போகும் வழியில் அலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தாள். ஊர் சேர்ந்து திருவிழாவில் தாவணியில் வந்த தோழியைப் பார்த்த போது திருவிழாவே காணாமல் போனதாக இருந்தது எனக்கு.

Aug 24, 2010

காக்கும் உறவு

40 கருத்துக்குத்து

 

   முதல் வரியிலே கதை தொடங்கி விட வேண்டுமாம். இந்த விதியெல்லாம் எனக்கு தெரியாதுங்க. ஆனா கல்லூரிக்கு வந்த முதல் நாளே அவள பார்த்துட்டேன். அவள பத்தி சொல்றதுக்கு முன்னாடி என்னை பத்தியும் கொஞ்சம்… பேரு மதுசூதனன். என் பக்கத்துல உட்கார்ந்திருக்கும் சுனில் தான் அத மதன்னு சுருக்கி வச்சான். சுந்தரமணிகண்டவடிவேலு என்ற அவன் பேர நான் சுனில்னு சுருக்கல. அது வேற யாரோ. 12வது வரைக்கும் போளுர் பக்கம் தச்சாம்பாடியிலதான் படிச்சேன். மாவட்ட அளவுல முதலா வந்தேன். ஒரு நல்லவர்தான் சென்னையில இஞ்சனியரிங் படிக்க உதவி செய்றாரு. இவரு கதைக்கு எந்த உதவியும் செய்ய போறதில்லை. நாம நேரா அவள பார்க்க போலாம்.

அவ பேரு திவ்யா. பார்க்கவும் திவ்யமா இருப்பா. காருலதான் காலேஜுக்கு வருவா. அவ மேல பட்டா அவ கருத்துடுவாளோன்னு சூரியன் கூட அவ மேல யோசிச்சுதான் விழும். அட! காதல் எல்லாம் இல்லைங்க. அவள பார்த்தா மனசுக்கு சந்தோஷமா இருக்கும். அவள தங்கச்சியா எப்போதிலிருந்து நினைக்க ஆரம்பிச்சேன்னு தெரில. ஆனா எனக்கு அவள மாதிரி ஒரு தங்கச்சி இருக்கக் கூடாதான்னு ஏங்கினேன். அப்படி ஒரு நல்ல பொண்ணு. எல்லோருக்கும் நல்லதையே நினைப்பா. எல்லோர் கூடவும் சகஜமா பழகுவா. என் கூடவும்.

என் பக்கத்துலதான் உட்காருவா. எனக்காக தயிர்சாதம் வீட்டுல இருந்து எடுத்துட்டு வருவா. ஹாஸ்டல்ல போடுற தயிர் சாதம் ****ராட்டும் இருக்கும். அந்த வார்த்தை கூட அவளுக்கு புடிக்காது. கிராமத்தான் எப்படி பேசுவான்னு கேட்டா உன்னை மாத்துறேண்டான்னு சிரிப்பா. நான் மாறினா சிரிப்பா இருக்கும்ன்னு தெரிஞ்சுதான் சிரிச்சாளோ என்னவோ. பெசண்ட் நகர், சத்யம்ன்னு சுத்தாம எனக்கு புடிச்ச இடத்துக்கு கூட்டிட்டு போய்  சென்னைய அழகா காமிச்சா. அம்மா அப்பாவ விட்டு இருக்கிற கஷ்டமே தெரியாம பார்த்துக்கிட்டா. காலேஜ்ல இருந்த சீனியர் எல்லாம் என்னை மச்சான்னு தான் கூப்பிடுவாங்க. நிறைய பேர் அவகிட்ட லவ் லெட்டர் எல்லாம் கொடுக்க சொல்லியிருக்காங்க. எதுவுமே அவளுக்கு தெரியாம பார்த்துக்கிட்டேன். ஒரு வருஷம் எப்படி ஓடுச்சுன்னே தெரில. எக்ஸாம் வந்துடுச்சு. நல்லபடியா எழுதினேன். அவதான் காரணம்.

  கடைசி எக்சாம் முடிஞ்ச அடுத்த நாள் கடைசி வருஷ பசங்களுக்கு ஒரு செண்ட் ஆஃப் ஃபங்க்‌ஷன் இருந்துச்சு.  அவ அப்பா தான் சீஃப் கெஸ்ட்டா வந்தாரு. ஆமா அவங்க அப்பா பெரிய தொழிலதிபரு. ஒரு நடிகையை பார்த்து கல்யாணாம் பண்ணிக்காம இவங்க அம்மா கூடவே வாழுற நல்ல தொழிலதிபர். இந்தியாவே அவர பத்தி பேசுதுன்னு நினைக்கிறேன். அவர் கிட்ட என்னையும், நண்பர்களையும் அறிமுகப்படுத்தினா. எல்லோரும் ஹலோ அங்கிள், ஹாய் அங்கிள்ன்னு சொன்னாங்க. நான் மட்டும் நல்லா இருக்கிங்களாப்பான்னு கேட்டேன். என்ன நினைச்சரோ? கோவமா அவள பார்த்து “வாட் இஸ் திஸ் திவ்யா”ன்னு கோவமா போயிட்டாரு.திவ்யா எவ்ளோ சொல்லியும் கேட்காம வேகமா போயிட்டாரு. எல்லோரும் என்னை காட்டான்னு திட்டினாங்க.திவ்யாவும் என்னை முறைச்சிட்டு கூடவே போயிட்டா. ரெண்டு நாள் வெயிட் பண்ணிட்டு நானும் ஊருக்கு போயிட்டேன். என்னை மாதிரி ஒரு கிராமத்தான மருமகனா மட்டும் இல்ல, மகனா கூட ஏத்துக்க மாட்டாங்கன்னு அப்பதான் தெரிஞ்சுது.

மே மாசத்துல ஊரே காய்ஞ்சு போய் இருக்கும். தச்சாம்பாடியும் அப்படித்தான் இருந்துச்சு. ஆனா நான் இன்னும் மோசமா காய்ஞ்சு போயிட்டேன். என்னடா மதுசூதனான்னு பழைய பேரு மறுபடியும் வச்சிட்டாங்க.. அவகிட்ட பேச கூட முடியல. ஆமா. அவ லீவுக்கு லண்டனோ,நார்வேயோ போயிருந்தா. ஒரு மெயில் கூட இல்ல. மூணு நாளைக்கு ஒரு தடவ சேத்பட் வந்து பிரவுசிங் செண்டருக்கு அழுததுதான் மிச்சம். ஜூலை மாசம் காலேஜுக்கு வந்தப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு. ஆனா அவ வரல. பாஸ்போர்ட்ல ஏதோ பிரச்சினை ஆகி ஆகஸ்ட் மாசம் தான் வந்தா. வந்தப்புறமும் என்கிட்ட சரியாவே பேசல. நான் பேச போனப்ப எல்லாம் ஏதாவது சாக்கு வச்சு அவ ஃப்ரெண்ட்ஸ் கூட போயிடுவா. தனியா இருக்கிறப்ப பேசினா பேசாமலே போயிடுவா.

அன்னைக்கு ரக்‌ஷா பந்தன். பசங்க எல்லாம் பொண்ணுங்க ராக்கி கட்டிடுவாங்கன்னு பயந்து ஓடிட்டு இருந்தாங்க. நான் மட்டும் திவ்யாவுக்கு கொடுக்க பாக்கெட் நிறைய சாக்லெட் வாங்கிட்டு போனேன். கேண்டின்ல இருக்கிறதா இன்னொரு திவ்யா சொன்னா. நானும் போனேன். எனக்கு ராக்கி கட்ட மாட்டியான்னு கேட்டேன். முறைச்சிட்டே இருந்தவ அழ ஆரம்பிச்சிட்டா. என்ன ஆச்சோன்னு இன்னொரு திவ்யாவ போய் கேட்க சொன்னேன். பாவி மக.  நான் இல்லாம வாழ முடியாதாம். எத்தனை கதை படிச்சிருக்கிங்க?  அதையெல்லாம் சொன்னா. என்னை லவ் பண்றாளாம். :(

Aug 22, 2010

வம்சம் – அம்சம்

21 கருத்துக்குத்து

 

வம்சம் படம் பற்றி ஒரு டீட்டெயிலான பதிவு

முதல் பாதி:

vamsam_tamil_movie_stills_gallery_03

Vamsam-Movie-Stills-039 Vamsam-Movie-Stills-040

 

Vamsam-Movie-Stills-100

Vamsam-Movie-Stills-102

இரண்டாம் பாதி:

 

94621-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Little-Black-Boy-Dreaming-And-Sleeping-In-Bed

Aug 17, 2010

நினைவுகளின் இடுக்கில்..

22 கருத்துக்குத்து

 

நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்..

   நா.முத்துக்குமாரின் வரிகள் இவை. எல்லோருக்கும் இப்படி ஏதாவது ஒன்று நினைவுகளை கிளறி விடும் ஊக்கியாக இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பதின்ம வயது காதலை நினைவுப்படுத்தும் வஸ்துக்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கக்கூடும். பலரின் காதலை நினைவுப்படுத்தும்படி அமைந்ததால் தான் ஆட்டோகிராஃப் போன்ற ஒரு மெதுவான, இழுவையான படம் அதிரி புதிரி வெற்றி பெற்றது. எனக்கும் அப்படி சில விஷயங்கள் உண்டு. பேருந்து அதில் முக்கியமானது. காதல் சொல்ல வந்தேன் படத்தில் promo stills பார்த்த போதே பிடித்து போனது. யுவனின் பாடல்களை பற்றி எழுதியிருந்ததை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நாயகன் பாலாஜி. கனா காணும் காலங்கள் என்ற விஜய் டிவி நாடகத்தை இவருக்குக்காக மட்டுமே பார்த்தேன். இவர் காணாமல் போன பிறகு பார்த்ததாக ஞாபகமில்லை. அத்தனை இயல்பான, கலகலப்பான இளைஞன். அவர் நடிக்கும் படம் என்றபோது எதிர்பார்ப்பு இன்னும் சில அடிகள் உயர பறந்தன. இத்தனை முன்முடிவுகளோடு ஒரு படம் பார்க்கும் போது அது சுமாராக இருந்தாலும் மனதில் ஃபெவிகால் கொண்டு ஒட்டிக் கொள்ளத்தானே செய்யும்? ஆனால் அப்படியேதும் இல்லாமல் மணல் வீடு போல பொலபொலவென உதிரியாக கொட்டிவிட்டது படம்.

kadhal solla vandhen tamil moviephotos (6)

முதல் ஏமாற்றம் பாலாஜியின் டப்பிங் குரல். எனக்கு அவரிடம் பிடித்த முக்கியமான விஷயம். என்ன காரணத்துக்காக அவருக்கு டப்பிங் என்று புரியவில்லை. அடுத்த ஏமாற்றம் நாயகி. மொத்த படமும் பாலாஜி காதலை சொல்ல படும் பாடும், அவரை சம்மதிக்க வைக்க படும் அவஸ்தையும்தான். அதுவும் முதல் பார்வையிலே வரும் காதல். ஆயின் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? ப்ச். அவர் இருக்கட்டும். எனக்கு நினைவுகளை கிளறிவிட்ட இந்தப் படத்தைப் பற்றி சொல்லும்போதே எனக்கு பிடித்த பெண் எப்படி இருந்தாள் என்றும் சொல்லிவிடுகிறேன். ஆதி அவர்கள் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அதையும் இதனூடே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்திலும் வழக்கமான தமிழ் சினிமா நாயகி மேல் விழும் பூதான் காதலை தொடங்கி வைக்கிறது. நாயகன் அடித்த கல் மரத்தை உலுக்க, அதலிருந்து விழும் பூ நாயகி மேல் விழ, அதற்குள் நம் நாயகன் நாயகியின் எதிரில் வந்துவிட, நாயகியை நனைத்த ஒரு பூ நாயகனிடமே திரும்புகிறது. அந்த மொக்கை காட்சியை கண்கள் பார்த்தாலும் மனம் வேறெதையோ அசை போட்டுக் கொண்டிருந்தது. முதல் முறை அவளைப் பார்த்த போதே மணி சத்தம், லைட் எரிவது என எதுவும் நடக்கவில்லை. அலைகள் அந்தரத்தில் நிற்கவில்லை. ரங்கநாத தெரு கூட்டத்தில் யாரோ ஒருவரை கடக்கும் போது நிகழும் அதிர்வுகள் தான் எனக்கு அவளைப் பார்த்த போதும் இருந்தது. முதல் பாயிண்ட். எனக்கான பெண் சராசரியாக இருக்க வேண்டும். பேரழகிகள் எனக்கு எப்போதும் ஒவ்வாமைதான்.

நாயகியின் பாத்திரம் பேசும் வசனங்களில் தொடர்பே இல்லை. ஒரு காட்சியில் படு சீரியஸ் என்பது போல் தெரிகிறது. சில காட்சிகளிலே காமெடியாகிறது. ஒரு காட்சியில் பெரிய அறிவாளி போன்று பேசுவதும், மீண்டும் ஏமாறுவதும் சலிப்பைத் தருகிறது. பாலாஜியிடம் அவர் பேச வரும்போதெல்லாம் அவளுடனான முதல் சந்திப்பே நினைவில் வந்தது. நீதானே ஏழு என்று இப்போதும் சிலர் கமெண்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணமாய் இருப்பது என் மொக்கை பேச்சுதான். அதனாலே என்னிடம் நண்பர்கள் “கூடக்கூட” பேசாமல் சரண்டர் ஆகிவிடுவார்கள். ஆனால் அவள் முதல் சந்திப்பிலே 15 நிமிடம் பதிலுக்கு பதில் பேசி எங்களை சுற்றி இருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாள். பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்த நான் அவளின் “பேச்சாற்றலை” சிலாகிக்கவில்லை. அடுத்த பாயிண்ட். கலகலப்பான, அதிகம் பேசும், நகைச்சுவை உணர்ச்சி மிக்கவர் என்றால் பிடிக்கும்.

படத்தில் ஒரு காட்சி. நாயகியை விரும்பும் மாணவன் ஒருவன் அவனை காதலிக்காவிட்டால் மேலிருந்து குதித்துவிடுவேன் என்று மிரட்டுவான். நாயகியும் சொல்லிவிடலாமா என்று யோசிப்பாள். பாலாஜி அதை டீல் செய்த விதம் அருமையென்றாலும் எனக்கு வேறு சில ஞாபகங்கள் வந்து தொலைத்தது. இதே போல் அவளின் கல்லூரியில் ஒருவன் ப்ரபோஸ் செய்தானாம். இவள் பதிலுக்கு காதல் மனசுல இருந்து வரணும். உண்மையிலே நீ செத்துப் போனா கூட என்னுடைய அறிவுதான் பாவம்னு சொல்லும். ஏன்னா உன் மேல இருக்கும் கொஞ்ச அன்பும், அக்கறையும் கூட உன் மிரட்டலில் காணாம போயிடுச்சு என்றாளாம். இது சரியான்னு தெரியாது. ஆனால் அவள் அப்படித்தான். எந்த சூழ்நிலையிலும் தனக்கு தோன்றுவதையே செய்வாள். இரக்கப்பட்டு அவளால் உதவிதான் செய்ய முடியும். வார்த்தைகளால் ஜாலம் செய்வதில்லை அவள். எனக்கு அதுதான் பிடித்தது. எப்போதும் அவள் அவளாக இருப்பது. பெண்களுக்கு பேரழகு தரும் குணம் இதுவென்பது என் கருத்து.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை எனக்கான பெண் என்பவள் அவளைப் போல இருக்க வேண்டும். அவள் அப்படி இருந்ததால் தான் எனக்கு பிடித்திருக்கக்கூடும். Vice verca ஆக இருக்க வாய்ப்பில்லை. சரி. இப்போது படத்திற்கு வரலாம்.

ஒன்றுமே இல்லாத நமுத்துப் போன கதை. சுமாராக நடிக்க தெரிந்த நட்சத்திரங்கள். தெளிவான, ஆனால் எந்தவித திருப்பங்களும் இல்லாத தட்டையான திரைக்கதை. காதலையும், காமெடியையும், யுவனையும் நம்பி எடுத்திருக்கிறார்கள். காமெடி சற்று சொதப்பினாலும் மற்ற இரண்டும் கைகொடுக்கின்றன.உங்களுக்கு கல்லூரி காதல் அனுபவம் உண்டா? முதல் காதலை அவ்வபோது அசை போடுவது பிடிக்குமா? காதல் வந்த ஒருவனின் மன ஓட்டங்களை வார்த்தைகளாலும், இசையாலும் கேட்பது பிடிக்குமா? படம் முடிந்தபின் கடற்கரை மணலில் தனியாக அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாற நேரம் இருக்குமா? எல்லாவற்றிற்கும் ஆம் என்பீர்களேயானால் இந்த திராபை படத்துக்கு தாராளமாக போகலாம்.

Aug 16, 2010

சாமி வருகுது..காதல் சாமி வருகுது

28 கருத்துக்குத்து

 

   கோக் ஜில்லுன்னே இல்லையே என்றேன் தோழியிடம்.நீ அது கிட்ட கொஞ்ச நேரம் பேசு. கூலாயிடும் என்றாள். நான் ஆர்டர் செய்த காஃபி ஆறிப்போய் வரவேண்டும் என வேண்டிக் கொண்டேன்.

______________________________________________________________________________

   எதுக்குடா ஏ.டி.எம் கார்டு எல்லாத்தையும் என்கிட்ட கொடுக்கிற? இப்பவே சாவிக் கொத்து வேணுமான்னு திட்டப் போறாங்க என் அத்தை என்றாள் தோழி. இருக்கும் கொஞ்ச பணத்தையும் தங்கத்தில் முதலீடு செய்ய சொன்னதே அம்மா தான் என்று சொன்ன பின் நாணுகிறாள்.

______________________________________________________________________________

100 ரோஜா எடுத்துக்கோ. ஒரு ஊசியும் நூலும். மாலையா கோர்த்துக்கோ. கண்ணாடி முன்னால போ. இதுதான்  குரங்கு கையில் பூமாலை என்று சிரித்தாள் தோழி. அழைப்பை துண்டித்துவிட்டு அவள் வீட்டிற்கே சென்று அவளை தூக்கிக் கொண்டு சொன்னேன். "இத விட்டு பூவாம்.நூலாம். வேற வேலையில்ல". அதிசயமாய் புரிந்துக்கொண்ட‌ தோழி குரங்காய் மாறிக் கொண்டிருந்தாள்.

______________________________________________________________________________

  கம்மல் அழகா இருக்கே. புதுசா என்றேன். இந்தா வச்சிக்கோ என்று கழட்டி தந்தாள் தோழி. என் கையில் பார்க்கும் போது சுமாராக இருந்ததை சொல்லாமல் உன் குர்தி கூட சூப்பர் என்றேன்.

______________________________________________________________________________

எங்கடா போறீங்க எல்லோரும் என்று தோழியின் தம்பி முறை சிறுவனிடம் கேட்டேன். அவர்கள் குலதெய்வத்திற்கு பூஜை செய்ய மொத்த குடும்பமும் செல்வதாக சொன்னான். உங்க அக்காவுமா என்றதற்கு “இல்ல. அவங்க வரலையாம்” என்றான். குலதெய்வத்தை இங்கே விட்டு யாரைத் தேடி ஊருக்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை எனக்கு.

______________________________________________________________________________

   என் நீண்ட தொந்தரவிற்கு பின் அந்த மழைக்கால இரவில் எங்கள் சந்திப்பின் முடிவில் முத்தம் ஒன்றை உதட்டில் தர சம்மதித்தாள் தோழி. மறுநாள் அவள் அழைத்தபோது இன்னும் பல் துலக்கவேயில்லை. உன் லிப்ஸ்டிக் வாசனையை ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். உனக்காவது பரவாயில்லை. எனக்கு ரத்த வாசனை என்று சிரிக்கிறாள் அன்பு காட்டேரி.

பேரரசு

17 கருத்துக்குத்து

 

  திருச்சி ஹலோ எஃப்.எம்மில் பல்லாங்குழி என்றொரு நிகழ்ச்சி வருகிறது. ராஜா என்பவர் அதை தொகுத்து வழங்குகிறார். சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது. இரண்டு தலைப்புகள் தருவார்கள். முதல் தலைப்பை பற்றி சீரியசா ஒரு நிமிடம் பேச வேண்டும். இரண்டாம் தலைப்பை பற்றி கிண்டலாக ஒரு நிமிடம் பேச வேண்டும். முதல் ஆளே நான் தான். தலைப்பு ?

“குடியரசு –பேரரசு”

நான் பேசுவதற்காக எழுதி வைத்த குறிப்புகளை தருகிறேன். வாரத்தின் முதல் நாளே பதிவு போடாம இருக்கக் கூடாது என்பது பிளாகானந்தா சுவாமிகளின் அறிவுரை. கைவசம் வேறெதுவும் டிராஃப்பட்டில் இல்லாததால் இந்தக் கொடுமை. திருச்சி அலைவரிசையில் வந்ததால் சென்னையில் இருந்து பதிவு செய்ய  முடியவில்லை.

குடியரசு

இந்தியா 1947லே சுதந்திரமடைந்தாலும் அதற்கென ஒரு அரசியல் அமைப்பு இல்லாமலே இருந்தது. 1935ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Government of India Act 1935 என்றதையே பின்பற்றி வந்தார்கள்.  திரு.அம்பேத்கார் தலைமையில்  சட்டத்திட்டங்களை முறையாக அமைக்க ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழு உருவாக்கிய சட்டம், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பின் 1950 ஜனவரி 26 ஆம் தேதி முழுமையாக அமலுக்கு வந்தது., அந்த நாளையே நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

   இந்த தேதியை தேர்வு செய்ததன் பின்னணியில் இன்னொரு வரலாறும் உண்டு. தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப காந்திஜி முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர். அந்த நாள் தான் பிறகு குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது. இன்னும் சில தகவல்கள்.

1. இந்தியா உலகிலேயே மிகப் பெரிய குடியரசு நாடாகும்.
2. எழுத்து வடிவில் உள்ள ஒரே அரசியலமைப்புச் சட்டம் நமது தேசத்தின் அரசியலமைப்பு மட்டும் தான்.
3. டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராவார்.

___________________________________

இனி சரவெடி.. அதாங்க பேரரசு பற்றி

பேரரசு. இவரைத் தெரியாதவர் இருப்பார்களா? இருந்தாலும் சொல்கிறேன். திருப்பாச்சியில் பிறந்தவர். சிவகாசியில் வளர்ந்தவர். முதல் அடி திருப்பதியில். மரண அடி தர்மபுரியில். மொட்டையானது பழனியில். துண்டு போட்டு சுத்தியது திருவண்ணாமலையில்.  இப்போது ஜெயிப்போம் என நம்பி நகர்வலம் வருவது திருத்தணியில். இவர் படத்தில் நடிக்கும் துணை நடிகர்களுக்கெல்லாம் லன்ச் கிடைக்கிறதோ இல்லையோ ஒரு பன்ச் வசனம் கிடைத்துவிடும். ஒரே ஒரு காட்சியில் வரும் செக்யுரிட்டி கூட “இன்னைக்கு நான் வீட்டுக்கு செக்யூரிட்டி. மக்கள் மனசு வச்சா இந்த நாட்டுக்கே செக்யுரிட்டி” என்பார். கேட்டை திறக்கிறவன் முழுமையா உழைச்சா கோட்டையே புடிப்பான் என்பார்.  கட்சி ஆரம்பிக்க நினைக்கும் எல்லா நடிகர்களும் முதல் வேலையாக செய்வது பேரரசு படத்தில் நடிப்பதைத்தான். அந்த வகையில் கேட் வே ஆஃப் தமிழக அரசாக விளங்கும் பேரரசுவை இந்த நல்ல நாளில் நினைவுக் கூறுவது நல்லது. சாதாரணமாக நினைக்கலாமா? அவர் ஸ்டைலிலே சொல்வோம்

இந்தியா இப்ப குடியரசு

2020ல வல்லரசு

எல்லாத்துக்கும் காரணம் பேரரசு.. பேரரசு..பேரரசு..

பிகு:

இதே நிகழ்ச்சியில் நம்ம பரிசல் பேசிய தலைப்பு. “அஹிம்சை – இம்சை”

என்னது “ கார்க்கி – பரிசல்” என்பது போலவே இருக்கா??????

Aug 13, 2010

கத்தி பார்றா

42 கருத்துக்குத்து

 

சில மாதங்களாகவே வலது கண்ணில் சிறு பிரச்சினை இருக்கிறது. மெட்ராஸ் ஐ போல சிவந்து விடும். எரிச்சலும் இருக்கும். சென்ற வாரம் தெரிந்த (அந்த தெரிந்த இல்ல) டாக்டர் ஒருவரிடம் சென்றேன். ஐ டிராப்ஸ் தறேன். போடு என்றார். பின்ன கண்ணுல என்ன பைப் வச்சா மருந்த விட முடியும்? ட்ராப் ட்ராப் தானே டாக்டர் விட முடியுமென்றேன். சிரித்தாரா முறைத்தாரா என்று தெரியவில்லை. நேற்று மீண்டும் அவரிடம் சென்றேன். ரைட் ஐலதானே பிரச்சினை என்றார். ரைட் ஐய்யா இருந்தா எப்படி டாக்டர் பிரச்சினை இருக்கும்? பிரச்சினை இருந்தா எப்படி டாக்டர் ரைட் ஐய்யா இருக்குமென்றேன். முதல் முறையாவது மருந்து எழுதி தந்த பின் தான் பேசினேன். இந்த முறை அதற்கு முன்பே பேசிவிட்டதால் அவர் எழுதி தந்த  ட்ராப்ஸை கண்களில் போடும் திட்டத்தை டிராப் செய்துவிட்டேன். ஏற்கனவே நம்ம கண்ணு பெர்ர்ர்ர்ர்சு. இதுல இன்னும் சுருங்குனா?

________________________________________________________________________________

நண்பன் ஒருவன் அழைத்தான். நல்லதொரு வேலைத் தேடி வருடக்கணக்கில் அலைந்துக் கொண்டிருந்தவனை சில பி.பி.ஓக்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பினேன். வேலை கிடைத்தவுடன் முதலில் என்னை அழைத்தான்.

மச்சி. வேலை கிடைச்சுடுச்சுடா. 15 தவுசண்ட் சேலரி.

கலக்கிட்ட மச்சி. எந்த கம்பெனி?

ஆல்செக்(Allsec) BPO டா.

எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த?

என்னைத் திட்டவும் முடியாமல், பதில் சொல்லவும் முடியாமல் வைத்துவிட்டான்

________________________________________________________________________________

”அது ஏண்டா என்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட” என்று பப்லுவிடம் நான்காவது முறையாக நான் கேட்டபோது அம்மா, அக்காவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசி முடிப்பதற்குள்  எட்டு முறைக் கேட்டுவிட்டேன் பப்லுவிடம் அதேக் கேள்வியை. அவனும் “வெள்ளை செந்தில்” மாதிரி முழித்துக் கொண்டிருந்தான். அன்று வீட்டில் எட்டு பேருக்கு மேல் இருந்தோம். அவங்களையெல்லாம் விட்டு என் கிட்ட ஏன் கேட்ட என்று நான் மீண்டும் கேட்ட போது எண்ட்ரீ ஆனார் எங்க வூட்டு ராமராஜன் வினோத்.

அப்படி என்னதாண்டா கேட்டான்?

என்ன கேட்டானா? நோபல் பரிசு வாங்கிய முதல் இந்திய பெண்மணி த்ரிஷா தானேன்னு கேட்கிறாண்டா என்றேன்

முகத்தை வாழைப்பழ செந்தில் போல வைத்துக் கொண்டு பதில் சொன்னான் பப்லு “ எங்க மிஸ் mother teresa வை மதர் திரிசான்னு சொன்னாங்க. அது எனக்கு சரியா ஞாபகமில்லை. அதான் த்ரிஷாவான்னு கேட்டேன் என்றான். தலையிலே நங்கென்று குட்டினேன்.

பின் நானே அவனுக்கு நோபல் பரிசென்றால் என்ன என்றும், யார் யார் வாங்கினார்கள் என்றும் விளக்கினேன். த்ரிஷாவுக்கெல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்றேன். படித்து முடித்த பின், புத்தகத்தை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு சிறிது தூரம் சென்ற பப்லு, அங்கிருந்த எட்டு பேருக்கும் கேட்கும் படி கத்தினான்

“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”

________________________________________________________________________________

   ரொம்ப நாள் கழித்து கொஞ்சம் ஸ்மார்ட்டான் விஜயை காண முடிந்தது. ஒரு விளம்பரத்தில்.  ஜோஸ் ஆல்லுக்காசின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் நியமிக்கப்பட்டிருக்கிறார். எனக்கு ஒரு சந்தேகம். முதல்ல வீடியோ பாருங்க. அப்பாலிக்கா டவுட்ட சொல்ரேன்

 

___________________________________________________________________________

நண்பன் ஒருவன் அழைத்து புது கார் வாங்கிருப்பதாக சொன்னான். சூப்பர் மச்சி. என்ன கார் என்றேன்.

இன்னோவா கார் என்றான்.

ஏன்டா லட்சக்கணக்குல காசுப் போட்ட வாங்கின காரு பேரு தெரியாதா? என்னவோ கார் வாங்கியிருக்கேன்னு சொல்ற.

நல்லவேளை ஃபோனில் சொன்னேன். நேரில் சொல்லி இருந்தால் காரை விட்டே ஏத்தி இருப்பான்

________________________________________________________________________________

   கத்திபாரா மேம்பாலத்தில் செல்லும்போது  என் மொபைல் சிக்னல் கிடைக்காமல்  ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்கும்போதே கட்டாகிவிடுகிறது. இரண்டு முறை இதை கவனித்த பப்லு என்னடா ஆச்சு என்றான். இங்க சிக்னல் இருக்க வேண்டாம்ன்னு இந்த மேம்பாலம் கட்டிட்டாங்க இல்ல. அதான் சிக்னல் இல்லாம கட்டாவுது என்றேன். அங்கிருந்து ஆதம்பாக்கம் வரும்வரை பேசாமல் இருந்தவன் வீட்டருகே வந்ததும் சொன்னான் “அந்த இடத்து பேரு. கத்திபாராதானே? அதான் எல்லாரும் கத்திப்பாக்கட்டும்ன்னு கவர்மெண்ட்டே அப்படி வச்சிருக்காங்க”.

___________________________________________________________________________

அந்த டவுட்டு என்னன்னா.. எத்தனை புது கார் வந்திருக்கு? இன்னும் பிராண்ட் அம்பாசிடர் தானா? பிராண்ட் ஐ10, பிராண்ட் ரிட்ஸ், பிராண்ட் ஜாஸ் எதுவும் கிடையாதா?

Aug 12, 2010

ஏழுவின் காதலி

24 கருத்துக்குத்து

 

  அதுவரை எந்தப் பெண்ணின் பின்னாலும் போகாத ஏழுவுக்கு அவளைக் கண்டவுடன் பிடித்துவிட்டது. ஆறுமுகம் வந்து இந்த மேட்டரை சொன்னபோது எங்களால் நம்பவே முடியவில்லை. குடித்துவிட்டு ஒரு நாள் பேண்ட்டே இல்லாமல் ஹாஸ்டலுக்கு வந்த அன்று கூட வராத வெட்கம் இன்று ஏழுவின் கண்களில் தெரிந்தது. இதற்கு மேல் ஏழுவை மலையேற்றினால்தான் விஷயத்தை கறக்க முடியும் என்று முடிவு செய்து அன்று பூஜைக்கு ஏற்பாடு செய்தான் பாலாஜி.

  முதலில் அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை இரண்டு பியர் தருவதாக உறுதி கூறி அடிக்க வைத்தோம். திட்டமிட்டபடி பாதி பியரை குடித்துவிட்டு தண்ணி கலந்து வைத்திருந்தான் பாலாஜி. அந்த பாதி பியரில் பாதி அடித்த ஏழு சிரித்தான்.

அழகுடா... இது வரைக்கும் யாரையும் இப்படி பார்த்ததில்ல.

எப்படி பார்த்தான் தெரியுமா மச்சி? சொன்னா கேட்காம மூனு பஃப் இழுத்துட்டு மப்புல தடுக்கி கீழ விழுந்துட்டான். அப்ப அவ சரியா எதிர்ல வர, தலைவர் ஸ்ரீரங்கப்பெருமாள் மாதிரி தலைல கைய முட்டுக் கொடுத்துட்டு சைட் அடிச்சாரு என்றான் ஆறு.

டேய். அதுவா முக்கியம்.. என்ன சாப்பிடறான்னு தெரியல மச்சி. அவ கண்ணம் அப்படியே மொழு மொழுன்னு...

அவ சைவம் மச்சி. தயிர் சாதம் தான் – இது பாலாஜி.

சான்ஸே இல்லடா.. அவள போய் சைவம்ன்னு.. அவ கண்ண பார்த்தியா.. கண்ணுல மீன் இருக்குடா.. அவ சைவம் இல்ல மச்சி..

அவ சாப்பிடறது சைவம்டா வென்ரு.. மீன் இருக்காம். முயல் இருக்காம் என்று பொங்கினான் பாலாஜி

ரைட்டு விடு. அவ பேரு கலைவாணி மச்சி. எங்க கல்யாணத்துல வெளியே பெருசா பேனர் வைப்பிங்க இல்ல.. அப்ப இப்படித்தான் எழுதனும்..

தலைவா நீ உலகையே வென்றவன்
கலைவாணி உன்னையே வென்றவர்

இப்படிக்கு,
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்..

எல்லாம் ஓக்கேடா. அது என்ன‌ ஏழு பீர் ஏழும‌லை?

போன‌ நியூ இய‌ர்ல ஏழு பியரடிச்சேனே. அத சொன்னேன்.

டேய் போன இயர்ல நீ அடிச்ச மொத்த பியரே நாலரைதான்டா.

ரைட்டு விடு. இப்ப அதுவா பிரச்சனை. அவள எப்படி கரெக்ட் பண்றது.. அதுக்கு ஐடியா கொடுங்கடா. அதுக்கு முன்னாடி சைடு டிஷ் எதுவாச்சு சொல்லு. இனிமேல நானும் சைவம்தான். அதனால மட்டன்ல ஏதாச்சும் சொல்லு

எப்படா ஆடு சைவமாச்சு?

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி.

. நான் வாயை மூடிக்கிறேன். ஏற்கனவே தலைவலி பொறுக்க முடியல என்றான் பாலாஜி.

கூட்டணி பற்றி அறிவிக்க வந்த வைகோ போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் ஏழு “தலைவலிக்கும் போது நீ ஏண்டா பொறுக்க போற? ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல?”

ஆறு மட்டும் சீரியஸாக "மச்சி, அவ உனக்கு செட்டாவாளா? அவ கேரக்டர் எப்படின்னு விசாரிக்காலான்டா முதல்ல என்றான்

எனக்கு அவள பிடிச்சு போச்சுடா. இது வேணும் அது வேணுமெல்லாம் எனக்கு ஆசை கிடையாது. ஆனா என்ன மாதிரி வாய் அதிகமில்லாம, நீங்க சொல்வீங்களே மொக்கை போடறேன்னு.. அது மாதிரி பேசமா இருந்தா போதும் என்று உண்மையை ஒப்புக் கொண்டான் ஏழு.

  மறுநாள் ஆறுவும் ஏழுவும் அவளை சந்தித்து பேசுவதாக திட்டம் தயார் ஆனது. வழக்கம்போல அரைபியரில் ஃபுல் டைட்டாக ஆனார் ஏழு.

  அடுத்தநாள் அவள் வரும் வழியில் காத்திருந்தோம். ஆறுவும் ஏழுவும் மட்டும் சற்று முன்னால் சென்றார்கள்.   மச்சி. எப்படியாவது ஓக்கே சொல்ல வைக்கணும்டா. பார்த்தா அமைதியான பொண்ணு மாதிரிதான் தெரியுது என்று கிசுகிசுத்தான் ஏழு.

சரிடா என்ற ஆறு அவளைப் பார்த்து "ஹலோ..இங்க வா நீ" என்றான்

திரும்பிய அவள், நானா என்பது போல கேட்க, ஆறு ஆமாம் என்று ஆமோதித்தான்.

அருகில் வந்தவள் "என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி"  என்று சிரித்து விட்டு சென்றாள்.

பியரடிக்காமலே மயங்கி விழுந்தான் ஏழு.

Aug 11, 2010

தோழி மார்க்

29 கருத்துக்குத்து

 

  உன் இடையும்  என்ன ட்விட்டரோ… ஒன்லி ஒன் ஃபார்ட்டி கேரக்டரோ என்றேன் தோழியிடம். பஸ்ஸை எதனுடன் ஒப்பிடுவேன் என்று பயந்து ஓடிவிட்டாள்.

_______________________________________________________________________________

oven என்பதை அவன் என்பதா, ஓவன் என்பதா என்ற சந்தேகம் தீர்ந்ததாம் தோழிக்கு. சூடாகுவதால் அது “அவன்” தான் என்றாள். பதிலுக்கு நான் ”அது சூடாகுவதில்லை. சூடாக்குகிறது எனவே அவனில்லை. அவள்தான்” என்றேன். உதட்டைக் கடித்து சற்று நேரம் அவள் யோசித்ததைப் பார்த்தேன். அவள் அவனாகிக் கொண்டிருந்தாள். நான் உள்ளிருக்கும் பாத்திரமாகிப் போனேன்

_______________________________________________________________________________

அமாவாசையன்று இரவு வெகு நேரம் பேசிக் கொண்டேயிருந்தாள் தோழி. எனக்கு மட்டும் இன்று பெளர்ணமி என்றேன். அதிருக்கட்டும். எப்படா நீ ஆர்ம்ஸ்ட்ராங் ஆகப்போற என்று தோழி கேட்டபோது காரணமே இல்லாமல் என் சப்பையான ஆர்ம்ஸை பார்த்து விட்டேன் நான். சிரித்து சிரித்தே மானத்தை வாங்குகிறாள்.

_______________________________________________________________________________

நட்பு, நண்பன் என்றால் உதடுகள் ஒட்டும். காதல், காதலி என்றால் ஒட்டாது என்று நண்பன் சொல்கிறான் என்றேன் தோழியிடம். அவன் கிடக்கிறான் லூசு என்று உதடுகள் ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி காண்பித்தாள்.

_______________________________________________________________________________

”இவன் என்னை நான் ஸ்டாப்பா 12 நிமிஷம் கிஸ் பண்ணான் தெரியுமா” என்று என் சகாக்களிடம் சொல்லி வைத்தாள் தோழி. “வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா” என்று கடிந்துக் கொண்டதற்கு “நீ வாய வச்சிட்டு சும்மா இருந்தா நான் ஏன் சொல்றேன்” என்றாள். உன்னை மாதிரி ஒரு அழகி தோழியா இருக்கும்போது வாய் வச்சிட்டு சும்மா இருக்க முடியுமா?” என்றேன். இப்படி ஒரு செல்லம் இருக்கும்போது அவனைப் பத்தி சொல்லாம என் வாய் இருக்குமா” என்றாள். “வழக்கிற்கு கொடுத்துவிடு  வாய்தா . இப்போ முத்ததிற்கு உன் வாய் தா” என்றேன்.

_______________________________________________________________________________

புதிதாய் ஒன்றை கண்டுபிடித்தால் அதற்கு அதைக் கண்டறிந்தவரின் பெயரையே வைப்பார்களாம். உன் உள்ளங்கால் மச்சத்திற்கு என் பெயரை வைத்துவிடேன் என்றேன் தோழியிடம். அது புதிதாய் ஒன்றை உருவாக்குபவர்களுக்குத்தான் என்றவள் கடித்துவிட்டாள். இனி இது தோழி மார்க் என்றழைக்கப்படுவதாக என்ற வரமளித்தாள்

Aug 10, 2010

பெ.ரா. ட். சு &கார்க்கி

31 கருத்துக்குத்து

 

   எனக்கு பெரியாரை பிடிக்கும். பெரியாரையும் பிடிக்கும் என்பதே சரியானதாய் இருக்கும். கடவுள் இல்லையென்று சொல்வதை விட கடவுளை மற.மனிதனை நினை என்ற அவரின் வார்த்தைகளே எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் பெரியாரும் அவரின் கருத்துகள் மட்டும்தான் அறிவுத்தேடலுக்கான எல்லையா?. அத்தேடலின் எல்லை பெரியாருடன் நின்று விடுவதில்லை. சில விதிகள் எக்காலத்திற்கும் பொருந்துமென்றாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மட்டுமே மாறாத விதியென்று நம்புகிறேன். இன்று நமக்கு சரியெனப்படுவது நாளையே தவறாகலாம். சமீபத்தில் படித்த வலைப்பதிவொன்றில் இன்று நடக்கும் எல்லாவற்றையும் பெரியாரின் கருத்துக்களுடனே ஒப்பிட்டு எழுதப்பட்டதை பார்த்துதான் இதை எழுத வேண்டுமென்று தோன்றியது. மற்றபடி விசேஷமேதுமில்லை. வெங்காயம் சாப்பிடுவதால் நான் பெரியாரிஸ்ட் என்றி சொல்லிக் கொள்ளும் நபர்கள் இருக்கையில் எனக்கு தெரிந்த பெரியாரிசத்தை சொன்ன மகிழ்வு எனக்கும், அசுவாரஸ்யமான பத்தி ஒன்றை படித்த அசூசை உங்களுக்கும் வாய்த்ததற்கு அந்தப் பதிவரே காரணம்.

சமீபத்தில் இளையராஜா பற்றிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அதில் பெரியார் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும் ஹேராமில் கோட்சேவை ஆதரித்து சில காட்சிகள் வருவதால் அதற்கும் இசையமைக்க மாட்டேன் என்றும் ராஜா மறுத்ததாக கட்டுரையாளர் சொல்லியிருக்கிறார். மேலும் இதற்கெல்லாம் மறுப்பு சொன்ன ராஜா தேவர் மகன் படத்தில் ”போற்றி பாடடி பெண்ணே.. தேவர் காலடி மண்ணே” என்று ஆதிக்க சாதிக்கு ஆதரவாக பாடியதை சாடியிருந்தார். இருக்கலாம். ஆனால் தேவர் மகன் வெளிவந்த ஆண்டு 90களின் தொடக்கம். ஹேராம் 99 என நினைக்கிறேன். 7,8 வருடங்களில் ஒரு மனிதனின் சிந்தனையில் மாற்றம் வந்திருக்காதா? ஒரு வேளை 90களிலே பெரியார் படம் எடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் ராஜா மறுத்திருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியுமா? சாதியை மறந்து புள்ளக்குட்டிகளை படிக்க வைங்கடா என்ற தகவல் சொன்ன படமாகவே எனக்கு தேவர் மகன் தெரிகிறது. மறைமுகமாக தேவர் இனத்தை போற்றும் படமென்று சொன்னாலும் கமல் அதை செய்ய வேண்டிய அவசியமென்ன? அவர் என்ன தேவரா? சினிமாத்துறை என்பது புரியாத புதிர். சொல்ல வரும் தகவல்கள் ஒரு வேளை சரியான முறையில் சொல்ல முடியாமல் போனாலும் வணிக காரணங்களால் அப்படியே வெளியிட வேண்டிய கட்டாயம் உண்டு. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவன் என்றாலும் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்து சம்பளம் வாங்கியது என் கையாலாகாத்தனம் என்றெண்ணுவதைப் போலத்தான் அதுவும்.

எந்தவொரு படைப்பும் சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்தே அது நல்ல படைப்பா இல்லையா என்று முடிவு செய்யலாம் என்கிறார் கவிஞர் தாமரை. நல்ல சினிமா என்பது என் அன்றாட வாழ்க்கையை இரண்டு நாட்களுக்காவது பாதிக்க வேண்டுமென்கிறார் பி.சி.ஸ்ரீராம். பசுபதியின் அளவுகோல் இன்னும் வித்தியாசமானது. அவருக்கு நல்ல படம், கெட்ட படம் என்று இரண்டு வகைகள்தான். படம் பார்க்கும் போது தன்னால் ஒன்றிப் போக முடிந்தால் அது நல்ல படம் என்கிறார். பார்வைகள் பல்லாயிரம். டப்பர்வேரில் தயிர்சாதத்துடன் வேலைக்கு செல்ல பஸ் பிடிக்க ஓடும் ஒருவன் பிசி.ஸ்ரீராம் சொல்வது போன்ற ஒரு படத்தை ரசிக்க முடியுமா? அவனுக்கென்று ஒரு சினிமா வருவது தேவையில்லாத ஒன்றா? அல்லது கலையையும், அரசியலையும் பஞ்சாமிர்தம் ஆக்கி எந்த ஒரு செயலிலும் பிரதி சொல்லாத கற்பிதங்களை எடுத்துக் கொண்டு கோஷமிடுவது நேர்மையா? எல்லோருக்கும் பிரத்யேகமாய்  ஒரு அரசியல் இருக்கிறது. ரசனை இருக்கிறது. இதை புரிந்துக் கொள்ளாமல் தனக்கு ஒவ்வாத படைப்பை இகழ்வதும், அதை ரசிப்பவனை மட்டம் தட்டுவதும் காலம் காலமாய் நடந்தேறிக் கொண்டுதானிருக்கிறது. ட்விட்டரை அதன் உச்சம் என்பேன். 140 கேரக்டர்களில் அநாயசமாக சிலரால் ஏறி மிதித்து செல்ல முடிகிறது. உணர்சிகளின் குவியல் ஆயிற்றே மனிதன்!!  மேலும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விழைகிறேன். ஆகவே  சில நாட்களாக மெளனராகம் மோகன் - ரேவதியைப் போல பட்டும் படாமலும் இயங்கிக் கொண்டிருக்கிறேன் ட்விட்டரில்.

சமீபத்தில் என் பயோடேட்டாவைப் பதிவேற்றியிருந்தேன். வீட்டில் திருமணப் பேச்சு எழுந்த போது தோன்றிய ஐடியா அது.அதைப் படித்துவிட்டு அன்றிரவு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதன் பின் நடந்தவை இதோ..

Hi karki. I am your regular reader. you really entertain us.

thanks a lot. May i know who is this?

I am sumathi, an MBA student from chennai.

cool. Thanks for your encouragement

karki, i read your bio data today.Are you seriously looking for girl?

yes. But amma thaan paarkiraanga :)

ok. then i have to speak to your mum. Shall i get her number?

no issues. you can call this number. I will ask her to speak.

உடனே கால் வந்தது.


hi am sumathi.

என்ன கால் பண்ணிட்டிங்க.?

நீங்கதானே பண்ன சொன்னிங்க. அம்மா கிட்ட கொடுங்க

விளையாடாதிங்க

ஹலோ. நான் சீரியஸாதான் சொல்றேன்.

முதல்ல உங்க ஃபோட்டோ அனுப்புங்க. நான் பார்த்துட்டு அப்புறமா அம்மாகிட்ட பேசலாம்..

என் ஃபோட்டோ எதுக்கு?

பின்ன?

கார்க்கி, நான் சொன்னது எங்க ஹாஸ்டலில் இருக்கும் அக்காவுக்கு. எனக்கு வயசு 21 தான் ஆகுது.

!@##$$%%^^&&&&

__________________

என்ன கொடுமை சார் இது? எனக்கு 27 தானே ஆகுது? அவங்க என் வயசு என்னன்னு நினைச்சிட்டாங்க??????

Aug 9, 2010

அவள் அப்படியொன்றும் அழகில்லை

24 கருத்துக்குத்து

 

அழகாய் செதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கதவு வேகமாய் திறந்தது. மூச்சிரைக்க உள்ளே நுழைந்தார்கள் மதனும், பாலாஜியும். இருவரின் முகத்திலும் பயத்தின் அடையாளங்கள் தெளிவாய் தெரிந்தன. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃப்ரிட்ஜின் உள்ளே இருந்து தண்ணீரை எடுத்தான் பாலாஜி.

அப்படியேண்டா அடிச்ச? போய்ட்டான். இப்ப என்ன செய்ய?

நீயும்தானே அடிக்கலாம்னு வந்த.. அவனையெல்லாம் விடக்கூடாதுடா. எனக்கு இன்னும் ஆத்திரம் அடங்கல. ஆனா அவன் இப்படி போயிடுவான்னு நினைக்கல.

போச்சு. எனக்கும் ஒண்ணும் புரியல. உன் மொபைல் கொடு. அண்ணன்கிட்ட சொல்லிடலாம்.

என்னடா?

மொபைல காணோம்டா.

அங்கேயே விட்டியாடா? லூசாடா நீ? மவனே வர்ற ஆத்திரத்துக்கு.. என்னும்போதே அவள் அப்படியொன்றும் அழகில்லை” என ஃப்ரிட்ஜுக்குள் இருந்து பாடியது. பெருமூச்சு விட்டபடி இதுக்க்குள்ள ஏண்டா வச்ச என்ற மதன் வந்த மெசெஜைப் படித்தான்.

நான் வைக்கலடா. நான் தண்ணிதான் எடுத்தேன். சத்யமா நான் வைக்கல.

”Plz forward this message to 10 persons in next 2 mins to avoid an accident”

இவனுங்கள… டேய். போலிஸ் கண்டுபுடிச்சிடுவாங்களா? உனக்கு அவன்கிட்ட இருந்து கடைசியா எப்ப ஃபோன் வந்துச்சு?

டேய். என் மெசெஜ் டோனும் அந்த பாட்டு கிடையாதுடா. ஃபோன நான் வைக்கலடா. எப்படி இந்த ஃப்ரிட்ஜுக்குள்ள வந்துச்சு?

இப்ப அதுவா முக்கியம் என்னும்போதே எந்த வித சத்தமமுமின்றி மிக அமைதியாக வெடித்து சிதறியது ஃப்ரிட்ஜ். அறை முழுவதும் குளிர்ந்த பாலும், காய்கறிகளும் தெறித்தன. அப்போதுதான் ஒரு கொலை செய்துவிட்டு பயந்து ஓடிவந்த மதனுக்கும், பாலாஜிக்கும் கிட்டத்தட்ட இதயம் நின்று போயிருந்தது. தேக்கு மரக்கதவு மெல்ல தன்னைத்தானே மூடிக் கொண்டதை பார்த்த மதன் செய்வதறியாமல் நின்றான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை என்று பாடியது மீண்டும். ஸ்தம்பித்து நின்ற மதனின் கைகளில் இருந்து மொபைலை வாங்கிய பாலாஜி படித்தான்.

“Dont stop reading this message loudly. Else you will be killed”.

நிறுத்தாமல் சொல்லத் தொடங்கினான் பாலாஜி. 12 நிமிடம் வரை நீடித்தது அவனது ஸ்ரீராமஜெயம். 

போதும்டா. சொல்லிட்டே இருந்தா எப்படி என்றான் மதன்.

ஃப்ரிட்ஜ பார்த்த இல்லை என்ற பாலாஜியின் தலை சிதறு தேங்காயைப் போல வெடித்தது. எதிரில் இருந்த மதனின் முகத்தில் சதைத் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. பாலாஜியின் ஒரு கண் மட்டும் மொபைலோடு ஒட்டியிருந்தது. இன்னொரு கண் டிவியின் மேல் இருந்தது. தலையில்லாத உடல் மட்டும் நின்றபடியே இருந்தது. கத்த முயற்சித்த மதனால் வெறும் காற்றை மட்டுமே வெளியிட முடிந்தது. முண்டத்தை கீழே தள்ளிவிட்டு மாடிக்கு ஓடினான் மதன். எதுவோ அவனை இழுப்பது போல் இருந்தது. அசுர வேகத்தில் தள்ளிவிட்டு மாடிப்படியில் கால் வைத்த போது மீண்டும் அந்தப் பாடல்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

விட்டு விட்டு எரிந்த மொபைலின் மேலிருந்த கண் மதனுக்கு என்னவோ செய்தது. மொபைலை எடுக்காமல் மாடிக்கு ஓட முடிவெடுத்து இரண்டாம் படியில் காலடி வைத்தான். ஃப்ரிட்ஜ் வெடித்தது போல நிசப்தமாக எஞ்சியிருந்த படிகள் அவன் கண் முன்னே சரிந்து விழுந்தது. எல்லாக் கதவுகளும் திறக்க முடியாவண்ணம் மூடியிருக்க அப்படியே சுவரில் சாய்ந்து அழுதான் மதன்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வேகமாக இடிபாடுகளினிடையே சிக்கியிருந்த மொபைலைத் தேடி எடுத்தான் மதன்.

cut your fingers to retain your hand”

ஏதோ ஒரு வேகத்தில் கத்தியை எடுத்தவன் வெட்ட முடியாமல் திகைத்தான். நொடிகள் நிமிடங்களாயின. மீண்டும் மொபைல் ஒலித்தது

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வலது கையில் கத்தியோடு இடதுகையால் எடுத்தான். டமால்… மொபைல் வெடித்துச் சிதற, மதனின் இடது கை சில அடிகள் தள்ளி தனியே பறந்துக் கொண்டிருந்தது. வலி தாங்காமல் அலறினான் மதன். மொபைல் வெடித்ததில் அடுத்த கட்டளை எப்படி வருமென்று பயந்தான். வலியோடும், ஒரே ஒருகையோடும் அங்குமிங்கும் ஓடியவன் மயங்கி விழுந்தான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

கண் விழித்த மதனின் பதட்டம் குறையவேயில்லை. மொபைலை பார்த்துக் கொண்டேயிருந்தான்.

ஃபோன் அடிக்குது இல்ல. எடேண்டா என்ற குரலும், எடுக்க வந்த பாலாஜியின் கையையும் பார்த்த மதனுக்கு எதுவும் புரியவில்லை.

மச்சி டெரர் கனவு. அந்த பரதேசி பையன நாம ரெண்டு பேரும் செம அடி அடிக்கிறோம். நான் போய் கண்டினியு பண்றேன் என்ற பாலாஜி போர்வைக்குள் மீண்டும் அடைக்கலமானான். மதன் மட்டும் ஃப்ரிட்ஜையே பார்த்துக் கொண்டிருந்தான்.  டமால் என்ற சத்தம் வந்த அதிர்ச்சியில் பதறி எழுந்தான் பாலாஜி.  ஃப்ரிட்ஜ் அப்படியே இருக்க, பெருமூச்சு விட்டபடி திரும்பினான் மதன். அழகாய் செதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கதவு வேகமாய் திறந்தது.

Aug 6, 2010

அப்போ நான் 65 கிலோதான்

28 கருத்துக்குத்து

 

என்னையும் ஒரு பதிவர் என மதித்து, மிகுந்த மரியாதையுடன், சீரிய முறையில் “தங்களால் எழுத இயலுமா” எனக் கேட்டு இந்தத் தொடரை தொடர அழைத்த புன்னகை அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், இனி வரும் காலங்களில் என்னை மீண்டும் அழைக்க வேண்டுமென அதே முறையில் மதித்து, மிகுந்து மரியாதையுடன், சீரிய முறையில் கேட்டுக் கொள்கிறேன். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

கார்க்கி.

இது ஒரு கேள்வியா? உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் பதிவுல என் பேர் கார்க்கி மட்டும்தாங்க. அதான் உண்மையான பேரும். ஆனால் சில பேரு ”??? புகழ் கார்க்கி”ன்னு சமீபமா சொல்லிட்டு இருக்காங்க.ஹிஹிஹி

அமெரிக்காவுல கூப்டாகோ..அடைமொழி தந்தாங்கோ. இந்த டகால்ட்டி எல்லாம் இங்க வேணாம் மவனே

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

அது ஒரு கஷ்ட காலங்க. உங்களுக்குத்தான். அத பத்தி எல்லாம் மறுபடியும் சொல்லி உங்கள இன்னும் கஷ்டப்படுத்தணுமா? விடுங்க

நீ ஒரு முள்ள மாறி. பதிவுலகம் ஒரு முடிச்சவுக்கி. இவங்க ஒண்னா சேர்ந்தாங்களாம். அதுக்கொரு கதையாம். நாராயணா.. இந்த கொசுத் தொல்லை தாங்கலடா!!

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

கமெண்ட் போட்டேங்க.

ஓ. போட்ட உடனே பிபிசில பேட்டி எடுத்தாங்களா?இல்ல செவ்வாய் கிரகத்துக்கு விருந்தாளியா கூப்டாங்களா? மறுபடியும் சொல்றேன் நீ ஒரு டிரைவர். டிரைவர்ர்ர்ர்ர்ர்

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சரியா போச்சு. நான் எது எழுதினாலும் அது என் சொந்த விஷயம்தானே? நான் என்ன குமுதமா இல்ல பாக்யாவா.. அடுத்த ஆளுடைய விஷயத்த எடுத்து போட்டுக்க? எழுத எந்த விஷயமும் இல்லைன்னா என் சொந்த வாழ்க்கைல நடந்த சில சம்பவங்கள எழுதுவேன். ஆமா நீங்க சொந்த விஷயம்ன்னு எதை கேட்கறீங்க??

இவரு பெரிய சுஜாதா. எழுதுவாராம். டேய் பேனா மூடி தலையா!! இதோட நிறுத்திக்க. அதான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்க எழுதவில்லை சமூகத்தை பழுது பார்க்க எழுதுகிறேன்னு சொல்லணுமா?

பாரு. தம்படி காசு சம்பாதிக்க வழியில்லை. இவரு எழுதி வசந்த மாளிகை கட்டுவாராம். இந்த கழிசடை பசங்க கூடலாம் ஏண்டா என்ன சேர வைக்கிற?

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்ணுதான். அப்புறம் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் வந்தப்ப 48ல இருந்த கணக்க 50 ஆக்கா ரெண்டு புரொஃபைல் நானே க்ரியேட் செஞ்சேன். ஆனா அது அப்படியே இருக்கு.பாஸ்வேர்ட் மறந்து போச்சு. அதுல எதுவும் எழுதல.

எதுக்கு இந்த விளம்பரம்? ஒண்ணையே உன்னால ஒழுங்கா வச்சிக்க முடியல. போய்டு. டேய் இந்த பக்கம் போடா..

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஹிஹிஹி..பிம்பிளாக்கி பிலாப்பி

இவரு பெரிய விஞ்ஞானி. இவர் கண்டுபிடிப்ப பார்த்து நாங்க அசந்துடுவோம். மவனே கடல்ல நண்டு வறுத்து தின்றதோடு நிறுத்திக்க. திமிங்கலத்த மேல எல்லாம் ஆசை வேணாம்

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அப்போ என் புராஜெக்டில் இருந்த ஒரே தமிழ்ப்பெண் ஆனந்தி.  நீ சீக்கிரமே பெரிய பதிவரா வருவேன்னு சொல்லுச்சு. அப்ப என் வெயிட் 65தான் :(((

இதை தஞ்சாவூரு கல்வெட்டுல எழுதி பக்கத்துல உட்கார்ந்துக்க.

10. கடைசியாக --- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இது என்ன சார் கொடுமை? கடைசியாவா? ஏன்? தூக்கா எனக்கு????

உன் இத்து போன மூஞ்சில எத்தனை தடவ் தாண்டா ஆசிட் ஊத்துறது?

பிகு: அதேதாங்க. வெள்ளை எழுத்த படிக்க செலக்ட் ஆல் செய்ங்க. இன்னொரு பதிலும் தெரியும்

Aug 4, 2010

மணமகள் தேவை

51 கருத்துக்குத்து

 

பெயர்                    : பிறகு தெரிவிக்கப்படும்

புனைபெயர்        : ஏழு இல்லை.

வயது                     : 27

தொழில்                : புண்ணாக்கு, பருத்திக்கொட்டை.. அதாங்க தொழிலதிபர்

உபதொழில்        :  பிளாக் எழுதுவது

நிறம்                       : Mango colour. அப்படின்னா மஞ்சளோ, பச்சையோ இல்லை. “மா நிறம்”

உயரம்                    : 340 /2 செ.மீ

குணம்                    : கொஞ்சம் சுமாரான நல்லவன்

குரல்                        : பாட முடியாத அளவுக்கு

நண்பர்கள்             : பதிவர்கள்

எதிரிகள்                 : பதிவர்

பிடித்த இடம்       :பெசண்ட் நகர் பீச்

பிடித்த உணவு   : ட்ரீட்டில் கிடைக்கும் எல்லாமே

பிடித்த உடை      : தொப்பியும், டீ ஷர்ட்டும்

பிடித்த படம்       : கில்லி

நடித்த படம்       : நீ எங்கே

அடுத்த படம்      : இரவின் நிறம், சரவெடி

பொழுதுபோக்கு : அடுத்தவரை கொல்வது அல்லது கிடார் வாசிப்பது.

நல்ல பழக்கம்            : தம்மடிக்காதது

கெட்ட பழக்கம்         :  பரிசல்காரன்

நம்புவது                        : ஆதியை

நம்பாதது                      : நர்சிம்மை

சமீபத்திய சாதனை : சுற்றுலா சென்று வந்தது

நீண்டகால சாதனை :இன்னும் உயிரோடு இருப்பது

 

ஜாதக நிலவரம்:

1) செவ்வாய் மட்டுமல்ல புதன், சனி, வெள்ளி என எந்த தோஷமமுமில்லை.

2) எந்தக் கட்டத்திலும் தோழி பெயர் இல்லை.

3) ஜாதக நிலவரம் எல்லாம் சாதகமாய் இருப்பதால் பாதகம் எதுவுமில்லை.

 

  மேற்கண்ட நபருக்கு கால் கட்டு போட வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முடிவெடுத்து பெண் பார்த்து வருகிறார்கள். விருப்பமிருப்பவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்  கீழ்கண்ட வழிகளில் தொடர்பு கொள்ளலாம்.

ட்விட்டர்

ஆர்குட்

பஸ்

ஃபேஸ்புக்

Aug 3, 2010

தோழி கள்

29 கருத்துக்குத்து

 

   மது விலக்கு பற்றி மீண்டும் யோசிக்கிறதாம் தமிழக அரசு. வா.நாம் கேரளாவுக்கு ஓடி விடுவோம் என்றேன் தோழியிடம். ”எதுக்கு. நான் என்னை உன்ன மாதிரி குடிக்கிற ஆளா” என்கிறாள் தன்னையறியாத தோழி.

வாரயிறுதி விடுமுறைக்கு ஊருக்கு சென்று திரும்பிய தோழியிடம் “உன் பிரிவில் உன்னிடத்தில தான் பேச முடியவில்லை. ஆனால் அனைவரிடமும் உன்னைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை” என்றேன். ”என்னத்த எல்லாம் உளறி வச்சியோ” என்று திட்டினாள்.

  சாக்லெட்டை சாப்பிட்ட தோழியின் உதட்டில் ஒட்டியிருந்தன சில துகள்கள். நல்ல காரியம் செய்யும் முன்பு இனிப்பு சாப்பிட வேண்டுமென்ற cadbury விதியை சொன்னேன். சரியென்று உதட்டைக் காட்டியவள், அதன் பின் கேட்டாள் “என்ன நல்ல காரியம் செய்யப் போற” என்று.  இந்த முறை கீழுதட்டை கடித்து வைத்தேன்

நான் ஒருத்திதானே? அப்புறம் ஏன் ”தோழிகள்” என்றே சொல்கிறாய் என்பது தோழியின் கேள்வி. அது தோழிகள் இல்லை. என் “தோழி கள்” என்று எப்படி புரியவைப்பது அவளுக்கு?

என் லேப்டாப்பும் உன்னை மாதிரியே இருக்கு. சீக்கிரம் சூடாகுது” என்றாள் தோழி . மடிகணிணி என்றால் மடித்து வைப்பது என்ற அர்த்தமும் உண்டு. நீ மடி மீது வைத்தால் அப்படித்தான் ஆகுமென்று சொல்லி வந்தேன்.

என்னடா மச்சி ஆச்சு என்ற நண்பனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் பெப்பே என்று சைகை காட்டிக் கொண்டிருக்கிறேன் நான். என்ன சாப்பிட்ட என்ற சிநேகிதியிடம் ”காலைல அவன் உதடு, மதியம் அவன் கன்னம்” என்று வெட்கமே இல்லாமல் சொல்லியிருக்கிறாள் தோழி

வெளிர்நீல தாவணியில் இரட்டை பின்னலோடு மிக அழகாய் இருந்தாள் தோழி அந்தப் புகைப்படத்தில். இந்த அழகுக்கு எல்லாம் வரி போட்டா எவ்ளோ ஆகும் தெரியுமா என்றேன். இப்பவே கட்டிடறேன் என்று இரண்டு கன்னங்களில் நான்கு முத்தம் தந்தாள்.  கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கும் ”கள்ள” அழகிற்கு என்ன செய்வாள்?

பிறந்ததில் இருந்தே இந்த வீடுதான். எதிரிலே பீச். இப்ப மாறிப் போக கஷ்டமா இருக்கு” என்ற தோழியை கவனிக்காமல் யோசித்துக் கொண்டிருந்தேன். “இனியும் சூரியன் கிழக்கு திசையில் தான் உதிக்குமா?”

Aug 2, 2010

எந்திரன் இ(ச்)சை

30 கருத்துக்குத்து

 

எந்திரன். அற்புத விளக்கு நம் கையில் கிடைத்துவிட்டது. பூதம் வெளிவர வேண்டியதுதான் பாக்கி. சில மாதங்கள் முன்பு இணையத்தில சில புகைப்படங்கள் வெளியானபோது ஏற்பட்ட சத்தம் அடங்கவே வெகு நாளானது. ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு ஆரூடம் சொல்ல ஆரம்பித்தார்கள் அப்போது.இப்போது இசை வெளியாகிவிட்டது. ரோபோ என்று சொன்னபின் வழக்கமான ரஜினி பாணி அல்லது ஷங்கர் பாணி பாடல்கள் மட்டும் இருக்கப்போவதில்லை என்பது யாவரும் அறிந்ததே. என் கசின் ரொம்ப நாட்களாக கேட்டுக் கொண்டேயிருக்கிறான் “ரோபோ மாதிரி படத்துல கூட பாட்டு வேணுமா?”. இதுவரை புன்னகையையே பதிலாக சொல்லிக் கொண்டிருந்த நான் நேற்று சொல்லிவிட்டேன் “புதிய மனிதா.. பூமிக்கு வா.. பாட்டு கேளுடா”.

image    எஸ்.பி.பியின் பாடலோடு தொடங்குகிறது ஆல்பம். அதுவே வெற்றிக்கு அடையாளம். பாபாவின் முதல் பாடலை பாடியவர்  ஷங்கர் மஹாதேவன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாட்டுக்கு வருவோம். ரஜினி ரோபோவை உருவாக்குக்கிறார். பேக்கிரவுண்டில் இந்தப் பாடல் ஒலிக்கிறது. ரோபோவின் பெருமைகளை பாடலில் சொல்கிறார்கள். இதுதான் சிச்சுவேஷன். வைரமுத்து மொழியையும் அறிவியலையும் காதல் செய்யவிடுகிறார். எஃகை வார்த்து / சிலிக்கான் சேர்த்து / வயரூட்டி உயிரூட்டி / ஹார்டிஸ்க்கில் நினைவூட்டி என்று தொடங்குகிறது பாடல். பொறுமையான வேகத்தில் ரகுமானின் குரலிலும், அவரது வாரிசு கதிஜாவின் குரலிலும் பயணிக்கும் பாடல் ”எந்திரா..என் எந்திரா” என்று எஸ்.பி.பியில் குரல் தொடங்கும் இடத்தில் ரப்பர் பந்தை போல் எகிறுகிறது. ரோபோ உருவாகிவிட்டான் திரையில் என்பதை இங்கே உணர முடிகிறது. இன்னும் அதே ஆட்டோக்காரன் குரல். வேண்டுமென்றால் கொஞ்சம் இளமையாகியிருக்கிறது எனலாம். பாலுவின் குரலில் இருக்கும் பெப் பாடலை இன்னும் அழகாக்கியிருக்கிறது. நல்ல surround system ல் கேட்கும்போது பல புதிய ஒலிகளை கேட்க முடிகிறது. இது வேறு மாதிரியான, புதுமையான படம் என்கிற போது இசையும் அப்படித்தானே இருக்க வேண்டும்?அதே கிடாரிலும், அதே ட்ரம்பெட்டிலும் வேறு நோட்ஸ் எழுதி வாசிக்க எதற்கு ரகுமான் என்று யாரும் சொல்லிவிட முடியாத அளவிற்கு உழைத்திருக்கிறார்கள். இது படத்தின் முதல் பாடலா என்று தெரியாது. ஆனால் ரோபோ உருவாவது இந்தப் பாடலில்தான்.தொகுப்பில் எனது இப்போதைய ஃபேவரிட். “புதிய மனிதா..பூமிக்கு வா..”

image    ரகுமானின் பாடல்கள் எப்போதும் ஸ்லோ பாய்சன் என்பது இசை கேட்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படியிருக்க அவர் பாடல்களை சுமாரான ஸ்பீக்கரில், கம்ப்ரஸ் செய்து  எம்.பி3 வடிவத்தில் தரவிறக்கம் செய்துவிட்டு, ஒரே ஒரு முறை கேட்டுவிட்டு ரகுமான அவ்ளோதாம்ப்பா என்று சொல்பவர்களை என்ன செய்வது? அதுவும் ஆரம்பமே கிட்டார் போன்ற ஒரு கருவியென்றால் சுத்தம். ஹெட்ஃபோனில் கேட்டால்தான் கிடாரின் அழகு புரியும்.  அதுவும் பொதுவாக ரகுமானின் மெட்டுகள், பாடலோடு நாமும் சேர்ந்து “செண்பகமே செண்பகமே” என்று பாடுவது போல் இருக்காது. 1/4, 2/4 என்ற வழக்கமான நோட்சிலும் இருந்து தொலையாது. அந்த சூட்சமம் புரிந்து அப்பாடல் நம்முள் இறங்க சில காலம் தேவைப்படும். அப்படித்தான் “காதல் அணுக்கள்” பாடலும். இந்தப் பாடல் வழக்காமன ஷங்கர் பாணி மெலடியாக தெரிந்தாலும் வார்த்தைகள் வித்தியாசப்படுகின்றன. ”நீ நியூட்டன் நியூட்டனின் விதியா/ உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?” என்பதிலே இது ஒரு விஞ்ஞானியின் காதல் என்று சொல்கிறார் கவிப்பேரரசு. வழக்கமாக சரணம் முடிந்தவுடன் மீண்டும் பல்லவி. பின் interlude . இப்படித்தான் கம்போஸ் செய்வார்கள். இதில் இரண்டாம் சரணம் முடிந்தவுடன் ஒரு அட்டகாசமான interlude.பின் பல்லவி வருகிறது. கொடியிலே மல்லிகைப்பூ பாடலிலே இதை நம்ம ராஜா முயற்சி செய்தார். பின் டும்டும்டும்மில் கார்த்திக்ராஜாவும் செய்ததாக நினைவு. இப்பாடலில் அந்த interlude கேட்கும்போது நாம் கேட்பது எந்திரன் பாட்டல்லவா என்று நினைவு திரும்புகிறது. ஓம் சிவ ஓம், ஹொசன்னா என்று டாப் கியரில் போகும் விஜய் பிரகாஷின் இசைப்பயணத்தில் இன்னொரு மைல்கல். ஆப்பிரிக்காவில் மனித காலடியே படாத இடத்தில் படம் பிடித்திருக்கிறார்களாம்.

image     பொதுவாகவே ஷங்கர் பாடல்களில் கிராஃபிக்ஸ் தூக்கலாக இருக்கும். அப்படியிருக்க கிராஃபிக்ஸ் உருவான ரோபோவுக்கு தனியே பாடல் இல்லாமலா இருக்கும்? அரிமா அரிமா என்ற பாடல் ரோபோரஜினி ஐஷ்வர்யா மீது மோகம் கொண்டு பாடுவதாக  அமைத்திருக்கிறார்.  உலகையே வென்றுவிட்ட அரசன் ஒருவன் நாடு திரும்பும்போது அவனை வரவேற்க எத்தகைய அதிரடி வரவேற்பு செய்திருப்பார்கள்?அப்படியொரு அதிரடி இசையோடு தொடங்குகிறது பாடல். இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் / இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் / அட அழகே உலகழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்”. தொடக்க இசைக்கு எந்த வித குறைவுமின்றி வார்த்தைகளால் வானுயரத்திற்கு தூக்குகிறார் பாடலாசிரியர். பில்டப் ஏறுகிறது நமக்கு. அதைத் தொடர்ந்து கர்ஜிக்கும் குரலோடு ”அரிமா அரிமா.. நானோ ஆயிரம் அரிமா” என வருகிறார் ஹரிஹரன். கண்மூடிக் கேட்கும் போது காட்சிகளாக விரிகிறது. ”ஷங்கர் எப்படி இதை காட்சிப்படுத்தி இருப்பார்? சூப்பர்ஸ்டார் எப்படியிருப்பார்?” வேறு வழியில்லை. காத்திருக்கத்தான் வேண்டும். சாதனா சர்கம்மின் குரலில் ஏதோ குறைகிறது. ஒருவேளை ரோபோவின் தொந்தரவால் பாடுபடும் ஐஷுவின் குரல் அப்படி இருக்க வேண்டுமென இயக்குனர் எதிர்பார்த்தாரோ என்னவோ? பென்னி தயாளும், நரேஷ் அய்யரும் கோரஸாம். பிரம்மாண்ட பாடலாக அமையும்.

image

முணுமுணுத்துக் கொண்டிருக்கு இன்னொரு பாடல் “பூம் பூம் ரோபோடா..ஸூம் ஸூம் ரோபோடா”. நம்ம ரோபோ ரஜினி மக்கள் மனசுல இடம் பிடிக்கிறார். இந்தியன் தாத்தா டிரெஸ்ஸ எல்லோரும் போட்டுட்டு சுத்துவாங்களே!!அப்படி ஒரு சிச்சுவேஷன்ல வர்ற பாட்டென்று நினைக்கிறேன். பாடலை எழுதியவர் கார்க்கி. அட மதன் கார்க்கிங்க. “ஆட்டோ ஆட்டோக்காரா.. ஏ ஆட்டோமேட்டிக்காரா.. கூட்டம் கூட்டம் பாரு. உன் ஆட்டோகிராஃபுக்கா” என்றும் “பட்டித்தொட்டி எல்லாம் நீ பட்டுக்குட்டியோ” என்றும் வருவதைப் பார்த்தால் மேலே சொன்ன சிச்சுவேஷன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. ஆனால் “திருமண திருநாள் தெரியும் முன்னே நீ எங்கள் பிள்ளையோ” என்ற வரியும் வருகிறது இது ஐஷ்வர்யா பாடுவது போல் தெரிகிறது. எது எப்படியோ இன்னொரு அடிக்ட் செய்ய வைக்கும் பாடல். யோகி பியின் ராப்பும் தூள் பரத்துகிறது.

image   பாடல்காட்சிகளினால் ஷங்கருக்கு இன்னொரு பயனும் இருக்கிறது. அவரின் அடங்காத கற்பனை குதிரை தரும் அனைத்தையும் கதைக்குள் நுழைப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால் பாடல்காட்சிகளில் எல்லாமே சாத்தியம். அதை தனித்தொகுப்பாக போடுமளவிற்கு ஆல்பங்களுக்கு இங்கே ஆதரவில்லை. இந்தப் பாடலும் அப்படி ஏதோ அவர் மனதில் தோன்றிய ஒன்றின் காரணமாக இருக்கலாம்.ரோபோ ஸ்டைல் பாடல்களாகவே எல்லாம் இருப்பதால் சற்றே வித்தியாசப்படுத்த ரஜினையையும் ஐஷுவையும் காதல் பாஸ்போர்ட்டில், முத்த விசாவோடு நாடு கடத்துகிறார். 2 வருடம் முன்பு வெறும் பாடலாசிரியராக இருந்த பா.விஜய் எழுதியிருக்கிறார். “ஏவாளோட தங்கச்சியே எங்கூடத்தான் இருக்கா/ ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா” என்ற வரியை தவிர வேறெதுவும் கவரவில்லை என்னை. நெட்டில் வெளியான படங்கள் இந்த பாடல் காட்சிதான்.

image   இதை தவிர சிட்டி ஷோ கேஸ் என்ற தீம் மியூசிக்கும், இரும்பிலே ஒரு இதயமென்ற பாடலும் இருக்கிறது. மற்ற பாடல்களோடு ஒப்பிடும்போது அவை என்னை அதிகம் கவரவில்லை. எனக்கு இப்போது இருப்பது இரண்டு டவுட்.  ரோபோ ஓக்கே. பாட்டு ஓக்கே. ஸ்டில்ஸ் ஓக்கே. ஆனா இந்த ரோபோ எழுந்து வந்து லஞ்சம் வாங்குபவரையும், கள்ளப்பணம் வைத்திருப்பவரையும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவரையும், அலட்சியம் செய்பவரையும் துவம்சம் செய்ய நினைத்தால்???? இரண்டாவது சந்தேகம். படம் போராக சென்றால், எந்திரா எந்திரா என்று எஸ்.பி.பி பாடியதை வைத்து ரசிகர்களும் “எந்திரா. ..எந்திர்ரா” என்று சொல்லிவிட்டால்?

அடிக்க வராதிங்கப்பா. இது மாதிரி பாடலையோ, படத்தையோ பற்றி எழுதினால் முடிவில் அதன் நெகட்டிவ் விஷயங்கள் குறித்தும் எழுத வேண்டுமாம். எந்திரனின் இசையில் அப்படி எதுவும் எனக்கு தெரியாததால் சந்தேகம் என்ற பெயரில் சொல்லிவிட்டேன்.

Totally, Enthiran music

 

ROCKSSSSS..

 

பி.கு:

1) ஆகஸ்ட் 8ஆம் தேதி YMCA மைதானத்தில் இசை வெளியீட்டு விழாவை மீண்டும் நடத்த சன் பிக்சர்ஸ் திட்டமிட்டிருக்கிறார்கள்.

2) படத்தில் ரோபோவின் பெயர் சிட்டி என நினைக்கிறேன்.

 

all rights reserved to www.karkibava.com