Sep 30, 2009

கார்க்கியின் காக்டெயில்

38 கருத்துக்குத்து

 

   ஜான் ஏறினால் முழம் சறுக்குதுன்னு சொன்னா, ஜானுக்குத்தானே சறுக்கணும்ன்னு கேட்பீங்க. அது மட்டுமில்லாமல் இது தமிழைப் பற்றிய விதயம் அல்லது விடயம் அல்லது விஷயம். அதனால் சாண் ஏறினால் முழம் சறுக்குதுன்னு சொல்லியே ஆரம்பிக்கிறேன். இப்படி ஆகி போச்சே. உலகத் தமிழ் மாநாட்டைத்தான் சொல்றேன். நண்பர்களிடையே பெரும் ஆதரவும், ஊக்கமும் கிடைத்ததை எண்ணி சப்பாத்திருந்தேன்.(பூரித்திருந்தேன் என்றுதான் எழுத நினைத்தேன். டயட்டில் இருப்பதால்..). இருந்தாலும் சில புது சகாக்கள் தனிமடலிலும், பின்னூட்டத்திலும் தந்த ஆதரவு, ஒன்றை மட்டும் சொல்லியது. பின்னூட்டம் இடாமல், பதிவு எழுதாமல் வாசிக்க மட்டும் செய்யும் நண்பர்கள்தான் வலையுலகில் அதிகம். தேவையான சமயங்களில் மட்டும் வெளிவரும் அவர்கள்தான் வலையுலகின் தூண்கள். நன்றி நண்பர்களே

*******************************************

என் நண்பன் ஒருவனின் காதலில் வந்த சிக்கலை எழுதி இருந்தேன் அல்லவா? என்ன ஆச்சு என்று பலர் கேட்டார்கள். எனக்கு என்ன பரிசலைப் போல ஏழே முக்கால் லட்சத்திற்கு சற்று கம்மியான வாசகர்களா இருக்கிறார்கள்? ரெண்டு பேருதான் அந்த பலர் என்பதை அறிக. அந்தப் பெண் உறுதியாக இருக்கிறார். நாளுக்கு நாள் அவர்களது நிபந்தனைகள் அதிகமாகி கொண்டே போகிறது. முதலில் இரு வழியிலும் திருமணம் என்றவர்கள் இப்போது இவன் சைடில் ரிசப்ஷன் மட்டும்தான் வைக்க வேண்டுமாம். அப்படி ஏண்டா தொங்கற என்று அனைவரும் கேட்கிறார்கள். நான் மட்டும் அவனுக்கு ஆதரவாக பேசி வருகிறேன். அவன் ஒன்றும் டீன் ஏஜில் இல்லை. எது சரி, எது அவன் தேவை  என்று அவனால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லையென்றால் அவனுக்கு எதுக்கு திருமணம்? சீக்கிரமே நல்லது நடக்கும் மச்சான்.

*******************************************

புதிய தலைமுறை இதழை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் வாங்காதவர்கள் வாங்கி விடுங்கள். பெரிய பொக்கிஷம் இருக்கு அதில். இளைஞர்களுக்கான புத்தகம் என்றவர்கள் எந்த இளைஞர்கள் என்பதில் குழம்பி போயிருக்கிறார்கள். ட்விட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். CAT தேர்வைப் பற்றி சொல்லும் போது எந்த ஐ.டி கார்டை எடுத்த செல்ல வேண்டுமென்று பாடம் எடுக்கிறார்கள். அது கூடத் தெரியாமலா ஒருவன் தேர்வுக்கு தயாராகி இருப்பான்? இளைஞர்களுக்கு நாட்டு நடப்பு தெரிய வேண்டுமென்று அவசியமில்லை என்று நினைத்துவிட்டார்கள். இதே இதழை இன்னும் சில மாதங்கள் கழித்தும் வெளியிடலாம். எல்லாமே கட்டுரையாக இருக்கிறது. ஒரு நடிகையின் படம் கூட இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கு பாராட்டலாம். இருந்தாலும் அந்த வழ வழ தாளில் ஸ்ருதியையோ, அனுஷ்காவையோ பார்த்தால்…

   அரசியலுக்கு இளைஞர்கள் ஏன் வருவதில்லை என்று ஒரு கட்டுரை. எனக்கு என்னவோ இன்னமும் அதே அளவில் இளைஞர்கள் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. . அரசியலே மாறிவிட்டதால் அதன் வீச்சு தெரிவதில்லை. இதில் ஒரு உதாரணம். இரண்டு இளைஞர்கள். ஒருவர் வேலையில் சேருகிறார். இன்னொருவர் அரசியல். 40வது வயதில் வேலையில் சேர்ந்தவர் மேலாளர் ஆகி நல்லா இருக்காராம். அரசியல்வாதி வட்டத்துக்குள்ளே இருக்கிறாராம். அவர் வேலைக்கு சேர்ந்திருந்தாலும் அவர் அப்படித்தான் இருதிருப்பார். வேலைக்கு வரும் எல்லோரும் 40வது வயதில் பதவி உயர்வு பெற்று மேலே மேலே செல்ல முடியாது. அங்கேயும் அதே விகிதாச்சரத்தில்தான் மேலே செல்கிறார்கள். அரசியலோ, தொழிலோ, விளையாட்டோ, காதலோ, வாழ்க்கையோ, வேறு துறையோ எங்கேயும் ஒரே ஒரு மந்திரம் தான்.

SURVIVAL OF THE FITTEST.

சரி அந்த பொக்கிஷம்? என்னுடையப் பேட்டி(அப்படித்தான் ஆசிரியர் மின்மடலில் சொல்லியிருந்தார்) புகைப்படத்துடன் வந்திருக்கிறது.

*******************************************

நிறைய புதுப்பதிவர்கள், திரட்டிகள் வந்திருப்பதால் சென்ற வாரம் முழுமையாய ஒரு லுக் விட்டேன். ஒவ்வொரு வாரமும் சிறந்த பத்து பதிவுகள் என்று ஒரு தளத்தில் சுட்டி தந்தார்கள். நடிகை தமன்னாவின் அட்டகாச படங்கள் என்ற பதிவு அந்த டாப் டென்னில் ஒன்றாம். அதற்கு அந்த திரட்டியில் 15 வாக்குகளும், முன்னணியிலும் இருந்தது. ரைட் ஜூட் என கிளம்பினேன்.

*******************************************

உன்னைப் போல் ஒருவன் பார்த்துவிட்டேன். என்ன சொல்ல? basic instinct ல் இருந்து விஜய் டீவியின் கனா காணும் காலங்கள் வரை ஒவ்வொரு சீனும் காப்பியடித்திருக்கிறார்கள். தெரியாமல் இன்னும் என்ன என்ன செய்தார்களோ? இது போன்ற காட்சிகளால் நல்ல சீன்களில் கூட இது எங்க சுட்ட வடையோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.  ”அதான் இன்னும் ரெண்டு இருக்கு இல்ல” என்ற சந்தானபாரதியின் காமெடி(?) வசனத்தை ஒருவர் கூட ரசித்த மாதிரி தெரியவில்லை. மோகன்லாலுக்காக நிச்சயம் பார்க்கலாம். ஆனால் முதல்நாள் விமர்சனம் எழுதிய அ,ஜீகளுக்கு மிகச் சிறந்த தமிழ்ப் படமாய் தெரிந்தது போல் எனக்குத் தெரியவில்லை. லோ பட்ஜெட் படம் போல. கமல் கூட பழைய மாடல் டேட்டா கார்டைத்தான் (256kbps) உபயோகிக்கிறார். PHOTONPLUS(3Mbps) பற்றித் தெரியவில்லை இவர்களுக்கு. ஒரு வேளை wednesdayல் அதைத்தான் நஸ்ருதீன் ஷா பயன்படுத்தினாரோ?

Sep 29, 2009

அனிதா காலிங்..

28 கருத்துக்குத்து

  

   பாதி வரை எரிந்து சாம்பலான சிகரெட்டின் முனை போல சுருண்டு கிடந்தான் மதன்.  புதிதாய் மாற்றி அமைக்கப்பட்ட சைடு அப்பர் அவனுக்கு தோதாக இல்லை. மேலும் ரயிலின் தடக் தடக் சத்தத்தை அவனது இதய துடிப்பு வெல்வதையும் அவன் விரும்பவில்லை. தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டே கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.

  இன்னும் வரவில்லை அழைப்பு. துல்லியமாய் தெரிந்த TFT displayல் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மது. அந்த வசீகர சிரிப்பையும் மீறி இடது ஓரத்தில், இந்திய பொருளாதாரம் போல மேலும் கீழும் ஏறி இறங்கும் டவரையே வெறித்துக் கொண்டிருந்தான். சிக்னல் கிடைக்காமல் போகும் சமயங்களில் தட்டிப் பார்த்தான். அது கோவத்தின் வெளிப்பாடா அல்லது நோக்கியா இணையதளத்தில் கொடுக்கப்பட்ட டிப்ஸா எனத் தெரியவில்லை. மணி 12ஐ தாண்டி இருந்தது.

“Send me SMS if i am not reachable" .

  sent items ல் இருந்த அதே மெசேஜை பத்தாவது முறையாக ஃபார்வர்ட் செய்தான். “Message sent"  என்று சொல்லி தன் மீது எந்த தவறும் இல்லை என வாக்குமூலம் தந்தது ஏர்டெல் சேவை. மீண்டும் sent itemsக்கு சென்று மதுவிற்குத்தானே அனுப்பினோம் என்று தன் பக்க நியாயத்தை உறுதி செய்து கொண்டான். காரணமே இல்லாமால் அந்த நடு இரவில் இறங்கி சென்று சார்ஜ் செய்தான். ஐந்தே நிமிடத்தில் Battery full என்று காட்டியது. தூக்கம் வராமல் முன்தினம் நடந்ததை மெல்ல அசைப் போட்டான்.

மது.

என்ன?

நான் வேற ஒன்னும் கேட்கல. அடிக்கடி ஃபோன் செய். அது போதும்.

புரிஞ்சிக்கோ மதன். என்னால் முடியறப்ப கண்டிப்பா செய்றேன்.

நான் என்ன அரை மணி நேரமா பேச சொல்றேன் ஜஸ்ட் 2 மினிட்ஸ்.

ம்ம்.. சரி.

முடியலன்னா ஒரு எஸ்.எம்.எஸ். அவ்ளோதாம்ப்பா.

ம்ம்

என்ன. எல்லாத்துக்கும் ம்ம் னு சொன்னா என்ன அர்த்தம்?

கிளம்பறீயா? ட்ரெய்னுக்கு டைம் ஆச்சு.

ட்ரெய்னிக்குத்தானே ஆச்சு. எனக்கு இல்லையே.

ஜோக்கா? Be serious மதன். ஒழுங்கா போய்ட்டு வா.

எனக்கு போகவே பிடிக்கல. ஒரு மாதிரி இருக்குடா.

எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். (வேகமாக நடந்தாள்)

ப்ளீஸ். கால் பண்ண மறக்காத. அது மட்டும் போதும். (கத்தினான்)

   இரண்டு கைகளிலும் இருந்த லக்கேஜ் அவன் கண்களை துடைக்க இடைஞ்சலாய் இருந்தது. அது மட்டுமல்ல நகரத் தொடங்கிய ரயிலிலும் ஏறும்போதும் தொல்லை தந்தது. பெர்த்தை கண்டுபிடித்து பைகளை வைத்துவிட்டு Compose செய்தான்.“Send me SMS if i am not reachable". அப்போதுதான் முதல் முறை அந்த புறா பறந்தது.

விடியலை அறிவிக்க வந்த சூரியன் மதனைக் கண்டு ஹாய் சொல்லிப் போனது. அப்போதும் அந்த வசீகர சிரிப்பிலே மூழ்கி கிடந்தான் மதன். இறங்குமிடம் வந்ததும் போர்ட்டரை தேடினான். இந்த ரெண்டு சின்ன பைக்கு போர்ட்டரா என்று யாரும் இவனை கவனிக்கவில்லை. முதுகில் ஒன்று, இடது கையில் ஒன்றுமாய் ஆக்கிக் கொண்டு, வலது கையில் அலைபேசியை பார்த்தபடி நடக்க தொடங்கினான். அவ்வபோது 121க்கு அழைத்து லைன் க்ளியர் என்பதை உறுதி செய்து கொண்டான்.

லாட்ஜ் வேணுமா சார்? ஏ.சி இருக்கு என்றவனிடம் , அந்த லாட்ஜில் ஏர்டெல் சிக்னல் கிடைக்குமா என்று வினவினான். ஒரு வழியாய் அறைக்குள் வருவதற்குள் அரை நாள் முடிந்து விட்டது. கால் இன்னும் வரவில்லை. குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். ஏனோ சில நிமிடங்களிலே மீண்டும் குழப்பமாய் அலையத் தொடங்கினான். சில மணி நேர அவஸ்தைக்குப் பின் டைரியைத் திறந்து எழுதத் தொடங்கினான்.

செய்வதென முடிவாகிவிட்டது.
எதைக் கொண்டு
என்பதில் தொடங்கியது
சில குழப்பங்கள்.
துப்பாக்கிகள்
எளிதில் கிடைப்பதில்லை.
பர்மா பஜார் கத்திகள்
100% வெல்வதில்லையாம்.
அருவிகள் தேடிச் செல்ல
நேரமில்லை.
என்ன செய்துவிடும் கயிறு?
சாக துணிந்தவனுக்கு
இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி

“Anitha calling"...

Sep 28, 2009

உலகத் தமிழ் மாநாடு - கோவையிலாம்

51 கருத்துக்குத்து

 

   உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடக்கவிருப்பது நாம் அறிந்ததே. மாநாடு என்றால் என்ன நடக்கும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு அம்மையார் ஆட்சியில் தஞ்சையில் நடந்த போது சென்றிருக்கிறேன். அப்போது நான் ரொம்ம்ம்ம்ம்ம்ப சின்னப்பையன் என்பதால் சரியாக ஞாபகமில்லை. விஷயம் அதுவல்ல. இந்த மாநாட்டில் நாம், அதாங்க பதிவர்கள் என்ன செய்ய முடியும்? எனக்கு தோன்றிய சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறேன். சரிவருமா என்று சொல்லுங்கள். அப்படியே உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்கள். ஏதாவ்து செய்ய முடியுமா என்று பார்ப்போம்.

1) முதல் விஷயம். மேடையில் வலையுலகம் பற்றி பேச நமக்கு வாய்ப்பு கிடைத்தால்? தொழில்நுட்ப அறிவும் பேச்சாற்றலும் கொண்டவர் யாராவது வலைப் பற்றியும், வலைப்பூக்கள் பற்றியும் பேசலாம். வெகுசன ஊடகங்களுக்கு நல்லதொரு மாற்று என்பதை விளக்க வேண்டும். இதன் சாதக அம்சங்கள், தற்போதைய வளர்ச்சி மற்றும் வலைஞர்கள் குறித்து விளக்கலாம். கோவையில் இருப்பவர் என்பதும், நல்ல பேச்சாற்றலும் உடையவர் என்பதாலும் எனக்கு செல்வேந்திரன் பெயர் உடனடியாக ஞாபகம் வந்தது. என்ன சொல்றீங்க செல்வா? இதற்கு அனுமதி வாங்கும் முறைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அப்துல்லா உதவுவதாக சொல்லியிருக்கிறார். அவரால் முடியும்.

2) மேடை வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் என்ன? வழக்கமாக இது போன்ற மாநாட்டில் ஸ்டால்கள் போடுவார்கள் அல்லவா? ஒரு தட்டியுடனோ ஃபெளெக்ஸ் பேனர்களுடனோ ஒரு ஸ்டால் போடலாம். மேடையில் சொல்ல வேண்டிய தகவல்களை துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களிடம் சேர்க்கலாம். மடிகணிணி மற்றும் டேட்டா கார்டு மூலம் அங்கேயே வரும் நண்பர்களுக்கு  விளக்கலாம். நான் என் கணிணியுடனும், டேட்டா கார்டுடனும் வரத் தயார். மேலும் துண்டு பிரசுரத்திற்கு தமிளிஷ் போன்ற திரட்டிகளிடமும் மற்றும் பதிவர்கள் நடத்தும் இலக்கிய பத்திரிக்கைகளிடம் விளம்பர உதவியும் கேட்கலாம். அவர்களின் சுட்டியும் தரப் போகிறோம் அல்லவா?

3) என்ன எழுதுகிறார்கள் வலையில் என்பதை எப்படி அவர்களுக்கு தெரியவைப்பது? வலையில் ஹிட்டடித்த சிறந்த 30 பதிவுகளை திரட்டி புத்தகமாக போடலாம். அந்தப் பதிவரின் புகைப்படமும், அவர்கள் பதிவுக்கு சுட்டியும் தரப் போவதால் அவர்களிடம் தலா 500 வாங்கலாம். இதன் மூலமே 15,000 ரூபாய் கிடைத்துவிடும். 1000 பிரதி போட 25,000 வரை செலவு ஆகுமென தெரிகிறது. மீதம் 10,000 ரூபாயை பிரதி ஒன்றுக்கு வெறும் 20ரூபாய் என வாங்கினாலே போதும். கூடவே இலவச இணைப்பாக சிறுகதை பட்டறையின் பதிவு செய்யப்பட்ட தொகுப்பை சிடியாக கொடுக்கலாம்.

4) வாசிக்க மட்டுமல்ல, திறமையான பலர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதை அறிவோம். ஓவியம், நகைச்சுவை, கவிதை, குறும்படம் என அவர்கள் திறமைகளை ஆயிரக்கணக்கானவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகம் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். குறிப்பாக இணையத்தில் தமிழின் உபயோகத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். படிப்பது, எழுதுவது, தேடுவது என இயன்ற வரையில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென்பதே முக்கிய நோக்கம்.

5) நேரம் முக்கியமானது. இதையெல்லாம் கேட்க நேரமில்லாதவர்கள், தங்களின் மின்னஞ்சல் முகவரியை தந்துவிட்டு செல்லலாம். மேலே சொன்ன அத்தனையையும் ஒரு தொகுப்பாக செய்து அவர்கள் முகவரிக்கு அனுப்பிவிடலாம். சிறந்த பதிவுகளின் சுட்டிகள், திரட்டிகளின் முகவரிகள், எழுத்துருக்களின் சுட்டி, புது வலையை எப்படி ஆரம்பிப்பது என எல்லாத் தகவல்களும் அடங்கிய தொகுப்பை நான் தயாரிக்கிறேன். மின்னஞ்சலில் சுற்ற விடுவோம்.

6)  என்ன செய்ய வேணும் நாம்? விருப்பம் இருக்கும் சகாக்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து திட்டமிட வேண்டியதுதான். கோவை மக்களை நன்கு அறிவேன். தங்குமிடம் மற்ற தேவைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் தயாரா?

 உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள். ஏதாவது செய்வோம் பாஸ்.

பி.கு: இந்த பேச்சைத் தொடங்கிய மேவீ, பல நல்ல யோசனைகள் சொன்ன கும்க்கி, செய்யலாம்டா என்று சொன்ன அப்துல்லா, நர்சிம், சிவராமன் மற்றும் பலருக்கு நன்றி

Sep 26, 2009

கொஞ்சம் சிரிங்க – ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்பாம்

30 கருத்துக்குத்து

 

*****************************************

   வழக்கமாக  ஃபார்வர்ட் மெயில்களை அதிகம் படிப்பதில்லை. ஆனால் இந்த மெயிலில் வந்த ஜோக்குகள் எல்லாமே எனக்கு புடிச்சுது. சனிக்கிழமைதானே, மீள்பதிவுக்கு இது பரவாயில்லை என போடறேன். சிரிச்சு பழகலாம் வாங்க.

1) ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம். அது ரொம்ப சாஃப்ட்டா, மெதுமெதுன்னு இருந்துச்சாம். அதுக்கு அவன் என்ன பேரு வைப்பான் சொல்லுங்க..

மைக்ரோசாஃப்ட்

*******************************************

2) ஏன் முனிவர்கள் எல்லாம் ஓம் ஓம்ன்னு சொல்றாங்க தெரியுமா?

Unit of resistance Ohm தானே? அதான் உலக சுகங்களின் இருந்து தப்பிக்கத்தான் சொல்றாங்களாம்

******************************************

3) அட இந்தி படிக்கிலாம் வாங்க

"Dhuniya me koyi nahi hai" – உலகத்தில் கோழியே இல்லை

koyi bath nahi – கோழி குளிப்பதே இல்லை

woh bar bar aathaa hai – அது பார்பரோட ஆத்தாவாம்

என்ன அதுக்குள்ள மும்பை கிளம்பிட்டிங்களா?

*******************************************

4) 90 தடவை தப்பு செய்தால், அட 90 அடிக்கிற தப்பு இல்லைங்க, 45 தடவை மாட்டிப்பானாம்  மேத்ஸ் ஸ்டூடண்ட், ஏன் தெரியுமா?

SIN 90 = COT 45

********************************************

4) ஹாரி பாட்டர் வரிசையில் அடுத்து வரவிருக்கும் படம் பேரு தெரியுமா?

Harry Potter and the Bottle of Quarter (ஹீரோ தாமிரா இல்லைங்க)
Harry Potter and Sappa Matter (ஹீரோ மேவி இல்லைங்க)
Harry Potter and Avar Vitta Peter (ஹீரோ கார்த்திக் இல்லைங்க)
Harry Potter and personal matter (ஹீரோவே இல்லைங்க)
Harry Potter and his love letter (ஹிஹிஹி. ஹீரோ நான் இல்லைங்க)

____________________________________XXXXXXXXXX__________________________________

  வரும் ஞாயிறு ( எல்லா ஞாயிற்றுக் கிழமையும்தான் வரும்) 27ஆம் தேதி , சென்னை மெரினா பீச் காந்தி சிலையின் பின்புறம் (பாவம்யா அவரு) மாலை 5.00-7.30 மணியளவில் பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. புதிய பதிவர்களை சந்திக்கும் நோக்கில் நடத்தப்பெறும் இந்த சந்திப்பில் மூத்த,(ஆதி?) முக்கிய, (லக்கி?) பழம்பெரும்,(டோண்டூ சார்?) முதுபெரும்(அதிஷா?), பிரபல பதிவர்கள் (வால்?)பலரும் கலந்துகொள்வார்கள் எனத்தெரிவதால் அனைவரையும் நமக்கு நாமே திட்டத்தில் அழைக்கிறோம். புதியவர்களும், வாசகர்களும் (அப்படி யாராவது இருந்தால்) தயக்கமின்றி கலந்துகொண்டு பதிவுகள் குறித்த சந்தேகங்களை (அப்படி ஏதும் இருந்தால்) நிவர்த்தி செய்து கொள்ளலாம். டீ, ஸ்நாக்ஸ் பக்கத்துக்கடைகளில் கிடைக்கலாம்.. பர்ஸை மறக்காமல் எடுத்து வரவும்..

மேலும் தொடர்புக்கு..

லக்கிலுக்9841354308

அதிஷா 9884881824

கேபிள் சங்கர் 9840332666

முரளி கண்ணன் 9444884964

நர்சிம் 9841888663

மணிஜி 934008998

Sep 24, 2009

வேட்டைக்காரன் – வெற்றியை நோக்கி

45 கருத்துக்குத்து

VettaikaranFront

1) புலி உறுமுது (அனந்து, மகேஷ் வினாயகம்) பாடல்-கபிலன்

  சாப்பாடே இல்லாமல் சோர்ந்து போன ஒருவனின் உடலினுள் 10 பாட்டில்  குளுக்கோஸ் ஏறினால்? பல மாதம் கழித்து தாமிராவின் கண்களில் 90 தென்பட்டால்? பதிவிட மேட்டர் இல்லாமல் திணறுபவர்களுக்கு இன்னொரு உ.பொ.ஒ கிடைத்தால்? ஆமாம். விஜய் ரசிகனின் ஒவ்வொருவரின் நரம்புக்குள்ளும் அட்ரீனலை அளவில்லாமல் ஏற்றுகிறார்கள் விஜய்ஆண்டனியும் கபிலனும்.ஆரம்ப பீட்டும், இசையுமே பாடல் ஹிட்டென்பதை உறுதி செய்கிறது

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வரத பார்த்து

குலை நடுங்குது குலை நடுங்குது துடிதுடிக்குது துடிதுடிக்குது

நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரத பார்த்து

தன் பங்கிற்கு பாடகர்களும் உசுப்பேற்றுகிறார்கள். படையப்பா- வெற்றி கொடி கட்டு மாதிரியான பாட்டு. ஒட்டு மொத்த படத்தின் வேகத்தையும் TVS apache போல் சில நொடிகளிலே மாற்றியமைக்க உதவும். பாடலைக் கேட்ட ஒவ்வொரு ரசிகனும் காலரை தூக்கி விட்டுக் கொண்டு தல ரசிகர்களை தேடி அலைவது நிச்சயம். எந்த வரியை சொல்வது????

இவனோட நியாயம் தனி நியாயம் இவனால் அடங்கும் அநியாயம்

சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா.

இவனுக்கு இல்லடா கடிவாளம் இவன் வரலாற்றை மாற்றிடும் வருங்காலம்..

திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான் இவன் திமிருக்கு முன்னால எவனிருப்பான்?

எல்லா வரிகளுமே இப்படி என்றாலும் எனக்கு பிடிதத்து.

பட்டாக் கத்தி பளபளக்க பட்டித்தொட்டி கலகலக்க

பறந்து வறான் வேட்டைக்காரன்…. பாமரனின் கூட்டுக்காரன்..

கபிலன் அதகளம். குருவி, வில்லுவென சோர்ந்து போன ரசிகர்களுக்கு நம்பிக்கை டானிக்கை லிட்டர் கணக்கில் தரும் பாட்டு. எனக்காக ஒரு முறை கேட்டுப்பாருங்கள். இந்த வருட நாக்க முக்க இதுதான்.

டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருன்னா போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கருன்னா

2) சின்னத்தாமரை (க்ரிஷ், சுசித்ரா) பாடல் – விவேகா

தோழியா என் காதலியா போல் ஒரு பாடல் எதிர்பார்த்தேன். ஏமாற்றவில்லை. தமிழ்சினிமாவின் தற்போதைய விதிப்படி ஒரு சின்ன ராப்போடு தொடங்குகிறது. கிருஷ் மற்றும் சுசியின் குரலில் பல்லவி முதல் தடவை கேட்கும்போதே வசீகரிக்கிறது. பல்லவி முடிந்ததும் மீண்டும் அந்த ராப் என விதி காப்பற்றப்படுகிறது. பின் விஜய் ஆண்டனியின் டிரேட்மார்க் ஹம்மிங். பின் சரணம், மீண்டும் நடுவில் ராப் என சென்று முடிவில் மீண்டும் ராப்போடு முடிகிறது. வெளிநாட்டு தெருக்களில் விஜயின் Cute expressions ஐ ரசிக்க முடிந்தவர்கள் ரசிக்கலாம். விவேகா, மொத்த சரக்கையும் கந்தசாமிக்கே கொடுத்துவிட்டார் போலும். சுசி, குரல் ஓக்கே.  ஆனா finishing சரியில்லையேம்மா, வரியின் கடைசியில் கஷ்டபடுகிறார் முடிக்க. இதுவும் Sure hit.

3) நான் அடிச்சா தூங்கமாட்ட (ஷங்கர் மகாதேவன்) பாடல் – கபிலன்

ஓப்பனிங் சாங். நெட்டில் சுற்றிய வேட்டைக்காரன் டோய் இல்லை. மாற்றினார்களா, இல்லை அது டுபாக்கூரா என தெரியவில்லை. ஷங்கர் மகாதேவனுக்காக போட்ட மாதிரி தெரியுது. மாடுலேஷனில் மனுஷன் மக்கா பின்றாருப்பா. வழக்கமான விஜய் ஓப்பனிங் பாடல் இல்லை. ஆனால் குத்துதான். சற்றே வித்தியாசமாக இருக்கிறது. முதல் சில தடவை டென்ஷன் ஆக்கினாலும் சரணம் சரிசெய்துவிடுகிறது. கபிலன் கண்ணில்பட்டால் கட்டிபிடி வைத்தியம்தான்

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்ஃபோர்டா மாறனும்

நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்ட உயர்த்தனும்

வறட்டி தட்டும் சுவத்துல வேட்பாளர் முகமடா

காத்திருந்து கருத்து போச்சு வோட்டு போட்ட நகமடா

முடிவில் சிறுவனின் குரல் இந்தப் பாடலில் விஜயும், குட்டி விஜயும் வரப் போகிறார்கள் என்பதை உறுதி செய்கிறது. சிடி கவரிலும் அவரின் படம் இருக்கிறது. ஆட்டத்துக்கு தயாரா? முதல் நாள் உதயம். யார் வறீங்க?

4) கரிகாலன்(surcith, சங்கீதா) பாடல் – கபிலன்

சாதரண ஃபோக் சாங். ஆனால் ஆரம்ப ஹம்மிங்கிலே தன் துண்டைப் போட்டு விடுகிறார் விஜய் ஆண்டனி. லேசாக மெலடி சாயலும் அடிக்கிறது. வித்தியாசமான வரிகளில் மீண்டும் கபிலன் ஆட்சி.

கரிகாலன் காலை போல கருத்திருக்குது குழலு

குழலில்லை குழலில்லை தாஜ்மஹால் நிழலு

முழுப்பாடலும் இப்படியே செல்கிறது. எஃப்.எம்மில் ஃபேவரிட் பாடலாக வாய்ப்பு அதிகம்.

5) உச்சிமண்டை (கிருஷ்ணா அய்யர், ஷோபா சேகர்) பாடல் – அண்ணாமலை

ஒரு soothing melody எதிர்பார்த்தேன். இதுவும் இல்லை. அஞ்சு பாட்டு கூட இல்லாம விஜய் படம் எடுக்கறீங்களான்னு கேட்பாங்களேன்னு சேர்த்துட்டாரு டைரக்டரு. இதுவும் விஜய் ஆண்டனி பாட்டுதான். கரிகாலனும், இந்தப் பாட்டும் அடுத்தடுத்து வந்தால் தியேட்டர்காரன் பப்ஸ், சமோசா அதிகம் போட வேண்டியிருக்கும். அண்ணாமலையாம் பாடல். ரைட்டு.. டொர்ர்ர்ர்ர் என வாயாலே வண்டி ஓட்டும்போது யாருடா பாடினாங்க என்று கேட்க வைக்கிறார் கிருஷ்ணா அய்யர். ஷோபாவை விட்டுவிடுங்கப்பா. அவங்க கர்னாடக சங்கீதத்தை ஏதாவது செய்யட்டும்.

***********************************

எப்போதும் இரவு நேரத்தில் வேகமான பாடல்களை கேட்பதில்லை. அது விஜய் பாடலாகவே இருந்தாலும். ஆனால் நேற்று இரவு மூன்று மணி வரை கேட்டுக் கொண்டிருந்தேன் புலி உறுமுவதை. உ.பொ.ஒ  பின்நவீனத்துவ இசை, கட்டுடைத்தல் என்றவர்கள் குறைந்தபட்ச அறிவிருந்தாலும் வேட்டைக்காரனை வாங்கப்போவதில்லை. இது அதே குத்து ரசிகர்களுக்கு. ஆனால் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது. படத்தைப் பற்றிய நம்பிக்கையை சற்று உயர்த்தி, முதல் வெற்றியை பெற்றிருக்கிறான் வேட்டைக்காரன். தீபாவளி எப்ப வருதுன்னு இன்றுதான் பார்த்தேன்.

original_Vijay-Antony_48e8bac00d12b தேங்க்ஸ்ண்ணா…

Sep 23, 2009

நன்றியும், வேட்டைக்காரன் இசை வெளியீடு பற்றியும்

14 கருத்துக்குத்து

 

  

    அழைத்தும், மின் மடலிலும், பதிவிட்டும், ஃபேஸ்புக்கிலும் வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியைத் தவிர வேறென்ன சொல்வது? மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று இது. பதிவிட்ட சுசி, வேலனண்ணாச்சி, பிரியமுடன் வசந்த், கில்லிகள் அனைவருக்கும் ஸ்பெஷல் நன்றி. அதுவும் சுசி கொஞ்சம் அதிகமாகவே என்னை டேமேஜ் செய்துவிட்டார் என நினைக்கிறேன். அவரது பதிவில் உங்களது கண்டனங்களை மறக்காமல் சொல்லிடுங்க மக்கா.

பரிசலின் கவிதை இங்கே. :)))))

இன்றுதான் வேட்டைக்காரன் ஆடியோ ரிலீஸ். நாளை  காலை இசை விமர்சனத்தோடு சந்திக்கிறேன். இந்த நாளை இனிய நாளாக மாற்றிய  அனைவருக்கும் மீண்டும் நன்றி

உ.போ.ஒ – நா இ பா (கார்க்கி)

76 கருத்துக்குத்து

 

   பல இடங்களில் வெறும் பின்னூட்டமாகவே போடுவதால் பலரும் என்னை பின்னூட்ட பதிவர் என்று நினைக்கக் கூடிய ஆபத்து இருப்பதால்..

நம்ம கோஷ்டியில் கிட்டத்தட்ட அனைவரும் உன்னைப் போல் ஒருவனைப் பற்றி பதிவிட்டுவிட்டதால்..

உன்னைப் போல ஒருவன் என்று சொல்லும் ”உன்னை” யில் நான் ஒருவன் அல்ல என்பதால்..

திரையில் கமலை ரசித்தாலும் ,நட்பை மதிக்காமல் நண்பர்களை பகடைகாயாக பயன்படுத்தும் கமலின் போக்கு பிடிக்காததால்..

சுகுணா சொன்னது போல் விஜயையும், அஜித்தையும் கிண்டலடித்தால் இளிக்கும் நண்பர்கள், ஒரு அரசியல் படத்தின் அரசியலை சொல்லும்போது அலறுவதால்..

நான் கரப்பான் பூச்சியா இல்லையா என்று என் ஏழே..நமக்கு ஏம்ப்பா வம்பு.. சில நண்பர்கள் கேட்டதால்..

இன்று ஏதாவது பதிவு போடலாம் என்று எண்ணியதால்..

இன்னும் பல தால் இருப்பதால்..

இன்று உன்னைப் போல் ஒருவனைப் பற்றி பதிவு

பதிவு இங்குதான் ஆரம்பம்..

உன்னைப் போல் ஒருவன் -  நான் இன்னும் பார்க்கவில்லை.

பின்குறிப்பு : இது பின்குறிப்பு என்பதிலே பதிவு முடிந்துவிட்டது என்பதை குறியீடாக காட்ட எண்ணினேன். புரியாதவர்களுக்கு மட்டும் இந்த பி.கு. அது என்னவென்றால் பதிவு முடிந்துவிட்டது.

Sep 22, 2009

பப்லுவின் பராக்கிரமங்கள்

33 கருத்துக்குத்து

 

கந்தசாமி கூட்டிட்டு போடா என்று பப்லு  அடம்பிடித்தான். எப்படியோ அவனை சமாளித்து Blur gaming zone அழைத்து சென்றேன். தரையில் அமர்ந்து ஆடுவதைப் போல ஒரு சோஃபா இருந்தது. X boxல் wrestling ஆடுகிறேன் என்று உண்மையிலே இவன் ஆடிக் கொண்டிருந்தான். அந்த சோஃபா அடிக்கடி நகர்ந்து வழித்தடத்தில் சென்றுவிட ஒருவர் சரிசெய்துவிட்டு போனார்.  அடுத்த மூறையும் இவன் ஆடியதில் அது நகர்ந்துவிட அந்த தம்பி வந்து பப்லூவிடம் “ஆடாத தம்பி” என்றார். பப்லு சீரியஸாக “Wrestling ஆடத்தானே காசு கொடுத்தோம். ஆட வேணாம்ன்னு சொல்றீங்க?” என்றான். ஸ்கிரீனில் குத்துப்பட்ட அண்டர்டேக்கர் போல கொலைவெறியோடு போனார் அந்த தம்பி

   ஒரு ஐனூறு நோட்டையும், சில நூறு ரூபாய் நோட்டுகளையும் ஸ்வாஹா செய்தவன் சொன்னான், “இதுக்கு கந்தசாமிக்கு போயிருந்தா கம்மியாதானே ஆயிருக்கும்”.  மரியாதையா உங்க டாடிகிட்ட காசு வாங்கித் தாடா என்றேன். டாடி வந்தவுடன் ஆரம்பித்தான்.”நாம் அப்பவே சொன்னேன் டாடி. வேற ஏதாவது விளையாடலாம்னு இவன்தான் கேட்காம, அவன போட்டு அடிச்சு, ரத்தம் வந்து பெரிய பிரச்சினை ஆயிடுச்சு”. அவர் ரணகளமாகி ”என்னங்க ஆச்சு?யாரை அடிச்சிங்க” என்று என்னைக் கேட்க, சத்தம் போடாமல் சிரித்த பப்லு சீரியஸாக சொன்னான்” அண்டர்டேக்கரதான் டாடி.பாவம்”.

******************************************************

காரில் சென்றுக் கொண்டிருந்தோம் நானும் பப்லுவும். முன்னே சென்ற காரில் எதையோ படித்தவன் சொன்னான்” அவங்க fire family போலிருக்குடா”. ஏன் என்றதற்கு அந்த வண்டியில் எழுதி இருந்த பெயர்களை படித்து காண்பித்தான். “சக்தீ, கீர்த்தீ, கார்த்தீயாம். பின்னாலிருந்த அம்மா திட்டிக் கொண்டிருதார்கள். ஏம்மா திட்டறீங்க என்றவுடன் அவர்களும் ஒரு பப்லு கதையை சொன்னார்கள். வீட்டிற்கு வந்த ஒரு அங்கிள், சிரிக்காமல் இருக்கும் விளையாட்டுக்கு அழைத்தாராம். அடக்க முடியாமல் உடனே சிரித்த பப்லுவிடம், எப்படி ஜோக்கே சொல்லாம சிரிக்க வச்சேன் பார்த்தியா என்று தன்னைத்தானே பீட்டர் விட்டிருக்கிறார்.கடுப்பான பப்லு சொன்னானாம் ”உங்க மூஞ்சிய பார்த்து எப்படி சிரிக்காம இருக்கிறது?வி.ஜி.பிக்கு போனா ப்ரைஸ் உங்களுக்குத்தான் கிடைக்கும்”

******************************************************

இன்னொரு நாள்.  பப்லு,அம்மா, நான் மூனு பேர் மட்டும்தான் இருந்தோம். என்னடா சமைப்பது என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டார்கள். எது சொன்னாலும் அவர்கள் முடிவு செய்ததைத்தான் செய்வார்கள் என்று தெரிந்த நான், உங்க இஷ்டம் என்றேன். மோர் குழம்பு வைக்கவா என்றார்கள்?. நானும் சரி. கொஞ்சமா வைங்க என்றேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த பப்லு சொன்னான், டேய் கொஞ்சமா வச்சா அது லெஸ் குழம்புடா. நிறைய வச்சாதான் மோர் குழம்பு என்றான். அவனை தூக்கிய நான் சுத்தி போடுங்கம்மா என்றேன். டைனிங் டேபிளுக்கு அந்த பக்கம் இருந்த அம்மா, சுத்தி வந்து போட்டார்கள், என் தலையில் (அட அவருக்கு இல்லைங்க. எனக்குதான்). உன்னாலதான் இப்படி ஆயிட்டான் என்று.

******************************************************

untitled மொக்கையில் மட்டுமல்ல, நடனத்திலும் பப்லு என் டீம்தான்

யோகாவெல்லாம் செய்கிறான் பப்லு. வீட்டுக்கே வந்து சொல்லித் தருகிறார் மாஸ்டர் ஒருவர். ஆர்வத்தில் இவன் எல்லாத்தையும் கொஞ்சம் அதிகமாகவே செய்கிறான் போல. பத்மாசனத்தில் அமர்ந்தவனை முன்னே வர சொல்லி இருக்கிறார். வேகமாக சாய்ந்தவன் தொபுக்கடீர் என்று குடை சாய்ந்த வண்டியை போல் கவிழ்ந்து விட்டானாம். ரப்பர் போல வளையறீயேப்பா என்றாராம் மாஸ்டர். மேட்டர் அதுவல்ல. மறுநாள் ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தவன் தப்பாக எழுதிவிட்டு கையால் அழிக்க முயற்சி செய்திருக்கிறான். ஏண்டா என்றால், இவன் தான் ரப்பர் ஆச்சே. அதனால்தானாம்.

******************************************************

மீண்டும் யூ.எஸ் செல்லவிருக்கிறார் அக்கா. போகலாமா வேண்டாமா என்று பேசிக் கொண்டிருந்தோம். சம்மர் விடுமுறையில் உன்னையும் கூட்டிட்டு போறேண்டா என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். உஷாரான பப்லு கேட்டான் “என்னையும் கூட்டிட்டு போனா யூ.எஸ்ஸுக்கு குண்டு எடுத்துட்டு போறேன்னு உன்னை போலிஸ் புடிச்சிடாதா மம்மி” என்றான். அக்கா யோசிப்பார் என்று நம்புகிறேன்

******************************************************

சென்ற முறை பப்லு பற்றி எழுதிய பதிவுக்கு 3 ஓட்டுகளே விழுந்தது. அதை கவனித்த பப்லு உனக்கு மட்டும் நிறையா ஓட்டா என்று கேட்டான். அதனால் வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை தமிளிஷிலும், தமிழ்மணத்திலும் போட்டு பப்லுவை வெற்றி பெற செய்யுங்கள். எனக்கு ரெண்டு அடி குறைவாக கிடைக்க உதவுங்கள். பப்லுவின் பராக்கிரமங்களை தொடரலாமா என்றும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

Sep 21, 2009

ஈவ்னிங் யூ கம்யா அண்ட் நைட் கோ யா

48 கருத்துக்குத்து

 

tamil   

பப்லு மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனது தமிழ் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தபோது அவனிடம் கேட்டேன், பஸ்ஸுக்கு தமிழ்ல என்னடா? அவன் பஸ்தான் என்கிறான். அப்படி இருக்காது பப்லு, தமிழ் வேற மொழி, ஆங்கில வேற மொழி என்கிறேன். புத்தகத்தை வேகமாக வாங்கி, 32வது பக்கத்திற்கு தாவுகிறான். பச்சை நிற பல்லவனுக்கு கீழே “ப ஸ்” என இருக்கிறது. அதற்கு அடுத்து மஞ்சள் நிறப் படத்திற்கு கீழே ”ஆட்டோ” என்றிருக்கிறது. நீ சரியா படிக்காம எனக்கு சொல்லித் தறீயா என்கிறான்.

நாம் சுவாசிக்கும் காற்றைப் போல, கண்கள் இமைப்பது போல, உடலினுள் ஓடும் குருதியைப் போன்றது மொழி. மனிதனுக்குள் பிரிவினை உண்டாக்கும் எந்த காரணிகளும் எனக்கு ஒவ்வாது என்றாலும் மொழி அந்த வட்டத்திற்குள் அடங்காது என்று எண்ணுகிறேன். . மொழி அடிப்படையில் மட்டுமே சமூக பிரிவினைகள் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.. 

மொழியை வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக மட்டுமே பார்க்கும் தலைமுறை உருவாகிவிட்டது. எனக்கு C, C++  தெரியும் என்பது போலத்தான் தமிழையும், ஆங்கிலத்தையும் இன்ன பிற மொழிகளையும் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மொழி நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதம். ஒரு சமூகத்தின் வாழ்வை பிரதிபலிக்கிற கண்ணாடி. தாய்மொழியை சரியாய் கற்றவனாலே மற்ற மொழிகளை சரியாக கற்க முடியும். தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient  என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது.

மொழி என்பது அறிவல்ல. ஒரு மொழி தெரியாமல் போவதில் எந்த தவறும் இல்லை. ஆங்கில வழியில் படித்ததால் தமிழ் சரியாக எழுதவும் பேசவும் வராது என்பவர்களைப் பார்த்தால் எனக்கு அசூசை உணர்வே வருகிறது. எனக்கு ஆங்கிலம் தெரியாது என ஒரு சமூகமே தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் கேவலமும், I know english என்பதை வாழ்வின் மிகப்பெரிய சாதைனயாக நினைக்கும் வேதனையும்  இங்கே மட்டும்தான் இருக்கக்கூடும்.

    ஒரு பயணத்தின் போது சாருவின் “கடவுளும் நானும்” புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அட்டைப் படத்தையும், கடவுள் என்றத் தலைப்பையும் தலைகீழாக பார்த்தபடி, தன் 50 வயது மனைவியிடம் ஏதோ சொல்கிறார் அந்த வயதானவர். புத்தகத்தை அவரிடம் தருகிறேன். அதை மறுத்தவர் என்னிடம் கேட்கிறார் “are you working in hyderabad?”. நான் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்கிறேன், முகத்தைப் பார்க்காமல் என் மணிக்கட்டில் இருந்த Fast track கடிகாரத்தையும், Pepe ஜீன்ஸையும், பார்க்கிறார். அவையெல்லாம்  எப்படி அவருக்கு பதில் சொன்னது என்று புரியவில்லை எனக்கு. மறுநாள் காலை வரை என்னை வேற்று கிரகத்துவாசியைப் போல் பிரமிப்புடனே பார்த்தார். நல்ல வேளை என் கையில் ஸிரோ டிகிரி இல்லை.

இந்தியாவில் ஆங்கிலம் பேசும் 99.99 பேசுவது ஆங்கிலம்தானா? மொழியை வெறும் வார்த்தைகளாக பார்ப்பது அபத்தம். ஒவ்வொரு மொழிக்கும் தனி அழகும், நளினமும் உண்டு. அதையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல், my name is karki. I am 26 years old என்பது நுனிப்புல். ஒரு மொழியை கற்பதென்பது அவர்களது பண்பாட்டையே கற்றுக் கொள்வது போன்றது. ஏதோ ஒரு மூத்திரசந்தின் மூன்றாம் கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் பட்டைப் போட்ட ஒருவரிடம் கற்றுக் கொள்வதல்ல அது. ஆங்கிலம் தெரியுமென்பவர்கள் குறைந்தபட்சம் ஷேக்ஸ்பியரையும், கீட்ஸையும், வேர்ட்ஸ்வொர்த்தையுமாவது படிக்கட்டும்.

முதல் பத்தியைப் மீண்டும் படியுங்கள். எத்தனை வார்த்தைகள் இதுவரை இப்படி தமிழாகிப் போனது?

இந்த தேர்தலில் 66%  மக்கள்  வோட்டளித்தனர்.

மதுரை செல்ல ஆண்டிபட்டி வழி ரூட்டிலும் சில பேருந்துகள் செல்கின்றன.

   மேற்கண்ட வாக்கியங்களில் இருக்கும் வேறு மொழி சொற்கள் தெரிகிறதா? ஒரு மொழி அழிந்தால், இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும். இதைத்தான் வரலாறு சொல்கிறது.

Sep 19, 2009

இலவச டிக்கெட் தருகிறார் அப்துல்லா

39 கருத்துக்குத்து
நாளை மாலை மினி உதயமில் ஓடும் சொல்ல சொல்ல இனிக்கும் படம் பார்க்க வரும் சகாக்களுக்கு இலவச டிக்கெட்டும், சிக்கன் பிரியாணியும் இன்ன பிற அத்தியாவசங்களும் தருகிறார் முன்னணி பிண்ணனி பாடகர் திரு.புதுகை.அப்துல்லா அவர்கள்

அண்ணன் பாடிய காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருக்கிறது என்பதை அறிவீர்கள். டைட்டில் கார்டில் அண்ணன் பெயர் போடும்போது அரங்கம் அதிர விசிலும், கைத்தட்டலும் எழ வேண்டும். கேபிள் சங்கரும் இந்தப் படத்திற்கு ரொம்ப பாஸிட்டிவாக விமர்சனம் எழுதி இருக்கிறார்.

அண்ணனை மனதாரா பாராட்டி, அவர் மென்மேலும் வளர வாழ்த்துவோம். அண்ணனுக்கும் மற்ற சகாக்களுக்கும் ரம்சான் வாழ்த்துகளையும் தெரி்வித்துக் கொள்கிறோம்.

பாடலைக் கேட்க இங்கே க்ளிக்குங்கள்

Sep 18, 2009

இன்னொரு பத்து

31 கருத்துக்குத்து

 

1) லிஃப்டுக்குள் நுழைபவர்கள் அவர்களுக்காக ஸ்பெஷல் சர்வீஸ் வருவது போல கதவு திறந்தவுடனே உள்ளே நுழைய முயன்று வெளியே வருபவர்களை இடிப்பது போல் வந்து அசடு வழியும்போது

2) பத்தாவது தளத்திற்கு செல்ல வேண்டியவர்கள், லிஃப்ட் ஏதோ பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீஸ் என நினைத்துக் கொண்டு லிஃப்ட்டில் கூட ஃபுட்போர்டு அடிக்கும் போது..

3) சரியா பச்சை விளக்குதாஙக எரியும் நம்ம ரூட்ல. மஞ்சள் மாறிடபோதுன்னு கொஞ்சம் முறுக்குவோம். சிக்னல் பார்க்காம அவங்க குறுக்குல் வந்துட்டு "எப்படி போறான்" பாருன்னு நம்மள குத்தம் சொல்லும் பொண்ணுங்கள பார்க்கும் போது..

4) கேண்டின்ல வரிசையா டம்ளர் இருக்கும். பெரிய இவரு மாதிரி வந்து ஜக்கோட எடுத்து, அத கீழ் உதட்டில் முட்டுக் கொடுத்து தண்ணி குடிச்சிட்டு, கொஞ்ச தண்ணிய வாயில இருந்து அது மேல தெளிச்சிட்டு போகும் போது

5) கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது

6) அதிசயமா ஒருத்தர் நம்மளுக்கும் புரியற மாதிரி ப‌யிற்சி வகுப்பு எடுத்திட்டு இருக்கும்போது அவரையும் கடுப்பேத்தி நம்மளையும் கொலை முயற்சி செய்ய தூண்டிற மாதிரி "அக்கட கொட்டு கொட்டு"னு ஒருத்தன் மொபைல் அலறும்போது

7) Conference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகல சொலறவங்கள பார்க்கும்போது

8) காலேஜ் வரைக்கும் காடுவெட்டில புரண்ட அழுக்குமூட்டை அண்ணாமலை ,Hey dude try to avoid road side food என்று அட்வைஸ் அய்யாசாமீயா மாறும்போது

9) இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது

10) பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் நம்மள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…

   ங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க.. இருந்தாலும் இங்கதான் பிளாக் எழுத டைம் கிடைக்குமென்பதால் ஐ.டி வாழ்க.

Sep 17, 2009

நான் வீணாப் போன கதை

48 கருத்துக்குத்து

  

   தாமிரா என்னும் ஆதி என்னும் ஆதிமூலகிருஷ்ணன் அழைத்த தொடர்பதிவு இது. ஆறு தன் புவியியல் கூறுதல் (ஹிஹிஹி. நான் தான் தளபதி ஃபேன் ஆச்சே. எப்படி வரலாறுன்னு சொல்லுவேன்). நிகழ்ச்சிக்கு போகலாமா?

OgAAAAAdDYpiEAWxA2LS9t8wHPkjq8d-XkTQB7AA5OCCxd8n93EpZ6Wuxrbqiyjyj33qDLkfgZDYAOnVs246M8mtSdAAm1T1UKmJ6T43_9PoSS9RQDxLIGgbiiBs

  எனக்கொரு கஸின் இருக்கான்ன்னு அடிக்கடி சொல்லுவேனில்ல. அந்த புண்ணியவான் தான் எனக்கு பிளாக அறிமுகப்படுத்தினான். அப்போ இந்தியா யார் கூடவோ கிரிக்கெட் ஆடிட்டு இருந்த நேரம். அவன் டோனி கிரெய்க், நான் ஹர்ஷா போக்லே. இங்கிலிஷ்ல ஒரு பிளாக் ஓப்பன் செஞ்சு விளாச ஆரம்பிச்சோம். சச்சின் ஏன் அந்த பாலை கவர் டிரைவ் பண்ணல, திராவிட் ஏன் கேப்டன் ஆனவுடன் அதிகமா நகம் கடிக்கிறாருன்னு அடிச்சு விடுவோம். திடீர்னு ஒரு நாள் தமிழ்ல எழுதினா என்னன்னு ஒரு ஐடியா.

ஜுலை 10. நாம அதிகமா படிச்சது அப்போது சுஜாதாதான். அவர் மேல பாரத்த போட்டு, நன்றியும் சொல்லி கிளப்பிய வண்டிதான் இது. ஆரம்பத்தில் என் நண்பர்களுக்கு மட்டும் மெயில் அனுப்பி படிக்க சொன்னேன். அதில் ஒருவன் தான் பாலாஜி. நம்ம துபாய் மச்சான் குசும்பனின் ரூம் மேட். அவன் தான் தமிழ்மணத்தை அறிமுகப்படுத்தி, அதில் இணைக்க சொன்னான். அப்புறம்தான் அது வலையூர் அல்ல, வலையுலகம்ன்னு தெரிஞ்சுது. ஆரம்பத்தில் 3000ஹிட்ஸுக்கு ஒரு நன்றி என்றெல்லாம் பதிவு போட்டேன். கொஞ்சம் கொஞ்சமா வண்டி ஸ்பீடு எடுக்க ஆரம்பிச்சது. முதல் ரெண்டு மாசம் மொக்கையே கிடையாது. அட நம்புங்க.  வேணும்ன்னா நீங்களே போய் படிச்சுப் பாருங்க.

என்னை முதன்முதலில் மொக்கை போட வைத்தவர் பரிசல்தாங்க. அப்போதெல்லாம் தினமும் இரண்டு எதிர்பதிவாது வரும். நமக்கும் அந்த ஆசை வர பரிசலின் அவியலை இப்படி கொத்தினேன். அதற்கு கிடைத்த பலத்த வரவேற்பைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். அடடா இதுதாண்டா நம்ம ரூட்டுன்னு ஜூட் விட்டேன். செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொக்கைசாமி என்ற லேபிளில் 12 பதிவு போட்டு நானும் பிரபல பதிவராக முயற்சி செய்தேன். செப்டம்பர் 23 என் பிறந்த நாள். அன்று மட்டும் 4 பதிவு போட்டேன். அரண்டு போன வலையுலகம் யாருடா இந்த காமெடி பீஸுன்னு திரும்பி பார்த்தது. இதுவரை என்னை பார்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் திரும்பிக் கொண்டேன்.

  சூடான இடுகைக்கே நான் வொர்த் இல்லப்பான்னு நினைத்த நேரம், என் கதை ஒன்று உயிரோசையில் வெளிவந்தது. அதுதான் எனக்கே என் மீது நம்பிக்கை கொடுத்த கதை. அதைத் தொடர்ந்து தேவதை, ராமசாமி தாத்தா போன்ற புனைவுகள் எனக்கு நல்ல பேரை தந்தன. இருந்தாலும் சைடுபக்கமாகவே இவற்றை எழுதினேன். நடுசெண்டரில் புட்டிக்கதைகளும், மொக்கை பதிவுகளுமே ஆக்ரமித்துக் கொண்டிருந்தன.

புட்டிக்கதைகள் உருவான கதையே சுவாரஸ்யமானது. முதலில் ஏழு செய்த ஒரு கலாட்டாவை பதிவிட்டேன். பலராலும் ரசிக்கப்பட்டது அது. தொடர்ந்து எழுத சொன்னதால் இன்னொரு கலாட்டாவை எழுதினேன். நம்ம வால்பையன் தான் இதற்கு புட்டிக்கதைகள் என்று பெயரிட்டவர். அப்போது குட்டிக்கதைகள், ஜட்டிக்கதைகள் எல்லாம் பிரபலமாய் இருந்த சமயம். இதுவரை 22 புட்டிக்கதைகளை எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் ஏழு செய்த கலாட்டாவையும், நாங்கள் அடித்த கூத்தையுமே எழுதுகிறேன். கொஞ்சம் கொஞ்சம் கற்பனையும் சேர்த்துதான்.

புட்டிக்கதைகளைப் போலவே எனக்கு பெயர் தேடித் தந்தவை காதல் பதிவுகள். குங்குமம் இதழிலும் காதல் பதிவொன்றை பிரசுரித்தார்கள். யூத்ஃபுல் விகடனிலும் சில காதல் பதிவுகள் வந்திருக்கின்றன. இதுவரை படிக்காதவர்கள் இந்த லேபிளில் இருப்பதை படிக்கலாம்.அப்படியே வரலாற்று நாயகர்களையும் படிச்சிட்டு கருத்து சொல்லுங்க.

என்னைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லி ஆகனும். எங்க க்ரூப் என்று சொல்லப்படும் அனைவருக்கும் நன்றி சொல்லத் தேவையில்லை. ஆனால் ஸ்பெஷலாக சில பேருக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். புட்டிக்கதைகளை ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் அதிகமாகவே பாராட்டி வரும் ரமேஷ் வைத்யா, ஒரே கதைக்காக பல முறை பாராட்டி பின்னூட்டமிட்ட அனுஜன்யா, இன்றும் என்றாவது நல்ல பதிவு எழுதினால் அழைத்து பாராட்டும் பைத்தியக்காரன்,  தமிழ்ப்பறவை, கார்த்திக், இன்னும் பலர்.  இவர்கள் எல்லோருக்கும் முன்பே என் மீது பெரிய்ய்ய்ய்ய்ய்ய நம்பிக்கை வைத்த பரிசலுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

ரொம்ப ஓவரா போதோ? முடிச்சிக்கலாம் பாஸ்.

Sep 16, 2009

கார்க்கியின் காக்டெயில்

47 கருத்துக்குத்து

 

யோகி படத்தின் போஸ்டர்கள் காண நேர்ந்தது. ஒரு படத்திற்கு இயக்குனர்தான் எல்லாமும் என்றவர் அமீர். இதுவரை வந்த படங்களிலும் அமீரின் பருத்திவீரன், அமீரின் ராம் என்றுதான் இருந்தது. யோகியின் இயக்குனர் சுப்ரமணிய சிவா. இருந்தும் சுவரொட்டிகளில் அமீரின் யோகி என்றே இருக்கிறது. ஒரு விருது நிகழ்ச்சியில் சசிகுமார் சொன்னார் “இந்த விருது கனமாய்த்தான் இருக்கு. அந்தக் கனம் தலையில் ஏறாமல் பார்த்துக் கொள்வதே என் வேலை”. நடிகர் ஆனவுடன் இண்டோர் அரங்கிலும், இரவு நேரமென்றாலும், குளிர்சாதனப்பட்ட இடமென்றாலும் கூலிங் கிளாஸோடு சுற்றும் மிஷ்கின், ஒரு வித மயக்கத்திலே சுற்றிய சேரன் என இவர்களின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. யோகி பாடல்கள் கேட்டிங்களா? யுவன் always rocks.

   எல்லோரும் தூக்கி வைத்து சொல்லும் அளவுக்கு உன்னைப் போல் ஒருவன் பாடல்கள் இல்லையென்றே எனக்குத் தோன்றுகிறது. ஸ்ருதியின் திறமையில் சந்தேகமில்லை. பலவிதமான இசைக்கருவிகளை நன்றாக உபயோகப்படுத்தி இருக்கிறார். அடியே கொல்லுதே என்று பாட மட்டுமல்ல, இசையமைக்கவும் அவரால் முடியும். ஆனால் உன்னைப் போல் ஒருவன் அவருக்கான தளமல்ல என்றே தோன்றுகிறது. அடுத்த முறை ஆட வைப்பார் என்று நம்பலாம்.

**************************************************************

சுப.வீரபாண்டியன் மீது எப்படியோ ஒரு ஈர்ப்பு எனக்கு இருந்திருக்கிறது. எப்படியென்றெல்லாம் நினைவிலில்லை. ஆனால் சமீபகாலமாக அவரும் அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்டார். கலைஞருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது எதனால் என்று ஒரு பட்டிமன்றமாம். சுப.வீரபாண்டியன் பேசவிருப்பது, அரசியல் நாகரீகமே என்று.  என்னமோ போங்கப்பா. எல்லோருமே போங்குப்பா.(என்னையும் சேர்த்துதான்)

**************************************************************

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் பப்லுவிடம். போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன்  என்றான் பப்லு. என்னைப் பார்த்துக் கேட்டான்,

எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

பாட்டி, இவனை ஹைதராபாத்திற்கே போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்.

DSC01450

பப்லுவிடம் ஆட்டோகிராஃப் வாங்கும் பரிசல்.

**************************************************************

சென்னையில் இருந்தாலும் ஒரு முக்கியமான நபரை சந்திக்க முடியாமலே இருந்தது. சந்திக்க போட்ட திட்டங்கள் எப்படியோ தள்ளிக் கொண்டே சென்றது. இந்த முறை பட்டறையில் பார்த்துவிட்டேன். சமீபத்திய சேரனின் தொப்பி, துள்ளுவதோ இளமை தனுஷ் போல உடம்பு, அறிவாளிகளைப் போல ரொம்ப லூசான சட்டை எனப் பார்த்த மாத்திரத்திலே அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அந்த லயோலா கல்லூரி மாணவர். மணிக்கணக்கில் பேச வேண்டியவரிடம் மணி ஆகிவிட்டதே என்று மட்டுமே பேச முடிந்தது வருத்தம். ஆனால் ஒரு தேஜஸ் அவர் பார்வையில் தெரிந்தது. எந்த துறைக்கு சென்றாலும் தன் அழுத்தமான முத்திரையை இவர் பதிப்பார் என்று மட்டும் மனம் நம்பியது. இன்னொரு நாள், நாள் முழுக்க பேச வேண்டும் கார்த்திக்.

**************************************************************

    சிறுகதை பட்டறை நிச்சயம் பெரிய வெற்றிதான். கலந்துக் கொண்ட யாருமே, அல்லது பெரும்பாலனவர்கள் அடுத்த நாளே கதையெழுதாமல் இருப்பதைத்தான் சொல்கிறேன். இன்னும் பல நிகழ்ச்சிகளை உரையாடல் அமைப்பு நடத்த வேண்டுமென்றாலும் அவர்களின் நிதி நிலைமையும் நம் கணக்கில் கொள்ள வேண்டும். வருவதாக சொல்லி, எதிர்பாராத காரணங்களால் வர இயலாமல் போனவர்களால் ஏற்பட்ட இழப்பை நாங்களும் பங்கிட்டுக் கொள்கிறோம் சுந்தர்/சிவராமன். இதே போல் பதிவர் பட்டறை ஒன்றை நடத்தினால் என்ன? பெரிய அளவில் ஒரு சந்திப்பாவது நடத்த வேண்டுமென்பது என் ஆசை. என்ன சொல்றிங்க சகாக்களே?

**************************************************************

   விஜயை கிண்டலடித்து ஆயிரம் எஸ்.எம்.எஸ்கள் சுற்றுகின்றன. தினமும் யாராவது ஒரு வலையுலக நண்பர் ஒருவர் எனக்கு அதை ஃபார்வர்ட் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். ஒன்று கூட விஜய்க்கென்று ஸ்பெஷலாக இல்லை. டெம்ப்ளேட் ஜோக்காகவே இருக்கு. வேற எப்படி இருக்கனும்ன்னு கேட்கறிங்களா? இத படிங்க.

எக்ஸாம் ஹால்...

ஆசிரியர் - உங்க தோல்விப்படங்களை வரிசையா எழுதுங்க
சிம்பு - ஒரு அடிஷனல் பேப்பர் கொடுங்க சார்
ஆசிரியர் - எல்லாத்தையும் அஜீத்தே மொத்தமா வாங்கிட்டாரேப்பா.

இந்த ஜோக் அவருக்குத்தான் எப்படி பெர்ஃபக்டா செட்டாகுது? இதேப் போல் விஜய்க்கு ஒன்று.

விஜய் : நடிக்க வரலைன்னா நான் பிசினஸ் செய்திருப்பேன்.

நிருபர் : இப்பவும்தான் நடிக்க வரலையே. பிசினஸ் செய்ய போலாமில்ல?

இப்படி இல்லாமல் கடவுள் சொர்க்கதிற்கு ரோடு போட்டாராம், தியேட்டர்ல கை தட்டலையாம் என்னென்னெவோ அனுப்பறாங்க. யோசிங்க பாஸ்.

Sep 15, 2009

யுவன்!!!!!!!!!!!

38 கருத்துக்குத்து

 

                                  yuvan chandrasekar-1

   எதிர்பார்த்தது போல நல்லாவே நடந்துச்சு சிறுகதை பட்டறை. பேசிய நால்வரில் யுவனின் ஆளுமை எனக்கு ரொம்ப புடிச்சுது. கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சில வினாடிகள் தீர்க்கமாக யோசித்துவிட்டு அவர் தரும் பதில்கள் சுவாரஸ்யம். பேச்சாளர்களுக்கு வழமையாக இருக்கும் பிரச்சினை, தொடங்கிய இடத்தை விட்டு எங்கெங்கோ சென்றுவிட்டு தொடங்கிய இடத்தை”எங்க விட்டேன்” என்று கேட்பது அல்லது அதை மறந்துவிட்டு அடுத்த கேள்விக்கு செல்வது. ஆனால் யுவன், இறுதியில் ”உங்கள் கேள்விக்கு ஓரளவுக்கு பதில் அளித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்” என்றே முடிக்கிறார். கேள்வியைப் பற்றிய பிரக்ஞை இல்லாவிடில் அதைப் பற்றிய தன் போதாமையை வெளிப்படையாய் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார். அவரது ஹாஸ்யம் மிகவும் அழகானது. போலவே அவரது குரலும். என்னை முழுமையாய் influence செய்து விட்டார் யுவன்.

அறிவியலில் இருந்து அழகாய் அவர் வடித்த கவிதை ஒன்றை விவரித்தார். ஒரு பூ இயல்பாய் மலர்வதைப் போல, எந்தவித பூச்சுகளுமின்றி அவர் சொன்னவிதமே அழகு. இந்தப் பட்டறையைப் பற்றி பலரும் பதிவிட்டு இருக்கிறார்கள். ஆனால் கலந்துக் கொள்ளாத ஒருவர் அதை கண் முன்னால் கொண்டு வர இயலாத மொழியிலே அனைத்தும் இருக்கிறது. நேரிடையாக கலந்துக் கொண்டவர்களுக்கு எதற்கு மேலும் மேலும் தகவல்கள்? இதை எதற்கு சொல்கிறேன் என்றால், கிட்டத்தட்ட எழுதும் மொழியிலே யுவன் அந்தக் காட்சியை விவரித்தபோது எனகு முன்னே இருந்த பலரின் முகத்திலும் தெரிந்த உணர்ச்சி, அவர்கள் அந்த கவிதையை காட்சிப்படுத்திவிட்டார்கள் என்பதற்கான சாட்சி. கதையை எப்படி எழுத வேண்டும் என்று அவர் பட்டியலிடவே இல்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையிலும் கதை எழுத தொடங்கவிருக்கும் படைப்பாளிகளுக்கு ஏதாவது ஒரு விஷயம் வைத்திருக்கிறார்.  கவிதைக்கான பாடுபொருளையும், கதைக்கான கருவையும் எங்கிருந்து எடுக்கலாம் என்பதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியம்.

விமர்சனங்கள் குறித்தப் பார்வையும் சொன்னார். புனைவு என்பதே முழுக்க முழுக்க கற்பனை. method acting போல் அல்ல. தலித் பிரச்சினைகளை எழுத அவர் தலித்தாய் இருக்க வேண்டிய அவசியமில்லையே என்கிறார். அபப்டி எழுதப்பட்ட படைப்பு அவர்களின் வலியை சரியாய் பிரதிபலிக்கவில்லையென்றால், ஒதுக்குங்கள். விமர்சனம் செய்யுங்கள். ஆனால் எழுதவே கூடாது என்பது ஃபாசிசம் இல்லையா? என்ற அவரது அறச்சீற்றம், மற்ற புகழ்தேடும் எழுத்தாளர்களையுடையது போல் அரசீற்றம் அல்ல. எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார் என்பது போலே இருந்தது அவரது உடல்மொழி. கவனமாக தவிர்த்தாரா அல்லது அது அவரது இயல்பா எனத் தெரியவில்லை.

   இன்னும் பல விஷயங்கள் மனதில் ஓடுகிறது. யுவனைப் பற்றியும், அவரது படைப்புகளையும் வாசித்துவிட்டு எழுதுவது நல்லதென்று தோன்றுவதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். இணையத்தில் தேடிப் படித்ததில் என்னை கவர்ந்த யுவனின் கவிதையொன்று.

"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.

சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.

பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

-யுவன் சந்திரசேகர்

Sep 14, 2009

காதல் அழகு கடவுள் பணம்

35 கருத்துக்குத்து

 

1) காதல் மனிதனுக்கு அவசியமா?

ஜென் கவிதையா அல்லது உருது கவிதையா என நினைவிலில்லை. ஆனால் வைரமுத்து அழகாய் தமிழ்ப் படுத்தியிருப்பார்.

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதனின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காதல் என்பதே இதயத்தின் மொழிதானே? அது இல்லாமல் எதற்கு மனிதனாய்?

2) அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

அழகுக்கும் உருவத்திற்கும் தொடர்பேயில்லை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது பார்ப்பவரின் ரசனை சம்பந்தப்பட்டது என்று சொல்வேன். சிறுவயது முதலே நாம் பார்த்துக் கொண்டிருப்பவர், எப்போதும் நமக்கு ஒரே மாதிரிதான் தெரிவார். ஏனெனில் அவரை நம் நன்கு புரிந்துக் கொண்டிருப்போம். ஆனால் அவரை புதிதாய் பார்ப்பவர், அன்று அவர் எப்படி இருக்கிறாரோ அதை மட்டும்தான் சொல்லுவார். இதனால் தான் காதலிப்பவர்களுக்கு தன் காதலி உலகிலே அழகானவராக தெரிகிறார். அழகு, நிரந்தரமானதுதான்.

3) பணம் அவசியமா?

பணம் அவசியம்தான். அதற்கு மாற்றுக் கண்டுபிடிக்காதவரை. அதிக பணம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பணமே இல்லாமல் இந்த உலகத்தில் எப்படி வாழ முடியும்? நாமெல்லாம் சக்கரை வியாதிக்காரர்கள். பணம், இன்சுலின்

4) கடவுள் உண்டா?

கடவுள் என்பவர் ஹார்டுவேரா, சாஃப்ட்வேரா என்பதிலே குழப்பம் இருக்கிறது. சாஃப்ட்வேர்தான் என்றும் சொல்லும் ஸ்ரீஸ்ரீஸ்ரீலஸ்ரீக்கள் கூட ஹார்ட்வேராகவும் கடவுள தொழுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. பெரியார் சொன்ன ஒரு வரி எனக்கு மிகவும் பிடிக்கும். “கடவுளை மற. மனிதனை நினை”. அவர் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். ஆனால் அவரை கவனிக்க வேண்டிய வேலை எனக்கில்லை. அம்மாவுக்கு ஷாப்பிங் பிடிக்கும். கூட செல்வேன். அதேப் போல் கோவிலுக்கு செல்லவும் பிடிக்கும். கூட செல்வேன். விபூதி வைத்துவிடுவார்கள். அவர்களுக்காக வைத்துக் கொள்வேன். அவ்வளவே. மழுப்பவுது போல் தெரிகிறதா? பளிச்சென்று சொன்னால் ”கடவுள் இருந்தாலும், தேவையில்லை. ஆனால் இல்லையென்பதால் இந்தக் கேள்வியே தேவையில்லை”

    அழகு,காதல்,பணம், கடவுள்?
இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!

1) கத்துக்குட்டி

2) கார்ல்ஸ்பெர்க்

3) யோ வாய்ஸ்

4) அக்கீலீஸ்

5) சிங்கக்குட்டி

என்னை அழைத்த அருணா டீச்சருக்கு நன்றி

Sep 11, 2009

தேவதை..காதல்..பயம்..

34 கருத்துக்குத்து

 

  வழக்கமாய் தெய்வங்கள் நிறைந்து காணும் அந்த பெருமாள் கோவில் வெள்ளிக்கிழமை ஆனால் மட்டும் தேவதைகளால் நிரம்பி காணப்படும். அப்படி ஒரு தினத்தில் மதனும் கோவிலுக்கு வந்திருந்தான். வராது வந்த நாயகன் வந்ததாலோ என்னவோ மழை வந்தது.

  ட்யூஷன் முடிந்து நேராக வந்ததால் கையில் சில புத்தகங்கள் வைத்திருந்தான். படித்து கிழிக்க வேண்டிய பக்கங்களை நனைய விடக்கூடாது என்பதற்காக கோபுரத்தை நோக்கி  திரும்பிய அவனை ஒரு குடை இடித்தது. கூண்டுக்குள் மட்டுமே கிளியைப் பார்த்த அவனுக்கு குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளியைப் பார்த்ததால்,அது என்ன சொல்வார்கள் ஆங்ங், கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவள் உதடு பிரிந்தபோது உள்ளே இருந்த பற்களை பார்த்தான். "தங்கப்பல் தானே உண்டு, இவள் என்ன‌ வைரப்பற்களை வைத்திருக்கிறாள்".மைன்ட் வாய்ஸ் முடிந்த போதுதான் அவள் ஏதோ சொல்லி இருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

"ஒரு குடைக்குள்ள எப்படிங்க ரெண்டு பேரு? அதுவும் குடை சின்னதா இருக்கு" என்று சொல்லும்போது வழிந்ததை மழைத்துளி வந்து மறைத்தது.

  ஹலோ.புக்ஸ கொடுங்கனு சொன்னேன்.

    தேவதைகள் பேச மாட்டார்கள் என்று எப்போதோ படித்தது தப்பென்று தெரிந்துக் கொண்டான்.

    புக்ஸைக் வாங்கிக் கொண்டு கோபுரத்தை நோக்கி நகர்ந்தது அந்தச் சிலை. அவளுக்கு முன் வேகமாய் ஓடி நல்ல இடமாக பார்த்து நின்றுகொண்டான். அவனருகில் ஒரு பெரியவர் வர, ஆள் வராங்க என்று டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பது  போல் நகர்த்தினான். அம்மன் என்று பக்தரைத் தேடி வந்திருக்கிறது? நேராக தன் தோழிகளுடன் சென்று விட்டாள். கொஞ்ச நேரம் சினேகம் காட்டி சன் டீ.வி கழட்டிவிட்ட கேப்டன் போல ஆகி விட்டான் மதன்.

  நண்பனின் ஆளைப் பார்க்க கோவிலுக்கு வந்தவனுக்கு அருள் புரிந்த பெருமாளை(அவரில்லைங்க) சேவித்து விட்டு சந்தோஷமாய் வந்தான். அடுத்த வாரம் வந்தால் புடித்து விடலாம் என நினைத்தவனுக்கு உடனே அருள் புரிந்தார் பெருமாள். கோவில் வாசலில் கையில் புக்ஸூடன் சரஸ்வதியே நிற்பது போலிருந்தது.

புக்ஸ் வேணாமா? நிஜமா உங்களதுதானே?

ஆமாங்க. சாமி கும்பிட போயிட்டேன்.

உங்களுக்காக வெய்ட் பண்றேன்.  கூட வந்தவங்க எல்லாம் போயிட்டாங்க

மூளையில் பல்பெரிந்தது மதனுக்கு.

எங்க வீடுன்னு சொல்லுங்க. என்கிட்ட பைக் இருக்கு என்றான்.

சிறிது நேரத் தயக்கதுக்குப் பின், ஹவுஸிங் போர்ட் என்றாள்.

இங்கேயே இருங்க, இதோ பைக் எடுத்துட்டு வர்றேன் என்றவன் ஓடினான். போன மாதம் தான் அந்த பல்சரை வாங்கித் தந்தார் அவன் அப்பா. "லவ் யூ டேட்" என்று வாரணம் ஆயிரம் சூர்யா ரேஞ்சுக்கு பீட்டர் விட்டு வண்டியைக் கிளப்பினான். மதனின் நண்பர்கள் வயிற்றெரிச்சல் புகையாய் வந்தது.

    தலப் படத்துக்கு கிளம்பும் ரசிகனைப் போல சீறிக் கிளம்பிய பல்சர் அவளருகில் வந்ததும் படம் முடிந்த வெளியே வரும் ரசிகனைப் போல பம்மியது. வண்டியில் அவள் கைப்பட்டதும் மதனுக்கு லேசாய் சிலிர்த்தது. இதை கவனித்த அவள் புன்னகைக்க மதனின் கைகள் ஆக்ஸிலேட்டரை முறுக்கியது.புன்னகை தொடர்வதை கவனித்தான்.

     பேசிக்கொண்டே பயணித்தார்கள். உங்களுக்கு தாவனி ரொம்ப நல்லாயிருக்குங்க. மெல்ல ஆரம்பித்தான் மதன். அப்புறம் என்ன என்ப‌து போல அவளும் ம் சொல்ல, பட்டியல் இட்டான். பாரதிராஜா படத்து வெள்ளை தேவதைகள் அவனை சுற்றி வர, அனைத்தும் வெள்ளையிலே இருக்கும்படி வர்ணித்தான்.அவள் சத்தமின்றி சிரிப்பதை எல்லாம் ரியர் வியூ மிரரில் நோட்டமிடத் தவறவில்லை அவன்.

  ஹவுசிங் போர்டு. ஊருக்கு ஒதுக்கு புறமான ஏரியா. போகிற வழியில் விளக்குகள் எல்லாம் உண்டு என்றாலும் சாலையில் இருந்து சில மீட்டர் தூரத்திலே இடுகாடு. எப்படி தனியாக போவாள் என்று யோசித்தான். சரியாக இடுகாட்டின் அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி இவன் பதிலுக்கு காத்திராமல் இடுகாட்டை நோக்கி நடந்தாள் அவள்.

     இவன் கண்களில் அகப்படாமல் ஒரு நிழலில் அவள் மறைய, பேயறைந்தவன் போல் ஆனான் மதன். சில வினாடிகளில் சுதாரித்தவன் ஒரு பெண்ணே தனியா போகும்போது நமக்கென்ன என்றபடி நகத்தை கடிக்கலானான். எங்கே போயிருப்பாள்? என்ன அவசரமோ என்றபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும். ஒரு பக்கம் கும்மிருட்டு. அவள் சென்ற திசையை நோக்கிப் பார்வையை மீண்டும் திருப்பியவன் அலறியடித்துக் கொண்டு வண்டியிலிருந்து சரிந்தான்.

    அங்கே.. அவள்.. வெள்ளை சேலை.. வெள்ளை ரவிக்கை... வெள்ளை வளையல் என அனைத்தும் வெள்ளையாய். ஆனால் சிரிப்பு மட்டும் வெள்ளையாய் இல்லை. இவன் கேட்டது போலவே அவள் வந்தும் மதனால் பார்க்க முடியவில்லை. அவள் சிரித்த முதல் சிரிப்பின் எதிரொலி அடுத்த சிரிப்போடு மோதும் போது மதனின் இதயம் ஒரு நிமிடம் நின்றே விட்டது.காரணமே இல்லாமல் அவளின் மெல்லிய புன்னகை ஒரு கணம் அவன் முன் நிழலாடி சென்றது. மதனை நோக்கி வர ஆரம்பித்தாள். அவள் நடக்கிறாளா இல்லை பறக்கிறாளா எனத் தெரியாத படி அவளின் வெள்ளை நிறச் சேலை தரையில் தவழ்ந்தது.

   கீழே கிடந்த பல்சரை தூக்கினான். அவனே நேராக நிற்க முடியாத போது 150 கிலோ பைக்கை எப்படி தூக்குவது? ஓடலாம் என்றால் கால் ஆனியடித்தது போல் அங்கேயே நின்றது. இதற்குள் அவள் மதனை நெருங்கிவிட்டாள். மீண்டும் அதே போல் ஒரு சிரிப்பு. ஏதோ சொல்ல அவள் எத்தனித்த போது கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டான்.

“.......”

   மெல்ல கண் திறந்தவன் அவளை பார்த்து கேட்டான் "என்ன சொன்னிங்க?"

அவள் மீண்டும் சிரித்து விட்டு சொன்னாள்

நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்

(அவள் சொன்னதை படிக்க மேற்கோள் குறிக்குள் இருப்பதை செலக்ட் செய்யவும்.)

பி.கு : அதிக ஆணியால் நேற்றே லீவு விட்டாச்சு. சனியும், ஞாயிறும் வழக்கம் போல் கடையடைப்பு. அதனால் ஒரே ஒரு மீள்பதிவு. வெண்பூ மன்னிப்பாராக

Sep 9, 2009

நாலு வந்த நாளு.. (புட்டிக்கதைகள்)

43 கருத்துக்குத்து

 

   நல்லதொரு நாளில் ஏழுவின் நண்பர்கள் நால்வர் சென்னைக்கு வந்தார்கள். நாலு நாட்கள் தங்கி சென்னையில் நாலு இடங்களை  சுற்றிப் பார்த்து நாலு விஷயம் தெரிந்துக் கொள்ள வந்திருப்பதாய் சொன்னான் நாலு பேரில் ஒருவன், வெறும் நாலடியே இருந்தவன். அந்த நாலு விஷயத்தில் ஒன்று பரங்கிமலை ஜோதி என்றும், இன்னொன்று டாஸ்மாக் என்பதும் எங்களுக்கு பிறகுதான் தெரிந்தது. மெதுவாக என் காது கடிக்க வந்தான் ஏழு. அவர்கள் முன்பு அவனை கிண்டலடிக்க வேண்டாம் என்று அவன் சொல்லப் போவதாக நினைத்தால், “என்னை என்ன வேணும்ன்னா சொல்லு மச்சி. அவங்கள கிண்டல் பண்ணாத” என்றான். ஏழு ஒல்லியாக இருந்தாலும் என் கண்களுக்கு நட்புக்காக சரத்குமாராக தெரிந்தான்.

ஏழு வாயை மூடிய நேரம் நாலடியார் வாயை திறந்தார். “ஏன் மச்சி. நீ ஊருக்கு வரும்போது எப்படி பாட்டெல்லாம் போட்டு ஜமாய்ச்சோம். எங்களுக்கு எதுவும் இல்லையா?”

உஷ் உஷ் என ஏழு அமுக்குவதைக் கண்ட ஆறு, தொடர்ந்தான். என்ன பாட்டுங்க போட்டிங்க?

முத தடவ அவன் சென்னை வந்துட்டு வந்தப்ப “ஊரு கண்ணு உறவு கண்ணு” பாட்டு. அடுத்து முதலாண்டு பாஸானப்ப ஏலே இமயமலை எங்க ஊரு சாமி மலை எட்டு திசை நடுங்க எட்டு வச்சு வாறாருனு பாடியே காமிச்சான். அதிர்ந்த ஆறு, எட்டு திசையையும் நடுங்க வச்ச ஏழுவைப் பார்த்தான். பாலாஜி நாலடியாரை நோண்டினான்,”அது ஏங்க எல்லாமே விஜய்காந்த பாடலாகவே இருக்கு?

அது தெரியாதா? ஏழுமலையோடு குல தெய்வமே கேப்டன் தாங்க. தலைவர் படம் வந்தா சோத்து மூட்டை கட்டிக்கிட்டு மாட்டு வண்டில நெய்வேலி போய் பார்த்துட்டு வருவாங்க.

அவரு குல தெய்வம் இல்லைங்க. கொல தெய்வங்க என்றான் பாலாஜி.

இதற்கு மேல் டேமேஜை தாங்க முடியாத ஏழு, அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினான். சென்னைக்கு வந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய வேலையை முடித்து விட்டு வந்தார்கள். என்ன வேலையா? அதான் தலைவர்கள் சமாதியும், ஷகீலா படம் ஒன்றும் பார்த்துவிட்டு வந்தார்கள். வரும்போது ஏழு, ஃபேண்ட்டா ஆப்பிள் ஃப்ளேவர் வாங்கித் வந்தான். நாலடியார் மட்டும் பெப்சி வாங்கிக் கொண்டார்.  பேண்ட்டாவை குடித்த ஏழு ஃபெண்ட்டாஸ்டிக்கா இருக்கில்ல மச்சி என்றான். நாலடியார் திருதிருவென முழித்துவிட்டு, இது கூட பெப்சிஸ்டிக்கா இருக்குடா என்றார். நாங்கள் சிரிக்காமல் ஏழுவைப் பார்க்க, விடு மச்சி என்றான்.

இரவு சரக்கடிப்பது என்று முடிவானது. மறுநாள் எங்களுக்கு தேர்வு என்பதால் நாளை அடிக்கலாம் என்றோம். ஆனால் ஏழுவோ, நாளைக்கும் அடிக்கலாம் மச்சி என்று அவர்களை உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருந்தான். என்ன வாங்கலாம் என்று அவர்களுக்குள் டிஸ்கஷன் நடந்தது. ரெண்டு ஃபுல் போதும் மச்சி. அஞ்சு பேருதானே அடிக்கப் போறோம் என்றார் நாலடியார். ஏழுவின் நண்பர்களா இவங்க என்ற சந்தேகம் வந்தது. இதில் ஏழு வேற “முன்ன மாதிரி என்னால அடிக்க முடியாது மச்சி. ஆஃப் அடிக்கிறதே கஷ்டம்” என்று சொல்லிக் கொண்டிருந்தான். சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்த்துவிட்டு நாலடியார் சொன்னார் “ ஏழு தான் சார் எங்களுக்கு அடிக்க கத்துக் கொடுத்தான்”. உஷாரன ஏழு விடு மாப்ள. அவனுங்க கிடக்கறாங்க என்று அவசர அவசரமாக சரக்கு வாங்க கிளம்ப சொன்னான்.

சரக்கோடு வந்தார்கள் நாலடியாரும், நாலு பேரும்.இரண்டு பெரிய பாட்டில்களை கருப்பு நிற பையிலும், மிக்ஸிங்குக்கு தண்ணி, பெப்சி, சைடு டிஷ் என அள்ளிக் கொண்டு வந்தார்கள். மச்சி என்றான் பாலாஜி. படிடா வென்ரு என்று அதட்டிய ஆறு என்ன சரக்குங்க என்றான்

பிரித்த கவரில் பளபளவென மின்னியது கோல்டன் ஈகிள் பியர் இரண்டு.

Sep 8, 2009

விக்ரம், அஜித், விஜய்க்கு கதை சொன்ன கேபிள் சங்கர்

37 கருத்துக்குத்து

  

அடுத்த நூற்றாண்டு வருவதற்குள் எப்படியாவது இயக்குனர் ஆகிவிட வேண்டுமென்ற
முனைப்போடு களத்தில் இறங்குகிறார் கேபிள் சங்கர். சில முன்னணி
நடிகர்களும் நேரம் ஒதுக்க கதையோடும், இடுப்பு பகுதியில் சேர்த்து வைத்து
குலுக்கும் சதையோடும் கிளம்புகிறார் அக்மார்க் ‘டூப்ளிகேட் யூத் கேபிள்”.
முதலில் விக்ரம். இந்த நிறத்தில் இருப்பவை கேபிளின் மனசாட்சி பேசும் டயலாக்குகள்.

விக்ரம் : வணக்கம் பாஸ்.கந்தசாமியை கவுத்ததே நீங்கதான்னு சொல்றாங்க. அதை
சரிகட்ட நல்ல கதை ஒன்னு சொல்லுங்க.

கேபிள் : சரிங்க. கதையோடு நாயகன் பரோட்டா மாஸ்டர் & ஓனர். அந்தக் கடையில்
சாப்பிட ஆர்டர் கொடுக்கும் போதே நம்ம குறையையும் சத்தம் போட்டு சொன்னா,
பரோட்டா உடனே கிடைக்கும், பிரச்சினைக்கு தீர்வு கொஞ்ச நாளிலும்
கிடைக்கும். இதனால் அந்தக் கடைக்கு நல்ல கூட்டம் வருது. இதை விசாரிக்க
ஒரு போலிஸ்..

விக்ரம் : ஹலோ என்ன கந்தசாமி கதை மாதிரி இருக்கே

கேபிள் : (அடப்பாவி இது அன்னியன்& etc படத்தோட  கதைடா. அதுவே
தெரியாம கந்தசாமி நடிச்ச. இப்ப மட்டும் எங்க இருந்து ஞானோதயம் வருது)

இல்ல சார். இதுல உங்க பேரு ஜார்ஜ் பீட்டர். அதனால் இது வேற கதை.

விக்ரம் :  யூ நோ வாட்? நான் இனிமேல் சூப்பர் ஹீரோ கதைல நடிக்கிறதா இல்ல.
வேற கதை வச்சி இருக்கிங்களா?

கேபிள் : இருக்கு சார். நடிக்க ஸ்கோப் உள்ள படம். நீங்க ஒருத்தர மானசீக
குருவா நினைச்சு வளறீங்க. அவர் கூடவே வேலை செய்யும் வாய்ப்பும்
கிடைக்குது உங்களுக்கு. அவருக்கும் உங்களுக்கு வர பிரச்சினைதான் படமே.
க்ளைமேக்ஸுல நீங்க, அவரு, உங்க காதலி என எல்லோரும் செத்துடறீங்க.
புதுமையான க்ளைமேக்ஸ் சார்.

   இம்ப்ரஸ் ஆன விக்ரம் உடனே கால்ஷீட் தர, எத்தனை வருடம் ஆனாலும் இந்த படம்
நடிச்சிட்டுதான் அடுத்து என்கிறார். வேறு கதை இல்லாததால் பீமா கதையை
உல்ட்டா செய்து சொன்ன கேபிள், ஸ்கிரிப்ட்டை பாலிஷ்(?) செய்து கொண்டு
வருவதாக சொல்லிவிட்டு எஸ் ஆகி, அடுத்து அல்டிமேட் ஸ்டாரிடம்
செல்கிறார்

அஜித் :  சொல்ங்க சார். என்ன கதை வச்சி இருக்கிங்க?

கேபிள் : (நல்ல கதைல மட்டும்தான் இவரு நடிப்பாரு) கதையை விடுங்க சார்.
உங்க முகத்தில பல இடங்களில் முடி வச்சி ஒரு கெட்டப் போடறோம். தலையை பாதி
மொட்டை அடிச்சு இன்னொரு கெட்டப். பூஜை அன்னைக்கு இந்த ஸ்டில்ஸ
பார்த்துட்டு இது மாதிரியெல்லாம் அவரால கெட்டப் போட முடியுமான்னு உங்க
ரசிகர்கள் பேசுவாங்க. படத்துக்கு ரியல் னு பேரு. பூஜைக்கு வர்ற பெரிய
ஆளுங்க எல்லாம் வேற வழியே இல்லாம ரியல் ஸ்டார் அஜித்ன்னுதான்
சொல்லுவாங்க.  அப்படியே பூஜையைப் போட்டுட்டு நான் கதை ரெடி பண்ண
போயிடறேன். ஒரு நாலு அஞ்சு மாசம் கழிச்சு ஷூட்டிங் ஸ்டார்ட் செய்வோம்
சார்.

அஜித் :  வாவ்.பிரில்லியன்ட். உட்னே ஃபோட்டோ ஷூட்  ரெடி பண்ங்க சார். யூ
ஆர் ரியலி பிரில்லியண்ட்.

   பல நாள் யோசிச்சு ரெடி செய்த ஸ்க்ரிப்டுகளை விட அந்த  நொடியில் வரும்
ஐடியாக்களே வெற்றி பெற என்ன செய்வதென்று யோசிக்கிறார் கேபிள். ஸ்க்ரிப்ட்
இல்லாமல் படம் எடுத்தால் ப்ளாகர்ஸ் விமர்சனம் என்று படுத்தி விடுவார்களே
என்று நிதானமாக இன்னொரு ஸ்கிரிப்ட் ரெடி செய்கிறார். இந்த முறை இளைய
தளபதிக்கு கதை எழுதுகிறார்.

விஜய் :  வாங்கண்ணா. வாங்கண்ணா

கேபிள் : வணக்கம் சார். இந்த கதைல வேற யாரும் நடிக்க முடியாது. கதை
சொல்றதுக்கு முன்னாடி பன்ச் டயலாக் சொல்லட்டுமா?

விஜய் : சொல்லுங்கண்ணா.

கேபிள் : நீ எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் மைய, உன் கையிலதாண்டா வைப்பாங்க.

விஜய் : அட பின்றீங்க்ண்ணா. கைய வச்சே எல்லா பன்ச் டயலாக்கையும் எழுதிடலாம்

கேபிள் : (வேறு எப்படி எழுத முடியும்) சும்மா சும்மா விரலை நீட்டினவன்
எல்லாம் ஜெயிச்சதில்லை. வோட்டுப் போட விரலை நீட்டினா நாட்டுல கவலையில்லை.

விஜய் :  இதான் பாஸ் எதிர்பார்த்தேன். காங்கிரஸ் சின்னத்த மக்கள் மனசுல பதிய வைக்கனும்

கேபிள் : (அரசியலுக்கு வறீங்களாமே. congratsனு அனுப்பினா, எல்லோரும் காங்கிரஸ்ல சேர சொல்றாங்கன்னு நினைச்சுட்டார் போல)  எல்லோரும் கனவு கோட்தைதான் கட்டுவாங்க. நான் கோட்டையையே கனவா கண்டவண்டா

விஜய் : இந்த படம் நினைவாக்கிடும் போலிருக்கே. ண்ணா. படத்துக்கு என்ன
டைட்டில் வைக்கலாம்?

கேபிள் : (எம்.ஜி.ஆர் படம் தான் கேட்பிங்க) எங்க வீட்டுப் பிள்ளை
இல்லைன்னா, நான் ஆணையிட்டால் வைக்கலாம்ண்ணா

விஜய் : கதையை கேட்டவுடனே நானும் அதேத்தான் நினைச்சேண்ணா

கேபிள் : (என்னது? கதையை கேட்டிங்களா?) ரைட்டுங்கண்ணா.

இந்த வேலையே வேண்டாமென்று கொத்து பரோட்டா போட கிளம்புகிறார் கேபிள். அதற்குள் நான் தான் உங்க படத்துல பாடுவேன்னு அப்துல்லாவும், காமெடி டிராக் எனக்குதான் என்று குசும்பனும், வசனத்திற்கு பரிசலும் இன்னும் சிலரும் அவருக்கு கொடுத்த டார்ச்சர்கள் விரைவில்…

Sep 7, 2009

கார்க்கியின் காக்டெயில்

57 கருத்துக்குத்து

  

   நேற்று உலக சினிமா (Sweet 16. அட நல்லப் படங்க) காண சென்றிருந்தேன். கொஞ்சமும் ஆர்வம் குறையாமல் இருந்தார் பைத்தியக்காரன். ஆனால் கூட்டம் தான் குறைவாக இருந்தது. ஒவ்வொரு முறையும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் டிரெயினுக்கு நேரமாகிறது என்ற காரணம் இருந்தது. இந்த முறை ஒரு நாள் லீவெடுத்து வந்து பார்த்தேன். நல்லப் படம் எடுக்கிறேன் காசு கொடுங்க என்று கேட்காமல் நல்ல படம் இலவசமாக காட்டினால் கூட வர மாட்டேன் என்கிறார்களே என்று தோன்றியது. அது சரி அவரவர்க்கு அவரவர் preferences. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு நன்றியைத் தவிர வேறு என்ன செய்யலாம்? முடிந்தால் போய் படம் பார்க்கலாம். நேயர் விருப்பம் போட்டால் கூட்டம் வருமோ? எனது விருப்பம் இரானியப் படம் நகாப். (NAKAB). இருக்கா சிவாண்ணா?

*******************************************

படம் முடிந்த பின் நண்பர் ஒருவரிடம் நான் கார்க்கி என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். சற்று நேரத்திற்குப் பின் “நீங்க தான் புட்டிக்கதைகள் எழுதறீங்களா?” என்று சந்தேகத்துடனே கேட்டார். நானும் ஆமாம் என்ற பின் மலர்ச்சியாக பேசினார். அவரது அலுவலக நண்பர்களும் ஏழுவின் ரசிகர்கள் என்றார். மகிழ்ச்சியாக இருந்தாலும் கார்க்கியை விட ஏழுவுக்கு பேரு எனும்போது…

    ஹைதை வாழ் நண்பர் ஒருவர் சேட்டில் வரும்போதெல்லாம் வேறு எதுவும் பேச மாட்டார். ஏழு எங்கே என்றுதான் கேட்பார். நானும் இதோ அதோ என்று சொல்லிப் பார்த்துவிட்டேன். போன வாரம் வந்து ஏழு வந்தா சொல்லுங்க என்றார். அதுவரை இந்தப் பக்கமே வருவது போல் தெரியவில்லை.பலரும் கேட்டு விட்டார்கள். இதோ இந்த வாரம் நிச்சயம் வருகிறார் ஏழு.

*******************************************

சென்னையில், பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக இருக்கிறார். சென்ற வாரம் அவர் மீது யாரோ கூரியர் தருவது போல்  வீட்டுக்கே வந்து ஆசிட் ஊற்றிவிட்டார்கள். தான் அழகாக இருப்பதாக கொஞ்சம் திமிரான கர்வம் அவருக்கு உண்டு. இனி எப்படி வாழ்ப் போகிறார் எனும்போது ஒரு மாதிரி ஆகிவிட்டது. இன்னும் திருமணமாகவில்லை. யாரோ ஒரு பலம் வாய்ந்த புள்ளியின் மகன் தான் ஆளை வைத்து செய்ததாக தெரிகிறது. ஆனால் போலிஸோ மறைக்கிறது. இவர்கள் வீட்டு டிரைவரை தினமும் அழைத்து சென்று விசாரிப்பதாக அடிக்கிறார்களாம். எதற்கென்றால் இன்னும் விசாரணை நடக்கிறது என்று காட்ட… கொஞ்சம் ஆசிட் மீதி கிடைத்தால் போலிஸ் மீதும் அதே ஆளிடம் காசு கொடுத்து ஊற்ற சொல்லலாம் என்றிருக்கிறேன்.

வீடு வீடாக வந்து பிஸினஸ் செய்பவர்களால் பல தொல்லைகள் வருகின்றன. எனவே அவர்கள் அந்த ஏரியா காவல் நிலையத்திற்கு சென்று தங்களின் அடையாளத்தை காட்டி ஒரு அனுமதி கடிதம் வாங்கிக் கொண்டு வர வேண்டும். அந்தக் கடிதத்தில் புகைப்படமும் இருத்தல் நலம். அக்கடிதம் கொண்டு வருவோருடன் மட்டுமே மக்கள் வாங்கத் தொடங்கினால் பல குற்றங்கள் குறையும். அதேப் போல் வீட்டு மெயின் கேட்டை ஃபோகஸ் செய்தபடி ஒரு கேமரா மறைவாக பொருத்தப்பட்டு விட்டால் எப்படி இருக்கும்? காலிங்க் பெல்லையே 10,000 ரூபாய்க்கு வாங்குவதை விட, கேமரா ஒன்றும் செலவாகிவிடாது. சொந்த வீடு கட்டுபவர்கள், கட்டும்போதே இதை ரகசியமாக வைத்துவிட்டால் விமானத்தின் பிளாக் பாக்ஸ் போல ஆகிவிடாது? நான் செய்யப் போகிறேன்.

*******************************************

   சென்னைக்கு வந்தவுடன் வாசலிலே நிற்க வைத்து யோகா கதைகள் சொல்லிக் கொண்டிருந்தான் பப்லு,என் அக்கா பையன். (அக்கா எப்படி பையனா இருக்க முடியும் என்றெல்லாம் பின்னூட்டமிட மாட்டீர்கள் என நம்புகிறேன்). கேட்டுக்கொண்டும், அவனைத் தள்ளிக் கொண்டும் உள்ளே வந்து சேர்ந்தேன்.பேச்சு அப்படியே டயட்டைப் பற்றியும் வந்தது. தினமும் இரவில் இரண்டே இரண்டு தோசை சாப்பிடுவதாக சொன்னான். ராஜா காலத்து மொக்கை ஒன்றை சொன்னேன் ”டின்னருக்கு பின்னாடியா, முன்னாடியா?”.  எல்லோரும் சிரித்துவிட(?) கோவம் வந்துவிட்டது பப்லுவுக்கு.

உனக்கு டயட்டைப் பற்றி என்ன தெரியும்? என்றான்

பேண்ட் டய்ட்டானா டயட்டுல இருக்கனும். அந்த டயட் தானே என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்த பப்லு சொன்னான் “ கொஞ்சம் கொயட்டா இரு. அது போதும்”

XXXXXXXXXXXXXXXXXXX

********************************************

பிளாகர்கள் எழுதும் சினிமா விமர்சனம் பற்றிய பேச்சுதான் சென்ற வாரம் சூடாக இருந்தது. இவர்கள் எழுதும் விமர்சனத்தால் படத்தின் வெற்றியே பாதிப்பதாக சொல்வதெலாம் டூ மச். நாங்க அவ்ளோ வொர்த் இல்லப்பா. ஆனால் பிளாகர்கள் எதை எழுதுகிறார்கள்? முதல் ஷோ பார்த்துவிட்டு வந்து டீக்கடையிலும் மற்ற இடங்களிலும் பேசுவதைத்தான் பதிவில் எழுதுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் துக்கடா வெப்சைட்டுகளும், பத்திரிகைகளும் எழுதும் விமர்சனத்தை விட சில நல்ல விமர்சனங்கள் பிளாகில் எழுதப்படுகின்றன.

   தமிழ்சினிமா.காம் ஒரு படி மேலேப் போய் தலையங்கமே எழுதி இருக்கிறார்கள். கந்தசாமியை நாறடித்துவிட்டோமாம். காசு போட்டு எடுப்பவர்களுக்குத்தான் கஷ்டம் தெரியுமாம். சுசி.கணேசன் குங்குமத்திலோ குமுதத்திலோ ஸ்பைடேர்மேனுக்கு எழுதிய விமர்சனம் அவர்கள் படிக்கவில்லை. மரண மொக்கை என்பது போல் சொல்லி இருந்தார். ஓசி பாஸீலோ. திருட்டு டிவிடியிலோ பார்த்துவிட்டு விமர்சிக்கவில்லை. காசு கொடுத்துப் பார்த்து நொந்தவர்கள் நல்லப் படத்தை மொக்கை என்றாலும் சரிதான். கந்தசாமிக்கு தமிழ்சினிமா.காம் கொடுத்தது 4ஸ்டார்கள்.

  தலைவா வாங்கிய கவரில் கொஞ்சம் எங்களுக்கும் கொடுத்தால் நாங்களும் *கந்தசாமி.. கலக்கல்சாமி” என்று பதிவ்ழுத தயார்.

Sep 4, 2009

எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் (கார்க்கி)

41 கருத்துக்குத்து

 

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நேற்று மதியம் முதல் எங்கள் ஏரியாவில் எந்த கடையும் திறக்கவில்லை. பஸ், ஆட்டோக்களும் ஓடவில்லை. பட்டினியாகவே இரவு வரை கழித்துவிட்டு ஒரு கையேந்தி பவனில் முடிந்தது. நடு ரோட்டில் டயரை கொளுத்தி இருக்கிறார்கள். சில வண்டிகளையும் எரித்திருக்கிறார்கள்.

இன்று மாலை டிரெயினில் சென்னை வருகிறேன். டிரெய்னையும் எரிக்கக் கூடாதென வேண்டிக் கொள்ளுங்கள்.

அதற்குள் ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் சி.எம் ஆவதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார். இன்று எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் “ ராஜசேகர் ரெட்டிக்கு அஞ்சலி செலுத்த இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். இந்த மெஸெஜை 16 பேருக்கு ஃபார்வர்ட் செய்தால் 221 ரூபாய் உங்கள் அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகும். இதை வழங்குவது ஜெகன் மோகன்”

என்னவோ போங்கப்பா. நான் சென்னை பத்திரமா வந்தா போதும்.

Sep 3, 2009

பட்டறையும் வேணாம்.கொப்பறையும் வேணாம்.

45 கருத்துக்குத்து

 

ஒரு பிரபல பதிவரிடம் பேசப் போகிறோமே என்ற பயத்துடன் தன்னை தயார் செய்து கொள்கிறார் பைத்தியக்காரன். மொபைலில் calling karki என்று ஒளிர்கிறது

கார்க்கி: ஹலோ. சொல்லுங்கண்ணா

பை.காரன்: கார்க்கி. நலமா?

கார்க்கி: ரொம்பவே. நீங்க எப்படி இருக்கிங்க?

பை.காரன்: நல்லா இருக்கேன் கார்க்கி. செப்.13ம் தேதி ஒரு சிறுகதை பட்டறை ஏற்பாடு செஞ்சிருக்கோம்.

கார்க்கி: பதிவுல பார்த்தண்ணா.

பை.காரன்: யுவன், பா.ரா இன்னும் பலர் எடுக்கறாங்க. நீயும் கண்டிப்பா வரணும்.

கார்க்கி: என்ன சொல்றீங்க? எனக்கும் சிறுகதைக்கும் என்னண்ணா சம்பந்தம்? நான் போய். வந்து..

பை.காரன்: அப்படி இல்லம்மா. நீ எழுத மாட்டற. எழுதின ஒரு சில சிறுகதையும் நல்லாத்தான் இருக்கு.

கார்க்கி: சரிண்ணா. அதுக்குன்னு சிறுகதை பட்டறைக்கு நான்..

பை.காரன்: எனக்கு சரின்னு தோணுவதாலே கூப்பிடறேன். முருகன் தருவான் கதையெல்லாம் எனக்கு ரொம்பவே பிடிச்ச ஒன்னு. ரமேஷ் வைத்யா கூட  அந்த தேவதை, புஜ்ஜி கதையை எவ்ளோ சிலாகிச்சாரு தெரியுமா?

கார்க்கி: கார்க்கிய கூப்பிடறேன்னு சுந்தர்ஜி கிட்ட சொன்னிங்களா?

பை.காரன்: அவர்தாம்மா உன்னை கூப்பிட சொன்னதே.

கார்க்கி: இல்லண்ணா. மறுபடியும் யோசிங்க. வர்றவங்க எல்லாம் கார்க்கியுமான்னு உங்கள திட்ட போறாங்க.

லைன் கட்டாகி விடுகிறது. சிறிது நேரத்திற்கு பின் அனுஜன்யா அழைக்கிறார்

கார்க்கி : சொல்லுங்க தல. எப்படி இருக்கிங்க?

அனுஜ : நல்லா இருக்கேம்மா. உன்னை திட்டனும்ன்னு கால் பண்ணேன். சிவா கிட்ட வர முடியாதுன்னு சொன்னியாமே?

கார்க்கி : தல, நீங்களுமா? அவர் தான் சொல்றார்ன்னா. எனக்கும் சிறுகதைக்கும் என்ன சம்பந்தம்? மொக்கை பட்டறை நடத்தலாமான்னு சொல்லுங்க

அனுஜ : என்னம்மா நீ? உயிரோசைல வந்துச்சே. நான் நான் தான். அது ஒன்னு போதாது உனக்கு கதை எழுத வரும்ன்னு காட்ட.

கார்க்கி : ஒரே ஒரு கதை தெரியாம எழுதிட்டேன். அதுக்காக

அனுஜ : அட முருகன் தருவான். அது டாப் 20ல வரும்ன்னு நானே நினைச்சேன். புட்டிகதைகள் கூட சிறுகதை ஃபார்மட்லதான் எழுதற நீ.

கார்க்கி : மக்கள் கிட்ட நீங்களும் அடி வாங்கப் போறீங்க. நீங்க எல்லாம் கலாய்க்கறீங்கன்னு நினைக்கிறேன்

அனுஜ : இல்லம்மா. என்ன நீ? உன்னை கலாய்க்க குசும்பன் தான் வரணும். அப்புறம் உன் இஷ்டம். இவ்ளோ சொல்லியும் நீ வரலைன்னு சொன்னாத்தான் தப்பா சொல்லுவாங்க.

கார்க்கி : இல்ல தல. இதுதான் சரின்னு தோணுது

இறுதியாக நர்சிம் அழைக்கிறார்

நர்சிம் : என்ன சகா பட்டறைக்கு வர மாட்டேன்னு சொன்னீங்களாம்?

கார்க்கி: நீங்க வேற சகா? யுவன், பா.ரா வெல்லாம் கிளாஸ் எடுக்கறாங்க. அதுல என்னையும் எடுக்க சொன்னா, என்ன ஆவறது? அதான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. இதுல அனுஜன்யா ரெகமெண்டேஷன் வேற

நர்சிம் : அடப்பாவி. உன்னை கலந்துக்கத்தான் கூப்பிட்டதா சொன்னாங்க? கான்ஃப்ரன்ஸ்ல பை.காரனும் இருக்காரு. ஹலோ அண்ணா..

கார்க்கி: என்ன சகா?

நர்சிம் : உன்னை கலந்து.

கார்க்கி: லைன்ல ஏதோ பிரச்சினை. நான் கால் பண்றேன்.

மெர்சிலாகிறார்கள் நர்சிம்மும், பை.க்காரனும். பரிசலை அழைக்கிறார் கார்க்கி.

பரிசல்: சொல்லு சகா. (டேய் அங்க என்ன வேடிக்கை. பதில் சொல்லு)

கார்க்கி : 13ம்தேதி சிறுகதை பட்டறைக்கு உங்களயும் கூப்பிட சொன்னாரு சிவாண்ணா. யுவன், பா.ரா, பாஸ்கர் சக்தி எல்லாம் எடுக்கறாங்க. உங்களையும்..

பரிசல் :  என்ன சகா சொல்ற? நானா? இதெல்லாம் ஓவர் இல்ல?( இது ஓக்கே ஆகும் பாருங்க)

கார்க்கி : (ங்கொய்யால நாம நினைச்சது தப்பே இல்லடா) இல்ல சகா. உங்க கதையெல்லாம் ருத்ரனே பாராட்டி இருக்காரு.

பரிசல்: இருந்தாலும். சிவாண்ணா கூப்பிட சொன்னாரா? அவரே கூப்பிடலாமே?

கார்க்கி : பார்த்திங்களா. சீஃப் கெஸ்ட் தோரணை வந்துடுச்சு. அவர் உங்க லைன் ட்ரை பண்ணாராம் கிடைக்கலையாம்.

பரிசல்: அட இல்ல சகா. இரு நானே அவர்கிட்ட பேசரேன். இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

பரிசல் பை.க்காரனை அழைக்கிறார்

பரிசல்: ஹலோ எப்படி இருக்கிங்கண்ணா?

பை.காரன்: நலம் பரிசல். நானே உங்களுக்கு கூப்பிடனும்ன்னு நினைச்சேன்

பரிசல் : தெரியும்ண்ணா. ஆனா நான் கிளாஸ் எடுக்கிறத விட சுந்தரும், நீங்களுமே எடுக்கலாமே?

பை.காரன் : என்ன சொல்றீங்க? டேய் எத்தனை பேருடா கிளம்பியிருக்கிங்க. பட்டறையும் வேணாம். கொப்பறையும் வேணாம்.

Sep 2, 2009

தமிழகத்தை ஆட வைப்பவர்கள்

41 கருத்துக்குத்து

 

    சினிமா மீது மோகம் வரும் முன்பே நடனத்தில் மீது காதல் உண்டெனக்கு. நான் பார்க்கும் எல்லாப் படங்களிலும் சற்று உற்று கவனிக்கும் ஒரு விஷயம் நடனம். என்னைக் கவர்ந்த சில நடன இயக்குனர்களைப் பற்றிய பதிவு இது.

இந்த பட்டியலில் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ராஜூ சுந்தரம் ஆகியோரை சேர்க்கவில்லை. ஒரு டான்சராக எனக்கு பிரபுதேவாவைத்தான் பிடிக்கும். ஆனால் Choreographer என்ற வகையில் ராஜு சுந்தரத்தின் பரம ரசிகன். லாரன்ஸும் நல்ல நடன இயக்குனரே.

1) ஷோபி:

shobi

ஆத்திச்சூடி பாடலில் ஆடினாரே அவரேதான். ராஜு சுந்தரத்தின் பள்ளியில் இருந்து வந்தவர். பல படங்களில் பார்த்திருப்பீர்கள். எனக்கு தெரிந்து ராஜூவின் குழுவின் இருந்து வந்தவர்களில் வித்தியாசமான முறையில் நடனம் அமைப்பவர் இவர்தான். வாள மீனுக்கு பாடலுக்கு இவரது நடனம் அத்தனை கச்சிதம். என்னைப் பொறுத்தவரை அந்தப் பாடலின் மாபெறும் வெற்றிக்கு காரணம் மாளவிகாவும் நடனமும்தான்.இப்போதைக்கு எனது ஃபேவரிட் டான்ஸ் மாஸ்டர். 

ஹிட்ஸ்:

ஆத்திசூடி, கண்ணும் தான் கலந்தாச்சு, வாள மீனுக்கு விலாங்கு மீனுக்கு, வாடி வாடி கை படாத சிடி, டாக்சி டாக்சி

2) தினேஷ்

dhina

தினா என்றும் ஒருவர் இருக்கிறார். கத்தாழ கண்ணால் பாடலுக்கு நடம் அமைத்தவர். அவரல்ல இந்த தினேஷ் . ஒரு முறை விஜயின் படத்தில் ராஜு சுந்தரம் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்க இருந்தார். விஜயுடன் ஆட இருந்தவர் சிம்ரன். ராஜுவுக்கும் சிம்ரனுக்கும் இடையே அப்போது பிரச்சினை இருந்தது. சிம்ரன் வருகிறார் என்ற விஷயம் தெரிந்து செட்டை விட்டு சென்றுவிட்டார் ராஜு. படப்பிடிப்பை நிறுத்தாமல் ராஜுவின் சம்மதத்தோடு விஜய் கைகாட்டிய ஆள்தான் தினேஷ். அந்தப் பாடல் ஆல் தோட்ட பூபதி. தமிழகத்தையே ஆட வைத்த அந்தப் பாடலில் ஒரு ஓரமாக ஆடவும் செய்தார். பிரபுதேவாவின் எல்லாப் படங்களிலும் ஒரு பாடலாவது இவருக்கு இருக்கும்.

ஹிட்ஸ்:

ஆல் தோட்ட பூபதி, மாம்பழமாம் மாம்பழமாம், தீம்தனக்க தில்லானா,வா வா என் தலைவா

3) ஸ்ரீதர்

untitled

மச்சான் பேரு மதுரவில் ஆரம்பித்தது இவர் பயணம். ராஜுவின் ஆஸ்தான டான்சர்களில் ஒருவர். சில விளம்பரப்  படங்களிலும் ஆடி இருக்கிறார். இவருடன் வந்த இன்னொருவர் ஜானி. இருவருக்குமே நல்ல உடல்வாகு. ஜானி இவரை விட நன்றாக ஆடக்கூடியவர். என்றாலும் நடன இயக்குனராக அவர் கலக்கவில்லை. இவரது நடனத்தில் ராஜுவைப் போல் சற்று காமெடியும் கலந்திருக்கும். போக்கிரியில் வரும் வசந்த முல்லை பாடலை சொல்லலாம். தமிழகத்தையே ஆட வைத்த நாக்க முக்கவின் நடனம் இவரதுதான்.

ஹிட்ஸ்:

மச்சான் பேரு மதுர, வசந்த முல்லை, படிச்சு பார்த்தேன் ஏறவில்லை, நாக்க முக்க

4) அசோக்ராஜா

2008101050321601

ராஜுவோட வேலை செய்திருந்தாலும் அவரது குழுவில் அதிகம் ஆடாதவர், அல்லது முன் வரிசையில் இல்லாதவர். ஆரம்பமே அதகளம் இல்லை. ஓ போடு இவரது முதல் ஹிட். பின் ஒரு சின்ன இடைவெளி. திருமலையில் வாடியம்மா ஜக்காம்மாவில் திரையில் சில வினாடிகள் தோன்றினார். தொடர்ந்து விஜய் படங்களில் வாய்ப்பு. எனக்கு தெரிந்து ராஜுவுக்கு அடுத்தபடி நிறைய ஒப்பனிங் சாங்கிற்கு நடனம் அமைத்தவர் என்ற பெருமை கொண்டவர். சற்று உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்பதை ”உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அறிவார்கள்

ஹிட்ஸ்:

ஆடுங்கடா என்னை சுத்தி, வாடா வாடா தோழா, ஓ போடு, வாடியம்மா ஜக்கம்மா

5) பிரேம் ரக்‌ஷித்:

DSC_00321233077629

தெலுங்கு திரையுலகில் இருந்து வந்தவர். ஆந்திராவில் கிட்டத்தட்ட அனைத்து முண்ணனி நடிகர்களுக்கும் ஆஸ்தான் நடன இயக்குனர். well defined steps  இல்லாமல் வித்தியாசமான முறையில், குறிப்பாக கால்களை மடக்கி ஆடும் ஸ்டைல் இவருடையது. ஒரு பாடல் சொன்னாலே புரிந்துக் கொள்வீர்கள். எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலில் விஜயின் கால்களை மடக்கி ஒடித்தவர் இவர் தான். இந்தப் பட்டியலில் ராஜுவின் பள்ளியில் இருந்து வராத ஒரே ஒருவர். இவரது தெலுங்கு பாடல்கள் இன்னும் தூளாக இருக்கும். சாம்பிளுக்கு ஒன்று இங்கே

ஹிட்ஸ்:

எல்லாப் புகழும், டன் டன் டன்னா டர்னா.

*************************************************8

பின்.கு 1: இவர்களைத் தவிர சரோஜா சாமான் நிக்கோலா புகழ் கல்யான், சிம்புவின் ஃபேவரிட் ராப்ர்ட், கூல் ஜெயந்த் என பலர் இருந்தாலும் என்னை கவரவில்லை என்பதால் குறிப்பிடவில்லை.

பின். கு 2: விஜயின் பாடல்களே அதிகம் இருப்பதாக தெரிகிறதா? எனக்கு விஜயின் நடனம் பிடிக்குமென்பதால் அவரது பாடல்களுக்கு நடனம் அமைத்தவர்கள் பெயரை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். மற்றவர்கள் படங்களில் அந்த ஆர்வம் இருக்காது.

இலவச இணைப்பு : என்னைப் பொறுத்தவரை பீட்ஸ், பாடலின் வேகம், ஒளிப்பதிவு, ஆடுபவர்கள் என எல்லாமும் பாடலுக்கு ஏற்றவாறு பக்காவாக (நடனத்தை பொறுத்தவரை)  அமைந்த பாடல் இதுதான்.

Sep 1, 2009

கல்லூரி-கேம்பஸ்-சிங்கை- எஸ்.பி-ஈழம்

33 கருத்துக்குத்து

 

  நான் டிப்ளோமா முடித்திருந்த சமயம் அது. (அப்போ லாங் லாங் அகோ, சோ லாங் அகோன்னு சொல்லு)  கேம்பஸ் இண்ட்டெர்வ்யூவில் தேர்வாகிவிட்டேன்.(த்தோடா) சிங்கப்பூரில்  ஆறு மாத காலம், சிங்கை அரசு நடத்தும் பயிற்சிக்காக நடந்த நேர்முகத் தேர்வு அது.  நான்கு கட்டத்தை தாண்டி மறுநாள் Communication round. வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் ஆனந்த்ராஜைப் போலவே இருந்தார்கள் வந்தவர்கள். ஆனாலும், ஒரு அரசு கல்லூரிக்கு வந்து  ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்பினோம். விமான செலவுக்கு 10,000 ரூபாய் மட்டுமே நம் கட்ட வேண்டும். மாதம் ரூ25,000 stipend. தங்குமிடம், போக்குவரத்து என மற்றவை அனைத்தும் அவர்கள் செலவு. பயிற்சி முடிந்தால் ஒரு வருடம் கழித்து சிங்கையிலே 50,000 சம்பளத்தில் வேலை. சிங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் உண்டு.யாருக்குத்தான் ஆசை வராது?

மறுநாள் Communication roundற்கு ஹாஸ்டலில் பல அறைகளில் ஒத்திகை நடைபெற்று கொண்டிருந்தது.(நல்ல வேளை, நீங்க டாக்டருக்கு படிக்கல) ஆங்கிலத்தில் பேச அப்போது பலருக்கு தயக்கம். அனைத்து துறைகளுக்கும் நடைபெற்றதாலும், நிறைய பேரை அவர்கள் தேர்ந்தெடுத்ததாலும் ஹாஸ்டல் முழுக்க ஷேக்ஸ்பியர் வாசம் வீசிக் கொண்டிருந்தது. (பாவம்டா அவரு, கேப்டன் வாசம்ன்னு சொல்லு)

மறுநாள்,கார்க்கி என்று அழைத்தவுடன் கெத்தாக போய் அமர்ந்தேன். சம்பிரதாய கேள்விக்குப் பின், கடைசியாக என்ன படம் பார்த்தீங்கன்னு கேட்டார் ஆனந்த்ராஜ்.(அச்சச்சோ, அந்த பேரெல்லாம் சொல்ல முடியாதே) தயங்கி தயங்கி அலைபாயுதே என்றேன்.(அலைபாயுதே தெரியும், தயங்கி தயங்கி அலைபாயுதே?) அந்தக் கதையை சொல்லுங்க என்றார். பாதிக் கதையை சொல்லும் போதே U are selected என்றார். (அப்போ அலை படத்தோட கதையைத்தான் சொன்னியா?) நல்லதா, கெட்டதா என்ற குழப்பத்தோடு வெளியே வந்தேன். (அவங்களுக்குத்தானே?)

  ஏழு வாடிய முகத்தோடு வந்தான். என்னடா ஆச்சு என்றேன். (வாடிப் போச்சுன்னு நீதானே சொன்ன) படம் பார்த்தியான்னு கேட்டாங்களா என்றான். தலையசைத்தேன்.

எதுக்குன்னு தெரியாம நான் பார்த்த கடைசி படம்..

டேய்.. அதெல்லாமா சொல்லுவாங்க?

இருடா. என்னம்மா கன்னுன்னு சொல்லிட்டேன். அந்த கதையை எப்படிடா இங்கிலிஷில் சொல்றதுன்னு ஏழு கேட்டான். என்ன சொல்றது?

   அன்று தேர்வாகிய போதும் கைவசம் பாஸ்போர்ட் இல்லாததால் என்னால் உடனே சிங்கப்பூர் செல்ல இயலவில்லை. TATKALல் விண்ணப்பிக்க அப்போது விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த ரவி என்பவரை சந்திக்க சென்றிருந்தேன். தொடர்ந்து 10 நாட்கள் காலை முதல் மாலை வரை எஸ்.பி ஆஃபிஸே கதி என்றிருந்தேன். (B.P.யே கதின்னு இருந்தவன்தாண்டா நீ) 11ம் நாள் என்னோடு வந்த என் நண்பனுக்கு லெட்டர் கிடைத்து விட்டது. எனக்கு???? என் அப்பாவுக்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக (அப்போது அவர் இறந்து ஒரு ஆண்டு ஆகியிருந்தது)  காரணம் சொல்லி நிராகரித்து விட்டார். என் நிலைமையை சொல்லி அவரிடம் கிட்டத்தட்ட கெஞ்சினேன். அவர் சொன்ன வார்த்தைகள் சரியா நினைவில் இல்லை. ஆனால் அங்க(ஈழம்) எவன் செத்தா நமக்கென்ன? நம்ம வேலையைத்தானே பார்க்கனும் என்றார். திரும்பி வந்துவிட்டேன். நார்மலில் அப்ளை செய்து பாஸ்போர்ட் வாங்க மூன்று மாதாமகிவிட்டது. பின் ஒரு வருடம் தாமதமாகவே என்னால் சிங்கைக்கு செல்ல முடிந்தது.

   அந்த ரவி தான் இப்போது வட சென்னை இணை கமிஷன்ர். சென்ற வாரம் லயன்ஸ் கிளப் மீட்டிங்கில் அவரை சந்திக்க நேர்ந்தது. எரிச்சலோடு வெளியே சென்றுவிட்டேன். பின் நண்பர் வந்து அவர் பேசியதை சொன்னார். மே17முதல் அவர் இனிப்பு மற்றும் அசைவ உணவுகளை விட்டு விட்டாராம். காரணம்? அவர் சொன்னது, அன்றுதான் ஈழத்தில் 20,000 பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டார்களாம். எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர்களுக்காக இதையாவது செய்வோம் என்று முடிவெடுத்தாராம்.

என்னை யாரென்று சொல்லாமல் அவரிடம் கை கொடுத்து விட்டு வந்தேன்.

2006080400650601

 

all rights reserved to www.karkibava.com