Jun 15, 2010

இன்னும் பெயரிடவில்லை


 

   செகந்திராபாத் ரயில்வே நிலைய முதலாவது பிளாட்ஃபாரத்திற்கு சார்மினர் எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிடங்களில் வந்து சேரும் என்று தெலுங்கில் சொன்னார்கள். ப்ளாட்ஃபாரத்தில் இருந்த நான் தண்டவாளத்தில் பாதுகாப்பாக இறங்கிவிடலாமா என்று யோசிக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன். 18, 19 வயதிருக்கும். தமன்னாவை பார்த்து ”ஏங்க்கா இவ்ளோ குண்டாயிட்டிங்க” என்று கேட்க அவளால் முடியும். குழந்தையின் சிணுங்கல் மட்டுமே இருந்தது. குமரியின் வளங்களை காண முடியவில்லை.  அவள் சிரிப்பில் என்னை தொலைக்க எத்தனித்த நேரம், அவளை நோக்கி சிலர் வந்தார்கள். வந்ததில் நால்வர் பெண்டிர், இருவர் ஆண்கள் என்பதை கண்டறிய சற்று சிரமப்பட்டுத்தான் போனேன்.

கல்லூரி படிப்பு முடிந்து ஊருக்கு திரும்புவது போன்று தெரிந்தது. அழைத்துச் செல்ல அவளின் அப்பாவும், அம்மாவும் வந்திருந்தார்கள். அம்மா முன்னரே ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டார். இடம் பிடித்திருப்பார் என நினைக்கிறேன். ஏறும்போது அவர் கையில் கைக்குட்டையை காணவில்லை. அப்பா மட்டும் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும். மற்றவர்கள் சிரிப்பு அவள் சிரிப்பு போல் இல்லை. அது சரி. நமக்கு தேவதைதானே முக்கியம்? அவளை மறைப்பது போலவே அந்த அறுவரும் நின்றுக் கொண்டிருந்தார்கள். 360 டிகிரியும் சுற்றி வந்தேன்.  இராட்சச நண்பர்கள். நான் பார்க்க முடியவில்லை என்பதை விட அவளுக்கு காற்றாவது வருமா என்ற சந்தேகமே என்னை கஷ்டப்படுத்தியது. தேவதைகளுக்கு வேர்க்குமா என்று கண்டறிய வேண்டும்.

அந்த இரண்டு பேரில் ஒருவன் நன்றாக இருந்தான். அவனது சிரிப்பும் கியூட்டாக இருந்தது. அவன் தான் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தான். அவளும் அவன் சொல்ல ஆரம்பிக்கும்போதே சிரிக்கத் தொடங்குவதை சரியாக செய்து கொண்டிருந்தாள். எல்லாம் ரிப்பீட் ஜோக் போல என நினைத்துக் கொண்டேன். அவள் அவனின் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள். எப்படியும் அவனை கைவிட்டு என்னை நோக்கித்தானே வர வேண்டும்?

ஆம். நேரமாகி விட்டதால் ரயிலில் ஏறி சன்னலோரம் அமர்ந்தேன். எனக்கு எதிர் இருக்கையில் தேவதையின் அம்மா. அய். மீண்டும் அவர்களை நோக்கி பார்வையை திருப்பினேன். முதலில் அந்த க்யூட் பையன் தான் அழுவதற்கு ஆரம்பித்தான். அவனுக்கு மட்டும்தான் ரயில் கிளம்பும் நேரம் தெரிந்திருக்க வேண்டும். தேவதை அவனது கைகளை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவன் அழுகை அதிகமாக தேவதை அவனை இறுக அணைத்துக் கொண்டாள். நட்பில் நெகிழ்ந்து போய்விட்ட தேவதையைப் பார்த்து சிரித்தேன். கொடுத்து வைத்தவள். வைத்தவன். ஒருவர் பின் ஒருவராக கலைந்தார்கள். ஆளுக்கொரு திசையில் அழுகை. ஒவ்வொருவராக தேடித்தேடி அணைத்து ஆறுதல் சொன்னாள் தேவதை. விக்ரமன் பட லாலாலா எனக்கு மட்டும் கேட்டது.

”கன்னி மலர்கள் கூட படிக்கும். காளை மனதில் சாரல் அடிக்கும். கல்லூரி சாலை எங்கள் வேடந்தாங்கல்”. சரியான்தான்யா சொல்லியிருக்கார் வாலி என்று நினைத்துக் கொண்டேன். அவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்ட நாட்களாகத்தான் இருந்திருக்கும். ரயில் பாட ஆரம்பித்தது. 12 கண்களும் அப்போதுதான் ஒரே திசையை பார்த்தன. ரயிலை நோக்கி. தேவதையின் அப்பா ரயிலேறிக் கொண்டார். தேவதை இன்னும் ஏறவில்லை. இன்னொரு பெண் அவளை ஆரத்தழுவிக் கொண்டாள். இன்னொருத்தி அவர்களை தேற்றி தேவதையை ரயிலேற சொன்னாள். அந்த இரு பையன்களும் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன். ரயிலோடு ஓடி வந்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் மட்டும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நின்று விட க்யூட் ப்ளாட்ஃபார்ம் முடியும்வரை ஓடி வந்தான். அழுது கொண்டேதான். முடிவில் நின்றுவிட்டான். ரயில் தொடர்ந்து சென்றுக் கொண்டேயிருந்தது தேவதையை சுமந்தபடி. தேவதை படியில் நின்று கையசைத்துக் கொண்டிருந்தாள். இவன் நிச்சயம் நமக்கு போட்டிதான் என்றபடி நகம் கடித்துக் கொண்டிருந்தேன் நான். ரயிலின் வேகம் கூட வேண்டும், என் விரல்களாவது தப்பிக்க வேண்டுமே!

ஹைதையை விட்டு மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது சார்மினார். எதுவும் பேசாமல் உறைந்திருந்தார் தேவதையின் அப்பா. பாவம். பயம் இருக்கத்தானே செய்யும்? அம்மாவோ கண்கள் மூடி மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தேவதை மட்டும் அவளுக்கு வந்த பரிசுகளை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிரிப்பு மட்டும் ஓயவில்லை. அது சிரிப்பு கூட இல்லை. மெல்லிய புன்னகை எனலாம். என்னையும் பார்த்து சிரித்தாள். இது சிரிப்புதான். அப்பாவைப் பார்த்தேன். மாமாவை தேற்றுவோம் முதலில் என பேச்சுக் கொடுத்தேன். தயங்கி தயங்கித்தான் பேசினார். வேண்டாமடா விஷ பரீட்சை என அப்பாவை விட்டு அப்பர் பெர்த்திற்கு தாவினேன். தூங்கியும் விட்டேன்.

மறுநாள் காலை சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தோம். பாதி தூக்கத்தில் இறங்கினேன். தேவதை தனக்கு பிடித்த கிஃப்ட்டை மட்டும் கையிலெடுத்துக் கொண்டாள். அம்மா முடிந்தவரை எடுத்துக் கொண்டார்கள். அப்பாவால் எல்லாவற்றையும் எடுக்க முடியாது. போர்ட்டரும் காணவில்லை. சான்சுடா கார்க்கி என்று உதவினேன். அப்பாவும் நானும் பின்னால் செல்ல, தேவதையும் அம்மாவும் முன்னால் சென்றார்கள்.

காலெஜ் லைஃபே தனிதான் சார் என்றேன்.

ம்ம் என்றார்.

ஆனா இந்த பசங்க செஞ்சது ஓவர். இப்பலாம் சேட், மொபைல்ன்னு ஆன பிறகு எதுக்கு இவ்ளோ சீன் போடறாங்க? அவ்ளோ அக்கறை இருந்தா மாசம் ஒரு தடவ வந்துட்டு போகலாம். நான் வாராவாரம் வறேன் சார்

…………..

என்ன சார்?

ஆமாம்ப்பா. அவ இன்னும் ஒரு மாசம்தான் உயிரோட இருப்பா. அவளுக்கு…..

ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் செத்துக் கொண்டிருந்தேன்.

என் கையிலிருந்த பைகளையும் வாங்கிக் கொண்டு திரும்பி பார்க்காமல் சென்றார். நான் அப்படியே  நின்றுவிட்டேன். கண்களில் திரண்ட நீர்த்துளி ஏனோ அந்த க்யூட் நண்பன் என் கண்ணை விட்டு மறைந்த கடைசி காட்சியை நினைவுப்படுத்தி சென்றது.

25 கருத்துக்குத்து:

கார்க்கி on June 15, 2010 at 11:14 PM said...

கடைசி பத்தி இல்லாமல் தான் எழுதி இருந்தேன். அது தேவையில்லை என்பது என் கருத்து

விக்னேஷ்வரி on June 15, 2010 at 11:24 PM said...

நல்லா தானே போயிட்டு இருந்தது. அப்புறம் ஏன் கடைசில புரியாத மாதிரி முடிவு?
என்ன சொல்ல வர்றீங்க சகா..

ILA(@)இளா on June 16, 2010 at 12:00 AM said...

கடைசியில புரியவே இல்லே.பெரிய எழுத்தாளர் ஆகிட்டீங்க போல.

ஷர்புதீன் on June 16, 2010 at 12:03 AM said...

கடைசியில
புரியவே இல்லே.
பெரிய எழுத்தாளர்
ஆகிட்டீங்க
போல.

கார்க்கி on June 16, 2010 at 12:04 AM said...

அய்யயோ..

அவரின் மகள் சாக போகிறார். அதை சொன்னா முடிவு எதிர்பார்த்ததுதான்னு கமெண்ட்ஸ் வரும்... 80களின் தமிழ் சினிமா போல இருக்கும். அதான் அப்படி விட்டேன்..

நன்றி விக்கி

நன்றி இளா

சுசி on June 16, 2010 at 12:13 AM said...

இன்னைக்கு நீங்க ஏமாத்தலை..

ரொம்ப நாளைக்கு அப்புறம் பழைய கார்க்கி..

நன்றி கார்க்கி :))

Kafil on June 16, 2010 at 2:29 AM said...

rombo nalla irukku saga.. aana enakku oru friend irukkar, avar sonnar, tamilla kathai eluthuna periya aalaga chance rombo kammi, patthi eluthuna mattumthaan future apdinnu.... intha rangela eluthuneenganna adutha oscar award ungalukkuthaan nanba

Kafil on June 16, 2010 at 2:51 AM said...

manathukkul oru mullivaaikkal--title eppudi

சுகந்தி on June 16, 2010 at 7:13 AM said...

நல்ல கதை கார்க்கி

taaru on June 16, 2010 at 7:28 AM said...

இந்த ஸ்டைல் [கவிதையாய், கலகலப்பாய் ..... கஷ்டமாய் , நெகிழ்வாய்] ..
என்னோட பேவோரிட்....

கார்க்கி said...
கடைசி பத்தி தேவையில்லை என்பது என் கருத்து
// அவ்ளோ அருமையா படிக்கிறவங்க view வுல முடிஞ்சு இருக்கும்... U missed it but rocking end...//

மகேஷ் : ரசிகன் on June 16, 2010 at 7:59 AM said...

:(((((((((

பரிசல்காரன் on June 16, 2010 at 8:00 AM said...

அவர் சொல்ற எதுவுமே வேண்டாம்னேன் சகா...

இருந்தாலும் இதுவும் ஒரு பாதிப்பை ஏற்படுத்திடுச்சு போல... வாழ்த்துகள்!

நாய்க்குட்டி மனசு on June 16, 2010 at 8:14 AM said...

மலையாளப் படம் (நல்ல மலையாளப் படம்ப்பா) பார்த்த feel இருந்தது. அது தான் சந்தோஷமா ஆரம்பித்து மனம் கனக்க முடியும்.

Madumitha on June 16, 2010 at 8:41 AM said...

கடைசி பத்தி இல்லாமலே
ரசிக்க முடியும்.

மோகன் குமார் on June 16, 2010 at 10:40 AM said...

அருமை.. முடிவு தெரிந்த பின் முதலில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு வேறு அர்த்தம் வருகிறது

புன்னகை on June 16, 2010 at 10:46 AM said...

Too heavy! :-(

கார்க்கி on June 16, 2010 at 11:15 AM said...

ஷர்புதீன், ரிப்பீட்னு போட்டுடுங்க

சுசி, கார்க்கி பழசு ஆயாச்சா?ஆவ்

கஃபில், அவ்வபோது எழுதலாம். ஒரு சேஞ்சு வேணும்ல.

நன்றி சுகந்தி

நன்றி டாரு. கரெக்ட்தான்

என்ன ஆச்சு மகேஷ்? இன்னைக்கும் தூக்க கலக்கமா?

பரிசல், அப்படித்தான் முதல்ல் எழுதினேன். விக்கி, இளா, ஷர்புதீன் கமெண்ட் பார்த்து பயந்து ,இதை சேர்த்துட்டேன்

நன்றி நாய்க்குட்டி. ஆனாலும் இவ்ளோ விளக்கம் தேவையில்லங்க :)

நன்றி மதுமிதா

நன்றி மோகன். அதுதான் என் நோக்கமே

புன்னகை, :)

அமுதா கிருஷ்ணா on June 16, 2010 at 11:59 AM said...

நல்லாயிருக்கு கார்க்கி...

ர‌கு on June 16, 2010 at 12:27 PM said...

ந‌ல்ல‌ ஃப்ளோ கார்க்கி...இதுபோல‌ அடிக்க‌டி எழுத‌ முய‌ற்சிக்காம‌ல் உங்க‌ள் திற‌மையை நீங்க‌ளே வீண‌டிக்க‌றீங்க‌

தராசு on June 16, 2010 at 12:29 PM said...

வெல்கம் பேக்.

முடிவு - அப்படியே விட்டுருக்கலாம்னு தோணுது.

Karthik on June 16, 2010 at 3:19 PM said...

நல்லாருக்கு பாஸ்..

நேசன்™..., on June 16, 2010 at 3:19 PM said...

மெய்யென்று மேனியை யார் சொன்னது!......வாழ்வே மாயம்!......

Ponkarthik on June 16, 2010 at 4:22 PM said...

சகா அருமை! முடிவு பிரமாதம்..

மீடில் ஈஸ்ட் முனி on June 16, 2010 at 9:29 PM said...

Car Key ,
Thotutael ....Nenja....!!! It was heavy bit for my heart beat ...!!! Thevadhaya innum konjam varunuchi irrukalam...coz nagangalum thevadhai aga porravanga aeppadi irrunthu irrupanganu imagine pannirupom la... But a goood one karki... !!! Tholi updates smell light ah irunthuchu !!!

ஆதிமூலகிருஷ்ணன் on June 18, 2010 at 5:42 PM said...

நேரேஷன் ரொம்ப நல்லாருந்தது. (என்னையும் இப்படிச்சொல்லி சொல்லியேதான் 20 கதை எழுத வச்சுட்டாங்க. ஹிஹி) கிளைமாக்ஸ் வரை குதூகலமான போரடிக்காத எழுத்து. நிஜமாகவே நல்ல கதைகளை எழுத முயற்சிக்கலாம்.

இந்தக் கதையை பொறுத்த வரை 'இறந்துகொண்டிருக்கும் ஹீரோயின், காலம் காலமான தமிழ் சினிமா கடுப்பு'

அப்புறம் தலைப்பும் பொருத்தமில்லை.

 

all rights reserved to www.karkibava.com