Nov 29, 2009

பப்லு 8

36 கருத்துக்குத்து

 

   பப்லுவுக்கு இன்று பிறந்த நாள்.. இன்னும் ஏண்டா உன் பிளாகுல போடலைன்னு ஒரே நச்சரிப்புங்க.

இதோ அவனுக்கு பிடித்த பாடலோடு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. பப்லு கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைத்தனங்களை இழந்துக் கொண்டு வருகிறான். பெரியவனாவதில் சந்தோஷம்தான் என்றாலும் என்னவோ போலிருக்கிறது.

வேற என்னடா வேணும்ன்னு கேட்டேன். அவனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சிக்கனுமாம். ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க. சொல்றதுக்கு முன்னாடி இதை படிச்சிடுங்க.அவனைப் பற்றி தெரியாதவர்கள் இந்த லேபிளில் இருக்கும் பதிவுகளை படிச்சிட்டு வாங்க

நேத்து காலைல ஹேர் கட் பண்ணிட்டு வரலாம்ன்னு ரெண்டு பேரும் Naturalsக்கு போனோம். பப்லு தூக்க கலக்கத்தில் தலையை ஆட்ட, கத்தி லேசாக காதை கீறிவிட்டது. விழித்துக் கொண்டவன் சொன்னான் ”மாமா. இவர ஹேர கட் பண்ண சொன்னா வேற  கட் பண்றாரு”

இப்ப சொல்லுங்க பப்லு பற்றி…

IMG_0957

Nov 26, 2009

டம்ளருக்குள் நீச்சல் ஏனடா?

24 கருத்துக்குத்து

 

  அழகான மாலை வேளை அது. சூரியன் சிவப்பு நிறத்தில் இருந்தாலும் எங்களுக்கு ரோஜாவாகாத்தான் தெரிந்தது. எங்களுக்கு என்றால் எனக்கும் என் அவளுக்கும். பிப்ரவரி 14. காதலர் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

  கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம். அலைகள் சுருதி சேராமல் பாடிக் கொண்டிருந்தன. அலை வந்து மோதுகிறதே என்று பாறைகள் நகர்வதாய் தெரியவில்லை. பாறைகள் நம்மோடு வருவதில்லையே என்று அலைகளும் விடுவதாயில்லை.

“நான் தான் பாறையா?” என்றாள். எப்படி அவளுக்கு நான் யோசிப்பது தெரிந்தது  என்றுத் தெரியவில்லை.

நீதான் வந்துட்டியே.

நீ விடாம துரத்துன. சரி விடு. இப்ப அதுவா முக்கியம். நான் என்ன கிஃப்ட் வாங்கியிருக்கேன் சொல்லு?

எது வாங்கினாலும் எனக்குப் புடிக்கும்.

எப்படி சொல்ற?

எனக்கு யாரு தர்றாங்கிறதுதான் முக்கியம்.

என் கையில எதுவுமே இல்லையே. என்னவா இருக்கும்னு கெஸ் பண்ணேன்.

அப்படின்னா பெருசா எதுவோ வாங்கியிருக்க. இல்லைன்னா இப்ப கூட்டிட்டு போய் வாங்கலாம்னு சொல்லுவ.

ஏண்டா இவ்ளோ அறிவாளியா இருக்க? எதையுமே செய்ய முடியல.நம்ம கெளரி கடைல இருக்கு. இங்கேயே இரு. நான் போய் எடுத்துட்டு வர்றேன்.

  அவள் எழுந்து செல்வதைக் கண்ட அலைகள்  அவளை பின் தொடர ஆசைப்பட்டு இன்னும் வீரியத்துடன் எழுந்தன. நான் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு சோகத்துடன் விழுந்தன. விழும் நேரத்தில் எழுந்த சத்தம் அலையின் அழுகுரல் போலவே கேட்டது எனக்கு. 1987க்கு முன்னால் கடலில் உப்புத்தன்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும்.

கையில் பெரிய பெட்டியுடன் வந்துக் கொண்டிருந்தாள். என்னவாக இருக்கும் என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையாக எனக்குத் தெரியவில்லை.

To my porikki என்று எழுதப்பட்டிருந்தது.

Happy Valentine's day டா என்றாள்.

கையில் வாங்கினேன். என்னவென்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் பிரிக்கப் போனவனைத் தடுத்தவள் “ மூனு சாய்ஸ். என்னன்னு சொல்லிட்டு பிரி” என்றாள்.

என்னால் பொறுக்க முடியவில்லை. “ஷேர்ட், வாட்ச், மொபைல்” என்று சொல்லிவிட்டு பிரித்தேன். சிரித்துக் கொண்டே சொன்னாள் ” உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”

என்னால் நம்ப முடியவில்லை. இதை எப்படி யோசிக்காமல் போனேன்? அழகிய கிடார். என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. எனக்கு உடனே அவளை அணைத்து ஒரு முத்தமிட வேண்டும் போலிருந்தது. ஆனால் கையில் கிடார். அந்தப் பாறையில் எங்கேயும் அதை வைக்க மனம் வரவில்லை. கிடார் எனக்கு முதல் காதலி. என் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டவள் கன்னத்தை காட்டினாள். ப்ச்.

தேங்ஸ்டா என்றேன்.

எனக்கு என்ன கிஃப்ட்?

உன்னையேக் கூட்டிட்டு போய் வாங்கலாம்னு வந்தேன்.

எனக்கு இப்பவே வேணும்.

அதான் கொடுத்தேனே.

ச்சீ. அது இல்ல. ஒரு பாட்டு பாடுடா

இங்கேயா?

ஆமாம்.நான் மாஸ்டர்கிட்ட கொடுத்து ட்யூன் பண்ணிதான் எடுத்துட்டு வந்தேன்.

கிட்டாரை என் ஸ்டைலில் கையிலெடுத்தேன். அப்படியே  தலை சாய்த்து சொன்னாள் “இதான்டா. நீ இத வாசிக்கும் போதெல்லாம் கிடார்தான் நான்னு நினைச்சுக்கோ. இப்படி கட்டிபுடிச்சுட்டே  வாசிப்பில்ல. அதான்டா வேணும்”

நான் கிடாரை முத்தமிட்டேன். அவள் சிலிர்த்தாள்.கொஞ்ச நேரம் கண்மூடி ரசித்தாள்.

ஏதாவது பாடுடா. உனக்கு பிடிச்ச பாட்டு.

யோசிக்காமல் தொடங்கினேன்.

“என் இனிய பொன் நிலாவே.

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம்....தர தத் தரா..

தொடருதே தினம் தினம்.. தர தத் தரா..”

**************************

   நினைவுகளில் இருந்து மீண்டேன். கடிகாரம் ஃபிப்ரவரி 12 என்று மட்டும்தான் காட்டியது. வருடத்தை காட்டவில்லை. என்னோடு அவளும்,கிடாராக. இறுக அணைத்துக் கொண்டேன். தேடிப்பிடித்து அதே பாறையில் உட்கார்ந்துக் கொண்டேன். பாடுடா என்று அவள் சொன்னது இன்னுமும் அங்கேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.  கிடாரை முத்தமிட்டு பாடத் தொடங்கினேன்.

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது

மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் விளையாடும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி
மறு வாசல் வைப்பான் இறைவன்

பாடி முடித்தவுடன் கைத்தட்டல் வந்த திசையை நோக்கி பார்த்தேன். wow.It was awesome என்றது அந்த பூங்கொத்து. I am Radhika என்று தட்டிய கைகளில் ஒன்றையும் நீட்டினாள்.

சரியான பாடலைத்தான் பாடியிருக்கிறேன்.

 

Nov 20, 2009

சென்னைவாசிகளே ஒன் நிமிட்

36 கருத்துக்குத்து

 

  சில வாரங்களாக சென்னையிலே குப்பைக் கொட்டியதன் விளைவாக சென்னையைப் பற்றி  சிலப் புதிர் கேள்விகள். சென்ற வருடம் இதே மாதத்தில் இந்தப் பதிவு எழுதிய போது நல்ல ரெஸ்பான்ஸ். சில கேள்விகளை மாற்றியிருக்கிறேன். இந்த ஒரு வருடமாக தொடர்ந்து என்னைப் படிக்கும் நண்பர்கள் உங்க ஞாபக சக்தியை டெஸ்ட் செஞ்சிக்கலாம். புதியவர்கள் முயற்சி செய்ங்க.அனைத்திற்கும் சரியாய் பதில் சொல்பவர்கள் "நான் மெட்ராஸ்காரன்டா" என போக்கிரிப் பொங்கல் போட்டுக் கொள்ளுங்கள்.(அதாம்ப்பா,காலர தூக்கி விட்டுக்கோங்க).

1) சென்னையில் முட்டை அதிகம் கிடைக்குமிடம் எது?

2) சிகரெட்டைக் கண்டாலே "ஆ" வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

3) தேநீர் பகுதியில் மக்கள் கூட்டம்.எங்கே?

4) நமீதாவின் இடுப்பில் இருப்பதை ஆக்குபவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.

5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.

6) விஜயகாந்த் வசிப்பதால் இது வில்லேஜ்தான். ஆனால் சென்னை மாநகரில்தான் உள்ளது.

7) வெளிநாட்டு நிறுவனங்களுக்காக  இங்கே தான் முதலில் கடை கட்டப்பட்டது. வெள்ளைக்காரனுக்காக FLOOR BELL என்று பெயர் மாற்றாமல் இருந்தால் நல்லது

8) சேரிதான். ஆனால் காஸ்ட்லியான சேரி.

9) பேட்டைதான். அதுவும் ராஜபக்‌ஷே பேட்டை.

10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது?

Nov 19, 2009

கார்க்கியின் காக்டெயில்

36 கருத்துக்குத்து

 

Massiev solutions என்ற பெயர் வைத்தாகிவிட்டது நம்ம கன்சல்டன்சிக்கு. அதற்கு தோதாக ஏதாவது tagline வைக்கலாமே என்று யோசிக்கத் தொடங்கினோம். பல ஐடியாக்கள் வந்தன. வேலை தேடுபவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் வைக்க வேண்டும்.  தமிழில் வைத்தால் சும்மா உள்ள பூந்து வூடு கட்டலாம். ஆனால் இங்கிலீஷ் என்பதால் inside enter house constructing முடியாமல் போச்சு. அப்படி இப்படி என்று 20 ஒன் லைனர்கள் வைத்து ஒவ்வொன்றாக ஒதுக்கி வைத்து கடைசியில் Geometry of  recruitment என்று முடிவு செய்தோம். இது வேலை தேடுபவர்கள், வேலைக்கு ஆள் தேடுபவர்கள் என இருவருக்கும் தோதான ஒன்றாக தெரிகிறது. உங்க கை  வசம் ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கப்பூ.

தமிழில் நான் சொன்னது “வெட்டிபயல்களின் வேடந்தாங்கல்”. எப்பூடீ?

***********************************************************

இந்தியாவில் இதயப் பிரச்சினை  அதிகம் இருப்பதற்கு காரணம் அதிக அளவில் எண்ணெய் சேர்ப்பதனால்தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் சமீபத்தில் படித்த செய்தி அதிர்ச்சியாய் இருந்தது. ஐரோப்பியர்கள் அதிகம் எண்ணெய் பயன்படுத்துவதால்தான் இதயப் பிரச்சினை குறைவாம். நாம் அதிகம் பயன்படுத்துவது இல்லையாம். என்னங்கடா கதை விடறீங்க? எங்க ஊர் பஜ்ஜி எல்லாம் நீங்க பார்த்ததே இல்லையா என்று கையை முறுக்கிய பின்தான் பார்த்தேன், அவர்கள் சொல்வது ஆலிவ் ஆயில். அதை நாம மூஞ்சிக்குத்தானே போடுவோம்? விலை அதிகம் என்றாலும் முயற்சி செய்து பார்ப்போமே. சமையலில். ஏனெனில் இது நிரூபிக்கப்பட்ட ஒன்றாம். For long live, Use Olive.

**********************************************************

அமெரிக்க போன்ற நாடுகளின் முதலாளித்துவத்தை எதிர்த்து பொங்கும் பதிவர் அவர். நம்ம மண் சார்ந்த உழைப்பாளியை வாழ வைக்க அவர்களின் விளைபொருட்களை பயன்படுத்துங்கள் என்று அடிக்கடி சொல்பவர். கோக்கை விட இளநீரை குடிங்க கார்க்கி என்பார். சென்னையில் இளநீர் 15 ரூபாய் என்று சொல்கிறான். எனக்கு வேண்டாம் என்பேன். அப்படியென்றால் bovonto குடிங்க என்றார்.  பல விஷயங்களில் அவரின் கோபம் நியாயமானதாகத்தான் எனக்கும் தோன்றியது. சென்னைக்கு வந்திருந்த போது பேசிக் கொண்டிருந்தோம். ஈரான் நாட்டுப் படங்களைப் பார்ப்பீர்களா என்றார். இல்லைங்க. நான் நாட்டரசன் கோட்டை நாயகன் பேரரசு படம் தான் பார்ப்பேன். நம்ம ஊரு கலைஞர்களை வாழ வைக்க வேண்டாமா என்றேன். அன்றிரவே மண்ணின் மைந்தன் இயக்கிய , மண்ணின் மைந்தன் நடித்த, மண்ணின் மைந்தன் தயாரித்த ஆதவன் பார்க்க அழைத்தேன். அதற்கு அவர்.. சரி விடுங்க செல்ஃப் டேமேஜ் இப்பலாம் அதிகம் பண்ணிக்கறேன்.

**********************************************************

பேராண்மை படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகரும் ஜெயம் ரவியும் ராசியாகி விட்டார்களாம். விரைவில் ஜெயம் ரவி “victory ravi” என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். ஜெயம் ரவிக்கு குயின் மேக்கர் என்ற பட்டம் உண்டு தெரியுமா? அவருடன் முதலில் நடித்த அசின் மேலே வந்து விட்டார். சதாவுக்கு ஷங்கர் பட யோகம். ஸ்ரேயாவுக்கு சூப்பர் ஸ்டார் ஜோடியாகும் வாய்ப்பு. ஆனால் பாவம் ரேணுகா மேனனுன், காம்னாஜெத்மலானியும் காணாமல் போய் விட்டார்கள். அதை விடுங்க, இவர் தமிழையே அழ்ழ்ழ்கா பேசுவார். ம்ம்ம்ம்

***********************************************************

நேற்று நம்ம சூர்யா-ஜோ மேட்டர் போட்டாலும் போட்டேன். கால், எஸ்.எம்.எஸ். மின்னஞ்சல் என பலர் அவங்க யாருங்க என கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அடடா கார்க்கி மேல இன்னும் நம்பிக்கை வச்சிருக்கிரவங்கள ஏமாத்தக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா அதுக்காக அவங்க அனுமதி இல்லாம யாருன்னு சொல்லக் கூடாது இல்லையா?. யோசிச்சுப் பார்த்ததுல அவங்கள பத்தி ஒரு க்ளூ கொடுக்கலாம்னு முடிவு செய்தேன். அந்த இருவரில் ஒருவர் பெண் பதிவர். இன்னொருவர் ஆண் பதிவர். போதுமா? பின்ன என்னங்க? ஹரிணி பத்தி ஒருத்தராவது கேட்டிங்களா? நானெல்லாம் லவ்வே பண்னக் கூடாதா? அதான் உடனே ஒரு கவிதை சொல்லி உங்கள டரியல் பண்ணலாம்ன்னு முடிவு செய்திட்டேன்.

மறக்கத்தான் தோணவில்லை

அவள் மடியில் சாய்ந்திருந்த நொடியை.

நினைக்கத்தான் முடியவில்லை

அவள் பிரிந்த அந்த நொடியை..

இடியாய் ஒலிக்கும் அவள் நினைவு

மின்னல் ஒளியென வரும் அவள் அழகு

எதிர்காலம் இல்லாதவனாய் இருக்கிறேன்

ஆனால்

இன்னும் நெஞ்சுக்குள் காதல் வளர்க்கிறேன்

யாருமில்லா அறைக்குள் நான் புலம்பும் ஓசை

நான் மட்டும் கேட்கிறேன்

நாளைய விடியலிலாவது

காடு தேடி ஒருத்தி வருவாளா என்று

Nov 18, 2009

பப்லு, நான் மற்றும் ஹரிணி

24 கருத்துக்குத்து

 

    சென்ற வாரம் நல்ல மழைநாளில் Domino’s pizza வேண்டுமென்று அடம்பிடித்தான் பப்லு. வேண்டாம் என்று சொல்ல எத்தனித்த நேரத்தில் கெசில்லா ஞாபகம் வர, சரி வா கார்ல போயிட்டு வரலாமென்று கிளம்பினோம். தோமினோஸில் ஒரு கெட்ட விஷயம், கவுண்ட்டரில் இருக்கும் அனைவரும் காதில் ஃபோனை வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள். Dine inஐ விட delieveryதான் அவர்களுக்கு முக்கியம். ஆனால் கவுண்ட்டரில் தொங்கிய போர்டில் “ To decide what you want to have will take more time than our service ” என்று காமெடி செய்திருந்தார்கள். அதுவா முக்கியம் என்று நகர்ந்த நேரம் “what you want sir” என்றார் ஒருவர். கெஸீலா என்று என்னையறியாமல் வாய் திறக்க வந்தபோது, பப்லு ”chicken mexican redwave” என்று முந்திக் கொண்டு என்னைக் காப்பாற்றினான். கெசிலா இல்லையென்று முடிவு செய்தபின் தான் கவுண்ட்டரில் இருந்து நகர்ந்தேன்.

excuse me என்று எண்ட்ரீ கொடுத்தார் இன்னொரு க்யூட் தேவதை. இவரும் அநியாயத்துக்கு அழகாக இருந்தார். பப்லு எங்கே இருக்கான் என்று தேடினேன். டேபிளில் இருந்த crossword puzzleஐ சீரியஸாக படித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை. அவள் ஆர்டர் செய்துவுடன் கவுன்ட்டரில் இருந்தவர் பேர் கேட்க,  ஹரிணி என்றாள். நல்ல பெயர்தானே? பப்லு எதிரே வந்து அமர்ந்து நம்ம க்யூட் தேவதையை பார்த்துக் கொண்டிருந்தேன். பாவம். முகம் மட்டும் ஏனோ படு சீரியஸாக இருந்தது. சிரிக்கவே மாட்டேன் என்று பந்தயம் கட்டிவிட்டார் போலும்.

    எப்படியோ மூக்கு வேர்த்து ஃபோன் செய்தான் வினோத். விஷயத்தை அமுக்கமாக பப்லுவுக்கு கேட்காத மாதிரிதான் சொன்னேன். எப்படியோ கேட்டுவிட்ட பப்லு ”மாமா, யாரு வினோத்தா? என்றான் சத்தமாக. ஒரு லுக் விட்டுவிட்டு திரும்பி விட்டாள் ஹரிணி. அந்த அக்கா பத்திதானே பேசறீங்க என்றான் பப்லு. அக்கா, மாமா மேட்ச் ஆனாலும் எப்படி கேட்டது என்று முழித்தேன். கிளம்பும் போது அந்த அக்காவைப் பார்த்து சிரித்தான் பப்லு. அப்போதும் உம்மென்றே இருந்தாள். கண்ணாடிக் கதவை திறந்து வெளியே வந்தேன் நான். பப்லு பாதி திறந்திருந்த கதவின் வழியாக “ஹரிணி” என்றான். அவள் திரும்பியவுடன் “கொஞ்சம் சிரி நீ” என்று சொல்லிவிட்டு ஓடி வந்தான். நான் சொல்லிக் கொடுத்துதான் பப்லு சொன்னதாக நினைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். ம்க்கும். கிளம்பும்போதுதான் தோணுமா உனக்கு என்றபடி பப்லுவுடன் கிளம்பினேன். ஹரிணி.. கொஞ்சம் சிரி நீ. ரைமிங்காத்தான் சொல்லியிருக்கான் பப்லு.

******************************

உறவினர் வீட்டில் ஒரு விசேஷம். நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். நான் செல்வதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால் பலர் கிளம்பிவிட்டார்கள். “ஏண்டா லேட்டு? எல்லோரும் எங்க கார்க்கி எங்க கார்க்கின்னுதான்” கேட்டாங்க என்றார் அம்மா. தாவி வந்து கழுத்தைப் பிடித்துக் கொண்டு சொன்னான் பப்லு “ அவன் எங்க கார்க்கி. யாருக்கும் தர மாட்டேன்” அவன் மொக்கையை புரிந்துக் கொள்ளாமலே சிரித்தார்கள் அனைவரும்.

*******************************

வலையுலகம் அறியாத வலையுலக காதல் ஜோடி அவர்கள். சூர்யா ஜோ என்று வைத்துக் கொள்வோமா? சூர்யாதான் முதலில் எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிந்தவர் என்றாலும், ஜோ சென்னையிலே இருப்பதால் பப்லுவிடம் அலைபேசி தோஸ்த் ஆகிவிட்டார். விஷம். ச்சே விஷயம்  இதுதான். நம்ம சூர்யா ஒரு மொக்கை அடித்திருக்கிறார். உடனே ஜோ, நான் தான் பப்லுவோட தோஸ்த், அதனால் மொக்கை அடிக்கிறது என்னோட காப்பிரைட்டு என்று சொல்லியிருக்கிறார். சும்மா விடுவாரா சூர்யா? உனக்கு பப்லுதான் தோஸ்து. ஆனா நான் அவன் குருவுக்கே தோஸ்து என்றாராம்.

              ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை வச்சு காமெடி பண்றாங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!

Nov 11, 2009

என்ன செய்யப் போகிறேன் நான்?

67 கருத்துக்குத்து

 

சென்னை வரப் போகிறேன் என்றதும் பலரும் கேட்ட கேள்வி “எந்த கம்பெனி?”. இல்ல. வேற பிளான் என்று சொன்னதும் ஃபோனிலே ஒரு மாதிரி பார்த்தார்கள். பிறகு ஒரு கன்சல்டன்சி ஒன்று தொடங்கப் போகிறோம் என்ற போதும் இன்னொரு கண்ணால் அதே மாதிரி பார்த்தார்கள். வலையுலக நண்பர்கள் பலர் என் மேலயும் நம்பிக்கை வைத்து ஊக்கமளித்தார்கள். இது ஒரு சுய புராண பதிவென்று பின்னூட்டப் போடவிருக்கும் அந்தப் புண்ணியவானுக்கு இந்த முன்னுரை போதுமென்று நினைக்கிறேன். விஷயத்துக்கு வருவோம்.

ஃபைனான்ஸ் கம்பெனிகள் அதிகம் மூடப்பட்ட நேரத்தில் வாடகைக்கு எளிதாக இடங்கள் கிடைத்தன. அதை வைத்து பிரவுசிங் செண்டர்களும் ஜாப் கன்சல்டன்சிகளும் புற்றீசல் போல் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஒரு கன்சல்டன்சி தொடங்க சில கணிணிகள், மூன்று ஆட்கள் , லேண்ட்லைன், இணையம் மற்றும் naukri.com ல் ஒரு அக்கவுண்ட். requirement வாங்க சில நிறுவனங்களின் HRஉடன் தொடர்பு. அவ்வளவே. எளிதில் லாபம் அடையலாம். ஆனால் இப்படி தொடங்கப்பட்ட நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்குள்ளே மூடப்பட்டு விடும். அது ஏன் என்பதெல்லாம் விளக்கினால் நீங்கள் கொட்டாவி விடக் கூடிய அபாயம் இருப்பதால் விட்டுவிடுவோம். நான் என்ன செய்யப் போகிறேன் என்று மட்டும் சொல்கிறேன்.

நான் ஒரு Recruitment consultant அல்ல. Career consultant. எனது முக்கிய வேலை ஒருவருக்கு வேலை வாங்கித் தருவது மட்டுமல்ல. அவரின் அனுபவம், தகுதி தற்போதைய வேலை இவைகளை வைத்து இவரின் career எந்த பாதையில் செல்லலாம், எதிர்காலத்தில் எந்தெந்த நிறுவனங்களில் பணிபுரியலாம் போன்றவற்றை விளக்குவது. அதன் அடிப்படையில் இருக்கும் openingsல் அவருக்கு ஏற்ற ஒன்றை பரிந்துரைப்பது. ஒரு உதாரணம் பார்ப்போம்.

பாலாஜி என ஒருவர். எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படித்துவிட்டு Maintenance engineer ஆக ஆறு வருடம் வேலை செய்து வருகிறார். ஒரு உற்பத்தி நிறுவனத்தில் கடந்த நாலு வருடமாக வேலை செய்து வந்தாலும் சம்பளம் என்னவோ 20ஆயிரம் ரூபாய்தான். இந்த நேரத்தில் ஒரு வாய்ப்பு வருகிறது. ஒரு ஷாப்பிங் மாலில் இருக்கும் சில utility equipmentsக்கு ஆள் தேவை. சம்பளம் 35ரூபாய். utility என்றால் DG set, Compressor, air conditioner முதலியவை. ஒரு மேனுஃபேக்சரிங் நிறுவனத்தில் பல மிஷின்களை பராமரித்த ஆறு வருட அனுபவத்தையெல்லாம் விட்டுவிட்டு அவர் இந்த வேலைக்கு வர 35 ஆயிரம் ரூபாய் என்ற காரணம் போதும்தானே? அவர் அப்படித்தான் நினைப்பார். அவரிடல் பேசும் கன்சல்டன்சி நபரும் அதையே அழுத்தி சொல்வார். காரணம், இவர் அந்த வேலையில் சேர்ந்தால் கன்சல்டன்சிக்கு ஒரு மாதம் சம்பளத்தை வேலைக்கு எடுக்கும் நிறுவனம் தந்துவிடும்.

பாலாஜி என்னிடம் வந்தால் இந்த வேலைக்கு போக வேண்டாமென்று சொல்லிவிடுவேன். அதுதான் ஒரு நல்ல career consultant செய்ய வேண்டும். ஏன்? இவர் ஒரு மேனுஃபேக்ட்சரிங் நிறுவனத்தில் பராமரிப்பு பிரிவின் தலையாக வரக் கூடியவர். அதற்குள் அவசப்பட்டு இந்த வேலைக்கு சென்றால் ஆறு வருட உழைப்பும் வீணாகிவிடும்.பின் கன்சல்டன்சிக்கு எப்படி காசு கிடைக்கும்? career consultant கேண்டிடேட்டிம்தான் சார்ஜ் செய்ய நேரிடும். ஆனால் நம்ம ஊரில் இதுக்கெல்லாம் காசு கொடுக்க அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் எனது திட்டம், இந்த வேலைக்கு ஆள் வேண்டும் என்று சொல்லும் நிறுவனத்தின் தேவையை நன்கு உணர்ந்து அதற்கு சரியான ஆளின் ரெஸ்யுமேவை அனுப்பினால், நம்ம ஆளு தேர்வாவது நிச்சயம். அது மட்டுமல்ல, அந்த நபருக்கும் சரியான பாதையை காட்டலாம். இவ்வாறு நல்ல வேலை கிடைத்த நபர் நிச்சயம் அவரின் நண்பர்களுக்கு நம்மைப் பரிந்துரைப்பார். ஆனால் இந்த திட்டம் ஐடிக்கு நிச்சயம் பொருந்தாது.

   இதில் இருக்கும் ஒரு பெரிய சவால், நம்மிடம் வேலை கேட்டு ரெஸ்யும் அனுப்பும் ஆட்களுக்கு இது புரிய வேண்டும். அவருக்கு ஏற்ற வேலை கிடைக்க சில நேரம் எடுக்கும். அதற்குள் அவர் வேறு கன்சல்டன்சி மூலம் வேறு வேலைக்கு சென்றுவிட்டால் அவ்வளவுதான். பொதுவாக கன்சல்டன்சிகள் ரெக்வையர்மெண்ட் கொடுக்கும் நிறுவத்திற்கு ஒரே நாளில் 10 புரொஃபைல் வரை அனுப்புவார்கள். யாராவது ஒருவன் செல்க்ட் ஆகிவிடுவான். ஆனால் அந்த நிறுவனத்திற்கு இது பெரிய செலவு. அத்தனை பேரையும் இண்டெர்வ்யூ செய்ய வேண்டும். ஆனால் என் திட்டப்படி நாமே முதல் கட்ட வடிகட்டுதல் செய்வதால், ஒன்றிரண்டு புரொஃபைல் மட்டுமே அனுப்புவதால் அவர்களுக்கும் வேலை குறைவு. இரண்டாவது இவர்களிடம் இருந்து வரும் புரொஃபைல் நல்லா இருக்குமென்ற நம்பிக்கையும் கிடைக்கும்.அதுதான் நமது மூலதனமே.

மேலும், ஐ.டி நிறுவனத்தில் ஆள் எடுப்பதென்பது தினமும் நடந்துக் கொண்டிருக்கும் செயல். talent acquisition team என்று ஒரு தனிக் குழுவே இதற்காக வேலைசெய்யும். ஆனால் manufacturing industriesல் இது முற்றிலும் வேறு. ஆனால் ஐ.டி நிறுவனங்கள்தான் கன்சல்டன்சிகளுக்கு வரப்பிரசாதம். அதனால் அவர்கள் மேனுஃஃபேக்சரிங்க்குக் அதே முறையை கையாள்வார்கள். அவர்கள் சொல்லும் requirementsஐ புரிந்துக் கொள்ள மாட்டார்கள். production, metal forming, machine shop என்பது போன்ற கீ வேர்ட்ஸை மட்டும் எடுத்துக் கொண்டு அவை இருக்கும் ரெஸ்யும்களை தேடி அனுப்புவார்கள்.ஏனென்றால் ஐடி வேலைக்கு java, unix, oracle dba என்று தேடி ரெஸ்யும் அனுப்பினால் போதும். இதனால் அந்த கிளையண்ட் கடுப்பாவது உறுதி. ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இதைப் புரிந்துக் கொண்டுதான் இந்த முயற்சியே. ஏற்கனவே பப்லுவின் அப்பா இது போன்றதொரு கன்சல்டன்சியை வெற்றிகரமாக இரண்டு வருடமாக நடத்தி வந்தாலும் தனியாக ஒன்றை தொடங்கவிருக்கிறோம். அது manufacturing industriesஐ மட்டுமே டார்கெட் செய்யும். கன்சல்டண்ட்களும் என்னைப் போன்று manufacturing பேக்கிரவுண்ட் இருக்கும் ஆட்களாகத்தான் எடுக்க இருக்கிறோம்.

ரொம்ப நீண்டுவிட்டது. ஒரு வேளை இந்தப் பதிவு பிடித்திருந்தால், ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள். சொல்கிறேன்.

Nov 9, 2009

கார்க்கியின் காக்டெயில்

50 கருத்துக்குத்து

 

சில மாதங்கள் முன்பு வரை சினிமா என்றால் இவரது விமர்சனம் தான் நம்பத்தகுந்ததாய் இருந்தது. விமர்சனம் எழுதுவதையே இவர் நிறுத்திவிட ஆபத்பாந்தவனாய் வந்தார் கேபிள். விஷயம் இதுவல்ல. அவருடன் சேட்டில் உரையாடிய போது தீபாவளி ரிலிஸ் பற்றிய பேச்சு வந்தது. ஆதவன் கலெக்‌ஷனில் பின்றானாம். பேராண்மை, மவுத் டாக் நல்லா இருக்குன்னு வந்தாலும் கல்லா கட்டாவில்லையாம். வணிக ரீதியாக இதுவும் ஐங்கரனுக்கு நஷ்டம்தானாம். ஆதவன் தோல்வியடைந்திருந்தாலாவது சூர்யா மாறியிருக்கக் கூடும். சிங்கத்திற்கு பிறகு என்ன ஆகப் போறரோ என்றார்.

  இவ்வளவு பேசிவிட்டு வேட்டைக்காரன் பற்றி பேசாமலா இருந்திருப்பேன்?  படம் திசம்பர் சகா என்றார். நம்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதே நாளிதழ்களில் திசம்பர் 18 முதல் வேட்டையாட வருகிறான் என்று விளம்பரம் வந்ததைப் பார்த்து கிட்டத்தட்ட மயக்காமாகி விட்டேன். ஏன்னா. அதை மட்டுமா சொன்னாரு? ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தவர்களுக்கு படம் திருப்தி அளிக்கவில்லையாம். சில காட்சிகளை ரீஷூட் செய்தால்தான் சரிப்படும் என்று சொல்லிவிட்டார்களாம். என் நிலைமை புரிந்து சரியான நேரத்தில் குளுக்கோஸ் கொடுத்தும் உதவினார். டச்சப் ஒர்க் முடிந்து சென்சாருக்கு சென்ற ஃபைனல் புராடக்டைப் பார்த்து சென்சார் அதிகாரிகள் சொன்ன ரிசல்ட் சன்னுக்கு மட்டுமல்ல, விஜய்க்கும் எக்கச்சக்க நம்பிக்கை தந்திருக்கிறதாம். ம்ம். இன்னும் 40 நாட்கள் தானே. பார்த்துவிடுவோம்.

(நம்மள வேட்டையாடாம இருந்தா சரிதான் கார்க்கி என்றெல்லாம் பின்னூட்டம் போடக் கூடாது சொல்லிப்புட்டேன்)

    ****************************************

     கத்திபாரா மேம்பாலத்தில் செல்லும்போது  என் மொபைல் சிக்னல் கிடைக்காமல்  ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்கும்போதே கட்டாகிவிடுகிறது. இரண்டு முறை இதை கவனித்த பப்லு என்னடா ஆச்சு என்றான். இங்க சிக்னல் இருக்க வேண்டாம்ன்னு இந்த மேம்பாலம் கட்டிட்டாங்க இல்ல. அதான் சிக்னல் இல்லாம கட்டாவுது என்றேன். அங்கிருந்து ஆதம்பாக்கம் வரும்வரை பேசாமல் இருந்தவன் வீட்டருகே வந்ததும் சொன்னான் “அந்த இடத்து பேரு. கத்திபாராதானே? அதான் எல்லாரும் கத்திப்பாக்கட்டும்ன்னு கவர்மெண்ட்டே அப்படி வச்சிருக்காங்க”.

(பார்றா. கத்தி மாதிரி பேசறான்னு இதுக்கு பின்னூட்டம் போடக்கூடாதுங்க)

****************************************

வியாழன்  இரவு பப்லுவுக்கு காய்ச்சல் அதிகமாகிவிட இரவு 10 மணிக்கு மேத்தா நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் சென்றோம். சச்சின் 350ஐ தொட்டுவிட போராடிக் கொண்டிருந்ததை(மட்டும்) பார்த்துக் கொண்டிருந்தார்கள் எல்லா அப்பாக்களும். ச்சே இதான் அப்பாக்கள். அம்மாக்கள் எப்படி குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லைன்னு பத்திரமா பார்த்துக்குறாங்க என்றேன் உடன் வந்தவரிடம். ஒட்டுக் கேட்ட வார்டு பாய் சொன்னார் “நாளைக்கு ஒன்பது மணிக்கு கொஞ்சம் வந்துட்டு போங்க சார்”.

(இதுக்கு எப்படி வேணும்னாலும் பின்னூட்டம் போடாலாம்)

****************************************

வலையுலக தோழி ஒருவர் மடலிட்டிருந்தார். I MISS YOU என்பதற்கு தமிழில் சரியான வாக்கியம் என்ன  என்று கேட்டிருந்தார். எவ்வளவு கசக்கியும் தெரியவில்லை எனக்கு.  நேரிடையாக மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது என்றெல்லாம் விளக்கம் தந்துப் பார்த்தேன். ம்ஹூம். சரி பேச்சை மாற்றிவிடுவோம் என்று ”நான் ரெண்டு நாளா பதிவு போடலையே. என்னைதான் மிஸ் பண்றேன்னு சொல்ல போறீங்களா”ன்னு  ரிப்ளை அனுப்பினேன். பதில் மின்னல் வேகத்தில் வந்தது.

நான் அப்படி நினைக்கலை :) அக்சுவல்லி, ஐ வாஸ் ரிலீவ்ட் ப்ரொம் யுவர் மொக்கை :)))) 

சரி.அத விடுங்க. I MISS YOU என்பதை தமிழில் எப்படி சொல்லலாம்?

(கடைசி வரியை கோட் செய்து நல்லாவே பேச்சை மாத்தறீங்க சகான்னு போட தடை)

****************************************

வலையுலகம் தெரியாத நண்பன் ஒருவன் இன்னொரு நண்பனின் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றான். எனக்கு மக்ரோனி என்றால் ரொம்ம்ம்ம்ப இஷ்டம் என்பதால் நிறைய வாங்கிவரச் சொன்னேன். மறந்துவிட போகிறான் என்று ஒரு ஐஸ் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்.

  “தூத்துக்குடியில் முத்து எடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம். பத்திரமா வந்து சேருடா”

அவன் ரொம்ப புத்திசாலி. அருமையான ரிப்ளை அனுப்பினான்.

“என்ன மச்சி மப்பா? முத்துவுக்கு அனுப்ப வேண்டியத எனக்கு அனுப்பி இருக்க!!

இவனெல்லாம் பதிவு படிக்க வந்தால் எப்படியிருக்கும் சொல்லுங்க? நோ. நெவர். பரிசல் அவர பத்தி தப்பு தப்பா பேசாதிங்க.

(இதைப் பத்தி யாருமே எதுவுமே சொல்லக்கூடாது. ஸ்ட்ரிக்டா சொல்லிடறேன் )

****************************************

இன்றைய ஹாட் ஜாப்ஸைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்

Nov 5, 2009

வேலை வேணுமா வேலை

41 கருத்துக்குத்து

  

   எல்லோருக்கும் வணக்கம் மக்களே..  இன்னையிலிருந்து சைடுபார்ல HOTJOBS ன்னு ஒரு பகுதி சேர்க்க போகிறேன். இப்ப நாமளும் தொழிலதிபர் ஆயிட்டோமில்ல. அதான் வேலை வாங்கி தர்ற கன்சல்டன்சி ஒன்னு தொடங்க போறோம். இன்னும் ஆரம்பிக்கல. ஆனா நான் வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டேன். சோ, கிரேசி ச்சே. இங்க கூட மொக்கையா? சோ, அதனால் இன்னையிலிருந்து எல்லா விதமான வேலைவாய்ப்பு செய்திகளும் தினமும் சைடு பார்ல போடுவோம். உங்களுக்கோ, தெரிந்த நண்பர்களுக்கோ இந்த வேலை செட்டாகும்ன்னு தோணுச்சுனா ஒரு மெயில் தட்டி விடுங்க. மீதிய நான் பார்த்துக்கிறேன்.

இன்றைய ஸ்பெஷல்( அடப்பாவி. ஹோட்டல் ரேஞ்சுக்கு..)

1) Oracle techno functional(PO/iProcurement)

Functional area: Oracle APPS

Client                  : US technologies

Experience        : 3+ Yrs

Qualification     :  Any degree 

Location            : Trivandrum

Salary                : மேட்டரே கிடையாது. அடிச்சு பேசலாம்

2) Oracle DBA

Functional area: Oracle DBA (Both core & APPS)

Client                  : US technologies

Experience        : 6+ Yrs

Qualification     :  Any degree 

Location            : Trivandrum

Salary                : மேட்டரே கிடையாது. அடிச்சு பேசலாம்

3) Executive Manager

Functional area: Transmission Assembly

Client                  : John Deere

Experience        : 8+ Yrs

Qualification     :  B.E/B.Tech mechanical or production

Location            : Pune

Salary                : around 8 lacs

 

Description

Knowledge of manufacturing and/or distribution processes, quality, tooling, tool design, total preventative maintenance and facilities. - Performs more complex functions, understands principles, may teach others. Understanding of employee policies, practices, procedures and work rules appropriate for the unit. Experience of Leadership role in union environment, Experience with shop floor manufacturing & production control systems, Experience in budgeting, forecasting and scheduling.

Major Duties

•Manages a single, highly complex department Supervisory/work direction of staff support, i.e. engineering, production control, etc. Will be Responsible for achieving departmental/area goals and objectives. Position will have one or more supervisors r

•Provides engineering, production control and troubleshooting expertise for the department to support production, manufacturing, and maintenance operations.Implements and monitors safety programs and housekeeping.

•Develops, monitors and makes corrections to stay within the department operating budget targets.

•Provides engineering, design and project planning to support productivity improvement projects.

•Provides technical direction, mentoring, and expertise to project team members, contractors, maintenance, and management in the implementation of large projects.

•Establishes employee environment regarding continuous improvement, communications, feedback and overall guidance.

•Ensures that assigned personnel have appropriate training, work instruction and tools to successfully do their job.

•Monitors individual and line performance and takes corrective action including discipline, as needed and responds to

Nov 4, 2009

பி&பி 10

54 கருத்துக்குத்து

 

  ஸ்ரீமதி முதல்ல. அடுத்து பரிசல். இரண்டு இஷ்ட தெய்வங்கள், ஓ தெய்வம்ன்னா காடா? இரண்டு இம்சைகள் கூப்பிட்டும் எழுதலைன்னா எப்படிங்க? இதோ இன்னொரு சுயபுராணம். ப.பு இதுக்கும் வந்து சுயபுராணம் ஓவரு கமெண்ட் போடாதப்பா. எல்லோரும் செய்றதுதானே நானும் செய்றேன். ரைட்டு. ஓவர் டூ பதிவு.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

*****************************************

இனி பி.& பி:

1.அரசியல் தலைவர்

பிடித்தவர் : ஹிஹிஹி.கொஞ்ச நாள் ஆகுமே.

பிடிக்காதவர்: சஞ்சய் காந்தி

2.எழுத்தாளர்
பிடித்தவர் : சுஜாதா

பிடிக்காதவர்:சாரு நிவேதா

3.கவிஞர்
பிடித்தவர் :நா.முத்துக்குமார்

பிடிக்காதவர்:சினேகன்

4.இயக்குனர்
பிடித்தவர் :பாலா

பிடிக்காதவர்:சரண்

5.நடிகர்
பிடித்தவர் :விஜய் 

பிடிக்காதவர்:அதே லிஸ்ட்டுதான்

6.நடிகை
பிடித்தவர் : இப்போதைக்கு சுனைனா  

பிடிக்காதவர்:சமீரா ரெட்டி

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா

பிடிக்காதவர்:பரத்வாஜ்

8. தொழிலதிபர்
பிடித்தவர் :ஹிஹிஹி.. அவர்தான் 

பிடிக்காதவர்: சன் டிவி காரங்க

9.  ஊர்க்காரங்க
பிடித்தவர் :சென்னைக்காரங்க

பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க

10. சின்னத்திரை நட்சத்திரம்

பிடித்தவர் : குடும்பம் காயத்ரி 

பிடிக்காதவர்: ராதிகா  ஆவ்வ்வ்

இதைத் தொடர நான் அழைப்பது:
1. ராஜன்
2. கடைக்குட்டி
3. பப்பு
4. ட்ரூத்
5. புன்னகை

Nov 3, 2009

ஆடறா ராமா..டண்டனக்கு

22 கருத்துக்குத்து
முன்(அ)முக்கிய (அ) மு.குறிப்பு:
   இந்த புனை..ஹும்மை(நன்றி:நர்சிம்) ரசிக்க முடியாதவர்கள் ஃப்ரீயா விடுங்க. இங்க போய் பழைய மொக்கை ஒன்றைப் படித்துவிட்டு செல்லலாம்.
*************************************************************************************************************

அடடே.. வாப்பா வேலாயுதம். பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு போல இருக்கே..
ஆமாம்ப்பா..  அந்த புது அபார்ட்மெண்ட்ஸூக்கு போன உடனே பழைய ஆளுங்கள சந்திக்கவே நேரமில்லையே.
ம்ம். அப்ப அந்த இடமும், ஆளுங்களும் ரொம்பவே புடிச்சு போச்சன்னு சொல்லு.
ஒரு வகையில சரிதான். ஆனா அடிக்கடி எவனாவது ஒருத்தன் பிரச்சினை பண்ணிடறான். அதான்..
நீ ஒன்னு. மத்த இடத்தில எல்லாம் இருக்கிறவன் எல்லாருமே பிரச்சினை பண்றாங்க. அப்படி பார்த்தா இது எவ்ளோ தேவலாமே!!! ஆமாம் இப்ப என்ன பிரச்சின? யாரு? என்ன மேட்டரு?
யெஸ். புண்ணியகோடின்னு ஒருத்தன் இருக்காம்ப்பா. இத்தனைக்கும் அவனுக்கு அந்த அபார்ட்மெண்ட்ஸுல சொந்தமா ஃப்ளாட்டு கூட கிடையாது. யாராவது வீட்டுல பி.ஜிய தங்குவான். அவ்ளோதான். அவன்கிட்ட யாராவது ஒரு வார்த்தை கேட்டுட்டா, கேட்டவன் ஜாதகத்தையே அலசி ராகு எந்த வீட்டுல இருக்கான், சுக்ரன் எங்க இருக்கிறான், இவன் சின்ன வீடு எங்க இருக்குன்னு எல்லா மேட்டரையும் யாரு வீட்டுல பி.ஜியா இருக்கிறானோ அங்க சத்தமா உளறான்.
அட. சரியான ஆளா இருக்கானே. அதான் பேரு யெஸ்.புண்ணியகோடியோ? ஆமாம். நீங்க எல்லோரும் அவன உள்ள வரமுடியாதபடி வீட்ட பூட்டி வச்சிக்கலாமே.
அதாம்ப்பா பிரச்சினை. அந்த வீடு எனக்கு புடிச்சதே சுதந்திரம் இருக்கிறதாலதான். அதுவும் நானும் என்னோட ஃப்ரெண்டுஸும் அந்த அபார்ட்மெண்ட்ஸுக்கே வந்தவுடனேதான் நல்லா இருக்குன்னு ரொம்ப நாளா அந்தக் காலனில உண்மையா இருந்த ஒரு மனுஷன் சொன்னாருப்பா. அதான் கொஞ்சம் விட்டுப்புடிக்கலாம்னு.,
அப்ப உஷாரா இருக்கிறவன் வீட்டுல எல்லாம் அவன் நுழையறது இல்லை. உங்கள மாதிரி ஆளுங்ககிட்டதான் ஆடறான்.
அதுக்குதான் இன்னொருவன் இருக்கானே!!!
அவன் யாருப்பா?
அட அவன் பேரு கணே..இல்ல இல்ல வசந்த். அவன் ஸ்டைல் என்னன்னா பூட்டின வீடு, பூட்டாத வீடெல்லாம் இல்லை. கதவுகிட்ட யாருமில்லாதப்ப குப்பைகளை அள்ளிட்டு வந்து போட்டுடுவான். அத க்ளீன் பண்ணி முடிக்கவே வீட்டுக்காரருக்கு டங்குவாரு அறுந்துரும். இப்ப கொஞ்ச நாளா ஆளக் காணோம். எப்போ வருவானோ?
அப்ப பூட்டிய வீட்டுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லையா?
அப்படித்தான். இருந்தாலும் ஒரு சித்த வைத்தியன் இருக்கான். அவன் தொல்லை பெருந்தொல்லை.  பாம்புன்னா குச்சிய வச்சு அடிக்கலாம். அட கையால கூட சுத்த சுத்தி தரையில் அடிச்சிடலாம். இது கரப்பான்பூச்சியா இருக்கா. ஒன்னும் பண்ண முடியல.
ஹாஹா. அந்த மாதிரி ஆளுங்க எல்லா இடத்திலும் இருப்பாங்க. மேல சொல்லு.
குழந்தைங்க எல்லாம் விளையாடற இடத்துல போய், சச்சின் எப்படி கவர் டிரைவ் ஆடுவாரு தெரியுமான்னு கிளாஸ் எடுக்கிறான். அதுங்க அங்கிள் நாங்க ஆடறது பேஸ் (base) பால்ன்னு சொன்னா, ஆமாம் எவ்ளோ வேகமா(Pace) போட்டாலும் சச்சின் ஆடுவாரு. நீ ஆட முடியலன்னா வீட்டுக்கு போன்னு சொல்றான்.
அட ராமா. அந்த அளவுக்கு ஞான சூன்யமா?
அவ சூன்யம் எல்லாம் இல்லை ஓய். நெகட்டிவ்ல போறான். அவன் டீட்டெயில் எல்லாம் பார்த்தா அவனுக்கு இந்த அப்பார்ட்மெண்ட்டுல பல வீடுங்க இருக்கு. எல்லாம் பினாமி பேர்ல வச்சிருக்கிறான். நாங்க என் ஃப்ரெண்ட்சுன்னு சொன்னேன் இல்ல, அவங்களால அவன் வீட்டு வாடகை குறைஞ்சிடுச்சு. ஏன்னா இவங்க எல்லாம் வீட்ட பாலிஷ் போட்டு, இண்ட்டீரியர் பண்ணி பளபளன்னு வச்சி இருக்காங்க. அட false ceiling ஓ ஏதோ ஒன்னு, வந்து பார்க்கிறவன் கண்ணுக்கு பளிச்ச்ன்னு இருக்கிறதால் கார்ப்பரேட் கெஸ்ட் அவுஸ் அப்படி இப்படின்னு இவங்க ரேட் ஏறிப்போச்சு. கடுப்பாகுமில்ல அவனுக்கு. அதான் இப்படி அலையறான்.
நீ சொல்றத பார்த்தா அந்த யெஸ்.பி, டாக்டரு இவங்கதான் சைக்கியாட்ரிஸ்ட் போய் பார்க்கனும். ஆனா உங்கள போய் பார்க்க வச்சிடுவாங்க போலிருக்கே.
யாருப்பா அந்த போலிஸூம், டாக்டரும்?
யெஸ்.புண்ணியகோடியும், சித்த மருத்தவரும்தான்
அட. அவங்களா. ஆரம்பத்துல அப்படித்தான் தெரியும். போக போக அவனுங்களே அடங்கிடுவாங்க.
இதெல்லாம் போய் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சத்தம் போட்டு பேசாத. கேட்டுட்டு வந்துட போறாங்க.
கொஞ்ச நாளா அபார்ட்மெண்ட்ஸ் போரடிக்குதுப்பா. வரட்டும்ன்னுதான் இதை நோட்டிஸ் போர்டுல போடப் போறேன். அப்பவாது ஜாலியா பொழுது போகுமே.
உன் வீட்டு நம்பர்ல போட்டு பிரச்சினை ஆயிட போது.ஜாக்கிரதைப்பா
ஓய். நாங்க இந்த வீட்டுக்கே வந்ததே ஜாலியா இருக்கனும்ன்னுதானே.. இவனுங்க எல்லாம் அதுக்குதானே வச்சிருக்கிறோம். என்ன நாங்க ஜாலியா இருக்க, அவனுங்க சட்டைய கிழிச்சிட்டு அலையறத பார்க்கதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இதுக்கெல்லாம் கவலைப்பட்டா தொழில் பண்ன முடியுமா பாஸ்?
வாங்க புண்ணியகோடி & மருத்துவரே. கும்மி ஸ்டார்ட்ஸ். ஆடறா ராமா!!!!!
untitled

Nov 2, 2009

பப்லு ஒன்.டூ..த்ரீ...

24 கருத்துக்குத்து
     நல்லதொரு ஞாயிற்றுக்கிழமை அது. நானும், பப்லுவும்,அம்மாவும் வேளச்சேரியில் இருந்த திருவல்லிக்கேணி ரத்னா கபேவுக்கு விஜயம் செய்தோம். வழக்கம் போல் பேப்பர் ரோஸ்ட் என்றான் பப்லு. சர்வர் ஜோக்கடிப்பதாக நினைத்து ஹிந்துவா, டெக்கான் கிரானிக்க‌ளா என்று கேட்டுவிட்டு அவரே சிரித்துக் கொன்டார். யோசித்த பப்லு தினமலர் என்றான். ஏண்டா என்பது போல் நான் பார்க்க, "அதுதானே சண்டேன்னா ரெண்டு" என்றவனை சர்வர் ஒரு மாதிரித்தான் பார்த்தார்.

*******************************

கொஞ்சம் அல்ல, நல்லாவே வளர்ந்து விட்டான் பப்லு. சென்ற முறையே அவனால் நான் வாங்கிய பல்பு உங்களுக்கு தெரியும்தானே? இந்த முறை ட்யூப்லைட்டயே எரியவிட்டான். விஷயம் இதுதான். சைக்கிள் ஓட்டி எதிர்விட்டு காரில் கீறல் போட்ட பப்லு, நான் ஹைதையில் இருந்த நாட்களில் அவன் அப்பாவிடம் ஸ்கூட்டியே ஓட்டக் கத்துக் கொண்டானாம். தினமும் இரவில் இருவரும் ஒரு ரவுண்ட் ஓட்டி வந்துவிட்டே தூங்குகிறான். அவன் அப்பாவிடம் அடங்கி இருப்பான். என்னிடம் ம்ம்ம்ம்.. அதேதான். எதுக்குடா வம்பு என்று "உன் கூடலாம் நான் வரமாட்டேம்ப்பா" என்று சொன்னேன். சற்றும் யோசிக்காமல் " நான் ஓட்டுனா நீ வரமாட்ட. சிந்து ஓட்டினா பின்னாடி உட்கார்ந்துட்டு வருவ.போடா போடா" என்றான். சிந்து யாரென்ற விசாரனையெல்லாம் இப்போது வேண்டாமே. இந்த சம்பவம் நடந்தது இரண்டு வருடம் முன்பு. அவனது ஞாபக சக்தியை மெச்சிக் கொண்டு, அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை மறந்து விடுவோம். சரியா?

********************************   பப்லுவின் பள்ளியின் ஃபேன்சி டிரஸ் போட்டி வைத்தார்கள். வருடந்தோறும் அக்கா அவருக்கு தெரிந்த ஒரு இடத்தில் ஸ்பைடர்மேன், பேட்மேன் என்று ஏதாவது வாங்கிவந்து போட்டு அனுப்புவது வழக்கம்.நானும் இல்லை. அம்மாவால் தனியாக எங்கும் சென்று வாங்க முடியாமல் போனது. இந்த தீபாவளிக்கு நான் வாங்கித் தந்த கருப்பு நிற சட்டையில் படு ஸ்மார்ட்டாக கிளம்பினானாம் பப்லு. அம்மாவுக்கு மட்டும் போட்டிக்காக எதுவும் செய்யமுடியவில்லையே. சூப்பர்மேன் இந்த முறை காமன்மேனாக செல்கிறானே என்று ஒரு மாதிரியாக இருந்ததாம். கவலைப்படாத பாட்டி என்று என்னுடைய பிளேசரை எடுத்து மேலே போட்டுக் கொன்டு ஒரு மாஸ்க்கையும் மாட்டிக் கொண்டானாம். பாட்டியும் சிரித்தபடி வாழ்த்தியனுப்ப, என்ன உடை என்றே தெரியாமல் இரண்டாம் பரிசைத் தட்டி வந்திருக்கிறான். முதல் பரிசா? அவன் நம்மாளுங்க. ப்ரீத்திக்கு விட்டுக் கொடுத்து விட்டானாம்.


 

all rights reserved to www.karkibava.com