Apr 27, 2010

சுறா – விமர்சனம் (first on net by KARKI)

76 கருத்துக்குத்து

 

தமிழ்ப்பதிவுலகில் சுறா படத்திற்கு இதுதான் முதல் விமர்சனம்  .

 

இரவு எட்டு மணிக்கு சென்னையில் கொளுத்திய வெயிலையும் துச்சமென மதித்து, வில்லு, குருவியென நான் பட்ட கொடுமைகளை ஒரு கையால் ஒதுக்கி வைத்து, “ஒரு தடவ கைய வச்சிட்ட அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது” என்ற டிரெய்லர் பன்ச் வசனத்தை வசதியாக மறந்துவிட்டு சுறாவைக் காண சூறாவளியாக கிளம்பினேன்.

சட்டை பட்டனை போடாமல் திறந்த மார்போடு அதே திருமலை விஜய். ஆனால் இதுவரை போடாத கலர்களில் இருக்கின்றன அவர் அணியும் சட்டைகள். படத்தின் இரண்டாம்  வித்தியாசம் அவரின் வீடு. கடற்கரையோரம் இருக்கிறது. இதுவரை எந்த விஜய் படத்திலும் இப்படி இருந்ததில்லை. அந்த குப்பத்தில் ஒரு போட்டி.  யார் கடலின் நடுவே சென்று நிறைய மீன் பிடித்து வருகிறார்கள் என்ற போட்டி. வழக்கமாய் ரன்னிங் ரேஸ், கார் ரேஸ் என்றுதான் இருக்கும். ஆனால் இதில் வித்தியாசமாய் கடலில் ஒரு போட்டி. வழக்கம் போல் விஜய்தான் ஜெயிக்கிறார். ஜெயித்தவுடன் பாடல்.

வெற்றிக் கொடியேத்து..வீசும் நம்ம காத்து.

வழக்கமாக பாடல் முடிந்தவுடன் காமெடியன் வருவார். அதிலும் வித்தியாசம். முதலில் தமன்னாவை காட்டுகிறார்கள். அதன் பின்னே வடிவேலு வருகிறார். 50வது படமென்பதால் ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டுமென்ற விஜயின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொண்டு கதை செய்த இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அடுத்தடுத்த காட்சிகளில் இருவருக்கும் முட்டலும் மோதலுமாய் திரைக்கதை பயணிக்கிறது. நடுவில் குப்பத்தில் திருவிழா வருகிறது. சீரியல் பல்பு சகிதம் அடுத்த குத்திற்கு முக்கால் பேண்ட்டுடன் வருகிறார் விஜய்.

வங்க கடல் எல்லை. நான் சிங்கம் பெத்த பிள்ளை

வழக்கம் போல முழுப் பேண்ட் போடாதது, மார்க்கெட் போன நடிகையை ஆட வைக்காதது போன்றவை இந்தப் பாடலில் வித்தியாசமானவை. பாடல் முடிந்தவுடன் குப்பம் பற்றி எரிகிறது. துடித்து எழும் விஜய் சண்டை போடுகிறார். யார் இதற்கு காரணம் என்பதை யோசிக்கிறார். பின் அடுத்த நாள் தமன்னாவை சந்தித்து ரொமான்ஸ் செய்கிறார். முதலில் விஜய்க்கு காதல் வர உடனே ஃப்ளைட் பிடித்து நியிசிலாந்து சென்றுவிடுகிறார். பின்னாலே தமன்னாவும் தன்னைப் பற்றித்தான் பாடப்போகிறார் என்ற ஏக்கத்தோடு ஓடுகிறார். பாவம் அவர். விஜயின் பாடல் அவரை ஏமாற்றிவிடுகிறது.ஆம்

நான் நடந்தா அதிரடி..என் பேச்சு சரவெடி

என அங்கும் தன்னைப் பற்றியே பாடுகிறார் தளபதி. ஏமாற்றத்துடன் திரும்பும் தமன்னாவின் அப்பா, விஜயின் குப்பத்தை கோபுரமாக்க திட்டமிடுகிறார். அந்த இடத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும், பீச் ரிசார்ட்டும் கட்ட ஏற்பாடு செய்கிறார். அவர்தான் குடிசைகளை எரித்தவர் என்பது தெரியவர அவரின் வீட்டிற்கு சென்று அவரை அடித்துவிடுகிறார். அடித்ததோடு இல்லாமல் பன்ச் வசனமும் பேசிவிட கொதிக்கிறார் வில்லன்.

இதுவரை எறா. இனிமேல் சுறா என இடைவேளை விடுகிறார்கள். இடைவேளை விட்ட நேரம் கேட்டின் அருகில் சின்ன இடைவெளி விட்டிருந்தாலும் ஓடி வந்திருப்பேன். மூடிவிட்டார்கள். நானும் மூடிக் கொண்டு மீதி படத்தை காண சென்றேன். சற்று தாமதமாகிவிட்டது. அதற்குள் குப்பத்து விஜய் கோட்சூட்டுடன் நடந்துக் கொண்டிருந்தார்.

தமிழன் வீரத்தமிழன்.. தலைமை தாங்கும் ஒருவன்

என்று பாடிக் கொண்டிருந்தார் யாரோ. என்னடா.. தண்ணியடிச்சிட்டு திரிஞ்சவன் தண்ணி பாக்கெட் வாங்குற கேப்புல தலைவன் ஆயிட்டானா என்ற சந்தேகத்துடன் அமர்ந்தேன்.பாடல் முடிந்தவுடன் தமன்னா அவரைத் தேடி வந்தார். அவரைத் தெரியாது என்று சொல்லிவிடுகிறார் தலைவர். அழுதுக்கொண்டே செல்லும் தமன்னாவை பார்த்து “இதுதான் அவ கண்ணுல இருந்து வரும் கடைசி துளி கண்ணீர்” என்கிறார் விஜய். இது தமன்னா காதில் விழுந்துவிட உடனே பாடல்

சிறகடிக்கும் நிலவு. கரம்பிடித்தது என்னை

பாடல் முடிவதற்கும் ரிசார்ட் கட்ட வில்லனுக்கு அப்ரூவல் கிடைப்பதற்கும் சரியாக பொருந்திவிட சீறுகிறார் விஜய் வில்லனை நோக்கி. மீண்டும் சண்டை. மீண்டும் ஒரு பாடல். இந்த முறை

தஞ்சாவூர் ஜில்லாக்காரி கச்சேரிக்கு வாயேண்டி

அதன் பின் க்ளைமேக்ஸில் வில்லன் குழுவை பந்தாடிய பின் சுபம் போட்டார்கள்.

இனிமேல் விஜய் என்னதான் வித்தியாசமாய் நடித்தாலும் நான் என் முடிவை மாற்றிக் கொள்ளபோவதில்லை. வேட்டைக்காரன், வில்லு போன்ற முன்பழமைத்துவ காவியத்தை பார்த்துவிட்டு இனி விஜய் படமே பார்க்கக்கூடாது என்று எடுத்த அதே முடிவை இன்றும் எடுத்தேன். இனிமேல் விஜய் படம் கே டிவியில் கூட பார்க்கப்போவதில்லை.

___________________________________________________________

டிஸ்கி: வெள்ளிக்கிழமை இளையதளபதியின் 50வது படம் சுறா வெளியாகிறது. பதிவர்கள் ஒரே நாளில் 3000 ஹிட்ஸ் அடிக்க இதைவிட்டால் வேறு வழியில்லை. எப்படியும் வெளிநாட்டு பதிவர்கள் 1000 ரூபாய் கொடுத்து பார்த்துவிட்டும், வியாழன் இரவும், இந்தியவாழ் பதிவர்கள் விடுமுறைப் போட்டு பகல்காட்சி பார்த்த பின்னும் விமர்சனம் (?) எழுத போகிறார்கள். பாவம் எதற்கு அவர்களுக்கு சிரமம் என்று படத்தில் வரப்போகும் காட்சிகளை பதிவாக தந்திருக்கிறேன். தலைப்பு மட்டும் அவரவர் திறமைக்கேற்ப வைத்து 3000, 4000 ஹிட்ஸ் அடிக்க வாழ்த்துகள். தலைப்பு கூட வைக்க தெரியாத விமர்சகர்களுக்கு சில ஐடியாக்கள்

சுறா -  இம்சை அரசனின் வறுத்த புறா

சுறா -  காஞ்சு போன கருவாடு

சுறா -  ஒரு முன்,பின்,நடு,சைடு நவீன காவியம்

சுறா – விதியின் சதி

சுறா -  திருந்தாத விஜய்

சுறா : தமிழ் சினிமாவின் அசிங்கம்

ஹிஹிஹி

33 கருத்துக்குத்து

 

  அலைபேசிக் கொண்டே வண்டி ஒட்டுவது தவறு. மறுப்பதற்கில்லை. அதை விட மகா கொடுமை பேசிக் கொண்டு சாலையைக் கடப்பது என்கிறேன் நான். நேற்று வேளச்சேரியில் நடந்தது இது. சிக்னல்படி நான் ரைட்டில் திரும்புகிறேன். மொபைலில் பேசிக் கொண்டே கடந்து செல்ல வேகமாய் வருகிறார் இளம்பெண் ஒருவர். நான் சடென் பிரேக் அடிக்க, பின்னால் வந்தவர் அடிக்க முடியாமல் டமால் என இடித்தார். அந்த இளம்பெண் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் “சாரிடா செல்லம். தெரியாமல் பண்ணிட்டேன்” என்றதும் வந்த கோவம் அடங்கிவிட்டது. அப்புறம்தான் தெரிந்தது அந்த செல்லம் அந்த முனையில் இருக்கிறார் என்பது. மீண்டும் கோவம் வருவதற்குள் எங்கேயோ சென்றுவிட்டார். அவரிடம் சொல்லியிருக்க வேண்டும் “ரோடு கிராஸ் பண்றப்ப எங்க வேணும்னானும் பார்த்துட்டு செய்ங்க. ஆனா செல்லம்னு சொல்றதுக்கு முன்னாடி நாலா பக்கம் கவனமா பாருங்கன்னு”

ஹிஹிஹிஹிஹி

_________________________________________

எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்றார் கல்கி. உண்மைதான். ஏப்ரல் 30 சுறா ரிலீஸ். மே 1 தலை பிறந்த நாள்”

இந்த எஸ்.எம்.எஸ்ஸை 10 பேராவது அனுப்பியிருப்பார்கள் எனக்கு. அவர்களுக்கான பதில் இது. இது ஃபாஸ்ட் ஃபுட் காலம் பாஸ். எல்லாமே ப்ரிபெய்ட்தான். அதனால் யார் கல்கி என்று நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. அப்புறம் முதல் வரியை மீண்டும் படியுங்கள். 13, 14 வது எழுத்துக்களை படித்தால் யார் அதர்மம் என்பது விளங்கிவிடும். :))

ஹிஹிஹிஹிஹி

__________________________________

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் பப்லுவிடம். போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன்  என்றான் பப்லு. என்னைப் பார்த்துக் கேட்டான்,

எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

பாட்டி, இவனை ஹைதராபாத்திற்கே போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்.

ஹிஹிஹிஹிஹி

____________________________________________

பப்லுவை வைத்து ஒரு விளம்பரப் படம் பிளான் செய்தேன். ஸ்கூலில் இருந்து அலுப்போடு வரும்படி முதல் காட்சி, பின் யூனிஃபார்ம் கூட மாற்றாமல் டிவியில் மூழ்குவது இரண்டாம் காட்சி. அதுவும் போரடிக்க படையப்பா ரஜினி ஸ்டைலில் சட்டை கழற்றி “பாட்டி கெலாக்ஸ்” என்பது அடுத்த காட்சி. ஒவ்வொன்றிலும் அவர் சுவாரஸ்யம் குறைந்து வருவது போல் காட்டிவிட்டு, கடைசியில் லேப்டாப்பில் சுவாரஸ்யமாக மூழ்குவது போல் முடியும். அடுத்து பாட்டி. இவன் விட்டு சென்ற லேப்டாப்பை அவர் எடுத்து படித்து மகிழ்வது போல இறுதிக்காட்சி. ஹிஹிஹி.அதேதான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

“பெரியவர் முதல் சிறியவர் வரை படித்து மகிழ”

www.karkibava.com   Entertainment..unlimited

Apr 26, 2010

லயன் ரோர்ஸ்

26 கருத்துக்குத்து

 

   ஒரு வழியாக ஐ.பி.எல் 3 முடிவுக்கு வந்துவிட்டது. எங்கள் அணி கொல்கத்தா தோல்வியடைந்தாலும் கவலையில்லை. நாங்கள் அதன் ஆதரவாளராக இருக்க ஒரே காரணம் தாதா என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அதிக ரன் அடித்த வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடம். சிறந்த 10 கேட்ச்கள் வரிசையிட்டாலும் அவர் வந்துவிடுவார். சிறந்த கேப்டன்களிலும் முதல் மூன்று இடத்தில்தான் இருப்பார். இதை விட வேறென்ன வேண்டும்.? (சமாளிக்கறது எவ்ளோ கஷ்டம்???)

___________________________

ரேடியோ கமெண்டரிகள் காலாவாதியாகிவிட்டதென்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை. இந்த வருடம் ஐ.பிஎல்லில் சிறந்த எண்ட்டெர்டெய்னிங் ஃபேக்டராக நான் நினைப்பது 106.4 ஹலோ எஃப்ம்மில் ”சொல்லியடி” நிகழ்ச்சிதான். அது தரும் பரிசுகள் குறித்து நான் பேசவில்லை. அதன் தொகுப்பாளர் சுரேஷின் அதிரடி நடவடிக்கைகள். டிவியில் பார்க்கும்போதும், சத்தத்தைக் குறைத்து அவரின் கமெண்ட்ரீ கேட்டுக் கொண்டேதான் பார்த்தேன். கலக்கிட்டிங்க சுரேஷ்.

11 ஓவரில் வெறும் 66 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்திருந்தது.களமிறங்கிய தோனி ஒரு ஃபோர் அடிக்கிறார். பாடல் போடுகிறார் சுரேஷ்

ராச ராசனே வீர வீரனே நீங்க எங்க ராசா..

உடனே பவுலர் பொலார்ட் தோனியை முறைத்துவிட்டு செல்கிறார். அடுத்த பந்தை ஒத்தை கையில் அடித்து சிக்ஸ் ஆக்குகிறார் தோனி. பாட்டு வருகிறது

வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா….

இன்னொரு நாள் தோனியின் அட்டகாச பேட்டிங்கில் சென்னை அரையிறுதிக்குள் நுழைகிறது. பாதியில் இருந்து பாட்டு வருகிறது

பார்ப்பதற்கு பாமரன் போலிருப்பான்
வேலை வந்தால் விசுவரூபம் எடுப்பான்.

இடையிடையே ஸ்கோர்ஸும், அங்கு நடப்பதையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். தோனி கடைசி ரன் அடித்து வெற்றிப் பெற்ற உடன் மீண்டும் பாடல் தொடர்கிறது

சிங்கம் ஒன்று புறப்பட்டதே
அதுக்கு நல்ல காலம்….

அவரை நேரில் பார்த்து ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் போலிருக்கிறது. அந்த ஒட்டு மொத்த டீமுக்கும் ஹேட்ஸ் ஆஃப். எனக்கும் இப்படி ஒரு ஆர்.ஜேவாக வேண்டுமென்பது கனவு.. ம்ம்ம்

(ஓவர் தொடங்கும்போது எவ்வளவு ரன் அடிப்பார்கள் என்று காலர்கள் சொல்லவேண்டும். யார் சொன்ன ரன் அடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம். இது பெட்டிங்கில் வருமா வராதா???)

_________________________________________

image  

வெற்றி பெற்ற சென்னை அணிக்கு எனது சிறு அன்பளிப்பு இந்த பாடல். நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலின் மெட்டில் எழுதி இருக்கிறேன். சரியா செட் ஆகுதா என்று சொல்லவும்

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு ஓவர் போட மாட்ட
அடுத்த சீசன் வேற டீமில்
சேர மாட்ட..

போடு போடு பால போடு
அடிச்ச பின்னே பால தேடு
சென்னைதாண்டா எங்க காடு
சூப்பர்கிங்க்ஸ்க்கு விசில போடு (நான் அடிச்சா)

ஆரஞ்ச் பர்ப்பிள் கலர் கேப்ஸ்
சூப்பர் கிங்க்ஸ்க்கு கிடைக்கனும்
நாங்க அனுபவிச்ச மிச்சம்தான்
அடுத்த டீமுக்கு கிடைக்கனும்..

தோனியோட பசங்கள
தோற்கடிக்க யாரடா
மாஸ்டர்பிளாஸ்டர் சச்சினே
அடங்கிவிட்டார் பாரடா.

கிங்க்ஸோட சாங்க்ஸ் கேளு
கேளு கேளு.. கேளு கேளு
சாங்கோட நீ ஆடு..
ஆடு ஆடு…ஆடு ஆடு

ரெய்னா விஜய் ஹைடன்னு பேட்டோட வர்றாங்கடா
முரளி மார்கல் பொலிஞ்சரு பாலோட வர்றாங்கடா
கத்து கத்து கத்து சிங்கத்தோட சேர்ந்து கத்து….

Apr 23, 2010

வாக்கிங் போனதால் குண்டானேன்

30 கருத்துக்குத்து

 

  வழக்கம் போல் அன்றிரவு லேப்டாப்புடன் அமர்ந்திருந்தேன். வழக்கம் போல கெலாக்சையோ எதையோ ஸ்வாஹா செய்து கொண்டிருந்தான் பப்லு. வழக்கம் போல் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அம்மா.

சேலையில் வந்த தோழி என்ற பதிவு போட்ட அன்று நடந்தது இது. சேட்டில் வந்த நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒரு பெண் பால்கனியில் நின்று எதையோ ரசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் சொன்னாராம்

“ஒரு நிலா
சூரியனை
ரசிக்கிறது”.

   வேற வேலையே இல்லையாடா என்று அம்மா ஆரம்பித்தவுடன் பப்லுவைப் பார்த்தேன். மின்சார கண்ணாவில் மனோபாலா அண்ட் கோ தருவது போல வித்தியாசமான ரியாக்‌ஷன் ஒன்றை தந்துவிட்டு மீண்டும் கெலாக்சில் மூழ்கினான். அப்போதுதான் அது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு என்பதே புரிந்தது. சீரியல் முடிந்துவிட்டது போல என்றெண்ணிக் கொண்டே லேப்டாப்பை மூடினேன்.  சிறுது நேரத்தில் மொபைல் லேசாக அலறியது. எஸ்.எம்.எஸ்

“Hey. Its raining here”. அதே பெங்களூரில் இருந்து இன்னொரு நண்பன். சென்னையில் லோ வோல்டேஜ் பவரில் மின்விசிறி கூட லஷ்மன் ரன் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தது. பெருமூச்சினூடே “Lucky banglore. Enjoy “ என்று ரிப்ளை அனுப்பினேன். அடுத்த மெசெஜில் ஆலங்கட்டி மழை என்று சொல்லியிருந்தார் அந்த நண்பர். என்ன செய்யலாம் என்று யோசித்து “If it rains here, will go to beach.. mmm” என்றி பதிலனுப்பினேன். அதான் மழை வரல இல்ல என்று அவர் அனுப்பினார். இன்னும் சில நாளில் சென்னையில் மழை வரலாம். ஆனால் எத்தனை நாள் ஆனாலும் பெங்களூரில் பீச் வருமா என்று கேட்டுவிட்டுதான் யோசித்தேன், கொஞ்சம் ஓவராத்தாம் போறோமா என்று. பரிகாரமாக ஒன்று அனுப்பினேன். “Nallavanga irunthathaan mazahai varumaam.when will you come to chennai?”.

கெலாக்ஸ் தீர்ந்துவிட்டது போல.அதுவரை அமைதி காத்த பப்லு சொன்னான் “பாட்டி. இப்போ மொபைல் எடுத்துக்கிட்டான். நகரவே மாட்றான் பாட்டி” அப்போது அவன் எழுந்து நடந்துக் கொண்டிருந்தான் கிச்சனை நோக்கி. அம்மா உடனே ஆரம்பித்தார்கள். தொப்பை பெருசாகிட்டே போதுடா. கவனி. கொஞ்ச நாள் ஜாகிங், ஜிம் ஏதாவது போயேன். இல்லைனன விட்டுப் போனா டேன்ஸ் கிளாசாவது போலாமில்ல” அவர்கள் கண்ணுக்கு பப்லு தெரியவே இல்லையா என்றவுடன் அவனையும் கூட்டிட்டி போக சொன்னார்கள்.

ஜாகிங் எல்லாம் நமக்கு ஒத்துக்காதுடா வாகிங் போலாம் என்றான் பப்லு. மறுநாள் காலை போவது என்று முடிவானது. இந்தப்பக்கம் போய் அந்தப்பக்கம் வரலாமென மேப் தயாரித்தான் பப்லு. அவன் சொன்னபடியே சென்றோம். முடிவில் ஒரு ஹோட்டலின் அருகே போனவுடன் சொன்னான் பப்லு “டேய் கார்க்கி. இங்க இடியாப்பம் பாயா சுப்பரா இருக்கும்டா. சாப்ட்டு போலாமே”. வாகிங் சென்று கரைத்த மொத்த கலோரியையும் போல இரண்டு மடங்கு ஏறுவதற்கு வழி சொன்னான். அவன் பிடித்த அடத்தில் வேறு வழியில்லாமல் அவனுக்கு மட்டும் வாங்கித் தந்தேன். வீட்டில சொல்லாதடா என்று மிரட்டினானா வேண்டினானா என்று தெரியவில்லை. ஆனால் சொன்னான். இப்படியாக எங்கள் வாகிங் பாயாவிலும், வடைகறியிலும் நல்லபடியாக நடந்துக் கொண்டிருந்தது. அவ்வபோது நானும் பப்லுவுடன் ஜமாய்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் வாகிங் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பி வந்து பார்த்தால் தோசையுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தான். வாகிங் போனதிலிருந்து ஒரு தோசை கம்மியா சாப்பிடுகிறான் என்று வேறு சொன்னார்கள் அம்மா. ”நாளைக்கு சீக்கிரம் வாங்கடா. ஸ்கூலுக்கு லேட் ஆயிடுது” என்ற அக்காவைப் பார்த்தேன். ம்க்கும். அடுத்த நாள் அதே மாதிரி பாயாவுக்கு தயாராகிவிட்டான் பப்லு. நான் கிளம்ப லேட் ஆனதும் அக்கா மீண்டும் “சீக்கிரம் வாங்கடா” என்றார்கள். வெளியே வந்து பப்லு “மாமா.ஹெல்மேட் எடுத்துக்கோ என்றான். என்னடா என்றால் லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிங் போலாம் என்றான்.

முடிவு செய்துவிட்டேன், இவனுடன் சேர்ந்தால் நான் உருப்படாம போயிடுவேன். இருக்கிற தொப்பையே போதுமென வாகிங்கை ரத்து செய்து விட்டேன்.

Apr 22, 2010

போன வருஷம் இந்த நாள்..

19 கருத்துக்குத்து

 

1) லிஃப்டுக்குள் நுழைபவர்கள் அவர்களுக்காக ஸ்பெஷல் சர்வீஸ் வருவது போல கதவு திறந்தவுடனே உள்ளே நுழைய முயன்று வெளியே வருபவர்களை இடிப்பது போல் வந்து அசடு வழியும்போது

2) பத்தாவது தளத்திற்கு செல்ல வேண்டியவர்கள், லிஃப்ட் ஏதோ பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீஸ் என நினைத்துக் கொண்டு லிஃப்ட்டில் கூட ஃபுட்போர்டு அடிக்கும் போது..

3) சரியா பச்சை விளக்குதாங்க எரியும் நம்ம ரூட்ல. மஞ்சள் மாறிடபோதுன்னு கொஞ்சம் முறுக்குவோம். சிக்னல் பார்க்காம அவங்க குறுக்குல் வந்துட்டு "எப்படி போறான்" பாருன்னு நம்மள குத்தம் சொல்லும் பொண்ணுங்கள பார்க்கும் போது..

4) கேண்டின்ல வரிசையா டம்ளர் இருக்கும். பெரிய இவரு மாதிரி வந்து கேனோடு எடுத்து, அத கீழ் உதட்டில் முட்டுக் கொடுத்து தண்ணி குடிச்சிட்டு, கொஞ்ச தண்ணிய வாயில இருந்து அது மேல தெளிச்சிட்டு போகும் போது

5) கஷ்டப்பட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது

6) அதிசயமா ஒருத்தர் நம்மளுக்கும் புரியற மாதிரி ப‌யிற்சி வகுப்பு எடுத்திட்டு இருக்கும்போது அவரையும் கடுப்பேத்தி நம்மளையும் கொலை முயற்சி செய்ய தூண்டிற மாதிரி "அக்கட கொட்டு கொட்டு"னு ஒருத்தன் மொபைல் அலறும்போது

7) Conference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகலன்னு சொல்றவங்கள பார்க்கும்போது

8) காலேஜ் வரைக்கும் காடுவெட்டில புரண்ட அழுக்குமூட்டை அண்ணாமலை ,Hey dude try to avoid road side food என்று அட்வைஸ் அய்யாசாமீயா மாறும்போது

9) இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது

10) பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள ந்மக்கு பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…

ங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க..

_________________________________

இந்த புலம்பல் புலம்பி ஆறு மாதத்திற்குள் எங்க ஏரியாவுக்கே வந்தாச்சு. அதான் சந்தோஷத்துல ஒரு மீள்பதிவு.. :))

Apr 20, 2010

சேலையில் வந்த தோழி

50 கருத்துக்குத்து

 

அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை 
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ திருவான்மியூரில்தானே
இருக்கிறாய்?

Apr 19, 2010

சிவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

46 கருத்துக்குத்து

 

  குளிரூட்டப்பட்டிருந்த அந்த அறைக்குள் நானும், என்னுடன் பணிபுரிந்த இன்னும் 20 பேரும் அமர்ந்திருந்தோம். வட்ட வடிவில் போடப்பட்டிருந்த நாற்காலி வரிசையில் சரியாக என் எதிரில் அவர் அமர்ந்திருந்தார். 35 வயதுக்காரர் போல தோற்றமளித்த அவர், தன்னை சிவக்குமார் என்று சபையில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அன்றுதான் நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். விவாதிக்கப்பட்ட விஷயங்கள் எல்லாமே பொதுவானவை(வேலை தொடர்பானது அல்ல) என்பதால் எளிதில் அவரால் பங்கெடுத்து பேச முடிந்தது. அவரது வசீகர பேச்சு என்னை மட்டுமல்ல, அனைவரையும் ஈர்த்தது.

சந்திப்பு முடிந்து வெளிவந்தபோதுதான் கவனித்தேன். அவரது ஒரு கால் சரிவர நடக்கவில்லை. சற்று தாங்கியபடி நடந்து வந்து நீங்கதானே கார்க்கி என்றார். என் யோசனை முடிவதற்குள் “நானும் வேளச்சேரிதான். நீங்களும் அங்கதான்னு சொன்னாங்க” என்றார். அன்று தொடங்கிய பேச்சு நேற்று இரவு கூட தொடர்ந்தது. பல விஷயங்களில் என் குரு அவர். வயதைத் தவிர எங்களிடையே பெரிதாய் வித்தியசத்தை யாரும் கண்டதில்லை. அடையாள அட்டையை மறந்த  நாட்களில் கூட தனது சிரிப்பை மறந்ததில்லை அவர். அவருடன் இருக்கும் போதெல்லாம் சந்தோஷமும் சிரிப்பும் அன்றி வேறு எதற்கும் இடமில்லை. மாப்ள என்பது அவர் என்னை அழைக்கும் பெயர்

  துறுதுறு பேச்சும், வேகமான செயல்களும் சிவாவின் அடையாளம். சிவா. வலதுகால் மட்டும் போலியோவால் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எங்கள் எல்லோரையும் விட வேகமாய் நடப்பதும், வேலைகள் செய்வதும் அவர்தான். லாஜிஸ்டிக்ஸ் துறையில் வேலை என்பதால் தினமும் நடந்தே ஆக வேண்டும். லாரி கேட்டுக்குள் நுழைந்ததாக தகவல் வந்தால் போதும். லாரிக்கு முன் ஸ்டோர்ஸில் இருப்பார்

ஒரு முறை நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெறவும், கற்றுக்கொள்ளவும் சென்றார். இவரது வலது கால் குட்டை என்பதால் சாத்தியமில்லை என்பது போல் சொல்லியிருக்கிறார்கள் அந்த பயிற்சி நிறுவனத்தில். நண்பர்களிடம் ஒரே வாரத்தில் பயின்றதோடு மட்டுமல்லாமல், உரிமமும் பெற்றுக் கொண்டு அந்த பயிற்சியாளரைப் போய் சந்தித்தார். தனது காரில் அவரை ஏற்றிக் கொண்டு ஓட்டி காண்பித்தார். பெர்ஃபெக்ட் என்று பதில் வந்ததாம் அவரிடமிருந்து. எந்த ஒரு செயலும் தன்னால் சாத்தியம் என்று நம்புவார் சிவா. அதுவும் தன் காலால்தான் அது நடக்காது என்பது போல் யாராவது சொல்லிவிட்டால் அவ்வளவுதான்.

சிவாவுக்கு ஒரு நாள் பல் வலி. அருகில் இருந்த மருத்துவரிடம் சென்றார். சின்ன அ்றுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இரத்த அழுத்தத்தை சோதிக்காமல் அந்த மருத்துவர் செய்த தவறால் மறுநாளே பாதிக்கப்பட்டார் சிவா. கண்கள் இருட்டிக் கொண்டு வர என்ன செய்வதென்று தெரியாமல் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். சோதித்த மருத்துவர்கள் வெளியே வந்து சொன்னது “சிவாவுக்கு ஸ்ட்ரோக்” அவரின் இடது பாகம் முழுவதும் செயலிழந்துவிட்டது. ஆம். வலது கால் ஏற்கனவே பிரச்சினை. இப்போது இடது காலும்.

விஷயம் கேள்விப்பட்டும் நான் மருத்துவமனை செல்லவில்லை. சில நாட்களில் அவர் வீடு திரும்பியவுடன் சென்றேன். அதே சிரிப்பு. ஆனால் வார்த்தைகள்? “வாடா மாப்ள” என்பது வேறு மாதிரி ஒலித்தது. எழுந்திருக்க முயன்றார். முயன்றார்.. அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சிவா முன்பு அழுதால் அடித்து விடுவார். அடக்கிக் கொண்டேன். போன வாரம் ஃபோன் பண்ணப்ப எங்கடா இருந்த என்றவரிடம் கிரிக்கெட் ஆடிட்டிருந்தேன் தல என்றேன் அணிச்சையாக. ஜெயிச்சியா, எவ்ளோ ரன் அடிச்ச, என்பது போன்ற அவரின் தொடர் கேள்விகள் ஏதோ செய்ய வெறித்துப் பார்த்தேன். சிவாவின் கண்கள் கலங்கியது.நானும் அவரின் ஒரு கண்ணாக இருப்பவன் என்பதால் கலங்கிக் கொண்டிருந்தேன்.

இருவர் மட்டும் இருந்த அறைக்குள் மெளனமும் வந்து அமர்ந்துக் கொண்டது. வெகு நேர அமைதிக்குப் பின் சொன்னார் சிவா “மாப்ள. இனிமேல என்னைப் பார்க்க  வராத. நானே ஃபோன் பண்றேன்” என்றார். சரியென்பது போல தலையாட்டினேன். சிவாவை அப்படியொரு நிலையில் பார்க்க முடியவில்லை என்பதால் அது எனக்கு செளகரியமாக அப்போதைக்குப் பட்டது.

சிலநாட்களுக்கு முன் சிவாவிடம் இருந்து அழைப்பு. ”மாப்ள இந்த வாரம் கிரிக்கெட் ஆடறீங்களா?” என்றவரிடம் ஆம் என்றேன். நானும் வறேண்டா என்றார். வீட்டிலே இருக்க அவருக்கும் போரடிக்காதா?. காலையில் வீட்டுக்கு வந்து அழைத்துப் போவதாக சொன்னேன். வழக்கமாக பைக்கில் செல்வேன். காரில் செல்வதைப் பார்த்த அம்மாவிடம் சிவா குறித்து சொன்னேன்.

   அவர் வீடடைந்த போது படிக்கட்டில் இறங்கி வந்துக் கொண்டிருந்தார் சிவா. ஆச்சரியமாக பார்த்தேன். உடனிருந்தவரை நான் இதுவரை பார்த்ததில்லை. செல்வம் என்று அவரை அறிமுகப்படுத்தினார். ஃபிசியோதெரபிஸ்ட்டான அவர் சொன்னவை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. இரண்டு கால்களும் சரியில்லாத நிலையிலும் செல்வம் சொன்ன பல பயிரற்சிகளை செய்து இன்று நடக்கக்கூடிய அளவுக்கு வந்துவிட்டார் சிவா. சினிமாவில் சொல்வார்களே அது போல இது நிஜ மெடிக்கல் மிராக்கிள் என்ற செல்வத்தின் கண்களிலும் ஆச்சரியம் மின்னியது. தொடர்ந்து அவர் சொன்னதையெல்லாம் சிரித்துக் கொண்டே கேட்டார் சிவா. கிரிக்கெட் ஆடப்போவதாக சொன்னவுடன் பாதுகாப்புக்கு செல்வமும் வருவதாக சொல்லியிருக்கிறார். என்னால் நம்பவே முடியவில்லை. அவரின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியும் எவ்வளவு பெரியது என்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை.

இரண்டு கால்களிலும் வெயிட் சேர்க்கப்பட்டு, அதோடு அவர் செய்த பயிற்சிகளின் புகைப்படங்களை காட்டினார் செல்வம். சிவாவின் முகத்தில் தெரிந்தது அதன் வலி. 6 மாதத்தில் நடக்கலாம் என்று உறுதி சொன்னாராம் செல்வம். 3 மாதத்தில் அதை செய்திருக்கிறார் சிவா. சில நாட்களுக்குமுன் முதுகு வலி என்று நான் போட்ட சீன் நினைவுக்கு வந்தது.

நடக்கவே மாட்டேன்னு நினைச்சியா மாப்ள. சிவாடா என்றவர் கார் சாவியை வாங்கிக் கொண்டார். தனது ஸ்டைலில் உள்ளே ஏறியவர் தனது பழைய வேகம் குறையாமல் அதே வேகத்தில் ரிவர்ஸீல் வண்டியைத் திருப்பி வந்தார். கிள்ளிப் பார்த்துக் கொண்டே உள்ளே ஏறினேன். சிவா சிரித்துக் கொண்டே இருந்தார். கூடவே இருப்பதால் அவர் அருமை தெரியவில்லை எனக்கு. ”சிவா”வைத் திருப்பினால் “வாசி” என்று வருகிறது. ஆம். அவரிடம் படிக்கத்தான், தெரிந்துக் கொள்ளத்தான் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே இருந்தேன். சிரிப்பு மாறாமல் “என்னடா மாப்ள” என்று தட்டியவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். பாடல் தொடங்கியது.

ஒரு சூறாவளி கிளம்பியதே..

சிவ தாண்டவம் தொடங்கியதே

image

Apr 18, 2010

சுறா – பாடல்கள் (வீடியோ)

21 கருத்துக்குத்து

 

 

இன்று சன் டிவியில் ஒளிப்பரப்பான சுறா பாடல்களின் சில காட்சிகள் இதோ. இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் சுறா வெற்றிப்பெற வாழ்த்துகள்.

Apr 15, 2010

ஸ்ரீலஸ்ரீ இலக்கியானந்தா சுவாமிகள்

43 கருத்துக்குத்து

 

  அந்த நண்பர் நம் பலருக்கும் பரிச்சயமானவர்தான். பதிவர் என்றும் சொல்லலாம். அவர் இன்னொரு பதிவரிடம் சொல்லியிருக்கிறார் “நான் தினமும் பார்க்கும் முதல் வலைப்பூ சாளரம் தான்” என்று. காலில் வெந்நீர் கொட்டிவிட்டது இரண்டாவது நண்பருக்கு.

“என்ன சொல்றீங்க? கார்க்கியா? அவன் எழுதுவது எல்லாம் ஒரு எழுத்தா? அதெல்லாம் குப்பைக்கு போக வேண்டியது. உங்களைப் போன்ற படிப்பாளிகள் எல்லாம் எப்படி அவனை ஏத்துக்கிறீங்க? தம்படிக்கு தேறாது அவனெழுத்து. கவிதை எழுதறானாம். கதை எழுதறானாம். அவனெல்லாம் எழுத்தாளன்னு சொல்றதாலதான் நம்ம நாட்டுல ஜெமோ போன்றவர்களுக்கு மதிப்பு இல்ல.”

இன்னும் ஏதேதோ சொல்லியிருக்கிறார். புரியவில்லை எனக்கு. நான் எப்போது என்னை எழுத்தாளன் என்றேன். கவிஞன் என்றேன்? இவராக என்னை எழுத்தாளன் என்று முடிவு செய்து கொண்டு என்னைப் பழிப்பது என்ன நியாயம் என்று விளங்கவில்லை. பதிவர்கள் அனைவரும் எழுத்தாளராகவோ, கவிஞராகவோ இருக்க வேண்டுமா? அல்லது அவர்கள் மட்டும்தான் வலைப்பூ தொடங்க வேண்டுமா? மேலும், முதல் நண்பர் தனக்கு பிடித்த ஒன்றை வாசிப்பதில் இவருக்கு என்ன கஷ்டம்? இ.பி.கோ செக்‌ஷன் 302ன் கீழ் பெரிய குற்றமொன்றை அவர் செய்தது போல் ரியாக்ட் செய்கிறார். கல்கி ஆசிரமத்தில் தரப்படும் திரவம் கொண்டுதான் அவரை ஆசுவாசப்படுத்த வேண்டியிருக்கிறது.

இது இவர் மட்டும் சொல்லும் குற்றச்சாட்டு அல்ல. இன்னும் பலர், பலரை நோக்கி சொல்வதுதான்.  தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளன் என்று தன்னைத்தானே எண்ணிக் கொள்ளும் சில அரைவேக்காடுகளால்தான் இப்படி எல்லோரையும் எழுத்தாளராக பார்க்க முடியும். இணையத்தின் சாத்தியம் எண்ணிலடங்காதது. வலைப்பூ என்பது எழுத்தாளனுக்காக கிரயம் செய்யப்பட்ட நிலம் அல்ல. அது பொறம்போக்கு நிலம். யார் வேண்டுமென்றாலும், எதற்கு வேண்டுமென்றாலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வலைப்பூவில் என்னென்ன செய்யலாம் என பட்டியலிட்டால் எனக்கே ஆயாசமாக இருக்கிறது.

   புரிந்துக் கொள்ளுங்கள் எழுத்தாளார்களே.. நாங்கள் எப்போதும் மொக்கைப் பதிவர்கள் தான். பதிவெழுதி சாகித்ய அகாடெமி விருதை வாங்கியே தீருவேன் என்று சபதமிட்டு தாங்கள் பீடு நடை போடும் இலக்கிய  பயணத்தின் குறுக்கே நான் ஒருகால் அல்ல, இரண்டு காலும்  வைத்து வர மாட்டேன் என்று எல்லாம் வல்ல நித்யானந்தரின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். கலக்கம் வேண்டாம். காப்பியங்கள் படைக்கும் பணியை செவ்வனே தொட(ரு)ங்குங்கள்.

_____________________________________________________

முதல் பத்தியில் சொன்ன சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது எழுத என்ன அவசியம் என சிலர் நினைக்கலாம். சில நாட்களுக்கு முன் அனுஜன்யா அவர்கள் தொடர்ந்து வாசிக்கும் பதிவர்களில் என் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்துவிட்டு எனக்கோர் மின்னஞ்சல் அனுப்பினார் ஒருவர். வாசகர் கடிதத்தை பிரசுரித்தால் நான் அமர்ந்திருக்கும் இடத்தின் தென்திசையில் இருந்து 48 மணி நேரத்தில் பிரச்சினை வரலாம் வராமலும் போகலாம் என தமிழ்மண ஆராய்ச்சி நிறுவனம் சொல்வதால் அதன் சாராம்சத்தை மட்டும் சொல்கிறேன்.

“அனுஜன்யா அறிவாளியாம். இலக்கியவாதியாம். நல்ல கவிதைகள் எழுதுபவராம். அவரை இன்னும் பக்குவப்பட விடாமல் என் பதிவை படிக்க வைப்பதால் அவரது முனை மழுங்கிவிடுகிறதாம். இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க” என்று கேட்டிருக்கிறார் அந்த நண்பர்.

   அனுஜன்யா அவர்கள் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்.முதல் வரியின் மூன்றாம் வார்த்தையை சொல்லி அவரை திட்டியது நானில்லை என்பதை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும். இது போன்ற பல நட்டு கழண்ட கேசுகள் பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன். மெயில் வருவது இது முதல் முறை. அதைப் படித்தவுடன் ஏற்பட்ட எரிச்சலில் இதை எழுத தொடங்கிவிட்டேன். எப்படி முடிப்பது என்று தெரியவில்லை. ரிப்போர்ட்டர் பாணியில் ஒரு பன்ச் சொல்லிவிட்டால் இந்த டபால்சுபாங் பதிவு முடிந்துவிடுமென்பதால் மானிட்டரை நோக்கி விரலை நீட்டி, தூசுக்கு பதிலாக பவுடரைத் தூவி, சட்டை பட்டைனையெல்லாம் திறந்து விட்டுக் கொண்டு சொல்லப் போகிறேன். ஒரே ஒரு விசிலாவது அடியுங்களேன்

“நான் அடிக்கிறது மொக்கைதாண்டா. ஆனா அத புரிஞ்சிக்க நீ ஷார்ப்பா இருக்கணும். ”

“தண்ணில மிதக்கும் தக்கை. கண்ணீரை மறைக்கும் மொக்கை”

மே மாசம் வந்தா வெக்கை. கார்க்கி பேசினாலே மொக்கை”

ஏதாவது ஒரு குத்துவரியை (அதாங்க..பன்ச் லைன்)  டிக் அடித்து பதிவை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

வாழ்க இந்தியா.. வாழ்க காங்கிரஸ்.. வாழ்க கார்க்கி

26 கருத்துக்குத்து

 

   உறவினர் மகன் ஒருவன் இளைஞர் காங்கிரஸில் வார்டு தலைவராக இருக்கிறான். பொறியியல் படிக்கும் யாரும் எந்த அரசியல் கட்சியிலும் சேரக்கூடாது என்ற விதி ஒன்று இருந்தது. இப்போதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதெல்லாம் நமக்கு தேவையில்லை. அவனை மொக்கைப் போட்ட சில மேட்டர்களை மட்டும் பார்ப்போம்.

   திமுக, அதிமுக, என எல்லா கட்சி விசுவாசிகளும் இருந்தார்கள் அங்கே. எல்லோரும் இவனைப் போட்டு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். அரட்டை முடிந்து சாப்பிட அமர்ந்த போது சொன்னேன் “நீங்க எந்தக் கட்சியா இருந்தாலும் கை வச்சுதான் சாப்பிட முடியும். அரிவாள வச்சோ, சூரியன வச்சோ சாப்பிட முடியுமா?” என்றேன். தலைவர் முகத்தில் ரஞ்சிதாவைக் கண்ட நித்யாவைப் போல 1000 வாட்ஸ் பிரகாசம்.

  பாட்டி ஒருவர் மாடிக்கு செல்ல முயன்ற போது இளைய தலைவரைப் பார்த்து கொஞ்சம் மேல கொண்டு போய் விடுப்பா என்றார். மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த தலைவர் இரு பாட்டி வறேன் என்றார். சும்மா இல்லாமல் 40 வயது அங்கிள் ஒருவர் “பாட்டி கைய பிடிச்சுக்கோப்பா.காங்கிரஸ்காரனே கை பிடிக்கலைன்னா எப்படி” என்றார். பதில் சொல்ல முடியாத தலைவர் என்னைப் பார்க்க நான் காப்பாற்றினேன் “அவர் இளைஞர் காங்கிரஸ் அங்கிள். பாட்டிக்கு பேத்தி இருந்தா சொல்லுங்க. பிடிப்பாரு”

   என் பேச்சாற்றலைக் கண்டு (?) வியந்த வார்டு தலைவர் காங்கிரசை ஆதரித்து பேச சில பாயிண்டுகள் கேட்டார். விரைவில் அவரது கன்னிப் பேச்சு ஒரு மேடையில் அரங்கேற இருக்கிறதாம்.என்னால் முடிந்ததை சொன்னேன்

1) நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் மைய கையிலதான் வைப்பாங்க.அதனால் கைக்கே ஓட்டு போடுங்கள்

2) தேர்தலில் எந்த கட்சி வேட்பாளர் ஜெயிச்சாலும் கங்கிராட்ஸ் தான் சொல்லுவாங்க. யாரும் பி.ஜே.பி , கம்யூனிஸ்ட்ன்னு சொல்ல மாட்டாங்க.

மூன்றாவது பாயிண்ட் சொல்வதற்குள் தலைவர் மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருந்தார். அவர் அவசரத்திற்கு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வார்களா எனத் தெரியவில்லை. வாழ்க காங்கிரஸ். வாழ்க ராகுல். வாழ்க இந்தியா.

Apr 12, 2010

தோழி அப்டேட்ஸ் – திருமண ஸ்பெஷல்

46 கருத்துக்குத்து

 

கையில் பூக்களோடு நடந்து வந்த தோழியைப் பார்த்து நர்சிம் கேட்டார் “பூவோட வறாங்களே. அவங்கதான் தோழியா சகா?” என்று. பார்க்காமலே சொன்னேன் “அவ பூவோட வர மாட்டா சகா. பூப்போல வருவா”

______________________________________________________

நகைக்கடை மாதிரி இருக்காங்களே அவங்க யாரு சகா என்றார் இன்னொருவர். பயந்து போய் தோழி இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். நடந்ததை சொன்னவுடன் சிரித்தபடி சொன்னாள் தோழி “நான் இன்னும் தங்கம்தாண்டா. நீ தட்டினாதானே நகையாவேன்”.

____________________________________________________

தோழியின் இலையில் முதல் ஸ்வீட் நான் வைக்கலாம் என்று ரசமலாய் கொண்டு போனேன். ரசமலாயை விட ரசகுல்லா பெட்டரா இருக்குமில்ல என்றாள். ”எல்லோரும் ரசகுல்லா வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க” என்றேன்.

______________________________________________________

       அண்ணனுக்கு பரிசளிக்க எதையோ காகிதத்தால் சுற்றிக் கொண்டு வந்த தோழி ”வாழ்த்து அட்டையில் என்ன எழுதுவது என்று தெரியாமல் “காதலால் நிரப்புங்கள்” என்று எழுதி இருந்தாள். “இதற்கு உன் பேரை மட்டுமே எழுதி இருக்கலாம்” என்றேன். இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்

______________________________________________________

காலியாய் இருந்த மணமக்கள் இருக்கையில் இருவரும் அமர்ந்து பார்க்கலாம் என அழைத்தாள் தோழி. ”எப்படியும் நாம உட்காரணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்” என்றாள். அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் மணமக்கள் இப்போது தேனிலவு சென்றிருக்கிறார்கள் என்று.

______________________________________________________

Apr 11, 2010

நல்லபடியாய் நடந்தது

46 கருத்துக்குத்து

 

கல்யாணம் பண்ணிப்பார்.. வீட்டைக் கட்டிப்பார்ன்னு சொல்வாங்க. 2 வருடங்களுக்கு முன்பு முட்டி மோதி வீட்டைக் கட்டி முடித்தோம். இப்போது அண்ணனின் திருமணம். நல்லபடியாய் முடித்த திருப்தியைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. 11 வருடங்கள் முன்பு மறைந்த என் தந்தையின் நட்பு வட்டம் மொத்தமும் வந்திருந்தார்கள்.

DSCN0102

  20 வருடங்களுக்கு முன்பு மருத்துவர்.இராமதாசு, பேராசிரியர்.கல்யாணி (நடிகர் ராஜ்குமாரை மீட்க வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் சென்றவர்) மற்றும் என் தந்தை ஆகியோர் தலைமையில் திண்டிவன நகரில் “நகர கல்வி மேம்பாட்டுக் குழு” என்று ஆரம்பித்த அந்த நகரின் பல பிரச்சினைகளுக்காக போராடினார்கள்.பின்னர் இராமதாசு அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி சென்ற பின்னாலும் என் தந்தையும், கல்யாணி அவர்களும் இன்னும் பலரும் நகர பிரச்சினைகளுக்காகவே போராடினார்கள். அப்போது அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பலரும் வந்திருந்தார்கள். பலருக்கு அழைப்பு அனுப்பக் கூட எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தோம். விஷயம் கேள்விப்பட்டு அவர்களாகவே வந்திருந்தார்கள்.

ஒவ்வொருவரின் பேச்சிலும் அப்பாவைக் காண முடிந்தது. துவண்டு போன குடும்பம் நல்ல நிலைமையில் இருப்பதைக் கண்டு அவர்கள் அடைந்த ஆனந்தம் மகிழ்ச்சியளித்தது. நிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் நிர்வாக மேலாளார் வந்திருந்த சில வழக்கறிஞர்களைப் பார்த்துவிட்டு அழைப்பிதழைப் பார்த்தாராம். அவருக்கும் அப்பாவைத் தெரிந்திருக்கிறது. எல்லோரையும் வழியனுப்பிவிட்டு கணக்கு முடிக்க அவரை சந்திக்க சென்றபோது “உங்க அப்பா கம்யூனிஸ்ட் வக்கீல்தானே. எனக்கும் தெரியும்ப்பா. கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். அடக்கிவைத்த கண்ணீர் முழுவதும் இரண்டு பெரிய துளிகளாக வெளிவந்தது.

வலையுலகில் இருந்து அப்துல்லா, நர்சிம்,லக்கி,அதிஷா,டி.வி.ஆர் அய்யா, ஆதி, ரிஷி, அத்திரி,கேபிள் சங்கர்,மேவீ,  ரசிகன் மகேஷ் மற்றும் பலர் வந்திருந்தார்கள். வெண்பூ குடும்ப சகிதமாக வந்து மகிழ்ச்சியளித்தார். அப்துல்லா தொண்டை பிரச்சினை என்றபோதும் “நூறு வருஷம்” பாடலைப் பாடி உற்சாகமூட்டினார். டி.வி.ஆர் அய்யாவுக்கு எப்போதுமே நான் செல்லப்பிள்ளை. வந்திருந்த அனைவரும் நிகழ்ச்சி முடியும்வரை இருந்து சிறப்பித்தார்கள். யாரையும் அண்ணனுக்கு அறிமுகம் செய்யவில்லை. அனைவரையும் அவன் அறிவான். மூட்டை மூட்டையாக இவர்கள் கொண்டு வந்த அன்பை சுமந்து சுமந்து தான் முதுகு வலி வந்தது. நடக்க கூட முடியாமல் நான் தவித்ததாக நர்சிம் எழுதியிருந்தார். அதற்கு இவர்களின் அளவில்லா அன்புதான் காரணம். நல்ல வேளை ..தற்காலிகமாக முதுகில் சுமந்து கொண்டிருந்தேன், நெஞ்சில் சுமக்காமல்.

  ஒரு வாரகாலமாக நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தேன். யாருக்கு எது தேவையென்றாலும் கார்க்கி என்று அழைப்பது ஒலித்துக் கொண்டேயிருந்தது. நேற்று காலையில் எழுந்தபோது வீட்டில் நான், அம்மா, அக்கா, மாமா மட்டுமே. பப்லுவும் ஊருக்கு சென்றிருக்கிறான். எல்லோரும் அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டை சுற்றி சுற்றி வந்தேன். ஒரு வித வெறுமையாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்புவரை இந்த வெறுமையும், தனிமையும் எனக்கு பழகிய ஒன்றாக இருந்தது. இப்போது புதிதாக, கடினமாக மாறிவிட்டது. இதோ.. என் வெறுமைக்கு நான் கண்ட மருந்தை எடுத்து விட்டேன். இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இனி உங்கள் தோள்களில் கைபோட்டு உரையாடவும், கைகளை கிள்ளி எள்ளி நகையாடவும் வந்துவிட்டேன். நாளை முதல்…

பி.கு: நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு.

Apr 1, 2010

திருமணத்திற்கு அழைக்கிறேன்

40 கருத்துக்குத்து

 

உங்க அண்ணனே இன்னும் பேண்ட் போடல. அதுக்குள்ள உனக்கு வேணுமா?”

   அஞ்சாவது படிக்கும் அந்த அறிஞனை அவன் அம்மா அடித்துக் கொண்டிருந்தார்கள். பேண்ட் கிடைக்காத அறிஞன்,மன்னிக்க, சிறுவனுக்கு பேண்ட் கிடைக்கவில்லை என்பதை விட அவன் அண்ணனால் கிடைக்கவில்லை என்பதே பெரிய உறுத்தலாக இருந்தது. பேண்ட் மட்டுமல்ல, பல விஷயங்கள் அல்லது எல்லா விஷயமும் அவனுக்கு தாமதமாவதற்கு அவன் அண்ணனே காரணமாக இருந்தான்.

பெரிய சைஸ் நோட்டில் ஆரம்பித்து, ஜியோமெட்ரிக் பாக்ஸ், ஸ்கெட்ச், சைக்கிள் என எது கேட்டாலும் அவனுக்கே இன்னும் வாங்கித் தரல. உனக்கு என்ன அவசரம் என்ற பதிலே கிடைத்தது. “நான் பொறந்து பத்து வருமாச்சு. ஆனா எனக்கு இன்னும் பத்து வயசுதான் ஆகுது” என்று தமிழ்ப்பட ஹீரோ யோசித்த மாதிரி, இவனும் என்றாவது ஒரு நாள் அண்ணனை விட வயதில் மூத்தவனாகிவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினான்.

உஸ்ஸ்ஸ்ஸ்.. எனக்கே போரடிக்குது. பீடிகை எல்லாம் வேண்டாம். நேரிடையாக விஷயத்திற்கு வருகிறேன். என் அண்ணனைத்தான் சொல்கிறேன். எல்லாவற்றிலும் எனக்கு முட்டுக்கட்டையாக இருந்தவன், ஒரு விஷயத்தில் மட்டும் என்னைப் பாதுகாக்கும் அரணாக இருந்தான். இருக்கிறான். அதுதான் திருமண விஷயம்.(ஒய் சிரிப்பு????)  அண்ணன் இருக்கும் வரை தம்பிக்கு எப்படி திருமண பேச்சு எடுப்பார்கள்? அதனால் அரணாக இருந்தான். இப்போ என்ன ஆச்சா? அண்ணன் திருமணம் செய்து கொள்ளப் போகிறான். அப்படின்னா என் கதி? :(((((((

என் கதியை விடுங்க. இப்போ சொல்ல வர்ற விஷயம். அதேதான். அண்ணனுக்கு திருமணம். ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி.. ஆரணிக்கு அருகில் திருமலை என்ற இடத்தில் திருமணம். அன்று மாலையே சென்னையில் வரவேற்பு. பதிவுலக நண்பர்கள் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறேன். சென்னையில் இருக்கும் நண்பர்கள் சிலரை முடிந்தவரை நேரில் அழைத்தேன். அனைவரும் சொன்ன ஒரு வார்த்தை “பதிவு போடுப்பா. வந்துடறோம்”. போட்டாச்சு.. வந்துடுவீங்க இல்ல?????

Scan03312010_164524

அப்படியே நாளையில் இருந்து 10 நாட்கள் விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இடையில் முடிந்தால் பதிவுடுவேன். முடியாவிட்டால் 11ஆம்தேதி சந்திப்போம். அதுவரைக்கும் நிம்மதியா இருங்க. நீங்க ஆசைப்பட்டா பழைய பதிவுகளில் ஹிட்டடித்த சிலவற்றை மீள்பதிவாகும்படி ஷெட்யூல் செய்யலாம் என்றிருக்கிறேன். செய்யலாமா வேண்டாமா என்று சொல்லுங்கள்.

மறக்காதிங்க.. ஏப்ரல் 8… 6.30 மணி.. மயிலாப்பூர். சந்திப்போம்.

மேலதிக தகவலுக்கு 9789887048

முக்கியமான விஷயம் பப்லுவும் அழைக்கச் சொன்னார். உங்களையெல்லாம் சந்திக்க ஆர்வமாக இருக்கிறாராம். :))

 

all rights reserved to www.karkibava.com