May 12, 2009

வைகோ- ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகம் 

முன்குறிப்பு: ஈழத்தில் நடைபெறும் ஆயுதப் போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் இறந்து மடியும் செய்திகளைக்கேட்டு எழுந்த ஆத்மார்த்தமான எண்ணங்களை இந்த/இனிவரும் பதிவில் காணலாம்.

குறுந்தொடராக வரப்போகும் இந்த பதிவுகளில் ஈழத்தில் நடைபெறும் ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தவல்ல, இந்தியாவைச்சேர்ந்த அரசியல்வாதிகளைப்பற்றியும் அவர்களது செயல்பாடுகளைப்பற்றியும் எனது கருத்துக்களை பதிவதே எனது நோக்கமாகும்.

-----------
வைகோ - ஈழ ஆதரவும் கருணாநிதி எதிர்ப்பு அரசியலும்

ஈழ ஆதரவு அரசியல்வாதிகளில் முதன்மையானவராகக் கருதப்படுபவர். எனக்கும் இதில் உடன்பாடே, பதவி அரசியல் (தேர்தல்) தளத்தில் இயங்கும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில்... அதுவும் கொண்ட கொள்கையில் நிலைத்து நிற்கும் பண்பிற்காக! ஆனால்கடந்த இரண்டு ஆண்டுகளாக இவரால் ஒரு புண்ணியமும் இல்லை என்பதுதான் என்னுடைய முக்கிய குற்றச்சாட்டே.

சிங்கள அரசின் இந்த யுத்தம் சாத்தியப்படுவதற்கு ஒரு முக்கியக்காரணம் வைகோவின் தவறான நிலைப்பாடே! மத்திய காங்கிரஸ் அரசின் சிங்கள ஆதரவு கடந்த ஓராண்டாகவே அரசல் புரசலாக செய்திகளில் வந்துக்கொண்டுதான் இருந்தது. அத்தகைய சூழலில் மத்திய அரசைக் கவிழ்ப்பது மட்டுமே யுத்ததின் தீவிரத்தை குறைத்து இருக்கும். அதற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன.

1. அணுசக்தி ஒப்பந்தத்தின் காரணமாக கம்யூனிஸ்டுகள் ஆதரவை  விலக்கிக்கொண்ட போது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை இடதுசாரிகள் கொண்டுவந்த போது தேசிய அளவில் காங்கிரஸ் அரசிற்கெதிராக அதிகபட்ச உழைப்பினை காட்டி இருக்க வேண்டும், ஆனால் இவரது செயல்பாடுல்கள் ஏனோதானோவென்றே இருந்தன. அப்போதே இந்த அரசு கலைந்திருக்குமேயானால் இன்று ஈழத்தில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்காதே...

2. பதவியை துறக்கவும் தயார் என கருணாநிதி ஈழ யுத்தத்தைப்பற்றிய  விவாதத்தில்
(அக்டோபர்/நவம்பர் 2008) குறிப்பிட்டபோது. காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டபோதும், கருணாநிதி எதிர்ப்பு என்ற அரசியலின் காரணமாக ஈழ மக்களுக்கு வைகோ துரோகமிழைத்தது இந்த சமயத்தில் தான்! திமுக/பாமக கட்சிகளின் ஆதரவில்லாமல் காங்கிரஸ் அரசு நிச்சயம் கவிழ்ந்திருக்கும். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஆதரவில்லாமல் பாமக/இடதுசாரிகள்/விசி/மதிமுக கட்சிகளின் ஆதரவுடன் திமுகவால் 5 ஆண்டுகளை நிச்சயம் பூர்த்தி செய்திருக்க முடியும். அப்படியொரு கூட்டணி அமைய திருமா, வீரமணி போன்றோர் பாடுபட்டதும் நன்கு தெரிந்ததே.

ஆனால் அப்படியொரு கூட்டணி அமைவதற்கான சூழல் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டதில் வைகோவின் பங்கு பிரதானமானது. அது ஏன்? ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று வாய்கிழிய பேசும் வைகோ, காங்கிரஸ் அரசை கலைக்க அதன்மூலம்  ஈழ மக்களுக்கெதிராக சிங்கள அரசு தொடுத்திட்ட போரின் தீவிரத்தைக் குறைக்க ஒருமுறை திமுக அரசை ஆதரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இவர்கள் இல்லாமல் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சி செய்யும் என்பது நன்றாகவே தெரியும். இருந்தும் ஏன் வைகோ எதுவும் செய்யவில்லை? இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அக்டோபர் 2008 சமயங்களில் அதிமுகவிற்கும் காங்கிரசிற்கும் ஈழத்தை பொறுத்தவரையில் கொள்கை அளவில் சிறு வித்தியாசமும் கிடையாது.

வைகோவிற்கு ஈழ மக்களின் நலனைவிட கருணாநிதி எதிர்ப்பு முக்கியமானதா? வைகோ சாதித்தது தான் என்ன? கருணாநிதிக்கு ஈழ மக்களைவிட பதவியே முக்கியம் என்று நிரூபித்தது, ஜெயலலிதாவின் காலங்கடந்த தனிஈழ முழக்கம்... இதற்காக இழந்தது என்ன? பல்லாயிரக்கணக்கான உயிர்கள்!!

தனது கருணாநிதி எதிர்ப்பு என்ற சுயநல அரசியலினால் ஈழ மக்களுக்கு உதவும் வாய்ப்பை தவறவிட்ட வைகோ என்னைப்பொறுத்த வரையில் துரோகியாகவே கண்ணுக்குத் தெரிகிறார்.

பின்குறிப்பு: வைகோவை விமர்சிப்பதினாலேயே என்னை ஒரு உடன்பிறப்பாக நினைப்பவர்கள் கலைஞரைப் பற்றிய பதிவு வரும்வரை அமைதிகாக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்!

64 கருத்துக்குத்து:

விமல் on May 12, 2009 at 10:15 AM said...

நீங்கள் கூறுவது 100% உண்மை..இலங்கை பிரச்சனைப் பற்றியும், ஈழத் தமிழர்களின் துயர் பற்றியும் மேடைகளில் பேசுவதால் மட்டும் ஒன்றும் நடந்துவிடாது.

நீங்கள் கூறியது போல் வாய்ப்பு கிடைத்த போது அதைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

டக்ளஸ்....... on May 12, 2009 at 10:21 AM said...

வைகோ மட்டுமல்ல அண்ணே...தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே துரோகிகள்தான்..! இங்கு எவருமே விதிவிலக்கல்ல.இந்த ஈழப் பிரச்சனையை இந்தியாவும், ஐ. நா வும் உட்பட எந்த நாடுகளும், அமைப்பும் ஒன்று சேர்ந்து தீர்க்கவே முடியாது. இது ராஜ பக்ஷே சகோதரர்களும் புலிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு முடிவு. இதற்கு நம் பிரதமர் உட்பட நானும் நீங்களும் உலக நாடுகளும் ஒன்றும் செய்ய முடியாது.

Suresh Kumar on May 12, 2009 at 10:25 AM said...

கருணாநிதி எம்பிக்களையும் ராஜினமா செய்வேன் என சொன்ன பொது வைகோவும் அந்த தீர்மானத்தை ஒத்துக்கொண்டார் . பின்னர் நடந்த நிகழ்வுகள் வைகோ கண்ணப்பன் கைது , சீமான் , அமீர் கைது கடைசியாக பிரணாப் மிகர்ஜி வந்தார் விருந்து சாப்பிட்டார் வெளியில் வந்து சொன்னார் மத்திய ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று . இது தான் ராஜினமா கருணாநிதியின் குள்ள நரித்தனம் வைகோவிற்கு தெரியும் .

எம்ஜிஆர் காலத்திலேயே ஈழ மக்களைஉ அரசியல் பண்ணியவர் தான் கருணாநிதி . இன்னுமா நம்புறீங்க . கருணாநிதியின் திட்டமிட்ட செயல் தான் இந்த போர் . சும்மா சப்பை கட்டு கட்டாதீங்க .

Suresh Kumar on May 12, 2009 at 10:26 AM said...

பின்குறிப்பு: வைகோவை விமர்சிப்பதினாலேயே என்னை ஒரு உடன்பிறப்பாக நினைப்பவர்கள் கலைஞரைப் பற்றிய பதிவு வரும்வரை அமைதிகாக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்! //////////


இப்போ உடன்பிறப்புகள் எல்லோரும் நடுநிலையாளர்களாக தான் வளம் வருகின்றனர் .

Karthik on May 12, 2009 at 10:48 AM said...

:(((

கார்க்கி on May 12, 2009 at 10:48 AM said...

நன்றி விமல்

************
@டக்ளஸ்,
சும்மா இருந்தா என்ன பிரச்சினை டம்பி? எல்லா ஆயுதங்களும் கொடுத்தது தப்புதானே? நம்ம வரிப்பணம்ப்பா அது.. ஐ.நாவும் தலையிட முடியாதென்றால் அப்புறம், எதுக்குத்தான் ஐ.நா?

**************
@சுரேஷ்,

உங்க தலைவ்ரின் தலையின் பொடாலென்று பொடாவை வைத்து அடித்து உள்ளே போட்டாரே அம்மையார்.. அவரு கூட ஃபாஸீசம்ன்னு குதிச்சாரே!! மறந்து போச்சா?

நாங்க உடன்பிறப்புகள் இல்லையென்றாலும், தமிழகத்தின் நலன் கருதி அம்மையாருக்கு ஓட்டு போடாமல் இருக்கிறவங்க. முதல்ல தலைப்பயும், கடைசி வரியையும் படிச்சிட்டு பின்னூட்டம் போடரத நிறுத்துங்க..

லக்கிலுக் on May 12, 2009 at 10:55 AM said...

நீங்கள் சொல்லும் பாயிண்டுகள் சிலவற்றை நான் இதுவரை சிந்தித்துக்கூட பார்த்ததில்லை.

ஆனாலும் வைகோவின் ஈழப்பாசம் உறுதியானது, சமரசங்களுக்கு உட்படாதது என்றே எப்போதும் நம்புகிறேன். இனியும் நம்புவேன்.

//ஈழ மக்களுக்கெதிராக சிங்கள அரசு தொடுத்திட்ட போரின் தீவிரத்தைக் குறைக்க ஒருமுறை திமுக அரசை ஆதரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? //

இந்த விஷயத்தில் வைகோவை குறைகூறுவதை விட இராமதாஸை குறை கூறுவதே நியாயமானதாக இருக்க முடியும்.

வைகோ தன்னால் முடிந்ததை எப்போதும் செய்துக் கொண்டிருக்கிறார். இனியும் செய்வார்.

மண்குதிரை on May 12, 2009 at 10:56 AM said...

பொங்கத் திருவிழாவில் இளந்தாரிப்பயக பேஜ் குத்திவிட்டு அலைவது போல அலைகிறார்கள். வைகோ, ஸ்டேர்லைட் கம்பனி எதிர்ப்பு போராட்டத்தில் அவர் காட்டிய முனைப்பு எல்லோரையும் போல் என்னையும் கவர்ந்தது. ஆனால் இப்போது அந்த கம்பனி இப்போது சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. வைகோவும் இயங்கிக் கொண்டிருக்கிறார். எதுவும் சொல்வதற்கில்லை.

அப்பாவி முரு on May 12, 2009 at 11:01 AM said...

ஒரு இருபது, இருபதைந்து இடுகையாவது தேறுமே...

வாழ்த்துகள்.

அப்பாவி முரு on May 12, 2009 at 11:04 AM said...

//இந்த விஷயத்தில் வைகோவை குறைகூறுவதை விட இராமதாஸை குறை கூறுவதே நியாயமானதாக இருக்க முடியும்//

நோ டைவெர்சன்...

ஒன் பை ஒன்.

தியாகராஜன் on May 12, 2009 at 11:05 AM said...

///////லக்கிலுக் said...

நீங்கள் சொல்லும் பாயிண்டுகள் சிலவற்றை நான் இதுவரை சிந்தித்துக்கூட பார்த்ததில்லை.

ஆனாலும் வைகோவின் ஈழப்பாசம் உறுதியானது, சமரசங்களுக்கு உட்படாதது என்றே எப்போதும் நம்புகிறேன். இனியும் நம்புவேன்.

//ஈழ மக்களுக்கெதிராக சிங்கள அரசு தொடுத்திட்ட போரின் தீவிரத்தைக் குறைக்க ஒருமுறை திமுக அரசை ஆதரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? //

இந்த விஷயத்தில் வைகோவை குறைகூறுவதை விட இராமதாஸை குறை கூறுவதே நியாயமானதாக இருக்க முடியும்.

வைகோ தன்னால் முடிந்ததை எப்போதும் செய்துக் கொண்டிருக்கிறார். இனியும் செய்வார்.///

அண்ணன் லக்கிலுக் அவர்களை வழிமொழிகிறேன்.

வால்பையன் on May 12, 2009 at 11:08 AM said...

//வைகோவை விமர்சிப்பதினாலேயே என்னை ஒரு உடன்பிறப்பாக நினைப்பவர்கள் கலைஞரைப் பற்றிய பதிவு வரும்வரை அமைதிகாக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்!//

அம்மாவை பற்றி எதுவும் எழுதாததால் நீங்கள் ரத்தத்தின் ரத்தமாக தான் பார்க்கப்படுவீர்கள்!

:)

மண்குதிரை on May 12, 2009 at 11:13 AM said...

வைகோவின் ஈழ் நிலைப்பாடு லக்கிலுக் சொல்வது போல் உண்மையானதுதான். ஆனால் அதற்கு முற்றிலிம் எதிரான கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது political businessக்கு த்தானே?

//பொங்கத் திருவிழாவில் இளந்தாரிப்பயக பேஜ் குத்திவிட்டு அலைவது போல அலைகிறார்கள்//


இதில் எல்லோரையும் குறிப்பிடவில்லை. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் என் மதிப்பிற்குரிய தலைவர்களும் இருக்கிறார்கள்.

sakthi on May 12, 2009 at 11:27 AM said...

வைகோவை விமர்சிப்பதினாலேயே என்னை ஒரு உடன்பிறப்பாக நினைப்பவர்கள் கலைஞரைப் பற்றிய பதிவு வரும்வரை அமைதிகாக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்!

kandipa

Bleachingpowder on May 12, 2009 at 11:38 AM said...

ஆந்திராவுக்கு மேலே தமிழீல மக்களை பற்றியோ,அவர்களின் போராட்டம் பற்றியோ, விடுதலை புலிகளை பற்றியோ யாருக்கும் அக்கறை இல்லை. இன்னும் சொல்ல போனால் ராஜிவை கொலை செய்தவர்கள் புலிகள் என்றளவிலேயே அவர்களது கண்ணோட்டம் இன்று வரை உள்ளது.

நாமளும் அப்படி தானே, காஷ்மீரில் யார் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அவர்கள் தீவிரவாதிகள்னு மத்திய அரசும், மீடியாவும் சொல்வதை தானே நாமும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்த போது, காஷ்மீர் நம்முடன் இல்லையே, இப்பொழுது எப்படி வந்தது?

என்ன தான் வசதி இந்தியர்களுக்கு இருந்தாலும், நம்மால் காஷ்மீரில் ஒரு செண்ட் இடம் கூட வாங்க சட்டம் இடம் கொடுக்காது, இது ஏன் எதற்கு என்று என்றைக்காவது யோசித்திருக்கிறோமா?

வட கிழக்கு மாநிலங்களில் தினமும் நிகழும் வன்முறைக்கு யார் காரணம் என்பதை பற்றி தமிழன் என்றைக்காவது கவலை பட்டிருக்கானா?

எப்படி மற்ற மாநிலங்களை பற்றி நமக்கு கவலை இல்லையோ அதேப் போல் தான் அவர்களும். மத்திய அரசு
ஒரேயொரு மாநிலத்தின்(தமிழ்நாடு) கோரிக்கைகாக, இலங்கைக்கு எதிரான ஒரு நிலைபாட்டை எடுக்க காங்கிரஸ்,பாஜக போன்ற எந்தொரு கட்சிகளும் முன்வராது. அப்படி ஒரு நிலைப்பாட்டை அவர்கள் எடுத்தால், கிட்டத்தட்ட பத்து பதினைந்து மாநிலங்களில் அவர்கள் உதை வாங்குவார்கள்.

இது தான் யதார்த்தம். அம்மா இல்லை, எந்த கொம்பன் நினைத்தாலும் இந்த நிலைப்பாட்டை நம்மால் மாற்ற இயலாது என்பது தான் வருந்ததக்க உண்மை. இங்கே வோட்டு வாங்குவதற்காக, உண்ணாவிரதம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் ஈழம் மலரும், பதினைந்து லட்சம் பேர் ஈழம் செல்ல தயாராக இருக்கிறார்கள் போன்ற வீராவேச பேச்சு தினதந்தியை படிப்பவர்களுக்கு ஒரு கிளர்ச்சியை உண்டாக்குவதற்காக் போடும் நாடகம்.அவ்வளவு தான்.

வைக்கோவின் போராட்டம், பேச்சு, அறிக்கை, முயற்சியையெல்லாம் யாரும் பொருட்படுத்தவே மாட்டார்கள். இது அவருக்கும் தெரியும். டெல்லிக்கு தந்தி அடிப்பதில் இன்றும் முதலிடம் வைக்கோவிற்கு தான், இரண்டாம் இடம் தான் கருணாநீதிக்கு :)

தொடர்ன்னு சொல்லீட்டீங்க, இன்னும் நிறைய விவாதிப்போம் தல்.

Kajanthan on May 12, 2009 at 11:39 AM said...

Pls place your valuable vote at
http://internationaldesk.blogs.cnn.com/

(Should The International Community Intervene In Sri Lanka?)

சரவணகுமரன் on May 12, 2009 at 11:50 AM said...

//வைகோவை விமர்சிப்பதினாலேயே என்னை ஒரு உடன்பிறப்பாக நினைப்பவர்கள் கலைஞரைப் பற்றிய பதிவு வரும்வரை அமைதிகாக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்//

:-))

affable joe on May 12, 2009 at 11:51 AM said...

///பதவியை துறக்கவும் தயார் என கருணாநிதி ஈழ யுத்தத்தைப்பற்றிய விவாதத்தில்
(அக்டோபர்/நவம்பர் 2008) திமுக/பாமக கட்சிகளின் ஆதரவில்லாமல் காங்கிரஸ் அரசு நிச்சயம் கவிழ்ந்திருக்கும். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஆதரவில்லாமல் பாமக/இடதுசாரிகள்/விசி/மதிமுக கட்சிகளின் ஆதரவுடன் திமுகவால் 5 ஆண்டுகளை நிச்சயம் பூர்த்தி செய்திருக்க முடியும். அப்படியொரு கூட்டணி அமைய திருமா, வீரமணி போன்றோர் பாடுபட்டதும் நன்கு தெரிந்ததே.///

இதை நான் மறுக்கிறேன் கார்க்கி முதன் முதலில் ஈழ தமிழர் பேரவை ஆரம்பித்து ஒரு நாள் பந்த நடத்தினார்களே அப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் கலைஞரை காங்கிரஸ் கூட்டணி விட்டு வர வேண்டுகோள் விடுத்தனர் அதற்கு வைகோ மறுப்பு தெரிவிக்கவும் இல்லை அதை தடுத்து நிறுத்தவும் இல்லை .கலைஞர் தான் அப்போது முடியாது என்று தெரிவித்தார் .அப்போது அவர் இசைந்திருந்தால் இன்று அவர் பின்னல் அனைவரும் திறன்டிருபார்கள்.அவருக்கு இவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது .என்னை பொறுத்தவரை கலைஞர் செய்த மிக பெரிய தவறு அது .

//ஆனால் அப்படியொரு கூட்டணி அமைவதற்கான சூழல் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டதில் வைகோவின் பங்கு பிரதானமானது.//
உங்களுக்கு யார் சொன்னது இப்பிடி .

//அக்டோபர் 2008 சமயங்களில் அதிமுகவிற்கும் காங்கிரசிற்கும் ஈழத்தை பொறுத்தவரையில் கொள்கை அளவில் சிறு வித்தியாசமும் கிடையாது.//
உண்மை தான் திருமா கூட காங்கிரஸ் மற்றும் ஆ.தி .மு .க வை வேர் அறுப்போம் என்று ஜனவரி வரை கூறி கொண்டு இருந்தார் .இப்போ ???

///தனது கருணாநிதி எதிர்ப்பு என்ற சுயநல அரசியலினால் ஈழ மக்களுக்கு உதவும் வாய்ப்பை தவறவிட்ட வைகோ என்னைப்பொறுத்த வரையில் துரோகியாகவே கண்ணுக்குத் தெரிகிறார்.///
மிகவும் தவறான கருத்து கார்க்கி வீரமணி ,ராம தாஸ் ,தா.பாண்டியன் என அனைவரும் ஒரு கூட்டணி அமைப்பதாக சொன்னபோது வைகோ அதுக்கு இசைவு தான் தெரிவித்தார் .கலைஞர் அன்று மறுப்பு சொல்லல் இருந்திருந்தால் இன்று ஈழம் இப்படி இருக்காது முற்றிலும் கலைஞரின் சுய நலம் தான் இதற்கு காரணம் .

நாடோடி இலக்கியன் on May 12, 2009 at 11:55 AM said...

//நாங்க உடன்பிறப்புகள் இல்லையென்றாலும், தமிழகத்தின் நலன் கருதி அம்மையாருக்கு ஓட்டு போடாமல் இருக்கிறவங்க.//

இது சூப்பர்.

வித்யாசமான கோணத்தில் சிந்திச்சிருக்கீங்க.அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்த்து...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ on May 12, 2009 at 12:30 PM said...

//அதுவும் கொண்ட கொள்கையில் நிலைத்து நிற்கும் பண்பிற்காக! //
காமெடி பண்ணாதிங்க சகா. ஈழ விவகாரம் தவிர வேறு என்ன கொள்கையில் வைகோ உறுதியாக இருந்தார் என சொல்ல முடியுமா?

கருணாநிதியை எதிர்த்து கட்சி ஆரம்பித்தார். பின் அவருடனே சேர்ந்தார். பெரியார், அண்ணா வழி வந்தவர் பிஜேபியுடனும் சேர்ந்தார். ஜெ வுடனும் சேர்ந்தார். பின், பின்னூட்டத்தி நீங்கள் சொன்னது போல் அம்மையாரை திட்டிவிட்டு வெளியே வந்தார். பின் அதே அம்மையாருஅன் ஒரு சட்ட மன்றத் தொகுதிக்காக ஒரே நாளில் அணி மாறினார். இவரிடம் என்ன கொள்கை இருக்குன்னு கொண்ட கொள்கைல உறுதியா இருக்கிறார்னு சான்றிதழ் தறிங்க? :(

( இதற்கு காங்கிரஸ் பத்தி சொல்லி சமாளிக்கக் கூடாது. ஏன்னா நீங்க வைகோ கொள்கை பத்தி மட்டும் சொல்லி இருக்கிங்க :) )

சகா, நான் முழுப் பதிவையும் படிச்சிட்டேன். விமர்சனம் இந்த வரிகளுக்கு மட்டுமே. நீஞ்கள் தான் விமுக ஆளாச்சே. உங்களை எதுக்கு உடன் பிறப்புன்னு சொல்லப் போறோம்..:)

விமல் on May 12, 2009 at 12:35 PM said...

//Bleachingpowder on May 12, 2009 11:38 AM said...
...
எப்படி மற்ற மாநிலங்களை பற்றி நமக்கு கவலை இல்லையோ அதேப் போல் தான் அவர்களும். மத்திய அரசு
ஒரேயொரு மாநிலத்தின்(தமிழ்நாடு) கோரிக்கைகாக, இலங்கைக்கு எதிரான ஒரு நிலைபாட்டை எடுக்க காங்கிரஸ்,பாஜக போன்ற எந்த
ஒரு கட்சிகளும் முன்வராது //

யதார்த்தமான கருத்துக்கள்..சரியாகச் சொன்னீர்கள்..ஆனால் அடுத்து அமையும் மத்திய அரசு ஏதாவது ஒரு தமிழக கட்சியின் அல்லது கூட்டணியின் ஆதரவில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இன்னும் கொஞ்சம் வேகமாக மற்றும் அழுத்தமாக நிர்பந்திக்க முடியும். குறைந்தபட்சம் ராணுவ உதவிகள் அளிப்பதை தடுத்து நிறுத்த முடியும்.. அண்டை நாடு என்ற முறையில் போர் நிறுத்தத்திற்கு "உண்மையாகப்" போராட வைக்க முடியும்..

மத்தியில் முக்கிய இலாக்காவுடைய மந்திரி பதவிகள், தமிழகத்தில் எந்த பதவியும் கொடுக்காமல் ஆதரவு மட்டும் வாங்கிக் கொண்டு ஆட்சி நடத்துவதால் தான் தி.மு.கவினால் எந்தவொரு உண்மையான நெருக்குதலும் தர முடிய வில்லை..

என்றாலும் எங்களுடைய கோபமெல்லாம் பதவியா, ஈழத் தமிழர் பிரச்சனையா என்ற போது..தி.மு.கவிற்கு பதவி பெரிதாகத் தெரிந்தது தான்/ தெரிவது தான்..

லவ்டேல் மேடி on May 12, 2009 at 12:40 PM said...

யாராக இருந்தால் என்ன அரசியல் வியாதி என்றாகியபோது....... சுயநலத்தை மட்டுமே பார்பவர்கலாகிவிடுகிறார்கள்......!!


இதில் வைக்கோவாகட்டும் ..... சோனியாவாகட்டும் ..... எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான்.....!!!!

Bleachingpowder on May 12, 2009 at 12:47 PM said...

//விமல் said,
மத்தியில் முக்கிய இலாக்காவுடைய மந்திரி பதவிகள், தமிழகத்தில் எந்த பதவியும் கொடுக்காமல் ஆதரவு மட்டும் வாங்கிக் கொண்டு ஆட்சி நடத்துவதால் தான் தி.மு.கவினால் எந்தவொரு உண்மையான நெருக்குதலும் தர முடிய வில்லை..//

ரொம்ப சரி விமல், இவர்கள் என்றைக்காவது அமைச்சரவையில் பங்கெடுக்கும்போது வெளியுறவு துறையையோ அல்ல நீர்வளத்துறையையோ கேட்டது உண்டா. எங்கே பத்தாயிரம் கோடி ஊழல் பண்ண முடியுமோ அதை தான் கேட்பார்கள். கார்க்கி எப்போ கருணாநீதியை பத்தி எழுதுவார்ன்னு காத்திட்டிருக்கேன்.

\\என்றாலும் எங்களுடைய கோபமெல்லாம் பதவியா, ஈழத் தமிழர் பிரச்சனையா என்ற போது..தி.மு.கவிற்கு பதவி பெரிதாகத் தெரிந்தது தான்/ தெரிவது தான்.. ///

திமுகவை பொருத்தவரை பதவி, இடுப்பில் இருக்கும் கோவணம். தமிழர் நலம் தோளில் இருக்கும் துண்டு

biskothupayal on May 12, 2009 at 12:48 PM said...

ஈழத்தில் நடைபெறும் ஆயுதப் போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்
இதை பற்றி பேசி !!!!!!!

பதவியை துறக்கவும் தயார் என கருணாநிதி ஈழ யுத்தத்தைப்பற்றிய விவாதத்தில்
குறிப்பிட்டபோது. காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு
( இது மொத்தம் திட்டமிட்ட நாடகம் என்று அனைவரும் அறிந்ததே இதை ஒரு வாய்ப்பு என்று சொல்ல முடியாது )

இன்று அனைவரும் பதவி என்ற நேர்கோட்டில் பயணித்துகொண்டிருகின்றனர்.
அந்த கணக்குக்கு எது சரியவருமோ அதை மட்டுமே?

biskothupayal on May 12, 2009 at 12:49 PM said...

innum pesuvom thodarattum!!!!!

aravind on May 12, 2009 at 12:49 PM said...

மூன்று ரூபாய்க்கு ஊர் ஊராக ஊசி போட்டு கொண்டு திரிந்த ராமதாஸ் இன்று
மூவாயிரம் கோடி சொத்து வைத்துள்ளார்

அதை பெருக்கவே துடிப்பார்கள்

அதை போலவே மற்றவர்களும்

மிக அருமையான பதிவு வேறு கோணத்தில் சிந்தித்த பதிவு இது

ஆடு நனையுதே என்று எல்லா ஒநாய்களும் அழுகிறது

அடுத்த சட்டசபை தேர்தல் வரை ஈழ மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் போராடும் அப்போது தானே ஆட்சியை பிடிக்க முடியும்

காஷ்மீரில் இன்றும் விலைவாசி 1950 களில் இருந்தது போலவே இருக்கிறது
காஷ்மீர் மக்களுக்கு இரட்டை குடிஉரிமை இரண்டு கொடி விட்டால் அவர்கள்
கேட்டால் எல்லா விசயத்திலும் நம் அரசியல்வாதிகள் இரண்டு இரண்டாக கொடுக்க தயாராக உள்ளனர்

காஷ்மீர் நமது மண்டை என்றால் கொண்டை பாகிஸ்தானிடமும் ,சீனாவிடமும் உள்ளது

நமக்கு காஷ்மீர் தேவை இல்லை என்று சுஜாதா சொன்ன பொழுது அவர் மீது பாய்ந்து விட்டனர்

அது போல மற்ற மாநிலத்திலும் ஈழத்தை பற்றி கவலை பட மாட்டார்கள்

தனி ஈழம் சாத்தியம் அற்றது என்று எல்லாருக்கும் தெரியும் ஜெயலலிதா ,சீமான் உட்பட

Bleachingpowder on May 12, 2009 at 12:52 PM said...

//aravind on May 12, 2009 12:49 PM said...
தனி ஈழம் சாத்தியம் அற்றது என்று எல்லாருக்கும் தெரியும் ஜெயலலிதா ,சீமான் உட்பட
//

பிரபகரண் உட்பட

biskothupayal on May 12, 2009 at 1:08 PM said...

பாமக/இடதுசாரிகள்/விசி/மதிமுக கட்சிகளின் ஆதரவுடன் திமுகவால் 5 ஆண்டுகளை நிச்சயம் பூர்த்தி செய்திருக்க முடியும்.
நிச்சயம் முடியாது. ஏன்?
திமுக எண்ணம் அதுவல்ல! ஏனென்றால் பாமக குடைச்சல் திமுக அறிந்ததே
திமுக நிலை தெரிந்த பாமக நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை இத்தனை சீட் என்று நிர்பந்திக்கும் அப்போது திமுக நிலை மாநில ஆட்சியும் பாதிக்கும் மத்தியில் நிலையான அமைச்சர் பதவிகளும் பாதிக்கும்.

கார்க்கி on May 12, 2009 at 2:22 PM said...

வேலையில் சற்று பிசியாக இருப்பதால் மாலை வந்து பதிலிடுகிறேன்.. வருகைதந்த அனைவருக்கும் நன்றி...

@லக்கி,

வைகோவிற்கு அந்த உணர்வு இருக்கலாம். ஆனால் அரசியல் சூழ்னிலைகளுக்கு அவர் வளைந்து கொடுத்து நடந்ததால் அவரையும் ஒரு சராசரி அரசியலவாதியாக்வே பார்க்க வேண்டும்.

பின்னூட்டம் பெரியசாமி.. on May 12, 2009 at 2:26 PM said...

கருணாநிதியின் நடவடிக்கைகளையும் துரோகங்களையும் பார்க்கும் போது கருணாநிதியை வைகோ எதிர்ப்பது ஈழத்தமிழர் மீதும் நம்நாட்டுத் தமிழர் மீதும் கொண்ட அக்கறையையும், விசுவாசத்தையும், தொண்டுள்ளத்தையும், பாசத்தையும் மட்டுமே காட்டுகிறது

உங்களின் உள்நோக்கம் கொண்ட இந்த கட்டுரையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எல்லா அரசியல் தலைவர்களையும் விமர்சிக்கப் போவதாக கூறினாலும் அப்பட்டமான தமிழினத் துரோகத்தை இழைத்திருக்கும் காங். தி.மு.க ஆகிய கட்சிகளின் தலைவர்களை விட்டுவிட்டு வைகோ விமர்சனக் கட்டுரையை தேர்தலுக்கு முதல்நாள் வெளியிட்டதில் உள்நோக்கமுள்ளது என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவதோடு உங்களுக்கு இன்ன பிற முத்திரைகள் வருவது தவிர்க்க முடியாது என்பதை இதன் மூலம் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். உங்கள் வலைப் பதிவில் வெளியிட்டுள்ள இந்த கட்டுரை குறைந்த அளவுள்ள வாசகர் வட்டத்தை மட்டுமே சென்றடைவதால் தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லையெனினும் அச்சு இதழ்களில் ஏற்பட்டுள்ள கற்பனைப் பற்றாக்குறையால் அவர்கள் தற்போது இணைய தளங்களில் சுற்றி வந்து பக்கக்களை நிரப்பிக் கொண்டுள்ள காலம் இது. வைகோ மீது மிகவும் காண்டுடன் சுற்றிவரும், அதே நேரத்தில் அவர் மீது குற்றம் சொல்ல வழியின்றி திண்றி வரும் முண்ணனிப் பத்திரிக்கைகள், உங்கள் கட்டுரையை மேற்கோள் காட்டியோ அல்லது முழுமையாக வெளியிட்டோ அதனைத் தீர்த்துக் கொள்ளக் கூடும்.


வைகோவின் கருணாநிதி எதிர்ப்பே அவர் ஈழத்தமிழருக்கு செய்யும் தொண்டுதான். கருணாநிதியும், சோனியாவும் தான் பத்தாயிரம் ஈழத்தமிழர்களின் சாவுக்குக் காரணம் என்பது வெள்ளிடை மலை. இந்த கயவர் கூட்டணி திட்டமிட்டே இந்த படுகொலைகளை நிகழ்த்தியது. கலைஞர் ஆட்சியைத் துறக்க முன் வந்தார் என்பதெல்லாம் சுத்த பேத்தல். ஆட்சியத் துறக்க முன்வருவதாக கூறியதெல்லாம் கணக்கெடுத்தால் இந்த மூன்று மாதங்களில் முப்பது தடவைகள் ஆட்சியையும் உயிரையும் இழந்திருக்கிறார். அதனால் தானோ என்னவோ பேயாக வந்து பேயாட்சி செய்கிறார்.

//மத்திய காங்கிரஸ் அரசின் சிங்கள ஆதரவு கடந்த ஓராண்டாகவே அரசல் புரசலாக செய்திகளில் வந்துக்கொண்டுதான் இருந்தது.//
ரகசியமான முறையில் காங். அரசு செய்த அத்தனை துரோகங்களையும் வெளியே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலம் வெளியே கொண்டு வந்ததே வைகோவும், பழ. நெடுமாறனும்தான். இவர்கள் ஈழத் தமிழருக்காக உணவு மருந்துகளை திரட்டி அனுப்ப அனுமதி கேட்டபோது மறுத்தது காங் மற்றும் திமுக கூட்டணி அரசுகள். இதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, பொருட்களை அனுப்பி வைக்க அனுமதி பெற்றுத் தருவதாக நாடகமாடி கெடுத்ததால் அவை அனைத்தும் வீணாணது. எப்போதெல்லாம் ஈழத்தின் தமிழர்களின் உயிரிழப்பு அதிகமாக இருந்ததோ அப்போதெல்லாம் உளவுத் துறையின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு கோலிக் குண்டு கடத்தல், சோடா கடத்தல், வயர்லெஸ் கடத்தல் என உளவுத் துறை மூலம் நாளிதழ்களில் செய்திவருமாறு பார்த்துக் கொள்வார் கருணாநிதி. ஈழத்தில் நடை பெறும் இனப் படுகொலையைப் பற்றி வாய்திறந்ததால், தமிழகத்தில் ஆங்காங்கே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று பல கைது சம்பவங்களை நடத்தி பொதுமக்களை இது குறித்து சிந்திக்கவும் பேசவும் முடியாத ஒரு அச்ச நிலையிலேயே வைத்து பார்த்துக் கொண்டார். இன்னும் போராட்டங்களை ஒடுக்குதல்,,,,,,,,,,,,

எழுத துவங்கினால் அது பாட்டுக்கு போயிக்கொண்டே இருக்கிறது. இது பின்னூட்டம் என்பதே மறந்து போச்..

கருணாநிதியின் நடவடிக்கைகளையும் துரோகங்களையும் பார்க்கும் போது கருணாநிதியை வைகோ எதிர்ப்பது ஈழத்தமிழர் மீதும் நம்நாட்டுத் தமிழர் மீதும் கொண்ட அக்கறையையும், விசுவாசத்தையும், தொண்டுள்ளத்தையும், பாசத்தையும் மட்டுமே காட்டுகிறது

விமல் on May 12, 2009 at 2:39 PM said...

// Bleachingpowder said...
//aravind on May 12, 2009 12:49 PM said...
தனி ஈழம் சாத்தியம் அற்றது என்று எல்லாருக்கும் தெரியும் ஜெயலலிதா ,சீமான் உட்பட
//

பிரபகரண் உட்பட
//

மேலோட்டமாக இது சாத்தியப் படாது எனத் தோன்றினாலும்..இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு வேறு ஒரு (நல்ல) தீர்வு இருப்பதாகத் தோன்றவில்லை..

கண்டிப்பாக இலங்கை அரசு தமிழர் நலனில் அக்கறை கொள்ளப் போவதில்லை...மனித உரிமைகளும், உயிர்களும் என்ன விலை என்று கேட்பவர்களிடம் ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு எதிர்பார்ப்பது நடக்காத ஒன்று. உலக நாடுகள் இந்த விஷயத்தில் ஒன்று பட்டு இலங்கைக்கு நெருக்குதல் கொடுத்தால் மட்டுமே இது நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
ஆகவே தான் உலக நாடுகளிடம் எதிர் பார்ப்பதற்கு முன் நமது மத்திய அரசு இப்பிரச்சனையின் தீவிரம் அறிந்து பொறுப்புடன் நடந்து கொள்ள நாம் தேர்ந்தெடுக்கும் மக்களவை உறுப்பினர்கள் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசை உடன் படிய வைக்க உண்மையாகவே பதவி விலக/ ஆதரவை விளக்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

அதை விடுத்து அவர்களின் அமைச்சரவையிலேயே இருந்து கொண்டு, அவர்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்து கொண்டு, சும்மா பெயரளவில் போராட்டங்கள் நடத்தியும், தந்தி அனுப்பியும் ஒன்றையும் சாதித்து விட முடியாது...

ராஜ நடராஜன் on May 12, 2009 at 3:37 PM said...

//1. அணுசக்தி ஒப்பந்தத்தின் காரணமாக கம்யூனிஸ்டுகள் ஆதரவை விலக்கிக்கொண்ட போது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை இடதுசாரிகள் கொண்டுவந்த போது தேசிய அளவில் காங்கிரஸ் அரசிற்கெதிராக அதிகபட்ச உழைப்பினை காட்டி இருக்க வேண்டும், ஆனால் இவரது செயல்பாடுல்கள் ஏனோதானோவென்றே இருந்தன. அப்போதே இந்த அரசு கலைந்திருக்குமேயானால் இன்று ஈழத்தில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்காதே...//

நாட்டின் எதிர்கால நலன் என்ற கண்ணோட்டத்தில் அந்தக் கால சூழலில் வை.கோ பற்றிக் குறை சொல்வது சரியாகாது.ஆனால் ஒரு நல்ல தலைவனாக உருவாக வேண்டியவர் தனது தகிடுதத்த அரசியலால் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டது வருந்தத்தக்கது.

ஒரு மாற்று அரசியலுக்கான களம் இயற்கையாகவே அமைந்தது.ஆனால் தங்களது சுயநல அரசியலால் மரம்வெட்டி மருத்துவர்,உணர்ச்சி வை.கோ.திசை தெரியா திருமா மூவருமே குற்றவாளிகள்.இதில் மிகவும் பரிதாபப் படவேண்டியவர் ஒரு இனத்துக்கான குரலாக தனது வாழ்வை அரசியலாக்கிக் கொண்ட திருமா.

ஆனால் பதிவு 'பெருசு'களின் தேர்தல் கருத்துக்கணிப்புக்களை பார்க்கும் போது அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா வசனமே இன்னும் தொடரும் போல் தெரிகிறது.

கும்க்கி on May 12, 2009 at 4:28 PM said...

ரூட்டு மாத்திவிட்டு எக்ஸ்ப்ரஸ் வேகம் எடுக்குது, நடக்கட்டும்.
எங்கள மாதிரி இளந்தாரிப்பயகள மறந்துபோடாதீங்கப்பூ.

affable joe on May 12, 2009 at 6:16 PM said...

// Bleachingpowder said...
//aravind on May 12, 2009 12:49 PM said...
தனி ஈழம் சாத்தியம் அற்றது என்று எல்லாருக்கும் தெரியும் ஜெயலலிதா ,சீமான் உட்பட
//

பிரபகரண் உட்பட
//
ஏன் சாத்தியபடாது .கிழக்கு தைமூர் சாத்தியாபடவில்லையா ,கியூபா ,மேற்கு இந்திய தீவுகளில் இருக்கும் பல தேசங்கள்,வட மற்றும் தென் கொரியா ,பங்களாதேஷ் ஆகியவை சாத்தியாபடவில்லையா . அர்த்தமில்லாமல் பேசாதிர்கள் நண்பர்களே.

பங்களாதேஷ் எப்படி உருவானது ஜோதி பாசு அவர்கள் இந்திரா காந்திக்கு எச்சரிக்கை விடுத்தார் நீங்கள் ராணுவத்தை அனுப்பவில்லை என்றால் நானும் ஏன் மக்களும் ஆயுதம் எடுத்து கொண்டு போய் ஏன் வங்காள சகோதரர்களை விடுவிப்பேன் என்று .இதை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் யாரேனும் கூற முடியுமா .எவருக்கும் தைரியமில்லை நம்மிடத்தில் ஒற்றுமையும் இல்லை .நாம் எப்போதும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே என்று கதைத்து கொண்டே இருக்க வேண்டியது தான் .கழகங்கள் ஓழியும் வரை தமிழகம் உருப்படாது வேறு என்ன சொல்ல .

aravind on May 12, 2009 at 6:39 PM said...

//பங்களாதேஷ் எப்படி உருவானது ஜோதி பாசு அவர்கள் இந்திரா காந்திக்கு எச்சரிக்கை விடுத்தார் நீங்கள் ராணுவத்தை அனுப்பவில்லை என்றால் நானும் ஏன் மக்களும் ஆயுதம் எடுத்து கொண்டு போய் ஏன் வங்காள சகோதரர்களை விடுவிப்பேன் என்று .

இந்திரா இருந்தால் இதற்குள் தனி ஈழம் உருவாகி இருக்கும் ராஜீவ் காந்தி வந்தது தான் பிரச்சனையே அவரால் தான் இந்தியர்கள்(சொல்லேவே வெட்கமாக இருக்கிறது) அங்கே போய் நம் சகோதரிகளை வன்கலவி செய்ய சிங்கள நாய்களிடம் கற்று தேர்ந்தார்கள்.

பிறகு நடந்தது தான் எல்லார்க்கும் தெரியுமே அன்றைக்கும் அதை வைத்து ஆதாயம் பார்த்தது அ.தி.மு.க இன்றும் பார்க்க போகிறது . ராஜீவ் இறந்த பொழுது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எங்கு போனார்கள் முதலில் அவர்களை விசாரியுங்கள் உண்மை புரியும் தெரியும்

ஒன்று மட்டும் உண்மை தமிழனுக்கு தமிழன் தான் எதிரி

இங்கு மும்பையில் தமிழன் ஒருவனிடம் பிரச்சனை செய்தால் அவன் இன்னொரு தமிழனிடம் உடடவி கேட்பான் . தமிழன் இருவரும் அடித்து கொண்டு சாவார்கள்

ஈழ தமிழரை ஏமாற்ற போராடும் அரசியல்வாதிகளின் முகத்திரையை தொடராக எழுதி கிழித்து கொண்டு இருக்கும் கார்கிடம் ஒரு சின்ன வேண்டுகோள்
அடுத்து எழுத போகும் பதிவு எதாவது ஒன்றில் ஈழ தமிழருக்காக உண்ணாவிரதம் என்று தனி ஆவர்த்தனம் செய்த விஜய் மட்டும் உண்ணாவிரதத்தில் பிரியாணியை பற்றி பேசிய அவரது தந்தை சந்திரசேகரையும் அந்த வரிசையில் நீங்கள் சேர்த்து கொள்ள வேண்டும்

நீங்கள் நடுநிலையாளராக இருந்தால் இதையும் தட்டி கேட்க வேண்டும் .

அப்படி செய்யவிலை என்றால் 2016 லில் வருங்கால முதல்வர் விஜயின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி ஏற்கும் கார்கியின் விழாவை புறக்கணிப்போம்

புலிகேசி on May 12, 2009 at 6:41 PM said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

கார்க்கி on May 12, 2009 at 6:58 PM said...

//தனி ஆவர்த்தனம் செய்த விஜய் மட்டும் உண்ணாவிரதத்தில் பிரியாணியை பற்றி பேசிய அவரது தந்தை சந்திரசேகரையும் அந்த வரிசையில் நீங்கள் சேர்த்து கொள்ள வேண்டும்

நீங்கள் நடுநிலையாளராக இருந்தால் இதையும் தட்டி கேட்க வேண்டும் .

அப்படி செய்யவிலை என்றால் 2016 லில் வருங்கால முதல்வர் விஜயின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி ஏற்கும் கார்கியின் விழாவை //

ஹிஹி..திரைக்கு வெளியே விஜயை நான் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்வதில்லை. இதில் அவர் மட்டுமல்ல, எல்லா நடிகனும் இப்படித்தான், ஒரு சிலரைத்தவிர. குறிப்பாக தனது ஏகனை வெளியிடாமல் செய்யப் போவதாக தெரிந்ததும், சம்பந்தமேயில்லாமல் நடிகனை நடிகனா இருக்க விடுங்க என்று பேசிவிட்டு, இப்பொது தனது பிறந்த நாலை ஈழத்தமிழர்களுக்கா கொண்டாடாதீங்கனு சொன்ன நல்லவரும் அடக்கம்... ஹிஹி.. எப்படி?

aravind on May 12, 2009 at 7:13 PM said...

அஜித்தையும் மட்டும் அல்ல தவறு செய்தால் யாரையும் கேட்கலாம் (நானும் இதற்கு விதி விலக்கு அல்ல நான் யாருடைய ரசிகனும் இல்லை )

அவர் அப்பா விஜய் ஒரு வருங்கால அரசியல்வாதி என்று சொன்னதால் தான் நான் அவரை சேர்க்க சொன்னேன்

தமிழ்ப்பறவை on May 12, 2009 at 7:46 PM said...

:-/

Bleachingpowder on May 12, 2009 at 8:05 PM said...

கடை ஓனர் எங்கப்பா???அவர் வந்து கருத்து சொன்னா தானே களை கட்டும்.

தல, மொக்க பதிவு போடும் போதெல்லாம் வந்து கும்முற நீங்க, இப்படி சூப்பர ஒரு பதிவ போட்டுட்டு நீங்க பாட்டுக்கு ஆணி புடுங்க போயிட்டா எப்படி????

வாங்க வந்து வியாபரத்தை தொடங்கி வையுங்க

Bleachingpowder on May 12, 2009 at 8:08 PM said...

//தனி ஆவர்த்தனம் செய்த விஜய் மட்டும் உண்ணாவிரதத்தில் பிரியாணியை பற்றி பேசிய அவரது தந்தை சந்திரசேகரையும் அந்த வரிசையில் நீங்கள் சேர்த்து கொள்ள வேண்டும் //

ஹலோ...கார்க்கி சீரியஸ எழுதும் போடும் போது நடுவுல இந்த மாதிரி நகைச்சுவையாக எல்லாம் எழுத மாட்டாரு.

Bleachingpowder on May 12, 2009 at 8:14 PM said...

///புலிகேசி said...
ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி//

ஜெயலலித்தாவே கருணாநீதிக்கு ஓட்டு போடுங்கனு சொன்னாலும், சொரனை உள்ளவன் எவனும் திமுக விற்கு ஓட்டு போடமாட்டான்.

Bleachingpowder on May 12, 2009 at 8:17 PM said...

//aravind said...
அவர் அப்பா விஜய் ஒரு வருங்கால அரசியல்வாதி என்று சொன்னதால் தான் நான் அவரை சேர்க்க சொன்னேன்
//

அதானே, வருங்கால நடிகன்னு சொன்னாவாச்சும் கொஞ்சம் நம்பலாம்.

சாரி தல கோச்சுக்காதீங்க :)

தீப்பெட்டி on May 12, 2009 at 8:18 PM said...

துரோகம் செய்த அரசியல்வாதிகளின் பட்டியல் கடைசியில் இருந்து வெளியிடப்படுவதாக நினைக்கிறேன்.

வைக்கோவைப் பற்றிய லக்கிலுக்கின் கருத்து முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ள கூடியதே..

மத்திய அரசை கவிழ்க்கும் அளவுக்கு வைகோ செயல்பட முடியாத அளவிற்குத்தான் நாம் அவருக்கு வாய்ப்புகள் அளிந்திருந்தோம்.(எப்போதும்)

//பதவியை துறக்கவும் தயார் என கருணாநிதி ஈழ யுத்தத்தைப்பற்றிய விவாதத்தில்
(அக்டோபர்/நவம்பர் 2008) குறிப்பிட்டபோது. காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டபோதும், கருணாநிதி எதிர்ப்பு என்ற அரசியலின் காரணமாக ஈழ மக்களுக்கு வைகோ துரோகமிழைத்தது இந்த சமயத்தில் தான்! திமுக/பாமக கட்சிகளின் ஆதரவில்லாமல் காங்கிரஸ் அரசு நிச்சயம் கவிழ்ந்திருக்கும். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஆதரவில்லாமல் பாமக/இடதுசாரிகள்/விசி/மதிமுக கட்சிகளின் ஆதரவுடன் திமுகவால் 5 ஆண்டுகளை நிச்சயம் பூர்த்தி செய்திருக்க முடியும். அப்படியொரு கூட்டணி அமைய திருமா, வீரமணி போன்றோர் பாடுபட்டதும் நன்கு தெரிந்ததே.//

கருணாநிதி எப்போது எதை தெரிவிப்பார் பின்பு எதனால் வாபஸ் வாங்குவார் என்பது நம்மைவிட கருணாநிதியை நன்கறிந்த வைகோவால் எடை போட இயலும். மேலும் ராஜினாமாவை கருணாநிதி முன்னெடுத்து செல்ல முனைய மாட்டர் என்பது தொடர்ந்து செய்திதாள் வாசிக்கும் அனைவரும் அறிந்த விசயம்.

ஈழம் பற்றிய ஜெயலலிதாவின் கடுமையான அணுகுமுறையை அறிந்திருந்தும் வைகோ ஈழ ஆதரவை
கைவிட்டதில்லை. ராமதாஸ்,திருமா போன்றவர்களுடன் சேர்ந்து ஈழதமிழர்களுக்காக தனிஅமைப்பு எற்படுத்தியபோது கூட ஜெ-வின் ஈழ பார்வை மாறியதில்லை.

அரசியலுக்காக எதை எதையோ சமரசம் செய்தவர் ஈழ ஆதரவில் சமரசம் செய்ததில்லை என்பதை நாம்
பதிவு செய்தல் அவசியம்.

வேண்டுமானால் அரசியலில் ஈடுபடாமல் பழ.நெடுமாறனோடு சேர்ந்து அவர் ஈழ தமிழர்களுக்காக இன்னும் முனைப்போடு போராடி இருக்கலாம். ஆனால் அதன் பலன் (?) என்னவாக இருக்கும் என்பதை கூறமுடியவில்லை.

தேர்தல் அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளில் இவரின் ஈழ மக்கள் ஆதரவு உறுதியானது அதனால் அவர் இழந்தது அதிகம்.

எப்படி பார்த்தாலும் ஈழ விவகாரத்தில் அவர் துரோகியாக சரித்திரத்தில் அவர் இடம்பெற மாட்டார்.

ஒருவேளை அவருக்கு அந்த வாய்ப்பும் வசதியும் வழங்காத தமிழக மக்கள் இடம் பெறலாம்.

padaiyachi on May 12, 2009 at 8:20 PM said...

ஈனபயல் கருணாநிதியே துரோகி. இனி கருணாநிதி "தமிழின துரோகி' என்று அழைக்க படுவார்.

Ramesh on May 12, 2009 at 8:50 PM said...

Vaiko is a pucca Politician. He knows to make merry, on the winning side ( probably except once!) like Ramadoss.

also Read this please... (one mindedness...)

பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை

அத்திரி on May 12, 2009 at 8:59 PM said...

சகா வித்தியாசமான பார்வை......... தொடரட்டும்....

affable joe on May 12, 2009 at 10:39 PM said...

நண்பர்களே சற்றுமுன் காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சனமும் அபிஷேக் சிங்க்வி யும் ஸ்ரீ லங்கா வில் போர் நின்றுவிட்டதாகவும் அங்கு சாகும் தமிழர்களை எண்ணி வருத்தப்பட மட்டுமே முடயும் என்று கூறிஉள்ளனர் இதற்காகவா 40 வாரி கொடுத்தோம் .நாளை வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் நண்பர்களே எல்லாம் உங்கள் கைகளில் .

RoadRunner on May 13, 2009 at 1:10 AM said...

This is post is very very Biased and misleading/attempt to defame Vaiko. calling Vaiko as traiter only based on "Karunanithi's Resignation Drama" shows that you have long way to go to understand K's politics.

-- ashamed ex-utanpirappu.

( whoever says i am in the mentality of "எப்பவும் போடுற தே... போடல! என்னைக்கும் போடாத மகராசி போடுற" ன்னு சொல்றவங்க இதுவரைக்கும் எப்பவும் போடுறவ என்ன போட்டான்னு சொல்லுங்க.

mohamed forrookk on May 13, 2009 at 1:47 AM said...

தோழா கார்க்கி,

இன்னக்கி உள்ள சூழலில் எல்லாருமே ஈழத்தில் நடக்கும் படுகொலையை இந்தியா நடத்துகிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.ஆனால் 2006 - லிருந்தே வைகோ அதை முழங்கி கொண்டே இருந்தார். ஈழத்தை கொண்டு அவர் அரசியல் ஆதாயம் தேடவில்லை. இன்னக்கி உள்ள சூழல் கருணாநிதியின் துரோகத்தை பார்த்து அனைவரும் வைகோ மேல பாய்கிறார்கள் அதில் நீங்களும் ஒருவர். கருணாநிதியின் தில்லு முள்ளு அரசியலால் அதிகம் பாதிக்கப்பட்டது வைகோ தான்..ஆதலால் கருணாநிதியின் ஒவ்வொரு அசைவும் வைகோ விற்கு தெரியும். எப்போதெல்லாம் கருணாநிதி எதிர் கட்சியாக இருந்தாரோ அப்பெல்லாம் நிறைய போராடுவாறு..பதவியை ராஜினமா பண்ணுவாரு!!!..ஆனால் பதவியில் இருக்கும்போது என்ன செய்வாருன்னு இப்போ எல்லாருமே பார்த்தாச்சு..ஆனால் வைகோ மேல உங்களுக்கு என்ன வெறுப்போ இப்படி எழுத வச்சுருக்கு..

//வைகோ - ஈழ ஆதரவும் கருணாநிதி எதிர்ப்பு அரசியலும்//

கருணாநிதியின் மேல வைகோவிற்கு என்ன தனிப்பட்ட பிரச்சினையா?.

தி.மு.க என்பது பெரியாரை தலைவராக கொண்ட அண்ணாவால் தமிழக மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கட்சி யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம்,ஆனால் அதை தனது சொந்த குடும்ப கட்சியாக மாத்தி தொலைக்காட்சி ஆரம்பித்து ஈழபிரச்சினையை ஒரு நிமிடம் கூட காட்டாத ஈன இழிபிறவி தான் இந்த கருணாநிதி.

தேர்தலுக்கு முன்புகூட வைகோவின் கட்சியை உடைத்து என்ன செய்தாரு என்பது உங்களுக்கும் தெரியும். ஏன் கடைசியில் காலை வாரிவிட்டு ஓடிய மரம்வெட்டி கூட்டத்திடம் இல்லாத கோவம் வெறி எல்லாம் வைகோ வின் மேல் ஏன்?..ஏனெனில் இன்று உள்ள சூழலில் பல தடுமாற்றங்களிலும் அடிபட்டு அசிங்கப்பட்டு இருந்த போதும் வைகோ தன்மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. ஜெயா மாமி மற்றும் மஞ்சள் துண்டு குடும்பத்திடம் உள்ள இந்த கரை அவரிடம் இல்லை அந்த வெறுப்பே "கருணா" விற்கு அதையே நீங்களும் காட்டிரிகீங்க..

வைகோவை கட்சி மாறினாரு, தமிழக பிரச்சினையை வைத்து எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் ஈழப்பிரச்சினையை காட்டி கொச்சை படுத்தாதீர்கள்...

உண்மையில் உங்களின் இந்த பதிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது


தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)

pappu on May 13, 2009 at 4:57 AM said...

தமிழ்நாட்டில இருக்குற எந்த அரசியல்வாதியும் இந்த தங்க முட்டை(ஓட்டு0 போடுற வாத்துல(இலங்கை பிரச்சனை) கத்தி வைக்க மாட்டானுங்க

கார்க்கி on May 13, 2009 at 9:49 AM said...

@ஃபரூக்,

கலைஞர் என்னவெல்லாம் செய்தார்ன்னு பட்டியல் போட்ட நீங்கள், வைகோ என்ன செய்தார்னெ ந்றும் சொல்லி இருக்கலாமே? தமிழர்களுகாக பேசியதற்காக பொடாவில் உள்ளே தூக்கிப் போட்ட அம்மாஇயாரின் பின் செல்ல வேண்ட்யது ஏன்? அது தமிழக அரிசயல் என்று சொல்லாதிங்க. நான் சொல்வதே எனக்கு ஈழத்தமிழன் தான் முக்கியம் என்று சவடால் விடும் வைகோ அதை செய்திருக்க கூடாது எனபதால் தான்.. ராமதாஸ் வராத கோவம் வைகோ மீது வருவதே அவர் மீதிருந்த நமபிக்கைதான். அதைப் புரிந்துக் கொள்ளுஙக்ள்

கார்க்கி on May 13, 2009 at 9:53 AM said...

@ரோடு ரன்னர்,

வைகோவை அசிங்கபடுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏன்? நான் ஒன்றும் கண்மூடித்தனமான திமுக ஆதரவலன் அல்ல என்பதை என்னை தொடர்ந்து வாசிப்பவர்களிடம் கேளுங்கள்.

@படையாச்சி,

முதலில் இந்த மாதிரி சாதி பெயர் கொண்ட பயல்களை நான் மதிப்பது இல்லை. சோ, நெக்ஸ்ட்டு

@தீப்பெட்டி,

ஒன்னு முக்கியங்க. உங்க மனசுல என்ன இருக்கு என்பது முக்கியமைல்லை. என்ன செய்தீங்க? நானும் தான ஒன்னும் செய்யல. ஆனா நான் ஈழத்தமிழர்கள்தான் என் மூச்சு, பேச்சு , ரத்த ஆறு ஓடும்னு ஃபிலிம் காட்டவில்லை.

கார்க்கி on May 13, 2009 at 10:01 AM said...

//ஜெயலலித்தாவே கருணாநீதிக்கு ஓட்டு போடுங்கனு சொன்னாலும், சொரனை உள்ளவன் எவனும் திமுக விற்கு ஓட்டு போடமாட்டான்//

சொரனை உள்ளவன் ஜெ பேச்ச கேட்க மாட்டான் தல :))

*******************
// aravind said...
அஜித்தையும் மட்டும் அல்ல தவறு செய்தால் யாரையும் கேட்கலாம் (நானும் இதற்கு விதி விலக்கு அல்ல நான் யாருடைய ரசிகனும் இல்லை )

அவர் அப்பா விஜய் ஒரு வருங்கால அரசியல்வாதி என்று சொன்னதால் தான் நான் அவரை சேர்க்க சொன்னே//

சகா நோ காமெடி ப்ளீஸ்.. :)))

*******************

jothi on May 13, 2009 at 10:58 AM said...

எந்த அரசியல்வாதியும் இங்கே உண்மை இல்லை. இது நெடுமாறனையும் சேர்த்து,.. ஜெயலலிதா நம்பகூடியவர் எதாவது ஒரு உதாரணம் சொல்லுங்கள். ஒரே நாளில் என் நோக்கம் தனி ஈழம் என்ற இவர் நாளை ஒரே நாளில் என் நோக்கம் தனி ஈழம் இல்லை என்றால் நெடுமாறன் என்ன சொல்ல முடியும்? இதற்காக நீங்கள் போட்ட ஓட்டை திரும்ப கேட்டால் தருவார்களா????

jothi on May 13, 2009 at 11:07 AM said...

// ராஜீவ் இறந்த பொழுது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எங்கு போனார்கள் முதலில் அவர்களை விசாரியுங்கள் உண்மை புரியும் தெரியும் //

TRUE TRUE TRUE

mohamed forrookk on May 13, 2009 at 1:56 PM said...

//. நான் சொல்வதே எனக்கு ஈழத்தமிழன் தான் முக்கியம் என்று சவடால் விடும் வைகோ அதை செய்திருக்க கூடாது எனபதால் தான்.. ராமதாஸ் வராத கோவம் வைகோ மீது வருவதே அவர் மீதிருந்த நமபிக்கைதான். அதைப் புரிந்துக் கொள்ளுஙக்ள்//

உங்கள புரிந்து கொண்டதால்தான் பின்னூட்டம் இட்டேன்..

கண்டிப்பாக அவரின் மேல் உள்ள நம்பிக்கைதான் எல்லாரையும் இப்படி பேச வைக்கிறது. ஈழப்பிரச்சினையை அவர் இன்றைக்கு உள்ள தேர்தலுக்காக எடுக்கவில்லை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா மற்றும் சர்வதேச அரங்கில் உரக்க முழங்கி வருகிறார். அவரின் சில உணர்ச்சிவச பேச்சுகளை தவிர்க்க வேண்டும்..அதுதான் அவரின் மிக பெரிய சறுக்கல் ஆனால் அதுதான் பல நேரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. வைகோ விற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் அவரை சாடுவது சரி இல்லை என்பதே என் கருத்து. ஜெயா மாமிகிட்ட போனாலும் தனது ஈழ ஆதரவை ஒரு போதும் விடவில்லை. மாமி பொடால கைது செய்தார் அதையே தான் தமிழின கொலைங்கரும் செய்தார். ஆக அப்பவும் மாட்டிகிட்டது வை கோ தான் இப்பவும் அவர்தான்.

அதனால்தான் சொன்னேன் தமிழக பிரச்சினையில் என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள் (சேது திட்டத்திற்காக நாடளுமன்றத்தில் முழங்கி வாங்கி வந்த வைகோ மாமி அதை தடை செய்வேன்னு சொன்ன மேடையிலேயே அமர்ந்திர்ந்தது)

ஆனால் ஈழத்தை காட்டி துரோக பட்டதை கொடுக்க முயற்சி செய்யாதீர்கள் ஏனெனில் அதற்கு நம்ம ஊரில் ஏகப்பட்ட பேர் இருகாங்க

தோழமையுடன்

முகமது பாருக்

" உழவன் " " Uzhavan " on May 13, 2009 at 2:24 PM said...

//கலைஞரைப் பற்றிய பதிவு வரும்வரை அமைதிகாக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்//

சீக்கிரமா போடுங்க. ரொம்ப ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

ஆதிமூலகிருஷ்ணன் on May 13, 2009 at 9:07 PM said...

இந்தக்கட்டுரையைப் பற்றி கருத்துக்கூறுமளவில் எனக்கு அரசியலறிவு இல்லை என்றாலும் என்னளவில் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தேர்ந்த கட்டுரைக்கான வாழ்த்துகள் முதலில்.. ஒரே ஒரு வரி மட்டும்..

யாரையும் கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் இந்த வைகோ என்ற அற்பப்பிறவியை மட்டும் எந்த வகையிலும் ஏற்கமுடியாது. போலித்தனத்தின் உச்சம் அது. லக்கியின் வைகோ குறித்த கருத்துகள் வியப்பைத்தருகின்றன.

கும்க்கி on May 13, 2009 at 11:09 PM said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

இந்தக்கட்டுரையைப் பற்றி கருத்துக்கூறுமளவில் எனக்கு அரசியலறிவு இல்லை என்றாலும் என்னளவில் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தேர்ந்த கட்டுரைக்கான வாழ்த்துகள் முதலில்.. ஒரே ஒரு வரி மட்டும்..

யாரையும் கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் இந்த வைகோ என்ற அற்பப்பிறவியை மட்டும் எந்த வகையிலும் ஏற்கமுடியாது. போலித்தனத்தின் உச்சம் அது. லக்கியின் வைகோ குறித்த கருத்துகள் வியப்பைத்தருகின்றன.

அரசியல் தெரியவில்லை என்ற கருத்துடன் நின்றிருக்கலாம்.கொள்கைக்காக என்ற நப்பாசையில் அரசியல் செய்ய தெரியாமலும், உண்மையான ஈழ அக்கறையினாலும், தமிழக மக்களிடம் சர்க்கஸ் செய்ய தெரியாமல் சொந்த கட்சிக்காரர்களை படிப்படியாக இழந்துவருவதாலும்,
வைகோ உங்கள் பார்வையில் மட்டுமல்ல அனேகம் பேர் பார்வையில் இப்படித்தான்.
ஒரு சின்ன கற்பனை செய்து கொள்ளுங்கள் : சென்னையில் பகலில் ஒருவன் நடுரோட்டில் நின்று உரக்க “நாடு கேட்டுப்போச்சு,லஞ்ச ஊழல் அதிகமாயிடுச்சு, அரசியல் வாதிகள் கோடி கோடியா கொள்ளையடிக்கிறாங்க, இத தட்டி கேட்க யாருமில்லையா” என்று கத்திக்கொண்டிருக்கையில் உங்கள் பார்வை எப்படியோ அப்படித்தான் இதுவும்.

krishnaaleelai on May 14, 2009 at 4:05 PM said...

திமுக வை இனி கைப்பற்ற முடியாது என்று தெரிந்து விட்டது எனவேதான் அதிமுகவை கைப்பற்றலாம் என்ற முடிவிற்கு வைகோ வந்துவிட்டார்.ஆகவே அவருடைய முடிவுகள் அதை பின்பற்றியே எடுக்கப்படும்.

mvalarpirai on May 15, 2009 at 7:50 AM said...

தமிழனக்கு தமிழன் தான் எதிரி என்பது தான் 100% உண்மை !

இலங்கை தமிழ் விசயத்தில் வை கோ , முக வின் அக்கறை உண்மை ..அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது..
ஆனால் அரசியல் என்று வந்தால் முக தன் பதவியை தக்க வைத்து கொள்ள ஈழ அக்கறை இரண்டாம் பட்சமாக பார்க்கிறார்.அப்படியே அவர் பதவி துறந்தாலும் சத்தியமாக நம் மக்கள் அவர் உணர்வை மதித்து மீண்டுன் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். அப்போதைய சூழ் நிலையை பொருத்தே தேர்தல் வாக்களிப்பு அமையும்.
அதே போல் அரசியல் என்று வந்தவுடன், வைகோ மு க வை துரோகியாக்கனும், அல்லது அவரின் தமிழன் தலைவர் ( அப்படிதான் சொல்றாங்க 50 வருட காலமாம். வைகோவும் 20 வருட காலம் இதை சொன்னார்.. ) இமேஜை காலி பண்ண வேண்டும் என்பதை முன்னெடுத்தாரே தவிர ஈழத்துக்காக ஆக்க பூர்வமாய் என்ன செய்தார்? முக பிரதமருக்கு தந்தியடித்தார் என்றால், இவர் அமெரிக்க அதிபருக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

முக வின் அனைத்துகட்சி கூட்டத்தை புறக்கணித்தது ஏன் ? வை கோ வின் பதில் அவர் நாடகம் ஆடுகிறார். முக தான் நாடகம் ஆடுகிறார் அவர்தான் ஈழ மக்களை பீரங்கி மூலம் சுட்டு கொள்கிறார் என்று பேசுவது அரசியல் நோக்கமா?, இல்லை நீங்கள் அப்படி பேசிவதால் ஈழத்துக்கு விடிவு வரப்போவுதா ? ஈழ மக்கள் சாவை விட அதை வைத்து அரசியல் எதிரிகளை ஈழ மக்கள் துரோகியாக ( தமிழின துரோகி எனபது தமிழ் நாட்டு மக்கள் 5 முறை முதல்வராக, 10 முறை சட்டமன்றத்துக்கு தேர்தெடுத்ததை அவமதிக்கும் செயல் ) சித்தரிக்க வேண்டும் என்பதை தானே முன்னெடுத்தீர்கள்..

ஈழ மக்கள் c.d வைத்து ஓட்டு கேட்டவர்களை என்ன சொல்வது.. இப்போது இந்த தேர்தலில் தோத்துவிட்டால் தமிழ் நாட்டு மக்களுக்கு ஈழ மக்கள் கொல்லபடுவதில் உடந்தை என்று சொல்வீர்களா..

தமிழ் நாட்டில் எல்லாரையும் அரவணைத்து ஈழ மக்கள் பிரச்சனை முன்னெடுப்பதை விட்டு ( முக முயன்றார் அனைத்துகட்சி கூட்டத்தால் , அதை முளையிலே கிள்ளி வீசியது யார் ? ), நான் ஈழ ஆதரவாளன் , மற்றவனெல்லாம் துரொகி என்றால் தமிழ் நாட்டில் ஈழ பிரச்சனை தேர்தலுக்காக மட்டுமே ஒலிக்கும் ..

தமிழ் ஈழமோ , ஒன்று பட்ட இலங்கையில் சுயாட்சியோ எதுவாயினும் இலங்கை தமிழ் மக்கள் முடிவு செய்யட்டும் வெளினாட்டில் வசிப்பவர்கள் அல்ல
வெள்ளை பூக்கள் மலரட்டும் ஈழ மக்கள் வாழ்வில் விரைவில் !

man on June 9, 2009 at 1:42 PM said...

Jun 6: ஏய் இந்தியாவே உன்னிடம் ஓன்று கேட்கிறேன் ??????????

இந்தியாவை நான் பெரிதும் நேசிக்கிறேன் --
தமிழ்நாடு என்ன வெளி நாட்டிலா இருக்கிறது ?
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் --
அப்படி என்றால் தமிழர்கள் யாருடன் பிறந்தவர்கள்?
தமிழர்களை காப்பற்ற மறந்த இந்தியாவே ...........
இன்று முதல் உனது சுதந்திரம் ஓர் கருப்பு நாளாக கொண்டாடுவேன்
இதுவரை வெள்ளை ஆடையுடன் கொண்டாடிய நான்
இன்று முதல் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை
கருப்பு ஆடையுடன் கருப்பு தினமாக கொண்டாடுவேன்
ஒரு தமிழனாக உறுதி மொழி எடுத்து கொள்கிறேன்
ஜெய்கிந்

Posted by madan kumar in love india

UnarvaalaN on April 4, 2011 at 9:10 PM said...

நீங்க சொல்றத எல்லாம் ஏற்றுகொள்ளும்படியா இல்லை.....

வைகோ தன் அரசியலில் தாழ்வுகளை ஈழ ஆதரவு மூலமே பெற்றார்....

திராவிட தலைவர்களிலே அதிக நாள் சிறையில் இருந்தது வைகோ மட்டும்தான்....

தியாகம் செய்பவர்களையும் இப்படி தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள்....

நீங்கள் சொன்ன இரண்டு காரணங்களும் நேரடியாக வைகோவால் முடிந்த காரியங்கள் அல்ல....

இங்கே அரசியல் சூழ்ச்சிகள் ஆயிரம் உள்ளன.........நீங்கள் பார்ப்பது போல் அல்ல....

வைகோ தன்னால் முடிந்த அளவில் அனைத்தும் செய்து வருகிறார்....

ஈழ பிரச்னையில் மறுமலர்ச்சி தோழர்களுக்கு நிகராக எவரும் தெருவில் இறங்கி போராடியதில்லை....

போராடுபவர்களையும் துரோகிகள் என்று புழுதி வாரி தூற்றாதீர்கள்....

 

all rights reserved to www.karkibava.com