May 31, 2010

இனி யாரும் என்னை அடக்க முடியாது


   பிரச்சினைக்குரிய பதிவெழுதுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஓரிருமுறை அனுபவப்பட்டிருக்கிறேன். முதலில் ஒரு முறை எழுதியபோது ஆதி வந்து பின்னூட்டத்தில் எச்சரித்தார். கூடவே இன்னும் சிலரும். அப்போதெல்லாம் அமைதியாகத்தான் போனேன். இனிமேல் முடியாது. தயவு செய்து என்னை அடக்க வேண்டாம் ஆதி. ஒவ்வொரு முறை நான் சீறும்போதும் ”வேணாம் கார்க்கி இந்த வேகம். நல்லதல்ல” என்பதே அவர் வேலை. நேற்று அவரே பார்த்தார் இனியும் சொல்வீங்களா என்றபோது அமைதியாகத்தான் இருந்தார். என்ன விஷயம் என்று எழுதுவதை விட இந்த நேரத்தில் இந்தப் பதிவை சில மாற்றங்களுடன் மீள்பதிவு செய்வது பொருத்தமென நினைக்கிறேன். ஒண்ணு சொல்லிக்கிறேன். சரி கடைசியா சொல்லிக்கிறேன். ஓவர் டூ பதிவு
______________
அதிவேகத்தில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். 9.30க்கு எல்லாம் எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டுமென்பதில் குறியாய் இருப்பேன் நான். அன்று பப்லுவிற்கு விடுமுறை. சேவாக்கின் அட்டகாச பவுண்டரியை பார்க்கவிடாமல் சாராவையோ டோராவையோ வைத்து கடுப்பேற்றிக் கொண்டிருந்தான். மணி 9.10. இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் 9.30க்கு செல்ல முடியாது. இருந்தாலும் சேவாக்கை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனிடம் சண்டை போட்டு இரண்டு பவுண்டரிகள் பார்த்தேன். லேட்டா ஆயிடுச்சா என்று பரிகசித்தான் பப்லு. 9.30க்கு ஆஃபீஸ் போயிட்டு ஃபோன்(லேண்ட்லைனில் இருந்து)  பண்றேன் பாருடா என்று கிளம்பினேன். என்ன லேட்டானாலும் காதில் இயர்பிளகை மாட்டாமல் கிளம்பமாட்டேன். ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து அவனுக்கு பை சொல்லிவிட்டு ஐபோடை ஆன் செய்து ரிப்பீட் பட்டனைத் தட்டினேன்.
ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..

ரட்சகன் படத்தில் நாகர்ஜுனனுக்கு ஆனது போல் நரம்புகள் புடைக்கிறதா என்று பார்த்தேன். ம்ஹூம். ஆக்ஸீலேட்டரை திருகி கிளட்ச்சை விட்ட போது முன்சக்கரம் குதிரை போல கனைத்துக் கொண்டே மேலேழுந்தது.
சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்

பப்லு. மனதுக்குள் கத்திக் கொண்டே விர்ர்ர்ர்ர்ர்ரென கிளம்பினேன். பிக்கப் மட்டுமே பஜாஜ் வண்டியில் எதிர்பார்க்கலாம். வ்ரூஊஊஊஊஉமென்று மெதுவாக பறக்கத் தொடங்கினேன்
கோடீஸ்வரா அனுபவிப்பாய்
கோடீஸ்வரா நீ அனுபவிப்பாய்

பப்லுவை பார்த்து பாடினால், கேடீஸ்வரா என்றுதானே வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பந்தயம் என்னவென்று மீண்டும் யோசித்தேன். ஒரு வாரம் என்னை வாடா போடா சொல்ல மாட்டான். நினைத்துப் பார்க்கவே எவ்ளோ நல்லா இருக்கு? பஜாஜ் XCDல் நான்கு கியர் மட்டும்தான் போலும். அதற்கு மேல் அழுத்தினாலும் விழவில்லை.
ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..

குறுக்கு சந்துகளை கடந்து மெயின்ரோட்டை அடைந்த போது கிறுக்கு பசங்க வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த சந்துக்குள் பைக்கை செலுத்தினேன்.
தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்

எதிர்பாராமல் அங்கே ஒரு கட்டை கட்டியிருந்தது. காலால் தட்டியவுடன் பிரச்சினையில்லாமல் கிழே விழுந்து வழிவிட்டது. கட்டையை சட்டை செய்யாமல் முன்னேறி சென்றேன். கை வந்த கலைதானே? ஏன் காலால் தட்டினோம் என்று யோசிப்பதற்குள் அடுத்த வரியை பாடிவிட்டார் ஷங்கர் மகாதேவன்.
பணத் திமிரினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்
துணிந்தவன் யாரு இவன்தான்

மீண்டும் மெயின் ரோட்டில் ஏறியபோது டிராஃபிக் மாமா, ச்சே போலிஸ் வழி மறித்தார். ஒன்வே என்றார். நான் என் வே சார் என்றேன். காலையிலே கரன்சியை எதிர்பார்க்கிறார் என்று தெரிந்ததும், ஃபைன் போடுங்க சார்.கட்டிட்டு போறேன் என்று வண்டியை குறுக்கே நிறுத்தேனேன். என்ன நினைத்தாரோ போங்க சார். இனிமேல் வராதிங்க என்றார்.
இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி
எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில் தூங்காது விழி.

3 நிமிடங்கள் வீணாகிவிட்ட துயரத்தில் இன்னும் முறுக்கினேன். வண்டியின் அலறல் சத்தத்தில் தானாக விலகி வழிவிட்டனர் சென்னை வாசிகள். அது ஜெயிக்க வேண்டுமென்று என் ரத்த செல்கள் போட்ட சத்தம் என்பது பிற்பாடுதான் எனக்கே தெரிந்தது
தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது
இவன் எடுக்கும் முடிவினில் இந்தியா மாறுது

முறுக்கினேன். வண்டியின் வேகம் 70ஐ தாண்டியது. அவ்வளவுதான். பஜாஜ் தன் வேலையைக் காட்ட, பிரேக் நிற்காமல் வண்டி நல்லதாய் ஒரு குப்பை லாரியின் மீது மோதியது. ஏண்டா கார்க்கி உனக்கு இந்த வேலை என்றாலும் தவறு என் மேலல்ல, வீணாப்போன பைக் மீதுதான் என்பது நன்றாக தெரிந்தது. என்ன செய்ய? அந்த குப்பை வண்டி வேற  மரண வாசனை வீசும் குப்பை வண்டி. தெரியாம மோதினாலும் வாசனை வரத்தானே செய்யும்?
இனி நடக்க வாய்ப்பில்லை. ஆமாம். தோழியின் விருப்பப்படி புது பைக் வாங்கிவிட்டேன். Yamaha F16. குப்பை லாரிகளை இடிக்கத் தேவையில்லை. இந்த வண்டியில் பின்னால் உட்கார போதுமான இடமில்லை என்றார்கள் சிலர். இருந்தாலும் அதுதான் வேண்டும் என்று தோழி கேட்டதை போன பதிவில் படித்தீர்கள்தானே? அப்போதே சொன்னேன் “கார்க்கி பெண்களுக்கு போதுமான மரியாதை கொடுக்காதவன் என்று உலகம் சொல்லுமே” என்று. கூலாக சொன்னாள் தோழி “உன் உலகம் நான் தானே? நானே சொல்லுவேனா செல்லம்? மத்தவங்கள பத்தி உனக்கெதுக்கு கவல?”. அதுவும் சரிதானே?
நேற்று ஹாயாக இருவரும் ஈசிஆரில் ஒரு டிரைவ் போனோம். நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். பைக்கும் கேமராவுமாக தனியே கோவளம்  வரை சென்று வந்தேன். வாழ்வின் சந்தோஷமான வெகு சில தருணங்கள் கடந்த இரு நாட்களில் நடந்தது. மனம் நிறைந்த சந்தோஷத்துடன் இருக்கிறேன். இதோ என் புது பைக். குப்பை லாரிகள் இனி ஒதுங்கிவிடுதல் நலம். ஏனெனில் இனி யாரும் என்னை அடக்க முடியாது.ஹிஹிஹி..
DSC00337
 

all rights reserved to www.karkibava.com