Jul 13, 2010

கவிப்பேரரசுக்கு வாழ்த்துக்கள்


 

ஒரு பொன்மாலைப் பொழுதில் துவங்கியது வைரமுத்து அவர்களின் திரைவாழ்க்கை. பூமரங்களோடு தமிழ்நாட்டு மக்களும் சாமரம் வீசி, பூங்கதவை திறந்து வைத்தனர். கதவு திறந்த கனம் மடைதிறந்து தாவும் நதியலையென வைரமுத்துவின் தமிழ் பொங்கிவந்தது. தமிழ் என்னும் அக்னிசூரியன் வைரமுத்து என்னும் மரத்தின் மீது பொழிய, பாடல்கள் என்னும் நிழல்கள் நாம் இளைப்பாற ஏதுவாகின. இன்றுவரை இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். கொண்டிருக்கிறோம். கொண்டிருப்போம்.

இலக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களிலும் இவரின் பங்களிப்பு இருந்தாலும் ஒரு பாடலாசிரியராகவே என்னை வெகுவாக கவர்கிறார்.

”முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுகிறதோ அது மழையோ”

என்பதில் தொடங்கி இதோ இந்த மாத இறுதியில் வெளிவரவிருக்கும் எந்திரனில் இப்படி எழுதி இருக்கிறார்

அஃறிணையின் கடவுள் நான்
காமுற்ற தெய்வம் நான்
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிக்கான் சிங்கம் நான்.

தொழில்நுட்பத்தின் உச்சத்தில் ஒன்றாக ரோபோவை கூறலாம். அது தொடர்பான படத்தில், அந்த ரோபோவைப் பற்றி விளக்கும் வரிகளில் சிலிக்கான் என்பதைத் தவிர எங்கேயும் பிறமொழி கலப்பில்லை. தமிழில் இதுவரை வந்த பப்(Pub) பாடல்களில் சிறந்ததென சொல்லப்படுவது “யாக்கைத் திரி”. அதிலும் தமிழைத் தவிர வேறில்லை. ஆய்த எழுத்து படப் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட வேற்று மொழி வார்த்தைகள்

“ஆறு டிகிரியில்”, “என் ஹார்மோன் நதியில்”, “ஹேய் குட்பை நண்பா”, (இன்னும் ஓரிரு வார்த்தைகள் இருக்கலாம்) அவ்வளவே.

   மெட்டுக்குள் முத்தெடுக்கும் கலை இவருக்கு கைவந்த கலை. எந்த ஒரு சந்தத்திலும் சற்றேறக்குறைய என்றில்லாமல் சதக்கென சென்று அமர்ந்துவிடும் இவரின் வார்த்தைகள். பல உருது கவிதைகள் இவரால் மிக அழகாக தமிழ்ப்படுத்தப்பட்டதுண்டு.

“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி..
சற்றே நிமிர்ந்தேன்..தலை சுற்றிப்போனேன்.. ஆஹா!!!! அவனே வள்ளலடி”

இது ஒரு உருது கவிஞனின் கற்பனைதான். ஆனால் மிக அழகாக மொழி பெயர்க்கப்பட்டதாக உணர்கிறேன். ”மொழி” படத்தின் மொத்தக்கதையையும் உள்வாங்கி ஒரு பாடல் எழுத வேண்டியிருந்தது. கதை கேட்டபின் வைரமுத்து அவர்களுக்கு ஒரு உருது கவிதை நினைவுக்கு வந்திருக்கிறது. சற்றே அதை மாற்றி எழுதுகிறார், மொத்த கதையையும் இரண்டே வரிகளில்

“இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை”

உசுரே போகுதே பாடல் வெளிவந்த நாளன்று நண்பன் ஒருவன் அது 80களின் சாயலில் எழுதப்பட்டதாகவும், இன்றைய தலைமுறை அதை ஏற்காது எனவும் சொன்னான். தினமும் புதிதாய் குறைந்தது 10 பேருக்கு அழைத்துப் பேச வேண்டிய வேலையில் இருக்கும் எனக்கு, ஒரு முறையாவது இதைக் கேட்கும் வாய்ப்பு இல்லாத நாளில்லை. வைரமுத்து காலத்தை வென்ற கலைஞன்.

மணிரத்னத்தின் சமீபத்தில் படங்களில் நடக்கும் விஷயம் இது. தமிழில் எழுதப்படும் பாடல் ஜாவித் அக்தரால் இந்தியில் எழுதப்படும். ”  ஏ அஜ்னபி” என்று அவர் எழுதியதன் அர்த்தத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டு எழுதினார் கவிப்பேரரசு. :துண்டு துண்டான உயிரை வைத்துக் கொண்டு வாழ்கிறேன்” என்று எழுதியதை “என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா” என்று மாற்றினார்.   வைரமுத்து தமிழில் எழுதியதை ஜாவித் மொழிபெயர்த்ததும் உண்டு.

 “ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதே உன் கூந்தலில் நின்றாடத்தான்”

இதை மொழிபெயர்க்க முடியாமல் திண்டாடியதாக பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஜாவித்.

சோகத்தை வைரமுத்துவின் பேனா எழுதும் பாங்கே வேறு. அலைபாயுதேவில் ஒரு காட்சி. அழுதுஅழுது வீங்கிய கண்களோடு ஷாலினி பாடுவதாக வரும் வரி.

“அந்த குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே”

சிந்துபைரவியில் கதைநாயகி தன் பெற்றோரைப் பற்றி தெரிந்துக்கொள்கிறார். ஆனால் அம்மாவென்று அழைக்க முடியாத சூழ்நிலை.எழுதுகிறார் வைரமுத்து

பெண்கன்று பசுத்தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை

நிலைமையை விளக்கிய பாடலாசிரியர் சோகத்தின் வீரியத்தை இப்படி சொல்கிறார்

என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைத்திருப்பேனே”

______________________________________________________________________________

நேற்று இரவு ட்விட்டரில் வைரமுத்து ஸ்பெஷல் என பிடித்த வரிகளை பலரும் ட்விட்டிக் கொண்டிருந்தோம். அதன் சுட்டி இதோ

எழுதிக் கொண்டே போகலாம். காதலைப் போல கவிப்பேரரசுவின் பாடல்களும் முடிவிலிதான்.

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களோடு முடித்துக் கொள்கிறேன்

 

 

41 கருத்துக்குத்து:

தமிழ்ப்பறவை on July 13, 2010 at 12:55 AM said...

கவிப்பேரரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

தமிழ்ப்பறவை on July 13, 2010 at 12:55 AM said...

நீங்க ட்விட்டர்ல சொன்ன தலை இவர்தானா.. நான் வேற விதமா எதிர்பார்த்திட்டிருந்தேன்... :-(

radhika on July 13, 2010 at 1:05 AM said...

//ஒரு பொன்மாலைப் பொழுதில் துவங்கியது வைரமுத்து அவர்களில் திரைவாழ்க்கை. பூமரங்களோடு தமிழ்நாட்டு மக்களும் சாமரம் வீசி, பூங்கதவை திறந்து வைத்தனர். கதவு திறந்த கனம் மடைதிறந்து தாவும் நதியலையென வைரமுத்துவின் தமிழ் பொங்கிவந்தது. தமிழ் என்னும் அக்னிசூரியன் வைரமுத்து என்னும் மரத்தின் மீது பொழிய, பாடல்கள் என்னும் நிழல்கள் நாம் இளைப்பாற //

Classic start saga. But felt something is missing in rest of the post. But good job.

Heartiest wishes to the great lyricist.

ப்ரியமுடன் வசந்த் on July 13, 2010 at 1:30 AM said...

சகா அழகான வாழ்த்துக்கள் உங்களோட காதல் குறும்போட ...

கள்ளிக்காட்டு கவிஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ப்ரியமுடன் வசந்த் on July 13, 2010 at 1:31 AM said...

அவருடைய ஃபேஸ்புக் பேஜ்லயும் தினமும் கவிதை மழை கொட்டுகிறார்...

http://www.facebook.com/pages/kavipperaracu-vairamuttu/24008597756?filter=2&v=wall

ப்ரியமுடன் வசந்த் on July 13, 2010 at 1:34 AM said...

அவருடைய தோழிமார் கதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் மதுரை மண்வாசனை தெரியாதவங்களுக்கு...ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம் கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்

புங்க மரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன் பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாட
சீக்கிரமா அவுருதுன்னு
இறுக்கி முடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட

பட்டுச் சிறுகயிறு
பட்ட எடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில்நீ
எண்ணெய்வச்ச நெனவிருக்கா?

மருதாணி வச்சவெரல்
மடங்காம நானிருக்க
நாசமாப் போன
நடுமுதுகு தானரிக்க
சுருக்காநீ ஓடிவந்து
சொறிஞ்சகதை நெனவிருக்கா?

கருவாட்டுப் பானையில
சிறுவாட்டுக் காசெடுத்து
கோனார் கடை தேடிக்
குச்சிஐசு ஒண்ணுவாங்கி
நான்திங்க நீகுடுக்க
நீதிங்க நான்குடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்க்கலராக் கண்ணீர்விட
பல்லால் கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதி மண்ணில் ரெண்டுதுண்டா
விழுந்திருச்சே நெனவிருக்கா?

வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நெலவடிக்க
வெள்ளித் துருவல் போல்
வெள்ளைமணல் பளபளக்க
கண்ணாமூச்சி ஆடையிலே
கால்கொலுசு நீ தொலைக்க
சூடுவப்பா கெழவின்னு
சொல்லிச்சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசு
எடுத்துனக்கு மாட்டிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன்
ஏண்டீ நெனவிருக்கா?


பல்லாங்குழி ஆடையில
பருவம் திறந்துவிட
ஈரப் பசை கண்டு
என்னமோ ஏதோன்னு
சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நான் கத்த,
விறுவிறுன்னு கொண்டாந்து
வீடு சேர்த்த நெனவிருக்கா

ஒண்ணா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருசன் கட்டி
ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதித்தோம் நெனவிருக்கா?

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஒடானோம்
இருவது வயசோட
இருவேறு தெசையானோம்

தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலி கட்டி நீ போக
வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நான்போக
ஒம்புள்ள ஒம்புருசன்
ஒம்பொழப்பு ஒன்னோட
எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட

நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு
வயித்தில் வளந்தகொடி
வயசுக்கு வந்திருச்சு

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனைகட்டும் புங்கமரம்
போன வெருசத்துப்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு...


-வைரமுத்து


ப்ரியமுடன் வசந்த் on July 13, 2010 at 1:46 AM said...

முதன்முதலாய் அம்மாவுக்கு... என்னும் கவிதையில் வரும் இந்த வரிகள் பிடிக்காத மகனுமில்ல கவிஞனுமில்ல...ஆயிரந்தான் கவி சொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே!
குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல ...
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு!

கண்ணு காது மூக்கோட
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்த ஒன்ன
நெனச்சா அழுக வரும் ...

கதகதன்னு களி கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா...

கொத்தமல்லி வறுத்து வச்சுக்
குறுமொளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிறு மொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழ கொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்...

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊறும் ...

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்..
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போன பின்னே
அஞ்சாறு வருசம் உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே...

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்ச மகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!
....(மௌனம்)
....
வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

- வைரமுத்து


அவரோட கம்பீர குரலில் கேட்க http://www.youtube.com/watch?v=s3e4PO2rqLk

சி. கருணாகரசு on July 13, 2010 at 4:37 AM said...

திரு வைரமுத்து தமிழுக்கு கிடைத்த....
மைத்தீரா எழுது கோல்!
தமிழை சில மைல்கள் நகர்த்தும் நெம்புகோல்!!

கவிஞருக்கு வாழ்த்துக்கள்.


உங்களுக்கு வணக்கம்.

அருண்மொழிவர்மன் on July 13, 2010 at 5:14 AM said...

"“யாக்கைத் திரி”. அதிலும் தமிழைத் தவிர வேறில்லை."

இந்தப் பாடலில் வடமொழி வார்த்தைகள் மிக அதிகம் கலந்திருக்கின்றன. இது பற்றி வைரமுத்துவே, வட மொழி வார்த்தைகள் கலந்திருந்தாலும் பாடல் அழகாகவே இருக்கின்றது என்று கூறி இருக்கிறார்..

அருண்மொழிவர்மன் on July 13, 2010 at 5:16 AM said...

இன்னுமொரு தவறு;

"விப்பேரரசு. :துண்டு துண்டான உயிரை வைத்துக் கொண்டு வாழ்கிறேன்” என்று எழுதியதை “என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா” என்று மாற்றினார். அடுத்த முறை வைரமுத்து தமிழில் எழுதியதை ஜாவித் மொழிபெயர்க்க வேண்டும்.

“ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதே உன் கூந்தலில் நின்றாடத்தான்”

இதை மொழிபெயர்க்க முடியாமல் திண்டாடியதாக பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஜாவித்.

"

இதில் ஜீன்ஸ் திரைப்படமே முதலில் வெளியானது. அது போலவே அதன் பாடல்களும். ஜீன்ஸ் 98ன் தொடக்கத்தில் வெளியாக உயிரே பாடல்கள் வெளியானதே 98 ஆவணியில் தான்... ;))

கலாநேசன் on July 13, 2010 at 6:00 AM said...

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இதோ என் வாழ்த்துக்கள்.
http://somayanam.blogspot.com/2010/07/blog-post_13.html

Sen22 on July 13, 2010 at 7:02 AM said...

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி on July 13, 2010 at 7:12 AM said...

ரசனையான பதிவு கார்க்கி. பிறந்த நாள் வாழ்த்துகள் கவிப்பேரரசிற்கு.

நாய்க்குட்டி மனசு on July 13, 2010 at 8:15 AM said...

இன்றும் நல்லா கவி வரிகள் இருக்கின்றன கார்க்கி, இசையின் சத்தத்தில் அமிழ்ந்து போகின்றன. அதனால் தான் என்னை விட சின்ன பையனா இருந்தும் நான் ரசித்த எண்பதுகளின் வரிகள் தான் அதிகம் சொல்லப் பட்டு இருக்கின்றன. ஒத்த ரசனையை பார்க்கும் போது நல்லா தான் இருக்குது கவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மகேஷ் : ரசிகன் on July 13, 2010 at 8:26 AM said...

Best Wishes!

டம்பி மேவீ on July 13, 2010 at 9:01 AM said...

வைரமுத்து அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

அவரோட பாட்டை கேட்கும் போது ...அந்த வரிகளுடனே நானும் வாழ்கிறோமே ...அது தான் அவரோட வெற்றி ...

டம்பி மேவீ on July 13, 2010 at 9:02 AM said...

TWITTER LINK வந்து என்னோட account க்கு தான் போகுது boss .... அதை இங்கேயே தந்திருக்கலாமே

டம்பி மேவீ on July 13, 2010 at 9:05 AM said...

நான் காற்றில் எனது பதிவுகள்ன்னு ஒரு கவிதை எழுதினேன் ..நல்ல இருக்குன்னு சில பல பேர் பாராட்டுனாங்க ....அது கூட அவரோட பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்க்கிறேன் பாட்டுல impress ஆகி ..அதே மாதிரி எழுத try பண்ணி எழுதினது தான்

"ராஜா" on July 13, 2010 at 9:33 AM said...

உன்னோடு நான் கொண்ட
பந்தம்
மண்ணோடு மழை கொண்ட
சொந்தம்
காய்ந்தாலும் அடி நெஞ்சில் ஈரம்

என்னை வியக்க வைத்த வைரமுத்துவின் வரிகள் ....

அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Faaique Najeeb on July 13, 2010 at 9:54 AM said...

கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புது வேர்கள் போடும் , அது போல நம் காதல் மீளும் ; உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மலை கொண்ட சொந்தம் , காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும் ; பஞ்ச வர்ண கிளி நீ பரந்த பின்னாலும் அங்கு வண்ணம் நெஞ்சில் இருக்கு... ;

Faaique Najeeb on July 13, 2010 at 9:55 AM said...

ராஜா கொஞ்சம் முந்திட்டாரு ......

தராசு on July 13, 2010 at 10:16 AM said...

அருமையான வாழ்த்து வரிகள் கார்க்கி. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

கார்க்கி on July 13, 2010 at 10:17 AM said...

தமிழ்ப்பறவை, அங்கதான் அத்தனை பாட்டு சொன்னோமே சகா

நன்றி ராதிகா

நன்றி வசந்த்,பதிவாக போடுமளவு விஷயம் சொல்லிட்டிங்க

நன்றி கருணாகரசு.

அருன்மொழி, ”ஜீவன்” போன்ற வார்த்தைகளை சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பேச்சுத்தமிழில் அதெல்லாம் இரண்டற கலந்துவிட்டன. நான் சொல்லவந்தது பப் என்பதால் ஆங்கில வார்த்தைகளோ, அல்லது அர்த்தமே இல்லாத டைலமோ போன்ற வார்த்தைகளோ இல்ல. ஜீன்ஸ் முதலில் வெளிவந்தாலும் உயிரேதான் முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என நினைக்கிறேன். தகவலுக்கு நன்றி

நன்றி கலாநேசன்

நன்றி சென்

நன்றி விக்கி

நன்றி நாய்க்குட்டி மனசு. உசுரேபோகுதே, உயிரே , ஜீன்ஸ் என புதுப்பாடல்களும் சொல்லியிருக்கிறேன்

நன்றி மகேஷ்

நன்றி மேவீ. ட்விட்டர் லாக் இன் பண்ணுப்பா. search results வரும்பாரு..

நன்றி ராஜா. “ஏற்றிவிடவோர் தந்தையுமில்லை” பாட்டுதான் பிடிக்கும்ன்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன்.. ஹிஹிஹிஹி

நஜீப், கொஞம் முத்திட்டார். நீங்க வேற பாட்டு சொல்லுங்க

அருண்மொழிவர்மன் on July 13, 2010 at 10:39 AM said...

" அருன்மொழி, ”ஜீவன்” போன்ற வார்த்தைகளை சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பேச்சுத்தமிழில் அதெல்லாம் இரண்டற கலந்துவிட்டன"

இல்லை கார்க்கி

இந்த வரிகளைப் பாருங்கள்


ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் துவைதம்
காதல் அத்வைதம்
சர்வம் சூன்யம்
காதல் பிண்டம்
மானுடம் மாயம்
காதல் அமரம்


இது போலவே; ஜீன்ஸ் பாடல்கள் மற்றும் அதற்கான வேலைகள் 96லேயே தொடங்கிவிட்ட்ன. மணிரதனம் பட வேலைகள் வருடக் கணக்கில் எடுப்பதில்லை.... இருவர் வெளியாகும் போதே ஜீன்ஸ் பட வேலைகள் ஆரம்பித்து விட்டன

"ராஜா" on July 13, 2010 at 10:48 AM said...

// “ஏற்றிவிடவோர் தந்தையுமில்லை”

சகா அது வேறு .. இது வேறு ...

அது காதல் feelings ...
இது தல அதிரடி .... இரண்டுமே பிடிக்கும் ...


இருந்தாலும் நீங்க சொன்ன அந்த பாட்டுல எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்

"இவன் கொண்ட நெருப்போ குறைவதில்லை
நெருப்பென்றும் தலைகீழாய் எரிவதில்லை ...."

ரெண்டே வரியில பல அர்த்தங்கள் அதுவும் "தலை"க்கு மிக பொருத்தமாய் ....

மோகன் குமார் on July 13, 2010 at 11:24 AM said...

நல்ல ரசனை கார்க்கி உங்களுக்கு. தேர்ந்தெடுத்த வரிகள்.

பரிசல்காரன் on July 13, 2010 at 12:24 PM said...

கவிப்பேரரசுக்கு எனது வணக்கங்களும்..

//நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்//சகா.. சாகலாம்தானே?

manasu on July 13, 2010 at 12:44 PM said...

கள்வரே கள்வரே கேட்டீர்களா?

கை கொண்டு பாரீரோ, கண் கொண்டு சேரீரோ

உடைகளைவீரோ உடல் அணிவீரோ.

நல்ல வரிகள்.

பரிசல்காரன் on July 13, 2010 at 1:09 PM said...

தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்

புரவிகள் போலே புரண்டிருப்போம்

ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை

அருவிகள் போலே அழுதிருப்போம்//


தாய் தின்ற மண்ணே... இது பிள்ளையின் கதறல்..

LOSHAN on July 13, 2010 at 1:43 PM said...

சுவையான தொகுப்பு. சுருக்கமான அழகான வசனங்கள்.

எனக்கும் மிகப் பிடித்த,இதயம் கவர்ந்த கவிஞர்,பாடலாசிரியரான கருப்பு நெருப்பு வைரமுத்துவுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஆண்டுகளானாலும் அன்றைய வரிகள் தெனாகவே இருக்கின்றன. இன்றைய அவர் வரிகளும் புதிய தீயாகவே வலிமை பெற்றுள்ளன.

ராவணன் உசுரே போகுதே..
ஆயிரத்தில் ஒருவன் தாய் தின்ற மண்ணே..

நேசன்™..., on July 13, 2010 at 1:59 PM said...

எனக்கு இவரின் வரிகளில் மிகவும் பிடித்தது இது!
"சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத் தான் வந்தேனே!
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே!"

சு.சிவக்குமார். on July 13, 2010 at 2:52 PM said...

நல்ல பதிவு.அவருடைய “இன்னொரு தேசிய கீதம்,சிற்பியே உன்னை செதுக்குகிறேன்,ரத்த தானம்,கண்ணீர் பூக்கள்,வைகறை மேகங்கள்” முதலான புத்தங்களின் பித்தேறி அலைந்திருக்கிறேன்.

அதிலும் அவருடைய கண்ணீர் பூக்கள் புத்தகத்தில் நிறைய கருப்பொருள்கள் கொண்டு எழுதப்பட்ட கவிதைத் தொகுதி எனலாம்..


“ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதே உன் கூந்தலில் நின்றாடத்தான்”

இதை மொழிபெயர்க்க முடியாமல் திண்டாடியதாக பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஜாவித்.

ஆனால் மேலே சொல்லபட்டதில் - ”தமிழில் ஒரே பொருளுக்கு நிறைய சொற்கள் இருக்கிறது.ஆனால் எங்களுடைய மொழியில் அவ்வாறு இல்லை.அதனாலேயே வேறு எந்த மொழியிலிருந்தும் தமிழுக்கு எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்.ஆனால் தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வது அவ்வளவு எளிதானல்ல” என்று தமிழ்மொழியைப் பற்றியே ஜாவித் சிறப்பித்துக் கூறியதாக நான் படித்திருக்கிறேன்.

உதாரணமாக கண்ணதாசனின் ஒரு பாட்டுவரி...

”மலர்ந்தும் மலராத பாதி மலர் போல”...


வைரத்துவின் வரி

“ஒற்றைக் காலில் பூக்கள் நிற்பது”

மேலே சொன்ன இரண்டு பாடல்களிலும் ஒரே பொருள்தான் வருகிறது,ஆனால் சொற்களின் சலுகையைக் கொண்டு நாம் இரண்டில் எதாவது ஒன்றைக் கொண்டு நிரப்பிக்கொள்ளலாம்.

வண்ணம்,நிறம்.

வாசனை,மணம்,நாற்றம்,வாடை.இப்படி....

ரவிச்சந்திரன் on July 13, 2010 at 3:00 PM said...

கவிப்பேரரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

பித்தன் on July 13, 2010 at 3:03 PM said...

கவிப்பேரரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

mani on July 13, 2010 at 3:35 PM said...

vaalthukkal kavingarukku

T.V.ராதாகிருஷ்ணன் on July 13, 2010 at 3:35 PM said...

வருங்கால எம்.எல்.சி.,க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

mani on July 13, 2010 at 3:39 PM said...

Last year NARSIM's post on vairamuthu..

http://www.narsim.in/2009/07/blog-post_1629.html

where is he now????????????come back narsim

C.Rajapandiyan on July 13, 2010 at 3:44 PM said...

உங்களோடு நானும் கவியரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ப.செல்வக்குமார் on July 13, 2010 at 4:10 PM said...

வைரமுத்துவின் தீவிர ரசிகன் நான் ..
"நூறடி பளிங்கை ஆறடி ஆகி சிற்பிகள் செதுக்கிய உருவமடி"
அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

Lakshmi Narasimhan on July 13, 2010 at 5:56 PM said...

ethechaiyaage browsing il sikkiye inthe kaviyarasin kavithaigal...vasanth avarkal sonna kavidhaigal paadalaage...ippothu vaaram oru muraiyaavathu kettu kondirukkiren...neengalum keeke...


http://www.hummaa.com/music/album/Kavidhayea%20Padalaga/23776

சீனு on July 14, 2010 at 12:04 AM said...

நல்ல பதிவு கார்க்கி....
"ஏ அஜ்னபி" பாடலை ஹிந்தியில் எழுதியது குல்சார்.
எனக்கு மிகவும் பிடித்த பல்லவி....
"விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே"

 

all rights reserved to www.karkibava.com