Aug 11, 2008

ம்ம்ம்ம்...சாம்பார் இட்லி


        திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...

         சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பதர்களுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

      காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

     கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

     சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை வேறொரு பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்

10 கருத்துக்குத்து:

ராஜ நடராஜன் on August 11, 2008 at 2:39 PM said...

பசி நேரத்துல இந்தப் பதிவுக்கு ஏன் தான் வந்தேனோ?

இட்லி சாம்பார்ன்னு தலைப்பு இருக்கணும்.உரிமைப் பிரச்சினைக்குப் பயந்து தடம் புரண்டு விட்டதா?

இரவு கவி on August 11, 2008 at 2:44 PM said...

இதவோட அருமையா இட்லி யாரும் விளக்க முடியாதுங்க ....
உங்க போஸ்ட் படித்ததுக்கு அப்புறம் ரத்தன கபே இட்லி சாபிடனும் போல இருக்கு

கார்க்கி on August 11, 2008 at 2:56 PM said...

//இட்லி சாம்பார்ன்னு தலைப்பு இருக்கணும்.உரிமைப் பிரச்சினைக்குப் பயந்து தடம் புரண்டு விட்டதா?/

வந்ததற்கும் கருத்திற்கும் நன்றி நடராஜன் அவர்களே!!

எல்லாம் ஒன்னுதானு நினைச்சேன்...முதலில் வைக்க படுவது இட்லி என்பதால் இட்லி சாம்பார் தான் சரி என்று இப்போது தோண்றுகிறது

கார்க்கி on August 11, 2008 at 2:58 PM said...

//இதவோட அருமையா இட்லி யாரும் விளக்க முடியாதுங்க ....
உங்க போஸ்ட் படித்ததுக்கு அப்புறம் ரத்தன கபே இட்லி சாபிடனும் போல இருக்கு//

வந்ததற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!!
இரவே சென்று விடுங்கள்

Anonymous said...

கலக்கல் நடை... அப்புறம் உங்க மொக்கசாமியும் தத்துவங்களும் அருமை...சீரியஸ் எழுத்தாளர ஆரம்பிச்சு இப்போ நகைச்சுவை தளும்புது..

கார்க்கி on August 11, 2008 at 6:41 PM said...

//சீரியஸ் எழுத்தாளர ஆரம்பிச்சு இப்போ நகைச்சுவை தளும்புது..//

வாடா மச்சி...எப்படி வந்தாலும் உன்னை கண்டுபுடிச்சுடுவேன்.. என்ன பன்றது மொக்கை பதிவுக்குதான் வாசகர்கள் அதிகம்...ஒன்னுமே இல்லாம குசேலனு தலைப்பு வச்சதுக்கு ஹாட் டாபிக் ஆக்கிடாங்க...ஆனா இந்த மாதிரி எழுதுன படிக்கவே மாட்டறாங்க..இதுல வலை மூலமா தமிழ வேற வளர்க்க போறாங்களாம்...அட,அடுத்த பதிவு கிடைசாச்சு...

Anonymous said...

vellai idly, kara sambarkei ithanai varnanai endral, sennira inippu kesariyai eppadi varnippeer??

கார்க்கி on August 12, 2008 at 3:46 PM said...

//vellai idly, kara sambarkei ithanai varnanai endral, sennira inippu kesariyai eppadi varnippeer??//

நிறத்தில் என்ன இருக்கு நண்பரே? எனக்கு என்னவோ ரத்னா கஃபே இட்லி சாம்பார் முன்னால் கேசரி என்பது, ரஜினி படத்தில் வரும் நடிகை போலத்தான் தோன்றுகிறது..தலை இருக்க வால் ஆடலாமா?

இராகவன், நைஜிரியா said...

ஹலோ.. அங்க உக்கார்ந்து சாப்பிட்டமா, போனமான்னு இருக்கணும்.. இப்படியெல்லாம் எங்க வயத்தெரிச்சலை கொட்டிக்கொள்ள கூடாது....

இட்லியாம், வெங்காய சாம்பாராம், இட்லி அதுல மிதக்குமாம்...

நைஜிரியாவில இருந்துகிட்டு இதை படிச்சா...வாயில ஜொல்லுதான் போங்க...
என்ன செய்றது .. கண்ணாபின்னான்னு திட்டனம்தான் வந்தேன்.. நம்ம கார்க்கியாச்ச திட்ட முடியல..

நல்லா இரு அப்பு...இப்படி ஒரு பதிவு போட்டு, இருக்கிற வேலைய உட்டுட்டு நாட்டுக்கு திரும்ப வர வைச்சுடவ போலிருக்கு...

விஜய் on February 17, 2009 at 3:13 PM said...

10 th pa, nalla manakkuthungo....

 

all rights reserved to www.karkibava.com