Oct 21, 2008

தனி ஈழம்--புலிகளால் சாத்தியமா?


தூயா மூலம் எனக்கு வந்திருக்கிறது இந்தத் தொடர்.

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

    அனுபவங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால் காசி ஆனந்தனின் கவிதைகளை தேனிசை செல்லப்பாவின் இசையில் கேட்டு ஏதோ புரிந்தும் புரியாமலும் "என்னப்பா நடக்குது" என்று என் அப்பாவிடம் கேட்டு ஓரளவு தெரிந்துக் கொண்டேன். விவரமறியா வயதில், நாங்கள் திண்டிவனத்தில் இருந்தபோது IPKF நடத்திய கொடூரங்கள் வீடியோ கேசட்டாக வந்து, என் அப்பாவின் நண்பர் வீட்டில் (ரகசியமாகத்தான்)அதைப் பார்த்து அழுததுண்டு. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் என் அப்பா பிரபாகரனின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் பெருமையாக இருக்கும். என் அப்பாவின் மறைவுக்குப் பின் சிங்கப்பூர்  வேலைக்கு கல்லூரியிலே நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தேர்வாகி கடவு சீட்டுக்கு விண்ணப்பம் போட்ட போது, திண்டிவனம் நகர காவல்துறையினர் எனக்கு என் அப்பாவின் நண்பர்கள் மூலம் புலிகளின் தொடர்பு இருப்பதாக சொல்லிவிட எனக்கு கடவு சீட்டு கிடைக்காமல் போனது. ஆனால் அதற்கான காரணம் எனக்கும் புலிகளுக்கும் தொடர்பு என சொன்னபோது கொஞ்சம் ‘கெத்’தாகத்தான் உண‌ர்ந்தேன்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

தமிழீழத்திற்கு என் ஆதரவு எப்போதுமே உண்டு. ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் வருத்தம் உள்ளது. 25 ஆண்டு காலத்தில் கைக்கு வந்த சில நல்ல வாய்ப்புகளை புலிகள் நழுவ விட்டதாக உணர்கிறேன். நடப்பவை யாவும் நமக்கு தெரிவதில்லை. ஊடகங்கள் வாயிலாக தெரிந்தவற்றை வைத்து இந்த முடிவுக்கு வருவது நியாயமில்லை. ஆனால் 25 ஆண்டு போராட்டத்தில்,இத்தணை உயிர்களை இழந்து என்ன சாதித்திருக்கிறார்கள் என்ற வருத்தமுண்டு. எனக்கு இப்போதெல்லாம் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கண்மூடித்தணமாக ஆதரிப்பதில் உடன்பாடில்லை. இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்களே என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் தமிழீழம் வேண்டுமென்கிறேன். யார் மூலமாவது நல்லது நடக்க வேண்டுமென்ற தீராத அவா இருக்கிறது.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

  உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஆர்வம் பெரிதாக இல்லை. ஏனெனில் ஒன்றும் பெரிதாக நன்மை நடக்கப் போவதில்லை. புலிகள் 30 பேரும் ரானுவத்தினர் 50 பேரும் கொல்லப்பட்டனர் என்ற செய்தியில் என்ன ஆர்வம் தேவையிருக்கிறது? என்னால் 30 புலிகளுக்காக மட்டும் அழ முடியாது. அந்த 50 பேரில் எல்லா சிங்கள‌ருமே கெட்டவர்களா? இந்த வீணாப்போன அரசியல்வாதிகள் நல்லதை நடக்க விட மாட்டார்கள்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

   எப்போதும் ஒலிக்கும் குரல்களை தவிர்த்து புதிதாக சேர்ந்துக் கொண்ட ஓனாய்கள் மீது வெறுப்புத்தான் வருகிறது. சிறுவயதில் சுப.வீ அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்தார் என்றபோது இருந்தப் பெருமை இப்போது இல்லை. ஏதோ கலைஞரின் செயலினால்தான் தமிழர்கள் இப்போது இதற்குப் பெரும் ஆதரவு தருவதாக அவர் சொல்லியுள்ளது ஜெ.வின் அரசியலை விடப் பன்மடங்கு மலிவானது. இந்த விடயத்தில் எல்லோரும் அரசியல் செய்வதில் பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் கலைஞர் செய்யும்போது வரும் கோவமே அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை சொல்லும்.நம்பிக்கையை அரசியலில் இழந்த பின்னும் வைகோ மீது ஈழத்து பிரச்சனையில் நான் நம்பிக்கை இன்னுமிழக்கவில்லை. உண்மை உணர்வு அவருக்குண்டு. கடல்தாண்டி வரும் மனிதர்களுக்காக(அகதிகள் என்று சொல்ல விருப்பமில்லை) ஒரு கிராமம் உருவாக்க வேண்டுமென்பதே என் ஆசையென சொன்ன செந்தழல் ரவி போன்றவரின் குரல்கள் நம்பிக்கையை தருகின்றன.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

   கேள்வியிலே சொன்னது போல் செத்து செத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு நாம் என்ன சொல்ல? எனக்குள் ஏதோ ஒன்று சொல்கிறது " புலிகளை விட்டால் வேறு வழியில்லை என்ப‌து உணமையென்றாலும் அவர்களால் தனி ஈழம் காண முடியாது. ஐ. நா போன்று வலுவான ஒரு அமைப்பால் தான் இதை முடிக்க முடியும். தனி நாடோ அதிகாரமோ புலிகள் மூலம் குறைந்தபட்சம் இன்னும் சில வருடத்திற்கு முடியாது என்பது  வேதனையான ஒன்று என்றபோதும் அதுதான் நடக்ககூடும்"

--------------------------------------------------------------

    பதிவர்களில் பல நண்பர்கள் உண்டு என்ற போதும் இந்த விடயத்தில் அவர்களுடைய‌ கருத்து என்னவென்று எனக்கு தெரியாது. அதனால் அவர்களை எழுதும்படி அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதல் குரலாக எனக்கு கேட்ட அண்ணன் பாலபாரதி அவர்கள் எழுதினால் இன்னும் பல விடயங்கள் நாமறிய முடியும். ஆனால் அவர் என் பதிவை படிப்பவரா எனத் தெரியவில்லை. அவர் எழுத‌ வேண்டுமென விழைகிறேன்.

  'தமிழனை எதிர்க்கும் பீரங்கி குண்டு
  சமையலறையின் முள்ளங்கி தண்டு"

இன்னமும் கணீர் கணீர் என ஒலிக்கிறது செல்லப்பாவின் குரலில் காசி. ஆனந்தனின் வரிகள். ஆனால் உண்மையா?

51 கருத்துக்குத்து:

Harrispan on October 21, 2008 at 9:45 AM said...

eelam sathyam. Saathiyam puligalal illavittalum, ennum uruthi avasiyam.

கிரி on October 21, 2008 at 10:06 AM said...

சிறப்பான பதிவு கார்க்கி.

ஈழத்தில் அமைதி திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

தொடர்ந்து இதை போல பதிவுகளை கொடுங்கள்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் on October 21, 2008 at 10:06 AM said...

//25 ஆண்டு காலத்தில் கைக்கு வந்த சில நல்ல வாய்ப்புகளை புலிகள் நழுவ விட்டதாக உணர்கிறேன். நடப்பவை யாவும் நமக்கு தெரிவதில்லை. ஊடகங்கள் வாயிலாக தெரிந்தவற்றை வைத்து இந்த முடிவுக்கு வருவது நியாயமில்லை. ஆனால் 25 ஆண்டு போராட்டத்தில்,இத்தணை உயிர்களை இழந்து என்ன சாதித்திருக்கிறார்கள் என்ற வருத்தமுண்டு. எனக்கு இப்போதெல்லாம் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கண்மூடித்தணமாக ஆதரிப்பதில் உடன்பாடில்லை.//

வரிக்கு வரி வழிமொழிகிறேன் !!!!!

நானும் ஒருவன் on October 21, 2008 at 10:10 AM said...

"கடல்தாண்டி வரும் மனிதர்களுக்காக(அகதிகள் என்று சொல்ல விருப்பமில்லை) ஒரு கிராமம் உருவாக்க வேண்டுமென்பதே என் ஆசையென சொன்ன செந்தழல் ரவி போன்றவரின் குரல்கள் நம்பிக்கையை தருகின்றன."

அவரும் பதிவரா? அவரைப் பற்றிய விவரங்கள் தரவும்

நானும் ஒருவன் on October 21, 2008 at 10:12 AM said...

". என் அப்பாவின் மறைவுக்குப் பின் சிங்கப்பூர் வேலைக்கு கல்லூரியிலே நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தேர்வாகி கடவு சீட்டுக்கு விண்ணப்பம் போட்ட போது, திண்டிவனம் நகர காவல்துறையினர் எனக்கு என் அப்பாவின் நண்பர்கள் மூலம் புலிகளின் தொடர்பு இருப்பதாக சொல்லிவிட எனக்கு கடவு சீட்டு கிடைக்காமல் போனது. ஆனால் அதற்கான காரணம் எனக்கும் புலிகளுக்கும் தொடர்பு என சொன்னபோது கொஞ்சம் ‘கெத்’தாகத்தான் உண‌ர்ந்தேன்"

என் கிட்ட சொன்னதே இல்லையே.. பெரிய விஷயம்.

நான் ஆதவன் on October 21, 2008 at 10:30 AM said...

நல்ல பதில்கள் கார்க்கி... அமைதி திரும்ப பிராத்தனை செய்வதை தவிர வேறெதுவும் செய்ய இயலாத நிலமையில் நாம்.

Anonymous said...

thanks for supporting us.

வால்பையன் on October 21, 2008 at 10:37 AM said...

//தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கண்மூடித்தணமாக ஆதரிப்பதில் உடன்பாடில்லை. இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்களே என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் தமிழீழம் வேண்டுமென்கிறேன்.//

என் கருத்தும் இதுவாகவே இருக்கிறது

புதுகை.அப்துல்லா on October 21, 2008 at 10:54 AM said...

என் உணர்வை அப்படியே பிரதிபலித்து இருக்கின்றீர்கள்.

கார்க்கி on October 21, 2008 at 11:41 AM said...

நம்பிக்கையுடன் காத்திருப்போம். வேறு என்ன செய்ய? நன்றி நண்பர்களே

LOSHAN on October 21, 2008 at 1:14 PM said...

புலிகளை விட்டால் வேறு வழியில்லை என்ப‌து உணமையென்றாலும் அவர்களால் தனி ஈழம் காண முடியாது. ஐ. நா போன்று வலுவான ஒரு அமைப்பால் தான் இதை முடிக்க முடியும். தனி நாடோ அதிகாரமோ புலிகள் மூலம் குறைந்தபட்சம் இன்னும் சில வருடத்திற்கு முடியாது என்பது வேதனையான ஒன்று என்றபோதும் அதுதான் நடக்ககூடும்"//

எப்போதும் ஒலிக்கும் குரல்களை தவிர்த்து புதிதாக சேர்ந்துக் கொண்ட ஓனாய்கள் மீது வெறுப்புத்தான் வருகிறது. //

ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் வருத்தம் உள்ளது. 25 ஆண்டு காலத்தில் கைக்கு வந்த சில நல்ல வாய்ப்புகளை புலிகள் நழுவ விட்டதாக உணர்கிறேன்.//

சத்தியமான வரிகள்.. இலங்கையில் இருந்து கொண்டு முழுவதும் ஏற்கிறேன்..

ஈழம் பற்றி உங்கள் அனுபவப் பதிவு உங்களைப் பற்றிய எண்ணங்களை இன்னும் உயரத்தில் வைக்கிறது..
நன்றி சாகா.. :)

narsim on October 21, 2008 at 1:22 PM said...

சகா..

நல்ல பதிவு..

உயிர் அனைவருக்கும் ஒன்றுதான் இழப்பு என்பது அனைவருக்கும் இழப்பு தான்.. என்பதை உணர்த்தும் பதிவு..

நர்சிம்

anand on October 21, 2008 at 1:26 PM said...

அந்த கார்க்கி யாப்பா நீயி. சொல்லவே இல்ல. ரொம்ப நாளா இங்கதான் சுத்தறேன். உன்ன பாக்கவே இல்லையே. நான் உன்னுடைய இளவயது நண்பன்.
guess me with my name. still is you can't, clue for you...
"அபி எப்படி இருக்கான்?" :):)

--Prakash

Bleachingpowder on October 21, 2008 at 1:27 PM said...

நீங்கள் இதுவரை எழுதியதில் இது தான் பெஸ்ட்.

எனக்கும் தமீழல மக்கள் மீது கொஞ்சம் அக்கறை இருக்கிறது.

ஆனால் தமிழீல மக்கள் மீது குண்டு வீசும் சிங்கள ராணுவத்தை வாய் கிழிய கண்டிக்கும் நம்மவர்கள், இலங்கையில் பஸ் ஸ்டாண்ட்,ரயில் நிலையம், பொதுக் கூட்டத்தில் நிகழும் குண்டு வெடிப்பை பற்றி வாயே திறக்க மாட்டார்கள். அங்கு பலியாவதும் அப்பாவி பொதுமக்கள் தானே.

சிங்கள ராணுவம் தமிழில மக்களை கொன்று குவிக்கிறார்காள் என்றால், புலிகளும் அதையே தான் செய்கிறார்கள்.

சிங்கையில் எப்படி என்று எனக்கு தெரியாது, ஆனால் பெரும்பாலான ஐரோப்பிய நாட்டில் தமிழில மக்கள் நம்மை அவ்வளவா கண்டு கொள்ள மாட்டார்கள்.

சங்கணேசன் on October 21, 2008 at 1:38 PM said...

இந்த பிரச்சனைகள் ஓயும்வரை இல்லயில்லை..முழுதுமாக நிற்கும்வரை தொடர்ந்து இதை போல பதிவுகளை கொடுங்கள்.

நம்மால் நம் உணர்வுகளைத்தான் மட்டும்தான் பங்கிட்டுக்கொள்ள முடிகிறது..

கார்க்கி on October 21, 2008 at 2:21 PM said...

loshan said...

/
சத்தியமான வரிகள்.. இலங்கையில் இருந்து கொண்டு முழுவதும் ஏற்கிறேன்..
//

கேட்கும்போதே நெஞ்சை உலுக்குகிறது. அங்கேயே வாழும் உங்களுக்கு...

கார்க்கி on October 21, 2008 at 2:22 PM said...

//narsim said...
சகா..

நல்ல பதிவு..

உயிர் அனைவருக்கும் ஒன்றுதான் இழப்பு என்பது அனைவருக்கும் இழப்பு தான்.. என்பதை உணர்த்தும் பதிவு..
//

உண்மை.. எல்லா உயிர்களும் உயிர்தானே தல..

கார்க்கி on October 21, 2008 at 2:24 PM said...

/anand said...
அந்த கார்க்கி யாப்பா நீயி. சொல்லவே இல்ல. ரொம்ப நாளா இங்கதான் சுத்தறேன். உன்ன பாக்கவே இல்லையே. நான் உன்னுடைய இளவயது நண்பன்.
guess me with my name. still is you can't, clue for you...
"அபி எப்படி இருக்கான்?" :):)

--Praகஷ்//

பிரகாஷ்னு கீழ பேரப் போட்டுட்டு அப்புறம் எந்தப் பேர சொல்ல சொல்றீங்க? சரி சரி.. பிரவீன் நல்லயிருக்கானா? என்ன பன்றான்? (ஆசிரியை பிரபாவதி அவர்களின் மகன் தானே? இல்ல வேற பிரகாஷா)

அனுஜன்யா on October 21, 2008 at 2:24 PM said...

கார்க்கி,

உங்கள் வயதுக்கும், அனுபவத்துக்கும் எதிர்பார்க்கமுடியாத முதிர்ச்சியான சிந்தனை. சராசரி தமிழர்களைவிட உங்களுக்கு ஈழ விடுதலை போராட்டம் பற்றி, போராட்ட வீரர்கள் பற்றி அதிகம் தெரிந்திருப்பதால் வந்த புரிதல் என்று நினைக்கிறேன்.

பொதுவாக தமிழ் நாட்டுக்கு வெளியில் வாழும் தமிழர்களுக்கு முன் வைக்கப்படும் கேள்வி இந்தியப் பிரதமரைக் கொன்ற ஒரு அமைப்பை எங்ஙனம் நியாயப் படுத்துகிறீர்கள்? நீங்கள் இந்த கேள்வியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மனம் திறந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

கார்க்கி on October 21, 2008 at 2:26 PM said...

நன்றி bleachingpowder

*************************

//சங்கணேசன் said...
இந்த பிரச்சனைகள் ஓயும்வரை இல்லயில்லை..முழுதுமாக நிற்கும்வரை தொடர்ந்து இதை போல பதிவுகளை கொடுங்கள்.

நம்மால் நம் உணர்வுகளைத்தான் மட்டும்தான் பங்கிட்டுக்கொள்ள முடிகிறது..//

சரியா சொன்னீங்க. முடிந்ததை செய்கிறேன் சகா...

Anonymous said...

கார்க்கி,
பதிவிற்கு நன்றி.......

Anonymous said...

//புலிகளை விட்டால் வேறு வழியில்லை என்ப‌து உணமையென்றாலும் அவர்களால் தனி ஈழம் காண முடியாது. ஐ. நா போன்று வலுவான ஒரு அமைப்பால் தான் இதை முடிக்க முடியும்.//

உண்மை கார்க்கி. இதையே தான் அவர்களும் சொல்கின்றார்கள்? உலக மனிதாபமான அமைப்புகளின் உதவியை தானே தமிழீழத்தில் எதிர்பார்த்து நிற்கின்றார்கள்..

கார்க்கி on October 21, 2008 at 3:07 PM said...

//அனுஜன்யா said...
பொதுவாக தமிழ் நாட்டுக்கு வெளியில் வாழும் தமிழர்களுக்கு முன் வைக்கப்படும் கேள்வி இந்தியப் பிரதமரைக் கொன்ற ஒரு அமைப்பை எங்ஙனம் நியாயப் படுத்துகிறீர்கள்? நீங்கள் இந்த கேள்வியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
//


எந்த ஒரு சூழ்நிலையிலும் அதை நியாயப்படுத்த நான் முனைந்ததில்லை. இனியும் அப்படியே. பல‌ விடயங்களுக்காக அந்த சம்பவத்தில் புலிகள் பக்கம் தவறு இருக்கிறது. முதலாவது, ஒருக் கூலிப்படை போன்று செயல்பட்டமைக்கு. அது உண்மையல்ல, பழி வாங்கும் நடவடிக்கை என்றால் அவரோடு இறந்த பல உயிர்கள் முக்கியமில்லையா? அதில் பாதிக்கப்பட்ட ஒருவன் பிரபாகரனுக்கு எதிராக செயல்பட்டால் அது புலிகளின் நோக்கதிற்கு ஒப்பானதுதானே? அதன் பின்விளைவாக அதன் பின் நடந்த தேர்த‌லில் ஜெயலலிதா வெற்றி பெற்று தமிழகத்தின் வளர்ச்சியை பத்தாண்டுகள் முடக்கி போட்டது என்பதும் என்னளவில் உண்மையே. அதற்கு முக்கியமான் காரணம் இந்த சம்பவம்தான்.

இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், இந்த ஒரு சம்ப‌வத்தை கருத்தில் கொண்டு அவர்களின் நியாயமான் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இருப்பதில் எந்த நியாயமுமில்லை. இந்திரா காந்தியை கொன்றது சீக்கியர் என்பதற்காக அவர்களை நான் ஏற்றுக் கொள்ளாமல் விட்டோமா? காந்தியை கொன்ற அமைப்பை தடை செய்து விட்டோமா? ராஜீவ் காந்தியை கொன்றது தவறு. அது வேறு. தமிழீழ போராட்டம் வேறு. சிறு வயதில் நாம் தெரியாமல் அப்பாவின் காசை திருடிவிட்டால் அதன்பின் நமக்கு எந்த ஒரு தேவைக்கு காசு கேட்டாலும் அப்பா சந்தேகப்படத்தான் செய்வார். அதுப் போலத்தான் இதுவும். உலகில் நடைபெற்ற கிட்டதட்ட அனைத்து போராட்டத்திலும் இது போன்ற ஒரு சம்பவமாவது நடைபெற்று இருக்கிறதென வரலாறு சொல்கிறது. இந்த கேள்வியை கேட்பவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதையாவது நாம் செய்வோமே!!!

anand on October 21, 2008 at 3:12 PM said...

//ஆசிரியை பிரபாவதி அவர்களின் மகன் தானே? //

அவனே அவனே ...

//பிரகாஷ்னு கீழ பேரப் போட்டுட்டு அப்புறம் எந்தப் பேர சொல்ல சொல்றீங்க?//

பேரை வைத்தாவது கண்டுபிடிகிறாயன்னு பார்த்தேன்.ரொம்ப நாளாச்சு இல்லையா? :))

//பிரவீன் நல்லயிருக்கானா? என்ன பன்றான்?//

He is fine. working in Alcatel chennai.

தங்க முகுந்தன் on October 21, 2008 at 3:15 PM said...

அன்புத் தம்பி கார்க்கி அவர்களுக்கு,
வணக்கம்.
நல்ல ஒரு பதிவு. தற்போது இன்றுதான் பார்த்தேன். உண்மைகளை எவரும் மறுக்க முடியாது.தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
என்றும் நன்றியுடன்
தங்க. முகுந்தன்.

www.kiruththiyam.blogspot.com

anand on October 21, 2008 at 3:16 PM said...

எப்படி இருக்கிறாய் கார்க்கி? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
மெச்சத்தக்க திறமையை வளர்த்து கொண்டிருக்கிறாய். வாழ்த்துக்கள்.
இனிமேல் அடிக்கடி வருகிறேன் :))

கார்க்கி on October 21, 2008 at 3:18 PM said...

//பேரை வைத்தாவது கண்டுபிடிகிறாயன்னு பார்த்தேன்.ரொம்ப நாளாச்சு இல்லையா? :))//

நல்ல இருக்கிங்களா? என் mail id iamkarki@gmail.com.. மெயில் அனுப்புங்க‌

கார்க்கி on October 21, 2008 at 3:32 PM said...

//anand said...
எப்படி இருக்கிறாய் கார்க்கி? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
மெச்சத்தக்க திறமையை வளர்த்து கொண்டிருக்கிறாய். வாழ்த்துக்கள்.
இனிமேல் அடிக்கடி வருகிறேன் :))
//

நல்லா இருக்கேன். அபி ஸ்காட்லாந்தில் இருக்கிறான். அடிக்கடி வரணும்.. மின்னஞ்சலில் பேசுவோம்.

கார்க்கி on October 21, 2008 at 3:33 PM said...

//தங்க முகுந்தன் said...
அன்புத் தம்பி கார்க்கி அவர்களுக்கு,
வணக்கம்.
நல்ல ஒரு பதிவு. தற்போது இன்றுதான் பார்த்தேன். உண்மைகளை எவரும் மறுக்க முடியாது.தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
என்றும் நன்றியுடன்
தங்க. முகுந்தன்.
//

முடிந்ததை செய்கிறேன். முதல் வருகைக்கும் உணர்வுக்கும் நன்றி சகா

Kalai M on October 21, 2008 at 3:44 PM said...

Superb. Elanggai tamil'larkaluikku amaithi kadaike eraiveney pratipom.

Inggai oruvar elangai'yil eruntu vanturikkurar. Avar edam elangai patri naan kedru terichikonden. Naalethal'yil vasipitodeh, nelameh unnum romba mosem endra apathan enaku purinthathu. Ayar sollum kataigalai kedal, aiyooo pavem...ethu epathan mudiyum endru tonum. Etaney uyire'gal pali.....yaar than etukku oru mutri puli verpargaloo? Tamil puligal illa arasangam?

Anonymous said...

சிறப்பான பதிவு கார்க்கி.

வாழ்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் ...
போர்க்களம் மாறலாம் ..போர்கள்தான் மாறுமோ ?

புலிகள் தங்களது கடந்த கால தவறுகளினால் . ஆதரவின்றி இருக்கிறார்கள் ...

ஆனால் தற்போதைய நிலைப்படி போர் எனும் புலியின் வாலை பிடித்த புலிகள் விடாது போராடினால் ..இந்த ஈழப்போராட்டம் நீர்த்து போகாமல் புகைந்து கொண்டே இருக்கும் ..

தற்போதைய போரில் புலிகள் தோற்றால் ஈழம் எட்டாக்கனவாகிவிடும்.

வருங்கால முதல்வர் on October 21, 2008 at 7:59 PM said...

நல்ல பதிவு, எப்படியாவது ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும். அது இந்திய உதவி இல்லாமல் நடக்காது. ஒருவேளை ஒபாமாவின் இலங்கை பார்வை எப்படி உள்ளது என்பதை பொறுத்தும் நிலைமை மாறலாம்.

ஜோசப் பால்ராஜ் on October 21, 2008 at 8:44 PM said...

என் அன்புத் தோழா,
நீ எழுதிய பதிவுகளிலேயே இதுதான் மகுடம் என்பேன். மிகச் சிறந்த பதிவு. நம் உள்ளத்து உணர்வுகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
நேரமின்மையால் பதிவுகளைப் படிக்கவோ, பதிவெழுதவோ முடியவில்லை. விரைவில் விரிவாக எழுதுகின்றேன்.

thenali on October 22, 2008 at 2:12 AM said...

சிங்கையில் எப்படி என்று எனக்கு தெரியாது, ஆனால் பெரும்பாலான ஐரோப்பிய நாட்டில் தமிழில மக்கள் நம்மை அவ்வளவா கண்டு கொள்ள மாட்டார்கள்.//

இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல, சிங்கை மலேசியா என எல்லா நாட்டு தமிழனுக்கும் இந்தியத் தமிழன் எனில் இளக்காரம்தான். அவர்களுக்கு பிரச்சனை என்றால்தான் உடனே நாம் தொப்புழ்கொடி உறவு என்பது அவர்களுக்கு ஞாபகம் வரும் போல.

மேலும் இந்திய ஆட்சியாளர்கள் செய்த சில தவறுகளுக்காக சில ஈழ பதிவர்கள் ஒட்டு மொத்த இந்திய நாட்டையே கேவலமாக எழுதி வருவது வருத்தமளிக்கின்றது.

ஆனாலும்

//தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கண்மூடித்தணமாக ஆதரிப்பதில் உடன்பாடில்லை. இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்களே//

என்னும் உமது வருத்தம் எனக்குமுண்டு.

செல்வன் on October 22, 2008 at 3:04 AM said...

நல்ல பதிவு.
//ஆனால் 25 ஆண்டு போராட்டத்தில்,இத்தணை உயிர்களை இழந்து என்ன சாதித்திருக்கிறார்கள் என்ற வருத்தமுண்டு. எனக்கு இப்போதெல்லாம் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கண்மூடித்தணமாக ஆதரிப்பதில் உடன்பாடில்லை. இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்களே என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் தமிழீழம் வேண்டுமென்கிறேன்.//
தமிழீழ போராட்டத்தை கைவிட்டால் இந்த அநியாய உயிர் இழப்புகள் இருக்காதே!

selvaraj on October 22, 2008 at 3:58 AM said...

தனி ஈழம் கிடைத்தாலும், திரு பிரபாகரன் அவர்கள் சர்வாதியாகவே செயல் படுவார். நிச்சயமாக தமிழகத்தை போல தேர்தலை வைத்து ஆட்சி அமைக்க விடமாட்டார்.

செல்வராஜ்

கொழுவி on October 22, 2008 at 4:29 AM said...

தனி ஈழம் கிடைத்தாலும், திரு பிரபாகரன் அவர்கள் சர்வாதியாகவே செயல் படுவார். நிச்சயமாக தமிழகத்தை போல தேர்தலை வைத்து ஆட்சி அமைக்க விடமாட்டார்.//

சரி.. தனி நாடு பெற்ற பின் தேர்தல் வைக்கட்டும். உங்கள் ஆசைக்கு.. சரியா..`?

அதில் பிரபாகரனும் நிற்கட்டும்..

அதில் யார் ஆட்சிக்கு வருவார் என எனக்கும் தெரிகிறது. உங்களுக்கு புரிகிறதா?

30 வருடங்களாக தமக்காக போராடியவனை 20 வருடங்களுக்கும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பது அந்த மக்களின் விருப்பமாக இருந்தால் என்ன செய்வது?

இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் என்ற போர்வையில் நடப்பது சர்வாதிகாரம்தான். பெயரை மாற்றி விட்டால் சரியா..

Sundar on October 22, 2008 at 5:08 AM said...

//அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கண்மூடித்தணமாக ஆதரிப்பதில் உடன்பாடில்லை.//
மொத்தத்தில் கலவையான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கீங்க!

கார்க்கி on October 22, 2008 at 8:58 AM said...

நன்றி பக்கிலுக்..

//வருங்கால முதல்வர் said...
நல்ல பதிவு, எப்படியாவது ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும். அது இந்திய உதவி இல்லாமல் நடக்காது. ஒருவேளை ஒபாமாவின் இலங்கை பார்வை எப்படி உள்ளது என்பதை பொறுத்தும் நிலைமை மாறலாம்.//

அப்படி ஒன்று இருக்கிறதா? கருத்திற்கு நன்றி நண்பரே..

கார்க்கி on October 22, 2008 at 8:59 AM said...

/ஜோசப் பால்ராஜ் said...
என் அன்புத் தோழா,
நீ எழுதிய பதிவுகளிலேயே இதுதான் மகுடம் என்பேன். மிகச் சிறந்த பதிவு. நம் உள்ளத்து உணர்வுகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
நேரமின்மையால் பதிவுகளைப் படிக்கவோ, பதிவெழுதவோ முடியவில்லை. விரைவில் விரிவாக எழுதுகின்றேன்.//

விரைவில் எழுதுங்க சகா...

//மேலும் இந்திய ஆட்சியாளர்கள் செய்த சில தவறுகளுக்காக சில ஈழ பதிவர்கள் ஒட்டு மொத்த இந்திய நாட்டையே கேவலமாக எழுதி வருவது வருத்தமளிக்கின்றது.
//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தெனாலி

கார்க்கி on October 22, 2008 at 9:00 AM said...

/செல்வன் said...
நல்ல பதிவு.//

வருகைக்கு நன்றி செல்வன்..

/ selvaraj said...
தனி ஈழம் கிடைத்தாலும், திரு பிரபாகரன் அவர்கள் சர்வாதியாகவே செயல் படுவார். நிச்சயமாக தமிழகத்தை போல தேர்தலை வைத்து ஆட்சி அமைக்க விடமாட்டார்.//

முதலில் சொன்னது நடக்கட்டும் சகா.. நன்றி

கார்க்கி on October 22, 2008 at 9:01 AM said...

நன்றி கொழுவி

நன்றி சுந்தர்

கார்க்கி on October 22, 2008 at 9:03 AM said...

தூயாவின் விருப்பப்டி இந்த விடயத்தில் பலரின் கருத்துக்களை அறியும் வண்ணமும், பலரது உணர்வை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் இப்பதிவு அமைந்ததில் சந்தோஷமே. பல புதிய நண்பர்கள் கருத்து சொல்லி போயிருக்கிறார்கள். கொஞ்சம் நிறைவாக இருக்கிறது. நன்றி நண்பர்களே..

Thamizhan on October 22, 2008 at 9:37 AM said...

நல்ல பதிவு.பலர் கேட்கும் கேள்விகள் தான்.எந்த நாடும் துன்பங்களை அனுபவிக்காமல் விடுதலை பெற்றதில்லை.பல முழு உண்மைகள் வெளியே வருவதில்லை,வரும் போது அனைத்தும் விளங்கலாம்.
ஈழம் கிடைப்பது உறுதி.கொடுக்கும் விலை தான் அதிகம்.என்ன செய்வது தமிழரின் ஒற்றுமையின்மை தான் பெரிய இழப்பிற்கு முதல் காரணம்.
பெண் போராளிகளின் வீரமும் விவேகமும் வியட்நாமிற்கு அடுத்து ஆனால் அதைவிட அதிகமாக இங்கே .
விடுதலைக்குப் பின் உலகில் சிறந்த ஒரு ஆட்சி அங்கே வரும்.பிரபாகரன் அநாதைக் குழந்தைகளின் பராமரிப்பாளராகத்தான் சிறப்புப் பணி செய்வார்.

Anonymous said...

மறுபடி படிக்க வந்தேன் பதிவை..

கார்க்கி on October 22, 2008 at 5:17 PM said...

ஏதோ ஒரு ஆறுதல் இதன் மூலம் உங்களுக்கு கிடைத்தது என்றால் மெரு மகிழ்ச்சி தூயா.. வாய்ப்பு தந்தமைக்கு நன்றி..

Thabotharan on October 22, 2008 at 10:13 PM said...

// bleachingpowder said...
சிங்கையில் எப்படி என்று எனக்கு தெரியாது, ஆனால் பெரும்பாலான ஐரோப்பிய நாட்டில் தமிழில மக்கள் நம்மை அவ்வளவா கண்டு கொள்ள மாட்டார்கள்.
//

இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
நான் ஒரு இலங்கைத் தமிழன், நானும் இங்கே வசிக்கிற ஏனைய ஈழத்தவர்களும் இந்தியத் தமிழர்களை சகோதரர்களாகத் தான் பார்க்கிறோம் தினமும் பழகுகிறோம்

ஒரு சிலர் அப்படி இருக்கலாம். அவர்களது பொருளாதார நிலைமகள், தினமும் வாழ்க்கையோடு போராடவேண்டியிருப்பது அவரகளை நடக்க்ப் பண்ணியிருக்கலாம்

நன்றியுடன்
தபோதரன் ஸ்வீடன்

ஆட்காட்டி on October 24, 2008 at 6:12 PM said...

இதுகளை இதில போடுறாதால என்ன உருப்படும்?

நளன் on January 23, 2009 at 9:05 PM said...

நல்ல பதிவு. ஈழ தமிழர்கள், புலிகள் என்றாலே விலகி ஓடுபவர்கள் கண்டிப்பாக இந்த பதிவினையும் பின்னூட்டங்களையும் படிக்க வேண்டும். பொதுவாக, ஈழம் பற்றி எழுதப்படும் பல பதிவுகளில் உணர்ச்சிகள் அதிகம் காணப்படுவதால், சில சரியான பரிமாணங்கள் விடுபடுகின்றன. உங்களின் பதிவு இதை வென்று நிற்கிறது. அருமையான பதிவிற்கு நன்றி! வாழ்த்துக்கள்!!

Nalliah on December 11, 2012 at 8:51 AM said...

தனி நாட்டுக்கான தமிழீழப் போராட்டத்தில் மனித உயிர்களுக்கும் சாதாரண பொது
மக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்கப்படவில்லை.

பிணக்கணக்கு காட்டியே அரசாங்கமும் போராட்ட இயக்கங்களும் தமக்கான பிரச்சாரங்களை
முன்னெடுத்தன.

இதுதான் தமிழீழப் போராட்டம் வெற்றிபெறாது போனதுக்கு அடிப்படைக் காரணம்.

பொருளீட்ட முயற்சி இல்லாதவனால் வெற்றிகரமாக வணிகம் செய்ய முடியாது. அதே போல
மக்களை மதிக்காத மனித உயிர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நபர்களால்
விடுதலைக்கான ஒருபோராட்டத்தை வழி நடாத்த முடியாது.

நீதிமன்றங்களால் வழங்கப்படும் கோரக் கொலையாளிகளின் மீதான மரண தண்டனைகளையே
தடுப்பதற்கு நாகரிகம் அடைந்த மனித சமுதாயம் போராடிவரும் இன்றைய கால கட்டத்தில்
ஆயிரக்கணக்கில் அப்பாவி மனித உயிர்களைப் பலியெடுத்து எதுவுமே சாதிகக் முடியாது.

கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது முதுமொழி. கடந்த 41 வருடங்களில்
நமது நாட்டில் சகல இனத்தவரும் ஆயிரக்கணக்கில் படுகொலை
செய்யப்பட்டிருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு அரசாங்கங்கள் மட்டுமல்ல ஆயுதம்
ஏந்திய இளைஞர்களும் அவர்களை வழி நடாத்தியவர்கள் பொறுப்பாளிகள்.

எந்த நாட்டை ஆளும் அரசாங்கமும் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை
கைது செய்வதும் சுற்றி வளைத்து தாக்கிக் கொல்வதும் சட்டபூர்வமான விடயங்களே.
அதற்காகத்தான் முப்படைகளையும் வைத்திருக்கின்றன.

ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ் மற்றும் வஹாபி முஸ்லீம்கள் இலங்கையில்
ஆயிரக்கணக்கான கோரக் கொலைகளை மட்டுமல்ல படு மோசமான சித்திர வதை முகாம்களை
நிர்வகித்து ஆயிரக்கனக்கனவர்களை எழுத்தில் வடிக்க முடியாத அளவுக்கு சித்திரவதை
செய்து கொன்று புதைத்தனர்

அரசாங்களில் பதவி வகித்தவர்களில் இருந்து ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் வரை அனைவரும்
நமது நாட்டில் பிறந்து நமது நாட்டில் வளர்ந்த எங்கள் சமூகத்தில் இருந்த
வந்தவர்களே.

நாங்கள் அனைவரும் எம்மை ஒருகணம் திருப்பி பார்க்க வேண்டும்.

ஏன் எங்களுக்கு இந்தக் கொலை வெறி?

Nalliah Thayabharan

chinnapiyan on March 19, 2013 at 1:28 PM said...

தாமதமாக படிக்க நேர்ந்தாலும், அருமையாக சொல்லியிருக்கீங்க பாவா. உங்களின் மேல் உள்ள மதிப்பு மேலும் மேலும் கூடுகிறது. வாழ்க வளர்க.

 

all rights reserved to www.karkibava.com